என் மலர்
உலக கோப்பை கால்பந்து-2022
- 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
- சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர்.
அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.
32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.
சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம்.
இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.
இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.
- முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
- ஆட்ட முடிவில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.
முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது.
சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
- 4வது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 9வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
- இன்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் டிராவில் முடிந்தது
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2-வது பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடத்திலும் கோல் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 0-0 என சமநிலையில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
- முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
- அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு 10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
- வணிகம் தொடர்பான குறியீடுகளை பயன்படுத்த பிஃபா தடை
- பெல்ஜியம் பாரம்பரிய சிவப்பு ஜெர்சியில் இருந்த வெள்ளை நிறத்திற்கு மாறியது
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய பெடரேசனான பிஃபா இந்தத் தொடரை நடத்துகிறது. இந்த தொடரில் வீரர்கள் தங்களுடைய ஜெர்சியில் விளம்பரம் தொடர்பான லோகோவை அணிந்து விளையாடக் கூடாது.
பெல்ஜியம் வீரர்கள் பாரம்பரியமாக பல வண்ணங்களுடைய சிகப்பு நிற ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். Tomorrowland என்ற பெயரில் மியூசிக் திருவிழா பெல்ஜியத்தில் நடைபெற்றது. இந்த Tomorrowland கடந்த டிசம்பர் மாதம் பல வண்ணங்கள் (பெல்ஜியம் ஜெர்சி) பன்முகத்தன்மை, ஒற்றுமை, உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான சின்னம் என அறிவித்தது.
இதனால் அந்த ஜெர்சியுடன் விளையாடினால் அந்த வணிகத்திற்காக ஒரு நிறுவனத்தை பிரபலப்படுத்துவதாக இருக்கும் என பிஃபா தடைவிதித்தது. இதனால் பெல்ஜியம் அணி வெள்ளை நிற ஜெர்சியுடன் களம் இறங்குகிறது.
மேலும், டி-சர்ட்டின் காலரில் Love என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடைவிதித்து.
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுமார் 8 அணிகளின் கேப்டன்கள் தங்கள் கையில் அணியுடன் பட்டையில் பல நிறங்களை உள்ளடக்கிய இதயம் வடிவிலான லோகோவில் Love என்ற வார்த்தை பயன்படுத்த கோரிக்கை விடுத்தனர்.
இதற்கும் பிஃபா தடை விதித்துள்ளது. ஒருவேளை கேப்டன் தடையை மீறி அணிந்தால் மஞ்சள் அட்டை வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நெதர்லாந்தில் பாகுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் நடைபெற்று வருகிறது. அப்போது One Love என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டது. இதனால் பிஃபா தடைவிதித்துள்ளது.
- அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.
- உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார்.
கொல்கத்தா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணிக்கு அந்த நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு தீவிர ரசிகர் தனது வீடு, டீ கடை முழுவதையும் அர்ஜென்டினா அணியின் தேசிய கொடிக்குரிய நிறத்தில் வர்ணம் தீட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இச்சாபுர் என்ற ஊரை சேர்ந்தவர் ஷிப் ஷங்கர் பத்ரா (வயது 54). கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றதில் இருந்து அந்த அணியின் தீவிரமான ரசிகராக மாறி விட்டார்.
உலக கோப்பை கால்பந்து நடக்கும் இந்த தருணத்தில் அவர் தனது வீட்டையும், 30 ஆண்டாக நடத்தும் டீ கடையையும் நீலநிறமாக மாற்றி விட்டார். சுற்றி அர்ஜென்டினா கொடிகள் கட்டப்பட்டு உள்ளன. நீல, வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் அர்ஜென்டினா அணி வீரர்களின் புகைப்படங்களே தென்படுகின்றன. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சியின் சிலையும் அவரது வீட்டை அலங்கரிக்கிறது.
இதை பார்க்கவே அவரது டீ கடைக்கு பலரும் படையெடுத்து வருகிறார்கள். 'அர்ஜென்டினா அணி என்றால் எனக்கு உயிர். மெஸ்சிக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டி. அவர் கோப்பையை வென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதற்காக தினமும் பிரார்த்திக்கிறேன். அவரது 35-வது பிறந்த நாளை கேக் வெட்டி பெரிய அளவில் கொண்டாட இருக்கிறோம்' என்று பத்ரா குறிப்பிட்டார்.
- அமெரிக்கா,வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
- அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் தலா ஒரு கோல் அடித்தன.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது அமெரிக்க அணி. முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக கோலாக மாற்றினார்.
இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
- ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
தோகா:
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மாஷா அமினி (22), என்ற இளம்பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்துள்ளது.
பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈரான், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது
ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக கோப்பை போட்டியின்போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றனர்.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- 2வது பாதியில் நெதர்லாந்து அணி 2 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின.
தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் போராடினர். ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் முடிந்ததும் கூடுதலாக 10 நிமிடம் அளிக்கப்பட்டது. 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.
- இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது.
- போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என ஈரான் வீரர்கள் தொடர்ந்து போராடினர்.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று கலிபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற குரூப்-பி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது. ஜூட் பெலிங்காம் (35வது நிமிடம்), புகாயோ சகா (43), ரகீம் ஸ்டெர்லிங் (45+1) கோல் அடித்தனர்.
இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. புகாயோ சகா 62வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
இங்கிலாந்து வீரர்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக முன்னேறினர். போட்டியை எப்படியாவது டிரா செய்துவிடவேண்டும் என தொடர்ந்து போராடினர். 65-வது நிமிடத்தில் அந்த அணியின் மெஹ்தி கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு 71வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். போட்டியின் இறுதிக்கட்டத்தில் ஜேக் கிரீலிஸ் (89வது நிமிடம்) கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 6-1 முன்னிலை பெற்றது. கூடுதல் நேரத்தில் ஈரான் வீரர் மெஹ்தி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6-2 என அபார வெற்றி பெற்றது.






