search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்களுக்கு பஸ் ரூட்டா?: மு.க.ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
    X

    அமைச்சர்களுக்கு பஸ் ரூட்டா?: மு.க.ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

    முதல்- அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் புதிது புதிதாக பஸ் ரூட்டுகள் வாங்கி இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறிய புகாருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று தி.மு.க. நடத்திய மறியல் போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது, “அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி, அவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அரசு பஸ் கட்டண உயர்வை அறிவித்து, அதன் மூலமாக தனியார் பஸ் முதலாளிகளிடம் பேரம் பேசப்பட்டு, பெரிய தொகைகள் வாங்கப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    அதுமட்டுமல்ல, முதல்- அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் புதிது புதிதாக பஸ் ரூட்டுகள் வாங்கி இருப்பதாகவும் சில செய்திகள் வந்திருக்கின்றன.

    விரைவில் யார்-யாருக்கு எந்தெந்த பினாமிகளின் மூலமாக இவையெல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை கண்டறிந்து, நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

    இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. செயல் தலைவர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி வருகிறார். அப்படி ஆதாரம் இருந்தால் அவர் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். அதை நாங்கள் சந்திப்போம்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் திரைப்படத்துறை அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது அனைவரும் சுதந்திரமாக தொழில் செய்யும் அளவிற்கு இருப்பதே இந்த ஆட்சியின் பெருமையாக கருதுகிறேன்.

    ஒக்கி புயலின்போது கடலுக்குள் மீன் பிடிக்க சென்றவர்களில் 33 படகுகளில் சென்ற 200 மீனவர்கள் தற்போது வரை கரைக்கு திரும்பவில்லை. மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக அரசு விசைப்படகு மூலம் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    கடலுக்குள் சென்றவர்கள் கரை திரும்ப மாட்டார்கள் என்று கருதும் குடும்பம் நிதி உதவிக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதற்கான பணிகளை முதல்-அமைச்சர் முடுக்கி விட்டுள்ளார். அதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×