search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதி தான் மு.க.ஸ்டாலினுக்கும் ஏற்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதி தான் மு.க.ஸ்டாலினுக்கும் ஏற்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர் மு.க.ஸ்டாலின் என்றும், விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதி தான் அவருக்கும் ஏற்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #MKStalin #Vijayakanth #SellurRaju
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் பெத்தானியாபுரத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ரமணி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமே கருணாநிதி தான்.

    கடந்த 1974-ம் ஆண்டு கருணாநிதி காவிரி பிரச்சனையை சரியாக கையாண்டு இருந்தால் இப்போது காவிரிக்காக நாம் போராட வேண்டியது இல்லை. எனவே காவிரிக்காக போராட்டம் நடத்த தகுதியற்ற கட்சி தி.மு.க. என்று குறிப்பிட்டார்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    உழைப்பாளிகளின் உரிமையை போற்றும் ‘மே’ தினத்தில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பான பொதுக்கூட்டம் நடக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தை போற்றி பாதுகாக்கும் ஒரு இயக்கம் அ.தி.மு.க.

    தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளை அம்மா வழியில் நின்று மீட்டெடுத்து வருகிறோம்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்து வருகிறார்கள்.

    அமைச்சர்கள் போட்டி போட்டு பணி செய்கிறோம். இதனால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக இயங்கி வருகிறது.

    ஆனால் இந்த ஆட்சி மீது எப்படியாவது குறை கூறி மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விதவிதமான போராட்டங்களை மு.க.ஸ்டாலின் தினமும் நடத்தி வருகிறார்.

    காவிரிக்காக போராடுகிறோம் என்கிறார். காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமே தி.மு.க. தான். இது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் தமிழக மக்களை ஏமாற்ற ஸ்டாலின் கபட நாடகம் போடுகிறார்.


    எப்படியாவது முதல்-அமைச்சராகி விட வேண்டும் என்று துடிக்கிறார். அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் ஸ்டாலின்.

    துணை முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது அண்ணன் மு.க.அழகிரிக்கு பயந்து மதுரைக்கே வராத ஸ்டாலின் எப்படி முதல்வராகி மக்களுக்கு சேவை செய்யப்போகிறார்? அவருடன் இடதுசாரி இயக்கங்களும் சேர்ந்து கொண்டு போராடுகிறது.

    எப்படியாவது முதல்வராகி விடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட கதி தான் ஸ்டாலினுக்கும் ஏற்படும்.

    இப்போது நடிகர்கள் எல்லாம் கனவு காண தொடங்கி விட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு யாரையும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. சிவாஜி கணேசனே சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ரஜினி, கமல் போன்றவர்கள் முதல்வராகி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அவர்களுக்கு தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள்.

    அ.தி.மு.க. இயக்கம் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றார் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்பட்டு அவரது லட்சியத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் ‘மே’ தினத்தில் சபதமேற்போம்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் சக்தி கோதண்டம், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, கருப்பசாமி, வி.கே.எஸ். மாரிச்சாமி, முத்து இருளாண்டி, முருகன், லட்சுமி, முத்துராமலிங்கம், சண்முகவள்ளி, சோலை ராஜா, ஜி.என்.அன்புச் செழியன், குருசாமி, மாரியப்பன், கிருஷ்ண மூர்த்தி, சுகமணி, ஜெயராஜ், ஜெயபாலன், பூக்கடை முருகன், வட்டச் செயலாளர்கள் தேவதாஸ், பஜார் துரைப்பாண்டி, ராஜகோபாலன், எம்.டி.ரவி, கட்டிட தொழிற்சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ஜெயராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MKStalin #Vijayakanth #SellurRaju
    Next Story
    ×