search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடியை நீக்கக்கோரி டெல்லியில் போராட்டம்- நாராயணசாமி அறிவிப்பு
    X

    புதுவை கவர்னர் கிரண்பேடியை நீக்கக்கோரி டெல்லியில் போராட்டம்- நாராயணசாமி அறிவிப்பு

    புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக பணிகளில் தலையிட்டு வருகிறார்.

    இதன் காரணமாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர். புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க அதிகாரம் உள்ளது.

    கடந்த காலங்களில் மாநில அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமித்தது. ஆனால் இந்த தடவை மாநில அரசு பரிந்துரை இல்லாமலேயே மத்திய அரசு நேரடியாக பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது.

    இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் நியமனம் செல்லும் என்று தீர்ப்பை உறுதி செய்தது.

    இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் வக்கீல் கே.கே. வேணுகோபால் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அந்த மாநிலம் மத்திய அரசின் சொத்து. எனவே அங்கு எந்த நியமனத்தையும் மத்திய அரசு செய்ய முடியும் என்று கூறினார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மேலும், சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பிலும், பட்ஜெட் ஓட்டெடுப்பிலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    3 எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரம் புதுவை அரசியலில் புதிய குழப்பங்களை உருவாக்கி உள்ளது.

    புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்தினாலும், நியமன எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. இதன் மூலம் புதுவையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

    மேலும், புதுவை மத்திய அரசின் சொத்து என்று கூறப்பட்ட விவகாரத்தில் புதுவையின் தனித்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் கூறிவருகின்றன.

     முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். இதில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகியவை பங்கேற்கவில்லை.

    தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும், மக்களாட்சி அமைப்புக்கும் பாதகமானதாகும்.

    * இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது. அதில் புதுவை அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து மாநில உரிமையை காப்பது.

    * புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. ஆனால் கொல்லைப்புறம் வழியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். இது ஜனநாயகத்திற்கு முரண்பாடானது.

    இந்த கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் ஏகமனதாக பதிவு செய்துள்ளார்கள்.

    3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நானும், எம்.எல்.ஏ.க்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மத்திய அரசு புதுவை மாநிலத்தை வஞ்சித்து வருகிறது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே வழி என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முன்மொழிந்திருக்கிறார்கள்.


    கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு 2 ஆண்டுகளாக மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்.

    எனவே அவர் புதுவையில் இருந்து வெளியேற வேண்டும். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், புதுவைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் வகையிலும் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இவ்வாறு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.  #Kiranbedi #Narayanasamy
    Next Story
    ×