search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க. தலைவர்கள் தீவிரம்
    X

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அ.தி.மு.க. தலைவர்கள் தீவிரம்

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர்.

    Next Story
    ×