என் மலர்
தர்மபுரி
- ஆடி மாதத்தின் தொடர் விழாக்களால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
- சம்பங்கி கிலோ 140 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
தருமபுரி,
ஆடி மாதம் சக்தியாகி களும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் தமிழர்க ளின் பண்டிகைகள் ஆடியில் தொடங்குகிறது.
இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுவதால். இந்த நாட்களில் தமிழர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் மாரியம்மன் வழிபாடு, காது குத்து உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆனி மாதத்தில் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஆடி மாதத்தின் தொடர் விழாக்களால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ 360 ரூபாய், சன்னமல்லி கிலோ 220 ரூபாய், கனகா மரம் கிலோ 400 ரூபாய், காக்டா கிலோ 260 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 240 ரூபாய், மூக்குத்தி கிலோ 160 ரூபாய், அரளி கிலோ 120 ரூபாய், சம்பங்கி கிலோ 140 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் நாளை வரும் ஆடி பவுர்ணமி மற்றும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, முக்கிய நாட்களில் பூக்களின் விலை கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- இந்த வழிபாட்டை யொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
ஆடிமாத பிரதோஷத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் ஆடிமாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டை யொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது
இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை, போச்சம்பள்ளி, கல்லாவி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், சூளகிரி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூைஜ நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
- மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளிலும் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி, கம்பைநல்லூர், காரிமங்கலம், அதகபாடி, தொப்பூர், பி.அக்ரஹாரம், பென்னாகரம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளங்கி விலை ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையானது. தருமபுரி உழவர் சந்தை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முள்ளங்கி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது.
இந்த நிலையில் தருமபுரி உழவர் சந்தைக்கு தொடர்ந்து முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் விலையும் தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக முள்ளங்கி விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளிலும் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து வாடகைக்கு கூட கட்டுப்படியாகாத நிலையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் முள்ளங்கியை உழவர் சந்தைகளுக்கு கொண்டுவர வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.
- வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைதுசெய்தனர்.
- அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி,
வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பிரிவு வனவர் ராகுல், வனக்காப்பாளர்கள் சிவா, ராஜா, முருகன், வேணு, வனக்காவலர் பாலு அடங்கிய குழுவினர் சேலம் வனக்கோட்டம் பொம்மிடி பிரிவிற்குட்பட்ட ஏரிமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைதுசெய்தனர்.
விசாரணையில் அவர்கள் சேலம் உத்தமசோழபுரத்தை சேர்ந்த கரியராமன் (வயது 34), சுப்ரமணி (55), சவுந்தர்ராஜன் (34), வெங்கடேசன் (43) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனம், வலை, கொம்புகள், கூர்மையான ஆயுதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது.
- 15 கிலோ கொண்ட கூடை 1800 முதல் 2500 வரையும், ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மார்கெட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறைவினால் விலை உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பெப்பிடி, எர்ரணஹள்ளி, பேளார ஹள்ளி, சோமனஹள்ளி, சீங்காடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம் சராசரி தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது.
உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 7 ரூபாய் முதல் 10ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
சித்திரை மாதத்துக்குப் பிறகு வைகாசி ஆனி மாதத்தில் போதிய மழை பெய்யாததாலும், வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே அதிக விலை தக்காளி விற்கப்படுவதால் இப்பகுதிகளில் விவசாயிகள் மாற்று பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவதால் தக்காளி சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது.
இதனால் தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது. கொள்முதல் விலை மூன்று ரகங்களாக 15 கிலோ கொண்ட கூடை 1800 முதல் 2500 வரையும், ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தருமபுரி உழவர் சந்தையில் இன்று காலை நிலவரப்படி தக்காளி தரத்தை பொருத்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 84,95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முதல் தரம் தக்காளி விலை 150 வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தக்காளி விலை உயர்வு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி பயிர்கள் அறுவடைக்கு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
- போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமல்வாடி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சின்னசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து மர்மநபர் ஒருவர் செம்மண் வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளரான தினேஷ் (வயது45) என்பவர் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாரண்டஅள்ளி போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
- மானின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர்.
- கிணற்றில் தவித்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவருடைய 60 அடி ஆழ கிணற்றில் நேற்று முன்தினம் இரவு 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது.
அப்போது கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் மான் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. நேற்று காலை மானின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர்.
பின்னர் இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தவித்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் புள்ளி மானை பிக்கிலி வனப்பகுதியில் உள்ள பனைக்குளம் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
- நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் நேற்று மாலை தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதன்காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.
இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள ஆர்.மோட்டூரை சேர்ந்தவர் அருள் (வயது 29). அண்ணா நகரை சேர்ந்தவர் கவிபாரதி (28).
இவர்கள் ராணி மூக்கனூர்-அரூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளிய மரத்தை அனுமதி இன்றி அறுத்து கொண்டு இருந்தனர்.
இது குறித்து சாலை ஆய்வாளர் சிவானந்தம் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூஞ்சோலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி அருகே பெரியகுரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை (வயது 60), விவசாயி. வருடைய உறவினர் விஸ்வநாதன் (63). இவர்கள் இருவருக்கும் இடையே வீட்டை ஒட்டி உள்ள நிலத்திற்கு செல்லும் வழித்தட பாதை தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று மாலையில் பூஞ்சோலை அந்த குறிப்பிட்ட வழித்தட பாதையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
இதனிடையே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூஞ்சோலையின் மார்பில் குத்திவிட்டு விஸ்வநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பூஞ்சோலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த மதிகோன் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார், பூஞ்சோலையின் உடலை கைப்பற்றி அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய விஸ்வநாதனை போலீசார் நேற்று இரவு பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- சூடப்பாவின் வீட்டிற்கு சென்று அஸ்வத்ரெட்டி தகராறு செய்துள்ளார்.
- போதையில் அரிவாளால் சூடப்பாவின் தலையில் வெட்டினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூடப்பா (வயது 45). லாரி டிரைவர்.
அப்பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்ரெட்டி (46). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மதகொண்டப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சூடப்பாவின் வீட்டிற்கு சென்று அஸ்வத்ரெட்டி தகராறு செய்துள்ளார்.
அப்போது போதையில் அரிவாளால் சூடப்பாவின் தலையில் வெட்டினார்.
இதில் காயமடைந்த அவர் தேன்கனிக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக தளி போலீசில் சூடப்பா புகார் செய்தார். இதையடுத்து அஸ்வத்ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- கடத்தூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் வி.சி.க. புதிய மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடத்தூர்,
தருமபுரி கிழக்கு மாவட்ட வி.சி.க புதிய மாவட்ட செயலாளராக சாக்கன்சர்மா நியமிக்கப்பட்டார்.
கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி, மணியம்பாடி, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் பேரூராட்சி துணை தலைவர் வினோத், கவுன்சிலர் மயில்சாமி, சிவன், ஒன்றிய செயலாளர் பாலய்யா, மாறன், குமார் பிள்ளை, அன்புமணி, திருமால், பாண்டியன், திருப்பதி, சக்திதாசன், குமரன், பார்வதி, தீபாஞ்சி, பசுவராஜ், சந்தோஷ், ராஜசேகர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கடத்தூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் வி.சி.க. புதிய மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






