என் மலர்tooltip icon

    அரியலூர்

    • விலையில்லா தையல் எந்திரம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் தாங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஜி.ஓ. மூலம் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று உள்ளோம். எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா தையல் எந்திரம் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுபோல் பலர் மனு அளித்தனர்."

    • அரசு பஸ் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
    • பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், கொடுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமலிங்கம்( வயது 53). இவர் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 24.11.2021 அன்று பிளஸ்-1 மாணவி ஒருவர் வீட்டில் இருந்தபோது அவரை கட்டி பிடித்து, நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார். உடனடியாக அந்த மாணவி அவரை தள்ளிவிட்டு ஓடிவந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் ராமலிங்கத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சம்பவத்தன்று திருமானூர் போலீசார் உடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே கொள்ளிட கரையிலிருந்து மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அதை ஓட்டி வந்த அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி(வயது 62) என்பவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்‌.

    • ஓய்வூதியர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    • ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஒய்வூதியர்களில் 2022-ம் ஆண்டு நேர்காணலில் பங்கு பெறாதவர்கள், தங்களின் வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து, ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை பறித்த கொள்ளையனை தேடிவருகின்றனர்.
    • செந்துறை அருகே நள்ளிரவில் துணிகரம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 32). இவர் நேற்று இரவு வீட்டில் தனது கணவருடன் தூங்கிக் கொண்டிந்தார். அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர் அவரது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை அறுத்துவிட்டு உள்ளே புகுந்தார்.

    பின்னர் வீட்டின் கதவில் இருந்த உள்பக்க தாழ்ப்பாளை திறந்து அறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்து உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை விழித்துக் கொண்டு கெட்டியாக தாலிச் சங்கிலியை கையில் பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். உடனடியாக வீட்டில் இருந்த நபர்கள் எழுந்தனர்.

    ஆனாலும் அந்த மர்ம நபர் கையில் கிடைத்த தாலிச் சங்கிலியின் ஒரு பகுதியுடன் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்தனர்.
    • பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டு சென்றனர்.

    அரியலூர்

    அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் நேற்று, புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கல்லங்குறிச்சி பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டு சென்றனர்.

    • சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
    • ஜெயங்கொண்டம் கிளை சிறையில் 63 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 70). இவருக்கும், இவரது சகோதரர் கலியபெருமாளுக்கும் இடையே, வயலில் ஆடு மேய்ந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கலியபெருமாளின் பேரன் மணிகண்டன்(24), சின்னதுரையை திட்டி தாக்கி கீழே தள்ளியுள்ளார்.இதையடுத்து தன்னை திட்டி தாக்கியதாக கலியபெருமாள், மணிகண்டன் ஆகியோர் மீது உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சின்னதுரை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். இதையடுத்து அவர் கடந்த 16-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெயங்கொண்டம் கிளை சிறையில் 63 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது இந்த சிறையில் 43 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவை சாப்பிடுவதற்காக சிறை வளாகத்தில் உள்ள திறந்தவெளிக்கு கைதிகள் வந்தனர். அப்போது, மணிகண்டன் கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் மீது ஏறி வெளிப்புறத்தில் குதித்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சிறை சூப்பிரண்டு பொன்பகத்சிங் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான தனிப்படை போலீசார், மணிகண்டனை வலைவீசி தேடினர்.இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை பகுதியில் உறவினர் வீட்டில் மணிகண்டன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை பிடித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • 37-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது.

    அரியலூர்

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 37-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2,521 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 10,545 பேருக்கும் என ஒரே நாளில் மொத்தம் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது."

    • மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
    • குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம்

    அரியலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • வீட்டில் சோதனை செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த மாரிமுத்து(வயது 40) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிதடி வழக்கு தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் மணிகண்டனை கடந்த 16-ந்தேதி கைது செய்தனர்.
    • பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). அடிதடி வழக்கு தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் மணிகண்டனை கடந்த 16-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை உணவு அருந்த வந்தவர் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், கிளைச்சிறையில் மதில் சுவர் மீது ஏறிக்குதித்து தப்பிச் சென்றார். இதுபற்றிய தகவல் அறிந்த சிறை காவலர்கள் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உஷாரான போலீசார் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினர்.

    சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 10-ந்தேதி தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் வராகேஸ்வரர் கோவிலில் அருள்மணி (வயது 61) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் கடந்த 10-ந்தேதி தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மண்டகப்படி அபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலை பூட்டிவிட்டு, பூசாரி அருள்மணி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கோவிலில் பூட்டை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச்சென்று, அருகில் உள்ள ஒரு வயலில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த கிணற்றில் உண்டியலை போட்டுவிட்டு சென்றுள்ளார்.

    நேற்று காலை வழக்கம்போல் பூசாரி அருள்மணி கோவிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ராதாபுரம் மெயின்ரோடு தெருவை சேர்ந்த முருகன்(வயது 46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருட்டில் ஈடுபட்டது அவர்தான் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், உண்டியல் பணம் ரூ.10 ஆயிரம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

    ×