search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    12 நாட்களில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ. புதைந்துள்ளது: செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிந்தது
    X

    12 நாட்களில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ. புதைந்துள்ளது: செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிந்தது

    • புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது.
    • கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது.

    புதுடெல்லி :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    மோசமாக பாதிக்கப்பட்ட 42 குடும்பத்தினருக்கு தலா ரூ.1½ லட்சம் இடைக்கால நிவாரண உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர், நில சந்தை மதிப்பை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், ஜோஷிமத் நகரம் வெறும் 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவுக்கு புதைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை கார்டோசாட்-2எஸ் செயற்கைக்கோள் எடுத்துள்ளது.

    இதுகுறித்து 'இஸ்ரோ'வின் தேசிய தொலை உணர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் இடையிலான காலகட்டத்தில் ஜோஷிமத் 8.9 செ.மீ. அளவுக்கு புதைந்திருக்கிறது.

    ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் இம்மாதம் 8-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் நிலம் தாழ்வடைவது தீவிரமடைந்து 12 நாட்களிலேயே 5.4 செ.மீ. அளவுக்கு ஜோஷிமத் புதைந்துள்ளது.

    புதைந்த பரப்பளவும் அதிகரித்துள்ளது என்றாலும், அது பெரும்பாலும் ஜோஷிமத் நகரின் மத்திய பகுதியாக உள்ளது.

    இவ்வாறு தாழ்ந்த பகுதி, ஒரு வழக்கமான நிலச்சரிவின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. அதன் உச்சிப்பகுதி, ஜோஷிமத்-ஆலி சாலை அருகே 2 ஆயிரத்து 180 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    தாழ்வடைந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தளமும், நரசிங்கபெருமாள் கோவிலும் முக்கிய இடங்களாக உள்ளன.

    இதற்கிடையில் ஜோஷிமத் நகரின் நிலை, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் நடத்தினார். அதில் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, ஆர்.கே.சிங், பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று விளக்கி கூறினா்.

    Next Story
    ×