என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசை பா.ஜனதா வழி நடத்துகிறது: நல்லக்கண்ணு
    X

    தமிழக அரசை பா.ஜனதா வழி நடத்துகிறது: நல்லக்கண்ணு

    அ.தி.மு.க. பிளவை பயன்படுத்தி தமிழக அரசை பா.ஜனதா வழி நடத்துகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான நல்லகண்ணு கூறி உள்ளார்.
    கும்மிடிப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான நல்லகண்ணு கும்மிடிப்பூண்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா ஆட்சி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. அதற்கான சாதனை குறித்து மத்திய அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் எந்த சாதனையும் இல்லை. வேதனை தான் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் 100 நாட்கள் ஆட்சி நடைபெற்று உள்ளது என பாராட்டி சொல்கிறார்கள். மாநிலத்தின் தீர்மானங்கள் எதுவும் நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை. அவ்வளவு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் அதன் தலைவர் மறைவுக்கு பிறகு அக்கட்சி பல கூறுகளாக இருக்கிறது. அந்த கட்சியில் ஏற்பட்டிருக்க கூடிய பிளவை பயன்படுத்திக் கொண்டு பா.ஜனதாவில் உள்ள தலைவர்கள்தான் இப்போது அரசை வழி நடத்துகிறார்கள்.



    தமிழ்நாட்டில் இப்போது பா.ஜனதாவின் தலைமை இருக்கிறதா? அல்லது அ.தி.மு.க.வின் ஆட்சி இருக்கிறதா? என்பது கேள்வியாக இருக்கிறது.

    மாநிலத்தில் வறட்சியால் 400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருந்தாலும் கூட இதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிவாரணம் கொடுக்க வேண்டும், விவசாயிகளுக்கான கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இதுவரை மாநில அரசு செய்யவில்லை.

    இதனை தெளிவாக மத்திய அரசிடம் வலியுறுத்தவும் மாநில அரசுக்கு தைரியம் இல்லை. வறட்சியால் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்று சொன்னால் ஏதோ ஆட்சிக்கு இக்கட்டு வரும் என்ற முறையில் மத்திய அரசிடம் வலியுறுத்த தவறுகிறார்கள்.

    மத்திய அரசு, மாநில அரசின் குறைகளை பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக இந்த ஆட்சியை தங்களுடைய கட்டுபாட்டுக்குள் வைத்து உள்ளார்கள்.

    குடியரசு தலைவரை பொறுத்தவரை இந்திய இறையான்மையை பாதுகாக்க கூடிய வகையிலும், மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க கூடிய வகையிலும் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தான் நியாயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.


    Next Story
    ×