search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பிறரிடம் நேர்மறையாக பேசுவோம்

    வாழ்வில் நமக்கு நேரிடுகின்ற தடைகளெல்லாம், நம்மை இன்னும் வளர்த்தெடுப்பதற்கான படிகள் என்பதனை புரிந்து பயணம் செய்வோம்.
    பள்ளிக்கூடத்தில் எல்லா வகுப்பிலும் கேட்பது போலவே, அந்த வகுப்பிலும் ஒரு ஆசிரியை கேட்டார். குழந்தைகளே நீங்கள் என்னவாகப்போகிறீர்கள். பெரும்பான்மையான மாணாக்கர்கள், டாக்டர், என்ஜினீயர் என்றே பதில் சொன்னார்கள். ஒரே ஒரு மாணவி மட்டும் தான் ஒரு எழுத்தாளராக மாறப்போகிறேன் என்றதொரு வித்தியாசமான பதிலைச்சொன்னாள். உடனே ஏராளமான கிண்டல்களும், கேலி பேச்சுகளும் எழ ஆரம்பித்தன. வகுப்பாசிரியையும் கூட, இதெல்லாம் உன்னால் முடியாது. வேறு எதையாவது செய் என்றார். வேதனையின் உச்சத்திற்கு சென்ற அம்மாணவி அழுது கொண்டே இல்லம் திரும்பினாள்.

    மன உளைச்சலுக்குள்ளாகிய அந்த மாணவி அடைந்து போகும் கனவுகள் எனும் தலைப்பில் கவிதையொன்றை எழுதி வெளியிட்டாள். அதனை பிரசுரம் செய்த வார இதழ் இரண்டு டாலர் சன்மானம் அனுப்பியது. அதனை ஆசிரியையிடம் எடுத்துரைத்த போது மீண்டும் வசைமொழியே பதிலாக கிடைத்தது. ஏதோ அதிர்ஷ்டத்தால் பரிசு கிடைத்து விட்டது. அதற்காக எழுத்தாளராக மாறமுடியுமா? என்றார். அதன் பிறகு எழுத்துக்களை பற்றி யாரிடமும் பேசவே இல்லை. அவரின் திருமணத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த தோழி ஒருத்தி, இவரின் எழுத்துலக கனவை பற்றி கேட்டார்.

    அவரின் தொடர் ஊக்கத்தின் காரணமாக மீண்டும் எழுத ஆரம்பித்தார். பகலெல்லாம் வீட்டு வேலைகள். இரவில் குழந்தைகள் தூங்கிய பிறகு தனது நாவலை எழுத ஆரம்பித்தார். ஒன்பது மாதங்களில் உருவான நாவலின் தலைப்பே ‘அழுகிற காற்று’. இதனை ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பினார். இந்த நாவல் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதோடு, பார்வை இழந்தவர்கள் வாசிக்கக்கூடிய பிரேரெய்லி முறையிலும் வெளிவந்தன. இச்சிகத்தை தொட்டவரே லிண்டா ஸ்டபோர்ட்.

    தன்னை அவமானப்படுத்துகின்றவர்கள், தன்னை வளர்த்து விடுகின்றார்கள் என்றே பொருள். இறையருளின் காலமான இத்தவக்காலத்தில் பிறரை கொச்சைப்படுத்தாது, பிறரை பற்றி நேர்மறையாக பேசுவோம். நல்லதை உரக்க எடுத்துரைக்கின்ற மேன்மைக்குரிய மனிதர்களாய் உருமாறுவோம். வாழ்வில் நமக்கு நேரிடுகின்ற தடைகளெல்லாம், நம்மை இன்னும் வளர்த்தெடுப்பதற்கான படிகள் என்பதனை புரிந்து பயணம் செய்வோம். இயேசுவின் சிலுவையை விட மாபெரும் துன்பத்தினை நாம் இன்னும் சந்திக்கவில்லை என்ற மனநிலையோடு பயணிப்போம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×