என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருட்களில் வைட்டமின் சி, 10 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். மேலும் அதன் பி.எச். அளவு 3.5-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
    வைட்டமின் சி, உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை சேர்க்கக்கூடியது. சருமத்திற்கு தேவையான பராமரிப்பையும், ஊட்டச்சத்தையும் கொடுப்பதற்கு வைட்டமின் சி சிறந்த தேர்வாக அமையும்.

    அழுக்கு, வெப்பம், நச்சுகள், மாசு போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டியே வயதான தோற்றத்தை அடைய நேரிடும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள் தோன்றும். மேலும் தோல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு, தேவையான பராமரிப்பையும் வழங்கக்கூடியது. வைட்டமின் சி, சரும சுருக்கங்களை மேம்படுத்துவதாக சில ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தும்போது தோல் சுருக்கங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    தொடர்ந்து வைட்டமின் சி பயன்படுத்தி வந்தால் சரும தோற்றம் மேம்படும். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின் சியை சேர்த்து பயன்படுத்தும்போது, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் வைட்டமின் ஈ, பெரூலிக் அமிலம் போன்ற பிற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் புற ஊதா கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. வைட்டமின் சி கரும்புள்ளிகளைக் குறைக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வைட்டமின் சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. முகப்பருவை போக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி உடன் ஒப்பிடும்போது, மற்ற தோல் பராமரிப்பு பொருட்கள் குறைவான நன்மைகளையே கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

    சருமத்தை பராமரிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் சி, திரவ வடிவில் கிடைக்கின்றன. பல தோல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் வைட்டமின் சி சார்ந்த சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருட்களில் வைட்டமின் சி, 10 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். மேலும் அதன் பி.எச். அளவு 3.5-க்கும் குறைவாக இருக்க வேண்டும். இவை வைட்டமின் சி சீரம் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கின்றன. அதனை பயன்படுத்துவதற்கு முன்பு அது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். முதலில் முகத்தை மென்மையான கிளென்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு வைட்டமின் சி சீரத்தை முகத்தில் தடவ வேண்டும். இரண்டு முதல் ஐந்து துளிகள் உபயோகித்தால் போதுமானது. அது உலர்ந்ததும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தலாம். வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கிரீனையும் தடவ வேண்டும்.

    ஆரம்பத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும். அது சருமத்திற்கு எந்த பாதிப்பையோ, ஒவ்வாமை பிரச்சினையையோ ஏற்படுத்தவில்லை என்றால் வழக்கமான சரும பராமரிப்பு பொருளோடு இதனையும் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தினாலே மாற்றத்தை உணரலாம்.

    ஏதேனும் அசவுகரியம் அல்லது தோல் தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், வைட்டமின் சி சீரம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
    முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவும் ‘மசாஜ்’ உதவும். முகத்திற்கு மசாஜ் செய்வதன் மூலம் சரும சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவை நீங்கும்.
    ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்வார்கள். அக அழகுடன், முக அழகையும் பராமரிக்க வேண்டியது முக்கியமானது. தற்போதைய சூழலில் வெயில், தூசு போன்றவற்றால் சருமம் பாதிப்படைகிறது. இவற்றைத் தடுத்து, முகத்திற்கு அழகூட்ட எண்ணற்ற கிரீம்கள் இருக்கின்றன. இருந்தாலும் ‘மசாஜ்’ செய்வதன் மூலம் இயற்கையான பலன்கள் கிடைக்கும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவும் ‘மசாஜ்’ உதவும்.

    மசாஜ் செய்வதற்கு முன்பு கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். முகத்தை நன்றாகக் கழுவி சுத்தமான துணியால் மென்மையாக துடைக்க வேண்டும். பிறகு விரல் நுனிகளைக் கொண்டு முகத்தில் மென்மையாகத் தட்டி, மெதுவாக வேகத்தை அதிகரிக்கவும். இதனால் சருமம் சூடாகி முகம் தயார் ஆகும். முகத்தை மசாஜ் செய்யும்போது, மேல்நோக்கிய திசையில் செய்ய வேண்டும். எப்போதும் கீழ்நோக்கி செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

    முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற  மிருதுவான பகுதிகள் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்கள், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதியையும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

    மசாஜ் செய்வதற்காக பால் ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    புருவங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் கவனத்துடன் மசாஜ் செய்ய வேண்டும். நெற்றியில் மசாஜ் செய்வது உங்களை நிதானப்படுத்தி, சருமத்தை மென்மையாக்கும்.

    கண்களுக்குக் கீழே இருக்கும் பகுதியில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தைத் தூண்டும். கண்களின் கீழ் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

    மூக்கைச் சுற்றி விரல்களை வைத்துக்கொண்டு, காதுகளின் பின்புறம் வரை கன்னங்களை மசாஜ் செய்யவும்.

    காது பகுதி முழுவதையும் வட்ட வடிவ இயக்கத்தில் பல முறை மசாஜ் செய்யவும்.

    வாயை மூடிக் கொண்டு சிறிய வட்டங்களில் தாடையைச் சுற்றி மசாஜ் செய்யவும்.

    நெற்றி மையத்தில் இருந்து தலை நோக்கி வெளியே செல்வதுபோல் மெதுவாக மசாஜ் செய்யவும்.

    ஒருமுறை, முகத்தை மசாஜ் செய்து முடித்தவுடன், ஒரு பஞ்சு எடுத்து மெதுவாக துடைக்கவும்.

    வறண்ட சருமம் உள்ளவர்கள், பால், வெண்ணெய், தயிர் ஆகியவற்றையும், எண்ணெய் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சம்பழம், தக்காளிச் சாறு போன்றவற்றையும், சாதாரண சருமம் கொண்டவர்கள் ஆரஞ்சு, திராட்சை சாற்றையும் தடவலாம். முகத்திற்கு மசாஜ் செய்வதன் மூலம் சரும சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவை நீங்கும்.
    சாதாரண சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
    ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு. தினமும் அதனை பயன்படுத்தி குளியல் போட்டு விடுகிறோம். நாம் விரும்பும் சோப்பை பயன்படுத்தி குளித்தால்தான் நமது சருமம் புதுப்பொலிவு பெறுவதாக நம்புகிறோம். உடலும் புத்துணர்ச்சி பெறுவதாக நினைக்கிறோம். எந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன மாதிரியான மணம் வீசும் என்று தெரிந்துவைத்திருப்பவர்களில் பலருக்கும் அதில் வீசும் மணத்தின், அதில் பொங்கும் நுரையின் ரகசியம் தெரியாது. அதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    சோப்பின் மூலப்பொருள், ஒருவகை உப்பு. அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும், தாவர கொழுப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சோப்பு தயாராகிறது. நிறத்திற்கான பொருளும், வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது. நுரைக்கான ரசாயனமும் அதில் கலக்கப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் சோப்பில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மையும், அமிலத்தன்மையும் இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கார, அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு 5.5 என்ற கணக்கில் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம்.

    எண்ணெய் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை கலந்த சோப்பு நல்லது. வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாழை, ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் கலந்த எண்ணெய், அவகோடா ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்பு சிறந்தது. சோப்பின் அழகிய நிறங்களும் குறிப்பிட்ட சில ரசாயன மூலப்பொருட்களை சார்ந்தே அமைகிறது.

    டி.எப்.எம். என்பது சோப்பின் தரத்தை குறிப்பிடுகிறது. முதல் தர சோப்பு என்பது 75 சதவீதத்திற்கு அதிகமான டி.எப்.எம் கொண்டதாகும். 65 முதல் 75 சதவீதம் வரை டி.எப்.எம் இருந்தால் அது நடுத்தரமானது. சிலர் அறிமுகமாகும் அனைத்து சோப்புகளையும் பயன்படுத்திப் பார்ப்பார்கள். அது தவறான பழக்கம். சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சோப்பு வாங்கும்போது டி.எப்.எம் அளவினை பார்த்து வாங்குங்கள். வீரியம் நிறைந்த ரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.

    பெரியவர்கள் சிலர் பேபி சோப்பு எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பினை பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்கு தங்கிவிடும். சரும துளைகள் பிறந்த குழந்தைகளுக்கு இருக்காது. அதற்கு ஏற்றபடி வீரியம் குறைந்த பொருட்களை கொண்டே குழந்தைகளுக்கான சோப்பு தயாரிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும். அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி பேபி சோப்பில் இல்லை. எனவே மூன்று வயதுக்கு மேல் பேபி சோப்பு பயன்படுத்த வேண்டாம்.

    மூலிகை சோப்பு என்று சொல்லப்பட்டாலும், அதிலும் ரசாயன மூலப்பொருட்களை சேர்க்கத்தான் செய்வார்கள். இயற்கை பொருட்களில் தயாராகும் சோப்புகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் போது தரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். தினமும் இருமுறை மட்டுமே சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது. அடிக்கடி முகத்தில் சோப்பு போட்டால், சருமம் வறண்டுபோகும். ‘லிக்விட்’ எனப்படும் திரவ சோப்பு வகை ஈரத்தன்மை அதிகம் கொண்டது. அதில் ரசாயனத்தின் வீரியம் குறைவு.

    சாதாரண சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சோப்பு வாங்குவதை தவிர்த்திடவேண்டும்.
    பேஸ் பேக்குகள் தயாரிப்பதில் பூக்கள் காட்டாயம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் மல்லிகை பூ கொண்டு பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று காண்போம்.
    பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், பிளவனோய்ட்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவற்றை முகத்தில் தடவினால் முகம் இளமையாக மாறுவதோடு, மினுமினுப்பாகவும் பொலிவு தரும்.

    நம் வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் பூக்களிலேயே அழகு சார்ந்த பயன்கள் அதிகம் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மல்லிகை மலர்களின் இதழ்கள் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. இது சருமத்திற்கு ஒரு நல்ல சுத்தப்படுத்தியாகவும், சருமத்தை பிரகாசமாக ஒளிர வைக்கவும் அனுமதிக்கிறது. மல்லிகை மலர் இதழ்களின் ஃபேஸ் பேக்கை தயாரிக்க, ஒரு சில இதழ்களை எடுத்து சிறிய உரலை பயன்படுத்தி அந்த இதழ்களை கசக்கி பிசைந்து கொள்ளுங்கள்.

    அதனுடன் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால் மற்றும் கடலை மாவு சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை கழுவினால், உங்களுக்கு தேவையான பளபளப்பைப் பெறுவீர்கள்.

    தேவையான பொருட்கள் :

    மல்லிகைப்பூ இதழ்கள் - கால் கப்
    கெட்டித் தயிர் - கால் கப்

    இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவவும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேஸ் பேக் சிறந்தது.
    கையில் போட்ட மருதாணி மங்கத் தொடங்கும் போது பாதுகாப்பாகவும், வேகமாகவும் நீக்குவதற்கான வழிகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
    கைகளுக்கு மருதாணி இலையைக் கொண்டு சிம்பிளாகத் தான் டிசைன்களை வைக்க முடியும். ஆனால் கடைகளில் விற்கப்படும் மெஹந்தியைக் கொண்டு, பல டிசைன்களைப் போடலாம். அப்படி போடப்படும் மெஹந்தி சில நாட்கள் கழித்து மங்கத் தொடங்கும். அந்நேரம் அது அசிங்கமாக இருக்கும். அப்படி மங்கத் தொடங்கும் போது பலருக்கு அதன் தோற்றம் பிடிப்பதில்லை.
     
    வருத்தம் கொள்ள வேண்டாம், மங்கத் தொடங்கும் மருதாணியை பாதுகாப்பாகவும், வேகமாகவும் நீக்குவதற்கான வழிகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பொதுவாக உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் நல்ல தரமான ப்ளீச்சை, மருதாணி போடப்பட்ட இடங்களில் போடவும்.

    அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரை கொண்டு கழுவவும். எலுமிச்சையை பேக்கிங் சோடாவுடன் கலந்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்துக் கொள்ளுங்கள். அதனை மருதாணி பூசப்பட்ட இடங்களின் மீது தடவிக் கொள்ளவும். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இது உங்கள் கைகளை வறட்சியடைய செய்யும்.

    அதனால் ஈரப்பதத்தையும் உண்டாக்கிக் கொள் ளுங்கள். டூத் பேஸ்ட்டில் உள்ள சில குணங்கள் மரு தாணியை வேகமாக போக்கி விடும். அதற்கு டூத் பேஸ்ட்டை எடுத்து, அதனை மருதாணி போடப்பட்ட இடங்களில் தடவவும். அது காய்ந்த பிறகு, மருதாணியின் நிறம் வேகமாக மறைய கைகளை ஒன்றாக வைத்து நன்றாக தேய்க்கவும்.

    அடிக்கடி கைகளை கழுவுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 10-12 முறைகள் வரை கழுவவும். மருதாணியை மறைய வைக்க சோப்பு உதவும்.  ஆனால் அளவுக்கு அதிகமான முறையில் கழுவினால், கைகள் வறண்டு போகும்.

    அதனால் கைகளை கழுவும் ஒவ்வொரு முறையும் நல்ல தொரு மாய்ஸ்சரைசர் ஒன்றை பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெய் என்பது இயற்கையான கூழாக்கியாக செயல் படுவதால், மருதாணியின் நிறத்தை நீக்கும் மென்மையான வழியாக இது கருதப்படுகிறது.

    ஆலிவ் எண்ணெயுடன் கொஞ்சம் உப்பை கலந்து, அதனை உங்கள் சருமத்தின் மீது தடவவும்.

    10 நிமிடங்கள் கழித்து, இந்த செயல் முறையை சில முறை மீண்டும் செய்திடவும். இதனை சில காலம் பின் பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

    வெது வெதுப்பான நீரில் உப்பை கலந்து, அதனுள் உங்கள் கைகள் மற்றும் பாதங்களை 20 நிமிடங்கள் வரை அல்லது தண்ணீர் குளிரும் வரை ஊற வைக்கவும். மாற்றத்தை காண வேண்டுமானால், இந்த செயல் முறையை சில முறை தொடர்ந்து செய்திட வேண்டும்.கைகளை நீண்ட நேரம் ஊற வைக்கும் போது கைகள் வறண்டு போகலாம். அதனால் நல்லதொரு மாய்ஸ் சரைசரைப் பயன் படுத்துங்கள். மருதாணியை மங்க வைக்க குளோரின் உதவும். உங்கள் வீட்டில் குளோரின் தண்ணீரில் கைகளையும் கால்களையும் ஊற வைத்தாலே போதுமானது.
    வெறும் கூந்தல் வளர்ச்சி, சருமத்திற்கு மெருகேற்றும் மலர் என்பதையும் தாண்டி பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது செம்பருத்தி.
    தேவையானவை:

    செம்பருத்தி பூ - 1
    தயிர் - 1 டீஸ்பூன்
    முல்தானி மெட்டி - 2 டீஸ்பூன்
    ரோஜா பூ - 1

    முதலில் ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் தயிர் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மிருதுவாகும். கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி ‘பளிச்’ என்று மாறும்.

    செம்பருத்தி பூ. இலை இரண்டுமே சருமத்துக்கும் கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக பங்குவகிக்கின்றன. செம்பருத்தி பூவை இதழ்களை தனியே பிரிக்காமல் அப்படியே காயவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும்.

    செம்பருத்தி பூ பொடி - 3 டீஸ்பூன்
    பாசிபயறு மாவு - 3 டீஸ்பூன்
    பால் - தேவைக்கு

    இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எப்போதும் முகத்தில் தனி தேஜஸ் இருக்கும்.
    சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா பயன்படுகிறது. மற்றும் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் ரோஜா இதழ்கள் உதவுகிறது.
    ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும்.

    வைட்டமின் சி'யின் முக்கியத்துவம் என்னவெனில், இது சருமத்தில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மற்றும் ரோஜா வேனிற்கட்டி (Sunburn) எரிச்சல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா நன்கு பயன்படுகிறது. மற்றும் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் ரோஜா இதழ்கள் உதவுயளிக்கிறது.

    தேவையானவை:

    ரோஜா பூ - 1
    பால் - 1 டீஸ்பூன்
    கோதுமைத் தவிடு - 1 டீஸ்பூன்

    முதலில் ரோஜா பூவின் இதழை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் கோதுமைத் தவிடு, பால் கலந்து நன்றாக அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு அடையும்.

    சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.
    மலர்களைக் கொண்டு போடும் ‘பேஸ் பேக்’ முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றும் என்பதால் தயக்கமில்லாமல் இதை பயன்படுத்த முடியும்.
    பூக்கள் பல்வேறு மருத்துவ தன்மைகளைக் கொண்டவை. எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், இயற்கையான அழகைக் கொடுக்கக்கூடியவை. பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும்.

    தேவையான பொருட்கள் :

    ஆவாரம் பூ - 15
    அரிசி மாவு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    ரோஜா பன்னீர் - தேவையான அளவு

    வெயிலில் செல்வதால் கருத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும். இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.
    மூக்கை சுற்றிலும் வெள்ளை அல்லது கருமை நிற சிறிய முட்கள் பிரச்சினை உள்ளவர்கள் அதனை நீக்குவதற்கு, வீரியமிக்க ரசாயனப் பொருட்கள் கலந்த ஸ்க்ரப், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
    சிலருக்கு மூக்கை சுற்றிலும் வெள்ளை அல்லது கருமை நிறத்தில் சிறிய முள் போல ஆங்காங்கே மேலெழும்பி இருக்கும். இது முக அழகை கெடுப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதற்கான தீர்வை இங்கே காணலாம்.

    எதனால் உண்டாகிறது?

    மூக்கை சுற்றியுள்ள சருமத் துளைகளில் தூசி மற்றும் அழுக்குகள், இறந்த செல்கள் படிவதாலும், தலையில் உள்ள பொடுகு படிவதாலும் வெண்முள் மற்றும் கருமுள் தோன்றுகின்றன.

    எவ்வாறு நீக்கலாம்?

    இந்த பிரச்சினை உள்ளவர்கள் அதனை நீக்குவதற்கு, வீரியமிக்க ரசாயனப் பொருட்கள் கலந்த ஸ்க்ரப், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். இவற்றின் மூலம் வெண்முள் மற்றும் கருமுள் தற்காலிகமாக நீங்கும். சில நாட்களில் மீண்டும் அதே பிரச்சினை தோன்ற ஆரம்பிக்கும். இதை இயற்கையாகக் கிடைக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு எவ்வாறு நீக்கலாம் என்பதை இங்கு காண்போம்.

    தேன்:

    மூக்கை சுற்றிலும் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். பின்பு சிறிதளவு நாட்டுத்தேனை அந்தப் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் வெந்நீரில் பருத்தித் துணியை நனைத்து மூக்கை சுற்றிலும் அழுத்தித் துடைக்கவும். இதன் மூலம் அழுக்குகள் முற்றிலும் நீங்கும். பின்பு தேனுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து மூக்குப் பகுதியில் மசாஜ் செய்யவும். மீண்டும் பருத்தித் துணி கொண்டு அழுத்தித் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூக்கின் துளைகளில் அடைபட்டுள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீங்கும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்வது நல்ல பலனைத் தரும்.

    வெள்ளரி:

    ஒரு சிறியத் துண்டு வெள்ளரியின் மேல் சிறிது சர்க்கரையை தூவவும். அதைக்கொண்டு மூக்கை சுற்றிலும் மிருதுவாக 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை நனைத்து, மூக்கை சுற்றிலும் துடைத்து எடுக்கவும். இது எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத மிக எளிமையான முறையாகும், வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம்.

    தேயிலை எண்ணெய்:

    தேயிலை எண்ணெய்யுடன் (டீ ட்ரீ ஆயில்), சிறிது சர்க்கரை கலந்து மூக்கை சுற்றி தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரால் முகத்தை கழுவவும். இது வெண்முள், கருமுள் போன்றவற்றை நீக்குவதோடு, சருமத்தையும் மிருதுவாக்கும்.

    தரமற்ற அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தாமல், தினசரி 2 அல்லது 3 முறை தூய்மையான நீரினால் முகம் கழுவ வேண்டும். பின்னர் தூய்மையான பருத்தித் துணியைக் கொண்டு முகத்தை துடைத்து வந்தாலே, இறந்த செல்கள் முகத்தில் படியாமல் பாதுகாக்கலாம்.
    அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
    சமைப்பதற்கு அரிசியை ஊறவைத்த நீரை பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். முடி உதிர்தல், முடி உலர்வடைதல், முடி மெலிதல், பொடுகு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்.

    அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

    1. அரிசி நீர்-வெங்காய சாறு:

    இந்த கலவை முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் போலிக் அமிலம், சல்பர் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவை முடி உடைவது, முடி மெலிவதை குறைக்கவும் உதவும்.

    செய்முறை: அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும். ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.

    2. அரிசி நீர் - கிரீன் டீ:

    இந்த கலவையில் கண்டிஷனிங் பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைமுடியை மென்மையாக்கும்.

    செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.

    3. அரிசிநீர்-தேன்:

    அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.

    செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.

    4. அரிசி நீர்-ஆரஞ்சு தோல்:

    பொடுகு தொல்லையை போக்குவது, அதிகப்படியான எண்ணெய் தன்மையை குறைப்பது என ஆரஞ்சு தோல், தலைமுடிக்கு பல வகைகளில் நன்மை களை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மட்டுமின்றி, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த கலவை அரிசி நீருடன் சேர்ந்து முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். பளபளப்பான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும். ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
    சரும பராமரிப்பில் சுத்தம் செய்வதுதான் முதல் படியாகும். எனவே, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. சோம்பேறித்தனமும் கூடாது.
    புது வருடம் தொடங்கும்போது ஒவ்வொருவரும் ஏதாவதொரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கு சபதம் எடுப்பார்கள். சிலர் தீய பழக்கவழக்கங்களை கைவிடுவதற்கும், நல்ல பழக்கங்களை தொடர்வதற்கும் தீர்மானிப்பார்கள். பெண்களை பொறுத்தவரை தங்கள் இலக்குகளுடன் சரும அழகை பேணும் விஷயத்தையும் தவறாமல் சேர்த்துக்கொள்வார்கள். எளிமையாக பின்பற்றக்கூடிய சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு தீர்மானங்கள் குறித்து பார்ப்போம்.
    சருமத்துக்கு...

    சுத்தம்:

    சரும பராமரிப்பில் சுத்தம் செய்வதுதான் முதல் படியாகும். எனவே, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. சோம்பேறித்தனமும் கூடாது.

    கொரிய மற்றும் ஜப்பானிய தோல் பராமரிப்பு நடைமுறையில், ‘டபுள் க்ளென்சிங்’ என்ற சொல் வழக்கத்தில் உண்டு. இந்த முறையை பின்பற்றி முகத்தை இரண்டு முறை சுத்தம் செய்து, அனைத்து அசுத்தங்களையும் அகற்றலாம். முதலில் எண்ணெய் சார்ந்த அசுத்தங்களை அகற்ற ‘கிளென்சர்’ மூலம் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் மூலம் ஒப்பனை, சீபம், சன்ஸ்கிரீன் போன்ற எண்ணெய் சார்ந்த அசுத்தங்களை அகற்றிவிடலாம். அடுத்ததாக, சருமத்தில் படர்ந்திருக்கும் மாசுபாட்டை போக்குவதற்கு நீர் சார்ந்த சுத்தப்படுத்தியை பயன் படுத்த வேண்டும். இவைதான் முகத்தை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். இருப்பினும், இது உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக சுத்தம் செய்யலாம்.

    ஈரப்பதம்:

    முகத்தை சுத்தப்படுத்திய உடனேயே, ஈரப்பதமாக்குதல் தோல் பராமரிப்பு வழக்கத்தின் இரண்டாவது படியாகும். இது சருமத்தை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். சரும நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட மாய்ஸ்சுரைசர் கொண்டு சருமத்தில் ஈரப் பதத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த செயல் முறையின்போது உதடுகள் உலர்வடையாமல் ஈரப் பதத்தை தக்கவைத்துக்கொள்வதும் முக்கியமானது.

    சன்ஸ்கிரீன்:

    சூரியனிடம் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகள் சருமத்திற்கு சேதம் விளைவிப்பவை. அவற்றில் இருந்து சருமத்தை பாதுகாப்பதே சன்ஸ்கிரீனின் முக்கியமான பயன்பாடாகும். எனவே, இந்த புத்தாண்டில், வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் தடவுவதற்கு மறக்க வேண்டாம். சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி அணிந்து முகத்தை மறைக்கலாம்.

    மேக்கப்:

    இது நிச்சயமாக உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அகற்றாமல் விட்டுவிட்டால் பல தோல் பிரச்சினைகளை ஏற் படுத்தும். எனவே, தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை அகற்றி விடுங்கள். அதற்கு சிறந்த எண்ணெய் சார்ந்த க்ளென்சரை பயன் படுத்தலாம்.
    கூந்தலுக்கு....

    எண்ணெய் மசாஜ்:

    தலைவலி முதல் மன அழுத்தம் வரை எல்லா உடல் நலப்பிரச்சினைகளுக்கும் மசாஜ் சிறந்த தீர்வாக அமையும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. உடலின் மற்ற பாகங்களை போலவே, தலைமுடிக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. எண்ணெய்தான் அதனை நிவர்த்தி செய்யும். எனவே அவ்வப்போது தலைமுடிக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிலும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய மறக்காதீர்கள்.

    கூந்தல் கழுவுதல்:

    வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது மன அழுத்தத்தை குறைக்கும். ஆனால் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தலைமுடியில் உள்ள இயற்கையான எண்ணெய் தன்மை நீங்கிவிடும். அதனால் கூந்தல் வறண்டு போய்விடும். இதனை தவிர்க்க, கண்டிஷனரை பயன்படுத்திய பிறகு தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

    சீப்பு பயன்படுத்துதல்:

    குளித்து முடித்ததும் நிறைய பேர் சீப் கொண்டு தலைமுடியை அலங்கரிக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி ஈரமான தலைமுடியில் சீப்பை பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. தலைமுடி மிகவும் பலவீனமடைந்துவிடும். முடி உடைந்து போகவும் வாய்ப்புள்ளது. எனவே சீப்பு பயன்படுத்துவதற்கு முன்பு முடியை நன்கு உலர விடவேண்டும். அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன் படுத்துவதும் நல்லது.

    வெப்பத்தை தவிர்த்தல்:

    தலைமுடியை தாங்கள் விரும்பிய வடிவம், ஸ்டைலுக்கு கொண்டு வருவதற்கு நிறைய பேர் ஹீட்டர் பயன்படுத்துவதுண்டு. அதில் இருந்து வெளிப்படும் வெப்பம் தலைமுடியை கடுமையாக சேதப்படுத்தும். அதனால் கூடுமானவரை ஹீட்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    முகப்பரு விஷயத்தில் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தும்.

    பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப்பருக்கள் ஆகும். உங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்றால், தங்களுக்கு பிடித்த சாக்லேட் சாப்பிடுவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பவரையும், சாக்லேட் சுவைத்தப்பின் பயந்தபடியே முகத்தை பார்ப்பவரையும் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் பல வகையான உணவுகளை உண்ணவே அச்சப்படுவார்கள். அவை முகத்தை அழகின்றி ஆக்குவதுடன் வலியையும் தருகின்றன.

    பருக்களை விரட்ட அளிக்கும் டிப்ஸ்கள் இதோ:

    1. ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட்

    எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்களுக்கு அதிகம் பருக்கள் உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனால் சருமத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்ப்பது அவசியம். தினசரி இருமுறையாவது முகத்தை நல்ல தரமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழுவ வேண்டும். முகத்திற்கு ரோஸ் வாட்டரை கீழே கூறியபடி உபயோகப்படுத்தவும்:

    நல்ல தரமான ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக் கொள்ளவும்.
    முகத்தில் மெதுவாக தடவவும்.
    தினசரி இரு முறை இதை செய்யவும்.

    2. மஞ்சள் மற்றும் தயிர்

    மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இவற்றை உபயோகிக்கும் முறை :

    இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும்.
    முகத்தில் சமமாக பூசவும்.
    15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.

    3. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட்

    சந்தனத்திற்கு  வலியை குறைக்கும் தன்மையும் பரு மற்றும் மாசுவை நீக்கும் சக்தியும் உண்டு. அதை பின் வருமாறு உபயோகிக்கவும்:

    சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும்.
    உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும்.
    ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
     
    4. வேப்பிலை

    வேப்பிலை உங்களுக்கு தூய்மையான, அப்பழுக்கற்ற சருமத்தை அளிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதை உபயோகிக்கும் முறை:

    சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும்.
    ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
    அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
    அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.

    5. வெள்ளரி சாறு

    வெள்ளரிசாறு முகத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை கட்டுபடுத்துகிறது. அதன் குளிர்ச்சி தன்மை உங்கள் சருமத்தை குளிர்வித்து ஈரத்தன்மை அளிக்கிறது. அதை உபயோகிக்கும் முறை:

    இரண்டு மேசைக் கரண்டி வெள்ளரிச் சாருடன் ஒரு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
    ஒரு பருத்தி பஞ்சு பந்தை இந்த சாறில் முக்கி முகத்தை துடைக்கவும்.
    இது உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும்.
     
    மேற்கூறிய குறிப்புகளுடன், நாம் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை:

    நிறைய நீர் அருந்துங்கள்.
    உடல் தூய்மை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு உங்கள் முக தூய்மையும் அவசியம்.
    மன அழுத்தமும் பருக்களை உண்டாக்கும் என்பதால், மன அழுத்ததிலிருந்து விலகி இருங்கள்.
    துரித உணவு / ஜங்க் உணவை தவிர்த்து விடுங்கள்.
    ×