search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இரவு நேரத்தில் சரும பராமரிப்பு
    X
    இரவு நேரத்தில் சரும பராமரிப்பு

    இரவு நேரத்தில் எத்தகைய சரும பராமரிப்பு அவசியம் தேவை...

    இரவு நேர சரும பராமரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இருப்பது இல்லை. இரவு நேர சரும பராமரிப்பு, சருமத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
    மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன் என பகல் நேரத்தில் சருமத்தைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு வழிகளைக் கையாளுகிறோம். அதேசமயத்தில், இரவு நேர சரும பராமரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. மாசு, வெப்பம் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் இரவில் இருக்காது. எனவே இரவு நேர சரும பராமரிப்பு, சருமத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.

    சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், தூங்கி எழும்போது சருமம் புத்துணர்ச்சியோடு இருக்கும் என்பதால், இரவு நேரத்தில் சரும பராமரிப்பை அவசியம் பின்பற்ற வேண்டும். எத்தகைய சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளலாம் என இங்கு பார்க்கலாம்.

    இரவு நேர சரும பராமரிப்பின் முதல் படி, முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை நீக்குவதுதான். எந்தவிதமான மேக்கப் போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, தண்ணீர் அல்லது மேக்கப் ரிமூவரைக் கொண்டு முகத்தை முழுவதுமாக துடைக்க வேண்டும்.

    முகம் கழுவிய பின்பு, டோனர் பயன்படுத்துங்கள். பிறகு உங்கள் சரும மருத்துவரின் பரிந்துரையோடு முகத்திற்கு இரவு நேரத்திற்கான கிரீமை பயன்படுத்துங்கள். 25 வயதை நெருங்குபவர்கள், ஆண்டி-ஏஜிங் உள்ள இரவு நேர கிரீமை உபயோகிக்கலாம். இது இரவு நேரத்தில் சருமத்திற்கு தேவையான ஊட்டத்தைக் கொடுக்கும். கிரீம் பயன்படுத்த விருப்பமில்லாதவர்கள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம்.

    வறண்ட சருமம் கொண்டவர்கள், இரவில் தூங்கச்செல்லும் முன்பு, சில துளிகள் பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது முகத்தின் இளமையை தக்க வைப்பதோடு, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். பாதாம் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ‘ஈ’ சருமத்துக்குத் தேவையான ஊட்டத்தையும் கொடுக்கும்.

    எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள், இரவு தடவிய பாதாம் எண்ணெய்யை நீக்குவதற்கு பச்சைப்பயறு மாவு அல்லது கடலை மாவு கொண்டு கழுவலாம். இதைத்தவிர இரவில் பன்னீர் அல்லது ரோஸ் டோனர் பயன்படுத்தலாம்.

    முகத்திற்கு மட்டுமில்லாமல், உதட்டுக்கும் சிறந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். வெண்ணெய் உதட்டுக்குப் போதிய ஈரப்பதத்தைக் கொடுக்கக்கூடியது.

    தலை முடியில் தடவி இருக்கும் எண்ணெய்யோ அல்லது பொடுகோ தலையணையில் படிந்திருக்கும். இது முகத்தில்படும்போது, கிருமிகளின் தொற்று காரணமாக முகப்பரு உண்டாகும். எனவே தலையணையின் உறையை, வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
    Next Story
    ×