search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜோஷிமத் நகரில் 678 வீடுகள் பாதுகாப்பு இல்லாததாக அறிவிப்பு
    X

    ஜோஷிமத் நகரில் 678 வீடுகள் பாதுகாப்பு இல்லாததாக அறிவிப்பு

    • ஜோஷிமத் சிறிது சிறியதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜோஷிமத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டுமான பணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர அழகிய கிராமமான ஜோஷிமத் சிறிது சிறியதாக பூமிக்குள் புதைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் ஏற்பட்டு வரும் நிலச்சரிவுகளால் வீடுகள், கட்டிடங்கள், மண்ணில் புதைந்து வருகிறது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகரில்3,900 வீடுகள் மற்றும் 400 வணிக வளாக கட்டிடங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான கட்டுமான பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள் தோறும் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையால் ஜோஷிமத் நகரம் புதைவு மண்டலமாக மாறி வருகிறது. இந்த நகரில் 30 சதவீத பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள காந்திநகர், சிங்தார், மனோகர் பாக், சுனில் ஆகிய 4 பகுதிகளில் உள்ள 100 வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சுவர்கள் 2-ஆக பிளந்து உள்ளதால் 678 வீடுகள் பாதுகாப்பு இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இடிந்து விழும் நிலையில் இருந்த வீடுகளில் இருந்து 82 குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றபட்டு 16 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர்.

    தற்போது மேலும் 27 குடும்பத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிர்வாகம் சிவப்பு குறியிட்டு உள்ளது.

    அங்குள்ள பொதுமக்கள் தற்காலிக முகாம்கள் அல்லது வேறு இடத்தில் வாடகைக்கு எடுத்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு பிரியமனம் இல்லாமல் கனத்த இதயத்துடன் வெளியேறி வருகின்றனர். இதுவரை 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    தேசிய பேரிடர் மற்றும் மீட்பு படையை சேர்ந்த 8 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் ஜோஷிமத் நகரில் உள்ள வீடுகளில் ஆய்வு நடத்தினர். அவர்கள் மோசமான நிலையில் இருக்கும் வீடுகள் குறித்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.

    இந்த நிபுணர் குழுவினர் அதிகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாழவே தகுதியற்ற நிலையில் உள்ள வீடுகள் பற்றியும் அதை உடனடியாக இடிக்கும் படியும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    அதன் படி நிபுணர் குழு அதிகாரிகள் முன்னிலையில் மோசமான வீடுகளை இடிக்கும் பணி இன்று தொடங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கையினை உத்தரகாண்ட் அரசு மேற்கொண்டு உள்ளது.

    இந்த நகரில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என அம்மாநில முதல்-மந்திரி புஸ்கர்சிங் தாமி தெரிவித்து உள்ளார்.

    ஜோஷிமத் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக கட்டுமான பணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×