என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    24 மணி நேரத்துக்குள் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதிலிருக்கும் குரோமியம் அளவு உடலில் அதிகரிக்கும் அபாயம் உண்டாகும்.
    பெண்களின் ஒப்பனை, லிப்ஸ்டிக் இல்லாமல் முழுமை பெறாது. அது முகத்திற்கு சட்டென்று அழகு சேர்க்கும். கவர்ச்சியாக காண்பிக்கும். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வில், இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான லிப் க்ளோஸ், லிப்ஸ்டிக்கில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நச்சு பொருட்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    தொடர்ச்சியாக லிப்ஸ்டிக் பூசிக்கொள்வது நீண்டகால உடல் நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. குறிப்பாக 24 மணி நேரத்துக்குள் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் லிப்ஸ்டிக் பூசும்போது அதிலிருக்கும் குரோமியம் அளவு உடலில் அதிகரிக்கும் அபாயம் உண்டாகும். இது வயிற்று கட்டிகளுடன் தொடர்புடையது.

    லிப்ஸ்டிக்கில் காணப்படும் வேறு சில நச்சுப் பொருட்கள்:

    * லிப்ஸ்டிக்கில் இருக்கும் பித்தலேட்டுகள் என்னும் ரசாய னம் நாளமில்லா சுரப்பி அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.

    * இதில் கலந்திருக்கும் ஈயம், நீண்ட கால ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது.

    * பாலி எத்திலின் கிளைகோல்கள் கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளிலும் உள்ளன. அவை நரம்பு மண்டலத்திற்கு பாதிப்புகளை உண்டாக்கக்கூடியவை.

    * பாரபென் எனப்படும் ஒருவகை மெழுகுகள் உதட்டுச்சாயத்தில் காணப்படுகின்றன. அவை சருமத்தில் எளிதில் ஊடுருவுகின்றன. மனச்சோர்வு, வயிற்றுப்போக்கு உட்பட பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    மனதில் கொள்ள வேண்டியவை

    1. அடர் நிற லிப்ஸ்டிக்கள் அதிக அளவில் நச்சு ரசாயனங் களின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன.

    2. லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். இது உதடுகளுக்கு ஒரு பாதுகாப்பு அடுக்கை வழங்கும். அதிக பாதிப்பு நேர்வதை தடுக்கும்.

    3. நச்சு இல்லாத அல்லது இயற்கையான உதட்டுச்சாயங்களை உபயோகிப்பதற்கு முயற்சியுங்கள்.

    4. கர்ப்பகாலத்தில் லிப்ஸ்டிக் பயன்பாட்டை தவிருங்கள். அவை கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும்.

    5. ஒரு வாரத்தில் 2-3 முறைக்கு மேல் லிப்ஸ்டிக் உபயோகிக்காதீர்கள்.
    கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும்.
    முத்துப்போன்ற வெள்ளை பற்களை கொண்டவர்கள் அதனை முறையாக பராமரிக்காவிட்டால் பற்களின் நிறம் மாறத்தொடங்கிவிடும். வேறு சில பல் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஒருசில உணவு பொருட்களை கொண்டு பற்களின் வெண்மை நிறத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்:

    வாழைப்பழ தோல்: வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதன் தோல்களுக்கு பற்களை வெண்மையாக்கும் சக்தி இருக்கிறது. தினமும் இரண்டு முறை வாழைப்பழ தோலை பற்களில் சில நிமிடங்கள் தேய்த்து வரலாம். அதில் இருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பற்களால் உறிஞ்சப்படும். அவை வெண்மை நிறத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும். ஆரஞ்சு பழ தோலையும் பற்களில் தேய்த்து வரலாம்.

    ஸ்ட்ராபெர்ரி: சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கும் பற்களை வெண்மையாக்கும் தன்மை உண்டு. காலையில் எழுந்ததும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை இரண்டாக வெட்டி அதன் சாற்றை பற்கள் மற்றும் ஈறுகளில் 2 நிமிடங்கள் தடவி மசாஜ் செய்து விடலாம். அதன் பிறகு பல் துலக்கலாம். ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்குவதற்கு உதவும். அதுபோல் ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் நார்ச்சத்து இயற்கை சுத்திகரிப்பானாக செயல்பட்டு பற்களை தூய்மையாக வைத்திருக்க துணைபுரியும். குறிப்பாக வாய் மற்றும் பற்களில் படிந்திருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும்.

    கேரட்: கேரட் கண்களுக்கு மட்டுமல்ல பற்களுக்கும் நலம் சேர்க்கும். தினமும் ஒரு கேரட்டை நன்றாக கடித்து மென்று சாப்பிட்டு வரலாம். அது பற்களில் படிந்திருக்கும் ‘பிளேக்’ எனப்படும் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்களை வெளியேற்றச்செய்துவிடும். கேரட்டின் நடுப்பகுதியை பற்களில் தேய்த்துவந்தால் பற்கள் பிரகாசமாக மாறும். ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கேரட் தவிர, ஆப்பிள், செலரி ஆகியவைகளும் பற்களை வெண்மையாக்குவதற்கு துணைபுரியும். ஈறு நோய் மற்றும் ஈறு அழற்சியையும் தடுக்கும். துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.

    புகைப்பழக்கம்: புகைப்பழக்கம் பல்வேறு கொடிய நோய்களுக்கு காரணமாகிவிடும். புகைப்பழக்கத்தை தொடர்ந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதோடு பற்களும் மஞ்சள் நிறமாகிவிடும். முத்துப்போன்ற வெள்ளை பற்களை தக்கவைக்க விரும்புபவர்கள் புகைப்பழக்கத்தை விட்டொழிப்பது அவசியமானது.

    ஸ்ட்ரா பயன்படுத்துங்கள்: சூடாகவோ அல்லது குளிராகவோ எதையும் பருகுவது பற்களுக்கு நல்லதல்ல. குளிர்பானங்கள் பருகும்போது ஸ்ட்ரா உபயோகிக்கலாம். காபி, டீயை கூட அப்படி பருகலாம். அது சூடான, குளிர்ச்சியான பானங்கள் பற்களுடனான நேரடி தொடர்பை குறைக்க வழிவகை செய்யும்.
    சிறிய மாற்றம் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்று சொல்வார்கள். கூந்தல் பராமரிப்பு விஷயத்தில் சிறிய மாற்றத்தை செய்வதன் மூலம் ஆச்சரியத்தக்க பலன்களை அடையலாம்.
    பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பளபளப்பான, அடர்த்தியான கூந்தலை பெற விரும்புகிறார்கள். வழக்கமாக பயன்படுத்தும் சீப்புக்கு பதிலாக வேப்ப மர துண்டுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சீப்பை உபயோகித்தால் தலைமுடியில் நல்ல மாற்றத்தை காணலாம்.

    தலை முடிக்கு வேப்பம் சீப்பு பயன்படுத்துவது நல்லதா? என்ற கேள்வி நிறைய பேரிடம் இருக்கிறது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணங்களை கொண்டது. வேப்ப மர சீப்பு பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனை பயன் படுத்துவது தலை முடியின் ஆரோக்கியத்தை மேம் படுத்தும்.

    பிளாஸ்டிக் சீப்புகள் முடிக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பது பலருக்கு தெரியாது. அவற்றின் முட்கள் உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்கக்கூடியவை. அதனை அழுத்தமாக பயன்படுத்தினால் உச்சந்தலையின் அடிப்பகுதியில் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். அதன் காரணமாக பொடுகுத் தொல்லையும் தலைதூக்கும். பிளாஸ்டிக் சீப்பால் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் பொடுகு பிரச்சினை அதிகரித்துவிடும்.

    உங்களுக்கு பொடுகுத் தொல்லை இருந்தால், வேப்ப மர சீப்பை பயன்படுத்த தொடங்கிவிடலாம். ஏனெனில் வேப்ப மரத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பொடுகுக்கு முக்கிய காரணமான பாக்டீரியா மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து உச்சந்தலையை பாதுகாக்கும்.

    வேப்பம் சீப்பு பயன்படுத்துவது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இது முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உச்சந்தலையில் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் அக்குபிரஷர் புள்ளிகளுக்கும் இதமளிக் கும். பிளாஸ்டிக், உலோகத்தில் தயாரிக்கப்படும் சீப்புகள் நாளடைவில் உச்சந்தலையில் மயிர்க்கால்களை வலுவிழக்கச் செய்யக்கூடியவை. தலை முடி நாளுக்கு நாள் வலுவிழந்து கடுமையானதாக இருந்தால் அதற்கு சீப்பும் காரணமாக இருக்கும். நாளடைவில் மென்மை தன்மையை இழந்து கரடுமுரடாக மாறிவிடும். ஆனால் வேப்ப மர சீப்பு எப்போதும் மென்மையாக இருக்கும். அதில் இருக்கும் முட்கள் முடிக்கு எந்த தொந்தரவையும் கொடுக்காது.

    நிறைய பேர் பேன் தொல்லையால் அவதிப்படுவார்கள். தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தொடர்ந்து அங்கும் இங்கும் நகர்ந்து அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் பேன்கள் தலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் கிருமிகளாகும். தலைமுடிக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை அபகரித்துவிடும். வேப்ப மரச் சீப்பை கொண்டு தொடர்ந்து தலை சீவுவது பேன்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். வேப்ப மரத்தில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மைதான் அதற்கு காரணம். பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வேப்ப மர சீப்பை சில காலம் பயன்படுத்தினாலே பேன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி விடலாம்.

    வேப்ப மர சீப்பை பயன்படுத்த தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே கூந்தலில் மாற்றத்தை காணலாம். இது ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதால், முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கிருமி உருவாக்கத்தை குறைக்கும். உச்சந்தலையில் பொடுகு மற்றும் பூஞ்சை தொற்றுகளையும் தடுக்கும். இத்தகைய பாதிப்புகள் இல்லாவிட்டாலே முடி உதிர்வு பிரச்சினையும் குறைந்துவிடும்.
    பனிக்காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே, சரும வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். இதற்கு எத்தகைய முறைகளை கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
    குளிர் காலங்களில் காற்றின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட காற்று வீசும். இதன் காரணமாக சருமம் உலர்ந்து வறட்சி அடையும். நாம் வழக்கமாக பின்பற்றும் சரும பராமரிப்பு முறைகள், இந்த காலநிலைக்கு பயன்படாது. எனவே பனிக்காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே, சரும வறட்சி ஏற்படாமல் தடுக்க முடியும். இதற்கு எத்தகைய முறைகளை கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

    * குளிக்கும் தண்ணீர் மிதமான சூடுள்ளதாக இருக்க வேண்டும். அதிக சூடுள்ள நீரில் குளிப்பதன் மூலம், இயற்கையாக சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசை நீங்கி விடும். இதன் காரணமாக சருமம் வறட்சி அடையும்.

    * அதிக நேரம் தண்ணீரில் நனைந்து குளிக்காமல், 10 முதல் 15 நிமிடங்கள் வரை குளிக்கலாம்.

    *  அடர்த்தியான குளியல் சோப் பயன்படுத்தாமல், மென்மையான சோப் பயன்படுத்திக் குளிப்பது நல்லது.

    * குளித்தவுடன் சருமத்தை அழுத்தித் துடைக்காமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட துண்டைக்கொண்டு மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.

    * குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

    * மாஸ்சுரைசரை ‘லோஷன்’ வடிவத்தில் இல்லாமல், ‘கிரீம்’ மற்றும் ‘ஆயின்மென்ட்’ வடிவத்தில் வாங்குவது நல்லது. மேலும் ஜோஜோபா எண்ணெய், கிளிசரின், லாக்டிக் அமிலம், லனோலின், ஷியா வெண்ணெய் போன்ற பொருட்கள் கலந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.

    * உதடுகளுக்கு லிப்ஸ்டிக் உபயோகிப்பதை விட, லிப் பாம் பயன்படுத்துவதே சிறந்தது. உறுத்தல் ஏற்படுத்தாத மென்மையான லிப் பாம் உபயோகிக்கலாம்.

    * வழக்கமான சரும பராமரிப்பு பொருட்களை தவிர்த்து, சரும வறட்சியைத் தடுக்கும் வகையிலான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    * சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உடைகளை அணியலாம். மேலும் துணிகளை துவைப்பதற்கு அடர்த்தியான வேதிப்பொருட்கள் கலக்காத சோப்புகளை உபயோகிக்கலாம்.

    * படுக்கை அறையில், காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் கருவியை இயங்கச் செய்யலாம். இதன் மூலம் வறண்ட காற்றினால் சருமம் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

    * சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பேஸ் பேக்குகள் பயன்படுத்தலாம். அவற்றுக்கான குறிப்புகள் சில:

    * ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன், அரை டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு நீரால் முகத்தைக் கழுவவும்.

    * நன்றாகப் பழுத்த பப்பாளியை மசித்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். பப்பாளி சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்தும்.

    * கேரட்டை பசை போல அரைத்து முகத்தில் தடவவும். 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து நீரால் முகத்தை கழுவவும். கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி கொண்டது.

    இந்த முறையைத் தொடர்ந்து வாரம் 3 நாட்கள் வீதம், 2 மாதங்கள் பின்பற்றினால் முகம் மினுமினுப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், பொலிவாகவும் இருக்கும்.
    அரிசியில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. சரும பராமரிப்பிலும் அரிசியைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை மினுமினுப்பாக்குவது மட்டுமில்லாமல், முகத்தில் ஏற்படும் சுருக்கத்தையும், வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் கருமையையும் நீக்குகிறது. அந்த வகையில் அரிசியைக் கொண்டு எளிமையான முறையில் செய்யும் ‘அரிசி பேஷியல்’ செய்வது பற்றிப் பார்க்கலாம்.

    சுத்தம் செய்தல்  

    அரிசி ஊற வைத்த தண்ணீர் 4 தேக்கரண்டி, பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் (விர்ஜின் ஆயில்) 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இவை இரண்டும் பால் போல மாறும் வரை நன்றாகக் கலக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மென்மையாகத் தடவி மசாஜ் செய்யவும். இது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது.

    ஸ்க்ரப்:

    நன்றாக அரைத்து சலித்தெடுத்த அரிசி மாவு 3 தேக்கரண்டி மற்றும் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சற்று அழுத்தமாக மசாஜ் செய்யவும். இதன் மூலம் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

    பேஸ் பேக்:

    அரிசி ஊற வைத்த தண்ணீர் 2 தேக்கரண்டி, கிளிசரின் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, தேயிலை எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்) 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, அரிசி ஊற வைத்த தண்ணீரில் பருத்தித் துணியை நனைத்து பேஸ் பேக்கை முழுவதுமாக துடைத்து எடுக்கவும்.

    இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு 4 தேக்கரண்டி அரிசியை நன்றாக ஊற வைத்து, அரைத்து வடிகட்டவும். பின்னர் வடிகட்டிய அரிசிப் பாலை மிதமான தீயில் சூடுபடுத்தவும். இது கிரீம் பதத்திற்கு மாறியதும் சிறிது ஆற வைத்து, அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் 1 தேக்கரண்டி என அனைத்தையும் சேர்த்து ‘கிரீம்’ பதம் வரும் வரை நன்றாகக் கலக்கவும். பின்பு இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த கிரீமை 4 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைக்கலாம். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, சிறிது பால் கொண்டு முகத்தைத் துடைத்த பின்னர் மேற்கூறிய கிரீமை, முகம் மற்றும் கழுத்தில் தடவி மசாஜ் செய்யவும். காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

    இந்த முறையைத் தொடர்ந்து வாரம் 3 நாட்கள் வீதம், 2 மாதங்கள் பின்பற்றினால் முகம் மினுமினுப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், பொலிவாகவும் இருக்கும்.

    சிலருக்கு முகத்தில் வாய் மற்றும் நெற்றிப் பகுதிகளில் உள்ள சருமம் முகத்தில் உள்ள மற்ற பகுதியை விட கருமையாக காணப்படும். இதை போக்குவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
    சிலருக்கு முகத்தில் வாய் மற்றும் நெற்றிப் பகுதிகளில் உள்ள சருமம் முகத்தில் உள்ள மற்ற பகுதியை விட கருமையாக காணப்படும். ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு மற்றும் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களின் விளைவால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

    ஒரு துண்டு இஞ்சி மற்றும் 10 புதினா இலைகள் சேர்த்து உரலில் நன்றாக இடித்து சாறு எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை மூடி எலுமிச்சைபழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். இந்த கலவையை 2 அல்லது 3 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து தேவைப்பட்டால் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து தினசரி காலையில் தேநீருக்கு பதிலாக பருகவும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.

    2 தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து அதை கருமை படர்ந்த பகுதிகளில் பூசவும்.

    மேற்கூறிய 2 முறைகளையும் தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் சருமத்தின் கருமை நீங்கி பொலிவு அதிகரிக்கும்.

    ரசாயனம் கலக்காத சந்தனத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து கருமை படர்ந்திருக்கும் இடங்களில் நாளொன்றுக்கு 2 முறை வீதம் தொடர்ந்து 2 வாரங்கள் தடவி வந்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும்.

    சாதம் வடித்த கஞ்சி 2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, வெண்ணெய் அரை தேக்கரண்டி இந்த மூன்றையும் கலந்து கருமை பாதித்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் 3 முறை தொடர்ந்து 3 வாரங்கள் செய்தால் கருமை மறைந்து சருமம் மினுமினுக்கும்.

    கருமை பாதித்த பகுதியில் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு சுத்தம் செய்த பின்பு உருளைக்கிழங்கு சாறு 2 தேக்கரண்டி, தேன் அரை தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு 4 சொட்டு இவை அனைத்தையும் நன்றாக கலந்து சருமத்தில் கருப்பு திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் நெற்றி மற்றும் வாயை சுற்றிலும் உள்ள கருமை முற்றிலுமாக நீங்கும்.
    உடலில் ஏற்படும் அதிகமான வெப்பம் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாகிறது. உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்....
    குளிக்க ஆரம்பிக்கும் போது முதலில் தலையில் தண்ணீரை ஊற்றுவது தவறானதாகும். குளத்தில் இறங்கி குளிக்கும் முறையை போல முதலில் சிறிது நீரை உச்சந்தலையில் தெளித்து கொண்டு பின்பு கால்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உடலில் தண்ணீரை ஊற்ற இறுதியாக தலையில் நீரை ஊற்ற வேண்டும். அப்போது தான் உடலின் மொத்த வெப்பமும் காதுகள், கண்களில் வழியாக வெளியேறும். எடுத்த எடுப்பிலேயே தலையிலும், தேளிலும் நீரை ஊற்றும்போது மொத்த வெப்பமும் உடலிலேயே தங்க நேரிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    குளிப்பது உடலை குளிர்விப்பதற்கான செயல் முறை. குளிர்ந்த நீரில் குளித்தால் மட்டுமே உடலின் வெப்பத்தை வெளியேற்ற முடியும். குளிப்பதற்கு முன்பாக வாய் முழுவதும் நீரை நிரப்பி அப்படியே வைத்திருந்து குளித்து முடித்தவுடன் துப்பிவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நுரையீரலுக்கு மிகவும் நல்லதாகும்.

    வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். நல்லெண்ய்யை மிதமாக சூடாக்கி அதில் தோல் நீக்கிய சிறிய இஞ்சி துண்டையும்,சிறிது மிளகையும் பொடித்து போட்டு ஆறவைக்க வேண்டும். அந்த எண்ணெய்யை தலையிலும், உடலிலும் தேய்த்து அரை மணி நேரமாவது ஊற வைத்து விட்டு குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது மட்டும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு மற்ற வேலைகளை பார்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது. உணவு உண்டதும், உடல் செரிக்கும் வேலையை தொடங்கி விடும். செரிமானத்துக்க்காக உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அநத் நேரத்தில் குளித்தால், உடல் குளிர்ச்சியடைந்து செரிமான வேலை தடைப்படும். இதன் காரணமாக அமிலச்சுரப்பு அதிகரித்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    குளிப்பது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடிய இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக குளிப்பதால் குளியலின் நன்மைகளை முழுமையாக பெற முடியாமல் போகலாம்.
    நாகரிக வளர்ச்சியால் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அனைத்து பெண்களும் விரும்புவார்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கைக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அடர்ந்த கூந்தலைப் பெறமுடியும்.
    கரு கருவென்ற அடர்த்தியான கூந்தல் மீது பெண்கள் பலருக்கும் ஆசை இருக்கும். நாகரிக வளர்ச்சியால் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அனைத்து பெண்களும் விரும்புவார்கள். அதற்கான வழிமுறைகளை அறிந்து அதனை செயல்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

    இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கைக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அடர்ந்த கூந்தலைப் பெறமுடியும்.

    வாரம் ஒரு முறை ஆமணக்கு எண்ணெய்யைத் தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி நன்றாக வளருவதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.

    செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பின்பு சீயக்காய் அல்லது இயற்கையான முறையில் தயாரித்த ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலம் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

    கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் நான்கு இவை இரண்டையும் நன்றாக அரைத்து, ¼ கப் தயிர் கலந்து தலையில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இவ்வாறு அவ்வப்போது செய்து வந்தால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

    கடுக்காய், செம்பருத்திப் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி, ஆற வைத்து, தலையில் தடவினால் கூந்தல் நன்றாக வளரும்.

    வெந்தயத்தை ஊறவைத்து, நன்றாக அரைத்து தலையில் ‘பேக்' போல போட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு குளிக்கவும். இதன் மூலம் தலைமுடி அடர்த்தியாக செழித்து வளரும்.

    ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யில், நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க வைக்கவும்.

    பின்னர் இந்தக் கலவையை 4 நாளுக்கு ஒரு முறை வெயிலில் வைக்க வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து, வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து குளித்து வருவதன் மூலம், முடி அடர்த்தியாக வளரும். முடி உதிர்தல் குறையும்.

    மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்களை தலா 10 கிராம் எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். அதை காய்ச்சிய தேங்காய் எண்ணெய்யில் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். பின்பு இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி உதிர்வது குறைவதுடன், கூந்தல் அடர்த்தியாக வளரும்.
    இரவு நேர சரும பராமரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இருப்பது இல்லை. இரவு நேர சரும பராமரிப்பு, சருமத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
    மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன் என பகல் நேரத்தில் சருமத்தைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு வழிகளைக் கையாளுகிறோம். அதேசமயத்தில், இரவு நேர சரும பராமரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. மாசு, வெப்பம் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் இரவில் இருக்காது. எனவே இரவு நேர சரும பராமரிப்பு, சருமத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

    சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், தூங்கி எழும்போது சருமம் புத்துணர்ச்சியோடு இருக்கும் என்பதால், இரவு நேரத்தில் சரும பராமரிப்பை அவசியம் பின்பற்ற வேண்டும். எத்தகைய சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளலாம் என இங்கு பார்க்கலாம்.

    இரவு நேர சரும பராமரிப்பின் முதல் படி, முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை நீக்குவதுதான். எந்தவிதமான மேக்கப் போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, தண்ணீர் அல்லது மேக்கப் ரிமூவரைக் கொண்டு முகத்தை முழுவதுமாக துடைக்க வேண்டும்.

    முகம் கழுவிய பின்பு, டோனர் பயன்படுத்துங்கள். பிறகு உங்கள் சரும மருத்துவரின் பரிந்துரையோடு முகத்திற்கு இரவு நேரத்திற்கான கிரீமை பயன்படுத்துங்கள். 25 வயதை நெருங்குபவர்கள், ஆண்டி-ஏஜிங் உள்ள இரவு நேர கிரீமை உபயோகிக்கலாம். இது இரவு நேரத்தில் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தைக் கொடுக்கும். கிரீம் பயன்படுத்த விருப்பமில்லாதவர்கள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள், இரவில் தூங்கச்செல்லும் முன்பு, சில துளிகள் பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது முகத்தின் இளமையை தக்க வைப்பதோடு, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். பாதாம் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ‘ஈ’ சருமத்துக்குத் தேவையான ஊட்டத்தையும் கொடுக்கும்.

    எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள், இரவு தடவிய பாதாம் எண்ணெய்யை நீக்குவதற்கு பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவு கொண்டு கழுவலாம். இதைத்தவிர இரவில் பன்னீர் அல்லது ரோஸ் டோனர் பயன்படுத்தலாம்.

    முகத்திற்கு மட்டுமில்லாமல், உதட்டுக்கும் சிறந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். வெண்ணெய் உதட்டுக்குப் போதிய ஈரப்பதத்தைக் கொடுக்கக்கூடியது.

    தலை முடியில் தடவி இருக்கும் எண்ணெய்யோ அல்லது பொடுகோ தலையணையில் படிந்திருக்கும். இது முகத்தில்படும்போது, கிருமிகளின் தொற்று காரணமாக முகப்பரு உண்டாகும். எனவே தலையணையின் உறையை, வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
    கூந்தலை பாதிக்காமல் இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘முடி சாயம்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
    வயதாகும்போது மட்டுமே ‘நரை’ ஏற்படும் என்ற நிலையைத் தாண்டி, இன்று மாறி வரும் உணவு பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்குகின்றன. இவற்றைத் தற்காலிகமாக கருப்பாக்குவதற்காக பயன்படுத்தும் செயற்கை ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயங்கள், உடனடியாக நிறத்தை மாற்றும்.

    அதன்கூடவே பக்க விளைவுகளை ஏற்படுத்தி, முடியின் வேர்க்கால்களைப் பாதித்து, முடி உதிர்வையும் அதிகமாக்கும். இந்த ரசாயனங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனைத் தவிர்ப்பதற்கு இயற்கை முறையிலேயே, எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத வண்ணம் ‘முடி சாயம்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

    இயற்கை சாயம்:

    இரண்டு அல்லது மூன்று கொட்டாங்குச்சிகளை அடுப்பில் எரித்து, அதன் மூலம் கிடைக்கும் கரியுடன், செக்கில் ஆட்டிய சுத்தமானத் தேங்காய் எண்ணெய்யைத் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும். பின்பு, அதை அரை மணி நேரம் வெயிலில் வைக்க வேண்டும். தலைக்கு குளித்தவுடன் இந்தச் சாயத்தை தடவும்போது முடி நன்றாகக் கருப்பாகும். இதனை தினமும் தடவி வந்தால், நாளடைவில் முடி கருப்பாக மாறும்.

    நெல்லிச் சாயம்:

    நிழலில் உலர்த்தி விதை நீக்கப்பட்ட 4 நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளவும். அதை லேசாக பொடித்துக்கொண்டு, அடி கனமான வாணலியில் போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்கள் வரை, நன்றாகக் கருப்பாகும் வரை வறுத்தெடுக்கவும். பின்பு தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். இந்தக் கலவையை அறை வெப்பநிலையில் இரவு முழுவதும் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனைத் தலை முடியில் முழுமையாகத் தடவவும். பின்பு 2 மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும்.

    அவுரிச் சாயம்:

    ‘அவுரி’ எனப்படும் ‘இண்டிகோ பொடி’ - 1 தேக்கரண்டி, மருதாணி பொடி - 1 தேக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி, சோளமாவு - 1 தேக்
    கரண்டி, உப்பு - சிறிதளவு எடுத்துக்கொள்ளவும். மருதாணிப் பொடியில், சிறிது எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து சிறிது கெட்டியாக கலந்து கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று புகாதவண்ணம் மூடி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் அவுரிப் பொடி, சோளமாவு, உப்பு இதனுடன் தேவையான அளவு மருதாணிக் கலவை, தண்ணீர் கலந்து, கைப்படாமல் பிரஷ்ஷால் தலை முழுவதும் தடவவும்.

    3 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஷாம்பூ போடாமல், தண்ணீரால் தலைமுடியை அலசவும். இதன்மூலம் இயற்கையான கருமை நிறத்தைப் பெறுவது மட்டுமின்றி கூந்தல் மிருதுவாகவும் இருக்கும். இதில் பயன்படுத்தும் அவுரி, முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் மிக்கது.

    மேற்கூறிய எந்த சாயத்தை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் ஷாம்புவை தவிர்ப்பது நல்லது. சாயம் பயன்படுத்திய இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து வீரியம் குறைந்த ஷாம்புவை உபயோகிக்கலாம்.
    நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.
    ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.  

    இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

    நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள் (Use brushes to clean nails.). இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன.

    குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்து விடக் கூடாது.
     
    குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்?

    அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது (So when using mild soap,), நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

    நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.
    சரும பராமரிப்பு அட்டவணை ஒன்றை தயார் செய்து அதனை வாரத்தின் 7 நாட்களிலும் முறையாக பின்பற்றி வருவது பலன் கொடுக்கும். அதற்கான வழிமுறைகளை காண்போம்.
    சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது சிலருக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக தோன்றலாம். பருவ நிலையில் மாற்றம் ஏற்படும்போது முகப்பரு, கருவளையம், சரும சுருக்கம், சருமத்தில் மெல்லிய கோடுகள், நிறமி பாதிப்பு, சரும பொலிவின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். சரும பராமரிப்பு அட்டவணை ஒன்றை தயார் செய்து அதனை வாரத்தின் 7 நாட்களிலும் முறையாக பின்பற்றி வருவது பலன் கொடுக்கும். அது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதில் முக்கிய பங்கும் வகிக்கும். அதற்கான வழிமுறைகளை காண்போம்.

    நாள் 1 - சுத்தப்படுத்துதல்:

    முதல் நாளை சருமத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் டோனிங் செய்வதன் மூலம் தொடங்குங்கள். இதற்காக மென்மையான கிளீன்சரை உபயோகியுங்கள். இயற்கையான சுத்தப்படுத்தியை நீங்களே தேர்வு செய்தும் கொள்ளலாம். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் அசுத்தங்கள் அனைத்தையும் அகற்ற உதவும். அதே நேரத்தில் சுத்தப்படுத்தும் செய்முறையின்போது சருமத்தை மென்மையாக அணுக வேண்டும். இத்தகைய சுத்தப்படுத்துதல் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கும்.

    நாள் 2 - உணவுமுறை:

    சருமத்தை மேம்படுத்துவதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள் சாப்பிடுவது சருமத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். சருமம் நீரேற்றமாக இருப்பதற்கு உணவில் திரவங்களைச் சேர்ப்பதும் முக்கியம். தண்ணீர், பழச்சாறு, காபி, தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ளலாம். இதனை 2-வது நாளில் மட்டும்தான் கடைப் பிடிக்க வேண்டும் என்பதில்லை. ஆரோக்கியமான, சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்தை வாரம் முழு வதும் பின்பற்ற வேண்டும்.

    நாள் 3 - உரித்தல்:

    சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்கள் மற்றும் இறந்த சருமத்தை அகற்றுவதற்கு ‘எக்ஸ்போலியேஷன்’ எனப்படும் உரித்தல் முக்கியமானது. சருமத்தின் தன்மையை பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எக்ஸ்போலியேஷன் செய்ய வேண்டியிருக்கும். இது சருமத்தின் பொலிவுக்கு இடையூறாக இருக்கும் அசுத்தங்கள், உதிர்ந்த, இறந்த செல்களை வெளியேற்ற உதவும். அடைபட்டிருக்கும் சரும துளைகளை குறைத்து, பளபளப்பான, ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்திற்கு வித்திடும்.

    எக்ஸ்போலியேஷன் செய்வதற்கான மாஸ்கை வீட்டிலேயே உருவாக்கலாம். மலிவு விலையில் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். இரண்டு மூன்று முறை எக்ஸ்போலியேஷன் செய்வது நல்லது. இருப்பினும் சருமத்தின் தன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    நாள் 4 - கண்:

    சரும பராமரிப்பில் கண்களின் ஆரோக்கியத்தை பேணுவதும் அவசியமானது. கண்களில் வீக்கம், கண்களுக்கு அடியில் கருமைநிற வட்டங்கள், மெல்லிய கோடுகள் தென்பட்டால் அதனை சரி செய்வது அவசியமானது. இதற்கான கிரீம்கள் இருக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம். 4-வது நாளில் கிரீம்களை தவறாமல் பயன்படுத்தி வரலாம். அதேவேளையில் நன்றாக தூங்கி எழுந்தாலே இத்தகைய பிரச்சினைகள் எழாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மென்மையானது. அதனால் அதனை நன்றாக பராமரிக்க வேண்டும். சூரிய கதிர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் சமயத்தில் வெளியே செல்லும்போது சன்கிளாஸ் அணிய மறக்கக்கூடாது.

    நாள் 5 - பேஸ் மாஸ்க்:

    சரும பராமரிப்பு வழக்கத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு ‘பேஸ் மாஸ்க்’ பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை ‘பேஸ் பேக்’காக தயார் செய்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். உங்கள் தோல் வகைக்கு ஏற்ற எளிதில் உறிஞ்சும் பொருட்களை பயன்படுத்தலாம். இத்தகைய பேஸ் மாஸ்க்குகள் வீக்கத்தைக் குறைக்கவும், முகப்பருவை போக்கவும் உதவும். சருமத்தை பிரகாசமாகவும் மென்மையாகவும் மாற்றும்.

    நாள் 6 - அழகு சாதன பொருட்கள்:

    ஒப்பனை தூரிகைகள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை நன்கு சுத்தம் செய்வதும் தோல் பராமரிப்புக்கு அவசியமானது. ஏனெனில் தூரிகைகள், ஸ்பாஞ்சுகளில் அழுக்குகள், இறந்த சரும செல்கள், கிருமிகள் படர்ந்திருக்கும். இத்தகைய மேக்கப் பொருட்களை சுத்தம் செய்வது சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும். பயன்படுத்தும் மேக்கப் பொருட்களின் ஆயுட்காலம் நீளும்.

    என்னென்ன பொருட்களை பயன்படுத்தி மேக்கப் செய்கிறோமோ அவைகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது சிறந்தது. அத்துடன் ஸ்பாஞ்ச் போன்ற பொருட்களை 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுமாறு சரும பராமரிப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் ஸ்பாஞ்சுகளில் அழுக்கு இருந்தால் அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

    நாள் 7 - ஓய்வு நாள்:

    வாரத்தில் ஒரு நாள் சருமத்திற்கு முழுமையாக ஓய்வு கொடுத்து விட வேண்டும். மேக்கப் உள்ளிட்ட எந்தவொரு சரும பராமரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. தினசரி மேக்கப் போடுபவராக இருந்தால் சற்று சிரமமாக இருக்கும்.

    சரும பராமரிப்பு வழக்கத்தை முற்றிலுமாக மாற்றி மேக்கப் இல்லாமல் ஒரு நாள் வாழ்வது ஆரம்பத்தில் வித்தியாசமாக தோன்றலாம். ஒரு நாள் முழுவதும் மேக்கப் இல்லாமல் இருப்பது கடினமானது என்று தோன்றினால் படிப்படியாக பின்பற்ற தொடங்கலாம். ஈரப்பதம் மிகுந்த மாய்ஸ்சுரைசர், லிப் பாப் போன்றவற்றை வேண்டுமானால் உபயோகிக்கலாம்.
    ×