என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மனிதனின் அத்தியாவசிய தேவைக்கு தற்போது பணம் ஒன்றே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பணத்திற்காக நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்யக்கூடாது? என்று ஒரு சின்ன விளக்கத்தை இங்கு காண்போம்.
    மனிதனின் அத்தியாவசிய தேவைக்கு தற்போது பணம் ஒன்றே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பணத்திற்காக நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்யக்கூடாது? என்று ஒரு சின்ன விளக்கத்தை இங்கு காண்போம்.

    நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி- பிள்ளைகள் என்று நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் ஏதோ ஒரு தேவைக்காக பணம் தேவைப்படுகிறது. நம்மிடத்தில் பணம் இல்லை. இப்போது என்ன செய்யலாம் என்று நம் மனம் துடிக்கும். அப்படி துடித்து கொண்டிருக்கும் மனதிலே உடனே ஒன்று தோன்றும். எப்படியாவது பணம் நமக்கு கிடைக்க வேண்டும். அதனால் யாரிடமாவது பணத்தை கேட்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.

    சில நண்பர்களிடம் போய், நான் ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது. பணம் இருந்தால் கொஞ்சம் கடன் கொடுத்தால் ஊருக்கு போய்விட்டு வந்து தருகிறேன் என்று கேட்டு பார்ப்போம். அவர்கள் இப்போது பணம் இல்லை என்று கூறுவார்கள். பின்னர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் கேட்போம். அவர்களும் உடனே பணம் கொடுக்காமல் நாளை பார்ப்போம் அல்லது ஒரு வாரம் ஆகலாம் என்று கூறுவார்கள். இப்படி பல்வேறு வழியில் பணத்தை பெற்றுக்கொள்ள முயன்றும் கிடைக்காமல் போகும்.

    எனவே ஊருக்கு போகிறதுக்குத்தானே பணம் கேட்கிறோம். வெட்டியாக செலவு செய்வதற்காகவா? நம் பணம் கேட்கிறோம் என்று நினைத்துக்கொண்டு வேறொருவரிடம் சென்று ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பணத்தை பெற்றுக்கொள்கிறோம். இது மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையை நடத்த பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு பொய்களை சொல்லியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எனவே எந்த வேளையிலும் பொய்பேசாமல், நம்முடைய வாயில் இருந்து புறப்படும் வார்த்தைகள் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதைத்தான் வேதாகமத்தில் மத்தேயு 5-ம் அதிகாரம் 37-ம் வசனத்தில் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள், இதற்கு மீறினால் தீமையே உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே நம்முடைய வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாதவர்களாய் உள்ளதை உள்ளபடி சொல்லி வாழ வேண்டும். இல்லையென்றால் நாம் செய்கிறது எல்லாமே நமக்கே தீமையாக வந்து முடியும். எனவே தேவனுடைய பார்வையில் நாம் உண்மையுள்ளவர்களாய் வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

    சகோ.கிறிஸ்டோபர், வீரபாண்டி.
    சில குடும்பங்களில் ஏற்பட்ட வியாபார தோல்வி, மரணங்கள், உறவு பிரிந்த நிலையில், சிலருக்கு ஏற்பட்ட வேலை இழப்புகள், திருமண தடைகள், சிலரால் இழைக்கப்பட்ட மிக மோசமான வேதனைக்குள் தள்ளியிருக்கின்றன.
    “இதோ நான் புதிய காரியத்தை செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெயிளில் ஆறுகளையும் உண்டாக்குவேன்(ஏசாயா 43:19) ”

    இந்தியாவுக்கு கிறிஸ்தவத்தை சுமந்து வந்த மிஷனரிகளில் மிக முக்கியமானவர் வில்லியம் கேரி. அவர் இந்தியாவிற்கு வந்து இந்திய மொழிகளை கற்று இந்தியர்களுக்கு ஏசு கிறிஸ்துவை பற்றி நற்செய்தி அறிவித்தவர். தொடக்கத்தில் அவர் வங்காள மொழியை கற்று அந்த மொழியல் புதிய ஏற்பாட்டு வேதாகமத்தை சுமார் 12 ஆண்டுகால கடும் முயற்சியில் மொழி பெயர்ப்பு செய்தார். ஆனால் அச்சகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் அனைத்தும் எரிந்து போனது.

    இருப்பினும் அவர் தன்னை திடப்படுத்திக்கொண்டு, மீண்டும் மொழி பெயர்ப்பு பணியில் இறங்கினார். இரண்டாவது மொழி பெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை விட மிக சிறப்பானதாகவும், தவறுகள் தவிர்க்கப்பட்டதாகவும் இருந்தது. ஒரு விபத்து ஒரு பெரிய முயற்சியின் பலனை அழித்துப்போட்டது போல தோன்றினாலும் உண்மையில் சிறப்பான ஒன்று உருவாவதற்கே அது வழிவகுத்தது.

    கடவுள் சில நஷ்டங்கள் வாயிலாகவும், சில லாபங்களை உருவாக்குகிறார்.

    சில நேரங்களில் நமக்கு நிகழ்கின்ற சில காரியங்கள் எந்த விதத்திலும் நன்மையானது என்று பார்க்க முடியாத அளவிற்கு தீமையானவையே ஆனால் நாம் கடவுளோடு இருந்தால் அந்த தீமையின் நடுவிலும் கடவுள் ஒரு நன்மையை உருவாக்குகிறார். நம்முடைய வாழ்க்கையின் எந்தவொரு தோல்வியின் நடுவிலும் நஷ்டத்தின் நடுவிலும் ஏமாற்றத்தின் நடுவிலும் கடவுளை உறுதியாக பற்றிக்கொள்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். அப்போது அந்த தோல்விகளையும் நஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் கடவுள் உபயோகித்து ஒரு ஆசீர்வாதமான ஒன்றை ஏற்படுத்த வல்லவராயிருக்கின்றார்.

    நகோழி தனது கணவனையும இழந்து 2 மகன்களையும் இழந்து தனது மருமகள்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி முதுமை அவளை வாட்டியனது என அனைத்தும் வேதனையானவைகளே. அவற்றை நன்மைகள் என கூற முடியாது. ஆனால் அந்த தீமையான சூழல்களை கடவுள் பக்குவமாக உபயோகித்து நகோமியின் மருமகள் ரூத்திதின் மகனான ஓபேத் தாவீது அரசனுக்கு தாத்தாவாகும் ஒரு நன்மையான சூழலை உருவாக்கினார் என்பது எத்தனை ஆறுதலான விஷயம்.

    சில குடும்பங்களில் ஏற்பட்ட வியாபார தோல்வி, மரணங்கள், உறவு பிரிந்த நிலையில், சிலருக்கு ஏற்பட்ட வேலை இழப்புகள், திருமண தடைகள், சிலரால் இழைக்கப்பட்ட மிக மோசமான வேதனைக்குள் தள்ளியிருக்கின்றன. ஆனால் அனைகளின் நடுவில் கடவுளை உறுதியாக பிடித்துக்கொண்டதால் கடவுள் கேடானவைகளின் நடுவிலும் செயல்பட்டு முந்தியிருந்ததை விட மிக மேன்மையான சூழ்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

    “தொடக்கத்தில் நீ பெற்ற சில தோல்விகள், எதிர்கால
    வெற்றிகளை தக்கவைக்கும் முள்வேலிகள்.”

    சாம்சன் பால்.
    விவிலியத்திலுள்ள நற்செய்தி நூல்களில் முதலாவதாக அமைந்துள்ள நூல் மத்தேயு. ‘மத்தேயு’ என்பதற்கு ‘கடவுளின் பரிசு’ என்பது பொருள்.
    விவிலியத்திலுள்ள நற்செய்தி நூல்களில் முதலாவதாக அமைந்துள்ள நூல் மத்தேயு. மத்தேயு ஒரு லேவியர் குலத்தைச் சார்ந்தவர். வரி வசூலித்துக் கொண்டிருந்த அவரை இயேசு அழைத்தார். உடனே அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்சென்றவர் இவர். இயேசு வின் பன்னிரண்டு திருத்தூதர்களில் இவரும் ஒருவர். ‘மத்தேயு’ என்பதற்கு ‘கடவுளின் பரிசு’ என்பது பொருள்.

    நற்செய்தி நூல்களில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர் இந்த மத்தேயு. நற்செய்தியை முதன் முதலில் எழுதியவர் மத்தேயு அல்ல. மார்க்.

    மார்க் நூலை மையமாகக் கொண்டு தான் மத்தேயு மற்றும் லூக்கா நூல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். ஆனால் அவற்றைத் தாண்டி பல விஷயங்களை மத்தேயு தனது நூலில் இணைக்கிறார்.

    மத்தேயு மூன்று ஆண்டுகள் இயேசுவோடு தொடர்ந்து நடந்தவர் என்பதால் இயேசுவைப் பற்றி நிறைய விஷயங்களை நேரடியாகவே அறிந்து கொண்டவர். இயேசுவை “யூதர்களின் அரசர்” என முன்னிலைப்படுத்துவதே அவரது நற்செய்தியின் நோக்கமாக இருந்தது.

    கிழக்கிலிருந்து ஞானியர் வந்து இயேசுவைப் பணிவதை மத்தேயுவே எழுதினார். இறப்பில் கூட முள்முடியைச் சூட்டும் நிகழ்ச்சியை மத்தேயு விவரிக்கிறார். ‘யூதருக்கு அரசர்’ எனும் சிலுவை மொழியை குறிப்பிடுகிறார். இயேசுவை அரசராகக் காட்டும் பதிவுகளே இவை.

    பழைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலே இயேசுவின் பிறப்பு என்பதை நிறுவ விரும்புகிறார் மத்தேயு. அதனால் தான் பழைய ஏற்பாடு முடிந்தவுடன் மத்தேயு நற்செய்தி வருகிறது. இல்லையேல் முதலில் எழுதப்பட்ட மார்க் நூல் தான் வந்திருக்க வேண்டும்.

    புதிதாய் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்காய் மத்தேயு தனது நூலை மத்தேயு எழுதுகிறார். அதிலும் குறிப்பாக யூதர்களை மனதில் வைத்து எழுதுகிறார். அதனால் தான் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் உட்பட எல்லாமே பழைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் என ஒப்பிட்டுப் பேசுகிறார்.

    அதே போல ‘உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும்’ அறைகூவலையும் விடுக்கிறார்.

    நான்கு நற்செய்திகளிலுமே இயேசுவின் வாழ்க்கையை அதிகமாய்ப் பதிவு செய்த நூல் என மத்தேயுவைச் சொல்லலாம். இயேசுவின் வாழ்க்கையை விட, மரணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் மத்தேயு. இயேசுவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பதினான்கு வாக்கியங்களை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.

    மத்தேயுவின் நற்செய்தி சற்றே மென்மைப்படுத்தப்பட்ட நடையில், கடினச் சொற்களையும், வீரியமான விவாதங்களையும் கொஞ்சம் கட்டுப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இவரது நூலில் பல விஷயங்கள் பழைய ஏற்பாட்டு மனநிலையோடு பொருந்திப் போகும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக மத்தேயு ஐந்து பிரசங்கங்களை குறிப்பிடுகிறார். மலைப்பிரசங்கம் மற்றும் நான்கு விண்ணரசு பிரசங்கங்கள். இவை பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களான தோராவுக்கு இணை எனலாம்.

    மத்தேயு இயேசுவின் மூதாதையரின் பட்டியலை யூதர்கள் அங்கீகரிக்கும் வண்ணம் பதினான்கு, பதினான்காய் மூன்று கட்டமாக கொடுக்கிறார். முதல் பதினான்கு ஆபிரகாம் முதல் தாவீது வரையும், அடுத்தது தாவீது முதல் நாட்டைவிட்டு வெளியேறும் காலம் வரையும், மூன்றாவது அதன் பின் இயேசுவின் காலம் வரையும் அமைகிறது. இது நீதித்தலைவர்கள், அரசர்கள், குருக்கள் எனும் கால இடைவெளியில் அமைவது குறிப்பிடத்தக்கது.

    தலைமுறை அட்டவணையையும் இயேசுவின் மண்ணகத் தந்தை யோசேப்பின் வழியில் மத்தேயு எழுதுகிறார். யூதர்களுக்கு ஆண்களின் வம்சாவழியே முக்கியம். மத்தேயு அந்த வழியில் இயேசுவை தாவீது மன்னனின் அரச பதவிக்கு தகுதியான வாரிசாய்க் காட்டுகிறார்.

    மத்தேயு நற்செய்தியின் கட்டமைப்பானது போதனைகள், செயல்கள் என மாறி மாறி வரும்படி அமைந்துள்ளது. இயேசு குற்றவாளியானதால் கொல்லப்படவில்லை, தீர்க்கதரிசன நிறைவேறலுக்காகவே கொல்லப்பட்டார் என்பதை மத்தேயு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

    இயேசுவின் இறப்புக்குப் பின் கல்லறை திறப்பதையும், இறந்தோர் எழுந்ததையும் மத்தேயு பதிவு செய்கிறார். அதே போல இயேசுவின் கல்லறைக்கு வீரர்கள் காவல் இருப்பதையும் மத்தேயுவே எழுதுகிறார். இயேசுவின் உயிர்ப்பு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமானது என்பதே மத்தேயுவின் நோக்கம். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் மத்தேயுவே அதிகம் எழுதுகிறார்.

    பழைய ஏற்பாட்டு வசனங்களை நேரடியாக 29 இடங்களிலும், மறைமுகமாக 121 இடங்களிலும் மத்தேயு குறிப்பிடுகிறார். வேறெந்த நற்செய்தியாளரும் இந்த அளவுக்குப் பயன்படுத்தவில்லை. இயேசு சட்டங்களை ஒழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தார் என்பதையே மத்தேயு வலியுறுத்துகிறார். யூதர்களை முதன்மைப்படுத்தினாலும் பிற இன மக்கள் குறித்த நிகழ்வுகள், அறைகூவல்கள் போன்றவையும் அதிகமாக மத்தேயு நூலில் இருக்கின்றன.

    திருச்சபையைக் குறித்தும், விண்ணக வாழ்க்கையை மண்ணில் வாழ்வது குறித்தும் மிக தெளிவாகவும் அழகாகவும் மத்தேயுவே பதிவு செய்கிறார். ஆதிகால திருச்சபையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, வரவேற்கப்பட்ட நற்செய்தி நூல் மத்தேயு தான்.

    கிறிஸ்தவ விசுவாசத்துக்குள் நுழைய விரும்பும் யூதர்களையும், பிற இன மக்களையும் ஒரு சேர வசீகரிக்கிறது மத்தேயு நற்செய்தி.

    சேவியர்
    சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்(யாத் 6:12)

    பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மேல் போர்த்தொடுக்கப்போகும் பெரிய படைக்கும் தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக எலி ஒன்று குறுக்கிடவே வானை எடுத்துக்கொண்டு அதனை வெட்டிம்படி துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசம், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெறபோகிறேன் என்று நினைத்து யுத்தத்துக்கு போகாமல் பின்வாங்கிக்போனான்.

    சில நேரங்களில் இந்த புத்தி இழந்த இளவரசனைப் போல நாமும் சிறுசிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய் நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றோம். இஸ்ரவேல் மக்களைவிடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு துவக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக் கவில்லை. எனவே சோர்ந்து போன அவன் இவர்களே எனக்கு செவி கொடுக்காத போது எகிப்தின் ராஜா எனக்கு எப்படி செவிகொடுப்பான என்ற தயங்கி நின்றான்.
    ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கி போக வைத்தார்.

    நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்று போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமையாளர்களாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்த திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்ன காரியங்களைல் சாதாரண உலக மனிதன் அடையும் வெற்றியை கூடி அடைய முடியாமல் தோல்வி அடைய தருணங்கள் உண்டு. இருப்பினும் இந்த சிறிய தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்து விட முடியாது.

    ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய போதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்த போது போதுரு அதை விட மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.

    சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சங்களுக்கு முன்னால் நின்று பவுலைப்போல தைரியமாக பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    - சாம்சன் பால்.
    நான் தான் என்னை இயக்க வேண்டும் என்ற புத்துணர்வோடு பயணத்தை ஆரம்பிப்போம். அப்போதுதான் வாழ்க்கை சுவையுள்ள அர்த்தமுள்ள பயணமாக உருமாறி நிற்கும்.
    நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது? எப்படியெல்லாம் நம் ஏமாற்றப்படுகிறோம்? கொள்ளையடிக்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்பாய் இருப்பவர்கள் ஏராளமான சாதனைகளை செய்கிறவர்களாக மாறுகின்றனர்.

    மனிதர்களாகிய நாம் இவ்வுலகினில் படைக்கப்பட்டு இருப்பதன் அடிப்படை நோக்கமே பிறரோடு இணைந்து செயலாற்றுவதற்குத்தான். இன்றைய உலகம் நம்மை வழிமாற்றி திசை திருப்பி விடவே பல நேரங்களில் முயற்சிக்கிறது. பணம், பொருள், அதிகாரம் போன்றவற்றை நமக்கு காண்பித்து நம்மை மூடர்களாக மாற்ற துடிக்கறது. சாதி, இனம், மொழி போன்றவற்றின் பெயரால் பிரித்தாளவும் முயற்சி நடக்கிறது. இப்படிப்பட்ட உலக சிக்கலுக்கு மத்தியில் உயிரோட்டமான தொடர்புகளை உருவாக்க நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

    இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் விழிப்போடு இருந்து இறைவனுக்கு உகந்ததை அடையாளம் காண வேண்டியது நமது முதன்மையான பணியாய் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் சில நிமிடங்கள் இணைந்திருக்க பழக வேண்டும். அப்போது நம்மை சுற்றி என்னென்ன நடக்கிறது என்பதை உணர்ந்திட இயலும். உங்கள் கண்ணும், காதும் விழித்திருந்தால் கருத்தும், இதயமும் திறந்திருந்தால் எங்கிருந்தோ வரும் யோசனைகள் கூட பயன்தரும். இன்று நம்மில் பலர் பரபரப்பாக இயங்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். பிறரை பற்றியும் தனக்குள் நடந்தேறுகிற உள்மன உணர்வுகளை பற்றியும் அதிக கவனம் எடுக்காதவர்களாகவே திகழ்கின்றனர்.

    ஏதோ பிறந்து விட்டோம், வாழ்ந்த விட வேண்டும் என்பதல்ல வாழ்வின் நோக்கம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இலக்கினை வடிவமைத்து அதற்கேற்ப செயலாற்றுவதே சிறந்த வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் திட்டமிடுவோம். இன்று நான் முதன்மைப்படுத்த வேண்டிய காரியங்கள் என்னென்ன? எவற்றை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்? யார் என்னை உந்தி தள்ளுகிறார்கள்? என்பதை எல்லாம் ஆய்வு செய்து கண்டு உணர்வோம். முன்னோக்கி செல்கிற பயணத்தில் ஒருபோதும் தடுமாறி விழாதவாறு பார்த்திடுவோம். அப்படியே தடுமாறி விழுந்திட்டாலும், எழுந்து நடக்க முடியும் என்ற உறுதிப்பாட்டினை பெற்றிடுவோம். நான் தான் என்னை இயக்க வேண்டும் என்ற புத்துணர்வோடு பயணத்தை ஆரம்பிப்போம். அப்போதுதான் வாழ்க்கை சுவையுள்ள அர்த்தமுள்ள பயணமாக உருமாறி நிற்கும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்
    கோட்டார் மறை மாவட்டம்.
    நீங்கள் இயேசு என்கிற நாமத்தை வேண்டிக்கொள்ளும்போது அந்த தெய்வம் உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளி நீங்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை உங்களுக்கு அருளிச்செய்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
    இந்த நவீன யுகத்தில் ஒவ்வொரு மனிதனும் நவீன எந்திரம் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. ஒவ்வொரு வரும் தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவும், தங்கள் குடும்பத்தைக் கரைசேர்க்கவும் இடைவிடாமல் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    சமுதாயத்தில் மனிதாபிமானம் குறைந்துவிட்டது. அன்பு, பாசம், மனித நேயம் மிக மிக குறைந்துவிட்டது என்றால் அதுவே நிதர்சனமான உண்மை. தமது சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க அடுத்தவரின் இயல்பு வாழ்க்கையைக் கூட துச்சமாக நினைப்பவர்கள் பெருகிவிட்டனர். ஆகவே தான் துணிகரமான கொலைகளும், கொள்ளைகளும் தேசத்தில் மலிந்து விட்டன.

    ஒரு செயினை அறுப்பதற்காக கழுத்தையே அறுக்கும் அவல நிலையை அதிகமாக நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. கடந்த காலங்களில் வாழ்ந்த பெரியவர்களை நாம் கேட்டால், ‘இது மகா கலி காலம். தேசத்தில் உண்மை, நேர்மை செத்துவிட்டது’ என்று புலம்புவார்கள்.

    இன்றைக்கு பருவம் வந்த பெண் களுக்கு மட்டுமல்ல, பச்சிளம் குழந்தை களுக்கும் கூட நேரிடும் கொடுமை மிகுதி. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பச்சிளம் குழந்தைகள் எத்தனை எத்தனை?, கல்லூரிக்குப் பேனா நோட்டுப் புத்தகத்துடன் போய் வந்த காலங்கள் மலையேறி, பட்டாக் கத்தியுடன் போய் வரும் வாலிபர்கள் ஏராளம்.

    பெண் பிள்ளையை வைத்துக் கொண்டிருப்பவர்கள், ‘வயிற்றிலே நெருப்பைக்கட்டிக் கொண்டிருக்கிறேன், எப்படி இவளைக் கரை சேர்க்கப் போகிறேனோ?’ என்று அன்று புலம்பினார்கள். இன்றைக்கோ பிள்ளைகளை வைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவரது கதறலும் இப் படியாகவே இருக்கிறது.

    இந்த சூழ்நிலையைத்தான் அருள் நாதர் இயேசு அவர் ஆற்றிய சொற்பொழிவு களிலே திட்டமாய்க் கூறினார். ‘அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்’ (மத்தேயு 24:12).

    ஆனால் அன்பே உருவான இறைமகன் இயேசுவின் போதனைகளை யார் வாசித்து தியானிக்கிறார்களோ, அப்படியே அவர் களுடைய வாழ்க்கை ஒரு பெரிய மாற்றத்திற்குள் வந்து விடுகிறது.

    காரணம் இயேசு அன்பு நிறைந்தவர், அன்பே உருவானவர், அன்பின் சிகரம் இயேசு தன் அன்பின் மிகுதியினால் மனுக்குல மீட்பிற்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். அவருடைய வாழ்வின் தொடக்கமும் முடிவும் அன்புதான். ஆகவே தான் தன்னை சிலுவையில் அறையும்படி காட்டி கொடுத்த யூதாசை கட்டி அணைத்து முத்தமிட்டார். ‘சிநேகிதனே, முத்தத்தினாலேயோ என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்’ என்று அன்பின் வார்த்தைகளைப் பேசினார். ஆம், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

    ஒரு கொடுமையான வரி வசூலிப்பவனாய் இருந்தான் சகேயு. அநேகரிடம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் வசூலித்த அவனை, தன் ஆஸ்திகளை விற்று ஏழைகளுக்கு கொடுக்கத்தக்கதான விதத்தில் மாற்றினார் இயேசு. ‘எனக்குள்ளதையெல்லாம் விற்று ஏழை களுக்குக் கொடுக்கிறேன். யாரையாவது ஏமாற்றியிருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கிறேன்’ என மனம் மாறினான் சகேயு.

    யாரைப் பார்த்தாலும் துன்புறுத்தி, அடித்து கொலை செய்யக்கூடத் தயக்கம் காட்டாத ஒரு கொடூரமான மனிதனை, இயேசு கிறிஸ்து சாந்தமுள்ள மனிதனாக தெக்கப்போலி என்னும் நாட்டிலே மாற்றினார்.

    “நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவை களையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று அவனை நற்காரியங்களை அறிவிக்கும் சுவிசேஷகனாக இயேசு மாற்றினார்”. ( மாற்கு 5:1-20).

    அநேக செல்வங்களை சம்பாதிக்க தன் சரீரத்தையே விற்றுக்கொண்டிருந்த ஒரு விபசாரம் செய்கிற ஸ்திரீயை அவளுடைய பாவங்களை மன்னித்து குண சாலியான ஸ்திரீயாக இயேசு மாற்றினார் (யோவான் 8 :1-11). “இனிமேல் பாவம் செய்யாதே” எனும் அறிவுரையுடன் அனுப்பி வைத்தார்.

    ஆம் அருள்நாதர் இயேசு பாவிகளை மன்னிக்கவும், மறுவாழ்வு கொடுக்கவுமே இந்த பூவுலகத்திற்கு வந்தார். அவரைக் குறித்து யோவான் இப்படியாக கூறுகிறார். ‘உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி’ (யோவான் 1:9).

    இயேசு கிறிஸ்துவும் தன்னை குறித்து இப்படியாக கூறுகிறார், ‘நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்’. (யோவான் 8:12).

    ஆம், எனக்கன்பானவர்களே, ‘வேதம் திட்டமும் தெளிவுமாய்க் கூறுகிறது அவரை நோக்கி பார்த்த முகங்கள் பிரகாசமடைந்து அவர்கள் வெட்கப்படுவதில்லையென்று’ (சங்கீதம் 34:5).

    “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” என நாம் தைரியமாகச் சொல்லலாம்.

    அவர் இப்படியாகக் கூறினார், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்று.

    நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    ஆம், நீங்கள் இயேசு என்கிற நாமத்தை வேண்டிக்கொள்ளும்போது அந்த தெய்வம் உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளி நீங்கள் வேண்டிக்கொண்ட காரியத்தை உங்களுக்கு அருளிச்செய்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.
    யோவேல் நூல் கி.மு. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலாளர்கள் நம்புகின்றனர். ‘யோவேல்’ என்பதற்கு ‘யாவே தான் கடவுள்’ என்பது பொருள்.
    யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மிகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

    யோவேல் நூல் கி.மு. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலாளர்கள் நம்புகின்றனர். ‘யோவேல்’ என்பதற்கு ‘யாவே தான் கடவுள்’ என்பது பொருள். இந்த நூலில் மூன்று அதிகாரங்களும், எழுபத்து மூன்று வசனங்களும், இரண்டாயிரத்து முப்பத்து நான்கு வார்த்தைகளும் உள்ளன. யூதாவில் ஆரம்பகாலத்தில் இறைவாக்குரைத்தவர் யோவேல் இறைவாக்கினர்.

    ‘ஆண்டவரின் நாள்’ எனும் பதத்தை பயன்படுத்திய யோவேல் அதை மிகப்பெரிய எச்சரிக்கையாய் மக்களுக்குக் கொடுத்தார். தீர்ப்பு என்பதும் கடவுளின் நியாயமும் வேற்றின மக்கள் மீதல்ல, இஸ்ரேல் நாட்டின் மீதே விழும் எனும் எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்தவர் அவர் தான்.

    ‘ஆண்டவரின் நாள்’ என்பது வெளிச்சத்தின் வரவல்ல, இருளின் வரவு, என அவரது இறைவாக்கு அதிர்ச்சியளிக்கிறது.

    பல கிறிஸ்தவர்கள் தாங்கள் விண்ணகம் செல்வது சர்வ நிச்சயம் என்றும், எப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் கை விடமாட்டார் என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு யோவேலின் எச்சரிக்கை என்னவென்றால், ‘ஆண்டவரின் நாள்’ உங்களுக்கு இருளாய் வரும் என்பதே.

    வெட்டுக்கிளி களால் நாடு அடையப்போகும் அழிவை யோவேல் இறைவாக்கினர் முன்னுரைத்தார். நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும். உண்பதற்கும் எதுவுமின்றி எல்லாம் அழிக்கப்படும். என்பதே அவரது வார்த்தை. சுமார் 60 கோடி வெட்டுக்கிளிகள், அறுநூற்று நாற்பது கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விஸ்வரூப வடிவமாய் நாட்டில் நுழைந்தால் ஒரு நாளைக்கு அவை தின்று குவிக்ககூடிய தானியங்கள் எண்பதாயிரம் டன், என்கிறது ஒரு கணக்கு.

    வெட்டுக்கிளிகள் இறைவனின் தீர்ப்பாய் வருவதை ‘விடுதலைப்பயணம்’ நூலில் மோசேயின் வாழ்க்கையில் வாசிக்கலாம். இறைவன் அனுப்பிய பத்து வாதைகளில் எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயற்கையாகவே நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள் இயற்கைக்கு மாறான அளவுக்கு விஸ்வரூபமாக நடக்கும் போது இறைவனின் கரம் அதில் இருப்பதை நாம் உணர முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் வருகையும் அப்படிப்பட்டதே.

    இயற்கை பேரழிவுகள், இடர்கள் எல்லாமே இறைவன் நமக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    யோவேல் இறைவாக்கினரின் வெட்டுக்கிளிகள் உவமை இன்னொரு விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது பாபிலோனியர்களின் படையெடுப்பு. வெட்டுக்கிளிகளைப் போல படையெடுத்து வருகின்ற வீரர்களை யோவேல் பதிவு செய்கிறார். பாபிலோனியர்களின் படையெடுப்பு தான் வெட்டுக்கிளிகளைப் போல அனைத்தையும் அழித்து நகர்கிறது. ஒரு குழந்தையோ, ஒரு உயிருள்ள கால்நடையோ கூட தப்பவில்லை என்பது துயரமான வரலாறு.

    யோவேல் நூலின் இரண்டாம் பாகம், மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. மக்கள் மனம் திரும்பாவிடில் இறைவனின் தண்டனை மிக அதிகமாய் இருக்கும் என்பதை அவரது வார்த்தைகள் எடுத்தியம்புகின்றன.

    மக்கள், யோவேலின் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து மனம் திரும்பவில்லை. அதை விட, மது அருந்தி மயங்கிக் கிடப்பது நல்லது என சென்று விட்டனர். இப்போது இரண்டாம் முறையாக யோவேல் அழைப்பு விடுக்கிறார்.

    “உங்கள் உடைகளையல்ல, இதயங் களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்பது புதிய அறைகூவலாக வருகிறது. வெளிப்படையான அடையாளமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவையானது, என்பதே அதன் பொருள்.

    யோவேல் இறைவாக்கினர் மனம் திரும்புதலை மகிழ்ச்சியின் அடையாளமாய் கூறுகிறார். இழந்து போனவை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் வார்த்தையையும், ஆறுதலின் வார்த்தையையும் தருகிறார்.

    ‘எனது வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன்’ என இறைவன் வாக்களித்தார். “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். அந்நாட்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என்றுரைத்தார் அவர்.

    ஆண்டவரின் நாள் எப்படி இருக்கும், அதற்கு என்ன அறிகுறி தெரியும் என்பதைப் பற்றி யோவேல் உரைத்தது மிக முக்கியமானது, “எங்குமே, ரத்த ஆறாகவும், நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ ரத்தமாக மாறும்” என்றார் அவர்.

    மீட்பின் நம்பிக்கையாக அவரது வார்த்தை “ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்” என ஒலிக்கிறது.

    யோவேல் நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேறிவிட்டன. இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்புடன் மற்றவையும் முடிவு பெறும்.

    மிகவும் சுருக்கமான இந்த நூல் மிகவும் பரந்துபட்ட இறை சிந்தனைகளை நமக்குத் தருகிறது.
    பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள புனித பாத்திமா அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    பெங்களூரு ஜாலஹள்ளி புனித பாத்திமா அன்னை ஆலய 61-வது ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி பெங்களூரு மார்ட்டின் குமார் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடந்தன. இந்த பெருவிழா கடந்த 13-ந் தேதி நிறைவடைந்தது. ஆலய பெருவிழா நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு தமிழில் ஜான் அந்தோணியும், 8 மணிக்கு கன்னடத்தில் ஜோசப் மெனேசெசும், 9.30 மணிக்கு மும்மொழியில் ஜெயநாதனும் திருப்பலி நடத்தினர்.

    காலை 11 மணிக்கு திருப்பய திருநாள் திருப்பலியை ஜான் ஆபிரகாமும், மாலை 3 மணிக்கு கொங்கனியில் மைக்கேல் மெனேசெசும், மாலை 4 மணிக்கு மலையாளத்தில் சூவன்ஸ்டாட் பாதர்சும், மாலை 5 மணிக்கு ஆங்கிலத்தில் விவியன் ரிச்சர்டும் திருப்பலி நடத்தினார்கள்.

    முன்னதாக 1,003 மணித்தொடர் ஜெபமாலை ஜெபிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குறைகள் தீர்க்கும் பொருட்டு ஜெபமாலை பூங்கா தரிசனம், மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பாத்திமா அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் வண்ண, வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாத்திமா அன்னை வீற்றிருந்து பவனி வந்தார்.

    தேர்பவனியை புறாவை பறக்கவிட்டு ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தொடங்கி வைத்தார். இதில் பாத்திமா அன்னையின் ஆசிவேண்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அனைவருக்கும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாலஹள்ளி பாத்திமா அன்னை பங்கு நிர்வாகத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்கள் இடம்பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். எனவே நான்கு நூல்களையுமே படித்து இறைவனின் முழுமையைப் புரிந்து கொள்வோம்.
    பைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நூல்கள் எவை எனக் கேட்டால் “நற்செய்தி நூல்கள்” என சட்டென சொல்லலாம். காரணம் அந்த நான்கு நற்செய்தி நூல்களும் தான் இயேசுவின் வாழ்க்கையையும், போதனை களையும், இயல்புகளையும் முழுமையாகவும் நேரடியாகவும் படம் பிடிக்கின்றன.

    நான்கு நற்செய்தியாளர்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளனர். மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் எனும் வரிசையில் பைபிளில் இந்த நூல்கள் அமைந்துள்ளன. ஆனால் இவற்றை எழுதிய கால வரிசைப்படி பார்த்தால் மார்க், லூக்கா, மத்தேயு, யோவான் என வர வேண்டும்.

    பைபிளில் உள்ள நூல்கள் எல்லாம் சுமார் 1400 ஆண்டு இடைவெளியில் நாற்பது எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. எழுதப்பட்ட காலத்தில், இப்போது இருப்பதைப் போல அதிகாரங்கள், வசனங்கள் என்றெல்லாம் பிரிவுகள் இல்லை. வசதிக்காக சின்னச் சின்ன அதிகாரங்களும், வசனங்களும் பைபிளில் பிரிக்கப்பட்டன.

    ‘விவிலியம்’ எனும் ஒரு நூலை ஒரு நூலகத்துக்கு ஒப்பிடலாம் என்பார்கள் இறையியலார்கள். அந்த அளவுக்கு நூல்களுக்கிடையே தனித்தன்மையும், வேற்றுமையும் காணப்படும். ஆனால் எல்லா நூல்களையும் தூய ஆவியானவர் ஒரு ஆசிரியராக இருந்து கவனித்திருப்பதால் மீட்பின் செய்தி தொடக்கம் முதல் கடைசி வரை உடைபடாமல் இழையோடுவதைப் புரிந்து கொள்ளலாம்.

    நற்செய்தி நூல்களும் அப் படியே தங்களுக்குள் வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும் ஒருங்கே தாங்கி நிற்கின்றன. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அல்ல. இயேசு எந்த தன்வரலாற்று நூல்களையும் எழுதவில்லை. இயேசுவின் செயல்களையும், போதனை களையும், இயல்புகளையும் நான்கு பேர் அவரவர் பார்வையில் எழுதியவையே நற்செய்தி நூல்கள் என புரிந்து கொள்ளலாம்.

    மத்தேயு, மார்க், லூக்கா எனும் மூன்று நூல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும், யோவான் நூல் மொத்தமான புதிய தளத்தில் பயணிக்கிறது. இதற்குக் காரணம் எழுதிய ஆசிரியர்களும், ஏன் எழுதினார்கள் என்பதும், யாருக்காக எழுதினார்கள் என்பதும் வேறுபடுவது தான்.

    இயேசுவின் வாழ்க்கையை இவர்கள் வரலாற்று நூல்களைப் போல காலக் குறியீடுகளுடன் எழுதவில்லை. தூய ஆவியானவரின் திட்டம் இயேசுவின் கடந்த கால வரலாற்றை ஊர்ஜிதப்படுத்துவதல்ல, மனுக்குலத்தின் எதிர்கால வாழ்க்கையை ஊர்ஜிதப்படுத்துவது. அதனால் தான் இயேசுவின் மரணம் சார்ந்த நிகழ்வுகள் நற்செய்தியின் மூன்றில் ஒருபங்கு இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

    முதலில் செவி வழிச்செய்தியாகப் பகிரப்பட்ட இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நூல்களாய் எழுதவேண்டிய கட்டாயம் பின்னர் ஏற்பட்டது. பிற நாடுகளுக்கு நற்செய்தியைப் பரப்ப அது அத்தியாவசியமானது.

    இந்த நான்கு நற்செய்திகளையும் மூன்று முக்கியமான சிந்தனைகளின் கீழ் அடக்கலாம். ஒன்று இயேசு செய்த செயல்களை முதன்மைப்படுத்துவது. இரண்டு இயேசு சொன்ன செய்திகளை முதன்மைப்படுத்துவது. மூன்றாவது இயேசு எனும் மனிதரின் இயல்புகளை முன்னிலைப்படுத்துவது.

    மார்க் நற்செய்தி இயேசுவின் செயல்களை முதன்மைப்படுத்துகிறது. மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் இயேசுவின் போதனைகளை முதன்மைப்படுத்துகின்றன. யோவான் நற்செய்தி இயேசுவின் இயல்புகளை முதன்மைப்படுத்துகிறது.

    நற்செய்தி நூல்களைப் புரிந்து கொள்ள அவர்கள் இயேசுவைப் பார்த்த பார்வையும், பிறர் எப்படி இயேசுவைப் பார்க்க விரும்பினார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

    மார்க் நற்செய்தி முதலில் எழுதப்பட்டது. இதில் இயேசு மானிட மகனாக சித்தரிக்கப்படுகிறார். லூக்கா நற்செய்தி இரண்டாவதாக எழுதப்பட்டது. இதில் இயேசு உலக மீட்பராக முன்னிறுத்தப்படுகிறார். மத்தேயு நற்செய்தி மூன்றாவதாக எழுதப் படுகிறது. இதில் இயேசு யூதர்களின் அரசராக காட்டப்படுகிறார். கடைசியாக எழுதப்பட்ட யோவான் நற்செய்தியில், இயேசு கடவுளின் மகனாக உரைக்கப்படுகிறார்.

    இந்த சிந்தனைகளின் அடிப்படையிலேயே அவர்களுடைய நூலின் எழுத்துகளும் அமைகின்றன. அதே போல யார் வாசிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் மனதில் கொண்டே நூலை எழுதினர்.

    இயேசுவைப் புதிதாய் ஏற்றுக்கொள்ளும் மக்களுக்காக மத்தேயு எழுதினார். புதிய விசுவாசிகள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பது இதில் வலியுறுத்தப்படுகிறது. மார்க் தனது நூலை பரபரப்பான ஒரு செயலின் நூலாக எழுதவேண்டும் என விரும்பினார். அப்போது வாசகர்கள் தங்கள் நூலின் வாயிலாக இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள் என நம்பினார்.

    லூக்கா பிற இனத்தவருக்காக இந்த நூலை எழுதினார். யூதரல்லாத பிற இன மக்களும் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது தாகமாய் இருந்தது. காரணம் லூக்கா ஒரு பிற இனத்தவர். சொல்லப்போனால், விவிலியத்தை எழுதிய ஆசிரியர்களில் யூதரல்லாதவர் இவர் ஒருவர் மட்டுமே.

    யோவான் ஏற்கனவே இயேசுவை அறிந்த, ஏற்றுக்கொண்ட மக்கள் விசுவாசத்தில் நிலைத் திருக்க வேண்டும் என்பதற்காக எழுதினார். இயேசுவில் நிலைத்திருந்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும் எனும் சிந்தனையில் அவரது நூல் அமைகிறது.

    விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்கள் இடம்பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். எனவே நான்கு நூல்களையுமே படித்து இறைவனின் முழுமையைப் புரிந்து கொள்வோம்.

    சேவியர்
    குளச்சல் அருகே கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய விரிவாக்க அர்ச்சிப்பு விழா நடந்தது. இ்தில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து வைத்தார்.
    குளச்சல் அருகே கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய விரிவாக்கம் செய்யப்பட்டு அர்ச்சிப்பு விழா மற்றும் ஆலய திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஜெபமாலை பவனி நடந்தது. மாலை 4 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். இதில் குளச்சல் மறை வட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், பங்குத்தந்தை ஜாண் குழந்தை மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடந்தது. முன்னதாக ஆயர் நசரேன் சூசைக்கு பங்குமக்கள், ஆலய நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அர்ச்சிப்பு விழாவில் கலந்து கொண்ட பங்கு மக்களை படத்தில் காணலாம்.

    விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 19-ந்தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், இரவு 8 மணிக்கு தேர் பவனி, 20-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலியை மறைமாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமையில் சென்னை அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு, கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நடன போட்டி நடைபெறுகிறது.
    கர்த்தரை நம்புகிற நீங்கள் அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பொறாமையை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.
    கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை விட்டுப் புறப்பட்டு காட்பாடி ஜங்ஷன் தாண்டி வேகமாக ஓடி கொண்டிருக்கிறது. காலை 8:10 மணி இருக்கும். இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயது இருக்கும். அழகான உடை, மடிக்கணினி, ஐ போன் என்று கம்பீரமாக தோற்றமளித்த அவர்கள் உயர் அதிகாரிகள் என்று புரிந்துகொள்ள வெகு நேரம் ஆகவில்லை. இருவரும் அலுவலக விஷயம் பேச ஆரம்பித்தார்கள்.

    ‘உனக்கு நேற்று நடந்தது தெரியுமா?’ என்றார் ஒருவர்.

    ‘ம், கேள்விப்பட்டேன்... நல்ல செய்தி தானே’ என்றான் இன்னொருவன்.

    “எது நல்ல செய்தி, அந்த சின்னப்பயலுக்கு பதவி உயர்வு கிடைத்தது உனக்கு என்ன நல்ல செய்தியா?. உனக்கு தெரியாது, அவன் வேலை இல்லாம சுற்றித் திரிந்த போது பொழச்சு போட்டும் என்று நான் தான் நம்ம இடத்திலே வேலை வாங்கி கொடுத்தேன். இது நடந்து சுமார் 18 வருடம் இருக்கும். இன்னைக்கு அவன் எனக்கு மேல் அதிகாரியா வந்துட்டான். இனிமே அவன் அராஜகம் தாங்க முடியாது. அவன் வீடு, காரு எல்லாம் வாங்கி நமக்கு மேல போயிட்டான்”.

    ‘அவன் திறமைசாலி தானே’ என்றான் இதைகேட்டவன்.

    “உன்கிட்ட போய் சொன்னேன் பாரு, அவன் எப்படி அந்த பதவி உயர்வு வாங்கினான் என்று எனக்கு தான் தெரியும்” என்று முணுமுணுத்தான் மற்றவன்.

    ‘பொறாமை’ என்பது இது தானோ, என்று நான் சிந்திக்க ஆரம்பித்தேன். எல்லோருக்கும் பொறாமை வருவது இயல்பு, அதை கையாளுவது எப்படி என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    நம்மை விட வசதியில் குறைவாக உள்ளவர்களை பார்த்து நாம் பொறாமைப்படுவதில்லை. அதைப்போல நம்மை விட மிக அதிகமான உயரத்தில் இருப்பவர் களைப் பார்த்தும் பொதுவாக நாம் பொறாமைப்படுவதில்லை.

    நம்மைவிட குறைவாக இருந்தவர், எப்பொழுது நம்மை தாண்டி செல்கிறாரோ அப்போது தான் நமது பொறாமை விஸ்வரூபம் எடுக்கிறது. பொறாமை என்பது சாதாரண ஆட்களுக்கு மட்டுமல்ல, ஆன்மிக வாழ்வில் வேரூன்றிய சிலருக்கும் தலை விரித்தாடுகிறது என்றால் மிகையாகாது.

    நாம் நம்முடைய நல்ல குணங்களை கண்டுகொள்ளாமல் மற்றவர்களுடைய சாதனைகளை நம்முடன் ஒப்பிட்டு பார்த்து நம்மை நாமே தாழ்த்திக்கொள் கிறோம். பொறாமை என்பது தம்மை தாமே அழிக்கும் பாவம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

    பொறாமை உங்களை சோகத்தில் ஆழ்த்தி அழிக்கும் வல்லமை உள்ளது. ‘சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி’ என்கிறது நீதிமொழிகள் 14:30

    சவுலின் வாழ்க்கை பொறாமைக்கு ஓர் உதாரணம். இஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். தாவீது எனும் வீரன் சவுலின் அரசவையில் அங்கம் வகித்தார். தாவீது, சவுலின் அரசவையில் படைத்தலைவனாகி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.

    தாவீது மாபெரும் வெற்றியாளனாய் மக்கள் மத்தியில் பிரபலமானார். மக்கள் ‘சவுல் ஆயிரம் பேரை கொன்றார், தாவீதோ பதினாயிரம் பேரை கொன்றார்’ என பாராட்டிப் பாடினார்கள்.

    அதைக்கேட்டது முதல் சவுல் தாவீதின் மீது விரோதம் வளர்க்க தொடங்கினார். தாவீதை கொல்ல முயன்றார், ஆனால் தாவீதோ கடவுளின் கிருபையால் தப்பித்துக்கொண்டான்.

    சவுல் தன் வாழ்க்கையை அரண் மனையில் தொடங்கி வனாந்தரத்தில் முடித்தான். ஆனால் தாவீதோ வனாந்தரத்தில் தொடங்கி அரண் மனையில் முடித்தான் என்கிறது வரலாறு.

    உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே உணவும், உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம் என்கிறது 2 தீமோத்தேயு 6-ம் அதிகாரம்.

    நாம் நம் வாழ்க்கையைப் பார்க்கும் போது தேவன் நமக்கு எவ்வளவு ஆசீர்வாதம் கொடுத்திருக்கிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

    உணவும் உடையும் மட்டுமா தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார்?, அவர் கொடுத்த நன்மைகள் ஏராளம் ஏராளம். அப்படியிருந்தும் நாம் மற்றவர்கள் மேல் பொறாமை கொண்டால் அது கடவுளுக்கு வருத்தத்தையே கொடுக்கும்.

    இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் வேறுபட்டவன், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அதை நினைத்து நாம் மகிழ வேண்டும். உலகில் உன்னைப் போன்று வேறு ஒருவனும் இல்லை. உன்னைப்போன்ற ஒருவனை தேடினால் அது நீயாகத் தான் இருப்பாய்.

    நீ உன்னைப்பற்றி நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும். ‘அன்புக்கு பொறாமையில்லை’ என்கிறது வேதம். அப்படியானால் கர்த்தரை நம்புகிற நீங்கள் அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் பொறாமையை அடியோடு அழிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.

    துலீப் தாமஸ், சென்னை.

    கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா மற்றும் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா மற்றும் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி புதிய கொடிமரம் அர்ச்சித்து திருவிழா கொடியை ஏற்றிவைத்து மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு மறைகல்வி ஆண்டுவிழா நடக்கிறது.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருப்பலி, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    13-ந் தேதி மாலை 4 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    19-ந்தேதி காலை 8 மணிக்கு கோவை அருட்பாணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைேவற்றுகிறார்.

    தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், இரவு 8 மணிக்கு தேர்பவனி, 20-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்குகிறார். சென்னை அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு நடனப்போட்டி நடைபெறுகிறது.
    ×