என் மலர்

  செய்திகள்

  அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று எந்த பலனும் கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
  X

  அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று எந்த பலனும் கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று எந்த பலனும் கிடைக்க வில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த, “மாணவியருக்கு ஊக்கத் தொகை” வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட அ.தி.மு.க. அரசு அந்த மாணவிகளுக்கு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

  2004-2005 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் 36 சதவீதம் பேர் மட்டுமே பத்தாம் வகுப்புவரை கல்வி பயிலச் சேர்ந்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்த “ஊக்கத்தொகை” வழங்கும் திட்டம் மத்திய அரசின் 2006-2007 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

  இந்த திட்டத்தின்படி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தவுடன் அவர்களது வங்கி கணக்கில் 3000 ரூபாய் வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்படும் என்றும், அந்தப் பணத்தை 18 வயதை எட்டியபிறகு அந்த மாணவியர் வட்டியுடன் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

  சமூக பொருளாதாரக் காரணங்களுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் தங்கள் உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியை கைவிட்டு விடக்கூடாது என்ற சிறப்பான நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட அந்தத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஆறு வருடங்களாகியும் செயல்படுத்தவில்லை.

  தமிழகத்தில் உள்ள 87 ஆயிரத்து 166 மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய 36.38 கோடி ரூபாய் நிதி, மாநில அரசின் குளறுபடிகளால் வங்கிக் கணக்கில் இருந்து, மீண்டும் மத்திய அரசுக்கே திரும்பி விட்டது.

  இது ஒருபுறமிருக்க 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளிலும், பதினொன்றாம் வகுப்பு முதலும் படிக்கும் ஆதிதிரா விட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர் கல்வி உதவித் தொகைக்காக 2598.17 கோடி ரூபாய் இன்னும் மத்திய அரசிடமே நிலுவையில் இருக்கிறது என்று தெரியவருகிறது. சமீபகாலமாக ஒவ்வொரு அ.தி.மு.க. அமைச்சராக டெல்லி சென்று, அங்குள்ள மத்திய அமைச்சர்களை சந்தித்து “தமிழகத்திற்கு நிதி பெற்றோம்” என்று டெல்லியில் நின்றுகொண்டு பேட்டியளிப்பதை தொலைக் காட்சிகளில் பார்க்கிறோம்.

  ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியருக்கான நிதியைப் பெறுவதற்காக இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டெல்லி செல்லவும் இல்லை. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்திற்கான நிதியை கேட்டுப் பெற்றதாகவும் செய்தி வரவில்லை. அது மட்டுமல்ல, பொதுப் பணித்துறை அமைச்சர் டெல்லி சென்று அங்குள்ள மத்திய நீர் வள ஆதாரத்துறை அமைச்சரை சந்தித்து “காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்து விட்டோம்” என்று எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை.

  உயர்கல்வித்துறை அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லி சென்று லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கும் “நீட் தேர்வுக்கு” மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் அனுமதியை பெற்று விட்டோம் என்று அறிவிக்கவில்லை.


  “காவேரி மேலாண்மை வாரியம்” “விவசாயிகள் கடன் தள்ளுபடி” “நீட் தேர்வு” “ஹைட்ரோ கார்பன் திட்டம்” “தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது” உள்ளிட்ட பல்வேறு தமிழகம் சார்ந்த முக்கியமான பிரச்சினைகளை மத்திய அமைச்சர்களை சந்தித்து நிறைவேற்றிவிட்டதாக அறிவிக்க முடியாத அ.தி.மு.க. அமைச்சர்கள், ஒவ்வொருவராக டெல்லிக்குப் படையெடுப்பதும், அங்கு நின்று கொண்டு “இவ்வளவு நிதி பெற்று விட்டோம்” என்று அறிவிப்பதும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் கோபத்தை திசை திருப்ப அ.தி.மு.க. அமைச்சர்கள் பாடுபடுவது போல இருக்கிறதே தவிர, நிச்சயமாக தமிழக மக்களின் நலனுக்காக அல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

  இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உடனடியாக டெல்லி சென்று, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 2500 கோடி ரூபாய்க்கும் மேலான நிதியை பெற வேண்டும்.

  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9-ம் வகுப்பில் சேர்ந்துள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கு 3000 ரூபாய் வைப்புத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×