search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சத்தியங்களில் நேர்மையாக இருப்பது
    X
    சத்தியங்களில் நேர்மையாக இருப்பது

    சத்தியங்களில் நேர்மையாக இருப்பது

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சத்தியங்களில் நேர்மையாக இருப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.
    பொதுவாக மனிதர்கள் தாங்கள் கூறுவதை மற்றவர் நம்பவேண்டும் என நினைப்பார்கள். அதனை நியாயப்படுத்துவதற்காக கொண்டு வரும் வார்த்தை தான் ‘சத்தியம்’ என்ற சொல்.

    சத்தியம் என்ற வார்த்தைக்கு தனி மரியாதை உண்டு. அதை கூறுபவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் உண்டு. ஒருவன் தன் தரப்பு நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு தம்மிடம் இரு சாட்சிகளோ, சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத இக்கட்டான நிலையில் அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒரே நம்பிக்கையான சொல் ‘சத்தியம்’, ‘சத்தியமாக’ என்பது மட்டுமே.

    சத்தியம் என்றால் தமிழில் உண்மை, உறுதி என்று பொருள். இதே சொல்தான் அறுதியிட்டு உறுதியாக கூறப்படும் விஷயங்களுக்கு முன்மொழியப்படுகிறது. ஆனால், அரபியில் ‘சத்தியம்’ என்பதற்கு ‘யமீன்’ என்றும், ‘உண்மை’ என்பதற்கு ‘ஹக்’ என்றும் தனித்தனியான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. ‘யமீன்’ என்றால் ‘வலதுகரம்’ என்பது பொருள். சத்தியம் செய்வதற்கு பெரும்பாலும் வலதுகரம் பயன்படுத்துவதால், இந்த வார்த்தை வந்தது.

    உண்மையும், பொய்யும் ஒன்றாக கலந்துவிட முடியாது. எனினும் சத்தியத்தில் உண்மை மட்டுமே உரைக்கப்படும் என்பதில் எவ்வித கட்டாயமும் கிடையாது. அதில் பொய்யை கலப்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவேதான் இஸ்லாம் உண்மையை வேறாகவும், சத்தியத்தை வேறாகவும் பிரித்தாளுகிறது.

    சத்தியத்தில் இஸ்லாம் சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அந்த நெறிமுறைகளை முறையாக பேணும்போது அது நேர்மையான சத்தியமாக வடிவம் பெற்றுவிடுகிறது.

    ஒரு முஸ்லிம் சத்தியம் செய்யும் போது ‘இறைவனின் மீது சத்தியமாக’ என்று மட்டுமே கூறவேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரின் மீதும், வேறு எந்தப் பொருளின் மீதும் சத்தியம் செய்யக்கூடாது.

    தாயின் மீது சத்தியம், தந்தை மீது சத்தியம், மனைவி மீது சத்தியம், குழந்தை மீது சத்தியம், திருக்குர்ஆன் மீது சத்தியம், கஅபா மீது சத்தியம் என்றெல்லாம் சத்தியம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

    சத்தியத்தில் நேர்மையை கடைப்பிடிப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதில் இறைவனை விடுத்து மற்றவரை உள்ளே இழுப்பது இறைநம்பிக்கையை தகர்க்கும் இணைவைப்பான காரியமாகும். இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

    “நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் இறைவனின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

    “சத்தியம் செய்பவர் இறைவன் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

    “எவர் அல்லாஹ் அல்லாதோரைக் கொண்டு சத்தியம் செய்து விட்டாரோ அவர் இறைவனுக்கு இணை கற்பித்துவிட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: திர்மிதி)

    “இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிப்பதாவது:

    ‘ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைப் பறித்துக்கொள்வதற்காக திட்டமிட்டு (பொய்ச்) சத்தியம் செய்கிறவன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையிலேயே அவனை (மறுமையில்) அவன் சந்திப்பான்’ என நபி கூறினார்கள். அப்போது அந்தக் கருத்தை உறுதிபடுத்தும் விதமாக இறைவன் ‘அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’. (திருக்குர்ஆன் 3:77) எனும் வசனத்தை இறைவன் அருளினான்.

    இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அஷ்அஷ் (ரலி) வந்து மக்களை நோக்கி ‘இப்னு மஸ்ஊத் (ரலி) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இறைவனின் மீதாணையாக, இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. எனக்கும், ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் (கிணறு) தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் எனது (கிணறு) உரிமையை மறுத்துவிடவே நான் நபிகளாரிடம் வழக்கை கொண்டு சென்றேன்.

    ‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘உன் வாதத்திற்கான ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன்.

    உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரைப் பார்த்து, ‘அப்படியென்றால் நிலம் என்னுடையதுதான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று சத்தியம் செய் என்று கூறினார்கள்.

    நான் ‘இறைத்தூதர் அவர்களே அவ்வாறென்றால் அந்த யூதன் தயங்காமல் பொய்ச் சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவான்’ என்றேன். அப்போதுதான் மேற்கூறப்பட்ட வசனம் இறங்கியது”. (நூல்: புகாரி)

    “மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன், என்று இறைவன் கூறினான். ‘ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்:புகாரி)

    ஒருவரின் சொத்தை அபகரிப்பதற்கு பொய்ச் சத்தியம் செய்வது எவ்வளவு பெரிய பாவம்? மறுமை நாளில் அவன் மீது இறைவனின் கோபமும், சாபமும் ஏற்பட்ட நிலையில் தான் அவன் இறைவனை சந்திப்பான். அவனுக்கு கடுமையான வேதனை கொடுத்து இறைவன் தண்டிப்பான்.

    அது என்ன வேதனை?

    “பூமியில் தனக்கு உரிமையற்ற நிலத்தை (பொய் சத்தியம் செய்து) அபகரிப்பவன் மறுமைநாளில் ஏழு பூமிகள் வரை அவன் பூமிக்குள் செருகப்படுவான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

    சரக்கை விற்பதற்காக பொய் சத்தியம் செய்வதும் பெரும்பாவமாகும்

    “பொய்ச் சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால் அபிவிருத்தியை அது அழித்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    நேர்மையான முறையில் சத்தியம் செய்வதை இஸ்லாம் இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக கருதுகிறது. ஒருவர் சத்தியம் செய்து, அதைவிடச் சிறந்ததை கண்டால் செய்த சத்தியத்தை முறித்துவிட்டு, அதற்கான பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும். இறைநம்பிக்கையை பாழாக்கும் பொய் சத்தியத்தை எக்காரணத்தைக் கொண்டு செய்தல் கூடாது. அதை கைவிடுதலே சாலச்சிறந்தது.

    இதையே திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வற்புறுத்துகின்றன.

    மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×