என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உடல் பருமன் பிரச்சினை முக்கியமானது. உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உடல் பருமன் பிரச்சினை முக்கியமானது. உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    உடல் பருமனுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணமாகும். தூக்கமின்மை காரணமாக மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும். உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடு களிலும் மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக வெளிப்படும். மன அழுத்தமும் உடல் நலனை பாதிக்கும். ஆதலால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு பெண்கள் பிரசவத்திற்கு பின்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் குழந்தையை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் தங்கள் உடல் நலன் மீது போதுமான அக்கறை கொள்வதில்லை. அதனால் சோர்வு, தூக்கமின்மை தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி விடும். அதன் காரணமாக கூடுதல் மன அழுத்தம் உண்டாவதோடு தாய்மார்களின் ஆரோக்கியத்திலும் கடும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும்.

    கர்ப்பிணி பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்போது கொழுப்பின் அளவும் கூடும். குழந்தையை பராமரிப்பதற்கு மத்தியில் தூக்கத்திற்கும், உடற்பயிற்சிக்கும் போதுமான நேரம் ஒதுக்குவது எளிதான விஷயம் அல்ல. குழந்தையை கவனிப்பதற்கு மத்தியில் தாய்மார்கள் தங்கள் உடல் நலம் பற்றி சிந்திப்பதும் கடினமானது. குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி பேணுவதற்கும், தூங்கவைப்பதற்குமே நேரம் சரியாக இருக்கும். அதற்குள் சோர்வு உண்டாகி தாய்மார் களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.

    பிரசவத்திற்கு பின்பு 5 முதல் 10 சதவீத பெண்கள் சினைப்பை கட்டி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் இந்த பாதிப்பு நேருகிறது. இதன் காரணமாக உடல் எடையை குறைப்பது கடினமாகிவிடும். அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் ஏற்படுகிறது.

    உடற்பயிற்சி செய்வதற்கு மன ரீதியாக தயாராக இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை மூட்டுகள் மற்றும் தசை நார்கள் பாதிக்கப்படும். முதுகுவலி பிரச்சினையும் ஏற்படும்.

    கர்ப்பகாலத்தில் வயிற்று தசைகளும் விரி வடைந்துவிடும். ஆனால் அவை குழந்தை பிறந்ததும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கும். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமான உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனை பெற்று மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமனாகிவிடும்.

    பிரசவத்தால் பெண்கள் அதிகம் சோர்ந்து போவார்கள். அதில் இருந்து மீள்வதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது ஆகும். உடல் மீண்டும் வடிவம் பெறுவதற்கு மன ஆரோக்கியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான உடற்பயிற்சி மூலம் உடல் பருமனை குறைக்கலாம்.
    பெண்களின் மாதாந்திர சுழற்சியின் போது ஏற்படும் வலியை குறைக்க இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நிவாரணம் பெறலாம்.
    பல பெண்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளைப் பற்றி புகார் கூறுவதால், இந்த நாட்களில் சிக்கல் அதிகரித்து வருகிறது. பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸாடர் (பிசிஓடி), எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நிபந்தனைகள் மற்ற எல்லா பெண்களிலும் காணப்படுகின்றன. இந்த உடல்நலப் பிரச்னைகள் தலைவலி, குமட்டல், ஒற்றைத் தலைவலி, மனநிலை மாற்றங்கள், பிடிப்புகள் அல்லது பெண்களின் மாதாந்திர சுழற்சியின் போது அல்லது அதற்கு முந்தைய மாதவிடாய் வலி போன்ற பிற துணைப் பிரச்னைகளுடன் சேர்ந்து வருகின்றன.

    1.ஊறவைத்த திராட்சை மற்றும் குங்குமப்பூ

    இந்த பானத்தை வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும். கருப்பு திராட்சையும், குங்குமப்பூவும் கலந்திருப்பது மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகள் குறைய உதவும்.

    2. நெய்

    திவேகரின் கூற்றுப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சாப்பிடலாம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் நெய்யைச் சேர்ப்பது பீரியட்ஸ் தொடர்பான பிடிப்புகள் மற்றும் குமட்டல் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.

    3. தயிர்ச் சாதம்

    தயிர்ச் சாதம் என்பது பீரியட்ஸ் வலியால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு மதிய உணவாகச் சாப்பிடலாம். பருப்பு வகைகள் கொண்ட தயிர்ச் சாதம் உடலில் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ஒரு சுவையான, சுவையான உணவுக்காக வீட்டில் வறுத்த அப்பளத்துடன் சாப்பிடலாம்.

    நட்ஸ்

    ஒரு சில முந்திரி அல்லது வேர்க்கடலை தான் வேதனையான நாட்களில் ருஜுதா திவேகர் பரிந்துரைக்கிறார். சர்க்கரை பசி மற்றும் மனநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு உதவும். இந்த சிற்றுண்டியை வெல்லம் அல்லது சர்க்கரை உடன் இணைக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

    5. கிச்சடி அல்லது ராகி

    ராகியுடன் செய்யப்பட்ட தோசை அல்லது ரோட்டியைப் போலவே, லெகுமினஸின் தயாரிப்பு கிச்சடி, பீரியட்ஸ் நாட்களில் ஏற்றதாக இருக்கும். விருப்பமான உணவைத் தயாரிக்கவும் மூங் தால் பயன்படுத்தப்படலாம். முழு தானியங்களுக்கான காலகட்டத்தில் மற்ற மாற்று வழிகள் ராஜ்ஜீரா பயன்படுத்தலாம். சபுதானா கிச்சடி ஒரு லேசான உணவாகும், இது வலியில் இருக்கும்போது சாப்பிடலாம்.
    சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. மேலும் இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய நோய்களால பாதிக்கப்படறவங்க அடுத்தது.

    சாதாரணமா பெண்களுக்கு 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். கர்ப்ப காலத்துல இது 30 சதவிகிதம் அதிகமாகும். கர்ப்பத்தோட 10-12வது வாரங்களில் இது அதிகமாகத் தொடங்கும். இதயம் பம்ப் பண்ற வேகமும் இதயத்துடிப்பும் அதிகமாகும். ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது.

    ஆனா, பிரச்சனை உள்ளவங்களோட இதயத்தால ஈடுகொடுக்க முடியாது. இதயக் கோளாறுகளை அலட்சியப்படுத்திட்டு, கர்ப்பம் தரிச்சா, முதல் 10-12 வாரங்களிலேயே கரு கலையலாம். இதயம் இன்னும் பழுதடையலாம். ரத்தம் உறைஞ்சு, மூளைக்கும் நுரையீரலுக்கும் போகும் ரத்தக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, பக்கவாதம் வரலாம். சில வேளைகளில் மரணமும் நிகழலாம்.

    சில வகை பிறவி இதயக் குறைபாடுகள் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறதுதான் பாதுகாப்பு. இதய வால்வுகளில் சுருக்கம் இருந்தாலோ, இதயத்தைச் சுத்தின நான்கு சுவர்களில் பிரச்சனை இருந்தாலோ கூட கர்ப்பம் தரிக்கிறது ரிஸ்க்.

    வால்வு சம்பந்தப்பட்ட கோளாறுகள், அடைப்புகளுக்கு சில அறுவை சிகிச்சைகள் செய்த பிறகு, அந்தப் பெண் கர்ப்பம் தரிக்கலாம். சில பெண்களுக்கு இதய வால்வு மாற்று சிகிச்சை’ செய்யப்பட்டிருக்கும்.

    அவங்களுக்கு வால்வுகளுக்குப் போகும் ரத்தம் உறையாமலிருக்க தினசரி மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை எடுத்துக்கிறப்ப, அவங்க கர்ப்பம் தரிக்கிறது சிரமம்.

    சில சிறப்பு கேஸ்களில், அவங்களுக்கு பிரத்யேக மருந்துகளைக் கொடுத்த பிறகுதான் கர்ப்பம் தரிக்க அறிவுறுத்துவோம்.

    சிகிச்சை மற்றும் ஆபரேசன் முடிஞ்ச பிறகு அந்தப் பெண் கர்ப்பம் தரிச்சாலும், கர்ப்ப காலம் முழுக்க, ஒரு இதயநோய் நிபுணரோட கண்காணிப்புல இருக்கிறது பாதுகாப்பானது.

    அட்வான்ஸ்டு வசதிகள் உள்ள மருத்துவமனையில் பிரசவ காலத்தைச் செலவழிக்கிறது அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு.
    பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூடுதல் கவனம் எடுத்து உடல்நிலையை கவனித்துகொள்ள வேண்டும்.இதனிடையே உடலில் உண்டாகும் மாற்றங்களில் சிறு வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
    சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியானாக இருந்தாலும் பிரசவத்துக்குப்பிறகு உடல் நிலையை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப சற்றுகாலம் பிடிக்கும். பலரும் பிரசவம் முடிந்ததும் இனி மருத்துவ சிகிச்சை தேவைப்படாது என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். நீங்கள் எடுத்துகொள்ளும் சத்தான உணவு, உடல் பராமரிப்பு சரியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு பழைய நிலைமைக்கு மீண்டு வரும். ஆனால் கர்ப்பக்காலத்தில் ஏற்கனவே பலவீனமான பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூடுதல் கவனம் எடுத்து உடல்நிலையை கவனித்துகொள்ள வேண்டும்.இதனிடையே உடலில் உண்டாகும் மாற்றங்களில் சிறு வித்தியாசம் இருந்தாலும் நீங்கள் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

    பிரசவம் முடிந்த பெண்கள் சுகப்பிரசவம் ஆனாலும் சிசேரியனாக இருந்தாலும் உடல் அளவில் சற்று பலவீனமாக இருப்பார்கள். கடுமையான பிரசவ வலியால் உறுப்புகள் அனைத்துமே பலவீனமாக இருக்கும். உடல் சோர்வையும் அதிகப்படியாக உணர்வார்கள்.

    பிரசவம் முடிந்த முதல் மற்றும் இரண்டாம் வாரங்களுக்குள் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இந்தகாலங்களில் உடலை வறுத்தாமல் தொற்று பாதிக்காமல் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றினாலே இன்னும் வேகமாக கூட உடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

    பிரசவத்துக்கு பின் ரத்தபோக்கு உண்டாகும். ஆனால் சாதாரணமாக இருக்கும். பிரசவநேரத்தில் குழந்தை பிறந்த கையோடு கர்ப்பப்பையில் இருக்கும் கழிவோடு ரத்தபோக்கு வெளியேறும். எனினும் எஞ்சி இருக்கும் உதிரமானது மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் வரையிலும் இருக்கும். கருப்பையின் சுருங்கி விரியும் தன்மைக்கேற்ப ரத்தபோக்கு இருக்கும். இவை நார்மல் தான் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

    அதுவே நீங்கள் வீட்டுக்கு வந்ததும் திடீரென்று அதிக ரத்தபோக்கு, கட்டியாக ரத்தம் வெளியேறுதல், குறைந்த நேரத்தில் தொடர் ரத்தபோக்கு போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் நீங்கள் மயக்க நிலைக்கு செல்ல நேரிடலாம். உங்கள் இதயத்துடிப்பு சீரற்றதாக மாறி அபாய கட்டத்துக்கும் செல்ல நேரிடலாம். அதனால் ரத்தபோக்கு அதிகமாகும் போது அலட்சியப்படுத்தகூடாது.

    குழந்தை கர்ப்பத்தில் வளர வயிறு உறுப்புகள் சற்று சிரமத்தை சந்திக்க நேரிடலாம். ஆனால் பிரசவித்த சில வாரங்கள் கழித்து நீங்கள் வயிற்றில் வலது புற மேல் பக்கத்தில் வலியை உணர்ந்தால் அது கல்லீரல் குறைபாட்டின் அறிகுறியாகவும், உங்கள் ரத்த உறைவு குறித்த பாதிப்பாகவும் இருக்கலாம். இதனோடு உடல் காய்ச்சலும், தலைவலியும் கூட இதன் அறிகுறிகள் ஆகும். பலரும் குழந்தை வயிற்றில் இருந்ததால் உறுப்புகள் சுருங்குவதால் உண்டாகும் வலி என்று நினைத்துவிடுவார்கள். ஆனால் இவை மோசமான உள்ளுறுப்புகளின் பாதிப்பாகவும் இருக்கலாம் என்பதால் அவை தீவிரமாவதற்குள் மருத்துவரை அணுக வேண்டும்.

    சுகப்பிரசவம் ஆனவர்கள் பிறப்புறுப்பை தொற்றில்லாமல் பராமரிக்க வேண்டும். சிசேரியன் பிரசவமாக் இருந்தாலும் தையல் போட்ட இடத்தில் ரணம் ஆறும் வரை கவனமாக இருக்க வேண்டும். பிறப்புறுப்பில் வலி, நோய்த்தொற்று, அரிப்பு, அந்த இடத்தில் வீக்கம், சிவப்பு, பெண் உறுப்பிலிருந்து துர்நாற்றம், மார்பகங்களில் வலி,பெண் உறுப்பு அடிவயிறு, இடுப்புவலி மூன்று சேர்ந்தாற் போன்ற வலி போன்றவற்றை உணர்ந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும்.

    அதே போன்று தையல் போட்ட இடங்களிலும் ஏதேனும் திரவம் போன்று வெளிவர கண்டாலும் அதையும் அலட்சியப்படுத்தக்கூடாது. தொற்று உண்டான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் அதிக பாதிப்பை தடுக்கமுடியும்.

    உடல் வெப்பநிலையை காட்டிலும் 38 டிகிரி சி -க்கு மேல்பட்ட காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பெண் உறுப்பில் தொற்று இருந்தாலும் அவை உடல் முழுவதும் பரவக்கூடும். மேலும் இந்த காய்ச்சலோடு இதயத்துடிப்பு வேகமாக இருக்கும், மூச்சு வேகமாக விடும் நிலையில் உங்களை தள்ளும். இதனோடு வயிறும், தலைவலி உபாதையும் இருக்கும். தலைவலி இயல்பானதாக இருந்தாலும் அதனோடு குமட்டல், வாந்தி, தலை சுற்றல், கண் பார்வை மங்குதால் போன்றவையும் இருக்கும். இந்த அறிகுறிகள் எல்லாமே உடல் தீவிரமான பாதிப்புக்குள்ளாகியிருப்பதை உணர்த்தக்கூடியதே.

    பிரசவத்துக்கு பிறகு இரண்டு வாரங்கள் கழிந்த பிறகும் நடக்கும் போது, படிகளில் பொறுமையாக இறங்கும் போது இவை எதுவுமே செய்யாமல் கீழே குனிந்து ஒரு பொருளை எடுத்தால் கூட மூச்சு வேகமாக வந்தால் அது நுரையீரல் தொற்று உண்டாவதன் அறிகுறியாக அதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    மூச்சு வாங்குதலோடு நெஞ்சுவலியும் உண்டாககூடும். அதோடு இருமும் போது ரத்தம் வெளியேறிவிடும். இவையும் மருத்துவரை சந்திக்க வேண்டிய அபாய அறிகுறிகளாக கொள்ளலாம்.

    இதையெல்லாம் தாண்டி பிரசவக்காலத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தமும் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயத்தையே அளிக்கின்றன. எனினும் இது குறித்து நாம் தனியாக பார்த்திருக்கிறோம். பிரசவம் நல்ல முறையில் நிகழ்ந்தாலும் உடலில் பிரசவநேரத்தில் உண்டான அறிகுறிகள் சில வாரங்கள் கழித்தும் உணர்த்தலாம் என்பதால் பிரசவித்த தாய்மார்கள் அறிகுறிகளை அலட்சியப்படுத்தகூடாது என்பது தான் மருத்துவர்களின் ஆலோசனை. 
    கர்ப்ப காலத்தில் உடலை அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் கூட நடைபயிற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.
    பொதுவாகவே வயது பேதமில்லாமல் அனைவரையும் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்துகிறார்கள். மருத்துவர்கள் மட்டும் அல்லாமல் உடல் நலனில் அக்கறை கொண்டிருக்கும் பலரும் கூறுவதும் இதுதான்.

    வீட்டில் செய்யும் வேலைகளே தலைக்கு மேலே இருக்கிறது. இதில் தனியாக உடல்பயிற்சி வேறா என்று புலம்பும் இல்லத்தரசிகளாக இருக்கட்டும். காலையில் எழுந்ததில் இருந்து ஆஃபிஸ்க்கு போய் வருவதற்குள் முழி பிதுங்கிவிடுகிறது இதில் எங்கிருந்து உடற்பயிற்சி என்று சலித்துக்கொள்ளும் ஆண்களாக இருக்கட்டும், ஏற்கனவே இருக்கும் உடல்சோர்வு போதாமல் கருவுற்ற காலம் இன்னும் சோர்வை அதிகரித்திருக்கிறது இந்நிலையில் உடற்பயிற்சி வேறா என்றா கேட்கும் கர்ப்பிணி பெண்ணாக இருக்கட்டும் அனைவரது ஆரோக்கியமும் உடற்பயிற்சியில் தான் அடங்கியிருக்கிறது.

    பிரசவக் காலத்தை எதிர்நோக்கும் அனைத்து பெண்களும் சற்று பின்னோக்கிய நமது மூதாதையர் காலத்தை எடுத்துக் கொண்டால் வியப்பாக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீட்டில் கூடுதலாக கவனிப்பு இருந்தாலும் வேலையைப் பொறுத்தவரை அவர்களுக்கான பொறுப்புகளை அதிகரித்துவிடுவார்கள்.

    இப்போது போன்று நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் காலம் அப்போது இல்லை என்பதால் அவர்கள் பிரத்யேகமாக எந்தவிதமான உடற்பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அன்றாட வீட்டு வேலைகளை விடாமல் செய்துவந்தார்கள். வீட்டை பெருக்கி துடைப்பதும், துணியை அடித்து துவைப்பதும், தண்ணீர் குடம் சுமப்பதும், வாசலை கூட்டி சுத்தம் செய்வதும் அவர்களுக்கு உடற்பயிற்சியோடு கூடிய வேலையாகிவிட்டது.

    எப்போதும் இயங்கிகொண்டிருக்கும் அவர்களால் ஆரோக்கியமாக இருந்து ஆரோக்கியமான குழந்தையை அலட்டல் இன்றி பெற்றெடுக்கவும் முடிந்தது.

    பெரும்பாலான பெண்கள் பணிபுரிந்துவருகிறார்கள். அதனால் வீட்டில் இருக்கும் வேலையைப் பார்த்து அலுவலகத்தில் வேலை பார்த்தாலே உடல் உழைப்பு தான் உடலுக்கு ஏற்றபயிற்சிதான் என்று நினைக்கிறார்கள் ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுத்து மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை எல்லாம் உடல் உழைப்பில் சேராது. மாறாக மன உளைச்சலையே அதிகரிக்கும்.

    கருவுற்ற ஆரம்ப காலத்தில் உடல் சோர்வு மனசோர்வு எல்லாம் இணைந்து இறுதியில் படுக்கையில் சுருட்டி விழவே செய்யும். இந்த காலத்தில் உண்பதும், உறங்குவதும் கூட குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தான் என்னும் போது உடற் பயிற்சி சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் பேறுகாலம் முழுவதும் உடலை வறுத்தும் பயிற்சிகள் தேவையில்லை. வாக்கிங், யோகா, உடலில் சற்று தெம்பு இருக்குமானால் நீச்சல் போன்ற ஆரம்ப பயிற்சிகளில் ஈடுபடலாம்.

    கருவுற்ற முதல் ஐந்து மாத காலங்களுக்கு மசக்கை வாந்தி, உடல் சோர்வு, பசியின்மை ஒருவித எரிச்சல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகான கால கட்டத்தில் அதாவது ஐந்து மாதங்களுக்கு பிறகு ஆறாவது மாதத்தில் சிறிய பயிற்சிகளை மீண்டும் தொடங்கலாம். பயிற்சியுடன் மூசுச் பயிற்சி போன்றவையும் சிறந்தது.

    சுயமாக எந்த பயிற்சியையும் மேற்கொள்ளலாமல் அனுபவமிக்க உடற்பயிற்சியாளரின் உதவியுடன் பிரசவகாலத்தில் பயன்படும் உள் உறுப்புகள் சீராக செயல்படும் விதமாக அவை பலமடையும் விதமான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. இதனால் பிரசவக்காலத்தில் தசைகள் எளிதாக உதவும். குறிப்பாக தலைப்பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக இது போன்ற பயிற்சியை செய்ய வேண்டும்.

    பயிற்சி என்றதும் ஜிம்முக்கு போக வேண்டும். ஓட வேண்டும் ட்ரெட் மில்லில் நடக்க வேண்டும். குதிக்க வேண்டும் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். சுருக்கமாக சொன்னால் நாம் உடலை வளைத்து செய்யும் வீட்டு வேலைகளை செய்யாமல் போனதன் விளைவு தான் இன்று உடலுக்கு தனியாக பயிற்சி கொடுக்க வேண்டியதாக உள்ளது. எனினும் எளிமையான பயிற்சிகள் போதுமானது.

    மனதுக்கு அமைதி தரும் யோகா உடலுக்கு வலுவயும் தரும் என்பதால் யோகா பயிற்சி நல்லது என்கிறார்கள். மேலும் உடலை களைப்படைய செய்யாத உடல் பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

    உடற்பயிற்சியில் முக்கியமானதாக நடைபயிற்சியை சொல்வார்கள்.இது எளிய பயிற்சியாக அதிகமாக பயன் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் சோர்வு காலங்களிலும் நடைபயிற்சி செய்யும் போது சோர்வையும் விரட்டி அடிக்கும். மேலும் பிரசவகாலம் முழுமையும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

    நடைபயிற்சியை இப்போது தான் செய்ய வேண்டும் என்றில்லை. அதிகாலையில் செய்யும் போது அதற்கான பலன் அதிகரிக்கும் அவ்வளவே. அதனால் எப்போது இயலுமோ அப்போது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இரவு நேரங்களில் உணவு உண்டபிறகும் நடைபயிற்சி செய்யலாம். எவ்வளவு நேரம் நடக்கமுடியுமோ அவ்வளவு தூரம்நடக்கலாம்.

    குறைந்தது அரைமணி நேரமாவது நடைபழகுவது முக்கியம். எந்த காரணம் கொண்டு வெறும் வயிற்றில் நடக்க வேண்டாம். பேறுகாலம் நெருங்கும் வரை இதைக் கடைப்பிடிக்கலாம். இறுதி மாதத்தில் நடக்கும் போது மூச்சு வாங்க தொடங்கும் எனினும் நடைபயிற்சியை விடாமல் பொறுமையாக நடக்கலாம்.
    அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம்.
    முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும் மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்

    முத்தம் என்றவுடனே அதை காமத்தின் குறியீடாக பார்ப்பதே பெரும்பாலோரின் வழக்கம். ஆனால் காமத்தைத் தாண்டி பல உண்மைகளை முத்தங்கள் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கின்றன!

    காதல் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே முத்தங்கள் அனைத்துக்கும் மனஅழுத்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் முத்தங்கள் எப்போதுமே மருத்துவ முத்தங்கள்தான். குழந்தை பிறந்தவுடன் தாயால் தன் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் முத்தம் தாய் சேய் பாசப்பிணைப்பை உறுதி செய்யும்.

    பிள்ளைகள் தந்தைக்கு வழங்கும் முத்தம் தந்தையின் சாட்சியை சொல்லும். காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம்… மனைவி கணவனுக்கு கொடுக்கும் முத்தம்… அனைத்துமே காதல் ஹார்மோனை சுரக்கச் செய்து உறவுகளை பலப்படுத்தக்கூடியவை. உதடுகள் நடுங்க வயதான பாட்டி ஆசைத் தாத்தாவுக்கு பரிமாறும் ’நடுக்கமுத்தம்’ முதிர்ந்த வயதில் உருவாகும் நடுக்கங்களையும் போக்கும் மருத்துவ குணம் மிக்கது.

    ’காதல் ஹார்மோன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோனுடைய சுரப்பினை தூண்டி அன்புணர்வை முத்தங்கள் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் தலைவலி உடல் அசதி சில வகையான இதய நோய்கள் மனஅழுத்தம் போன்ற நோய்களை குறைக்கும் தன்மையும் முத்தங்களுக்கு உண்டு. முகப்பொலிவினை உண்டாகுவதற்கும் முத்தங்கள் உதவும். நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வல்லமை முத்தங்களுக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    உண்மை என்னவென்றால் மேற்சொன்ன மருத்துவப் பலன்களைப் பெற காமம் பொதிந்த முத்தங்கள் தான் அவசியம் என்றில்லை. நெற்றியில் தவழும் ஆசை முத்தம்… தலைமுடிகளை வருடும் அன்பு முத்தம்… கன்னங்களில் அழுந்தும் குழந்தை முத்தம்… இவை எதுவாக இருந்தாலும் சரி முத்தங்கள் நோய்த் தீர்க்கும். மீண்டும் அதே கேள்வி… முத்தங்கள் போதுமான அளவுக்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறதா!… உறவுகளின் நோய்களைப் போக்க உதடுகளை குவிப்போம்!

    கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம் போன்றவை கோடைக்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும்.
    கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் இரண்டு பருவநிலைகளை கண்டிப்பாக கடந்துவருவார்கள். ஏற்கனவே உடல் ரீதியில் பல மாற்றங்களை சந்தித்துவரும் இவர்களுக்கு இந்த பருவ மாற்றம் உடலில் வேறு பிரச்சனைகளை கொண்டுவராமல் பார்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக கோடைக் காலங்களில். கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு, உடல் சோர்வு, உடல் உஷ்ணம் போன்றவை இக்காலத்தில் மேலும் அதிகரிக்க கூடும். இதைத் தவிர்க்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வெண்டும்.இதனால் கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் குழந்தையின் உடல் ஆரோக்கியமும் மேம்படும். இது குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.

    கோடைக்காலத்தில் வியர்வை வழியாக வெளியேறும் அதிகப்படியான நீரை ஈடு செய்ய உடலுக்கு போதிய நீர்ச்சத்து தேவை. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் நாளை தொடங்குங்கள். ஒவ்வாமையும், குமட்டலும், வாந்திஉணர்வும் இந்தகாலத்தில் சகஜமானது தான். ஆனால் மிதமான சூட்டில் வெந்நீரை குடிக்கும் போது இந்த உணர்வு உண்டாகாது.

    வெந்நீருக்கு மாற்றாக பழச்சாறுகள் குடிக்கலாம். அதே நேரம் வெந்நீரில் எலுமிச்சை பிழிந்து ஒரு நாள் குடிக்கலாம். மறுநாள் நெல்லிக்காய் சாறு சேர்த்து குடிக்கலாம். இன்னொரு நாள் ஆரஞ்சு சாறு கலந்து குடிக்கலாம். இப்படி தினமும் 4 டம்ளர் பழச்சாறுகள் உடன் அதிகப்படியான நீரும் அவசியம்.

    சிறுநீரை அடக்குவது கண்டிப்பாக கூடாது. கர்ப்பக்காலத்தில் கருத்தரித்த நாள் முதல் சிறுநீர் கழிப்பது அதிகமாக இருக்கும். தூங்கும் போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரக்கூடும். இதனால் ஆழ்ந்த தூக்கம் என்பது கடினமாக இருக்கும் பலரும் இந்த நேரத்தில் சிறுநீரை கழிக்காமல் அடக்க முயற்சிப்பார்கள்.

    நாள் ஒன்றுக்கு 3 லிருந்து 5 முறை வரை சிறுநீர் கழிப்பது போய் 8 முதல் 10 முறையாவது சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும். இதை தவிர்க்கும் போது சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று, சிறுநீரக கற்கள். சிறுநீர் கடுப்பு பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். மேலும் கோடைக்காலத்தில் உடலில் வியர்வை வழியாக வெளியேறும் நீர் ஒருபுறம், சிறுநீர் வழியாக வெளியேறும் நீர் மறுபுறம் என்று உடல் அதிகப்படியான நீரிழப்பை சந்திக்க நேரிடும். அதை ஈடு செய்ய ஒரே வழி. போதுமான நீர் குடிப்பதும், சிறுநீரை அடக்காமல் இருப்பதும் தான்.

    கர்ப்பக்காலத்தில் அதிலும் இரண்டாவது ட்ரைமெஸ்டரின் இறுதி மாதங்களில் அதாவது 6 ஆம் மாதம் முதலே பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். குழந்தை வளர வளர வயிற்று தசைகள் தளர்ந்து கூபக தசை மற்றும் இடுப்பு தசைகளில் இறுக்கம் உண்டாவதால் மலச்சிக்கல் இயல்பானது என்றாலும் உணவு பழக்கம் மூலம் அதை தவிர்க்க முடியும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு நீர்ச்சத்தும் காரணமாகிறது.

    உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் தான் அவை குடலின் இயக்கங்களை சீராக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும். நீர்ச்சத்து இல்லாமல் பற்றாக்குறையாகும் போது மலம் இறுகி விடுகிறது. தொடர்ந்து இந்த பிரச்சனையை சந்திக்கும் போது கர்ப்பிணிகள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் உணவு முறையோடு தினமும் தேவைக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பதும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் மட்டும் அல்லாமல் தினமும் தண்ணீரும் அதிகம் தேவை.

    கர்ப்பக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் வாந்தி எடுப்பதும் உங்கள் உடலிலிருக்கும் நீர்ச்சத்தை இழக்க கூடும். இந்த நீர் இழப்பு எல்லா காலங்களிலும் என்றாலும் கூட கோடைக்காலத்தில் இன்னும் அதிகமாக வேகமாக இழப்பை சந்திக்க நேரிடும். இதை உணர்த்தும் அறிகுறிகளாக தொண்டையில் வறட்சி ஏற்படும். தொண்டை உலர்ந்து காணப்படும். சிலருக்கு தலைவலியும் சோர்வும் உண்டாகும். தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் அவை நீர் இழப்பாக இருந்தால் அவரே உறுதி செய்து அதற்கான ஆலோசனைகளை பரிந்துரைப்பார்.

    கர்ப்பிணிகள் உடலில் நீர்சத்து குறைபாடில்லாமல் பார்த்துகொள்வது அவர்களது ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் பொருந்தும். நீர்ச்சத்து குறைபாடு கர்ப்பிணிகளின் உடலை பலவீனப்படுத்துவதோடு குழந்தையையும் பலவீனப்படுத்தும். கர்ப்பிணிகளின் உடலில் போதிய நீர்ச்சத்து இருந்தால் தான் குழந்தையின் அசைவு நன்றாக இருக்கும்.

     கோடைக்காலத்தில் நீர்சத்து குறையாமல் பார்ட்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டமும் போதுமான அளவு இருக்கும். அதனால் தான் கர்ப்பக்காலங்களில் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் கோடைக்காலங்களில் இன்னும் சற்று கூடுதலாக என்கிறார்கள்.

    தண்ணீரோடு அவ்வபோது இஞ்சி சேர்த்த மோர், இளநீர், பழச்சாறுகளையும் எடுத்துகொள்வதன் மூலம் கோடையில் உடலை நீர்ச்சத்து குறையாமல் காக்கலாம். 
    தற்போது இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இரும்புச்சத்தை அதிகரிக்க எடுத்து கொள்ளும் மாத்திரையால் பெண்களுக்கு பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.
    கர்ப்பக்காலத்தில் சத்து குறைபாடு உண்டாகும் பெண்களில் பலரும் இரும்புச்சத்து குறைபாட்டால் தான் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் ரத்த சோகைக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளும் அதிகமாகிவருகிறார்கள். இரும்புச்சத்து அதிகரிக்க மாத்திரைகள் உட்கொள்வதையும் தவிர்த்து உணவின் மூலமே பெற்றுவிடலாம். ஏனெனின் வெகு சில பெண்களுக்கு இந்த மாத்திரையால் பக்கவிளைவுகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

    இரும்புச்சத்தை பொறுத்தவரை ஆண்களை காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவு தேவைப்படுகிறது. பூப்படைவது முதல் மெனோபாஸ் காலங்கள் வரை இரத்தப்போக்கு இருப்பதால் உடலில் இரும்புச்சத்து அளவு குறைகிறது.

    பொதுவாக பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு தேவையான இரும்புச்சத்து 9.மி.கிராம் அளவு தேவையாக இருக்கிறது. ஆனால் பெண் கர்ப்பக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 27 மி.கிராம் அளவு இரும்புச்சத்து எடுத்துகொள்ள வேண்டும் பெரும்பாலும் உணவின் மூலமே 30 மி.கிராம் அளவு இரும்புச்சத்தை பெற்றுவிட வேண்டும். ஆனால் பெண்கள் மசக்கையால் சரியான ஆகாரத்தை எடுக்க தவறும் போது மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் போதுமான இரும்புச்சத்தை கர்ப்பிணிகள் பெறுவதற்கு அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சுயமாக மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது. மாத்திரைகள் பயன்படுத்தும் முறை குறித்து தான்ன் பலன்களும் இருக்கும்.

    உங்கள் உடலில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஏற்ப உங்களுக்கு தேவையான அளவு, வேண்டிய நாட்களுக்கு மட்டுமே மருத்துவர் பரிந்துரைப்பார். அவர் கூறிய அளவுக்கு கூறிய நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை குறைந்தால் மீண்டும் இரும்புச்சத்து குறைபாடு உண்டாகிவிடும். அதிகமாக எடுத்தால் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும். அப்படி உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    சத்து மாத்திரைகள் பயன்படுத்தும் போது காலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பு அதை எடுத்து கொள்வதன் மூலம் உடல் நாள்முழுக்க உணவின் மூலம் இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவும். கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.

    இவை உடலில் வாயுவை அதிகரிக்க செய்யும். இதனால் மலச்சிக்கல் அவதி அதிகமாகும் என்பதாலேயே கர்ப்பிணி பெண்கள் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அப்படியே இரும்புச்சத்தை உடல் கிரகித்துகொள்ள வைட்டமின் சி உணவையும் சேர்த்து எடுத்துகொள்ளவும் வேண்டும்.

    பொதுவாக சத்து மாத்திரைகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் சமயங்களில் அவ்வபோது பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும். இது சரிசெய்யகூடியதே என்றாலும் மாத்திரைகளை தவிர்த்து உணவு மூலமே எடுத்து கொள்வதே நல்லது. கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியில் உண்டாகும் மலச்சிக்கல் ஒருபுறம் என்றால் இரும்புச்சத்து குறைபாட்டுக்கு எடுக்கும் மாத்திரைகளாலும் மலச்சிக்கல் பிரச்சனை கூடுதலாக இருக்கும். குறிப்பாக மாத்திரைகள் எடுத்துகொண்ட முதல் 15 நாட்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். பிறகு உடல் இரும்புச்சத்து ஏற்றுகொள்ள பழகிவிடும்.

    சைவ உணவை காட்டிலும் அசைவ உணவில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதே நேரம் சைவ உணவுகள் எடுத்துகொள்பவர்கள் தினமும் இரண்டு கப் கீரைகள் (முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை,புதினா) போன்றவற்றை அதிகம் எடுத்துகொள்ளலாம். தினமும் இரண்டு பேரீச்சை பழம் மூன்று அத்திப்பழங்கள் எடுத்துகொள்வதன் மூலம் போதுமான அளவு இரும்புச்சத்தை பெற்றுவிடமுடியும்.

    அதிகளவு குறைபாடு கொண்டிருந்தால் நிச்சயம் இரும்புச்சத்து மாத்திரையின் மூலமே குறைபாட்டை சரிசெய்யமுடியும் என்று மருத்துவர் கூறினால் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். ஆனால் அவர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுக்க வேண்டாம். அதே நேரம் அடுத்த பரிசோதனைக்குக்குள் உணவின் மூலேம் இரும்புச்சத்தை பெற்றுவிடவும் முயற்சி செய்வது நிச்சயம் ஆரோக்கியமானது. 
    வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி... வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி... வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.
    நீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று என்றும் கேள்விப்பட்டிருப்போம்.

    பொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன/குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன? நவீன சிகிச்சைகள் என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    ‘‘இயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.

    சில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.

    அடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.

    இன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம். வாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி... வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி... வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.

    இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.

    பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

    பொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன் நோய் (Obesity) இருப்பது உறுதி.

    இப்படி எண்ணற்ற காரணிகள் பெண்களின் உடல்பருமனுக்கு வழிவகை செய்கிறது. அளவுக்கதிகமான பருமனுக்கு தற்போதைய தீர்வு என்ன?இருபாலருமே உடல் பருமனை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.
    கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில் எது சாதாரணமானது, எது பிரச்னைக்குரியது என்கிற தெளிவின்றி குழம்புகிறவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளை பார்க்கலாம்.
    உயிரோடு உயிர் சேர்த்து வளர்த்து, பெற்றெடுக்கும் வலியை மட்டும் அனுபவிப்பதில்லை கர்ப்பிணிகள். கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில் எது சாதாரணமானது, எது பிரச்னைக்குரியது என்கிற தெளிவின்றி குழம்புகிறவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளை பார்க்கலாம்.

    முதுகுவலி

    கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.

    இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி
    நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
    எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.

    முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.

    மூச்சுப் பிரச்னை

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல தோன்றுவது இயல்பு. கருப்பையிலுள்ள குழந்தை கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது. அவற்றை வெளியேற்றுவதற்காக உங்கள் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது மார்புக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவிலுள்ளதும், நுரையீரல் சுருங்கி விரியக் காரணமானதுமான பகுதியை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.

    இருமல், மார்பு வலி அல்லது தொடர்ச்சியான களைப்புக்கு அடுத்து சுவாசத்தடை ஏற்படுமானால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் பாதுகாப்பாக இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அதேநேரம், மிக மோசமான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால், அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும்.

    தலைவலி

    கர்ப்ப காலத்தில் இது சகஜம்தான். வெப்பமான, காற்றோட்டம் இல்லாத சுற்றுச் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு அவசியம். அதிகளவில் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம்.

    ஆனால் ஆஸ்பிரினை சாப்பிடக் கூடாது. பாராசிட்டமால் பாதுகாப்பானது என்பதோடு குழந்தைக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. தலைவலியானது அடிக்கடி வந்தாலோ, தீவிரமானாலோ மருத்துவரைப் பார்க்கவும். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிற சிக்கலாகவோ இருக்கக் கூடும். அலட்சியம் வேண்டாம்.

    ஈறுகளில் ரத்தக் கசிவு

    கர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும். கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில், பற்களைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். ஒரு நாளைக்கு இருவேளை பல் துலக்குங்கள். மிருதுவான பிரஷ் பயன்படுத்துங்கள்.

    அரிப்பு

    கருப்பையிலுள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியிலுள்ள சருமம் இறுகத் தொடங்குகிறது. இதனால் கோடுகள் தோன்றி அப்பகுதியில் அரிப்பு இருக்கும். உடல் முழுவதும் அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம். மென்மையான, தளர்த்தியான ஆடைகளை அணிவது பலன்தரும்.

    இருவேளை குளிக்கலாம். அரிப்புள்ள இடத்தில் லோஷன் அல்லது டால்கம் பவுடர் தடவுவது இதமாக இருக்கும்.வெள்ளைப்படுதல் கர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் அதிகளவில் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, நமைச்சலோ ஏற்டாதவரை பயப்படத் தேவையில்லை. புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளை பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளலாம்.
    ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
    பெற்றோர் ஆகப்போகும் தம்பதியருக்குக் கருத்தரிப்பு ஒரு மகிழ்ச்சியான நேரம். அதே சமயம், சிசுவின் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுவே சரியான தருணம் ஆகும். மருத்துவரின் நேரம் குறித்த சந்திப்புகள், மருத்துவ பரிசோதனைகள் போன்றவை மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், தாய்மார்கள் தங்கள் பிஞ்சு குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் இந்த வகை ஆபத்தை அதிகரிக்கும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தை மட்டமல்ல சிசுவின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். குழந்தைக்கு ஆறு மாத காலம் வரை இது தொடர்கிறது. பிறப்புக்கு பிறகும் குழந்தைகள் ஊட்டச்சத்திற்காகத் தாய்ப் பாலை நம்பியிருக்கிறார்கள்.

    கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் குழந்தையைக் கூட பாதிக்கும். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறைப் பிரசவம், மிகக் குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் இவ்வகையான நோய்த் தொற்று தாக்கும் தன்மை அதிகம்.

    தாய் மற்றும் குழந்தையைப் பாதிக்கும் தொற்று நோய்களைத் தடுக்க இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். குழந்தைகள் தங்கள் பாதுகாப்பிற்காகத் தாயின் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நம்பியிருக்கிறார்கள். 1960ம் ஆண்டில்,கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் பரிந்துரைக்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நோய்த்தடுப்பு நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்குழு (ACIP) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் தற்போதைய வழிகாட்டுதலின் படி, பெண்கள் கர்ப்பத்தின் போது எல்லா காலகட்டத்திலும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றன.

    கர்ப்ப காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைத் தடுக்க இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FOGSI) பரிந்துரைக்கிறது. இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைப் பிரசவம், மற்றும் எடை குறைந்த குழந்தை பிறப்பு போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால்தான், பெரும்பாலான நிபுணர்கள் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டங்களில் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியைப் பரிந்துரைக்கின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் காய்ச்சல் பருவங்கள் வேறுபடுகின்றன. தடுப்பூசி தொடர்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோனைப் பெறுவது நல்லது. அதே சமயம், நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றெடுத்திருந்தாலோ மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி எடுக்காத ஒரு நபராக இருந்தால், உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உதவும். மேலும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆன்டிபாடிகளையும் வழங்க முடியும்.

    ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கான சரியான வழிமுறைகளைப் பெறுவது முக்கியம். இதுபோன்ற தடுப்பூசிகளின் அவசியம் குறித்து உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறுங்கள். குழந்தை பிறப்புக்கு முன்னும் பின்னும் உங்கள் குழந்தைக்கு என்ன தேவை என்று கேட்டுப் பலனடையவும். 
    காரணம் எதுவாகவும் இருக்கட்டும்... தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி தாம்பத்திய மறுப்புக்கு உண்டு.
    செக்ஸ் விருப்பம் ஒருவரின் மனநிலை சார்ந்தது. அது நிறைவேறவில்லை என்றால் இணை மீது வெறுப்பும் கோபமும்தான் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஆர்வம் இல்லையென்றால் அதற்கான காரணத்தைப் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைப்பது அவசியம். சிலருக்கு உடல் சோர்வாக இருக்கும். அலுவலக வேலையின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறையலாம்.

    காரணம் எதுவாகவும் இருக்கட்டும்... தம்பதியிடையே நெருக்கத்தை குறைத்து, இருவரையும் நிரந்தரமாகப் பிரிக்கக் கூடிய சக்தி செக்ஸ் மறுப்புக்கு உண்டு. தாழ்வு மனப்பான்மை, வெறுப்பு, கோபம், மன உளைச்சல், ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடித்தல் இப்படி பிரச்னைகள் வளர்ந்து கொண்டே போகும். தாம்பத்திய உறவில் ஏற்படும் இப்பிரச்னை காலப்போக்கில் இருவரையும் பிரித்துவிடும்.

    திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும். உடலுறவு ஆசையை வெளிப்படையாக சொல்லத் தயங்குவதால் கூட இது போன்ற சிக்கல்கள் ஏற்படும். வீட்டில் சண்டையிடும் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகளுக்கு திருமண உறவின் மீதே வெறுப்பு உண்டாகிவிடும். இதை ‘Sexual adjustment problem’ என்கிறோம். பல பிரச்னைகள் சேர்ந்துதான் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

    தம்பதியர் மனம்விட்டுப் பேசி, விட்டுக் கொடுத்து, ஒருவரையொருவர் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆண்கள் உடல் பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து, சரி செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கோபம், மனக்குறைகளுக்கு செக்ஸை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. உடலுறவுக்கு மறுப்புச் சொல்லி, ஆணின் தன்னம்பிக்கையை மனைவி குலைத்துவிடக் கூடாது.

    எவ்வளவு வேலை இருந்தாலும் செக்ஸுக்கான நேரத்தை தம்பதியர் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மனைவிக்கு கணவனிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தால் அன்பாகச் சொல்லி திருத்த வேண்டும். கணவனும் மனைவிக்குப் பிடிக்காத பழக்கங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

    ஒருவரையொருவர் புரிந்து கொள்வது... பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசிக் களைவது... சுமுகமாக நடந்து கொள்வது என தம்பதியர் இருந்தால் இது போன்ற பிரச்னைகள் எப்பொழுதும் எட்டிக்கூடப் பார்க்காது.
    ×