என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    வாருங்கள் ஸலாம் கூறுவோம். அதற்கு அழகான பதில் கூறுவோம். சாந்தியை வையகம் முழுவதும் பரப்புவோம். சாந்தி, சமாதானத்துடன் சுமுகமாக வாழ்வோம்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறும்போது அருகில் இருப்பவர் ‘யர்ஹமுகல்லாஹ்’ என பதில் கூறுவது, ஸலாம் எனும் முகமனுக்கு பதில் கூறுவது குறித்த தகவல்களை காண்போம்.

    தும்மல் குறித்து இஸ்லாமிய பார்வை வியப்பானது. தும்மல் என்பது இயற்கையான ஒன்று. காற்றைத்தவிர வேறு எந்த ஒரு வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்காது. உடனே அது ஒரு எதிர் வினையை உருவாக்கும். அதுதான் தும்மல். உள்ளே நுழையும் பொருளை வெளியே தள்ள நடக்கும் முயற்சி அது.

    இறைவன் ஏற்பாடு செய்த இந்த அருட்கொடையை நினைத்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தும்மல் வரும்போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் இறைவனுக்கே) என்று தும்மியவர் கூறிடவேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

    அதுபோல, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் ‘யர்ஹமுகல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என மறுமொழி கூறுவது அவசியமாகும்.

    இவ்வாறு கூறுவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தாக பராஉபின் ஆஸிப் (ரலி) கூறியிருப்பதாவது:

    இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி கட்டளையிட்டார்கள். 1) நோயாளிகளை நலம் விசாரிப்பது, 2) பிரேதங்களைப் பின் தொடர்ந்து செல்வது, 3) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறும்போது, அவருக்காக ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று மறுமொழி கூறுவது, 4) நலிந்தவருக்கு உதவுவது, 5) அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது, 6) மக்களிடையே ‘ஸலாம்’ எனும் சாந்தியைப் பரப்புவது, 7) சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது’. (நூல்: புகாரி)

    தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறாதபோது அவருக்கு மறுமொழி கூறவேண்டிய அவசியமில்லை. இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    ‘நபி (ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘இவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர் அவ்வாறு புகழவில்லை. எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு பகரவில்லை’ என்று விளக்கமளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஒருவர் மூன்று தடவைக்கு மேலே தும்மினால் அவருக்கு பதில் கூறவேண்டிய அவசியமில்லை. அவருக்கு ஜலதோஷம் வந்துள்ளது. அது நிவாரணம் அடைய அவருக்காக பிரார்த்திக்க வேண்டும்.

    தும்மல் என்பது இறையருட்கொடை. அதிலே நன்மையும், பிரார்த்தனையும்தான் இடம்பிடிக்கிறது. அதை கெட்ட சகுனமாக பார்க்கக்கூடாது.

    ‘ஸலாமுக்கு பதில் கூறுவது’

    ‘ஸலாம்’ என்பதன் பொருள் ‘சாந்தி நிலவட்டும்’ என்பதாகும். ‘ஸலாம்’ என்பது இறை வனின் 99 திருப்பெயர்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இறைவன் படைப்பினங்களுக்கு இடையே சாந்தி அளித்து வருவதால் இப்பெயர் அவனுக்கே உரித்தாகி விட்டது.

    இரண்டு இறைநம்பிக்கையாளர்கள் சந்திக்கும்போது ஒருவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி பேச்சை துவங்கிட வேண்டும். மற்றொருவர் ‘வ அலைக்கும் ஸலாம்’ (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று அதையே பதிலாக, வாழ்த்தாக தெரிவிக்க வேண்டும்.

    ஸலாம் எனும் முகமன் கூறுவது நபிவழி. அதற்கு பதில் வாழ்த்து கூறுவது கடமை. ‘ஒரு முஸ்லிம் தம் சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று முகமனுக்குப் பதிலுரைப்பது ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ஸலாம் எனும் முகமனுக்கு பதில் அளிப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக அமைந்துள்ளது.

    ஸலாம் கூறுவது குறித்து திருக்குர்ஆன் (4:86) இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘உங்களுக்கு ஸலாம் கூறப்படும்பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்’.

    ஸலாம் குறித்த நபிமொழிகள் வருமாறு:-

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் கூறிவிட்டு ‘பத்து நன்மைகள்’ என்றார்கள். மற்றொருவர் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று ஸலாம் கூறினார். நபியவர்கள் அவருக்கும் பதில் கூறி, ‘இருபது நன்மைகள்’ என்றார்கள். பிறகு மூன்றாம் நபர் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ’ (உங்களின் மீது சாந்தியும், இறைவனின் கருணையும், அவனின் அபிவிருத்திகளும் நிலவட்டும்) என்றார். அவருக்கும் நபி (ஸல்) பதில் கூறிவிட்டு ‘அவருக்கு முப்பது நன்மைகள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி), நூல்: திர்மிதி, அபூதாவூத்).

    சொர்க்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாழ்த்து மடல் தான் ‘ஸலாம்’ எனும் ஒரு அற்புதமான வார்த்தை. சொர்க்கம் முழுவதும் இந்த வாழ்த்து கோஷங்கள் திரும்பிய இடங்களிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக இறைவனே சொர்க்கவாசிகளிடம் காட்சி தந்து, அவனே அவர்களுக்கு ஸலாம் கூறுவான். இது எப்படிப்பட்ட பாக்கியம். இதுகுறித்து இறைவன் கூறுவதை கேளுங்கள்.

    ‘ஸலாமுன்’ என்று நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு’. (திருக்குர்ஆன் 36:58)

    ‘அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் ‘ஸலாமுன்’ (உங்களுக்குச் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக) என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும்’. (திருக்குர்ஆன் 33:44)

    இத்தகைய அற்புதமான வாழ்த்துக்களை எப்போது வேண்டுமானாலும் கூறலாம். எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஸலாம் என்று கூறலாம். ஸலாமுன் அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் கூறலாம். நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதைத்தான் அதிகமான சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்கள்.

    இந்த வாழ்த்து எல்லாச்சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றமானது. துக்கமாக இருப்பவர்களிடமும் கூறலாம். மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். காலை, மாலை, இரவு எந்த நேரங்களிலும் மொழியலாம். முஸ்லிம் அல்லாதோர் நமக்கு ஸலாம் கூறினால் நாமும் அவர்களுக்கு பதில் கூறவேண்டும். இதுதான் நபி (ஸல்) காட்டிய வழி. இதுதான் இறைநம்பிக்கையின் வழிமுறை. எந்த ஒரு வீட்டில் நுழைவதற்கும் அனுமதி பெறும் வார்த்தையாகவும் ‘ஸலாம்’ திகழ்கிறது.

    ‘சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் முதலில் ஸலாம் கூறட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘வாகனத்தில் செல்பவர், நடந்து செல்பவருக்கு முதலில் ஸலாம் சொல்லட்டும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘பசித்தவருக்கு உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும், அறிமுகம் இல்லாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்’ என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    இப்படிப்பட்ட ஸலாமை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். வெப்பமயமான பூமியை சாந்திமயமாக நிரப்ப வேண்டும். இவ்வாறு பரப்புவது இறைநம்பிக்கையின் ஒரு சிறு பகுதியாக அமைந்துள்ளது.

    ‘நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்காத வரை இறைநம்பிக்கையாளராக ஆகமுடியாது. உங்களுக்கு நான் ஒன்றை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் நீங்கள் ஒருவருக்கொருவர் பிரியமானவர்களாக மாறிவிடுவீர்கள். அதுதான் நீங்கள் உங்களுக்கிடையே ஸலாமை பரப்பிட வேண்டும்’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    வாருங்கள் ஸலாம் கூறுவோம். அதற்கு அழகான பதில் கூறுவோம். சாந்தியை வையகம் முழுவதும் பரப்புவோம். சாந்தி, சமாதானத்துடன் சுமுகமாக வாழ்வோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    “நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 50:16)
    இறைவன் அளித்த அறிவைக் கொண்டே, மனிதன் தனது மனதை ஆளுமை செய்கின்றான். உலக விஷயங்களை மனிதன் விளங்கிக்கொள்ள சில உதாரணங்கள் அவசியமாகிறது.

    சிக்கலான கருத்துகளை கூட, உதாரணங்கள் மூலம் எளிதில் விளங்க வைக்க முடியும். எனவே உதாரணத்தின் வாயிலாக கூறப்படும் உண்மைகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை சத்திய வேதமான திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக்கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக்கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர் களைத் தவிர வேறு எவரையும் இதனைக்கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை. (திருக்குர்ஆன் 2:26).

    ஞானத்தின் அடிப்படை என்பது, இறைவனை பற்றிய உண்மைகளை; சிந்தித்து உணர்வதே ஆகும். இந்த பிரபஞ்சம் எங்கும் காணப்படுகின்ற தோற்றங்கள் அனைத்தும், ஒரே பேராற்றலை கொண்டு தோன்றியது என்பதை உணர்வதும்; அந்த ஒரு பேராற்றலே, ஒவ்வொரு படைப்பிற்கும் அடிப்படையாக இருப்பதையும் அறிவதும் “இறைஞானம்” ஆகும்.

    இதனைஆய்வு செய்கின்ற மனிதர்கள், இறைவனின் தனித்துவத்தை நிச்சயமாக அறிந்து கொள்வார்கள். இந்த உலகில் கண்ணுக்குத் தெரியாத, எண்ணில் அடங்காத, நுண்ணுயிர்கள் நெருக்கமாக பரவி நின்று, இறைவனின் அருளால், தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த நுண்ணுயிர்கள் நல்ல பொருட்களை, கெட்டுப் போகச் செய்கின்றன. கெட்டுபோனப் பொருட்களை சாதாரண நிலைக்கு மாற்றுவதற்கான செயலையும் அவைகள் செய்து கொண்டே இருக்கின்றன.

    உதாரணமாக, நன்றாக கொதிக்க வைத்த பாலானது விரைவில் கெட்டுப்போவதற்கும், துர்நாற்றம் வீசும் கழிவுகள் அனைத்தும், சில நாட்களுக்கு பின் தனது துர் நாற்றத்தை இழந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போகவும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகளே காரணமாக இருக்கின்றது என விஞ்ஞான உலகம் கூறுகின்றது.

    இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த நுண்ணுயிர்களை இறைவன் படைக்கவில்லை என்றால், இந்த, உலகம் எப்போதோ, துர்நாற்றத்தால் நிரப்பப்பட்டு, மனிதர்கள் வாழத்தகுதியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கும்.

    இதை மனிதர்கள் சிந்தித்துப்பார்த்தால் இறைவனை பற்றிய அறிவை அவர்கள் விரைவில் பெற்றுக்கொள்வார்கள் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    “இறைவன் உயிருள்ளவற்றை, உயிரில்லாதவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். உயிரில்லாதவற்றை உயிருள்ளவற்றில் இருந்து வெளிப்படுத்துகின்றான். மேலும், பூமி இறந்து போனதன் பின்னர் அதற்கு உயிரூட்டுகின்றான். இதைப்போன்றுதான் நீங்களும் (மரணமான நிலையிலிருந்து) வெளிக்கொணரப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 30:19)

    இறைவன் கூறும் இத்தகைய சுழற்சிமுறை உலகில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது என்பதை இந்த இறைவசனம் நமக்கு சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

    இறந்துபோன ஓர் உடம்பில் இருந்து பல ஆயிரக்கணக்கான உயிர்கள் தோன்றி வெளிப்படுவதும், உயிரோடு திரிந்த உடலானது திடீரென உயிறற்று வீழ்ந்து மரணித்து செயலற்று விடுவதையும் நாம் கண்டுவரும் காட்சியாகும்.

    வறண்டு போய் இறந்து கிடக்கின்ற பூமியானது மழை பொழிந்த பின்பு பச்சை பசேல் என மீண்டும் உயிர் பெற்று எழுவதை போன்று மனிதர்களே, இறந்த பின்பு நீங்களும், உயிருடன் மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்பதை இந்த உதாரணத்தின் மூலமாக இறைவன் விளக்குகின்றான்.

    மற்றொரு வசனத்தில் இது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகிறான்:

    “வானங்கள் மற்றும் பூமியைப் படைத் திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன”. (திருக்குர்ஆன் 30:22)

    பிரமாண்டமான வானத்தை பற்றியும்; எண்ணற்ற படைப்புகளை தன்னகத்தே கொண்ட பூமியை பற்றியும்; அவைகள் அனைத்தும் எந்த விதமான முன் உதாரணங்களும் இன்றி இறைவனால் படைக்கப்பட்டிருப்பதை யார் சிந்தனை செய்வார்களோ அவர்கள், இறைவனை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வார்கள்.

    இன்னும் மனிதர்கள் பேசும் பல மொழிகளும் அவர்களது பல நிறங்களும் அவர்களை மற்ற மனிதர்கள், ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே தவிர அது மனிதர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை (பாகுபாடுகளை) கற்பிப்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    இறைவனுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், அவனது நெருக்கம் குறித்தும்,திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

    “நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 50:16)

    மனித மனங்களோடு இறைவனுக்கு உள்ள தொடர்பையும், பிடரியின் நரம்பை விடவும் இறைவன் மனிதர்களோடு மிக நெருக்கமாக இருப்பதையும், மனிதர்களில் எவர்கள் சிந்தித்து தெரிந்து கொள்வார்களோ அவர்களால், குர்ஆன் கூறும் உதாரணங்களையும், சத்திய செய்திகளையும் அதன் நேரிய வழிகாட்டுதல்களையும் புரிந்து கொண்டு இறை வனுக்கு நன்றி செலுத்தி அவனை வணங்கியே வாழ்வார்கள் என்பதே உண்மையாகும். அத்தகைய நற்பாக்கியத்தை நம்மனைவருக்கும் இறைவன் வழங்கி பேர் அருள் புரிவானாக, ஆமின்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவி புரிவது...’ குறித்த தகவல்களை காண்போம்.
    நன்மையான காரியங்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிடுவது இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக உள்ளது. உதவி என்பது பொருள் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அது உடல் சார்ந்தும் அமையலாம்.

    உண்மையான இறைநம்பிக்கை என்பது நற்கருமங்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதும், பாவமான காரியங்களுக்கு உதவிடுவதை நிறுத்துவதும்தான். இத்தகையவர்கள்தான் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும். இவர்களைப் பார்த்துதான் இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

    ‘இறைநம்பிக்கையாளர்களே, நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். இறைவனை அஞ்சுங்கள், நிச்சயமாக இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்’. (திருக்குர்ஆன் 5:2)

    எது நன்மை பயக்கும் காரியங்கள்?

    துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறி, அவரின் துன்பத்தை அகற்றுவது நன்மை தரும் காரியம். சிரமப்படுவோருக்கு உதவிடுவது நன்மை. ஒருவரின் குறைகளை மறைப்பது நல்ல காரியம். இவ்வாறு பிறரிடம் நாம் நடந்து கொள்ளும் போது அவ்வாறே இறைவனும் மறுமையில் நம்மிடம் நடந்து கொள்வான். நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோமோ அவ்வாறு நடத்தப்படுவோம்.

    ‘யார் இந்த உலகில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறுஉலகத் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய முன்வருகிறாரோ அவருக்கு இறைவன் இருஉலகிலும் உதவி செய்கிறான். யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறைகளை மறைக் கிறாரோ அவரின் குறைகளை இறைவன் இருஉலகிலும் மறைக்கிறான். ‘ஒருவன் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே, தர்மம் செய்ய பொருள் ஏதும் கிடைத்திடாத பட்சத்தில்...?’ எனக்கேட்க, ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். ‘அதுவும் முடியாத பட்சத்தில்’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவிட வேண்டும்’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

    யார் யாருக்கு என்ன உதவி தேவையோ அந்தந்த உதவிகளை நன்மையின் அடிப்படையிலும், மனிதநேயத்தின் அடிப்படையிலும் செய்து வருவதுதான் இறைநம்பிக்கையே தவிர, உதவி கேட்டு வருபவரை விரட்டியடிப்பதும், உதவமுடிந்தும் உதவாமல் வேடிக்கை பார்ப்பதும் இறைநம்பிக்கை அல்ல.

    ‘ஒரு இறைநம்பிக்கையாளரின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்குப் பங்கம் வரும்போது எவர் உதவி செய்யாமல் இருந்து விடுவாரோ, அவருக்கு இறைவனின் உதவி தேவைப் படும்போது இறைவன் அவரைத் தன் உதவியை விட்டும் தடுத்து விடுகின்றான். மேலும், ஒரு இறைநம்பிக்கையாளரின் மானம் பறிக்கப்படும்போது, அவரின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படும்போது எவர் உதவுகிறாரோ, அவருக்கு இறைவனின் உதவி தேவைப்படும்போது இறைவன் அவருக்கு உதவுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூத்)

    ‘எவர் தமது சகோதரனுடைய தேவையை நிறைவேற்றுகிறாரோ, அவருடைய தேவையை இறைவன் நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத்)

    தேவை உடையோருக்கு அவரின் தேவை சார்ந்து உதவ முன் வருவதும், அவருக்காக நடந்து போவதும் ஒரு இறைவணக்கமாக அங்கீகரிக்கப்படுகிறது. அது எத்தகைய இறைவணக்கம்? என நினைக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து விடுகிறது. இது குறித்த தகவலை பின்வரும் நபிமொழியின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    ‘யாரேனும் ஒருவர் தன் சகோதரனின் தேவைக்காக உதவிட நடந்து செல்வது பத்தாண்டுகள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாப்) இருப்பதைவிடச் சிறந்தது. ஒருவர் இறைவனின் திருப்தியை நாடி ஒரு நாள் இறையில்லத்தில் தங்கி இருந்தால், அவருக்கும், நரகத்திற்கும் இடையே மூன்று அகழிகளை இறைவன் தடையாக ஏற்படுத்தி விடுகின்றான். ஒவ்வொரு அகழியும் வானம், பூமிக் கிடையே உள்ள தூரத்தை விட விசாலமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : தப்ரானீ)

    நபி (ஸல்) அவர்கள் தலைசிறந்த உதவிகளை பட்டியல் போடுகிறார்கள். அடிமைக்கு அவரின் சக்திக்கு உட்பட்ட பணிகளை கொடுக்கும்படியும், சிரமமான பணியில் அவருக்கு உதவிடும்படியும், தொழில், விவசாயம், வியாபாரம் செய்பவருக்கு கடன், மானியம் கொடுத்து உதவிடுமாறும், வேலை இல்லாதோருக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும்படியும் நபியவர்கள் பரிந்து பேசுகிறார்கள். இப்படித்தான் ஒரு இறைநம்பிக்கையாளர் நன்மை பயக்கும் காரியங்களில் மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் தீர்மானிக்கிறது. இதுதான் இறைநம்பிக்கை எனவும் ஆதரிக்கிறது.

    அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) கூறுகிறார்:

    நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு ஏழை மனிதர் தமது பலவீனமான ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப்பக்கமும், இடப்பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனம் இல்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும். தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத் திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல்வேறு செல்வங்களைப் பற்றி தேவைக்கு அதிகமாக இருந்தால் இல்லாதவருக்கு அவற்றைக் கொடுக்கட்டும் என்று கூறினார்கள். எந்த அளவுக்கென்றால், தேவைக்கு அதிகமாக எஞ்சியிருக்கும் பொருளில் எங்களில் எவருக்கும் உரிமையில்லையோ என்று நாங்கள் கருதினோம்.’ (நூல்: புகாரி)

    பாவமான காரியங்களுக்கும், பகையுணர்வை தூண்டும் காரியங்களுக்கும், அநியாயங்களுக்கும் அணுஅளவு கூட உதவிக்கரம் நீட்டிவிடக் கூடாது. பாவமான காரியங்களிலிருந்து ஒருவர் விடுபட உதவி செய்யலாம். அவர் ஈடுபட உதவிடக் கூடாது.

    ‘எவன் ஒருவன் அநியாயக்காரன் என தெரிந்தும் அவனுக்கு உதவிட அவனுடன் கைகோர்த்து நடந்து சென்றால், அவன் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)

    ‘உனது சகோதரனுக்கு எல்லாநிலைகளிலும் உதவுங்கள். அவன் அநீதி இழைக்கக் கூடியவனாக, அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரியே’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘இறைத்தூதரே, அநீதி இழைக்கப்பட்டவனுக்கு நான் உதவுவேன்; அநியாயம் செய்பவனுக்கு நான் எப்படி உதவுவது?’ என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘அநியாயம் செய்வதை விட்டும் அவரைத் தடுங்கள். ஏனெனில், அநியாயம் செய்வதை விட்டும் அநியாயக்காரனைத் தடுப்பது அவனுக்குச் செய்யும் உதவியாகும்’ என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி), புகாரி)

    சமய நல்லிணக்கம், சமூக இணக்கம் மலர உதவலாம். இனவெறி, மொழிவெறி, நிறவெறி, மதவெறி, ஜாதிவெறி போன்றவற்றுக்கு உதவிக் கரம் நீட்டக்கூடாது.

    ‘தன் இனத்தாருக்கு அநியாயமான முறையில் உதவி செய்ய எவன் அழைக்கிறானோ, அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. தன் இனத்தாருடன் சேர்ந்து கொண்டு அநியாயமான முறையில் உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுபவன் நம்மைச் சார்ந்தவனல்ல. தன் இனத்தாரைக் காக்க அநியாயமான முறையில் சண்டையிட்டு மரணிப்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: சுபைர்பின் முத்இம் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறியைச் சார்ந்ததா?’ என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘தன் சமூகத்தாரை நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக, தன் சமூகத்தார் அநியாயமான முறையில் செயல்படுகிறார்கள் என்று தெரிந்த பின்பும் ஒருவர் தனது சமூகத்தாருக்கு உதவுவதே இனவெறியாகும்’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: புஸைலா (ரஹ்), நூல்: அஹ்மது)

    நாம் என்றென்றும் இறைநம்பிக்கையாளராக இருந்து நன்மைக்கு உதவி செய்வோம். உண்மையின் பக்கம் இருப்போம்.
    நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)
    மதம் என்பது மனங்களில் கட்டுண்டு கிடக்கும் தெய்வீகத் தன்மையை பிரித்தெடுத்து உணர்வுகளால் உணரச்செய்யும் உன்னத ஏற்பாடு ஆகும்.

    மதமென்பது தனிமனித வாழ்வில் ஊடுருவி மனிதனின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும்போதுதான் மார்க்கமாக சாத்தியம் பெறமுடியும். அந்த மார்க்கம் உலகின் இயற்கைக்கும் வாழ்வுக்கு இசைந்ததாக சட்ட திட்டங்களை வகுத்து அளித்திட வேண்டும்.

    இந்த வகையில் இஸ்லாம் மனித வாழ்க்கைக்கு இசைந்ததாகவும், மனிதம் மதிக்கும் மார்க்கமாகவும் திகழ்கிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு சட்டமும் மனிதர்களை சமத்துவ உரிமையின் கீழ் கொண்டுவருகிறது. அதே சிந்தனையுடன் ஓரிறையின் முன்னிலையில் அவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்துமாறு வேண்டுகிறது.

    ஆகவேதான் ஏக இறைவன் தனது திருமறையில் (16:51,52) இவ்வாறு கூறுகின்றான்:

    “அல்லாஹ் கட்டளையிடுகின்றான்; ‘இரண்டு கடவுளரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இறைவன் ஒரே ஒருவன்தான், எனவே, எனக்கு அஞ்சுங்கள்’. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்கே உரியவையாகும். மேலும், அவனுடைய தீன் (நெறி) மட்டுமே (இந்தப் பேரண்டம் முழுவதிலும்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சுவீர்களா?”

    ஒரு மார்க்கம் அதன் சிறப்பான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டுமென்றால் முதலில், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சீர்திருத்தக் கருத்துடனும் கட்டமைப்புடனும் களமிறங்க வேண்டும். இந்த வகையில்தான், மனிதத்தைத் தடம் பிறழச் செய்யும் தீண்டாமையை இம்மார்க்கம் முற்றிலும் தடை செய்துள்ளது.

    தொழில் சார்ந்த அடை மொழிப் பெயர்களோடு பல பிரிவுகள் இருக்கலாம். மார்க்கச் சிந்தனையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் தடம் பதிக்கலாம். ஆயினும் மனிதனை மனிதனே மதிக்காத தீண்டாமை ஒருபோதும் இருத்தல் கூடாது.

    ஆகவேதான் தீண்டாமையை தகர்த்தெறியும் காரியங்களில் இந்த மார்க்கம் கடுமையைக் கையாண்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் தொப்புள் கொடி உறவுகளே என்று நன்மாராயம் கூறுகிறது.

    நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு சென்றபின் முதல்கட்டமாக தீண்டாமையின் செருக்கினால் பிளவுற்று இருந்த அவ்ப் மற்றும் கஸ்ரஜ் எனும் குலத்தாருக்கு இடையில் சகோதர உறவை ஏற்படுத்தினார்கள். பின்புதான் தனது ஏகத்துவப் பணியை தொடங்கினார்கள்.

    இஸ்லாமிய மார்க்கம் மனிதத்தை மதிக்கும் தன்மையை மிகப்பெரும் கடமையாகவே கருதுகிறது. சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் சீர்கேடுகளிலிருந்து மக்களை விடுவித்து, நற்பண்புகளை நிலை நாட்டுவதுதான் நபிமார்களின் தலையாய பணியாக விளங்கியது. அதுவே ஏகத்துவ பணியாகவும் திகழ்ந்தது.

    இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள், ‘அளவுகளில் மோசடி செய்யும் சமூகத்தை சீர்திருத்தம் செய்வதற்காக அனுப்பப்பட்டார்கள்’. ஷுஐப் (அலை) அவர்கள் தன் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறினார்கள்:

    “என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன். மேலும் (நான் ஆற்ற விரும்புகின்ற அனைத்தும்) அல்லாஹ்வின் பேருதவியைப் பொறுத்தே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்துவிட்டேன். மேலும், (ஒவ்வொரு விஷயத்திலும்) அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்”. (திருக்குர்ஆன் 11:88)

    மனிதர்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமையையும் களைவதற்காகவே ஏனைய இறைத்தூதர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று திருமறை இயம்புகிறது.

    லூத் (அலை) அவர்கள், ‘மனித இயற்கைக்கு மாற்றமான கேடுகெட்ட ஒருபால் உறவில் உறைந்து கிடந்த சமூகத்தை சீர்திருத்தம் செய்ய அனுப்பப்பட்டார்கள்’.

    இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘சிலைகளை கடவுளாக்கி அதனூடாக மனிதர்களை அடிமைகளாக்கி அட்டூழியம் செய்து வந்த கொடுமைக்கார அரசர்களை நேர்வழிப்படுத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்’.

    உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று மனிதர்களைப் பிரித்து ஏழைகளையும் வறியவர்களையும் கேவலமாகப் பார்த்த சமூகத்தை சீர் செய்வதற்காக இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

    இஸ்லாம் மனிதத்தை எவ்வாறு கரை சேர்க்கிறது?

    பழங்காலம் முதல் இன்றுவரை மனித சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட செயல் மனிதர்களை மனிதர்களே அடிமைகளாகக் கருதும் மனோபாவம்தான்.

    ஜாஹிலிய்யா எனும் அஞ்ஞானக் காலத்தில், அடிமைகளில் அதிகம் விலை போகக் கூடியவர்கள் பெண்ணடிமைகளாகத்தான் இருந்தார்கள். அதேபோன்று ஆண் அடிமைகளுக்கு தாங்கள் நாடிய போதெல்லாம் துன்பங்களைக் கொடுத்து அதைப்பார்த்து இன்புறும் பொழுதுபோக்கு சாதனங்களாகப் பயன்படுத்தினார்கள்.

    அடிமைத்தனத்தில் ஊறித்திளைத்திருந்த அன்றைய அரேபிய சமூகத்தை மிக விரைவாக வேகமாக அதிலிருந்து இஸ்லாம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட அடிமைகளையே இஸ்லாமிய அரசின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாய் அமர்த்தி அழகு பார்த்தது இஸ்லாம். இதற்கு பிலால் (ரலி) அவர்களே முதல் சாட்சி.

    அதுமட்டுமல்ல, அடிமைப் பெண் தனது எஜமானருக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்தால் அவள் தானாகவே உரிமை பெற்று விடுகிறாள் என்ற சட்டத்தை வகுத்தளித்து பெண்ணுரிமையை ஊக்குவித்தது இஸ்லாம்.

    அபூபக்கர் (ரலி) அவர்களிடம், இஸ்லாத்தை ஏற்கும்போது அவரது சொத்து மதிப்பு 40 ஆயிரம் வெள்ளி நாணயங்கள். அதுவே மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அவர்களிடம் வெறும் 5 ஆயிரம் வெள்ளி நாணயங்களே இருந்தது. தனது செல்வத்தில் பெரும் தொகையை அடிமைகளை வாங்கி விடுதலை செய்வதற்காகவே செலவழித்தார்கள்.

    இன்றைய நவீன காலத்திலும் அடிமைத்தனம் மாறுபட்ட உருவங்களாய் உயிர்பெற்று வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. வாழ்க்கைத் தேவைகளும் வாழ்வாதாரங்களும் சுய உழைப்பின் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமே தவிர, பாமரர்களையும் வறியவர்களையும் சுரண்டுவதன் மூலமாக அல்ல.

    அதேவேளை முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, தொழிலாளர்களாக இருந்தாலும் சரி ஒவ்வொருவருடைய உரிமைகளும் சரிவர கொடுக்கப்படல் வேண்டும்.

    இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியர்வை உலரும் முன் ஊழியருக்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள்”. (நூல்: இப்னு மாஜா)

    ஏகத்துவ மார்க்கமென்பது ஓரிறை வணக்கத்தை முன்னிறுத்தி, மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வியல் சந்தர்ப்பங்களை வடிவமைத்திட போராடும் நலன் விரும்பியாகும். மனிதம் காத்திட உதவும் கருவியாய் இஸ்லாம் திகழ்கிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)

    மனிதம் மதிப்போம், வறியவர்களுக்கு உதவுவோம். அடிமைத்தனம் எந்த ரூபத்தில் வந்தாலும் சரியே அதனை அகற்றிட பாடுபடுவோம். அவ்வாறாயின் இறை உதவி காலமெல்லாம் நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    முஹம்மது பைஜ், திருச்சி.
    கடனை நிறைவேற்றாமல் இருப்பது சாதாரணமானது அல்ல. கடன்பட்டு இறந்து போனால், அவனுக்கு இறுதித் தொழுகையும், இறுதி பிரார்த்தனையும் கூட புரிவதற்கு இஸ்லாம் தடைவிதித்துள்ளது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான கடனை திருப்பி அடைப்பது குறித்த தகவல்களை காண்போம்.

    கடன் வாங்குவது, வாங்கிய கடனை திருப்பி அடைப்பது என்பதெல்லாம் பொருள் சார்ந்த, பொருளியல் சம்பந்தமாக இருந்தாலும், கடனை நிறைவேற்றுவதற்கு கடுமையான உடலுழைப்பும், பெரும் முயற்சியும் முதலுதவியாக அமைகிறது. இதனால் தான், இஸ்லாம் இதனை உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக அங்கீகாரம் செய்கிறது.

    கடன் கொடுப்பது, கடனை திருப்பி அடைப்பது என்ற இரண்டு அம்சங்கள் இருந்த போதிலும், கடன் கொடுப்பது சம்பந்தமாக பேசாமல் கடனை அடைப்பது சம்பந்தமாக இஸ்லாம் வலியுறுத்தி பேசுகிறது.

    கடன் கொடுப்பது நற்குணம். வாங்கிய கடனை திருப்பி, கொடுக்காமல் ஏமாற்றுவது துற்குணம். இந்த ஏமாற்று வேலை இறைநம்பிக்கையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவதுடன் அதில் அகலமான விரிசலையும் ஏற்படுத்தி விடுகிறது.

    கடனின் துவக்கம் எப்படி உருவாகிறது? அத்தியாவசியத் தேவைக்கும், அநாவசியத் தேவைக்கும் இடையே இயங்குவது, வாங்குவதுதான் கடனின் துவக்கப்புள்ளி.

    அத்தியாவசியத்திற்கு கடன் வாங்கிக் கொள்ளலாம். அநாவசிய செலவுக்கு கடன் வாங்காமல் இருப்பது நன்று. அவசியத்திற்கு வாங்கினாலும் அதையும் முறையாக, முழுமையாக திருப்பிச்செலுத்த வேண்டும்.

    ‘எந்த மனிதன் கடன்பட்டு, அதை நிறைவேற்றாத எண்ணமுடையவனாக இருக்கிறானோ அவன் திருடனாகத்தான் இறைவனை சந்திப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), நூல்: இப்னுமாஜா, பைஹகீ)

    ‘இறைவா, மண்ணறை வேதனையை விட்டும், தஜ்ஜாலின் (அதிசய மனிதன்) குழப்பத்தை விட்டும், வாழும்போதும், மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும், பாவங்களை விட்டும், கடனை விட்டும், உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்தார்கள்.

    ‘தாங்கள் கடனை விட்டும் அதிகமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் கேட்ட போது, ‘ஒரு மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்களித்து விட்டு அதை மீறுகிறான்’ என நபி (ஸல்) விளக்கமளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    நல்லவனை கூட கடன் பொய்யனாக மாற்றி விடுகிறது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூட கடனிலிருந்து விடுபட இறைவனிடம் வேண்டியுள்ளார்கள்.

    கடன் வாங்குவது தவறில்லை. கடனை பெறும் போது அதனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என நல்லெண்ணத்துடன் பெற வேண்டும். அடுத்தவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கடன் வாங்கக்கூடாது. பெரும்பாலானோர் வாங்கிய கடனையே மறந்து விடுவார்கள். ஞாபகம் வந்தாலும் அதை கொடுக்கவே மாட்டார்கள். இவர்கள் அடுத்தவனின் பொருளை சுரண்டி, அவனை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அழிந்து போவது என்னவோ இவர்கள் தான். இது குறித்து நபியின் பேச்சு சிந்தனைக்குரியது.

    ‘எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட் களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி, அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ, அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி).

    ‘அல்லாஹ் அவனது கடனை செலுத்துவான்’ என்பது அவனுக்கு ஏதேனும் வழியில் பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகும். இல்லையெனில் கடனை அடைக்காமல் மரணித்துவிட்டால், அவனது பாவங்களை மன்னிப்பது ஆகும். ‘இறைவன் அவனை அழித்து விடுவான்’ என்பது அவனது பொருளாதாரத்தை அபிவிருத்தியில்லாமல் ஆக்கி விடுவான் என்பதாகும்.

    கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு. அதேநேரத்தில், கடன் கொடுத்தவன் கடனாளியை அவமானப்படுத்தக் கூடாது; அசிங்கப்படுத்தக் கூடாது; அடிக்கக்கூடாது; ஆபாசமாக திட்டக்கூடாது. இதுதான் கண்ணியமான நடைமுறை. இருவரும் தமக்கு அளிக்கப்பட்ட உரிமையில் எல்லை மீறாமல் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து, கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். ‘அவரை விட்டு விடுங்கள். கடன்கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது. அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள்’ என நபி (ஸல்) கோரினார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். கடனை அழகியமுறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்’ என்றார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    கொடுத்த கடனை அவ்வாறே வாங்க வேண்டும். கொடுத்ததை விட அதிகம் வாங்குவதும், கொடுப்பதும் வட்டி ஆகும். இது இஸ்லாத்தின் பார்வையில் தடை செய்யப்பட்டது.

    கஷ்டப்படுவோருக்கு கடன் கொடுப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. தர்மத்தை விட தலைசிறந்ததாக கடன் கொடுப்பதை இஸ்லாம் தேர்வு செய்கிறது.

    ‘ஒரு பொருளை தர்மமாக கொடுப்பதை விட கடனாக கொடுப்பது தலைசிறந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: பைஹகீ) இது குறித்த நபிகளார் கூறியிருப்பதாவது:-

    ‘நான் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட போது சொர்க்கத்தின் வாசலை கண்டேன். அதில் இவ்வாறு ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. ‘தர்மம் செய்வதற்கு பத்து மடங்கு நன்மையுண்டு. கடன் கொடுப்பதற்கு பதினெட்டு மடங்கு நன்மையுண்டு’.

    ‘ஜிப்ரீலே (அலை) தர்மத்தை விட கடன் சிறந்ததாக இருப்பதின் நோக்கம் என்ன?’ என்று நான் கேட்டேன்.

    அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘யாசகம் கேட்பவர் எதை கேட்பாரோ அது அவரிடமே இருக்கும். கடன் கேட்பவர் அவர் தமது தேவையின்றி கடன் கேட்பதில்லை’ என இவ்வாறு பதில் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), இப்னுமாஜா)

    கடன் பெறுபவர் தம்மிடம் இல்லாத ஒரு தேவைக்காக கடன் கேட்கிறார். அவ்வாறு ஒருவர் கடன் வழங்குவதின் மூலம் அவரின் தேவை நிறைவேறி விடுகிறது. வாங்கிய கடனை திருப்பி அடைப்பது அவரின் கடமை. எனினும் கடன் சுமையிலிருந்து மீண்டு வர அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். கடன் கொடுத்தவர் கடனாளியை நிர்பந்தப்படுத்தாமல் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த அவகாசத்திலும் கடனாளி கடனை நிறைவேற்ற இயலாத போது மனித நேய அடிப்படையில் கடன் கொடுத்த நல்மனம் படைத்தவர் அவரின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இது கடன் கொடுப்போருக்கு இஸ்லாம் கூறும் நற்போதனையாகும். இவ்வாறு கடனாளியிடம் நடந்து கொள்ளும் போக்கு இறைவனை வெகுவாக கவர்ந்து விடுகிறது.

    ‘ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (மண்ணறையில் வைத்து) ‘நீ உலகில் என்ன நன்மை செய்து வந்தாய்?’ என்று விசாரிக்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து, அவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்’ என்று கூறினார். அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஹூதைபா (ரலி), நூல்: புகாரி)

    ‘கடன்பட்டவர் தமது கடனை நிறைவேற்றும் வரை அவருடன் இறைவன் உள்ளான். எனினும், அவர் இறைவன் வெறுக்கும் காரியங்களுக்காக அவர் கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஜாபர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

    கடன் வாங்குவது குற்றமல்ல. ஆனால் குற்றம் செய்வதற்கு கடன் வாங்குவது நல்லதல்ல. சுபகாரியங்களுக்கு கடன் வாங்குவது சுபக்கடன். தவறு செய்வதற்கு கடன் வாங்குவது அது அசுபக்கடன். இதில் இறைவனின் உதவியை எதிர்பார்க்க முடியாது.

    இந்த உலகை விட்டு மறைவதற்கு முன்பு தான் பட்ட கடனை அடைத்துவிட வேண்டும். முடியாது போனால் வாரிசுகளிடம் அடைத்துவிடும்படி மரணசாசனம் கூறிவிட வேண்டும். கடனாளியாக மரணிக்கும் போது இறைவனின் சுகபோக மறுமை வாழ்வும் கிட்டாது; இறைமன்னிப்பும் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ‘இறைநம்பிக்கையாளரின் உயிர் அவரது கடன் நிறைவேற்றப்படும் வரை (நல்லோர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுகபோகமான, அருள்நிறைந்த பதவியை அடைய முடியாமல்) தொங்கிக் கொண்டிருக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    கடனை நிறைவேற்றாமல் இருப்பது சாதாரணமானது அல்ல. கடன்பட்டு இறந்து போனால், அவனுக்கு இறுதித் தொழுகையும், இறுதி பிரார்த்தனையும் கூட புரிவதற்கு இஸ்லாம் தடைவிதித்துள்ளது. அந்தளவுக்கு கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவது பெரிய பாவமாகும். அப்படிப்பட்டவனிடம் எங்கே இறைநம்பிக்கை இருக்கும்? இவன் புகலிடம் நரகமே.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    சமூக சீர்திருத்தம் என்பது ஏதோ ஒருமணி நேரத்தில் முடிந்து போய் விடக்கூடிய நிகழ்வு அல்ல. நாள்தோறும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யவேண்டிய பெரும் அறப்பணி அது.
    மனிதர்களிடையே அவ்வப்போது சிறுசிறு தவறுகள் நிகழ்வதும், அவற்றை சரிசெய்வதும் நடைமுறையிலுள்ள ஒன்று தான். சிறு தவறுகள் கூட செய்யாதவர்கள் என்பவர்கள் தீர்க்கதரிசிகள் தானே தவிர நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களல்ல.

    அன்றாட வாழ்வியல் ஒழுக்கங்கள், வணிக நடைமுறைகள்,சமூகத்தில் பரவியுள்ள மூடப்பழக்க வழக்கங்கள், சமூகக் குற்றங்கள், கொடுமைகள், சீரழிந்து வரும் மனிதப்பண்பாடுகள் என நாம் சீர்திருத்துவதற்கு நம்முன் எண்ணற்ற காரியங்கள் பல குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா சென்று விட முடியாது. நம்மால் முடிந்த வரை அவற்றில் ஒன்றையேனும் நாம் சீர் செய்ய வேண்டும்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் குறிப்பிடும்போது “இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்” (11:117) என்று தெரிவிக்கிறது.

    மேலும், “எவர் மன்னித்து விடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை” என்றும் திருக்குர்ஆன் (42:40) குறிப்பிடுகிறது.

    எவரிடம் மன்னிக்கும் நற்குணமும், சீர்திருத்தும் பண்பும் இல்லையோ அவர் இறைவனின் பார்வையில் அநியாயக்காரர் தான் என்று இந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது.

    இறையன்பைப் பெறுவதற்கு சீர்திருத்தப் பேச்சு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “மனிதர்களின் பெரும்பாலான ரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் சில பேச்சுக்களைத் தவிர (அவற்றில் நன்மை உண்டு). மேலும் எவர் அல்லாஹ்வின் அன்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ, அவருக்கு நாம் விரைவில் மகத்தான நற்கூலியை வழங்குவோம்”. (திருக்குர்ஆன் 4:114)

    “இறை நம்பிக்கை கொண்டவர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது”. (திருக்குர்ஆன் 49:6)

    எனவே, சமூக சீர்திருத்தம் என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. அதில் நாம் மிக கவனமாக, கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு பிரிவுச் சமூகமே பெரும்சிக்கலுக்கும், பெரும் சிரமத்துக்கும் ஆளாகிவிடும்.

    இதனால் தான் “நீங்கள் என்றென்றும் மென்மையைக் கையாளவேண்டும்” என்று இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “(நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நன்நடத்தையையும் மேற்கொள்வீராக, மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக. இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக.” (திருக்குர்ஆன் 7:199)

    “அ(ந்த எகிப்திய மன்ன)வனிடம், (மூசாவே) நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது அஞ்சக்கூடும்”. (திருக்குர்ஆன் 20:44)

    சீர்திருத்தம் என்பது எதில் இருக்க வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

    “மேலும், மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான (நபி) ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: ‘என் சமுதாயத்தார்களே, அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள், அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையிலேயே நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாயின் இதில் தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது”. (7:85)

    நமது வாழ்வை நமது வணிகம் தான் முதலில் கட்டமைக்கிறது. எனவே ஒருவனின் கொடுக்கல், வாங்கல் சரியாக, முறையாக, துல்லியமாக, தூய்மையாக, நேர்மையாக, இருந்தால் தான் சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும், சமாதானமும் உண்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனால் தான் ‘சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு அங்கு குழப்பம் விளைவிக்காதீர்கள்’ என்று திருக்குர்ஆன் இவ்வாறு அழுத்தமாகக் கூறுகிறது:

    “மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள். திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது”. (7:56)

    மக்களிடையே சீர்திருத்தம் செய்வது பற்றிய நபி மொழி வருமாறு:

    “தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை விட உயரிய செயல் ஒன்று உள்ளது, அதை நான் கூறட்டுமா?”.

    “கூறுங்கள் நாயகமே”.

    “மக்களுக்கிடையே நீங்கள் சீர்திருத்தம் செய்வது தான் அது” என்றார்கள். (நூல்: அபூதாவூது, திர்மிதி, மிஷ்காத்)

    நாம் இறைக்கடமைகளை செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே மக்களுக்கு மத்தியில் நாம் செய்ய வேண்டிய சீர்திருத்தப் பணிகளும் மிக முக்கியமானவை. சரி, சீர்திருத்தத்தை நாம் எங்கிருந்து ஆரம்பிப்பது?

    எங்கிருந்தோ அல்ல, நம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம். நமது வீட்டுக்குள் எவ்வளவு சீரழிவுகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் சீர்படுத்துவது எப்போது?

    சமூக சீர்திருத்தம் என்பது ஏதோ ஒருமணி நேரத்தில் முடிந்து போய் விடக்கூடிய நிகழ்வு அல்ல. நாள்தோறும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யவேண்டிய பெரும் அறப்பணி அது. இன்னொரு வகையில் நமது சமூகத்தை முன்னேற்றும் சேவையும் கூட.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சத்தியங்களில் நேர்மையாக இருப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.
    பொதுவாக மனிதர்கள் தாங்கள் கூறுவதை மற்றவர் நம்பவேண்டும் என நினைப்பார்கள். அதனை நியாயப்படுத்துவதற்காக கொண்டு வரும் வார்த்தை தான் ‘சத்தியம்’ என்ற சொல்.

    சத்தியம் என்ற வார்த்தைக்கு தனி மரியாதை உண்டு. அதை கூறுபவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் உண்டு. ஒருவன் தன் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு தம்மிடம் இரு சாட்சிகளோ, சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத இக்கட்டான நிலையில் அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே நம்பிக்கையான சொல் ‘சத்தியம்’, ‘சத்தியமாக’ என்பது மட்டுமே.

    சத்தியம் என்றால் தமிழில் உண்மை, உறுதி என்று பொருள். இதே சொல்தான் அறுதியிட்டு உறுதியாக கூறப்படும் விஷயங்களுக்கு முன்மொழியப்படுகிறது. ஆனால், அரபியில் ‘சத்தியம்’ என்பதற்கு ‘யமீன்’ என்றும், ‘உண்மை’ என்பதற்கு ‘ஹக்’ என்றும் தனித்தனியான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ‘யமீன்’ என்றால் ‘வலதுகரம்’ என்பது பொருள். சத்தியம் செய்வதற்கு பெரும்பாலும் வலதுகரம் பயன்படுத்துவதால், இந்த வார்த்தை வந்தது.

    உண்மையும், பொய்யும் ஒன்றாக கலந்துவிட முடியாது. எனினும் சத்தியத்தில் உண்மை மட்டுமே உரைக்கப்படும் என்பதில் எவ்வித கட்டாயமும் கிடையாது. அதில் பொய்யை கலப்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவேதான் இஸ்லாம் உண்மையை வேறாகவும், சத்தியத்தை வேறாகவும் பிரித்தாளுகிறது.

    சத்தியத்தில் இஸ்லாம் சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்த நெறிமுறைகளை முறையாக பேணும்போது அது நேர்மையான சத்தியமாக வடிவம் பெற்றுவிடுகிறது.

    ஒரு முஸ்லிம் சத்தியம் செய்யும் போது ‘இறைவனின் மீது சத்தியமாக’ என்று மட்டுமே கூறவேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரின் மீதும், வேறு எந்தப் பொருளின் மீதும் சத்தியம் செய்யக்கூடாது.

    தாயின் மீது சத்தியம், தந்தை மீது சத்தியம், மனைவி மீது சத்தியம், குழந்தை மீது சத்தியம், திருக்குர்ஆன் மீது சத்தியம், கஅபா மீது சத்தியம் என்றெல்லாம் சத்தியம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

    சத்தியத்தில் நேர்மையை கடைப்பிடிப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதில் இறைவனை விடுத்து மற்றவரை உள்ளே இழுப்பது இறைநம்பிக்கையை தகர்க்கும் இணைவைப்பான காரியமாகும். இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

    “நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் இறைவனின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

    “சத்தியம் செய்பவர் இறைவன் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

    “எவர் அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு சத்தியம் செய்து விட்டாரோ அவர் இறைவனுக்கு இணை கற்பித்துவிட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: திர்மிதி)

    “இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிப்பதாவது:

    ‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக்கொள்வதற்காக திட்டமிட்டு (பொய்ச்) சத்தியம் செய்கிறவன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவன் சந்திப்பான்’ என நபி கூறினார்கள். அப்போது அந்தக் கருத்தை உறுதிபடுத்தும் விதமாக இறைவன் ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 3:77) எனும் வசனத்தை இறைவன் அருளினான்.

    இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அஷ்அஷ் (ரலி) வந்து மக்களை நோக்கி ‘இப்னு மஸ்ஊத் (ரலி) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இறைவனின் மீதாணையாக, இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. எனக்கும், ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் (கிணறு) தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் எனது (கிணறு) உரிமையை மறுத்துவிடவே நான் நபிகளாரிடம் வழக்கை கொண்டு சென்றேன்.

    ‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘உன் வாதத்திற்கான ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன்.

    உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரைப் பார்த்து, ‘அப்படியென்றால் நிலம் என்னுடையதுதான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று சத்தியம் செய் என்று கூறினார்கள்.

    நான் ‘இறைத்தூதர் அவர்களே அவ்வாறென்றால் அந்த யூதன் தயங்காமல் பொய்ச் சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவான்’ என்றேன். அப்போதுதான் மேற்கூறப்பட்ட வசனம் இறங்கியது”. (நூல்: புகாரி)

    “மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன், என்று இறைவன் கூறினான். ‘ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்:புகாரி)

    ஒருவரின் சொத்தை அபகரிப்பதற்கு பொய்ச் சத்தியம் செய்வது எவ்வளவு பெரிய பாவம்? மறுமை நாளில் அவன் மீது இறைவனின் கோபமும், சாபமும் ஏற்பட்ட நிலையில் தான் அவன் இறைவனை சந்திப்பான். அவனுக்கு கடுமையான வேதனை கொடுத்து இறைவன் தண்டிப்பான்.

    அது என்ன வேதனை?

    “பூமியில் தனக்கு உரிமையற்ற நிலத்தை (பொய் சத்தியம் செய்து) அபகரிப்பவன் மறுமைநாளில் ஏழு பூமிகள் வரை அவன் பூமிக்குள் செருகப்படுவான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    சரக்கை விற்பதற்காக பொய் சத்தியம் செய்வதும் பெரும்பாவமாகும்

    “பொய்ச் சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால் அபிவிருத்தியை அது அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    நேர்மையான முறையில் சத்தியம் செய்வதை இஸ்லாம் இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக கருதுகிறது. ஒருவர் சத்தியம் செய்து, அதைவிடச் சிறந்ததை கண்டால் செய்த சத்தியத்தை முறித்துவிட்டு, அதற்கான பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும். இறைநம்பிக்கையை பாழாக்கும் பொய் சத்தியத்தை எக்காரணத்தைக் கொண்டு செய்தல் கூடாது. அதை கைவிடுதலே சாலச்சிறந்தது.

    இதையே திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வற்புறுத்துகின்றன.

    மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    ஏதேனும் பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி உங்களுக்குக் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ளுமுன் அச்செய்தியைக் கொண்டு வருபவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
    இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்வு, நம்மில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய உயரிய நாகரிகத்தைக் கற்றுத்தருகிறது. சந்தேகங்களாலும் உறுதியற்ற தகவல்களாலும் நமது நிம்மதியையும் அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்துவிடக் கூடாது எனும் பாடத்தைச் சொல்லித்தருகிறது.

    நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமலானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் (இறைவனுக்காக இறைத்தூதர் காட்டிய வழிமுறையில் குறிப்பிட்டகாலம் பள்ளிவாசலில் தங்கும் ஒருவகை வழிபாடு) இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன்.

    அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களுடைய வீட்டு வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் (மதீனாவாசிகள்) இருவர் கடந்து சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் முகமன் (சலாம்) கூறினர்.

    அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், “சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸபிய்யா பின்த் ஹுயை அவர்கள்தான்” என்று கூறினார்கள்.

    அவ்விருவரும் ஆச்சரியத்துடன், “அல்லாஹ் தூய்மையானவன் (ஸுப்ஹானல்லாஹ்), அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!)” என்றனர்.

    இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் பெரிய விஷயமாகப்பட்டது.

    அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக சைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கின்றான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக்கூறினார்கள். (நூல்: புகாரி)

    எனது அருமை மனைவியிடம்தான் நான் உரையாடிக்கொண்டிருக்கின்றேன் என்பதை அவ்விரு தோழர்களையும் அழைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தேவையற்ற பின்விளைவுகள், புரளிகள், மனவேதனைகள் ஏற்பட்டிருக்கும்.

    அவ்விருவரில் யாரேனும் ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருக்கின்றார் என்று எவரேனும் ஒருவரிடம் சொன்னால்கூட போதும், அவ்வளவுதான்... பின்னர் அந்த செய்திக்குக் கால் முளைத்து கை முளைத்து ஊதிப் பெரிதாக்கப்பட்டு, தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும். ஆகவேதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முளையிலேயே அதனைக் கிள்ளி எறிகின்றார்கள்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறிதொரு தடவை இவ்வாறு கூறினார்கள்: “ஆதாரமில்லாமல் அடுத்தவரைச் சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும்”. (நூல்:புகாரி)

    சந்தேகங்களால் வாழ்வை தொலைத்தவர்கள்தான் எத்தனை எத்தனை. சந்தேகங்களால் துண்டாடப்பட்ட நட்புகள் தான் எத்தனை எத்தனை. சந்தேகங்களால் பிரிந்துவிட்ட தம்பதிகள்தான் எத்தனை எத்தனை. சந்தேகத்தால் உடைந்த குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை. இந்த சந்தேகங்களின் உண்மைத் தன்மையை உரசிப்பார்த்தால் பெரும்பாலும் எல்லாம் வெறும் ஊகங்களாகவே இருந்திருக்கும். எதுவும் உண்மையாக இருந்திருக்காது.

    பொதுவாகவே சந்தேகங்கொள்வது தடுக்கப்படவில்லை. மாறாக மிக அதிகமாக சந்தேகங்கொள்வதும் எல்லாவிதமான சந்தேகங்களைப் பின்பற்றுவதும்தான் தடுக்கப்பட்டுள்ளன.

    காரணம் இதுதான்: அதாவது, அடுத்தவரைக் குறித்து எவ்வித காரண காரியமும் இன்றி சந்தேகப்படுவது அல்லது மற்றவர்களைப்பற்றி கருத்துக் கூறும்போது, எப்போதும் தவறான சந்தேகத்திலிருந்தே ஆரம்பிப்பது, அல்லது வெளிப்படையாக எவர்களின் நிலை, அவர்கள் நல்லவர்கள்; கண்ணியமானவர்கள் என்று காட்டுகிறதோ அவர்களின் விஷயத்தில் தவறாகச் சந்தேகிப்பது.

    இதேபோன்று ஒரு மனிதனுடைய சொல்லிலோ செயலிலோ நன்மைக்கும் தீமைக்கும் சமவாய்ப்பு இருக்கும்போது, நாம் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அவனைத் தீயவன் என்றே கருதுவதும் பாவச்செயலாகும்.

    இறைவன் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே, அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன”. (திருக்குர்ஆன் 49:12)

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது. தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள். எனவே யார் சந்தேகத்திற்கு இடமானவற்றை தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடுகிறார்)”. (நூல்: புகாரி)

    அவ்வாறே யாரேனும் ஒருவர் ஒரு செய்தியை நம்மிடம் கூறினால் கண்ணை மூடிக்கொண்டு உடனே அதை நம்பிவிடவும் கூடாது. உடனடியாக அந்தச் செய்திக்குக் கை-கால் வைத்து வர்ணம் தீட்டி பூசி மொழுகி அடுத்தவரிடம் அளந்துவிடக் கூடாது. அதன் உண்மைத் தன்மையை தீர விசாரிக்க வேண்டும்.

    அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது”. (திருக்குர்ஆன் 49:6)

    இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு ஓர் அடிப்படை வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி உங்களுக்குக் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ளுமுன் அச்செய்தியைக் கொண்டு வருபவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் கொடுத்த செய்திக்கு ஏற்ப செயல்படுவதற்குமுன் உண்மை நிலவரம் என்ன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

    பெரும் பாவங்களுக்கும், சிறு பாவங்களுக்கும் பரிகாரங்கள் இஸ்லாத்தில் உண்டு. அவைகளை முறையாக நிறைவேற்றும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    குற்றப்பரிகாரம் என்பது பாவம் செய்த ஒருவரின் பாவத்தை போக்க ஏதேனும் பரிகாரம் தேடுவதாகும்.

    ஒருவர் குற்றம் புரிந்துவிட்டால், முதலில் அவர் இறைவனிடம் உண்மையான முறையில் பாவமன்னிப்புத் தேட வேண்டும். மேலும் சில வகையான குற்றங்களுக்கு பரிகாரங்கள் தேடவேண்டியது இருப்பதால் அந்தந்த குற்றங்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் குற்றப்பரிகாரங்களையும் நிறைவேற்றுவது அவசியமாக உள்ளது.

    இதுவும் இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த பகுதியாக உள்ளது. இதைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது கட்டாயமாக உள்ளது.

    மூடநம்பிக்கை

    மனைவியைத் தாயுடன் ஒப்பிடுவது அன்றைய அறியாமைக்கால மக்களின் மூடநம்பிக்கையாக இருந்து வந்தது. தம் மனைவியைப் பிடிக்காத போது ‘உன்னை என் தாயைப்போல கருதிவிட்டேன்’ என்று கோபத்தில் சத்தியம் செய்து கூறிவிட்டு மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்தமாட்டார்கள்.

    இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்த சத்தியத்தை முறித்துவிட்டு நான்கு மாதங்களுக்குள் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும். மேலும் பின்வரும் பரிகாரத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி இந்த மூடநம்பிக்கையை இஸ்லாம் தகர்த்து விடுகிறது.

    ‘உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர். இறைவன் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறிவிட்டு, தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்கு கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது இறைவனையும், இறைத்தூதரையும் நீங்கள் நம்புவதற்கு ஏற்றது. இவை இறைவனின் வரம்புகள். (அவனை) மறுப்பவருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.’ (திருக்குர்ஆன் 58:2,3,4)

    அதுபோல, ‘தமது மனைவியுடன் இனி கூடுவதில்லை’ என்று சத்தியம் செய்தவர், அந்த சத்தியத்தை முறிக்கும் போது அதற்குரிய பரிகாரத்தையும் நிறைவேற்றிட வேண்டும்.

    ‘தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையாளனாகவும் இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 2:226)

    ரமலான் நோன்பு

    ரமலான் மாத கடமையான நோன்பு நோற்பவர் நோன்பின் இடையில் தமது மனைவியுடன் உறவுகொண்டால், அவர் தமது குற்றப்பரிகாரமாக மேற்கூறப்பட்டதையே நிறைவேற்ற வேண்டும்.

    ‘தவறாக அன்றி, ஒரு இறைநம்பிக்கையாளர் பிறிதொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு இறைநம்பிக்கையாளரை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக இறைநம்பிக்கை உடைய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அவனது குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலே தவிர; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச்சார்ந்த இறைநம்பிக்கையாளராக இருந்தால், இறைநம்பிக்கை உடைய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால், அவன் சொந்தக்காரருக்கு நஷ்டஈடு கொடுப்பதுடன், இறைநம்பிக்கை உடைய ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், இறைவனிடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும். இறைவன் நன்கறிந்தவன்; பூரண ஞானமுடையவன்.’ (திருக்குர்ஆன் 4:92)

    ஹஜ் கடமையில் தவறு நேர்ந்தால்...

    ‘ஹஜ்ஜையும், உம்ராவையும் இறைவனுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) தியாகப் பிராணியை அனுப்பிவிடுங்கள்; அவை அந்த (குர்பான் செய்யப்படும்) இடம் அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும் உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ, அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ (தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் செய்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவுக்கு குர்பானி கொடுத்தல் வேண்டும். அவ்வாறு இயலாதபட்சத்தில் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் தமது ஊர் திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.’ (திருக்குர்ஆன் 2:196)

    ஒருவர் ஹஜ் செய்யும் போது, அதன் கடமையை முழுமையாக நிறைவேற்றும் முன்பு, ஆசையுடன் தமது மனைவியுடன் உறவுகொண்டால், அவரின் ஹஜ் முறிந்துவிடும். என்றாலும் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்து முடிக்க வேண்டும். அடுத்த வருடத்தில் ஹஜ்ஜை திரும்ப நிறைவேற்ற வேண்டும். மேலும், செய்த குற்றத்திற்கு குற்றப் பரிகாரமும் நிறைவேற்ற வேண்டும். அது என்னவெனில் ஒரு ஒட்டகத்தை அறுத்து பலியிட வேண்டும். அது முடியாத போது ஹஜ் காலத்தில் மூன்று நோன்பும், ஊர் திரும்பியதும் ஏழு நோன்பும் நோற்க வேண்டும்.

    சிறுபாவங்கள்

    நாம் நமது வாழ்வில் பெரும் பாவங்கள் செய்யும்போது, அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கோருகிறோம். அந்த குற்றங்களுக்காக தகுந்த குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுகிறோம். இது ஒருபுறம் இருந்தாலும், நமது வாழ்வில் சிறு சிறு பாவங்கள் நிகழத்தான் செய்கிறது. இந்த பாவங்களுக்கு, நாம் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் குற்றப்பரிகாரங்களாக அமைந்து விடுகிறது.

    ‘ஐங்காலத் தொழுகைகள், ஒரு வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையிலிருந்து, மறு வெள்ளிக்கிழமை வரை, ஒரு வருட ரமலானிலிருந்து மறுவருட ரமலான் வரை இவற்றுக்கு மத்தியில் பெரும் பாவங்களை தவிர்ந்திருந்தால், இவைகள் சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு பரிகாரங்களாக அமைந்து விடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘அரபா நாளின் நோன்பு கடந்த வருடம், மற்றும் எதிர் வரும் வருடம் ஆகிய இரு வருடங்களின் (சிறு) பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். மேலும், முஹர்ரம் மாதம் பத்தாம் (ஆஷூரா) தினம் நோன்பு நோற்பது ஒரு வருட (சிறு) பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இவ்வாறு சில பெரும் பாவங்களுக்கும், சிறு பாவங்களுக்கும் பரிகாரங்கள் இஸ்லாத்தில் உண்டு. அவைகளை முறையாக நிறைவேற்றும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. எனவே இறைநம்பிக்கையை பாதுகாக்க குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவோம். பாவங்களிலிருந்து விடுதலை பெறுவோம்.

    திருக்குர்ஆனில் புவியியல், கணக்கியல் வானவியல், கருவியல் விஞ்ஞானவியல், மெஞ்ஞானவியல் போன்ற அனைத்து இயல்களும் நிறைந்து காணப்படுகிறது.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்டது தான் சத்திய வேதமான திருக்குர்ஆன். புனிதம் நிறைந்த திருக்குர்ஆனை அருளியது குறித்து அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்”. (திருக்குர்ஆன் 2:2)

    “(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது”. (திருக்குர்ஆன் 7:203)

    இம்மையிலும், மறுமையிலும் மனிதனுக்கு நேர்வழிகாட்டும் இறுதி வேதமான இதில் உள்ள அறிவியல் உண்மைகளைக்கண்டு 20-ம் நூற்றாண்டில் வாழுகின்ற அறிவியல் ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.

    ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நபிகளார் எழுதப்படிக்க பழகாதவர்களாய் இருந்தார்கள். அவர்களால் வியக்கதக்க விஞ்ஞான பேருண்மைகளை தனிப்பட்ட முறையில் கூறியிருக்க வாய்பில்லை.

    இந்த பிரபஞ்சத்தில் பேராற்றல் மிக்க இறைவனின் திருத்தூதராக நபிகளார் திகழ்ந்தார்கள். இறைவனும், நபிகளார் மூலம் திருக்குர்ஆனை உலக மக்களுக்கு அருளினான்.

    இறையருளால், இதய வெளிச்சம் பெற்ற, ஆன்மிக ஆற்றல் மிக்கவராக நபிகளார் திகழ்ந்தார்கள். அவர்கள் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆன் எக்கால மக்களும் பின்பற்றி நேர்வழியடைய தகுதி மிக்க ஒன்றாகவே இருக்கின்றது.

    அன்றும் இன்றும் இனி என்றும் திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதுகுறித்த சில வசனங்களை பார்ப்போம்.

    திருக்குர்ஆனின் ஆரம்பமாக உள்ள வார்த்தை- ‘அல்ஹம்ந்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்பதாகும். ‘எல்லாப்புகழும் அகில உலகங்களின் ரட்சகனான அல்லாஹ்விற்கே உரியது’ என்பது இதன் பொருளாகும்.

    இதில், ‘அகில உலகங்கள்’ என்ற வார்த்தையைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால், நாம் வாழுகின்ற இந்த சூரிய குடும்பத்தை போன்று பல சூரிய குடும்பங்கள் இருப்பதாக சிலபல ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த ஆய்வுகள் தற்போது நடந்துவரும் நிலையில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    உன் இறைவன் என் இறைவன் என இறைவனை பாகுபடுத்தி பிரிக்காமல் திருக்குர்ஆன், “நம் எல்லோருக்கும் இறைவன் ஒருவன் தான், அந்த இறைவன் தான் நாம் காணும் உலகத்தையும் நாம் காணாத பல உலகங்களையும் படைத்தவனாவான் என்றும் அத்தகைய இறைவனுக்கே எல்லாப் புகழும்” என்றும் பறைசாற்றுகின்றது.

    திருக்குர்ஆனின் மற்றொரு வசனம் (55:33) இவ்வாறு பேசுகின்றது:

    “ஜின், மனித கூட்டத்தார்களே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை நீங்கள் கடந்து செல்ல ஆற்றல் பெறுவீர்களாயின் (நீங்கள்) கடந்து செல்லுங்கள். ஆனால் (வல்லமை மிக்க) இறைவனின் அருள் கொண்டே தவிர நீங்கள் கடந்து செல்ல முடியாது”.

    கோவேறிக் கழுதையிலும் ஒட்டகத்திலும் குதிரையிலும் பயணித்துக் கொண்டிருந்த அன்றைய உலக மக்களிடத்திலே விண்வெளி பயணம் குறித்து திருகுர்ஆன் பேசியது.

    ‘மனிதர்களாகிய நீங்கள் விண் பயணம் செய்யும் ஆற்றல் வரும் காலத்தில் விண்ணை கடந்து செல்லுங்கள். அதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது மற்ற பயணங்களை போல அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அந்த வல்லமையை இறைவன் தந்தால் தவிர உங்களால் விண் பயணம் செய்ய முடியாது’ என்று இந்த வசனத்தின் மூலம் குறிப்பிடுகிறது.

    பூமியில் இருப்பதுபோல விண்வெளியில் வாழ முடியாது. ஏனென்றால் பூமியுடைய தன்மை வேறு விண்ணுலகின் தன்மை வேறு. இறைவன் தந்த அறிவை (வல்லமையை) கொண்டு பிரத்யோகமான ஆடைகளுக்குள் வாழும் சூழ்நிலைகளை ஏற்படுத்தினால் மட்டுமே விண்ணுலக பயணம் செய்ய முடியும்.

    மனிதனை பூமியில் படைத்தது மட்டுமின்றி அவனுக்கும் பிற உயிரினங்களுக்கும் வாழும் வசதியை இந்த பூமியில் ஏற்படுத்தியவனும் ஏக இறைவன் தான். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனங்கள் 79:27-33 இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான். இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான். அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்)’.

    உலகின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் அதன் அடுக்கடுக்கான முன்னேற்றத்தையும் இந்த திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவாக எடுத்துரைத்துவிட்டது.

    இவ்வாறே திருக்குர்ஆனில் புவியியல், கணக்கியல் வானவியல், கருவியல் விஞ்ஞானவியல், மெஞ்ஞானவியல் போன்ற அனைத்து இயல்களும் நிறைந்து காணப்படுகிறது.

    விஞ்ஞான உலகம் கண்டறிந்த வெளியிட்டுள்ள அதிசயங்கள் அனைத்தையும் திருக்குர்ஆன் மெய்பிப்பதாகவே இருக்கின்றது. இவ்வளவு நிறைவான மகிமையுடைய திருக்குர்ஆன் தன்னை படித்து பயன்பெற மனித குலத்தை என்றும் அழைத்துக் கொண்டே இருக்கின்றது.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    ‘நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாக உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கு உடல் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

    இஸ்லாத்தை பொறுத்த அளவில் நேர்த்திக்கடன் என்பது ஒரு வணக்கம். எல்லா வணக்கங்களும் இறைவனுக்கு மட்டுமே இணக்கம். அந்த வகையில் நேர்த்திக்கடனை இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்கி நிறைவேற்றிட வேண்டும். மற்ற யாருக்காகவும் நேர்ச்சை செய்யக்கூடாது. நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் கூடாது.

    இது இறை நம்பிக்கையின் ஒரு அங்கமாக இருப்பதால் இதில் மற்றவர்கள் அங்கம் வகிக்க முடியாது. இதற்கு பின்வரும் வசனங்கள் சான்று:

    “இம்ரானுடைய மனைவி (கர்ப்பமான பொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘என் இறைவனே, நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்து விட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக்கொள்வாயாக’ என்றாள்”. (திருக்குர்ஆன் 3:35)

    ‘நம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் உள்ளனர். இறைவனிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்’. (திருக்குர்ஆன் 33:23)

    “நீங்கள் உண்டு, பருகி மன நிறைவடைவீராக. மனி தர்களில் எவரையேனும் கண்டால் ‘நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்துவிட்டேன். எந்த மனிதனுடனும் பேசமாட்டேன்’ என்று கூறுவீராக”. (திருக்குர்ஆன் 19:26)

    ‘நேர்த்திக்கடன் இருவகை. 1) எவர் இறைவனுக்கு கட்டுப்படும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அது இறைவனுக்கு உரியது, அதை நிறைவேற்றுவது அவசியம். 2) எவர் பாவம் புரியும்படி நேர்ச்சை செய்தாரோ அது சைத்தானுக்கு உரியது. அதை நிறைவேற்றுவது அவசியமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூசைன் (ரலி), நூல்: நஸயீ)

    நன்மையும் இல்லாத, பாவமும் இல்லாத வீணான நேர்ச்சைகளும் உண்டு. இவற்றையும் நிறைவேற்றத் தேவையில்லை. தமக்கு உரிமையே இல்லாதவற்றிலும் நேர்ச்சை செய்யக்கூடாது.

    நன்மை பயக்கும் நேர்ச்சைகள்

    ‘மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் (தங்கி) இருப்பதாக அறியாமைக்காலத்தில் உமர் (ரலி) நேர்ச்சை செய்திருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘உமது நேர்ச்சையை நிறைவேற்றும்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

    “ஜூஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு, ‘ஆம், செய்யலாம்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    “சஅத்பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘நேர்ந்து கொண்டு அதை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக் கடன் குறித்து’ விளக்கம் கேட்டார்கள். ‘அதை நிறைவேற்றுமாறு’ நபி (ஸல்) தீர்ப்பளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    தேவையற்ற நேர்ச்சைகள்

    ``ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக்கொண்டிருக்க அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘கஅபா வரை நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று மக்கள் கூறினார்கள். ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது இறைவனுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச்செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    “உக்பா பின் ஆமிர் (ரலி) கூறுகிறார்: ‘என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர் இதுபற்றி நபிகளாரிடம் தீர்ப்பு பெற்றுத்தரும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர் சிறிது தூரம் நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்’ என்றார்கள்”. (நூல்: புகாரி)

    ‘ஒரு தடவை அபூபக்ர் (ரலி) ‘அஹ்மஸ்’ எனும் குலத்துப் பெண்மணியான ஸைனப் வசம் சென்றார்கள். அவள் மவுன விரதம் பூண்டு பேசாமலிருப்பதாகக் கண்டார்கள். உடனே, ‘இவளுக்கென்ன ஆயிற்று?, ஏன் பேசாமல் இருக்கிறாள்?’ என்று விசாரித்தார்கள். அதற்கு மக்கள் ‘இவள் ஹஜ் செய்யும் வரை எவருடனும் பேசமாட்டேன் என நேர்ச்சை செய்திருக்கிறாள்’ என்று கூறினார்கள். அவளிடம் அபூபக்ர் (ரலி) ‘நீ பேசு, ஏனெனில் இவ்வாறு மவுனமாக இருப்பது அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச்செயலாகும்’ என்றார்கள். உடனே அவள் மவுனத்தை கலைத்துப்பேசினாள்”. (அறிவிப்பாளர்: கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்), நூல்: புகாரி)

    ‘நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து மக்களிடம் கேட்டார்கள். மக்கள், ‘இவர் அபூஇஸ்ராயீல் ஆவார். இவர் நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில்தான் இருப்பேன்) என்றும், யாரிடமும் பேசமாட்டேன், நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டார்’ என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவருக்கு உத்தரவிடுங்கள்; அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை மட்டும் நிறைவு செய்யட்டும்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    ஒருவர் தமக்கு உடமையில்லாத ஒன்றிலும், பாவச் செயலிலும், இறைவனுக்கு மாறுசெய்வதிலும் நேர்ச்சை செய்யக்கூடாது.

    ‘இறைவனுக்கு மாறுசெய்வதிலும், உறவை முறிப்பதிலும், தமக்கு உடமையில்லாத ஒன்றிலும் நேர்ச்சை செய்வது கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஸயீத்பின் முஸய்யப் (ரலி), அபூதாவூத்)

    ஒரு காரியம் கை கூடுவதற்கு நேர்ச்சை செய்ய அனுமதியுண்டு. எனினும் நேர்ச்சை செய்வதினால் மட்டுமே ஒரு காரியம் நிறைவேறும் என்று நினைத்துவிடக் கூடாது. மேலும் நிறைவேறும் அந்த காரியம் நேர்த்திக்கடனால் மட்டுமே நிறைவேறாது. அதில் விதியும் சேர்ந்திருக்கிறது. விதியில் இல்லாத ஒன்றை நேர்த்திக்கடனால் கொண்டு வரமுடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக்கொணரப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    ‘நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே அவனைக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் இறைவன் கஞ்சனிடமிருந்து செல்வத்தை வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக இப்போது வழங்கத் தொடங்கி விடுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    நமது காரியம் நிறைவேறுவதற்கு நேர்த்திக்கடனையும் தாண்டி தொழுகையும், பிரார்த்தனையும் இருக்கிறது. இவ்விரண்டிலும் ஈடுபட்டு நமது தேவைகளை இறைவனிடம் கேட்டுப்பெறலாம்.

    ஒருவேளை நேர்த்திக்கடன் செய்தால் அதில் நன்மையானவற்றை நிறைவேற்றிட வேண்டும். அதில் தேவையற்றதையும், வீணானவற்றையும், பாவமானவற்றையும் விலகிக் கொண்டு நேர்த்திக் கடனை முறித்துவிட வேண்டும். முறித்ததற்காக சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அது குறித்த இறைவனின் கூற்றையும், இறைத்தூதரின் கூற்றையும் இனி காண்போம்.

    ‘நேர்த்திக்கடனை முறித்ததின் பரிகாரம் சத்தியத்தை முறித்ததின் பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்:அபூதாவூத்)

    ‘உங்களின் சத்தியங்களில் வீணானவற்றுக்காக இறைவன் உங்களைத் தண்டிக்கமாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே.’ (திருக்குர்ஆன் 5:89)

    நல்ல நேர்த்திக்கடன்களை நல்லவிதமாக நிறைவேற்றிட வேண்டும். மற்ற தேவையில்லாத நேர்த்திக்கடன்களை முறித்துவிட வேண்டும்.
    திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
    தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகமது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆன் தொடக்கம், பள்ளிவாசல் பேஷ் இமாம் முகமது யூசுப் அலிம் தலைமையில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.

    காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி மற்றும் அஸீம் அகமது பிஜிலி ஆகியோர் கொடி, சந்தன குடம் ஆகியவற்றை யானை மீது அமர்ந்தவாறு ராமன்குடி முத்துகிருஷ்ணாபுரம் அருள்துரை நாடார் இல்லத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு உணவு பொட்டலங்கள், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கொடி ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தர்காவை அடைந்தது. 12.15 மணிக்கு யானை மீது இருந்தவாறு பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மொழுகி மலர் போர்வை போர்த்தினர். மாலையில் மவுலூது ஷரீப் ஓதுதல், இரவு சலாவுதீன் தலைமையில் ராத்திப்புத்துல் காதிரியா திக்று மஜ்லிஸ் ஓதப்பட்டது. இரவு இஸ்லாமிய மார்க்க சமய சொற்பொழிவு, இஸ்லாமிய இன்னிசை கச்சேரி முதலியவை நடந்தது. கந்தூரி விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை நன்றி நவினல் நிகழ்ச்சி, சிறப்பு துவா ஓதப்பட்டு நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர்.
    ×