என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மையத்தில், நிழல் இல்லாத தினத்தை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • நிகழ்வு குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி எபிநேசர் விளக்கி கூறினார்.

    கொடைக்கானல்:

    ஆண்டுக்கு 2 முறை மட்டும் அரிய நிகழ்வாக நிழல் இல்லாத நாள் ஏற்படுகிறது. இந்த நாளில் பூமியானது 23 டிகிரி சாய்ந்து, அச்சரேகையில் சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படி சுற்றும் போது, சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறி கொண்டே இருக்கும்.

    இவ்வாறு மாறும் போது, ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும். அப்போது நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும். இந்த நாள், நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் தினம் என்று அழைக்கப்படுகிறது. நேற்று இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டது. இதனை காண, கொடைக்கானலை அடுத்த அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து குவிந்தனர்.

    நேற்று பகல் 12.20 மணியளவில் செங்குத்தாக நிற்கும் பொருளின் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது அதன் நிழல் தெரியவில்லை. இந்த நிகழ்வை, வானியல் ஆராய்ச்சி மையத்தில் திறந்தவெளியில் நிகழ்த்தி காட்டப்பட்டது. அதன்படி செங்குத்தாக நின்ற இரும்பு கம்பி மீது சூரிய ஒளி விழுவதையும், இரும்பு கம்பியின் நிழல் தெரியாமல் இருப்பதையும் காண்பித்தனர். இந்த அரிய நிகழ்வினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதனை சுற்றுலா பயணிகள் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி எபிநேசர் விளக்கி கூறினார். மேலும் இதே போன்ற நிகழ்வு மீண்டும் வருகிற ஆகஸ்டு 26-ந்தேதி 12.22 மணிக்கு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் பிணமாக மிதந்தார்.
    • கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கொல்லபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் பிணமாக மிதந்தார்.

    அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த வீரப்பன் மகன் மணி (23) என்பது தெரிய வந்தது. கருங்குளத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு மற்றொரு வாலிபருடனும் தொடர்பு இருந்தது.

    இந்த நிலையில் கள்ளக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் மூக்காயி, பாலசுப்பிரமணி, பரத்ராஜ், சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளரான கொடியரசு மளிகைக்கடை நடத்தி வந்தார். கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக சாமியார் வேடத்தில் ஊர் ஊராக சுற்றித் திரிந்துள்ளார்.

    இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு விக்னேஷ் ஆகியோர் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதிக்கு சென்றனர்.

    அவரை சுற்றி வளைத்து கைது செய்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • தனது மணிபர்சில் தங்க நகையை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டுக்கு வந்தார்.
    • காய்கறிகளை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது அதிலிருந்த தங்கநகை மாயமாகி இருந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பழைய ஹவுசிங்போர்டு ஏ.பி.பி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி செல்வி(50). இவர் தனது மணிபர்சில் தங்க நகையை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டு க்கு வந்தார். காய்கறிகளை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது அதிலிருந்த தங்கநகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

    மேலும் மார்க்கெட் சங்க தலைவர் பாலு உள்பட பலர் நகையை தேடியும் கிடை க்காததால் ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்ப ங்களை கொண்ட மாவட்டமாகும்.
    • தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்று அதன் அங்கீகார சான்றி தழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா, சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்ப ங்களை கொண்ட மாவட்டமாகும். கொடைக்கானல் பகுதியில் விளையவைக்கும் பூண்டிற்கு உலக அளவில் தனித்துவம் பெற்று மருத்துவ குணத்துடன் இருந்து வருகிறது. இப்பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடைக்கா னல் மலைப்பூண்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளும் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது.

    கொடைக்கானல் மலைப்பூண்டின் மகத்துவம் மற்றும் மலைப்பூண்டின் மருத்துவ குணத்தினை உணர்ந்து மலைப்பூண்டு ஊறுகாய், மலைப்பூண்டு மாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்களை விவசாயிகள் தயார் செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் அதற்கு விவசாய கடன் மானியத்துடன் வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இவ்விழாவில் கொடைக்கானல் மலைக்கிராம விவசாயிகள் மலைப்பூண்டினால் உருவாக்கப்பட்ட மாலையை கலெக்டருக்கு வழங்கினர்.

    மலைப்பூண்டிற்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மலைக்கிராம விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் விசாகன் வழங்கினார்.

    இவ்விழாவில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் சீலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாராதேன்மொழி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நாட்ராயன், செல்லய்யா, பாலகிரு ஷ்ணன், தனமுருகன், கோபால்சாமி, அருள்ஜோதி, கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • பழனி காரமடையில் வையாபுரி குளக்கரையில் மூலிகை மருத்துவ பூங்காவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் அரியவகை மூலிகைகள் எரிந்து நாசமானது.

    பழனி:

    பழனி காரமடையில் வையாபுரி குளக்கரையில் மூலிகை மருத்துவ பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான அரியவகை மரங்கள் மற்றும் மூலிகைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    பூங்காவிற்குள் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாததால் போதிய பராமரிப்பின்றி பூங்கா முழுவதும் மரங்களின் கிளைகள் மற்றும் சருகுகள் அதிகமாக குவிந்திருந்தன. இந்தநிலையில் நேற்று வையாபுரி குளக்கரையில் இருந்த குப்பைகளில் பற்றிய தீ மருத்துவ பூங்காவுக்குள் பரவியது.

    காய்ந்த இலைகள் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் இந்த தீ விபத்தில் பூங்காவில் இருந்த மூலிகை செடிகள், மூங்கில் , தேக்கு உள்ளிட்ட ஏராளமான மரங்கள் தீக்கு இரையாகி நாசமாகியது. இந்த சம்பவம் குறித்து பழனி நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல பழனி-கொகடைக்கானல் சாலையில் தேக்கம்தோட்டம் அருகே சாலையோரம் இருந்த சருகுகளில் திடீரென தீப்பற்றியது. தீ பரவி அப்பகுதி முழுவதும் எரிய தொடங்கியது. அந்த பகுதியில் இருந்த விவசாயிகள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    • ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கலந்து கொண்டு கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி, ரெட்டியார்ச த்திரம் ஊராட்சி ஒன்றிய ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பங்கேற்று ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 200 கர்ப்பிணித் தாய்மா ர்களுக்கும், ரெட்டி யார்சத்திரம் வட்டாரத்தை சார்ந்த 200 கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் என மொத்தம் 400 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கி பேசியதாவது:-

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் நடைபெறும் வளைகாப்பு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சி போன்றதாகும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆதிகாலத்தில் கட்டிசோறு கட்டி கொண்டு செல்லும் விழா நமது பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    அதுபோலவே, இந்த சமுதாய வளைகாப்பு விழா ஏழை, எளிய கர்ப்பிணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக தமிழக அரசின் சார்பில் நடைபெறுகிறது. இது நமது குடும்ப பிள்ளைகள் பங்கேற்றுள்ள சிறப்பான நிகழ்ச்சியாகும். கர்ப்பிணித்தாய்மார்கள் நீண்ட ஆயிலோடு, மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

    இவ்விழாவில் டாக்டர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவரும் நல்ல முறையில் குழந்தை களை பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இந்த உயிரோட்டமான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகி றேன் என பேசினார்.

    ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சுகாதாரத்துறையின் சார்பில் 4 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்ட ச்சத்து பெட்டகத்தினை இ.பெரியசாமி வழங்கினார்.

    • திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி எதிரே வந்த, கார்-பைக் மீது மோதி விபத்துக்குள்ளனாது.
    • பைக்கை ஓட்டிச் சென்றவர் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (39), இவரது நண்பர் எஸ்.கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் (35). இவர்கள் இருவரும் செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் ரோட்டில் உள்ள சமத்துவபுரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    இரவு புதுகோடாங்கிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி எதிரே வந்த, அடையாளம் தெரியாத கார்-பைக் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோ தனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அவர் கூலிப்படையை ஏவி வெட்டிக்கொல்ல முயன்றார்.
    • கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி. இவர் மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தின் பேராசிரிய ராகவும், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராகவும் பணி புரிந்தவர். இவரது மகன் தமிழிசை (வயது35). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரை கடந்த மாதம் 30ந் தேதி 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். இது குறித்து சின்னாளபட்டி இன்ஸ்பெ க்டர் வெங்கடாசலம் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டு குற்றவாளி களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் முத்தழகு பட்டியை சேர்ந்த சைமன் செபாஸ்டின் (22), ரிச்சர்டு சச்சின் (25), பேகம்பூர் ரபிக்ராஜா (21), காங்கே யத்தை சேர்ந்த பாண்டியன் (25), விராலிபட்டியை சேர்ந்த சிவசங்கர் (24) ஆகியோர் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.

    கோகிலா தங்கசாமிக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த மலர்விழி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் மலர்விழி காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பொறு ப்பேற்றார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் மலர்விழி தனது மருமகனான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கிருபா கரன் (28) என்பவரிடம் இது குறித்து கூறி உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அவர் கூலிப்படையை ஏவி தமிழிசையை வெட்டி க்கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்த ப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முககிய குற்றவாளிகளான மலர்விழி, அவரது மகள் மேகா (24), மருமகன் கிருபாகரன் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஏசு சிலுவையில் உயிர்விடும் காட்சியானது பட்டறை சிருபம் என அழைக்கப்படும். பழமையான சிருபத்தை வைத்து இன்றளவும் நடத்தி காட்டப்படுகிறது
    • பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் ஏசு கிறிஸ்துவின் உடலை வைத்து ஊர்வலமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் 96 கிராமங்களின் தாய் கிரா மமாக விளங்கும் மேட்டு ப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயம் 350 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு அடுத்துவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பாஸ்கா திருவிழா கொண்டாடப்படும்.

    அதன்படி நேற்றுஇரவு பாடுகளின் பாஸ்கா நடைபெற்றது. இதில் ஏசுகிறிஸ்துவின் போதனை கள், புதுமைகள், வேதனை கள், சிலுவைப்பாடுகள், கல்வாரி மலையில் உயிர்நீ த்த காட்சிகள் ஆகியவை நடித்து காட்டப்பட்டது. ஏசு சிலுவையில் உயிர்விடும் காட்சியானது பட்டறை சிருபம் என அழைக்கப்படும். பழமையான சிருபத்தை வைத்து இன்றளவும் நடத்தி காட்டப்படுகிறது.

    இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு மறித்த ஏசு கிறிஸ்துவின் திருச்சடல தூம்பா ஊர்வலம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் ஏசு கிறிஸ்துவின் உடலை வைத்து நடந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஸ்கா மேடையில் ஏசு கிறிஸ்து கல்லறையில் அடக்கம் செய்யப்படும் நிகழ்வும், திருப்பலியும் நடைபெற்றது. பாஸ்கா நடிகர்கள், உதவியாளர்கள் என 500-க்கும் மேற்ப ட்டோர் இன்றுவரை பழமை மாறாமல் நடத்தி காண்பிக்கப்படும் பாஸ்கா திருவிழாவை இரவு முழுவதும் ஏராளமானோர் கண்டு வழிபட்டனர்.

    நாளை உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெறும். மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, நற்கருணை ஆசிர்வழங்கி இதனை தொடங்கி வைக்கிறார். இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு 3 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த மரம் அடர்ந்து, விரிந்து இருந்ததால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்தது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் இருந்து, எஸ்.கோடங்கிபட்டி செல்லும் சாலை ஓரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பல ஆயிரம் மதிப்புள்ள வாகை மரம் இருந்தது. இந்த மரம் அடர்ந்து, விரிந்து இருந்ததால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்தது. கோடை காலங்களில் இந்த மரத்தின் அடியில்தான் அந்த வழியில் செல்பவர்கள் ஓய்வெடுத்து செல்வார்கள்.

    இந்நிலையில் கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலர் அந்த மரத்தை வெட்டி கடத்தி சென்று விட்டனர். அரசு அனுமதி இல்லாமல் மர்ம நபர்களால் அந்த மரம் வெட்டப்பட்டுள்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், சீவல்சரகு கிராம நிர்வாக அலுவலர் பானு, வருவாய் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தூர் தாசில்தார் சரவணனிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து தாசில்தார் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி சென்றனர்.
    • பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    கொடைரோடு:

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ரெயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைரோடு ரெயில்நிலையத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனிராஜா தலைமையில், நிலக்கோட்டை வட்டார தலைவர் கோகுல்நாத், மகளிரணி தனலட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து கொடைரோடு ரெயில்நிலையத்தில் ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்றனர்.

    ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடுப்புகளை அமைத்தனர். இருந்த போதும் ரெயில்நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டி.எஸ்.பி இமானுவேல் ராஜ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி சென்றனர்.

    இதேபோல் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மிகப் ரிய அளவில் கொள்ளை நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
    • கடந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப் போட்டு அவரது வீட்டில் இருந்த 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம், கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

    பழனி:

    பழனி அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேவதி (50) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதன் காரணமாக அவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளைப் பார்க்க சென்னைக்கு சென்று விட்டார்.

    உதயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பணியை முடித்து விட்டு வீட்டில் தூங்கச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டுக்குள் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த உதயகுமார் சத்தம் போட முயன்ற போது அவரை சேரில் வைத்து கட்டிப் போட்டனர்.

    அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு கத்தியால் குத்தி பீரோ சாவியை பறித்தனர். பின்னர் அவரை கட்டிப் போட்டு வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டனர். மற்ற அறைகளில் இருந்த பீரோக்களையும் திறந்து பார்த்த போது அதில் பணம், நகை எதுவும் இல்லாததால் விட்டு விட்டனர்.

    பின்னர் தங்களை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு தப்பி விட்டனர். முன்னதாக கத்தியால் குத்தியதில் அவருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கயிற்றை லேசாக அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பிறகு படுகாயங்களுடன் உதயகுமார் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் உதயகுமார் இது குறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும், மோப்பநாய் கொண்டு வரப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

    மேலும் காயமடைந்த உதயகுமாரை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    சம்பவம் நடந்த போது அவரது வீட்டில் பணியாட்கள் யாரேனும் இருந்தார்களா? என்றும் அவர்கள் இந்த கொள்ளையில் தொடர்பில் உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மிகப் ரிய அளவில் கொள்ளை நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப் போட்டு அவரது வீட்டில் இருந்த 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம், கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. அந்த கொள்ளையில் இதுவரை யாரும் பிடிபடவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேடசந்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றனர். மாவட்டத்தில் தொடரும் இது போன்ற முகமூடி கொள்ளையர் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×