என் மலர்tooltip icon

    உத்தரகாண்ட்

    • லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது.

    டேராடூன்:

    இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

    தற்போது சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு மாற்றாக ஹோம் ஸ்டே தங்கும் வசதிகள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுலா தலங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளில் சுற்றுலா பயணிகள் தங்க ஒன்று அல்லது 2 அறைகளை ஒதுக்கி கொடுத்து அங்கே அவர்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கி செல்ல அனுமதிப்பார்கள்.

    இதற்காக விருந்தினர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும் பெற்று கொள்வார்கள். இது லாட்ஜ்களில் தங்குவதை விட செலவு குறைவு என்பதால் தற்போது இதுபோன்ற ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே தனிநபர்கள் பார் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    வீடுகளில் நடத்தப்படும் பார்களில் 60 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது பானங்கள் வைத்து கொள்ளலாம். 9 லிட்டர் அளவுக்கு பீர் பாட்டில் வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் தனியார் மது பார் நடத்த ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வழங்கி லைசென்ஸ் பெற்று கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த லைசென்ஸ் பெறுவோர் வருமான வரி கட்டுவோராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    மேலும் மாநில கலால் துறைக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

    இது தவிர வீடுகளில் நடைபெறும் தனியார் மதுபார்களில் 21 வயதுக்கு குறைந்தோருக்கு எக்காரணம் கொண்டும் மதுபானம் வழங்க கூடாது. மிலிட்ரி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. ஒரு பாக்ஸ் ஒயின் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது.

    மலைப்பாங்கான இந்த மாநிலத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    • அரசு எந்திரம் முற்றிலும் செயல் இழந்து விட்டது.
    • உத்தரகாண்ட் அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.


    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் சிக்ரோடா கிராமத்தை சேர்ந்தவர் மீனு (23) இவர் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உத்தரகாண்ட் அரசு 341 சட்டப்பிரிவை மீறி தாழ்த்தப்பட்ட சாதி பட்டியலில் பல சாதிகள் சேர்கப்பட்டு உள்ளது.

    அரசு எந்திரம் முற்றிலும் செயல் இழந்து விட்டது. அதனால் உத்தரகாண்ட் அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இவர் தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.

    • கூலி வேலைக்கு சென்று வரும் பிரகாஷ் தினமும் ரூ.600 சம்பாதிக்கிறார்.
    • வேலைக்கு செல்லும் முன்பு அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் பிரகாஷ் ஈடுபட்டு வந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளி. இவர் தனி ஒருவனாக மலையை குடைந்து தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க சாலை அமைத்துள்ளார். 500 மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையை சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் 9 மாதங்களில் உருவாக்கியுள்ளார். இந்த சாலை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.

    இதில் 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். இதன்மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 300 பேர் பயனடைவார்கள். ஆனால் அந்த சாலையை அமைக்க அவருக்கு யாருமே உதவவில்லை.

    கூலி வேலைக்கு சென்று வரும் பிரகாஷ் தினமும் ரூ.600 சம்பாதிக்கிறார். வேலைக்கு செல்லும் முன்பு அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    • உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • டெல்லி புறநகர் பகுதி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.

    டெல்லி புறநகர் பகுதி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    • பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.
    • சாமியார் ஒருவர் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார்.

    டோராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.

    தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. கோவிலுக்கு செல்வதற்கான சாலைகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    ஆனாலும் அங்குள்ள சாமியார் ஒருவர் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார். இது அங்கு சென்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதனை யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
    • சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் விழுந்து மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் நகரில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.58 மணியளவில் பித்தோராகர் நகருக்கு 23 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரத்தில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் விழுந்து மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உத்தரகாண்ட் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது.
    • கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது.

    புதுடெல்லி :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மோசமாக பாதிக்கப்பட்ட 42 குடும்பத்தினருக்கு தலா ரூ.1½ லட்சம் இடைக்கால நிவாரண உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர், நில சந்தை மதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், ஜோஷிமத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவுக்கு புதைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது.

    இதுகுறித்து 'இஸ்ரோ'வின் தேசிய தொலை உணர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது.

    ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் இம்மாதம் 8-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நிலம் தாழ்வடைவது தீவிரமடைந்து 12 நாட்களிலேயே 5.4 செ.மீ. அளவுக்கு ஜோஷிமத் புதைந்துள்ளது.

    புதைந்த பரப்பளவும் அதிகரித்துள்ளது என்றாலும், அது பெரும்பாலும் ஜோஷிமத் நகரின் மத்திய பகுதியாக உள்ளது.

    இவ்வாறு தாழ்ந்த பகுதி, ஒரு வழக்கமான நிலச்சரிவின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. அதன் உச்சிப்பகுதி, ஜோஷிமத்-ஆலி சாலை அருகே 2 ஆயிரத்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    தாழ்வடைந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தளமும், நரசிங்கபெருமாள் கோவிலும் முக்கிய இடங்களாக உள்ளன.

    இதற்கிடையில் ஜோஷிமத் நகரின் நிலை, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் நடத்தினார். அதில் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஆர்.கே.சிங், பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று விளக்கி கூறினா்.

    • ஜோஷிமத் நகரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஓட்டல் கட்டிடங்கள் சரிந்த நிலையில் உள்ளன.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    புதையும் நகரமாக மாறிய ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஓட்டல் கட்டிடங்கள் சரிந்த நிலையில் உள்ளன. இதையடுத்து அப்பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது.

    அந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக நகரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 2 பெரிய ஓட்டல்களை இடிக்க திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில் இடிக்கப்படும் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை எனக்கூறி, கட்டிடங்களை இடிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பத்ரிநாத் தாம் மாஸ்டர் திட்டத்தின்படி இழப்பீடு வழங்கக்கோரி ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி தாமி ஜோஷிமத் அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார்.

    அப்போது தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்-மந்திரியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் நிவாரணம் வழங்க சமோலி மாவட்ட கலெக்டர் தலைமையில் 19 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    பின்னர், ஆபத்தான கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியினை அதிகாரிகள் தொடங்கினர்.

    முதற்கட்டமாக சரிந்த நிலையில் காணப்பட்ட ஓட்டல் மலாரி விடுதி உள்பட 2 ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு, போலீசார் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜோஷிமத் சிறிது சிறியதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜோஷிமத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டுமான பணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர அழகிய கிராமமான ஜோஷிமத் சிறிது சிறியதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளால் வீடுகள், கட்டிடங்கள், மண்ணில் புதைந்து வருகிறது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகரில்3,900 வீடுகள் மற்றும் 400 வணிக வளாக கட்டிடங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான கட்டுமான பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள் தோறும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் ஜோஷிமத் நகரம் புதைவு மண்டலமாக மாறி வருகிறது. இந்த நகரில் 30 சதவீத பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள காந்திநகர், சிங்தார், மனோகர் பாக், சுனில் ஆகிய 4 பகுதிகளில் உள்ள 100 வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சுவர்கள் 2-ஆக பிளந்து உள்ளதால் 678 வீடுகள் பாதுகாப்பு இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இடிந்து விழும் நிலையில் இருந்த வீடுகளில் இருந்து 82 குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றபட்டு 16 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர்.

    தற்போது மேலும் 27 குடும்பத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிர்வாகம் சிவப்பு குறியிட்டு உள்ளது.

    அங்குள்ள பொதுமக்கள் தற்காலிக முகாம்கள் அல்லது வேறு இடத்தில் வாடகைக்கு எடுத்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு பிரியமனம் இல்லாமல் கனத்த இதயத்துடன் வெளியேறி வருகின்றனர். இதுவரை 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையை சேர்ந்த 8 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகளில் ஆய்வு நடத்தினர். அவர்கள் மோசமான நிலையில் இருக்கும் வீடுகள் குறித்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.

    இந்த நிபுணர் குழுவினர் அதிகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் உள்ள வீடுகள் பற்றியும் அதை உடனடியாக இடிக்கும் படியும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    அதன் படி நிபுணர் குழு அதிகாரிகள் முன்னிலையில் மோசமான வீடுகளை இடிக்கும் பணி இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கையினை உத்தரகாண்ட் அரசு மேற்கொண்டு உள்ளது.

    இந்த நகரில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என அம்மாநில முதல்-மந்திரி புஸ்கர்சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

    ஜோஷிமத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டுமான பணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    • 610 கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வேறு இடங்களுக்கு இடம்பெயர விரும்புவோருக்கு அரசு சார்பில் ரூ.4 ஆயிரம் என 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாகிப் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களுக்கும், சர்வதேச பனிச்சறுக்கு சுற்றுலா தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக ஜோஷிமத் நகரம் திகழ்கிறது.

    இந்த ஜோஷிமத் நகரத்தின் நிலப்பகுதி தாழ்ந்து வருகிறது. சாலைகள் மற்றும் வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு 4500 கட்டிடங்கள் உள்ளன. இதில் 610 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு அவை வாழத் தகுதியற்றதாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு புதைவு மண்டலமாக ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்வால் பகுதி ஆணையர் சுஷில்குமார் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில காலமாகவே நிலம் புதையும் நிகழ்வு நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அதன் தீவிரம் அதிகரித்துள்ளது.

    610 கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மிகவும் சேதமடைந்த 60 வீடுகளில் வசித்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அந்த நகரிலேயே பாதுகாப்பான சில கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் 90 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சுமார் 1500 பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இப்போதைய நிலையில் மக்களின் பாதுகாப்புக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மறு நிர்மாணம் முதல் மறு சீரமைப்பு வரையிலான நீண்ட கால நடவடிக்கைகள் ஆய்வில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக சமோலி மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குரானா கூறுகையில், "ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    சேதமடைந்த வீடுகளிலேயே தொடர்ந்து தங்கி இருப்பது மக்களுக்கு பாதுகாப்பானது அல்ல.

    வேறு இடங்களுக்கு இடம்பெயர விரும்புவோருக்கு அரசு சார்பில் ரூ.4 ஆயிரம் என 6 மாதங்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

    கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஜோஷிமத் நகரில் 9 வார்டுகள் வாழத் தகுதியற்ற அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஜோஷிமத் நகரம் புதைந்து வருவது தொடர்பாக ஆராய பிரதமர் அலுவலகத்தில் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சபை செயலாளர் ராஜீவ் கவுபா, மத்திய அரசின் உயர் அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஜோஷிமத் மாவட்ட அதிகாரிகள், உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

    இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கான குறுகிய கால, நீண்ட கால திட்டங்களை வகுப்பதில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு மத்திய அமைப்புகள், நிபுணர்கள் குழு ஆகியவை உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஜோஷிமத் நகரின் தற்போதைய நிகழ்வுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று நேரில் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழு, மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள் ஜோஷிமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் உத்தரகாண்ட் தலைமை செயலாளர் சுக்பிர் சிங் சாந்து கூறுகையில், "ஜோஷிமத் சூழலை மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    அங்கு சுமார் 350 மீட்டர் அகல நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.

    இந்த கூட்டத்தில் பிரத மரின் முதன்மை செயலா ளர் பி.கே.மிஸ்ரா கூறுகை யில், "இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை மையம், இந்திய புவியியல் ஆய்வு மையம், ரூர்கி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், வாடியா இமயமலை நிலவியல் மையம், தேசிய நீரியல் மையம், மத்திய கட்டிட ஆய்வு மையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து பரிந் துரைகளை வழங்கும்.

    ஜோஷிமத்தில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுடன் மாநில அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஜோஷிமத் பகுதியில் மறு கட்டமைப்பு பணிகளுக்கான திட்டம் விரைவில் வகுக்கப்பட வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில் ஜோஷி மத் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று நேரில் செல்கிறார் கள். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் மாநில அரசுக்கு வழங்கப்பட உள்ளன.

    இதேபோல் ஜோஷிமத் போலவே நைனிடால், உத்தரகாசி ஆகிய நகரங்களும் புதையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    நைனிடால் நகரத்தில் அதிக அளவில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. மேலும் இங்கு நில அதிர்வு சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நகரங்களின் தரைத்தளம் மிகவும் பலவீனமாக உள்ளது.

    எனவே அவையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக குமாவுன் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் பகதூர் சிங் கோட்வியா தெரிவித்து உள்ளார்.

    • மலையடிவாரத்தில் கிராமம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
    • பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் ராணுவ வாகனங்களும் இக்கிராமத்தை தாண்டியே செல்ல வேண்டும்.

    டேராடூன்:

    இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட்.

    இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

    மலையடிவாரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தவுலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகள் விஷ்ணுபிரயாக்கில் இருந்து ஒன்று சேர்ந்து ஜோஷிமத் கிராமம் வழியாகத்தான் செல்கிறது. இதனால் கிராமம் முழுவதும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும்.இந்த அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இங்கு தங்கி செல்வது வழக்கம்.

    ரிஷிகேஷ் மற்றும் பத்திரிநாத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த கிராமத்தை தாண்டிதான் செல்லவேண்டும். மேலும் பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் ராணுவ வாகனங்களும் இக்கிராமத்தை தாண்டியே செல்ல வேண்டும்.

    இப்படி பல சிறப்புகளை கொண்ட ஜோஷ்மத் கிராமத்தில் ஆபத்துக்கும் பஞ்சமில்லை. இந்த கிராமம் நிலச்சரிவு மற்றும் நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதியில் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறி இருந்தனர்.

    ஆபத்தான பகுதி என்பதால் இங்கு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் கவனம் தேவை எனவும் எச்சரித்து இருந்தனர். என்றாலும் சுற்றுலா பயணிகள் வரத்து மற்றும் அவர்கள் கிராமத்தில் தங்கவும் தொடங்கியதால் ஜோஷ்மத் கிராமத்தில் கட்டுமானங்கள் அதிகரித்தன.

    இதனால் கிராமத்தின் ஆபத்து அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இக்கிராமத்தின் பல பகுதிகளில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி கிராமத்தின் மூதாதையர் எச்சரிக்க தொடங்கினர். அதிகாரிகளும் ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

    அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற தொடங்கினர். இந்தநிலையில்தான் இங்குள்ள பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சிங்தார் பகுதியில் உள்ள ஒரு கோவிலும் இடிந்தது.

    அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இதுபோல அந்த பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழ தொடங்கின.

    ஜோஷிமத் கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகள் இடிந்ததும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டதும் மக்களிடையே பீதி கிளம்பியது. மேலும் இக்கிராமம் அடியோடு மண்ணில் புதைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

    இதையடுத்து முதல்மந்திரி புஷ்கர்சிங் தாமி வீடியோ கான்பரன் சிங் மூலம் அப்பகுதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அங்கு எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

    இதையடுத்து ஜோஷிமத் கிராமத்தில் இருப்போரை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்ல அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி அங்கு தங்கிஇருந்த 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபோல ஜோஷிமத் கிராமத்துக்கு மீட்பு படையினரும் அனுப்பபட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆபத்தான பகுதிகள், பள்ளத்தாக்குகளில் இருப்போரை மீட்டு வர ஹெலிகாப்டர்களும் அனுப்ப பட்டுள்ளன.

    ஜோஷிமத் நகரில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி கூறியதாவது:-

    ஜோஷிமத் கிராமத்தில் குடியிருக்கும் மக்களை காப்பாற்றுவதே எங்களின் முதல் கடமை. அதைதான் இப்போது நாங்கள் தொடங்கி உள்ளோம். பொதுமக்கள் அனைவரையும் மீட்ட பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட மக்களை அங்கு மீண்டும் குடியமர்த்த தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜோஷிமத் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதியில் இருக்கிறது என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர்.
    • ஜோஷிமத் கிராமத்தில் அதிக கட்டுமானங்களும், நீர் மின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

    ஜோஷிமத் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதியில் இருக்கிறது என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். இந்த நகரின் புவியியல் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. எனவே இங்கு வசிப்பது மிகவும் ஆபத்தானது என்று கடந்த 1976-ம் ஆண்டு முதல் புவியியலாளர்கள் எச்சரித்து இருந்தனர்.

    எனவே இங்கு அதிகஅளவிலான கட்டுமானங்கள் மற்றும் மக்கள் குடியேறுவதை அனுமதிக்க கூடாது என்று கூறியிருந்தனர். ஆனால் இப்போது ஜோஷிமத் கிராமத்தில் அதிக கட்டுமானங்களும், நீர் மின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டன. இது நிலையை மோசமாக்கிய நிலையில் இங்கு ஓடும் சிற்றோடைகளின் அரிப்பும் ஜோஷிமத் கிராமத்தின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

    ×