என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மறைமலைநகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 பவுன் நகையை 2 பேர் பறித்து சென்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் விஷ்ணுபிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வி (வயது 35), நேற்று முன்தினம் தனது மகனை அழைத்துக்கொண்டு ரெயில் நகர் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் முத்துச்செல்வி அணிந்திருந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து முத்துச்செல்வி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.
    செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டில் பெரும்பாலோனோர் முக கவசம் அணியாமல் காய்கறி வாங்க குவிந்துள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செங்கல்பட்டு:

    கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டுகளில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

    பெரும்பாலோனோர் முக கவசம் அணியாமல் காய்கறி வாங்க குவிந்தனர். அதுபோல காய்கறிகளை விற்பனை செய்யும் வியபாரிகளிலும் ஏராளமானோர் முககவசம் அணியாமல் இருந்தனர். விற்பனையாளர்களும், பொதுமக்களும் முககவசம் அணியாமலும். சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டபடி நடந்துகொண்டனர். 

    இந்த கொரோனா தொற்று மேலும் பரவாமலிருக்க செங்கல்பட்டு நகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    மறைமலைநகரில் அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக வந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மறைமலை நகரில் ரியல் எஸ்டேட் அதிபர் திருமாறன் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். திருமாறனுக்கு பாதுகாப்பாக வந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் உயிரிழந்தார். 

    அதிமுக பிரமுகர் திருமாறனை வெட்டிக்கொலை செய்து தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 985 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இதில் அதிகபட்சமாக பரங்கிமலை பகுதியில் 158 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல்லாவரத்தில் 135 பேரும், காட்டாங்குளத்தூரில் 79 பேரும், திருப்போரூரில் 74 பேரும், பெருங்களத்தூரில் 41 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    தாம்பரத்தில் 72 பேரும், பம்மலில் 43 பேரும், கன்டோன்மென்ட்டில் 34 பேரும், மறைமலை நகரில் 25 பேரும், மதுராந்தகத்தில் 21 பேரும், செம்பாக்கத்தில் 25 பேரும், கூடுவாஞ்சேரியில் 24 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு 480 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று டீன் முத்துகுமரன் தெரிவித்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் முத்துகுமரன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு தற்போது 480 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 240 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஒரு வேளை நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தால் மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் என அனைத்தும் தயார் நிலையில் போதுமான அளவில் உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகி்றது நோயாளிகளும், அதிகமான அளவில் ஆஸ்பத்திரிக்கு வருகை தருகின்றனர்.

    டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகளுக்கான காலிபணியிடங்களை நிரப்ப அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கேளம்பாக்கத்தில் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் பெண் கரம் பிடித்தார்.
    மாமல்லபுரம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த புதுவேட்டைகுடி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 32). பி.டெக் படித்துள்ள அவர் பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தன்னுடைய நண்பர்களுடன் தங்கி அங்குள்ள மாத்திரை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் விற்பனை பிரிவு அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இதே நிறுவனத்தில் கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்த அந்தோனிசலேரி (31) என்ற பெண்ணும் வேலை செய்து வந்தார்.

    ஒரே நிறுவனத்தில் இருவரும் வேலை செய்து வந்ததால் தினமும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டு நண்பர்களாக பழகினர். பின்னர் அது காதலாக மாறியது.

    கடந்த 3½ ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். நிறுவன விடுமுறை நாட்களில் கணவன், மனைவி போல நெருக்கமாக ஊர் சுற்றி வந்தனர்.

    கோபாலகிருஷ்ணன் அந்தோனிசலேரி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அவரது குடும்பத்தினரிடமும் அன்பாக பழகியுள்ளார்.

    இந்த நிலையில் தான் ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக அந்த பெண்ணிடம் கூறிவிட்டு சென்ற கோபாலகிருஷ்ணன் பல மாதங்கள் ஆகியும் கேளம்பாக்கம் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தோனிசலேரி அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் அவர் தொடர்பு கொண்ட போது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்ற தகவலே திரும்ப, திரும்ப வந்தது.

    கோபாலகிருஷ்ணனுக்கு கள்ளக்குறிச்சியை ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு வருகிற 25-ந்தேதி திருமணம் செய்ய இிருந்த தகவல் அந்தோனிசலேத்துக்கு தெரிய வந்தது.

    ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தோனிசலேத் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் புகார் செய்தார். கோபாலகிருஷ்ணன் இருக்கும் இடத்தை செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து மாமல்லபுரம் மகளிர் போலீசார் கண்டுபிடித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனம் உத்தரவின்பேரில் மப்டி உடையில் கள்ளக்குறிச்சி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து மாமல்லபுரம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் ஏமாற்றிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மனம் மாறி ஒப்பு கொண்டார்.

    இருவரது பெற்றோர், மகளிர் போலீசார் முன்னிலையில் கோபாலகிருஷ்ணன், அந்தோனி சலேரி இருவரும் போலீஸ் நிலையத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடியை மகளிர் போலீசார் வாழ்த்தி அனுப்பினர்.
    மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    மாமல்லபுரம்: 

    தமிழகத்தில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தமிழக அரசு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகம் கூடுவதால் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும் அருங்காட்சியகங்களையும் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

    சுற்றுலா தலங்களில் உள்ள கடற்கரைகளையும் பொதுமக்கள் கூடாத வகையில் மூட உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் போலீஸ் துறையினருடன் சென்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை கோவிலின் தெற்கு, வடக்கு பக்க கடற்கரை முழுவதும் நடந்து சென்று பார்வையிட்டு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். தடையை மீறி கடற்கரைக்கு வரும் பொதுமக்களை தடுக்கும் வகையில் அனைத்து பாதைகளையும் தடுப்புகள் வைத்து அடைக்குமாறும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறும் மாமல்லபுரம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

    அதேபோல் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் இரவு நேர ஊரடங்கையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் முக்கிய இடங்களில் தடுப்புகள் வைத்து வாகன தணிக்கையை தீவிரப்படுத்துமாறு ரோந்து போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை இ-பாஸ் அனுமதி பெற்று வந்த வாகனமா? என சோதனை நடத்த வேண்டும் என்றும் போலீசுக்கு அவர் உத்தரவிட்டார். மாமல்லபுரத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை பகல், இரவு நேர ஷிப்டு முறையில் அவர்கள் பணியாற்ற பரிந்துரைத்தார்.

    கடைகளுக்கு அத்திய பொருட்கள் வாங்க செல்லும் மக்களை அவர்கள் முக கசவம் அணிந்து செல்கின்றனரா? என கண்காணித்தும், சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் பொருட்கள் வாங்குகின்றனரா? என பார்த்து ஆய்வு செய்யுமாறும் விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் போலீஸ் துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார். கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் தங்கள் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு முக கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

    அவருடன் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் வந்திருந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 970 பேர் பாதிக்கப்பட்டனர். 6 பேர் உயிரிழந்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 970 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 59 ஆயிரத்து 421 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்தது. 7 ஆயிரத்து 872 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 31 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2038 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருப்போரூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை ஒத்துழைப்போடு கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்து வருகிறது.
    திருப்போரூர்:

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமை படுத்தி கொண்டனர். திருப்போரூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை ஒத்துழைப்போடு கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து அனைவருக்கும் பரிசோதனை செய்து வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.அந்த பகுதி முழுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
    செய்யூர் அருகே கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தென்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (வயது 26). இவர் நாகமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், இவர் நேற்று காலை பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகமலையிலிருந்து ஓணம்பாக்கம் கல்குவாரிக்கு சென்ற லாரி, லோகநாதன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதன் பின்னர், அவர்கள் ஆத்திரமடைந்து கல்குவாரியை மூடக்கோரி சித்தாமூர் செய்யூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும், கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரியும், லாரி உரிமையாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

    ஏற்கனவே நேற்று முன்தினம் செய்யூரில் இதே கல்குவாரிக்கு சொந்தமான லாரி மோதி ஒரு பெண் பலியான நிலையில், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65,424ஆக உள்ளது. 

    கொரோனாவில் இருந்து இதுவரை 58,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 859 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
    செய்யூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த மேற்கு செய்யூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). கணவரை இழந்தவர். இவருக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை நரேஷ் குமார் (17) தனது தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு செய்யூர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். செய்யூர் பஸ் நிலையத்தை அடுத்த அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும்போது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய லட்சுமி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் இழுத்து செல்லப்பட்டது. உடல் 2 துண்டானது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த அந்த பகுதி பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரி கண்ணாடிகளை உடைத்து லாரி உரிமையாளர், டிரைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரது உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். லாரி டிரைவரான வயலூரை சேர்ந்த உத்தமன் என்பவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
    ×