search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பணத்திற்காக நாம் என்ன செய்கிறோம்

    மனிதனின் அத்தியாவசிய தேவைக்கு தற்போது பணம் ஒன்றே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பணத்திற்காக நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்யக்கூடாது? என்று ஒரு சின்ன விளக்கத்தை இங்கு காண்போம்.
    மனிதனின் அத்தியாவசிய தேவைக்கு தற்போது பணம் ஒன்றே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பணத்திற்காக நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்யக்கூடாது? என்று ஒரு சின்ன விளக்கத்தை இங்கு காண்போம்.

    நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி- பிள்ளைகள் என்று நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் ஏதோ ஒரு தேவைக்காக பணம் தேவைப்படுகிறது. நம்மிடத்தில் பணம் இல்லை. இப்போது என்ன செய்யலாம் என்று நம் மனம் துடிக்கும். அப்படி துடித்து கொண்டிருக்கும் மனதிலே உடனே ஒன்று தோன்றும். எப்படியாவது பணம் நமக்கு கிடைக்க வேண்டும். அதனால் யாரிடமாவது பணத்தை கேட்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.

    சில நண்பர்களிடம் போய், நான் ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது. பணம் இருந்தால் கொஞ்சம் கடன் கொடுத்தால் ஊருக்கு போய்விட்டு வந்து தருகிறேன் என்று கேட்டு பார்ப்போம். அவர்கள் இப்போது பணம் இல்லை என்று கூறுவார்கள். பின்னர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் கேட்போம். அவர்களும் உடனே பணம் கொடுக்காமல் நாளை பார்ப்போம் அல்லது ஒரு வாரம் ஆகலாம் என்று கூறுவார்கள். இப்படி பல்வேறு வழியில் பணத்தை பெற்றுக்கொள்ள முயன்றும் கிடைக்காமல் போகும்.

    எனவே ஊருக்கு போகிறதுக்குத்தானே பணம் கேட்கிறோம். வெட்டியாக செலவு செய்வதற்காகவா? நம் பணம் கேட்கிறோம் என்று நினைத்துக்கொண்டு வேறொருவரிடம் சென்று ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பணத்தை பெற்றுக்கொள்கிறோம். இது மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையை நடத்த பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு பொய்களை சொல்லியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எனவே எந்த வேளையிலும் பொய்பேசாமல், நம்முடைய வாயில் இருந்து புறப்படும் வார்த்தைகள் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதைத்தான் வேதாகமத்தில் மத்தேயு 5-ம் அதிகாரம் 37-ம் வசனத்தில் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள், இதற்கு மீறினால் தீமையே உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே நம்முடைய வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாதவர்களாய் உள்ளதை உள்ளபடி சொல்லி வாழ வேண்டும். இல்லையென்றால் நாம் செய்கிறது எல்லாமே நமக்கே தீமையாக வந்து முடியும். எனவே தேவனுடைய பார்வையில் நாம் உண்மையுள்ளவர்களாய் வாழ தேவன் நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

    சகோ.கிறிஸ்டோபர், வீரபாண்டி.
    Next Story
    ×