என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கோவில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தியதில் இளம்பெண்னின் தந்தை கூறியது பொய் எனவும், அர்ச்சகர் வீடியோ எடுத்ததை மட்டுமே கண்டித்துள்ளார் எனவும் உறுதியானது.
    • இளம்பெண் மற்றும் அவரது தந்தையிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் அரிய வகை நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்ட மூலரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரது மகள் செல்போனை மறைவாக வைத்து மூலவரை படம் பிடித்துள்ளார். இதையறிந்த கோவில் அர்ச்சகர் அதை கண்டித்துள்ளார். அதனை கேட்காமல் அந்த பெண் தொடர்ந்து படம் எடுக்க முயன்றதால் அர்ச்சகர் செல்போனை வாங்கி அதில் அவர் வீடியோவாக எடுத்த கோவில் நிகழ்ச்சிகள் குறித்து கூறி கண்டித்துள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அந்த பெண்ணின் தந்தை கோவில் அர்ச்சகரிடம் நீங்கள் எப்படி செல்போனை வாங்கி பார்க்கலாம்? எனது மகளை தொட்டு பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நான் உங்களை போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    அதன் பிறகு கோவில் கண்காணிப்பளரிடமும் இது குறித்து அவர் புகார் அளித்தார். இதனையடுத்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கோவில் கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தியதில் ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண்னின் தந்தை கூறியது பொய் எனவும், அர்ச்சகர் வீடியோ எடுத்ததை மட்டுமே கண்டித்துள்ளார் எனவும் உறுதியானது.

    இதனைத் தொடர்ந்து அர்ச்சகரை மிரட்டிய இளம்பெண் மற்றும் அவரது தந்தையிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே ஈரோட்டைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் அர்ச்சகரிடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    பழனி மலைக்கோவிலில் செல்போன்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதனையும் மீறி பக்தர்கள் செல்போன்களை மலைக்கோவிலுக்கு கொண்டு வருதும், மூலவருக்கு நடைபெறும் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதே போல் இரவில் தங்கத் தேரோட்டம் நடைபெறும் போதும் பக்தர்கள் செல்போனில் படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களுடன் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே மலைக்கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் வழிகாட்டிகள் என கூறிக் கொண்டு அவதூறு பரப்பும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஏரி சாலையில் பஸ்கள் நுழைவதால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
    • இதனால் ஏரிச்சாலையை சுற்றி கனரக வாகனமான பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பல்வேறு நாட்டவர், பல்வேறு மாநிலத்தவர்கள் விரும்பி ரசிக்க வரும் முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை,குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவர்.

    மேலும் நகர் பகுதியில் மிகவும் அதிகமாக நேரத்தை செலவிடும் பகுதிகளில் கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவைகள் ஆகும். இதில் குடும்பம் குடும்பமாக மிகவும் ரசித்து உற்சாகம் அடையும் வகையில் அதிகமான நேரத்தை செலவிடும் பகுதிகளில் ஏரிச்சாலை மிக முக்கிய இடங்களில் ஒன்று. ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதோடு நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைவது வழக்கம்.

    ஏரிச்சாலையில் ஒரு சில நேரங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மிக நீளமான பயணிகள் பேருந்துகளை ஏரிச்சாலையில் இயக்குவதால் ஏரிச்சாலையின் பல குறுகிய வளைவுச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதன் காரணமாக பல நாட்கள் ஏரிச்சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சைக்கிள் சவாரி குதிரை சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி சாலையைக் கடக்க முடியாமல் நிற்கும் கனரக வாகனமான பஸ்களால் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி இதுபோல் ஏரி சாலையில் பஸ்கள் நுழைவதால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஏரி சாலையை சுற்றி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் தங்கள் கடைகளின் கூரைகளை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஒரு சில நேரங்களில் ஒரு சில கடைகள் சேதம் அடைந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

    இதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் லாரிகளும் அதிவேகமாக செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடையும் சூழலும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஏரிச்சாலையை சுற்றி கனரக வாகனமான பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • மரத்தை அறுவை இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடைக்கும் இஞ்சோடைக்கும் இடையே இன்று காலை சாலைக்கு மேல்புறம் தனியார் தோட்டத்தில் உள்ள இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மின் கம்பி அறுந்தது. இதனால் புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜெயராஜ், முன்னாள் மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் மரத்தை அறுவை இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கின. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி கோவிலை சென்றடைந்தனர்.
    • பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்தில் செந்துறை சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்தை சுமந்தபடி ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் இருந்து மகாலட்சுமி கோவில், சந்தப்பேட்டையில் உள்ள முருகன் கோவில், விநாயகர், முத்தாலம்மன் கோவில், குரும்பபட்டி வீதி, ஐயப்பன் கோவில் வழியாக கோவிலை சென்றடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு கஞ்சி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அண்மைக்காலமாக கொடைக்கானல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் மனித, விலங்கு மோதல்களும், காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் பொதுமக்களை தாக்கி உயிர் இழக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.
    • நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக விளங்கி வருகிறது. இங்கு பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே உள்ளது . இந்த வனப் பகுதியில் பல்வேறு அரிய வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அண்மைக்காலமாக கொடைக்கானல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் மனித, விலங்கு மோதல்கள் நடைபெற்று வருகிறது.

    காட்டு யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் பொதுமக்களை தாக்கி உயிர் இழக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பது குறித்து கொடைக்கானல் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளாக இருக்கும் மோயர் சதுக்கம் , குணா குகை, பைன் மர காடுகள், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், பாதயாத்திரை பக்தர்களும் வருகை புரிவார்கள்.
    • இந்த ஆண்டு சலேத் அன்னை திருத்தலத்தின் 157 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் புகழ் பெற்ற புனித சலேத் அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. பாரிஸ் நகரத்தில் உள்ள மாதா சிலை நிறுவப்பட்ட அதே நாளில் கொடைக்கானலிலும் அதே உருவத்திலான சிலை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்று சிறப்பாகும்.

    சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், பாதயாத்திரை பக்தர்களும் வருகை புரிவார்கள். இந்த ஆண்டு சலேத் அன்னை திருத்தலத்தின் 157 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த மறை மாவட்ட பங்கு தந்தைகள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலி முடிந்தவுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 14 நாட்கள் நவநாள் முடிந்தவுடன் ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் சலேத் அன்னை திருத்தேர் பவனி நடைபெறும். இதனை முன்னிட்டு நடந்த கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது திடீரென மாடிப்படியில் ஏறிச் சென்ற கரண்குமார் மாடியில் இருந்து குதித்தார்.
    • வாலிபர் போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வத்தலக்குண்டு:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் கரண்குமார் (வயது 30). இவர் செல்போன் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதிக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்சேட் தலைமையிலான வத்தலக்குண்டு போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றியதால் விசாரணை நடத்தினர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் செல்போன் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகப்பட்டு கரண்குமாரை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது திடீரென மாடிப்படியில் ஏறிச் சென்ற கரண்குமார் மாடியில் இருந்து குதித்தார்.

    இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடி துடித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீசார் கரண்குமாரை உடனடியாக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் படுகாயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கரண்குமாரின் உறவினர்கள் கூறுகையில், செல்போன் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கரண்குமாரை அழைத்து வந்த போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். போலீசாரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரண்குமார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை தண்டனை கொடுத்திருக்கலாம். ஆனால் போலீசார் தாக்கியுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், கரண்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து வந்தோம். இரவு உணவு வாங்கி கொடுத்தோம். காலையில் கழிவறை செல்வதாக கூறிச் சென்ற அவர் திடீரென மாடியில் இருந்து குதித்தார். நாங்கள் அவரை துன்புறுத்தவில்லை என்றனர்.

    இந்த நிலையில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்தினார். இரு தரப்பிலும் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    வாலிபர் போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அந்தப் பகுதிகளில் மது விற்ற 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டுக்கள் சேகர், வனராஜன் மற்றும் போலீசார் திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோடு, நாகல் நகர், பொன்மாந்துறைபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்தப் பகுதிகளில் மது விற்ற சோலைஹால் தெருவை சேர்ந்த தயாளன் (வயது 37), பெரிய கடைவீதியை சேர்ந்த சுரேஷ் (50), தோட்டனூத்து பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (43), தர்மத்துபட்டியைச் சேர்ந்த செல்வம் (37), பொன்மாந்துறை என்.ஜி.ஆர் நகரை சேர்ந்த போஸ் (33) ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மாநாட்டில் 80 சதவீத விவசாய வேலைகளில் ஈடுபடும் பெண் விவசாயிகளுக்கு விவசாயி என்று தகுதி அளித்து அதற்கான அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட 11 கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
    • தொடர்ந்து மாநாட்டில் சிறு தானிய கண்காட்சிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    நத்தம்:

    நத்தத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் மாநில மாநாடு நடந்தது. இதற்கு மாநில தலைவர் ஷீலு தலைமை தாங்கினார். பெண்கள் இணைப்பு குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி, குழு உறுப்பினர் திருவண்ணாமலை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெண்கள் இணைப்பு குழு உறுப்பினர் அனுசுயா வரவேற்றார்.

    மாநாட்டில் 80 சதவீத விவசாய வேலைகளில் ஈடுபடும் பெண் விவசாயிகளுக்கு விவசாயி என்று தகுதி அளித்து அதற்கான அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும் என்பது உள்பட 11 கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

    தொடர்ந்து மாநாட்டில் சிறு தானிய கண்காட்சிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநில தலைவர் அண்ணாத்துரை, இலக்கிய பெருமன்ற தலைவர் வெள்ளைச்சாமி, மாநில துணை செயலாளர் ஜோதி உள்ளிட்ட பலர் பெண்களும், சிறு தானியமும் என்ற தலைப்பை வலியுறுத்தி பேசினார்கள். செயற்குழு உறுப்பினர் ரெங்கநாயகி நன்றி கூறினார்.

    • நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வேலம்பட்டி ஊராட்சி மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    இதற்கு வேலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராசு, நகர அவைத் தலைவர் சரவணன், மாவட்ட பிரதிநிதி குடகிப்பட்டி அழகர்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
    • சுகாதாரத்துறையில் நிரந்தர பணியாளர்கள் இருந்தால்தான் தரமான சேவை அளிக்க முடியும்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் தமிழ்நாடுபொதுசுகாதார துறை கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ரோணிக்கம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாண்டிமாதேவி வரவேற்றார். இதில் மாநில தலைவர் நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுகாதாரத்துறையில் நிரந்தர பணியாளர்கள் இருந்தால்தான் தரமான சேவை அளிக்க முடியும். எனவே துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இணையதள பணியை கவனிக்க தனியாக ஆட்கள் நியமிக்க வேண்டும். பெண் ஊழியர்கள் மீது அதிக பணிகளை திணிக்கக்கூடாது என பேசினார்.

    கூட்டத்தில் கிராமங்கள், மலைப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவாக மருத்துவ சேவை கிடைப்பதற்கு காலியாக இருக்கும் கிராம சுகாதார பணியி டங்களை நிரப்ப வேண்டும். தாய்-சேய் நலப்பணி பாதிக்கப்படுவதால் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஆன்லைன் பாடத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தாய்-சேய் நலப்பணிகளில் மட்டுமே கிராம சுகாதார செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும்.

    அதேபோல் மலைப்பகுதி, குக்கிராமங்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இந்திர தனுஷ் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஜோஸ்பின் அமலா நன்றி கூறினார்.

    • வாகனம் அருகில் இருந்த பள்ளத்தில் விழாமல் தரையில் சக்கரம் பதிந்ததால் தப்பியது
    • இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை வாகனம் உதவியுடன் கயிறு கட்டி வாகனத்தை சாலைக்கு கொண்டு வந்தனர்

    கொடைக்கானல்:

    பாண்டிச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சுற்றுலா வந்துள்ளனர்.வனப்பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் கண்டு ரசித்து விட்டு பசுமை பள்ளத்தாக்கு நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர மரத்தில் எதிர்பாராத விதமாக மோதி நின்றது.

    இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருப்பினும் வாகனம் அருகில் இருந்த பள்ளத்தில் விழாமல் தரையில் சக்கரம் பதிந்ததால் தப்பியது.இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை வாகனம் உதவியுடன் கயிறு கட்டி வாகனத்தை சாலைக்கு கொண்டு வந்தனர்.லேசான காயம்பட்ட இருவரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அதிக வேகம் மற்றும் பிரேக் செயலிழந்ததால் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது தெரியவந்தது.இதனையடுத்து சேதம் அடைந்த வாகனத்தை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி சுற்றுலா பயணிகளை மாற்று வாகனத்தில் கொடைக்கானலுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×