என் மலர்
அழகுக் குறிப்புகள்
- தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.
- ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும்.
எப்போதும் நீரில், சேற்றில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்த வெடிப்பு. மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்டநேரம் நிற்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, காலில் செருப்பு அணியாமல் கரடுமுரடான பாதையில் நடப்பது, தேய்ந்து போன ஒழுங்கற்ற, தரமற்ற செருப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவது, குளிக்கும்போது பாதங்களை அழுக்கு தேய்த்துக் குளிக்காதது, பாதம், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
சொரியாசிஸ் என்ற காளாஞ்சக படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் செருப்பு மற்றும் தரமற்ற ஷூக்களை பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்தபிறகு கை, கால்களை சுத்தமாகக் கழுவாததாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம். நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக ஏற்பட கூடும்.
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது உடலின் அழுக்கை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத்தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதை தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரி சேர்த்துக்கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும் உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும்.
கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச்செந்தூரம், மிருதார்சிங்கி, மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், பசுவெண்ணெய் சேர்ந்த மருந்து, ஊமத்தை இலைச்சாறு, தேங்காய் நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமடையும்.
- இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும்.
- அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.
தங்கத்தின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆனால், எல்லா காலங்களிலும் தொடர்ந்து தங்க ஆபரணங்களையே பயன்படுத்த முடியுமா? தொடர்ந்து பயன்படுத்துவதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்க வளையல் வளைந்து நெளிந்து தேய்ந்து போகிறது. ஒவ்வொரு முறையும் வளையல் மாற்றும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு கூட்டி கழித்து வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். அதனால், அன்றாட பயன்பாட்டிற்காக பலரும் இப்போது, தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்டட்டுகள் போன்ற செயற்கை நகைகள் பக்கம் திரும்பி விட்டனர்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இவ்வேளையில், பல பெண்களின் விருப்பமாக இருப்பது 1 கிராம் தங்க நகைகள். பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன.
தங்க நகைகள் போலவே பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் கண்களைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த நகைகளுக்குச் சிறந்த மாற்றாகும். இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும். தினசரி அணியக்கூடிய எளிமையான வடிவமைப்பு முதல் மணப்பெண்களுக்கான ஆடம்பரமான டிசைன்கள் வரை, கம்மல், வளையல், செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், கொலுசு என அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.
ஒன் கிராம் கோல்டு என்று விற்கப்படும் நகைகளில் மற்ற உலோகத்தின் மேல் தங்க நிறத்தில் முலாம் பூசி விற்கிறார்கள். சருமத்தின் மேல் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகள் மீது இந்த உலோகம் உரசும் போது ஏற்படும் எதிர்வினையாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். உலோக ஒவ்வாமை இருப்பவர்கள் கூடியவரை செயற்கை நகைகள் அணிவதை தவிர்க்கலாம்.
அப்படியும் விருந்து, விசேஷங்களில், உறவினர் வீடுகளுக்கு செல்ல நேர்கையில் என்று செயற்கை நகைகளை அணிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. இவற்றை கடைபிடித்தால், சருமத்தைப் பாதுகாக்கலாம்.
செயற்கை நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து, காட்டன் உள்ள பெட்டிகளில் காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும்.
தங்கமுலாம் பூசிய நகைகள் அணிந்துள்ள சருமப் பகுதியில் பர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டாம். செயற்கை நகைகளை அணிவதற்கு முன் அவை சருமத்தில் படும் இடங்களில் ஈரம் இல்லாமல், துடைத்து உலர வைத்த பின் அணிவது நல்லது.
- நகப்பூச்சை நீக்க நெயில் பாலிஷ் ரிமூவரை உபயோகிப்பார்கள்.
- இது நகத்திலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.
கைவிரல்களுக்கு மகுடமாக இருப்பது நகங்கள். அவற்றை பராமரிப்பதில் பெண்கள் தனி ஆர்வம் காட்டுவார்கள். அணியும் ஆடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு சாயம் பூசுவார்கள். அதை நீக்குவதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் எனும் ரசாயனத்தை உபயோகிப்பார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நகங்களிலும், அதைச் சுற்றியுள்ள சருமத்திலும் பாதிப்பை உண்டாக்கும். இதைத் தவிர்த்து, எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நகங்களின் பளபளப்பை சேதப்படுத்தாமல் நகப்பூச்சை நீக்க முடியும். அதற்கான வழிகள் இங்கே...
எலுமிச்சை: எலுமிச்சையில் இருக்கும் அமில மூலக்கூறுகள் நகப்பூச்சுக்குள் ஊடுருவும் தன்மை கொண்டது. சில துளிகள் எலுமிச்சை சாறினை நகங்களில் விட்டு தேய்ப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்க முடியும். எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சோப் அல்லது வினிகர் கலந்தும் பயன்படுத்தலாம்.
பற்பசை: பற்பசையில் எத்தில் அசிடேட் எனும் ரசாயன கலவை உள்ளது. இது நெயில் பாலிஷ் ரிமூவர் தயாரிப்பிலும் பயன்படுகிறது. சிறிதளவு பற்பசையை எடுத்து நகங்களில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து மெதுவாக துடைத்து எடுப்பதன் மூலம் நகப்பூச்சை எளிதாக நீக்க முடியும்.
சானிடைசர்: சானிடைசர் தற்போது அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகிறோம். அதை நகப்பூச்சை நீக்குவதற்கும் உபயோகிக்கலாம். நகங்களின் மீது சிறிதளவு சானிடைசரை தெளித்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்கலாம்.
ஹேர் ஸ்பிரே: நெயில் பாலிஷ் ரிமூவருக்கு பதிலாக ஹேர் ஸ்பிரேவையும் பயன்படுத்த முடியும். கிண்ணத்தில் சிறிதளவு ஹேர் ஸ்பிரேவை ஊற்றி அதில் பஞ்சினை நனைத்து, நகங்களை அழுத்தி துடைப்பதன் மூலம் நகப்பூச்சை நீக்கலாம். டியோடரண்டும் இதற்கு உதவும்.
வாசனை திரவியம்: டிஷ்யூ பேப்பர் அல்லது பஞ்சில் சிறிது வாசனை திரவியத்தை தெளித்து அதைக் கொண்டு நகங்களை அழுத்தித் துடைப்பதன் மூலமும் நகப்பூச்சை நீக்க முடியும்.
வெந்நீர் மற்றும் சோப்பு: வெந்நீரில் சிறிதளவு சோப்பைக் கலந்து அதில் நகங்களை சிறிதுநேரம் வைத்திருங்கள். பின்னர் நகவெட்டியில் உள்ள தேய்ப்பானை பயன்படுத்தி நகப்பூச்சை நீக்கலாம்.
நகங்களுக்கான பராமரிப்புகளை தினமும் செய்ய வேண்டுமா?
உங்கள் நகங்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு தினமும் அவற்றை சுத்தம் செய்து மாய்ஸ்சுரைசர் பூச வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டிரிம் செய்ய வேண்டும்.
நகங்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லி பூசலாமா?
நகங்கள் வறண்டு போவதைத் தடுக்க தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை நகங்களின் மீது பூசலாம்.
கர்ப்பிணி பெண்கள் நகப்பூச்சு பூசலாமா?
உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு உண்டாக்கும் ரசாயனக் கலவைகள் சேர்க்காத நகச்சாயங்களை பயன்படுத்தலாம்.
நகங்களை கடிப்பது அவற்றுக்கு சேதம் ஏற்படுத்துமா?
நகம் கடித்தல் சுகாதாரம் இல்லாத பழக்கமாகும். இது நடத்தைக் கோளாறாகக்கூட இருக்கலாம். நகக்கணுக்கள் பாதிக்கப்படும்போது நகத்தின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம்.
- தலைமுடி உதிர்வு டீனியா கேப்பிடஸ் என்னும் பூஞ்சை நோயிலும் வரும்.
- தலையின் ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக முடி உதிர்ந்து விடும்.
தலை முடியில் பூச்சி வெட்டு என்பது 'ஆலோபேசியா ஏரேட்டா' என்ற 'ஆட்டோ இம்யூன்' நோயால் வருகிறது. இந்த நோய் தாக்கினால், தலையின் ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக முடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். தலை முழுவதும் உள்ள முடிகள் உதிர்ந்து மொத்தமாக வழுக்கையுடன் காணப்பட்டால் அதை 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்றும் கூறுவார்கள்.
இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:
1) சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.
2) திரிபலா சூரணத்தில் சிவனார் அமிர்தம் 200 மி. கி., கந்தக பற்பம் 200 மி. கி., சங்கு பற்பம் 200 மி. கி. காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
தலைமுடி உதிர்வு டீனியா கேப்பிடஸ் என்னும் பூஞ்சை நோயிலும் வரும். தலைமுடி உதிர்தலில் ஆலோபேசியா ஏரேட்டா நோயையும், டீனியா கேப்பிடஸ் பூஞ்சை நோயையும் வேறுபடுத்த வேண்டும். இந்த பூஞ்சை நோய் தாக்கினால் தலையில் அரிப்பு, முடி உதிர்தல், அந்த இடத்தில் வெண்மை அல்லது சிவப்புத் திட்டுகள் காணப்படும், துகள் போன்று வெண்மையுடன் உதிர்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதற்கான சித்த மருந்துகள்:
1) சீமை அகத்தி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளரும்.
2) பரங்கிப்பட்டை சூரணத்துடன் கந்தக பற்பம் 200 மி.கி வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
3) பஞ்ச கற்ப விதி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். பஞ்ச கற்ப விதி என்பது, கடுக்காய் தோல், வேப்பம் வித்து, கஸ்தூரி மஞ்சள், நெல்லி வற்றல், வெண் மிளகு இவைகளை சம அளவு எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி ஆற வைத்து உருவாக்கும் தைலம். இதை தலையில் நன்றாக பூசி ஒரு மணி நேரம் சென்ற பின்பு குளிக்க வேண்டும். இதனால் புழுவெட்டு, பொடுகு, பூஞ்சை, பேன் இவைகள் தலையில் இருந்து நீங்கி முடி செழித்து வளரும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- பெண்களுக்கு முகத்தில் வளரும் முடியால் அவர்களின் அழகு கெடும்.
- முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள் இதோ...
ஹார்மோன் கோளாறு மற்றும் சில குறைபாடுகள் காரணமாக சில பெண்களுக்கு முகத்தில் முடி வளரும். இவ்வாறு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்கும் எளிய வழிகள்:
குப்பைமேனி பொடி, கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சுட்ட வசம்பு பொடி இவைகளை சம அளவில் எடுத்து எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து முகத்தில் பூசி 2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
மாவுச் சத்து அதிகமான உணவுப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்க்கலாம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள அவரை, கொத்தவரை, பீன்ஸ், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், கோவைக்காய், பூசணிக்காய், பிரண்டைத் தண்டு, கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, நூல்கோல், ப்ராக்கோலி, கம்பு, சாமை, வரகு, தினை, குதிரை வாலி, சோளம், கேழ்வரகு, சிவப்புக் கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, பாசிப்பயறு, கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
- தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும்.
'நம்மை முதலில் பார்க்கும்போது, அடுத்தவர்களுக்குத் தோன்றும் எண்ணம் தான் நிலையானது' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.
குறைவான, அழகான மேக்கப்புடன், ஆர்ப்பாட்டம் இல்லாத, முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம் நீங்கள் சிறந்த தோற்றம் பெற்று விளங்க மிகவும் முக்கியமானதாகும்.
நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து கொள்ளக்கூடிய மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை உங்களுக்காகத் தேர்வு செய்து வழங்குகிறோம்.
* கொண்டை ( ஸ்லீக் லோ பன்)
கொண்டை, அலுவலக நோக்கிலான உடைகளுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். ஏனெனில் இது சிக்கல் இல்லாதது மற்றும் காற்றில் பறக்கும் முடியையும் கட்டுப்படுத்துகிறது. கழுத்து அளவில் தாழ்வாகக் கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென, நவீனத்தன்மையோடு இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை தன்மையையும் கொண்டிருக்கும்.
இந்த தோற்றம் பெற...
நல்ல சீப்பு கொண்டு தலைமுடியை வாரி, தலை முடி அனைத்தையும் ஒன்றாக்கி, உங்கள் கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொள்ளவும். இந்த குதிரை வால் பின்னலைச் சுருட்டி கொண்டையாக்கி, 'பின்' குத்திக்கொள்ளவும். சிடுக்கு உள்ள முடி எனில், செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி சீராக்கி கொள்ளவும்.
* குதிரை வால் (போனி டெயில்)
சரியான முறையில் அமைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு நேர்காணலுக்குக் குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீம் (anti frizz cream) அல்லது ஸ்டலிங் பொருள் மூலம் இதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
இந்த தோற்றம் பெற...
உங்கள் தலைமுடியை நேராக்கி, தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும். தலைமுடியை மொத்தமாக இறுகப்பற்றி குதிரை வாலாக்கி, உங்களுக்கு விருப்பமான உயரத்தில் அதை சுற்றி இறுக்கமாக்கிக் கொள்ளவும். உங்கள் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கொஞ்சம் முடி எடுத்து, அதை கூந்தல் அலங்காரத்தைச் சுற்றி அமைத்து நேர்த்தியான தோற்றத்தை உண்டாக்கிக் கொள்ளவும்.
* முன்பக்க தலைமுடி (டிவிஸ்டட்)
இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாகத் தோன்றக்கூடியது, உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிதான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டால் இன்னும் அசத்தலாக இருக்கும்.
இந்த தோற்றம் பெற...
உங்கள் தலைமுடியை டிரையர் கொண்டு நன்றாகக் காய வைத்து, கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கிக் கொள்ளவும். சீப்பு கொண்டு முன்பக்க முடியை அமைத்து, அதைப் பின்பக்கமாக இழுத்து, 'பின்' குத்திக்கொள்ளவும். செட்டிங் ஸ்பிரே மூலம் 'பினிஷ்' செய்யவும்.
- காபியில் பல நன்மைகள் உள்ளன.
- முகப்பருவைக் குறைக்கிறது.
காபியில் சருமத்தைப் பொலிவாக்கும் அற்புதமான பண்புகள் உள்ளன. உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.
காபியில் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் ஒன்று தோல் பராமரிப்பு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் நிறைந்த காபி, அற்புதமான சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உண்மையில், காபியை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.
காபி மற்றும் பால் முகமூடியைத் தயாரிக்க, இரண்டு தேக்கரண்டி காபி தூள் மற்றும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். உங்கள் முகத்தில் 10-15 நிமிடங்கள் வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் மென்மையான சருமத்தைப் பெற விரும்பினால், காபி மற்றும் பால் முகமூடி ஒரு எளிய மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். இது உங்கள் முகத்தில் உள்ள கறைகளை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும்.
ஒரு தேக்கரண்டி காபி தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து பேஸ்ட்டை உங்கள் முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் விடவும். பேஸ்ட்டை அகற்ற, மெதுவாக வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும், சருமம் பளபளப்பாக இருக்கும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள மந்தமான தன்மையை நீக்கி கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் காபி பவுடரை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாகவும் மென்மையாகவும் தடவவும். 15 நிமிடம் உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது.
- ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம்.
- அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது.
முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் கூந்தல் அலங்காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது முடிக்கு நன்மை செய்யுமா என்பதை இதில் பார்ப்போம்.
ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம், ஹேர் ஸ்டைல் கலையாமல் வைத்திருக்க உதவலாம். ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன என்பதை பற்றியும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஹேர் ஜெல்களில் ஆல்கஹால் உள்ளிட்ட நச்சு இரசாயனங்கள் இருக்கிறது. இந்த ஆல்கஹால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும். இதனால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.
இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.
ஹேர் ஜெல்களில் இருக்கும் இராசயனங்கள் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை உருவாக்குகிறது.
ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு இராசயனங்களால் உங்களின் கூந்தல் பொலிவிழந்து கூந்தல் நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.
அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. அது உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும் படி எப்போதும் அப்ளை செய்யக் கூடாது. உங்கள் கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.
- மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது.
- இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.
மேக்கப் செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவவேண்டும். முகத்தில் பரு, சிறுசிறு துளைகள் இருந்தால் அதை 'பிரைமர்' எனப்படும் பூசு பொருள் கொண்டு சரிசெய்த பிறகு, 'பவுண்டேஷன்' பூச வேண்டும். நம்முடைய நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும், அதில் அதீத கவனம் செலுத்தினால் மேக்கப் செய்திருப்பதே தெரியாத அளவிற்கு 'நீட்'டாக இருக்கும்.
எண்ணெய் பசை தன்மை கொண்டவர்கள், 'காம்பாக்ட் பவுடர்' பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் கருவிழிகளை 'கன்சீலர்' கொண்டு சீராக்கலாம். மேக்கப்பை கூடுதல் பொலிவாக்க, 'பிரான்சர்' கொண்டு ஜொலிக்க வைக்கலாம்.
'கான்டர்' என்பதை பயன்படுத்துவதன் மூலம் குண்டாக தெரியும் முகத்தை கூட, ஒல்லியாக காட்டமுடியும். மேக்கப் விஷயத்தில் கண் மற்றும் புருவம் மிக முக்கியமானது. ஏனெனில் கண் புருவங்கள்தான், முக அழகை நிர்ணயிக்கக்கூடியவை. அதை அழகாக்க 'ஐ புரோ பவுடர்', 'ஐ லைனர்', 'மஸ்காரா' போன்றவை புழக்கத்தில் இருக்கின்றன. இறுதியாக உதடுகளை 'லிப் பாம்', 'லிப் லைனர்', 'லிப்ஸ்டிக்' கொண்டு அழகாக்கலாம்.
மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது. இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மேக்கப்பை கலைக்கலாம். இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.
ஏனெனில் மேக்கப் கிரீம் பூசுவதால் அடைக்கப்பட்டிருக்கும் சரும துளைகள் அதற்கு பிறகுதான் சுவாசிக்க ஆரம்பிக்கும்.
- நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.
- இந்த டிசைன்கள் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
தங்க நகைகளில் போல்கி வேலைப்பாடு, பச்சிகம் வேலைப்பாடு, மீனாகாரி வேலைப்பாடு,குந்தன் வேலைப்பாடு, ஜாடு வேலைப்பாடு, தந்த வேலைப்பாடு, ஆன்டிக் வேலைப்பாடு மற்றும் டெம்பிள் வேலைப்பாடு என பல வேலைப்பாடுகள் இருந்தாலும் நகாசு வேலைப்பாடு தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. சிக்கலான டிசைன்களை மிகவும் அழகாக நகைகளில் செதுக்கிக் கொண்டுவரும் வேலைப்பாடு நகாசு என்று அழைக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலும் கோவில் வடிவமைப்புகள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவை இடம்பெறுவதைப் பார்க்க முடியும். இவ்வகை நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.இந்த வேலைப்பாட்டில் மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் வடிவங்களை மிகவும் தத்ரூபமாக கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு நகை வடிவமைப்பாளர் செயல்படுகிறார்கள்.
இந்த நகைகளைத் தயாரிப்பதில், ஒவ்வொரு படியும் மிகவும் நுட்பமானதாகக் கூறப்படுகிறது.அதாவது ஓவியம் வரைதல், செதுக்குதல், வேலைப்பாடு செய்தல், பின்னர் வேலைப்பாடு செய்தவற்றை முழுமையாக தாக்கல் செய்தல் போன்ற நான்கு படிகளை இந்த வேலைப்பாடு கொண்டிருக்கின்றது.
முதல் படியாக எந்த டிசைனில் நகை செய்ய வேண்டுமோ அந்த டிசைனை பேப்பர் மற்றும் தங்கத்தாளில் வரைகிறார்கள்.தங்கத் தாளில் வரைந்த பிறகு, முழு வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் தங்கத்தாள் சுத்தியலால் அடிக்கப்படுகிறது (உதாரணமாக தெய்வங்களின் முகக் கோடு, கைகள் மற்றும் கால்களின் வளைவுகள், மாலை, பீடம் போன்ற முக்கிய அலங்காரங்களை தெளிவாக காண்பிக்கும் விதத்தில் சுத்தியலால் அடிக்கப்படுகிறது). தாளை சுத்தியலால் அடித்த பிறகு, அதன் உண்மையான தோற்றம் மற்றும் அதன் மாற்றம் ஆகியவை தோராயமாக தீர்மானிக்கப்படுகின்றது. மிகச்சிறந்த நகை வடிவமைப்பாளரால் மட்டுமே இதுபோன்ற நகாசு வேலைகளை மிகவும் சிறப்பாகவும்,கூர்மையாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் செய்து கொடுக்க முடியும்.
எந்தக் கலையையும் போலவே,இந்தக் கலையிலும் வடிவமைக்கப்படும் முகமானது நகையின் ஆன்மாவை உருவாக்குகிறது. நகாசு வேலைப் பாட்டில் முக அம்சங்களை முடிந்தவரை நன்றாக உருவாக்க வேண்டும் என்பதில் நகை வடிவமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மிகவும் திறமைவாய்ந்த, அனுபவம் நிறைந்த நகை வடிவமைப்பாளர்களால் மட்டுமே இந்த வேலைப்பாட்டை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று கூறப்படுகின்றது. மகிழ்ச்சியான, கூர்மையான மற்றும் அழகான டிசைன்களின் வெளித்தோற்றம் அருமையாக வருவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் முயற்சிதான் நகைகளின் இறுதி மதிப்பை உயர்த்துகின்றது.
நகாசு வேலை முடிவடைந்த பிறகு, அடுத்தபடியாக அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து அகற்றப்படுகின்றன. இவை கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் அவற்றைக் கத்தரிக்கும் பொழுது கவனமாக இல்லையென்றால் சிறிய தவறும் அதிகமாக முயற்சி எடுத்து சிறப்பாக செய்த வேலையை கெடுத்து விடக் கூடியதாக அமைந்து விடும்.
நகாசு வேலை செய்யப்பட்ட பகுதியைத் தவிர அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து எடுக்கப்பட்ட பிறகு வடிவமைக்கப்பட்ட டிசைன் பகுதியின் பின்புறத்தை மூட வேண்டும். இல்லையென்றால் மிகவும் மெல்லிய தங்க தாளில் வடிவமைக்கப்பட்ட டிசைன் வளைந்து நெளிந்து போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.பின்புறம் மூடக்கூடிய தங்கத் தாளின் தடிமன் டிசைன் செய்யப்பட்ட அளவிற்கு ஏற்ப மாறுபடும்.டிசைனின் பின்புறம் மூடுதல் முடிந்ததும், கரடுமுரடான விளிம்புகள் மென்மையாக்கப்பட்டு,இறுதியாக நகைகள் சுத்தம் செய்யப்பட்டு மெருகூட்டப்படும். அதைத் தொடர்ந்து நகைகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க ஒரு சிறப்பான பழங்கால பாலிஷ் உபயோகப் படுத்தப்படுகின்றது.
மிகவும் நுட்பமான இந்த நகாசு வேலைப்பாட்டில் வரும் டாலர்கள் மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.இரண்டு மயில்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பது போல் செய்யப்பட்டிருக்கும் டாலரில் கெம்ப்,வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்து நடுவில் பெரிய சான்ட் ஸ்டோன் வைத்து டாலரின் கீழ்ப்புறத்தில் சிறிய தங்க குண்டுகள் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அபாரமாக இருக்கிறது.
கிருஷ்ண பகவான் குழல் ஊத அவரின் இருபுறமும் கோபியர்கள் நடனமாட பின்புறம் அகன்று விரிந்திருக்கும் மரம் அதனைச் சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதுபோல் செய்யப்பட்டிருக்கும் மனோகரி நகாசு வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருக்கும் டாலரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். மாங்காய் டிசைனின் நடுவில் தாமரை மலரில் அமர்ந்தவாறு லக்ஷ்மி வீற்றிருக்க அதனைச் சுற்றிலும் வண்ணக் கற்களாலான மயில்கள் தோகைகளை தொங்க விட்டது போல் அமர்ந்திருப்பது இந்த வேலைப்பாட்டின் சிறப்பிற்கு மற்றொரு உதாரணம்.
அன்னப்பறவையின் மேல் அம்மன் அமர்ந்திருப்பது போன்றும், லக்ஷ்மியின் பல்வேறு அம்சங்களையும் நகாசு வேலைப் பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். திரிசங்கு ஆபரணம், கஜலட்சுமி நெக்லஸ், தூரிகா நெக்லஸ், கண்டி நகாசு நெக்லஸ், ஊசி நெக்லஸ், ஆதிரா காசு நெக்லஸ், சிந்தூரி கண்டி நெக்லஸ் ,ஸ்வர்ணமுகி நெக்லஸ், லக்ஷ்மி மாங்காய் நெக்லஸ், சந்தியாபரணம் போன்றவை நகாசு வேலைப்பாடுடன் செய்யப்படும் நெக்லஸ்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
கருடன் தோற்றத்தில் வரும் கை விரல் மோதிரம் மற்றும் சாரி பின்களும் நகாசு வேலைப்பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நகாசு வேலைப்பாட்டில் வரும் ஒட்டியாணங்களுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு டிசைன்கள் மிகவும் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
கை வளையல்கள் என்று எடுத்துக்கொண்டால் அன்னப்பறவை, மயில், லட்சுமி, விநாயகர் என அனைத்தையும் மிகவும் அழகாக நகாசு வேலைப் பாட்டில் தங்கத்தில் கற்கள் பதித்து வடிவமைத்திருக்கிறார்கள். இத்தகைய வேலைப்பாட்டுடன் வரக்கூடிய இந்த நகைகளுக்கு முன்னால் வேறு எந்த நகையும் போட்டி போட முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த நகைகளின் வேலைப்பாடு மிகவும் அம்சமாக இருக்கின்றது.
கெம்பு கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள், பச்சை, நீலம் என கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் அருமையான வேலைப்பாட்டுடன் கூடிய நகாசு ஜிமிக்கிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். இவை மட்டுமல்லாது நகாசு வேலைப்பாட்டுடன் வரும் நெக்லஸ்கள், ஹாரங்கள்,வங்கிகள் மற்றும் தலை அலங்கார நகைகளையும் பார்ப்பவர்கள் கட்டாயம் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.
மிகவும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையையும் இது நகாசு வேலை என்று இன்றளவும் மக்கள் குறிப்பிடுவதைப் பார்க்க முடியும்.
- ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது.
- பிம்பிள் தழும்பு, கரும்புள்ளிகளை குறைக்கும்.
ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
* ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.
ஆப்பிள் - 1, தண்ணீர் - 1 கப்
ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.
* ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
1 ஆப்பிள் தோல், 1 டீஸ்பூன் தேன்
ஆப்பிளின் தோலை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் மாஸ்க் பிம்பிள் தழும்புகளையும், கருமையான புள்ளிகளையும் குறைக்கும். நல்ல மாற்றத்தைக் காண்பதற்கு, இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்த வேண்டும்.
ஆப்பிள் - 1, தேன் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஆப்பிளை துருவி அதிலிருந்து சாற்றினை கையால் பிழிந்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- வைட்டமின் ஈ எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அதிகம்.
- வைட்டமின் ஈ எண்ணெயை சருத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம்.
வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.
காஃபி தூள், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.
இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும்.
கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவளைம் நீங்கும்.
இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ எண்ணெயை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.
கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் ஈ எண்ணெயை மாய்ஸ்சரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்சனையும் எட்டிப்பார்க்காது.






