search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    திட்டமிட்டு செயல்படுவோம்

    நான் தான் என்னை இயக்க வேண்டும் என்ற புத்துணர்வோடு பயணத்தை ஆரம்பிப்போம். அப்போதுதான் வாழ்க்கை சுவையுள்ள அர்த்தமுள்ள பயணமாக உருமாறி நிற்கும்.
    நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது? எப்படியெல்லாம் நம் ஏமாற்றப்படுகிறோம்? கொள்ளையடிக்கப்படுகிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்பாய் இருப்பவர்கள் ஏராளமான சாதனைகளை செய்கிறவர்களாக மாறுகின்றனர்.

    மனிதர்களாகிய நாம் இவ்வுலகினில் படைக்கப்பட்டு இருப்பதன் அடிப்படை நோக்கமே பிறரோடு இணைந்து செயலாற்றுவதற்குத்தான். இன்றைய உலகம் நம்மை வழிமாற்றி திசை திருப்பி விடவே பல நேரங்களில் முயற்சிக்கிறது. பணம், பொருள், அதிகாரம் போன்றவற்றை நமக்கு காண்பித்து நம்மை மூடர்களாக மாற்ற துடிக்கறது. சாதி, இனம், மொழி போன்றவற்றின் பெயரால் பிரித்தாளவும் முயற்சி நடக்கிறது. இப்படிப்பட்ட உலக சிக்கலுக்கு மத்தியில் உயிரோட்டமான தொடர்புகளை உருவாக்க நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

    இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் விழிப்போடு இருந்து இறைவனுக்கு உகந்ததை அடையாளம் காண வேண்டியது நமது முதன்மையான பணியாய் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் சில நிமிடங்கள் இணைந்திருக்க பழக வேண்டும். அப்போது நம்மை சுற்றி என்னென்ன நடக்கிறது என்பதை உணர்ந்திட இயலும். உங்கள் கண்ணும், காதும் விழித்திருந்தால் கருத்தும், இதயமும் திறந்திருந்தால் எங்கிருந்தோ வரும் யோசனைகள் கூட பயன்தரும். இன்று நம்மில் பலர் பரபரப்பாக இயங்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர். பிறரை பற்றியும் தனக்குள் நடந்தேறுகிற உள்மன உணர்வுகளை பற்றியும் அதிக கவனம் எடுக்காதவர்களாகவே திகழ்கின்றனர்.

    ஏதோ பிறந்து விட்டோம், வாழ்ந்த விட வேண்டும் என்பதல்ல வாழ்வின் நோக்கம். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற இலக்கினை வடிவமைத்து அதற்கேற்ப செயலாற்றுவதே சிறந்த வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் திட்டமிடுவோம். இன்று நான் முதன்மைப்படுத்த வேண்டிய காரியங்கள் என்னென்ன? எவற்றை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்? யார் என்னை உந்தி தள்ளுகிறார்கள்? என்பதை எல்லாம் ஆய்வு செய்து கண்டு உணர்வோம். முன்னோக்கி செல்கிற பயணத்தில் ஒருபோதும் தடுமாறி விழாதவாறு பார்த்திடுவோம். அப்படியே தடுமாறி விழுந்திட்டாலும், எழுந்து நடக்க முடியும் என்ற உறுதிப்பாட்டினை பெற்றிடுவோம். நான் தான் என்னை இயக்க வேண்டும் என்ற புத்துணர்வோடு பயணத்தை ஆரம்பிப்போம். அப்போதுதான் வாழ்க்கை சுவையுள்ள அர்த்தமுள்ள பயணமாக உருமாறி நிற்கும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்
    கோட்டார் மறை மாவட்டம்.
    Next Story
    ×