என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    திருவிவிலியம் ஒரு வழிகாட்டி. அதைப் படிப்பதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைப் பயன்படுத்துகிறோம்.
    திருவிவிலியம் ஒரு வழிகாட்டி. அதைப் படிப்பதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைப் பயன்படுத்துகிறோம்.

    திருவிவிலியம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும். இயேசுவுக்கு முன்பாக ஆட்சி செய்த மக்கள் மற்றும் ராஜாக்களைப் பற்றி பழைய ஏற்பாடு விளக்குகிறது. நமக்காகத் தன்னைத் தியாகம் செய்த மீட்பரின் வாழ்க்கையைப் பற்றி புதிய ஏற்பாடு நமக்கு விளக்குகிறது.

    பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டிலிருந்து பல வழிகளில் வேறுபடுகிறது. ஆனால் விண்ணகம் எனும் இலக்கை நோக்கியே பயணிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிக்கவும், தன்னை நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்கவும் விவிலியம் கற்றுத்தருகிறது.

    பழைய ஏற்பாடு படைப்பைப் பேசுகிறது, புதிய ஏற்பாடு மீட்பைப் பேசுகிறது. உயிரினங்கள் மற்றும் முதல் பெற்றோர்களைப் படைத்தது பழைய ஏற்பாட்டின் துவக்கம். அதன் பின் அடிமை நிலையில் இருக்கும் இஸ்ரவேலரை எகிப்தியர்களிடமிருந்து மீட்க கடவுள் மோசேயை நியமிக்கிறார்.

    புதிய ஏற்பாட்டில் கடவுள் மனுக்குலத்தில் நிலவும் கொடூரமான பாவங்களிலிருந்து மீட்பதற்காக தனது சொந்த மகனை அனுப்புகிறார். புதிய ஏற்பாடு நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவருடைய காலத்திற்குப் பிறகு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பற்றியது. நமது எதிர்கால மீட்புக்கான ஒளியைக் காட்டுவது.

    திருவிவிலியம் கடவுளின் பரலோக வீட்டிற்கு செல்வதற்கான வழி. கிறிஸ்தவத்தின் அடிப்படையாய் இருப்பது இது தான். சொல்லப்போனால் ஜெபமும், திருவிவிலியமும், நம் விண்ணகத் தந்தையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய இரண்டு வழிகள்.

    நம்முடைய பிதா நமக்குச் சொல்ல விரும்பிய அனைத்தையும் திருவிவிலியம் சொல்கிறது. கடவுள் நமக்கு என்ன திட்டங்களை வைத்திருக் கிறார் என்பதையும் இது காட்டுகிறது. நாம் திருவிவிலியத்தைப் படிக்கும்போதெல்லாம் கடவுள் நமக்கு ஏதாவது சொல்கிறார் என்று உணர்கிறோம்.

    நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் திருவிவிலியத்தைப் படித்தால், அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள நம் கடவுள் நமக்கு உதவுகிறார் என்பதை புரிந்துகொள்கிறோம். நாம் துன்பப்படுகையில் நமக்கு நம்பிக்கை இல்லை. நம் முடைய உறுதி உடைந்து கிடக்கிறது. அந்த உறுதியையும், நம்பிக்கையையும் திருவிவிலிய வாசிப்பு நமக்குள் கொண்டு வருகிறது.

    நாம் கடவுளோடு இருக்கிறோம், அவருடைய சிறகுகளால் நாம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கையை இறை வார்த்தைகள் தருகின்றன. நம்மைச் சுற்றி யாரும் இல்லாதபோது நம்மில் பெரும்பாலானோர் தனிமையாக உணர்கிறோம். நம்முடைய சிறந்த நண்பரிடமிருந்து நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டுமென விரும்புகிறோம். யாராவது நம்முடன் கூடவே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம், இதையெல்லாம் விவிலிய வாசிப்பு தருகிறது.

    நம்முடைய பரலோக இலக்கு வரை விவிலியம் நமக்கு சிறந்த தோழனாக இருக்கும். மேசியாவை எதிர்பார்க்கும் மக்களுக்காக, மேசியாவை எதிர்பார்த்த மக்களால் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு மேசியாவான இயேசு கிறிஸ்துவுடன் இருந்தவர்களால் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டில் மக்களிடம் இறைவன் நேரடியாக பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இறைவன் மானிட மகன் வழியாக பேசுகிறார்.

    நம்மில் பெரும்பாலானோர் திருவிவிலியத்தைப் படிக்கிறோம். வெறுமனே ஒரு செய்தித் தாளைப் போல அதை வாசித்துக் கடந்து விடக் கூடாது. அதில் உள்ள இறைவார்த்தைகளை நாம் உணர வேண்டும். நாம் அந்த இறைவார்த்தைகளை நமக்குள் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இறை வார்த்தைகள் நம்மை அமைதியான முறையில் வழிநடத்தி வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதிகாலையில் இறை வார்த்தைகளைப் படிக்கும் போது அந்த நாள் நமக்கு இனிமையான நாளாக அமைகிறது. இரவு நேரத்தில் திருவிவிலியத்தை படித்து விட்டு உறங்கும் போது, நமது மன பாரத்தை இறக்கி வைத்து விட்டு சுகமான நித்திரைக்கு அது உதவுகிறது.

    விவிலியம் நமக்கு வெறுமனே அமைதி தரும் பொருள் மட்டுமல்ல. அது வெறும் எழுத்துகளால் நிரப்பப்பட்ட ஒரு புத்தகம் அல்ல. அது கடவுளின் அன்பினால் நிரப்பப்பட்ட நூல். கடவுளின் கருணையினால் கொடுக்கப்பட்ட நூல்.

    திருவிவிலியம் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய நூல் அல்ல. பயன்படுத்த வேண்டிய நூல். விவிலியம் எந்த அளவுக்கு நமது விரல்கள் பட்டுப் பட்டு அழுக்காகிறதோ, அந்த அளவுக்கு நமது இதயம் இறைவனின் விரல்கள் தொட்டுத் தொட்டு தூய்மையாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்வோம். அதன் வழி நடந்து இறைவனின் இல்லத்தை அடைவோம்.

    சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.
    தேவன் நமக்கு தேவனுடைய ராஜ்யத்தையே தருவார் என்ற நம்பிக்கையுள்ளவர்களாய் வாழ தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.
    ஒவ்வொரு நாளும் மனிதன் தன் தேவை களுக்காக பல காரியங்களை தேடிக் கொண்டே இருக்கிறான். இன்று நம் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று பல்வேறு வேலைகளை செய்து பணத்தை சம்பாதித்து உணவு, உடை, உறைவிடம் என்று செலவு செய்கிறோம். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் நம்முடைய தேவை பூர்த்தியாகமலேயே உள்ளது. எனவே மேலும், மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

    ஆனால் தேவன் என்ன சொல்லுகிறார் என்றால், உங்களுக்கு வேண்டியவைகளையே தேடி அலையாமல் இவைகளை கொடுக்க வல்லமையுள்ள என்னை தேடுங்கள் என்று கூறுகிறார்.

    இப்படித்தான் ஒரு நாட்டின் அரசர் தன் மக்களை சந்தித்து அவர்களின் கவலைகள், பிரச்சினைகளை போக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக பொது இடத்தில் ஒரு குறிப்பிட்ட மரத்தடியை தேர்ந்தெடுத்து அங்கு அமர்ந்தார். பின்னர் அதை சுற்றிலும் ஏராளமான கூடாரங்கள் அமைத்து அந்த கூடாரங்களில் உணவு பண்டங்கள், நகைகள், பணம் மற்றும் பல்வேறு பொருட்களை ஏராளமாய் குவித்து வைத்தனர்.

    பின்னர் அரசர் மக்களை பார்த்து இந்த கூடாரங்களில் உள்ளவற்றை யார், யாருக்கு என்னனென்ன தேவையோ இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தேவையானவற்றை சேகரித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு வாலிபன் மட்டும் அங்கு இருக்கும் எதையும் எடுத்துக்கொள்ளாமல் அரசர் இருக்கும் இடத்தை தேடி வந்தான். உடனே அரசர் அவனிடம் இங்கு இருக்கும் இலவச பொருட்கள் எதையும் நீ எடுக்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர் அரசரே, என்னுடைய நோக்கம் உங்களை காண்பதுதான் என்றான்.

    உடனே அரசர் மிகவும் மகிழ்ச்சியாக அந்த வாலிபரை தழுவிக்கொண்டு அப்படியானால் என்னுடைய முழுச் சொத்துக்கும் நீதான் சொந்தக்காரர் என்று கூறி உள்ளார்.

    இதைத்தான் வேதாகமம் மத்தேயு 6-ம் அதிகாரம் 33-ம் வசனத்தில் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகள் எல்லாம் உங்களுக்குக்கூட கொடுக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது.

    ஆம் தேவ பிள்ளைகளே நாமும் நம்முடைய வாழ்க்கையில் உலக பிரகாரமான காரியங்களுக்காக ஓடிக்கொண்டிருக்காமல் தேவனை சந்திக்கவும் நேரத்தை செலவிடுவோம். அப்போது தேவன் நமக்கு தேவனுடைய ராஜ்யத்தையே தருவார் என்ற நம்பிக்கையுள்ளவர்களாய் வாழ தேவன் தாமே நாம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென்.

    சகோ.ஜே.ஜெயசுதன்,

    கிறிஸ்துவின் ஆர்ப்பரிப்பின் ஊழியங்கள், திருப்பூர்.
    இறைவனை வேதனைப்படுத்தும் பாவ வாழ்வை விட்டு விட்டு உண்மையாய், நேர்மையாய் கடவுளின் கட்டளைகளை ஏற்று இறைவனின் சாட்சியமக்களாய் வாழ்ந்திட முயற்சி எடுப்போம்.
    இறைவனுக்கும் நமக்குமுள்ள உறவை சீர்தூக்கி பார்த்து சரியான விதத்தில் நம் வாழ்க்கை பயணம் செல்கிறதா? என ஆராய்ந்து செயல்பட இத்தவக்காலம் நமக்கு தரப்பட்டுள்ளது. எஞ்சி இருக்கின்ற இந்தவக்கால நாட்களில் ஒருமுறை நம்மை மீண்டும் சுய ஆய்வு செய்து கொள்வது மிகவும் நல்லது.

    ஒரு மனிதனை உருவாக்குவது அவரது அனுபவங்களே. நல்ல அனுபவங்களை பெறும் போது நல்லவராக மாறுகின்றனர். தீய அனுபவங்களை பெறும் போது தீயவர்களாகவே மாறுகின்றனர். அனுபவமே வாழ்வை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் தான் நமக்கு பாடமாக அமைய வேண்டும். அப்படி இல்லையெனில் நமது வாழ்வு கேள்விகுறி ஆகிவிடும். லூக்கா 11:23-ல் இயேசு இவ்வாறு கூறுகிறார்.

    என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார் என்றும், அவரது கட்டளைகளை கடைபிடிப்பதே நாம் அவரோடு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். கட்டளைகளை கடைபிடிக்காமல் திருயாத்திரைகளோ, திருவிழாக்களோ அல்லது தவயாத்திரைகளோ சென்று, இத்தனை கோவில்களுக்கு சென்றேன். அத்தனை கோவில்களிலும் திருப்பலியில் பங்கெடுத்தேன் என்று சொல்வதில் என்ன பயன்? இயேசுவின் கட்டளைகளை கடைபிடித்து வராமல் நல்ல கிறிஸ்துவர்களாக வாழ்கிறோம் எனக்கூறி போலிதனமான வாழ்வு வாழ்வதால் கடவுளை ஏமாற்றிவிட முடியாது.

    எரேமியா 7:23-ல் ஆண்டவர் கூறுகிறார். என் குரலுக்கு செவி கொடுங்கள் அப்போது நான் உங்களுக்கு கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும் என்று கூறுகிறார்.

    எனவே இத்தவக்காலத்தில் இறைவனை வேதனைப்படுத்தும் பாவ வாழ்வை விட்டு விட்டு உண்மையாய், நேர்மையாய் கடவுளின் கட்டளைகளை ஏற்று இறைவனின் சாட்சியமக்களாய் வாழ்ந்திட முயற்சி எடுப்போம். கடவுள் பிள்ளைகளாய் வாழ்வோம்.

    அருட்தந்தை மரியசூசை, கும்பகோணம்.
    லூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு. விவிலியத்திலுள்ள அத்தனை நூலாசிரியர்களிலும் யூதர் அல்லாத, பிற இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு எழுத்தாளர் இந்த லூக்கா தான்.
    ‘லூக்கா’ நூலை எழுதியவர் பெயர் லூக்கா.

    லூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு. விவிலியத்திலுள்ள அத்தனை நூலாசிரியர்களிலும் யூதர் அல்லாத, பிற இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு எழுத்தாளர் இந்த லூக்கா தான்.

    சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவில் பிறந்தவர். இவர் லூக்கா நற்செய்தியை பிற இன மக்களுக்காகவே எழுதினார். அதனால் பல எபிரேய, அராமிக் சொற்களை இந்த நூலில் தவிர்த்திருப்பார்.

    இவர் பிறந்த அந்தியோக்கியாவில் தான் பிற்காலத்தில் பிற இனத்தவருக்கான முதல் திருச்சபை உருவானது. ‘கிறிஸ்தவர்கள்’ எனும் சொல் தோன்றியதும் இங்கே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    லூக்கா மருத்துவராக இருந்தார் என்பது சிறப்புச் செய்தி. அவரது நற்செய்தியில் பல இடங்களில் அந்த ‘டாக்டர் முகம்’ அவரை அறியாமலேயே வெளிப்படுவதையும் காண முடியும்.

    நோய் தீரும் புதுமைகளின் மீது அவர் ஆர்வம் காட்டினார். அதனால் தான், இயேசுவின் பிறப்பை மிக விரிவாக, தெளிவாக லூக்கா எழுதினார் என்று கருதப்படுகிறது. மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வை, மருத்துவரைக் கொண்டே எழுத வைத்திருப்பதில் தூய ஆவியானவரின் கரம் விளங்குகிறது.

    லூக்கா இயேசுவின் வம்சாவழியைக் குறிப்பிடும் போது, அன்னை மரியாளின் வழியை தேர்ந்தெடுக்கிறார். உண்மையில் இயேசுவை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் மரியா தான். யோசேப்பு வளர்ப்புத் தந்தை தான். மத்தேயு யூதர்களின் ஆண் சிந்தனைப் பார்வையில் யோசேப்பின் வம்சாவழியை எழுத, லூக்கா அத்தகைய கட்டுப்பாடு இல்லாத மனநிலையில் மரியாவின் வம்சாவழியை எழுதுகிறார்.

    மருத்துவப் பார்வை தவிர்த்து, வரலாற்றுப் பார்வையும் லூக்காவின் எழுத்துகளில் மிளிர்கின்றன. இவரது எழுத்துகளின் மூலமாக வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை இணைத்துப் பார்க்க முடிகிறது.

    லூக்கா பயணங்களில் அனுபவமுடையவர். பவுலுடன் சேர்ந்து பயணம் செய்தவர். இவர் தான் ‘திருத்தூதர் பணிகள்’ நூலையும் எழுதினார். இவருடைய பயண அனுபவங்களையும் இவருடைய எழுத்துகளில் காண முடியும். இவர் இயேசுவை நேரடியாகச் சந்தித்ததில்லை. எனவே பவுல், மற்றும் இயேசுவோடு நேரடியாகப் பழகியவர்களிடமிருந்து இந்தத் தகவல்களை அவர் பெற்றிருக்கிறார். கூடவே ‘மாற்கு’ நற்செய்தி நூலும் அவருக்கு பெரிதும் துணைபுரிந்திருக்கிறது.

    ஒரு சிறந்த எழுத்தாளராகவும் லூக்கா பரிமளிக்கிறார். சிறப்பான வார்த்தைப் பிரயோகங்களும், அற்புதமான நடையும் இவரது நூலை மிகச்சிறந்த இலக்கிய நூலாகவும் கருதச் செய்கிறது. இவரது நூலின் மையமாக இழையோடும் ‘மீட்பு’ எனும் சிந்தனையும் நூலை செழுமையாக்குகிறது.

    லூக்கா நற்செய்தியிலுள்ள சில நிகழ்வுகள் மிகவும் பிரசித்தமானவை. கிறிஸ்தவ உலகம் நன்கு அறிந்தவை. உதாரணமாக ஊதாரி மைந்தன், சக்கேயு, மரியா மார்த்தா போன்ற நிகழ்வுகள் தனித்துவமானவை.

    “பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்” போன்ற சில இயேசுவின் வசனங்கள் லூக்கா நற்செய்தி யில் மட்டுமே காணப்படுகிறது.

    லூக்கா நற்செய்திக்கு மேலும் சில தனித்தன்மைகள் உண்டு. மரியாவின் பார்வையில் இயேசுவின் பிறப்பையும், அது சார்ந்த நிகழ்வுகளையும் லூக்கா மட்டுமே தருகிறார். இயேசு பன்னிரண்டாவது வயதில் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வை லூக்கா மட்டுமே தருகிறார். அந்தக் காலத்தில் பன்னிரண்டு வயது நிரம்பும் ஆண்மகன் ஆலயத்தில் சென்று ஏட்டுச் சுருளை வாசித்தபின் பெரியவனாக அங்கீகரிக்கப்படுவான். அதன்பின் அவனுக்கு சொந்தமாய் முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பது யூத மரபு.

    அதேபோல இயேசு திருமுழுக்கு பெற்றபின் ‘செபம் செய்துகொண்டிருந்த போது’ தூய ஆவியானவர் வருகிறார் எனும் சிறப்புச் செய்தியை லூக்கா தருகிறார்.

    நல்ல சமாரியன் உவமை, பரிசேயரும் வரிதண்டுவோரும் உவமை, தொடர்ந்து வேண்டும் விதவை, காய்க்காத அத்தி மரம், ஏழை லாசர் கதை, ஆடையைத் தொடும் பெண், பத்து தொழுநோயாளிகள், விதவையின் காணிக்கை உட்பட பல முக்கியமான செய்திகள் லூக்கா நற்செய்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன.

    பிற இனத்தாரை வசீகரிக்கும் முக்கிய நிகழ்வுகளை லூக்கா கவனமாய்ப் பதிவு செய்கிறார். நலம் பெற்றுத் திரும்பி வந்து நன்றி செலுத்தும் ஒரே தொழுநோயாளன், பிற இனத்தவன் என்கிறார். பிற இனத்தாருக்கு அதிக விசுவாசம் இருக்கிறது என குறிப்பிடுகிறார். இடையர்கள் வந்து இயேசுவைப் பணிந்து கொள்வதை விவரிக்கிறார்.

    ‘ஏழைகள் பேறுபெற்றவர்கள், ஏழைகளுக்கு உதவுங்கள், ஏழைகளோடு உணவருந்துங்கள், ஏழைகளைக் கவனியுங்கள்’ என ஏழைகளின் சார்பாக நின்று லூக்கா பல இடங்களில் பேசுகிறார். அதே போல பாவிகளின் சார்பாக இயேசு நிற்கிறார் என்பதையும் லூக்கா கவனமாய் பதிவு செய்கிறார்.

    ‘உலக முழுவதுக்கும் இறைமகன் இயேசுவே மீட்பர்’ எனும் அடிப்படைச் சிந்தனையை லூக்கா விதைக்கிறார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த லூக்கா, தனது 84- வது வயதில் கிரேக்க நாட்டிலுள்ள பியோஷன் என்னுமிடத்தில் மறைந்தார் என்கிறது வரலாறு.

    தவற விடக்கூடாத நற்செய்தி நூல் லூக்கா.

    சேவியர்
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.
    கத்தோலிக்க கிறிஸ்தவ மறை மாவட்டங்களில் ஒன்றாக கோட்டார் மறை மாவட்டம் உள்ளது. இதன் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும்.

    இதே போல இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக கோட்டார் மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குதந்தை டோனி ஜெரோம் உள்ளிட்டோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கூறியதாவது:-

    ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெருவிழா 24-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 3-ந் தேதி விழா நிறைவடைகிறது. பேராலய பெருவிழாவை அறிவிக்கவும், அறிமுகப்படுத்தவும் மற்றும் அழைப்பு விடுக்கவும் விழா பறை அறிவிப்பாக அதற்கு முந்தைய வாரம் கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதியன்று திருப்பலியை தெற்கு மற்றும் வடக்கு ஊர் இறைமக்கள் இணைந்து சிறப்பிக்கிறார்கள். அனைத்து திருப்பலிகளிலும் பங்குத்தந்தை திருவிழா அழைப்பை அறிவிப்பாக வாசிப்பார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு சிறிய கொடிமரம், பெரிய கொடிமரத்தின் மேல் ஏற்றப்படும்.

    இதைத் தொடர்ந்து 24-ந் தேதி கொடியேற்று விழாவன்று காலை 6.15 மணிக்கு வழக்கம் போல ராஜாவூர் இறைமக்கள் திருப்பயணமாக வந்து திருப்பலியை சிறப்பிக்கிறார்கள். அன்றைய தினம் மாலை அருகுவிளை மற்றும் ராஜாவூர் பங்குமக்கள் திருப்பயணிகளாக வந்து கொடியேற்ற மற்றும் ஆலய அலங்காரத்துக்கு பூக்களை கொண்டு வந்து காணிக்கையாக்கி இறைவேண்டல் செய்வார்கள்.

    மேலும் தெற்கு மற்றும் வடக்கு ஊர் இறைமக்கள் இணைந்து திருப்பயணிகளாக காணிக்கை பொருட்களை ஏந்தி வந்து “சந்திப்பு“ என்ற சிறப்பு நிகழ்வை நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியில் கோட்டார் மறை மாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ், மறைவட்ட முதன்மை பணியாளர் மைக்கிள் ஆஞ்சலுஸ், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி மற்றும் இணை பங்கு தந்தை டோனி ஜெரோம் ஆகியோரையும் கொடியேற்று விழாவை நடத்தித்தர இறைமக்கள் அழைப்பார்கள். தொடர்ந்து பவனியாக பேராலயத்துக்குள் சென்று கொடிகள் மந்திரிக்கப்பட்டு ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறும்.

    திருவிழாவின் 8 மற்றும் 9-ம் நாள் இரவு 10 மணிக்கு தேர்பவனி நடைபெற உள்ளது. 10-ம் நாள் திருவிழாவன்று காலை 11 மணிக்கு தேர் பவனி நடைபெறும். தேர்பவனியின் போது நேர்ச்சை செலுத்தக்கூடிய பக்தர்கள் புனித சவேரியார் மற்றும் தேவமாதா தேர்களுக்கு பின்னால் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதும் விழாவின் சிறப்பம்சம் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின் போது பங்குபேரவை தலைவர் சகாய திலகராஜ், செயலாளர் அந்தோணி சவரிமுத்து, இணை செயலாளர் ஆஸ்டின், பொருளாளர் செலூக்கஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
    கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இறந்தவர்களுக்கு கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி(இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள். கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்படுகிறது.
    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நம்முடைய தேவன் வல்லமையுள்ள தேவன். இன்றும் மகிமையான காரியங்களை, தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் செய்து வருகிறார்.
    கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நம்முடைய தேவன் வல்லமையுள்ள தேவன். இன்றும் மகிமையான காரியங்களை, தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் செய்து வருகிறார். அவர் தம்முடைய மகிமை பொருந்திய வல்லமையை வெளிப்படுத்தும் போது அதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் அவர் மகிமையின் தேவன்.

    அப்போஸ்தலர் 7:2 சொல்லுகிறது: ‘அவர் மகிமையின் தேவனாயிருக்கிறார்’.

    வேதத்தில் அநேக பரிசுத்தவான்களுக்கு வல்லமையானவர் எப்படி மகிமையான காரியங்களை செய்தாரோ, அப்படியே உங்களுக்கும் செய்வார். திடன் கொள்ளுங்கள், விசுவாசத்தோடு இச்செய்தியை வாசித்து அற்புதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

    சத்துருக்களை அழிக்கிறவர்

    ‘அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு; கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும், குதிரைவீரரையும் கடலிலே தள்ளினார்’. (யாத்திராகமம் 15:1)

    மேற்கண்ட வசனம் மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் பாடின பாட்டாகும். நம்முடைய வல்லமையுள்ள தேவன் சத்துருக்களின் சகல வல்லமைகளை அழிக்க வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

    இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் பார்வோனும் அவன் சேனைகளும் புறப்பட்டு வந்தபோது, கர்த்தர் தம்முடைய வல்லமையினால் கடலை இரண்டாக பிளந்து உலர்ந்த தரையின் வழியாக இஸ்ரவேல் ஜனங்களை கடக்கப் பண்ணினார்.

    ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த பார்வோனையும், அவன் சேனை வீரர்களையும் அதே சமுத்திரத்தில் மூழ்கடித்தார்.

    இந்த அற்புதத்தை மோசேயும், ஜனங்களும் கண்ட போது தான் ‘கர்த்தர் மகிமையாய் வெற்றி சிறந்தார்’ என்று பாடிப்பாடி கர்த்தரை மகிமைப்படுத்தி உயர்த்தினார்கள்.

    உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு சத்துரு பின்தொடர்ந்து நீங்கள் முன்னேற முடியாதபடி, உங்களை தடுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது சத்துரு உங்களை பயத்தின் ஆவிக்குள்ளே தள்ளியிருக்கலாம், அல்லது ஒரு வேளை பிசாசின் கிரியைகளினாலே உங்கள் சரீரம் தாக்கப்பட்டு பெலவீனத்தோடு காணப்படலாம்.

    இந்த சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று கேட்டால், ‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணும்படி நீங்கள் சும்மாயிருக்க வேண்டும்’. ‘சும்மாயிருக்க வேண்டும்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால், ‘தேவனுடைய சித்தத்திற்கு நம்மை பரிபூரணமாய் அர்ப்பணித்து, அவர் கிரியை செய்வதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்’.

    அன்றைக்கு மோசே தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்தபடியினால் சத்துருவாகிய பார்வோனும் அவனுடைய சேனையும் கடலில் மாண்டு அழிந்து போனார்கள். வேதம் சொல்லுகிறது, ‘பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்’. (I யோவான் 3:8)

    இயேசுவின் நாமத்தினால் இந்த சத்தியத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொண்ட சத்தியத்தின்படி நடக்க அர்ப்பணியுங்கள். வல்லமையானவர் மகிமையான காரியங்களைச் செய்து உங்களுக்கு விரோதமாக, உங்கள் குடும்பங்களுக்கு விரோதமாக மற்றும் உங்கள் பொருளாதார ஆசீர்வாதத்திற்கு விரோதமாக எழும்பின சகல சத்துருவின் கிரியைகளையும் அழித்து மகிமையான காரியங்களை தேவன் செய்வார்.

    மகிமையான அற்புதங்களை செய்கிறவர்

    ‘இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்’. (யோவான் 2:11)

    இந்நாட்களில் நம் அருமை ஆண்டவர் கிரகிக்க முடியாத மகிமையான அற்புதங்களை செய்து வருகிறார். ஏனெனில் இன்றும் அவர் ஜீவனோடிருக்கிறாரல்லவா?

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன அற்புதங்களைச் செய்தாரோ அதே அற்புதங்களை இன்றும் செய்து வருகிறார்.

    நாமெல்லாரும் அறிந்திருக்கிறபடி வேதத்தில் நம் ஆண்டவர் செய்த முதலாம் அற்புதம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புதம்தான். இப்படிப்பட்ட வல்லமையான அற்புதத்தை அவர் செய்த போது யோவான் 2:11 சொல்கிறது, ‘கர்த்தர் தம் மகிமையை வெளிப்படுத்தினார்’.

    ஒருவருக்கு அற்புதம் செய்து மற்றொருவரை கைவிடமாட்டார். ஒருவரை உயர்த்தி, மற்றொருவரை தாழ்த்த மாட்டார். ஒருவரை சிநேகித்து மற்றொருவரை கைவிடமாட்டார். நம்முடைய தேவன் பட்சபாதமில்லாதவர்.

    அன்றைக்கு கானாவூர் கல்யாண வீட்டில் அற்புதங்களை செய்து தம்முடைய மகிமையை வெளிப்படுத்தின ஆண்டவர் உங்களுக்கும் மகிமையான அற்புதங்களைச் செய்ய வல்லவராயிருக்கிறார்.

    அன்றைக்கு கானாவூர் கல்யாண வீட்டிலே வேலைக்காரர்கள் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து காலியான கற்சாடிகளில் விசுவாசத்தோடு தண்ணீரை நிரப்பினார்கள். அவர் என்ன சொன்னாரோ அப்படியே செய்தார்கள். ஆகவே அன்றைக்கு அற்புதம் நடந்தது.

    இந்நாட்களில் உங்களுக்கு அவர் என்ன சொல்கிறாரோ சிறுபிள்ளை போல விசுவாசத்தோடு கீழ்ப்படியுங்கள். கட்டாயம் தேவனுடைய வல்லமையைக் காண்பீர்கள். அவர் தமது மகிமையை உங்களுக்காக வெளிப்படுத்துவார்.

    அன்றைக்கு மரியாள் ‘வல்லமையுடையவர் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்’ என்று கர்த்தருடைய நாமத்தை உயர்த்தினது போல நீங்களும் உயர்த்துங்கள். ஒவ்வொரு நிமிடமும் அவருடைய வல்லமையை எதிர்பாருங்கள். அவிசுவாச எண்ணங்களுக்கு சற்றும் இடம் கொடாதிருங்கள். ‘வல்லமையின் தேவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிமையான காரியங்களைச் செய்வாராக’.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54
    மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
    பொதுவாக மனிதன் பல்வேறு பிரச்சினைகளை எண்ணி ஓடிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த மனிதனின் வாழ்வின் இருளை ஒளியாக மாற்ற என்ன செய்யலாம் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

    நாம் வாழும் வீடுகளில் சில வீடுகள் பகல் நேரத்திலும் கூட இருளாய் காணப்படும். அப்படி இருக்கும் போது நம்முடைய வீட்டுக்கு யாராவது வந்தால் இப்படி வீடு இருளடைந்து காணப்படுகிறதே? என்று கேட்பார்கள். ஜன்னலை திறந்து வையுங்கள், விளக்கை போடுங்கள். அப்போதுதான் வெளிச்சம் (ஒளி) வரும் என்று கூறுவார்கள்.

    அநேகருடைய வீடுகளில் கரப்பான் பூச்சி, கொசு மற்றும் பல்வேறு பூச்சிகள் இருப்பதை காண முடியும். இந்த பூச்சிகள் நாம் இரவு நேரத்தில் விளக்கை போட்டவுடன் அந்த வெளிச்சத்தை பார்த்து ஓடி மறைந்து விடும். ஏனென்றால் அவற்றுக்கு இருள்தான் சாதகமாக உள்ளது.

    ஆனால் மனிதனுக்கு அப்படியல்ல, நம்முடைய வாழ்க்கையில் ஒளி மிகவும் அவசியமாக உள்ளது. இந்த உலகத்தில் நமக்கு அலுவலகங்களிலும் சரி, வீடுகளிலும் சரி விளக்கின் ஒளி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருளில் இருக்க நம்முடைய மனம் இடம் கொடுப்பதில்லை.

    இந்த உலகத்தில் பகல், இரவு என்று படைத்த தேவன் என்ன சொல்லுகிறார் என்றால், நீங்கள் எத்தனை விளக்குகள் போட்டாலும் இரவு பகலாக மாறலாம். ஆனால் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை செய்துகொண்டு உலகப்பிரகாரமாக அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களின் இருதயம் இருளாகவே உள்ளது. இந்த இருளை எப்படி போக்கபோகிறீர்கள்? என்று கேட்கிறார்.

    வேதாகமத்தில் யோவான் 8-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன், ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவபிள்ளைகளே இப்படி நாம் உலகத்தில் உள்ள இருளை போக்க நினைப்பது போல், நம்முடைய வாழ்க்கையில் உள்ள இருளை போக்க தேவனிடத்தில் நம்முடைய இருத யத்தை விசுவாசத்துடன் அர்ப்பணிப்போம். இந்த தவக்காலத் தில் இயேசுவின் சிலுவை பாடுகள் குறித்து தியானித்து வரும் நாம், வேத வசனங்களை தியானித்து, தேவனுக்காக நம்முடைய இருதயத்தின் கதவுகளை திறப்போம். அப்படி நாம் செய்யும் போது நம் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் நிச்சயமாக ஜீவ ஒளியை பிரகாசிக்கப்பண்ணுவார். ஆமென்.

    சகோ.சாம்ராஜ், ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
    “நீங்கள் இதை புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களை போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம்-3:5
    “நீங்கள் இதை புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களை போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” ஆதியாகமம்-3:5

    மனிதன் கடவுள் கூறிய உண்மையைவிட சாத்தான் கூறுகின்ற பொய்களைத்தான் அதிகமாக நம்புகின்றான். சாத்தான் கூறிய பொய்களை சார்ந்து மனிதம் உடனடியாக செயல்பட ஆரம்பிக்கின்றான். ஆனால் கடவுள் கூறிய உண்மைகைளை உண்மைகள் என்று உணர்ந்தாலும் செயல்படவோ, மிகவும் தாமதிக்கின்றான்.

    ஆதியில் பிசாசானவன் சொன்ன பொய் ஆதாம்-ஏவாள் தம்பதியினரால் உடனடியாக நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே மனிதக்குலமே கேட்டுக்குள் வீழ்ந்தது. சாத்தான் கூறுகின்ற பொய்கள் கவர்ச்சியானவை. எனவே உடனடியாக அவை ஏற்கப்படுகின்றன. கடவுள் கூறுகின்ற உண்மைகள் தரமானவை. ஆனால் கவர்ச்சியற்றவை. எனவே மனிதனை எளிதாக அவை ஈர்ப்பதில்லை.

    சந்தோஷத்திற்கு மிக அவசியமாக சாத்தான் பணம், பொருள், ஆஸ்தி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றை காண்பிக்கின்றான். ஆனால் கடவுளோ, நற்பண்புகளையும், நற்சுபாவங்களையும் காண்பிக்கின்றார். சாத்தான் சொல்வது பொய். ஆனாலும் மனிதன் அதனால் எளிதாக கவரப்படுகின்றாள். கடவுள் சொல்வது உண்மை. ஆனால் மனிதனோ அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகின்றான்.

    கடவுளை நம்புவதாகவும், வேத வார்த்தைகளை நம்புவதாகவும் கூறுகின்ற அநேகர் கூட உண்மையில் சாத்தானின் பொய்களுக்கு தான் அவர்கள் செவி கொடுக்கின்றார்கள். எனவே தான் பணம் பொருளை தேடவும், ஆஸ்தி அந்தஸ்துக்களை பெருக்கவும், பதவி பவிசுகளை நாடவும், ஆடம்பர வாழ்வில் மூழ்கவும் அவர்கள் அதிக தீவிரமாய் இருக்கின்றனர். எனவே தான் நற்குணங்களை விடவும் நற்பண்பு சார்ந்த வாழ்க்கையை விடவும் அவர்கள் பணத்திற்கும், பொருளுக்கும், ஆஸ்திக்கும், அந்தஸ்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

    நாம் எவற்றை நம்புகின்றோம். எவற்றை மேன்மையாக ஒத்துக்கொள்கின்றோம் என்பதில் அல்ல. எவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அடைந்திட அதிக கவனம் செலுத்துகின்றோம் என்பதே முக்கியம். கடவுள் எல்லாவற்றையும் விட நம்மிடம் உள்ள குணங்களும் நாம் பின்பற்ற போகிற பாதைகளும் நம்முடைய வாழ்வின் நோக்கங்களும் தான் நம்முடைய சந்தோஷத்தை நிர்ணயிக்கின்றது என்ற உண்மையை கூறுகின்றார். நாம் அதனை நம்பி அவற்றிற்கு முதற்கவனம் செலுத்தினால் அங்கே நாம் சந்தோஷத்தை காண்போம்.

    நல்லதை பிறரிடம் கண்டால் உன்னிடம் அதை காண விரும்பு
    தீயதைக்கண்டாலோ உன்னிடம் அது காணாதபடி பார்த்துக்கொள்.
    விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலில் எழுதப்பட்டது மார்க் நற்செய்தி தான். இது இயேசுவின் மீது நம்பிக்கை இல்லாத பிற மக்களுக்காக எழுதப்பட்டது.
    விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலில் எழுதப்பட்டது மார்க் நற்செய்தி தான். இது இயேசுவின் மீது நம்பிக்கை இல்லாத பிற மக்களுக்காக எழுதப்பட்டது. பரபரப்பான ஒரு செயல்களின் தொகுப்பாக இந்த நூலை மார்க் வடிவமைத்திருக்கிறார்.

    மார்க் இயேசுவின் நேரடி அப்போஸ்தலர் கிடையாது. இயேசுவோடு தொடர்ந்து நடந்த அனுபவம் அவருக்கு இல்லை. எனில் எப்படி அவருக்கு இயேசுவைக் குறித்த தெளிவான தகவல்கள் கிடைத்தன?,

    அவர் தனது வாழ்க்கைப் பயணத்தில் மூன்று மிக முக்கியமான நபர்களின் உதவியாளராக இருந்திருக்கிறார். முதலாவது பர்னபா, அந்தக்கால முக்கியமான கிறிஸ்தவத் தலைவர். இரண்டாவது பவுல், கிறிஸ்தவம் பரவ மிக முக்கியமான காரணியாய் இருந்தவர். மூன்றாவதாக பேதுரு, இயேசுவின் அப்போஸ்தலர்.

    பேதுருவிடமிருந்து நிறைய தகவல்களை மார்க் பெற்றார். பேதுருவின் உரைகளை லத்தீனில் மொழிபெயர்த்துப் பேசும் பணியை இவர் செய்தார். ரோம் நகரம் முழுவதும் இவர் பேதுருவோடு சுற்றித் திரிந்தார்.

    அப்போது சிலர் மார்க்கிடம், “பேதுருவுடைய உரைகளை எல்லாம் நூலாக எழுதமுடியுமா?” என வேண்டுகோள் விடுத்தார்கள். பேதுரு ஒருவேளை கொல்லப்பட்டால் இயேசுவின் போதனைகள் அவருடன் அழிந்து போகக்கூடாது என்பதே அவர்களுடைய நோக்கமாய் இருந்தது.

    அப்படி உருவானது தான் ‘மார்க் நற்செய்தி’ என ஆதிகால திருச்சபைப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் இதை பேதுருவின் நற்செய்தி என்றும் அழைத்தனர்.

    பேதுரு பரபரப்பானவர். அவரைப் பற்றி பிற நற்செய்திகள் மூலமாக பல செய்திகளை அறிந்து கொள்கிறோம். இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்டதும், ‘நானும் குதித்து நடக்கவா?’ எனக்கேட்டு குதித்தவர் அவர். பரபரப்பு மனிதர். அத்தகைய ஒரு பரபரப்பை மார்க் நற்செய்தி நூல் முழுவதும் காணலாம்.

    இயேசுவின் இரண்டரை ஆண்டு கால வாழ்க்கையை விரைவாய் கடக்கிறார். முதல் ஒன்பது அதிகாரங்கள் அதைப் பதிவு செய்கின்றன. பின்னர் அவரது கடைசி கால பயணத்தை சற்றே நிறுத்தி நிதானமாய் விரிவாய் எழுதுகிறார். பத்தாவது அதிகாரம் அந்த ஆறு மாத காலத்தைப் பதிவு செய்கிறது. அதை விட விரிவாக கடைசி வார நிகழ்வை எழுதுகிறார். அதை விட விரிவாக கடைசி நாள், கடைசி மணித்துளிகளை எழுதுகிறார். ஆறு அதிகாரங்கள் அவருடைய கடைசி வாரத்தை மட்டுமே பேசுகின்றன.

    இன்றைய நூலாசிரியர்கள் தங்களை முதன்மைப்படுத்த முயல்வார்கள். ஆனால் அதற்கு நேர் எதிரான மனநிலை பைபிள் ஆசிரியர்களிடம் உண்டு. தங்களை அவர்கள் முன்னிலைப்படுத்துவதில்லை. பேதுருவின் உரைகளை எழுதிய இந்த மார்க் நூல் கூட பேதுருவின் பலவீனங்களையே அதிகமாய்ப் பதிவு செய்கிறது.

    ‘அப்பாலே போ சாத்தானே’ என பேதுருவை இயேசு திட்டுவதை மார்க் தான் சொல்கிறது. இயேசுவை மூன்று முறை மறுதலிப்பதை மார்க் தான் சொல்கிறது. அதே நேரம் பேதுருவின் சிறப்புகளை பிற நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன.

    ‘இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்’ என்பதும், மறுதலித்த பின்னர் இயேசு பேதுருவிடம் பேசுவதையும் பிற நற்செய்தி நூல்கள் தான் நமக்கு விளக்குகின்றன. ஏன் நான்கு நற்செய்தி நூல்கள் நமக்குத் தேவை?, ஒன்று போதாதா? எனும் கேள்விக்கான விடை இவற்றில் அடங்கியிருக்கிறது.

    தனது நற்செய்தி நூலில் பதினெட்டு புதுமைகளை எழுதிய மார்க், வெறும் நான்கே நான்கு உவமைகளை மட்டுமே எழுதுகிறார். இயேசுவின் செயல்களின் மீது தான் அவருடைய பார்வை இருந்தது. ஒரு சினிமா போல பிறப்பு முதல் இறப்பு வரை அவர் எழுதவில்லை. யோர்தானில் யார்தான் நிற்பது எனும் பார்வையுடன் தான் மார்க் நற்செய்தி ஆரம்பமாகிறது.

    படிப்படியாக இயேசு தன்னை வெளிப்படுத்தும் ஒரு பாணியை மார்க் இந்த நூலில் கையாள்கிறார். “நீங்கள் என்னை யார் என சொல்கிறீர்கள்” என கேட்டு, அவர்கள் தன்னை மெசியா என கண்டுகொண்டபின் இயேசுவின் அணுகுமுறையில் மாற்றம் நிகழ்வதையும் மார்க் படம் பிடிக்கிறார். அதுவரை அவர் தன்னை வெளிப்படுத்த வில்லை.

    தன்னைப் பற்றிப் பேசவேண்டாமென பேய்களுக்குக் கட்டளையிட்டிருந்தார், யாரிடமும் சொல்ல வேண்டாமென தொழுநோயாளிக்குச் சொன்னார், மகளை உயிர்ப்பித்தபின் தந்தையிடமும் அமைதி காக்கச் சொன்னார், கடைசியில் சீடர்களிடமும் ரகசியம் காக்கச் சொல்கிறார். தந்தையின் வெளிப்படுத்தல் வழியாய் மகன் வெளிப்படவேண்டும் என்பதே அவரது எண்ணம்.

    மார்க் நற்செய்தியின் மிகப் பழமையான படிவங்கள் மார்க் 8 -ம் அதிகாரம், 8-ம் வசனத்தின் பாதியுடன் சட்டென முடிவடைகிறது. அதன் பின் 9 முதல் 20 வரையுள்ள வசனங்களை இன்னொருவர் எழுதியிருக்க வேண்டும்.

    ஏன் மார்க் சட்டென முடித்தார்?, அவர் கைது செய்யப்பட்டாரா?, அல்லது மார்க் எழுதிய கடைசிப் பகுதியை பேதுரு அங்கீகரிக்கவில்லையா? என எந்த விவரமும் தெரியவில்லை.
    வாழ்வில் நமக்கு நேரிடுகின்ற தடைகளெல்லாம், நம்மை இன்னும் வளர்த்தெடுப்பதற்கான படிகள் என்பதனை புரிந்து பயணம் செய்வோம்.
    பள்ளிக்கூடத்தில் எல்லா வகுப்பிலும் கேட்பது போலவே, அந்த வகுப்பிலும் ஒரு ஆசிரியை கேட்டார். குழந்தைகளே நீங்கள் என்னவாகப்போகிறீர்கள். பெரும்பான்மையான மாணாக்கர்கள், டாக்டர், என்ஜினீயர் என்றே பதில் சொன்னார்கள். ஒரே ஒரு மாணவி மட்டும் தான் ஒரு எழுத்தாளராக மாறப்போகிறேன் என்றதொரு வித்தியாசமான பதிலைச்சொன்னாள். உடனே ஏராளமான கிண்டல்களும், கேலி பேச்சுகளும் எழ ஆரம்பித்தன. வகுப்பாசிரியையும் கூட, இதெல்லாம் உன்னால் முடியாது. வேறு எதையாவது செய் என்றார். வேதனையின் உச்சத்திற்கு சென்ற அம்மாணவி அழுது கொண்டே இல்லம் திரும்பினாள்.

    மன உளைச்சலுக்குள்ளாகிய அந்த மாணவி அடைந்து போகும் கனவுகள் எனும் தலைப்பில் கவிதையொன்றை எழுதி வெளியிட்டாள். அதனை பிரசுரம் செய்த வார இதழ் இரண்டு டாலர் சன்மானம் அனுப்பியது. அதனை ஆசிரியையிடம் எடுத்துரைத்த போது மீண்டும் வசைமொழியே பதிலாக கிடைத்தது. ஏதோ அதிர்ஷ்டத்தால் பரிசு கிடைத்து விட்டது. அதற்காக எழுத்தாளராக மாறமுடியுமா? என்றார். அதன் பிறகு எழுத்துக்களை பற்றி யாரிடமும் பேசவே இல்லை. அவரின் திருமணத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த தோழி ஒருத்தி, இவரின் எழுத்துலக கனவை பற்றி கேட்டார்.

    அவரின் தொடர் ஊக்கத்தின் காரணமாக மீண்டும் எழுத ஆரம்பித்தார். பகலெல்லாம் வீட்டு வேலைகள். இரவில் குழந்தைகள் தூங்கிய பிறகு தனது நாவலை எழுத ஆரம்பித்தார். ஒன்பது மாதங்களில் உருவான நாவலின் தலைப்பே ‘அழுகிற காற்று’. இதனை ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பினார். இந்த நாவல் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதோடு, பார்வை இழந்தவர்கள் வாசிக்கக்கூடிய பிரேரெய்லி முறையிலும் வெளிவந்தன. இச்சிகத்தை தொட்டவரே லிண்டா ஸ்டபோர்ட்.

    தன்னை அவமானப்படுத்துகின்றவர்கள், தன்னை வளர்த்து விடுகின்றார்கள் என்றே பொருள். இறையருளின் காலமான இத்தவக்காலத்தில் பிறரை கொச்சைப்படுத்தாது, பிறரை பற்றி நேர்மறையாக பேசுவோம். நல்லதை உரக்க எடுத்துரைக்கின்ற மேன்மைக்குரிய மனிதர்களாய் உருமாறுவோம். வாழ்வில் நமக்கு நேரிடுகின்ற தடைகளெல்லாம், நம்மை இன்னும் வளர்த்தெடுப்பதற்கான படிகள் என்பதனை புரிந்து பயணம் செய்வோம். இயேசுவின் சிலுவையை விட மாபெரும் துன்பத்தினை நாம் இன்னும் சந்திக்கவில்லை என்ற மனநிலையோடு பயணிப்போம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    உண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.
    உண்மையான ஜெபம் என்பது பரிசுத்த ஆவியோடு ஜெபிப்பதுதான். பரிசுத்த ஆவியின் உறுதியில்லாமல் ஜெபித்தால் நீங்கள் விரைவில் சோர்ந்து போவீர்கள்.

    ஜெபம் தேவனுடைய கட்டளை. எந்த காரியத்திற்கு நாம் ஜெபம் செய்கின்றோம் என்பதை இறை வனுக்கு தெரியப்படுத்தவேண்டும். பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெபம் செய்யவேண்டும்.

    ‘நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி...” என்று யூதா 20 குறிப்பிடுகிறது.

    வேதத்தை வாசித்து உன் ஜெபத்திற்குண்டான வசனத்தை வைத்து ஜெபிக்கவேண்டும். நமது சிந்தனையை சிதறவிடாமல் ஒரே சிந்தையோடு ஜெபிக்கவேண்டும். மிகுந்த மன உறுதியோடு தேவ வசனமாகிய வார்த்தையை வைத்து ஜெபித்தால் உடன் பதில் கிடைக்கும்.

    ஒருசில ஜெபத்திற்கு உடன் பதில் கிடைக்கும். சில ஜெபத்திற்கு ஒரு வாரம் அல்லது ஒரு மாதமாகலாம். சில ஜெபத்திற்கு ஒரு வருடம்கூட ஆகலாம். ஆனாலும் ஜெபத்தை ஒருபோதும் விடக்கூடாது.

    வானத்தை நிலைப்படுத்தி பூமியை அஸ்திவாரப்படுத்தி, ஒரு வரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற, பரலோகத்தில் வீற்றிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனிடத்தில் நீ சோர்ந்து போகாமல் ஜெபம் செய்தால் அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பதில் தருவார்.

    நெல் விதைத்து, அது முளைத்து, நாற்றை பிடுங்கி, பின்பு வயல் நிலத்தை பக்குவப் படுத்தி, நாற்றை நடுகின்றோம். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு பூச்சி மருந்து அடித்து, களை பிடுங்கி, அதை பராமரித்து, கதிர் விட்டு, முதிர்ந்த பின் அறுவடை செய்ய நான்கைந்து மாதங்களாகி விடுகிறது. நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இடையில் அறுவடை செய்தால் நெல்மணி இருக்காது, ஆசீர்வாதமும் இருக்காது. அதுபோல சோர்ந்துபோகாமல் ஜெபித்தால் மிகுந்த ஆசீர்வாதம் வரும்.

    ‘நீ போய் அந்த எண்ெணய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்” (2 இரா.4:7).

    ஒரு விதவை ஸ்திரீ தேவ மனிதன் எலிசாவைப் பார்த்து ‘என் புருஷன் இறந்துபோனான். எனக்குக் கடன் கொடுத்தவன் கடனுக்குப் பதில் எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான்” என்றாள்.

    எலிசா ‘உன் வீட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். அவள் ‘ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது”’ என்றாள்.

    எலிசா ‘நீ போய் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே நின்று கதவை பூட்டி ஒரு குடம் எண்ணெய்யை எல்லா பாத்திரத்திலும் வார்த்துவை” என்றான். அப்படியே அவள் செய்தாள். கடைசி பாத்திரத்தில் வார்த்தபோது எண்ணெய் நின்றுபோனது. அதை எலிசாவிற்கு தெரிவித்தாள்.

    தேவ மனிதன் ‘நீ எல்லா எண்ணெய்யையும் விற்று கடனை தீர்த்து மீதியுள்ளதை வைத்து ஜீவனம் பண்ணு’ என்றான்.

    விதவை ஸ்திரீ சோர்ந்துபோகாமல் கடனுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தாள். தேவ கிருபையால் ஒரே நாளில் கடன் எல்லாம் தீர்ந்தது.

    ‘எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்’ இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்” (எஸ்தர் 4:16).

    அகாஸ்வேரு ராஜாவின் அரண்மனையில் ஆமான் என்ற மனிதன் ராஜாவின் கீழ் அதிகாரியாக இருந்தான். ஆமானை, காவல் காக்கிற மொர்தெகாய் வணங்கிக் கீழ்ப்படியவில்லை. இதனால் மொர்தெகாயின் ஜனமாகிய யூதர்களை அழிக்க திட்டமிட்டான். எனவே ராஜாவினிடத்தில் சென்று, ‘யூத ஜனங்கள் ராஜாவின் கட்டளைகளை மதிப்பதில்லை, ராஜா சம்மதித்தால் அவர்களை அழிக்கவேண்டும்’ என்றான். ராஜா ஆமானைப் பார்த்து, ‘உன் விருப்பப்படி செய்’ என்றான்.

    ஆமான் சகல யூதரையும் அழித்து கொன்று நிர்மூலமாக்க ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போட்டு தேசம் முழுவதும் தெரியப்படுத்தினான். இந்த காரியத்தை மொர்தெகாய் அரண்மனையில் இருக்கிற எஸ்தருக்கு தெரிவித்தான்.

    ராஜா அழைக்காமல் யாதொரு மனிதரும் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் சாகவேண்டும் என்ற சட்டம் அப்போது இருந்தது. இருந்தாலும் எஸ்தர் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசித்தாள்.

    இரண்டாம் நாள் விருந்தில் ராஜா ‘எஸ்தர் ராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன?’ என்று கேட்டான். அப்பொழுது எஸ்தர் ‘ராஜாவே, யூத ஜனத்தை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும் படி ஆமான், ராஜாவின் முத்திரையை போட்டு தேசம் முழுவதிலும் தெரியப்படுத்தினான்’ என்றாள்.

    தேசம் முழுவதும் ஆமான் தீவினையாய் எழுதிய கட்டளைகள் செல்லாமல் போக ராஜாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மொர் தெகாய், எஸ்தர், யூதர்கள் சோர்ந்துபோகாமல் ஜெபித்ததால் யூத ஜனங்கள் உயிரோடு இருந்தார்கள். ஆமென்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி,

    சென்னை-50.
    ×