என் மலர்
செங்கல்பட்டு
- இயற்கையையும்-பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால்தான் காப்பாற்ற முடியும்.
- இயற்கை என்பது அரசினுடைய சொத்து, அது அரசினுடைய சொத்து மட்டுமல்ல-மக்களின் சொத்து! எதிர்கால சமுதாயத்தின் சொத்து!
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் "பசுமை தமிழ்நாடு இயக்கம்" தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், இயற்கையை நாம் நினைத்தால் நிச்சயமாக காப்பாற்ற முடியும். அதைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட உணர்வை எல்லோரும் பெற்றிட வேண்டும். அந்த அடிப்படையில் நம்மிடத்தில் இருக்கும் இயற்கை வளத்தைக் காப்பாற்றுவதற்காக இந்த பசுமை தமிழ்நாடு இயக்கம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு என்பதே பசுமை மாநிலம்தான். நம்முடைய இலக்கியங்கள் இயற்கையைப் பற்றியே அதிகமாக எழுதி இருக்கின்றன. இயற்கையைப் பற்றியே நம்முடைய புலவர்கள் அதிகமாகப் பாடி இருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம்முடைய தமிழினம். மண்ணையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்து வாழ்ந்தவர்கள் நம்முடைய தமிழர்கள். மக்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் மணமும் குணமும் சொன்ன இனம் நம்முடைய தமிழினம். தெருவில் படர்ந்து கிடந்த முல்லைக்கு தன்னுடைய தேரைக் கொடுத்தான் பாரி மன்னன்.
காடும் காடு சார்ந்து-மலையும் மலை சார்ந்து-கடலும் கடல் சார்ந்து வாழ்ந்தவர்கள் நம்முடைய தமிழர்கள். அனைத்து கோவில்களிலும் அதற்கெனத் தனித்தனி மரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். எனவேதான் இயற்கையைக் காப்பது என்பது நம்முடைய இயல்பிலேயே இருக்கிறது.
வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கைக்கு சோதனை வரும்போதெல்லாம், இயற்கையையும் காத்து வளர்ச்சியை வழிநடத்தி வருகிறோம். அதனால்தான் தமிழ்நாடு அரசினுடைய பசுமைக் கொள்கை!
இயற்கையையும்-பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால்தான் காப்பாற்ற முடியும். ஏனென்றால், இயற்கை என்பது அரசினுடைய சொத்து, அது அரசினுடைய சொத்து மட்டுமல்ல-மக்களின் சொத்து! எதிர்கால சமுதாயத்தின் சொத்து! அத்தகைய இயற்கைச் சொத்தை, அரசும்-மக்களும் காக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில்தான், இந்த பசுமைத் தமிழகம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்லுயிரை நாம் காக்க வேண்டும். இந்த உலகம் என்பது மனிதர்களான நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. புல் பூண்டு தொடங்கி அனைத்து விலங்குகளுக்கும் சொந்தமானதுதான் இந்த உலகம். எனவே அவற்றை நாம் காக்க வேண்டும்.
இப்போது நமக்கு இருக்கக்கூடிய மாபெரும் அச்சுறுத்தல் என்பது காலநிலை மாற்றம்தான். அதிகப்படியான வெப்பம், வெயில் அடிக்கிறது. மழை என்பது சீரானதாக இல்லாமல், பலமாக அடித்துவிட்டு நின்று விடுகிறது. மழைக்காலம்-வெயில் காலம் என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு நாடு இப்போது மாறி இருக்கிறது, காலநிலை மாறி இருக்கிறது. மழை எப்போது வரும், மழை எப்போது வராது என்று சொல்லமுடியாத அளவிற்கு காலநிலை மாறியிருக்கிறது. எனவே காலநிலைகளை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது. உலகின் சில பகுதிகளில் அனல் காற்று அதிகப்படியாக வீசிக் கொண்டு இருக்கிறது. தோல் எரியக்கூடிய அளவுக்கு காற்று வீசுகிறது. இவை அனைத்தும் இயற்கையை-பசுமையை நாம் மறந்ததால் ஏற்படக்கூடிய எதிர்வினைகள்தான் என்பதை நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும்.
அதற்கு நாம் வனம், காடுகள் ஆகியவற்றை காக்க வேண்டும். காடுகளை, பசுமைப் பரப்புகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். இயற்கை நீர் நிலைகளைக் காக்க வேண்டும். இருக்கும் நீர் நிலைகளை தூர்வாரி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மண்ணின் வளம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காற்றை இதற்கு மேலும் மாசுபடுத்தாமல் கவனித்தாக வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்காகவே "மீண்டும் மஞ்சப்பை" என்ற இயக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.
* உணவுப் பாதுகாப்பு-ஆகியவற்றில் வனமும் மரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே மரங்களை வைப்பது, வனங்களைப் பாதுகாப்பதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் கவனம் செலுத்த வேண்டும்.
2018-ம் ஆண்டு கஜா புயல் அடித்தது. தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளைப் பாதித்தது. அப்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை பகுதியில் இருந்த அலையாத்தி காடுகள்தான் அந்தக் கடுமையான புயலையும் தாங்கி மக்களைக் காத்தது என்பதை மறந்து விட வேண்டாம்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. எனவே அதிகளவிலான நாட்டு மரங்களை நடுவது இந்த பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமாக இருப்பதை அறிந்து நான் உள்ளபடியே பாராட்டுகிறேன்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில், தட்பவெப்ப நிலை மாற்றங்களை தாக்குப்பிடிக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும். அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமான இயற்கைச் சூழலை உருவாக்கியாக வேண்டும்.
இந்த இயக்கத்தின்கீழ் குறுகிய காலத்தில் மாநிலம் முழுவதும் 350 நாற்றங்கால்களில் 2 கோடியே 80 லட்சம் நாற்றுகள் வளர்க்கப்பட்டு உள்ளன என்பதை குறிப்பிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
பொருளாதார முக்கியத்துவத்தையும் மனதில் வைத்து சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். மாநிலத்தின் உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல், மர உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்போம். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், உழவர்கள், கிராம ஊராட்சி மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தைப் பெருக்க இந்தத் திட்டம் உதவும் என நம்புகிறேன்.
ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவச் செல்வங்கள், சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் இங்கே கூடியுள்ளீர்கள். இந்த இயக்கத்தினுடைய மாபெரும் பணி என்னவென்றால், இதை வெற்றியடையச் செய்ய வேண்டும். இந்த வெற்றி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அந்த வெற்றியை உருவாக்கித் தரக்கூடிய பொறுப்பு உங்களிடத்திலே தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அங்குல இடம் இருந்தாலும் கூட, அதில் ஒரு தாவரத்தினை வளர்ப்போம் என உறுதி மொழி எடுத்து, ஒவ்வொருவரும் எத்தனை தாவரங்களை உருவாக்க முடியுமோ அத்தனை தாவரங்களை உருவாக்கி இத்தமிழகத்தினைப் பசுமை மிகு தமிழகமாக மாற்றிட வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- நித்தின் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
- ராட்சத அலையில் சிக்கிய நித்தின் கடலில் மூழ்கினார்.
மாமல்லபுரம்:
ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்தின்(வயது20). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பயோடெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர்கள் கடற்கரை கோயில் அருகே கடலில் குளித்தனர்.
இதில் ராட்சத அலையில் சிக்கிய நித்தின் கடலில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் கடற்கரை கோயில் அருகே நித்தின் பிணமாக கரை ஒதுங்கினார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
- இரண்டு நாட்களாக நடந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,054 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. நெம்மேலி, பட்டிபுலம், சூலேரிக்காடு, சாலவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள இடங்களை தனியார் ஓட்டல்கள், கோவில், வீடு, வீட்டுமனை என பலர் ஆக்ரமித்து பயன்படுத்தி, வந்தனர்.
இந்த நிலையில் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்ரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருடன் இணைந்து ஆக்ரமிப்பு கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.இரண்டு நாட்களாக நடந்த இந்த ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கையில் ரூ.20 கோடி மதிப்பிலான சுமார் 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
- தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பளவு 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
- மக்களின் பங்களிப்போடு இயற்கை வளங்களை காக்க இந்த திட்டத்தை அரசு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தமிழக வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தினை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பளவு 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
மக்களின் பங்களிப்போடு இயற்கை வளங்களை காக்க இந்த திட்டத்தை அரசு தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக வண்டலூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வண்டலூர் ரெயில் நிலையம் எதிரில் மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மருவூர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
- நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் மின்சார வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிகரன். இவர் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மருவூர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு எழுந்த ஹரிகரன், அவரது மனைவி ஜெயா மற்றும் மகள் உள்பட அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டி கை, கால் கட்டி போட்டனர். பிறகு மர்ம கும்பல் வீட்டிலிருந்த 8 பவுன் தங்கநகைகள், 1¼ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.84 ஆயிரம் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கரும்பூர் வி.ஜி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54), விவசாயியான இவர், வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் ஊராட்சியில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (60), வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையும், ரூ.10ஆயிரத்தை திருடி சென்றது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
- செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 13 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 536 விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட 13 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 536 விதிக்கப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரச தொகை ரூ.42 ஆயிரத்தை செலுத்தியதால் அவர்கள் மீது போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கி சூடும் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.
- ராணுவ குடிநீர் லாரியில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்களில் 2 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கி சூடும் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு குடிநீர் தேவைக்காக அஞ்சூர் பகுதியில் உள்ள குழாயில் இருந்து ராணுவத்துக்கு சொந்தமான லாரியில் குடிநீரை எடுத்துக்கொண்டு அனுமந்தபுரம் நோக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில், வழக்கம்போல், நேற்று அஞ்சூர் ஏரியின் கரையருகே ராணுவ டேங்கர் வந்தபோது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ராணுவ குடிநீர் லாரியில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்களில் 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஞ்சூர் ஏரியில் கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை தரமற்ற நிலையில் போடப்பட்டுள்ளதால் நேற்று ராணுவ குடிநீர் லாரி விபத்துக்குள்ளானதாக ராணுவ வீரர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று மறைமலைநகர் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார்.
- குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கருநீலம் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தி்ல் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 20-ந் தேதி சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலைய வாகன நிறுத்தம் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து மறைமலைநகர் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வழக்கில் குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுப்பட்டு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேடந்தாங்கல் சாலையில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பாண்டிச்சேரியில் இருந்து 30 பெட்டிகளில் 1440 பாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், அமிர்தபுரம்,கணபதி நகரைச் சேர்ந்த மதிவாணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு போரட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை நிலுவையின்றி அறிவித்த தேதியில் இருந்தே வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக நிறுத்திவைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஜோசப், மாவட்ட பொருளாளர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் குருசாமி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் பொன்னழகி, மாநில செயற்குழு உறுப்பினர் செபாஸ்டியான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா.
- கடந்த 20-ந் தேதி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்து சென்றார். பின்னர் சித்ரா வீடு திரும்பவில்லை.
தாம்பரம்:
கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சித்ரா (வயது 73).
இவர் கடந்த 20-ந் தேதி அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்து சென்றார். பின்னர் சித்ரா வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி - ஊரப்பாக்கம் இடையே மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே மூதாட்டி சித்ரா மாயமாகி இருந்ததால் அவரது உறவினர்களை அழைத்து போலீசார் உடலை காட்டி விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்த மூதாட்டி சித்ரா என்பதை உறவினர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்து சித்ராவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் சித்ரா இறந்தாக கருதி இறுதி சடங்குகளை செய்து நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சுடு காட்டில் உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி சித்ரா நேற்று காலை திடீரென வீட்டிற்கு உயிருடன் வந்தார். இதனை கண்டு வீட்டில் இருந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடைந்தனர். இறந்தவர் எப்படி உயிரோடு வந்தார் என்று குழப்பம் அடைந்தனர்.
அவர்கள் சித்ராவிடம் விசாரித்த போது அவர் வழி தெரியாமல் வேறு இடத்தில் சுற்றி விட்டு திரும்பி வந்திருப்பது தெரிந்தது. சித்ரா இறந்ததாக கருதி வேறு ஒரு மூதாட்டியின் உடலை உறுதி செய்து அடக்கம் செய்து இருப்பதும் தெரிய வந்தது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த சித்ராவின் உறவினர்கள் நடந்த குழப்பம் குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சித்ரா என்று சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மூதாட்டி யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். புதைக்கப்பட்ட மூதாட்டியின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து தருமாறு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தாம்பரம் ரெயில்வே போலீசார் மனு கொடுத்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி சித்ரா திரும்பி வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
- வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குனர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருது வழங்கிடும் திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கிடும் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறும் இந்த திட்டதிற்கு புதிய வேளாண் தொழில்நுட்ப உள்ளூர் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சமும், புதிய வேளாண்மை கருவி கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சமும் என வேளாண்மை துறைக்கு இந்த திட்டத்தில் மொத்தம் ரூ.2 லட்சம் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது.
இந்த திட்டம் 2022-23 நடப்பாண்டுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் குழு அமைத்து, இந்த திட்டத்தை நடைமுறைபடுத்திட உள்ளது. இந்த திட்டத்தில் தகுதியுடைய பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவன் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
பங்கேற்பாளர் தனது சாதனை குறித்த விளக்கம் மற்றும் விவரங்களுடன் மாவட்ட அளவிலான குழுவிடம், செயல்விளக்கங்கள். எந்திரங்கள், புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றுடன் விளக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயியின் கண்டுபிடிப்பானது அவரது சொந்தக் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் இந்த கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்தபோட்டியிலும் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெற்றதாக இருக்கக் கூடாது.
விருதுக்கு சமர்ப்பிக்கப்படும் எந்திரம் வேறு ஒரு தனி நபருடைய அல்லது ஒரு நிறுவனத்தின் கண்டுபிடிப்பின், தயாரிப்பின் அசலாகவோ, சாயலாகவோ, மேம்படுத்தப்பட்டதாகவோ இருக்கக்கூடாது இதற்கான குறிப்புரை வேளாண் என்ஜினீயரிங் துறையின் மூலம் பெறப்பட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் உள்ளூர் தொழில்நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் அது போல உள்ளூர் கண்டுபிடிப்பானது விவசாயிகளால் எளிதில் உபயோகப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட விவசாயிகளின் தொழில் நுட்ப கண்டுபிடிப்பை மதிப்பாய்வு செய்து இதற்கான குறிப்புரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் பெறப்பட வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விவசாயிகளின் வேளாண்மை செலவினத்தைக் குறைக்ககூடியதாகவும், விலை குறைவானதாகவும், அதிக விளைச்சலை, தரக்கூடியதாகவும் பயன்படுத்தக்கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும்.
வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குனர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






