என் மலர்
செங்கல்பட்டு
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா வரை நடை பயணம் மேற்கொள்கின்றனர்
- செல்லும் வழியில், பசியில் வாடும் நபர்களுக்கு உணவு வழங்குகின்றனர்.
மாமல்லபுரம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜானி (வயது 20), போட்டோகிராபர். இவரது நண்பர் பைந்தமிழ் (வயது19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை இன்ஜினியரிங் படித்து வருகிறார். இருவரும் உணவை வீணாக்குவதை தடுக்கும் விழிப்புணர்விற்காக காரைக்காலில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா வரையான 3 ஆயிரம் கி.மீ., நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி வழியாக வாகா சென்றடைய திட்டமிட்டு நடந்து செல்கிறார்கள்.
தங்களது நண்பர்கள் உதவியுடன் இப்பயணம் செல்வதாகவும், தாங்கள் செல்லும் வழியில், பசியில் வாடும் நபர்களுக்கு உணவு வழங்குவதாகவும் தெரிவித்தனர். இளம் வயதில் இது போன்ற நல்ல விஷயங்களுக்கு விழிப்புணர்வு நடைபயணம் செல்லும் இவர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
- திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் இன்று காலை 5 ஏழை திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
- மணமக்களின் சார்பில் உறவினர்கள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்:
தமிழக அரசு உத்தரவின்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் இன்று காலை 5 ஏழை திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் பாரதிராஜா, கோயில் ஆய்வாளர்கள் மற்றும் கோயில் செயல் அலுவலர்கள், மணமக்களின் சார்பில் உறவினர்கள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமண ஜோடிகளுக்கு கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்பாக்கத்தில் பயிற்சி ஒத்திகை நடைபெறும்.
- சென்னை அணுமின் நிலைய இயக்குனர் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைத்தார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புதியதாக கட்டி வரும் பாவினி அதிவேக அணு உலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏதேனும் அணுக்கசிவு ஏற்பட்டு கதிர்வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதிலிருந்து மக்களையும், கால் நடைகளையும் காப்பாற்றுவது எப்படி என்கின்ற பயிற்சி ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
அவசரநிலை ஒத்திகையை முன்னிட்டு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையேயான புரிதல், தொடர்பு, ஒருங்கிணைதல், நடவடிக்கை உள்ளிட்ட அலுவல் முறை பயிற்சிக்கான முகாமை கல்பாக்கம் நகரிய குடியிருப்பில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இன்று துவங்கி வைத்தார்.
இதில் சென்னை அணுமின் நிலைய இயக்குனர் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் பேரிடர் மேலாண்மை மீட்டு குழு கமாண்டண்ட் அருண் மற்றும் கல்பாக்கம் அணுசக்தி துறையின் உயர் அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை, வேளாண் துறை, வருவாய்த்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் என அனைத்து துறையினரும் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் அணுக்கசிவு ஏற்பட்டால் முதற்கட்டமாக எப்படி மீட்பது என்பது குறித்த விபரங்களை கூறி, ஒத்திகை செய்து காட்டினர்.
- சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது சாலையை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அரசு பஸ் மோதியது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைமலைநகர்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவாசி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது சாலையை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- திருப்போரூர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 180 பேர் கலந்து கொண்டனர்.
- மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி, துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் பிரிவின் சார்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் திருப்போரூர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 180 பேர் கலந்து கொண்டனர். மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி, துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
டீன் டாக்டர் செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். டாக்டர் சாந்தகுமார், கல்லூரி இயக்குனர் வைஷ்ணவதேவி, பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கம், 110 வெள்ளை புலிகள், வங்க புலிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.
- வண்டலூரில் இருந்து 2 வெள்ளைப் புலிகள் குஜராத்தில் உள்ள சக்கார்பாக் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 180 வகையான சுமார் 2400-க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பூங்காவில் மொத்தம் 9 சிங்கம், 110 வெள்ளை புலிகள், வங்க புலிகள் உள்ளிட்ட விலங்கு கள் உள்ளன.
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விலங்குகள் பரிமாற்றம் திட்டம் மூலம் குஜராத்தில் இருந்து 2 ஆசிய சிங்கங்களை பெற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக வண்டலூரில் இருந்து 2 வெள்ளைப் புலிகள் குஜராத்தில் உள்ள சக்கார்பாக் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் ஒரு வெள்ளைப் புலி லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொடுத்து அங்கிருந்து ஒரு பெண் சிங்கம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்று வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
- கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.
தாம்பரம்:
தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அப்போது அபிநயா தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப் புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அபிநயாவின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றியபோது அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.
இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விடுதியில் இருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.
விசாரணையில் அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது.
அவர் தாம்பரத்தில் இருந்து மாயமான பின்னர் மதுரைக்கு சென்று வந்து உள்ளார். அங்கு சுருட்டிய நகையை வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மதுரைக்கு தனிப்படை போலீசார் சென்று உள்ளனர்.
அபிநயா திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 1½ மாதத்தில் நகை, பணத்தை சுருட்டிச்சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையில் அபிநயா இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.
அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை அபிநயா 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார். இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்.
மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையின்போது அபிநயாவுடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார்.
இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அபிநயா, அவரது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
- புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை :
இந்தியாவில் விரைவில் ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அவர்கள் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உலக பாரம்பரிய புராதன சின்னங்கள் மூலம் இந்த மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில் அந்தந்த நகரங்களில் உள்ள புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை கல் புராதன சின்னத்தில் ஜி20 லேசர் ஒளி வெள்ளம் ஒளிரூட்டப்பட்டதில் மிளிர்கிறது.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தங்கள் செல்போனில் படம் பிடித்து தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
- செங்கல்பட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்ற காவலர் கார்த்திகேயன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் அந்த காவலர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பொத்தேரி தனியார் கல்லூரியில் படிக்கும் வெங்கட் மற்றும் அவரது நண்பர் சூர்யா என்பது தெரியவந்தது. காயமடைந்த மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செங்கல்பட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. ஆரம்பம் முதலே போராடி வருகிறது.
- 5 ஆண்டுகளில், ஆன்லைன் சூதாட்டத்தால் 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
செங்கல்பட்டு:
பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்து. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர், கி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பா.ம.க.கவுரவ தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார். ஏழுமலை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வாசு, மாவட்டத் துணைத்தலைவர் என்.எஸ்.ஏகாம்பரம், மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர்.வக்கில். சக்ரபாணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து நிருபர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த 5 ஆண்டுகளில், ஆன்லைன் சூதாட்டத்தால் 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னைக்கு 2-வது விமான நிலையம் என்பது அவசியமானது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி. தமிழக அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பா.ம.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்களிடம் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம், ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது என்பதால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பயணிகள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- கொக்கிலமேடு, வெண்புருஷம் பகுதி மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்க சிரமப்படுகின்றனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் அதிக நேரம் பொழுதை கழிக்கும் முக்கிய இடமான கடற்கரை கோயில் தென்பகுதியில் தற்போது கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலின் சுழற்சி அலையானது மணலை அரிக்கும் அளவிற்கு, அழுத்தமாக வருவதால் பயணிகள் அப்பகுதியில் குளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இது போன்ற கடல் அரிப்பு ஏற்படும் காலங்களில் அப்பகுதியில் உள்ள கொக்கிலமேடு, வெண்புருஷம் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வைக்க சிரமப்படுகின்றனர். இதனால் அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிப்பதை தவிர்க்கவும் இந்த தூண்டில் வளைவு உதவும் என கடலோர பாதுகாப்பு குழும உயர் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
- சமையல் அறையில் பாம்பு மறைந்திருப்பதை கண்டவுடன் அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
- சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பெட்டியில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் பிரபு. நேற்று இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்துக்கு பிரபு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டில் பாம்பு இருக்கும் இடத்தை தேடினார்கள்.
சமையல் அறையில் பாம்பு மறைந்திருப்பதை கண்டவுடன் அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பெட்டியில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.






