என் மலர்
செங்கல்பட்டு
- வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு பூட்டு உடைந்த நிலையில் திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுதாகர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 38 பவுன் நகை, மற்றும் திருப்பதி கோவிலுக்கு காணிக்கைக்காக வைத்திருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலர் மாயமான சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆராமுதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அடுத்த ஊனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊனமலை ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக ஆராமுதன், மொறப்பாக்கம் ஊராட்சியின் செயலராகவும் கூடுதல் பொறுப்பாக பணி செய்து வந்தார். இதனால் அவர் கூடுதல் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆராமுதன், வேலைக்கு செல்வதாக மனைவி பிரேமாவிடம் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பிரேமா மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ஆராமுதன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ஊனமலை மற்றும் மொறப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் பொறுப்பாக ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருவதால், பணி சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே நிம்மதியை தேடி செல்கிறேன் என்று எழுதி வைத்து உள்ளார். பணிச்சுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலர் மாயமான சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆராமுதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
- செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
- செங்கல்பட்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் தேசிங்கு பங்கேற்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் தேசிங்கு பங்கேற்றனர்.
- செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் இரணியம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- நாட்டு வெடி குண்டை டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் இரணியம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி செல்லும் போது அதில் ஒரு வாலிபர் திடீரென தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்று விட்டனர்.
இதில் டாஸ்மாக் கடையின் இரும்பு கேட் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் டாஸ்மாக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீஸ்காரர்கள் கருப்புசாமி, வேலன், கங்காதரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் வண்டலூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 22), பாலமுருகன் (24), ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினை வழங்கினார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கலந்து கொண்டு 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ்,தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் பொறுப்பு) லட்சுமணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பேபி இந்திரா கலந்து கொண்டனர்.
- இரட்டை கொலை மணிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வழிப்பறி சம்பவங்களிலும் தேவேந்திரன் ஈடுபட்டு வந்தான்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தேவா என்கிற தேவேந்திரன். இவன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 4 பேருடன் கஞ்சா புகைப்பது வழக்கம். மேலும் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தான்.
மேலும் வழிப்பறி சம்பவங்களிலும் தேவேந்திரன் ஈடுபட்டு வந்தான். மணிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் செல்பவர்களிடம் நகை, பணம், செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தான்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி தேவேந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றான். அதன்பிறகு இரவில் அவன் வீடு திரும்பவில்லை. அவனை தந்தை பஞ்சாட்சரம் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தனது மகனை காணவில்லை என்று அவர் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தின் அருகே புதிதாக கட்டப் பட்டு வரும் கட்டிடத்தின் மேல்தளத்தில் தேவேந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தேவேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேவேந்திரன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. தேவேந்திரன் கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து மணிமங்கலம் பகுதியில் விற்பனை செய்து வந்தான். இதில் ஏற்பட்ட மோதலில் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து தேவேந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து தேவேந்திரனை கொலை செய்ததாக மணிமங்கலத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (23), சுகன் என்கிற சுரேந்தர் (20), புளி மூட்டை என்கிற சதீஷ் (20), சுதாகர் (21), ரைசுப் இஸ்லாமுல் அன்சாரி (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் விக்னேஷ், சுரேந்தர் ஆகியோர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் மணிமங்கலம் பகுதியில் சுற்றித்திருந்தனர்.
நேற்று இரவு விக்னேஷ், சுரேந்தர் இருவரும் மணிமங்கலம் போலீஸ் நிலையம் அருகே தேவேந்திரன் கொலை செய்யப்பட்ட இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 12 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை வழி மறித்தனர்.
இதையடுத்து விக்னேஷ், சுரேந்தர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர்களது தலை, உடல் பகுதியில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுபற்றி பொது மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
உயிருக்கு போராடிய விக்னேஷ், சுரேந்தர் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தேவேந்திரன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவரது கூட்டாளிகள் விக்னேசையும், சுரேந்தரையும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் கொலைக்கு பழிக்கு பழிவாங்கும் வகையில் நடந்த இந்த இரட்டை கொலை மணிமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கல்பாக்கத்தில் நகைக்கடையில் வேலை போனதாலும், கடனை அடைக்க முடியாத காரணத்தாலும் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
- கடிதத்தை கைப்பற்றி கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் புதுப்பட்டினம் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது.25) நகைக்கடை ஊழியரான இவர், கடன் தொல்லை காரணமாக கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடிதத்தில் எழுதி இருப்பதாவது:- நகைக்கடையில் வேலை போனதால் என்னால் வீட்டு கடன், தனிநபர் கடன், பைக் கடன் என தகுதிக்கு மீறி வாங்கிய கடன்களை மாதம்தோறும் அடைக்க முடியவில்லை. வீட்டின் அருகில் நடந்த நகைத்திருட்டு சம்பவத்திலும் என்னை சேர்த்து பேசுகிறார்கள். அதனால் வாழ பிடிக்கவில்லை. அக்கா நீ அம்மாவை பார்த்துக்கொள் என எழுதி இருந்தது.
இக்கடிதத்தை கைப்பற்றி கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்குகளை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும் போது வனஊழியர்கள் சுற்றி வளைத்தனர்
- வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பன்னூர் காப்பு காடு செட்டிபுண்ணியம் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் காட்டு பகுதியில் விலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக ரகசிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து வனசரகர் கமல் ஆசன்னா தலைமையில் வன ஊழியர்கள் வனப்பகுதியில் பதுங்கி இருந்தனர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது வன ஊழியர்கள், மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் வேட்டையாடிய காட்டுப்பன்றி, காட்டு பூனை மற்றும் காட்டு முயல் ஆகியவை இறந்த நிலையில் வைத்திருந்தனர். அனைத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் (34), மற்றொருவர் செங்கல்பட்டை சேர்ந்த ரவி மகன் கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு இரண்டாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
- சென்னை நோக்கி வந்த கார் மீது கடலூர் நோக்கி மீன் ஏற்றி சென்ற மினி கண்டெய்னர் வேன் நேருக்கு நேர் மோதியது.
- விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் இரண்டு வாகனமும் வேக கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த வாயலூர் கள்ளுக்கடை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 9 மணிக்கு, சென்னை நோக்கி வந்த கார் மீது கடலூர் நோக்கி மீன் ஏற்றி சென்ற மினி கண்டெய்னர் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சபீர்பாஷா, (வயது26) உடன் பயணித்த அதே பகுதியை சேர்ந்த பெண் நூர் ரிஷ்வானா (வயது.49) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்த மற்ற 3 பெண்களும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை சதுரங்கபட்டினம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் இரண்டு வாகனமும் வேக கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- டெல்லியில் இருந்து மம்தா ஷங்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- பொருட்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் இந்த கடையில் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? அளவுகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டிருந்தனர்.
மாமல்லபுரம்:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ரேஷன் பொருட்களை எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் தரமானதாக இல்லை எனவும், எடை அளவு சரியாக இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து மம்தா ஷங்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொருட்கள் வாங்க நின்றிருந்த பொதுமக்களிடம் இந்த கடையில் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுகிறதா? அளவுகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து கேட்டிருந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் பொருட்களின் அளவு சரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
பின்னர் ரேஷன் பொருட்களை அடுக்கி வைத்திருந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கே கீழே சிந்தி கிடந்த பொருட்களை பார்த்து இதை பொதுமக்களுக்கு வழங்க கூடாது எனவும், ரேஷன் கடையினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அவர்களுடன் காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட பதிவாளர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டின் அருகே வசிப்பவர்கள் கொள்ளை குறித்து தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
- தகவலின் பேரில் வந்த போலீசார் பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் சி.டி.ஓ. காலனி 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த 3 நாட்கள் முன்பு திருச்சியில் உள்ள உறவினர் இல்லத்திற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் இன்று வீட்டின் அருகே வசிப்பவர்கள் சென்றபோது மின்வாரிய ஊழியரின் வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து உடனடியாக தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இது குறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். கண்ணன் உடனடியாக திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் வந்த பின்பே நகைகள்-பணம் எவ்வளவு கொள்ளை போனது என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபோல் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் உரிமையாளர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே ஆள் இருப்பதைக் கண்டு வீட்டின் மதில் சுவர் உள்ள கேட்டை மட்டும் உடைத்து அங்கு அழகுக்காக வைத்திருந்த விலை உயர்ந்த பறவைகளை மட்டும் கூண்டில் இருந்து திருடி சென்றுள்ளனர். இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட தீர்மானம் செய்தது.
- செப்டம்பர் 1-ந் தேதி முதல், வரும் அடுத்த ஆண்டு(2023) மார்ச் 31-ந் தேதி வரைக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சுற்றுலா மற்றும் தனிநபர் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஏலம் விடாமல் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமே வசூல் செய்து வந்தது. இதைத்தொடர்ந்து "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடந்த நிலையில் ஜூலையில் நுழைவு கட்டணம் வசூலிப்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏலம் விட தீர்மானம் செய்தது. செப்டம்பர் 1-ந் தேதி முதல், வரும் அடுத்த ஆண்டு(2023) மார்ச் 31-ந் தேதி வரைக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. இது ரூ.96 லட்சத்திற்கு ஏலம் போனது. நுழைவுக்கு தனி, வாகனம் நிறுத்த தனி என சட்டவிரோதமாக கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது. சுற்றுலா பயணிகளிடம் அடாவடியாக நடந்து கொள்ளக்கூடாது, வெளி நாட்டவர், வெளி மாநிலத்தவர் அதிகம் வரும் சுற்றுலா பகுதி என்பதால் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்கள் முறையான சீருடை, அடையாள அட்டை மற்றும் பல மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






