என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நம்முடைய ரட்சகரும், மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

    பரிசுத்த ஜீவியம் என்றால் என்ன? என்பது குறித்து தியானித்து பார்ப்போம்.

    நாம் சிருஷ்டிக்கப்பட்டது முதல் கடைசி காலம் வரைக்கும் பரிசுத்தமாய் வாழ வேண்டும். அப்படியில்லை என்றால் தேவனை தரிசிக்க முடியாது என்று வேத வசனம் கூறுகிறது.

    ஆனால் நம் இந்த உலகத்தில் பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், பொறாமைகள், பொய்கள், புறங்கூறுதல்கள் போன்ற துர் செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். மேலும் ஒரு வேலையை செய்யும் போது முறுமுறுப்போடும், கடும் கோபத்துடனும் நடந்து கொள்கிறோம். ஒருரை வேண்டாத வம்பு பேசி புத்தீயினமாகவும், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் பேசி திட்டிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    இவற்றையெல்லாம் நம்மிடத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டும். எப்படி மாற்றுவது என்றால், நாம் நன்மை செய்வதில் ஞானிகளாகவும், தீமைக்கு புறம்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நம்மோடு வாசம் செய்ய வேண்டுமானால் நாம் பிறருக்கு தீமையை அல்ல நன்மையே செய்ய வேண்டும். பரிசுத்தமாக தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும். தேவ பயத்தோடே யாவரோடுங்கூட அன்பும், சமாதானமாய் வாழ வேண்டும். எந்நேரமும், எந்த வேளையிலும் கிறிஸ்து இயேசுவினுடைய சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் தான் தேவனுடைய பரிசுத்த ஜீவியமாக இருக்க முடியும்.

    இதுகுறித்து வேதாகமத்தில் 1 பேதுரு 1-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் ‘நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது.

    ஆகையால் இந்த தவக்காலத்தில் இயேசுவை பற்றி தியானித்து வரும் நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, முன்பு அறியாமையால் செய்து கொண்டிருந்த துர்செயல்களின் படி இனி நடவாமல், தேவனுக்கு கீழ்படிகிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும். நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவராய் இருக்கிறது போன நாமும் அவருடைய வழியில் நடந்து பரிசுத்தமாய் இருக்க அதிகமாய் முயற்சிப்போம்.

    சகோதரி: ரூத்பிமோராஜ், கே.ஜி.கார்டன், திருப்பூர்.
    என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
    சவால்கள்தான் உங்களை உங்களுக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டும். என் வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும், சறுக்கல்களும் வந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவன், இதுவரை வாழ்வதற்கே ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம். ஒரு குழந்தை இந்த பூமியில் பிறக்கிறது என்றால் அது சவால்களை எதிர்கொள்வதற்கே என்பதை உணர்ந்திடுவோம்.

    ஒரு கப்பல் கடலுக்குள் செல்லுமபோது எவ்வளவு இன்னல்கள் காத்திருக்கிறது. புயல் தோன்றலாம், திமிலங்கள், சுற மீன்கள் கப்பலை கவிழ்த்து போடலாம், காற்று திசைமாறி இழுத்து செல்லலாம். திடீரென பெரும் ஆபத்துகள் நேரிடலாம். பயணத்தின் போது பாறையில் மோதி கப்பல் உடைந்து போகலாம். வெறுமனே பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைப்பதற்காக கப்பல் கட்டப்பட வில்லை. மாறாக எல்லாவற்றையும் எதிர்கொண்டு பயணம் செய்வதற்குதான் கட்டப்படுகிறது. இதைப்போன்று தடைகள் சவால்கள் தான் ஒரு மனிதனை இன்னொரு உயரியவனாக மாற்றுகிறது. சாதாரமாண விஷயங்கள் நம்மை உயரியவனாக உருமாற்றுகிறது. தடைகளை, ஆபத்துகளை கண்டு ஒருபோதும் மனம் கலங்க வேண்டாம். மாறாக அனைத்தையும் மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள். எதிர்ப்பு இல்லாத வாழ்க்கைக்கு ஒருபோதும் ஆசைப்படாதீர்கள். தன்னை எதிர்த்து பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூர் அறிஞர்கள் ஆகியோரை இயேசு அன்பு செய்தார். அதைப்போன்று இறையருளின் காலமாகிய தவக்காலத்திற்குள் நுழைந்திருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மை எதிர்க்கின்ற மனிதர்களை அன்பு செய்வோம். மானுட வாழ்வில் சவால்கள் மிக அதிகமாகஉண்டு. இதனை கண்டு அஞ்சிவிட்டால் தொடர் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாமல்போய்விடும். நம்முடைய தினசரி கால அட்டவணையில் பிரச்சனைகளை கையாளுவதற்கான வழிமுறைகளை யும் சிந்தித்து பாருங்கள். நாம் முடங்கி போவதற்காக இறைவன் நமக்கு பிரச்சினைகளை கொடுக்கவில்லை. மாறாக இன்னும் சக்தி உடையவர்களாக, எழுச்சி மிக்கவர்களாக வாழ்வதற்கே கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்திடுவோம்.

    சவால்களையும் அன்பு செய்ய பழகுவோம். சாவல்களை எதிர்கொள்வோம். ஒவ்வொன்றும் ஒருவிதமான அனுபவங்களையும், வாழ்க்கை பாடத்தையும் நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. நான் யார் என்பதையும், நான் இன்னும் எவ்வளவு விவேகமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதற்கான தன்னம்பிக்கை பாதையினையும் கற்று தருகிறது என்பதை புரிந்து வாழ்வின் பாதையில் பயணிப்போம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் உள்ள புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
    விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. அக்டோபர் மாதல் முதல் சனிக்கிழமையையொட்டி அன்னைக்கு நன்றியறிதலாகவும், அன்னையை போற்றும் விதமாகவும், அன்னையின் பெருமையை அகிலமும் அறிந்து கொள்ளும் விதமாகவும், தொழில் முன்னேற்றத்திற்காகவும், நாடு நலம் பெற வேண்டியும், உளுந்தூர்பேட்டை குழந்தை ஏசு ஆலயத்தில் இருந்து மங்கலம்பேட்டை, காட்டுப்பரூர், கர்னத்தம் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்துக்கு நடைபயணமாக வந்தனர். இவர்களை கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலய பங்குத்தந்தை தேவ சகாயராஜ், உதவி பங்குத்தந்தை அலெக்ஸ் ஒளில் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    மேலும் கோணாங்குப்பம் பங்கு மக்கள் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் மறைவட்ட முதன்மை குரு அருட்பணி ரட்சகர், அருட்பணி டாக்டர் திசை ஜெரி, திருத்தல அதிபர்கள் மற்றும் அருட்பணி பிச்சைமுத்து, அருட்பணி எஸ்.அப்போலின், மறைமாவட்ட, மறைவட்ட குருக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முழு இரவு செப நற்செய்தியை அருட்பணி கே. ஏ. இயேசு நசரேன் வழங்கினார்.
    ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளின் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால் அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.
    “மனுஷன் முகத்தை பார்ப்பான்...1 சாமுவேல் 16:7”

    சிலருடைய முகத்தோற்றம் மிகுந்த மலர்ச்சியாகவும், புன்னகை பூக்கள் பூத்துக்குலுங்குவது போலவும் தோன்றும். அவர்கள் யாரிடமும் எப்பொழுதும் எந்த ஒரு விஷயத்தையும், சிரித்து சிரித்து பேசுவார்கள். அதை பார்க்கும் போது அவர்கள் நம்முடைய இருதயத்தை ஈர்த்து விடுவார்கள். அவர்களின் முக பாவங்களை யாவும் அன்பையும், கபடற்ற பணிவையும், மிகுதியாக பிரகாசிக்க செய்யும். இருப்பினும் இவர்கள் யாவரும் அன்பில் மிகுந்தவர்களாகவும், கபடற்ற புறாக்களாகவும் இருப்பார்கள் என்று நம்பி விட்டால் ஏமாற்றங்கள் ஏராளமாக வரும். அவர்களின் இயற்கையான இந்த தோற்றத்துடன், இருதயத்தின் தன்மைக்கு தொடர்பே இல்லாமல் இருக்கும்.

    அதே நேரத்தில் சிலரை பார்த்ததும் அவர்கள் கடும் கோபக்காரர்கள் போலவும், பெருமை மிக்கவர்கள் போலவும், இரக்கமற்ற இருதயக்காரர்கள் போலவும் தோன்றுவார்கள். அவர்களின் முகத்தில் தேடித்தேடிப்பார்க்க பார்த்தாலும், ஒரு புன்னகையோ, அன்பின் தோற்றங்களையோ பார்க்க முடியாது. ஆயினும் இவர்களின் சிலர் 24 மணி நேர புன்னகை ராஜாக்களை விடவும், சிரித்து சிரித்தே சிந்தை கவருகிறவர்களை விடவும் நல்லவர்களாகவும், அன்பு மிக்கவர்களாகவும், தாழ்மையாளர்களாகவும் இருப்பது உண்டு.

    அகத்தோற்றம் முகத்தோற்றத்தில் பிரதிபலிக்கும் என்பது உண்மை. ஆனால் முகத்தோற்றத்தை அகத்தோற்றத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ள இயலாது. மனிதனின் உண்மையான இருதய தோற்றத்தை முக பாவனைகளிலேயே பார்த்து உறுதிபடுத்தி விடக்கூடாது. அவனுடைய செயல்கள், குணங்கள், கொள்கைகள், நடத்தைகள், பண்புகள் போன்றவை தான் அவன் உண்மையில் எப்படி இருக்கிறான் என்பதை விளக்கும். எனவே தான் ஏசு கனிகளினால் மரம் எது என்பதை முடிவு செய்யும் ஆலோசனையை நமக்கு கொடுத்தார். ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனுடைய பண்புகள் தான். அந்த பண்புகளின் அன்பு, தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகியவை இருந்தால் அவன்தான் உண்மையில் அழகான இருதயம் உடையவன்.

    பலர் பிறருடைய முகத்தோற்றங்களாலும், வசீகரமான வார்த்தைகளாலும், எளிதாக வஞ்சிக்கப்பட்டு விடுகின்றனர். ஏனென்றால், அவர்களின் இருதயம் நல்ல பண்புகளை விட நல்ல சுபாவங்களை வெளிப்புறத்தோற்றதையே மேன்மையாக எண்ணி விடுகிறது.

    “அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாம், ஆனாலும்
    முகத்தின் அழகை அகத்தின் அழகு என்று எண்ணாதே...”

    குடந்தை தமிழினி, கும்பகோணம்
    நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையேப் போதும்’ (மத்தேயு 6:34).
    ஆண்டவர் இயேசுகிறிஸ்து தனது ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக ஒருமுறை எருசலேமிலிருந்து ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெத்தானியா என்னும் சிற்றூருக்குச் சென்றார்.

    ‘பெத்தானியா’ என்பற்கு ‘வறியவரின் ஊர்’ அல்லது ‘வறுமையின் ஊர்’ என்று பொருள். ஒலிவ மலையின் மேல் இச்சிற்றூர் கட்டப்பட்டுள்ளது. இயேசு இவ்வூருக்கு அடிக்கடி சென்றார்.

    பெத்தானியாவில் ‘மார்த்தா’ என்னும் ஒரு பெண்மணி அவரைத் தன் வீட்டிலே வரவேற்றார். ‘மார்த்தா’ என்னும் அரமேயப் பெயருக்கு ‘வீட்டின் தலைவி’ என்று பொருள்.

    இயேசுவை அடிக்கடி உபசரித்த சீமோன் வீட்டிலும் மார்த்தாளே பணிவிடை செய்தார். மரியா என்றொரு சகோதரியும் மார்த்தாவுக்கு உண்டு. ‘மரியா’ என்றால் ‘புரட்சி’ என்று பொருள்.

    சீமோன் வீட்டில் விருந்திற்கமர்ந்தபோது இயேசுவின் பாதங்களில் பரிமள தைலம் பூசியவரும் இவரே. மரியா தன் வீட்டிற்கு வந்த ஆண்டவரின் காலடி அருகில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா ஆண்டவருக்காக பற்பல உணவு வகைகளைச் சமைத்துக் கொண்டிருந்தார்.

    தான் மட்டும் தனியாக பல்வேறுப் பணிகளைச் செய்தது மார்த்தாளுக்குக் கடினமாக இருந்தது. ஆதலால் மார்த்தா ஆண்டவரிடம் வந்து, ‘ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும்’ என்றார்.

    ஆண்டவர் அவரைப் பார்த்து, ‘மார்த்தா, நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாளோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது’ என்றார்.

    தேவையற்ற கவலைகளும், நோயுற்ற மனிதர்களும்

    தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மனநோய் தான் ‘கவலை’. மனிதர் முதல் அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டு அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் கவலை என்ற மிகப்பெரிய நோய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது.

    தோல்விகள், இழப்புகள், இறப்புகள், பிரிவுகள், கடன் தொல்லைகள், வியாதிகள், விபத்துகள், வாழ்வில் எதிர்பாராமல் நடைபெறும் எதிர்மறையான நிகழ்வுகள், புண்படுத்திய வார்த்தைகள் போன்றவை மனிதரை கவலைக்குள்ளாக்குகிறது.

    ஒவ்வொருவரின் வாழ்விலே கவலையின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனாலும் கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனும் அளவிற்கு கவலை இன்று அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. நம் வாழ்வில் நடக்கவே வாய்ப்பு இல்லாதவைகளுக்காகத் தான் நாம் அதிகமாக கவலைப்படுகிறோம்.

    ‘கவலைப்படுவது, நாம் வாங்கவே வாங்காத கடனுக்குச் செலுத்தும் வட்டி’ என்கிறார் மார்க்ஸ் அரேலியாஸ். ஆனால் கவலைப்படுவதால் நமக்கு கடுகளவு பயனும் இல்லை.

    ‘கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?’ (லூக்கா 12:25) எனக் கேட்கிறார் இயேசு ஆண்டவர்.

    கடவுள் பார்வையில் நீங்கள் மேலானவர்கள்

    இயேசு ஆண்டவர் தம் சீடர்களிடம், உணவைக் குறித்தும், உடையைக் குறித்தும் நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள். ‘வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா’ (மத்தேயு 6:26) என்கிறார்.

    இரண்டு காசுக்கு விற்கப்படும் ஐந்து சிட்டுக்குருவிகளில் ஒன்றையும் மறவாதவர் கடவுள். உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

    கடவுள் உங்கள் தேவையை அறிந்தவர்

    உழைக்காத, நூற்காத காட்டுச்செடியை வளரச் செய்கிறவர்; இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்கு அணி செய்கிற கடவுள் நமக்கு மிகுதியாய் செய்ய வல்லவர்.

    ‘ஆதலால் எதை உண்பது, எதைக்குடிப்பது என நீங்கள் கவலை கொண்டிருக்கவும் வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்’ (லூக்கா 12:29,30).

    நாம் மன்றாடுவதால் மட்டும் தான் கடவுள் நமக்கு எல்லாம் தருகிறார் என்பதல்ல. நாம் கேட்கும் முன்னரே கடவுள் நம் தேவைகளை அறிந்து வழங்குகிறார்.

    நாம் கேட்கிற ஒன்று அருளப்படவில்லை என்றால், நம் மன்றாட்டு கேட்கப்படவில்லை என்பதல்ல. அது நமக்கு இப்போது தேவையற்றது என இறைவன் கருதுகிறார் என்பதே உண்மை.

    கடவுள் உங்களை நேசித்துப் படைத்தார்

    ‘படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்’ (சாஞா 11:24).

    ஆம், கடவுள் தாம் படைத்த ஒவ்வொரு உயிர்களையும் நாம் நினைப்பதை விட அதிகமாக நேசிக்கிறார். உங்களையும் கூடத்தான். கடவுள் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

    ‘ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையேப் போதும்’ (மத்தேயு 6:34).

    நம்பிக்கைக் குன்றாமல் பற்றுறுதியுடன் நாளையை எதிர்நோக்குவோம்.

    அருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.
    கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)
    கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)

    பாவம் எங்கு இருநது தோன்றுகிறது-

    பாவத்தின் இருப்பிடமே மனிதனின் இருதயம் தான்.

    இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கனவுகளும், பொய்ச்சாட்சிகளும், புறப்பட்டு வரும். (மத்தேயு 15:19)

    எவை எல்லாம் பாவம்?

    ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாக இருந்தும், அதை செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் (யாக்கோபு 4:17) நம்மில் பலர் செய்ய தகாதவைகளை செய்வது தான் பாவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் செய்ய தக்கவைகளை செய்யாமல் பாவம்தான். மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ நீங்கள் ஒற்தாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி நியாயபிராமணத்தில் கற்பித்திருக்கிற நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள். இவைகளையும் செய்ய வேண்டும்.

    அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே (மத்தேயு 23:23) எந்த ஒரு மனிதனும் தான் கடவுள் நியமித்து அளவுகோலுக்கு வந்துவிட்டதாக நினைக்காதிருப்பானாக கடவுள் முழுமையான பூரணத்துவத்தை எதிர்பார்க்கிறார். எப்படி பார்த்தாலும் மனிதன் அதில் குறைவுள்ளவனாகவே இருக்கிறான். எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களாகி (ரோமல் 3:23) அதற்காக கடவுள் கொடுமையானவரே, இரக்கமற்றவரோ இல்லை. நாம் நம் பாவங்களை விட்டுவிடும் பொழுது அதனை முழுமையாக ஏற்று நம்மை கழுவி, சுத்திகரித்து, மறுமைக்கு செல்வதற்கான ரட்சிப்பு என்ற வாக்குறுதியை நமக்கு அளிக்கிறார். பாவத்தில் இருந்து விடுபட ஒரோ வழி ஏசு தான். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தற்செயலானதோ, விபத்தோ கிடையாது. பாவிகளை ரட்சிப்பதற்காக, பாடுகளை அனுபவித்து மரித்து 3-ம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்பது தெய்வீக திட்டம். நமக்கான பாவமான ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை கருத்தில் கொண்டு பாவ வழிகளை விட்டு அவரிடத்துக்கு மனம் திரும்புவோமா?

    அ.பிரில்லியன்ஸி, வலங்கைமான். 
    அழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
    அழகப்பபுரம் அருகே இந்திரா நகர் புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலயத்தில் 10 நாள் திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.15 மணிக்கு சப்பர பவனி, தொடர்ந்து அருட்பணியாளர் செல்வ ஜார்ஜ் தலைமையில் மாலை ஆராதனை, 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மயிலாடி பங்குத்தந்தை ஆன்டனி பென்சிகர் தலைமையில் திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர். 
    மக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.
    பழைய ஏற்பாட்டு நூல்களில் கடைசியாக வருகின்ற நூல் மலாக்கி. இதன் கடைசி வார்த்தை சாபமாக அமைந்து விட்டது. அதனால் யூத மக்கள் மலாக்கி நூலை வாசித்தால், கடைசி வசனத்தை வாசிப்பதில்லை என்பது மரபு.

    மலாக்கி என்பதற்கு “எனது தூதுவர்” என்பது பொருள். நான்கு அதிகாரங்களும், 55 வசனங்களும், 1782 வார்த்தைகளும் கொண்ட ஒரு சிறிய இறைவாக்கு நூல் இது. இதை எழுதியவர் ‘மலாக்கி’ எனும் நபராகவோ, அல்லது ஏதோ ஒரு ‘தூதராகவோ’ இருக்கலாம் என்பது இறையியலாளர்களின் கருத்து.

    “யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான். ஆயினும், யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்” எனும் வசனங்கள் நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ளன.

    இது யாக்கோபு, ஏசா எனும் இரண்டு சகோதரர்களைப் பற்றிய குறிப்பாக இல்லாமல், அவர்கள் வழியாக வந்த இஸ்ரேல் மற்றும் ஏதோமியர்கள் எனும் இரண்டு பிரிவினருக்கு இடையிலான இறைவனின் நிலைப்பாடாய் அமைந்துள்ளது. ‘இஸ்ரேலரின் வீழ்ச்சியைக் கொண்டாடிய ஏதோமியர்கள் இறைவனை கோபமூட்டினார்கள்’ என்கின்றன இறைவாக்கு நூல்கள்.

    இஸ்ரேல் மக்கள் பாபிலோனின் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்பி நூறு ஆண்டுகள் கடந்தபின் இந்த நூல் எழுதப்பட்டது.

    இஸ்ரேல் மக்கள் எருசலேமுக்குத் திரும்பிய பின்னும் நிலைமை சீராகவில்லை. நிலம் பலனைக் கொடுக்கவில்லை. விளைச்சலின் பயனை மக்களால் முழுமையாய் அனுபவிக்க முடியவில்லை.

    கி.மு. 520-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் அது பெரிய அளவில் ஆன்மிக எழுச்சியையோ, மக்களுக்கு புத்துணர்ச்சியையோ கொடுக்கவில்லை. தாவீதின் காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடலாய் இருந்த அரசு இப்போது ஒரு சின்ன பட்டணம், அதைச் சுற்றிய சில கிராமங்கள் எனும் நிலைக்கு சுருங்கியது.

    ஆனால் இப்போது மக்களிடம் ஒரே ஒரு மாற்றம். வேற்று தெய்வ வழிபாடை விட்டு விட்டனர். ஆனால் பழைய காலத்தில் இருந்த கடவுள் பக்தி குறைந்து விட்டது. கடவுள் மீதான பயமும் நீர்த்துப் போய்விட்டது. குருக்களும் ஆன்மிகப் பணியை ஒரு கடமைக்காகச் செய்யத் தொடங்கிவிட்டனர். கடவுளுக்கு உயர்வானதைக் கொடுக்காமல் தரம் குறைந்ததைக் கொடுக்கத் தொடங்கினர். உச்சமானதைக் கொடுக்காமல் மிச்சமானதைக் கொடுக்க நினைத்தனர்.

    ஆன்மிகச் செழுமை குறைந்து போனதால் மக்களுடைய மனமும் சோர்வடைந்தது. அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறி நடப்பது பெரிய குற்றமில்லை எனும் மனநிலைக்கு வந்தார்கள். சட்டங்களை அப்படியும், இப்படியும் வளைத்து வளைத்து தங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைத்தார்கள்.

    நாட்டில் குடும்ப ஒழுக்கம் சீர்குலையத் துவங்கியது. பிற இன மக்களை திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்தது. எருசலேம் நகரம் முழுவதும் கைவிடப்பட்ட இஸ்ரேல் பெண்களும், புதிதாய் சேர்ந்த பிற நாட்டுப் பெண்களும் நிரம்பினர். மக்கள் தங்களுடைய நிலைக்காய் கடவுளைப் பழிசொல்லவும் தொடங்கினர். “நல்லதைக் கடவுள் கண்டுகொள்வதும் இல்லை, தீயதைக் கடவுள் தண்டிப்பதும் இல்லை” என கடவுளையே குற்றவாளியாக்கினர்.

    இந்த சூழல் தான் மலாக்கி இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த காலம். இவருடைய இறைவாக்குக்குப் பின் 400 ஆண்டுகாலம் இறைவாக்கினர் எவரும் வரவில்லை. திரு முழுக்கு யோவான் தான் அதன் பின் வந்த இறைவாக்கினர், அவர் இயேசுவின் காலத்தைய இறைவாக்கினர்.

    மலாக்கி இறைவாக்கினரின் வார்த்தைகள் கவிதைகளாக இல்லாமல் உரைநடையாகவே இருக்கிறது. இறைவன் இஸ்ரேல் மக்களைப் பொறுத்தவரையில் மனம் கசந்துவிட்டார் என்பதன் அடையாளமாகவே அது அமைகிறது.

    மலாக்கி நூலிலுள்ள 55 வசனங்களில் 47 வசனங்கள் நேரடியான கடவுளின் வார்த்தைகள். வேறு எந்த இறைவாக்கு நூலிலும் இப்படி 85 சதவீதம் வசனங்கள் இறைவன் நேரடியாய் பேசுவதாய் இருந்ததில்லை என்பது சிறப்பம்சம். இதில் இறைவாக்கினர் நேரடியாக மக்களோடு உரையாடுகிறார்.

    கடவுளின் வார்த்தையை மக்களுக்கு நேரடியாய் எடுத்துச் சொல்ல வேண்டிய குருக்கள் தங்கள் கடமையை விட்டு விலகி நடப்பதைக் கண்டிக்கிறார். நீர்த்துப் போன போதனை களைக் கடிந்துரைக்கிறார்.

    மக்களின் ஐந்து விதமான தவறுகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். பிற இன பெண்களை மணந்து கொள்ளும் தவறை கண்டிக்கிறார். இதன் மூலம் பிற மத வழிபாடு நுழைந்து விடும் என எச்சரிக்கிறார். மனசாட்சியே இல்லாமல் மனைவியரை விவாகரத்து செய்யும் கணவர்களை கண்டிக்கிறார். குடும்ப உறவின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.

    மக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.

    ‘கடவுளுக்குரிய காணிக்கையைக் கொடுக்காமல் இருப்பது கடவுளிடமிருந்து திருடுவது போல’ என்கிறார் மலாக்கி. ‘கடவுளை அவதூறாகப் பேசுவது மிகப்பெரிய தவறு’ என்கிறார். ‘எதிர்காலத்தில் இஸ்ரேல் மக்களினமே இரண்டாகப் பிரியும்’ என்கிறார்.

    இந்த பழைய ஏற்பாட்டு நூல்கள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?.

    “இறைவனின் அன்பையும், சட்டங்களையும் விட்டு வெளியே செல்லாமல் இருப்போம் எனும் அடிப்படைச் சிந்தனையைத் தான்”.

    அப்படி நடக்கும்போது என்ன கிடைக்கும்?, நடக்காதபோது என்ன கிடைக்கும்? என்பதன் ஆன்மிக, வரலாற்றுப் பதிவுகளே இந்த பழைய ஏற்பாடு.
    திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    தென் தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பழமையும் பெருமையும் வாய்ந்தது திசையன்விளையில் உள்ள உலக ரட்சகர் திருத்தலமாகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் திருத்தலமாக்கப்பட்டது. இந்த திருத்தல 135-வது ஆண்டு திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் காலை ஜெபமாலை பவனியும், திருப்பலியும், மாலையில் ஜெபமாலை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையை பாளையங்கோட்டை குருகுல முதல்வர் சேவியர் டெரன்ஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலியை, தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

    மாலையில் திசையன்விளை நகர வீதிகளில் சப்பர பவனி நடந்தது. பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி முதலியவற்றை காணிக்கையாக செலுத்தினர். இந்துக்கள் தங்கள் வீட்டின் முன்பு கோலமிட்டு உப்பு, மிளகு கொடுத்து வரவேற்பு அளித்தனர். சப்பர பவனியில் ஞானதிரவியம் எம்.பி. உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். இரவு நற்கருணை ஆசீர் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை கொடியிறக்கமும், மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்தும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரெம்ஜிஸ் லியோன் மற்றும் பங்கு மேய்ப்பு குழுவினர் செய்திருந்தனர்.
    மனித வாழ்வில் தோல்விகள் என்பது இயல்பானவை, அவசியமானவை. இவற்றை சரிவர கையாளத் தெரிந்தவன் நிதானத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்ற மனிதனாய் மாற்றம் காண்கின்றான்.
    தவறுக்கு தானே பொறுப்பேற்பதும் வெற்றிக்கு மற்றவர்களை பொறுப்பாக்குவதும் ஒரு உண்மையான தலைவனின் பண்பு நலன்களாகும். மனித வாழ்வில் தோல்விகள் என்பது இயல்பானவை, அவசியமானவை. இவற்றை சரிவர கையாளத் தெரிந்தவன் நிதானத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்ற மனிதனாய் மாற்றம் காண்கின்றான்.

    வாழ்வில் வருகின்ற தோல்விகளை அனுபவமாக பார்த்து முன்னோக்கி பயணம் செய்ய வேண்டும். என் வாழ்வில் ஏன் சறுக்கல் என்றெண்ணி ஒரு போதும் சோர்ந்து விடக்கூடாது. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் வாழ்வில் ஏற்றபட்ட சறுக்கல்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம். வாழ்வினில் வெற்றி பெற்ற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு காலத்தில் தோல்வியை தழுவியவர்களே.

    இன்று உரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்று முன்னணியில் நிற்கின்ற எல்லா மனிதர்களுமே, அவமானங்களால் அழகுபடுத்தப்பட்டவர்களே. எனவே இந்த நாளில் நம்மையே கேள்விக்கு உட்படுத்தி நாம் எழுச்சி பெற வேண்டிய வழிமுறைகளை அடையாளம் காண்போம். எல்லாவற்றையும் சரிசமமாய் அணுகுகின்ற பக்குவத்தினை நமக்குள் உள்வாங்கி முன்னோக்கி பயணிப்போம்.

    தோல்வியினை முறையாக எதிர்கொண்டு வெற்றியின் நாயகர்களாய் நம்மையே செதுக்கி எடுப்போம்.

    அருட்பணியாளர் குருசுகார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    எதிரி என்று எண்ணுபவர்களை நேசித்து, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுப்போமேயானால் அங்கு நீடித்த அன்பு மட்டுமே பெருக்கெடுத்தோடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
    உலகிலுள்ள அனைத்து மதங்களும், மார்க்கங்களும் எல்லோரையும் நேசிக்கவும், கவலைப்படும் பொழுதும், கஷ்டப்படும் பொழுதும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும், அவசர காலத்திலும், ஆபத்துக்காலங்களிலும் அனுசரணையாக இருக்கவேண்டும் என்றும் தான் கூறுகின்றன.

    நம்மில் அநேகர் சகோதரப் பாசத்துடன் தான் பழகி வருகின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனால், ஒருவர் மற்றவர் மீது பொறாமைப்பட பல காரணங்கள் உண்டு. அதன் காரணமாக நன்மை செய்ய வேண்டியவர் தீமை செய்ய விளைகின்றனர். அப்பொழுது தான் எதிரிகள் தோன்றுகின்றனர்.

    பெயரைக் கெடுக்கலாம், பொருட்களை அபகரிக்கலாம், ஏன் கொலை செய்யக்கூட அஞ்சாமல் இருக்கலாம். தினந்தோறும் தொலைக்காட்சிகளில் நாம் காணும் கற்பனைகளையே மிஞ்சும் அளவு, வகை வகையான தீய சம்பவங்களே இதற்கு முற்றிலும் சாட்சிகளாகும்.

    இவ்வாறு ஒருவருடைய உயிரையே பறிக்கும் ஒரு கொலைகாரன் எதிரி தானே?, அவனை எப்படி நேசிப்பது?.

    ஆனால், இயேசு கூறுகின்றார்: பைபிளில் மத்தேயு என்பவர் எழுதிய புத்தகத்தில் 5-வது அதிகாரம் 44-வது வசனம் இவ்வாறு கூறுகிறது:

    ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’.

    எப்படிப்பட்ட அன்பான வார்த்தைகள் பாருங்கள். நம்மை சபிக்கிறவர்கள், நம்மைப் பகைக்கிறவர்கள், நம்மை நிந்திக்கிறவர்கள், நம்மைத் துன்புறுத்துபவர்கள் தான் நம் எதிரிகள். ஆனால் முதல் வார்த்தையில் என்ன கூறுகின்றார், ‘சத்ருக்களை சிநேகியுங்கள்’ என்கிறார்.

    இதைப் படிக்கக் கூடிய ஒவ்வொருவர் மனதிலும் எழக்கூடிய வினா எனக்குப் புரிகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும்?, மனிதவாழ்வில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இயேசு, தான் கூறிய அனைத்தையும் தானே செய்துகாட்டுகின்றாரே.

    பைபிளில் லூக்கா என்பவர் எழுதிய புத்தகத்தில் 23-வது அதிகாரத்தில் 34-வது வசனம் இவ்வாறு கூறுகிறது:

    ‘பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’.

    இயேசு, யாரை மன்னிக்குமாறு ஜெபிக்கிறார் என்று அறிந்தால், ஆச்சரியப்படுவீர்கள். எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு ஜெபிக்கிறார் என்பதை உணர்ந்தால், உள்ளம் உடைந்து போவீர்கள்.

    தன்னை சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியவர்களை மன்னிக்குமாறு தன் தந்தையிடம் ஜெபிக்கிறார் இயேசு.

    அக்காலத்தில் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட, மிகக்கேவலமான, மிகவும் கொடூரமான தண்டனை தான் சிலுவை மரணம். இரண்டு கைகளையும் விரித்து இரண்டு ஆணிகளிலும், இரண்டு கால்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஓர் ஆணியிலும் சிலுவை மரத்தின்மீது அடிக்கும் பொழுது, மரிப்பவருடைய உடல் எடை முழுவதும் அந்த மூன்று ஆணிகளிலும் தான் தாங்கப்படுகின்றது.

    இதனால் தலை முதல் பாதம் வரை தாங்க முடியாத வலி. அதே நிலையில், உயிர்போகும் வரையிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கவேண்டும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிலர் உடனே இறந்துவிடுவர். இயேசுவானவர் 136 கிலோ எடையுள்ள பாரச்சிலுவையை, ஏறக்குறைய ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம், சும்மாஅல்ல, உடலில் விழும் சாட்டை அடிகளோடு சுமந்துவந்து, ஆறு மணிநேரம் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இன்னும் ஒரு சில நிமிடத்தில் உயிர்போகும் நிலையில்தான் ஜெபிக்கிறார்.

    இறக்கும் தருவாயில் ஒருவர் பேசுவதை மரண வாக்குமூலம் என்பர். ஆனால் அந்நேரத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் மரண வாக்குமூலம் அல்ல, மனிதகுலத்தின் மேல் உள்ள அன்பு, இரக்கம், பாசம் ஆகியவற்றை விளக்கும் வரிகளாகும்.

    வருடந்தோறும், பண்டிகைக்காலங்களில் ஒரு குற்றவாளியை விடுதலை செய்வது அக்கால ரோமானியரின் வழக்கம். பிலாத்து என்ற மன்னன், அக்காரணத்தைச் சுட்டிக்காட்டி, ஒரு பாவமும் அறியாத இயேசுவை விடுதலை செய்ய விரும்புகிறான்.

    ஆனால், மத்தேயு 27:20 -ல் கூறப்பட்டுள்ளது போல, பரிசேயர்கள் எனப்படும் யூதக் குருமார்கள், மற்றும் மூத்தவர்களும் இயேசுவைக் கொலை செய்ய விரும்பியதால், பரபாஸ் எனும் ஒரு கொலைக் குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி மக்களைத் தூண்டி விடுகின்றனர்.

    ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் ‘பரபாஸை விடுதலை செய்யும், இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும்’ என்று கூக்குரலிட்டு, தாங்களாகவே பலிகடாக்களாக மாறி விடுகின்றனர்.

    பிலாத்து மன்னனோ அவர்களுடைய ஆக்ரோஷத்தைக் கண்டு, மனம் நொந்து, தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, ‘இந்த நீதிமானுடைய ரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றான்.

    இயேசுவை விடுதலை செய்ய அரசன் விரும்பினாலும், யூத குருக்கள், மக்களை மூளைச் சலவை செய்ததினால், ‘இவனுடைய ரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக’ என்று ரத்தப்பழியை ஏற்றுக்கொள்கின்றனர்.

    ஆனால் இயேசுவோ, அவர்களுக்காகவே பரிந்துபேசி அவர்களை மன்னிப்பதால், அவர்கள் எந்தவிதமான ஆக்கினைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை என்று சரித்திரம் கூறுகிறது.

    பிலாத்து மன்னன், இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லலாம் என்று கூறியவுடன், ராணுவ வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி இயேசுவைப் பரிகாசம் பண்ண ஆரம்பித்தனர். முட்களினால் செய்த கிரீடத்தை தலையில் அழுத்துகின்றனர். அதனால் வழியும் ரத்தத்தில் இயேசுவின் முகம் மறைக்கப்படுகிறது. ஒரு கந்தல் துணியை அவர் மீது போர்த்தி வலது கையில் ஒரு தடியைச் சொருகி, அவருக்கு முன்பாக முழங்காற் படியிட்டு, ‘யூதருடைய ராஜாவே வாழ்க’ என்று கேலி செய்கின்றனர். அத்துடன் நிற்காது, எச்சிலை உமிழ்ந்து அவர் முகத்தில் துப்புகின்றனர். அவருடைய கையில் உள்ள கோலை எடுத்து அவர் மண்டையில் அடிக்கின்றனர்.

    ஆனால் இயேசுவோ ஒன்றுமே சொல்லாமல், சிலுவையில் உயிர்போகும் தருவாயில்தான் தன் வாயைத்திறந்து ‘இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்று அவர்களை நேசித்து, அவர்களுக்காக ஜெபிக்கின்றார். இதன்மூலம் முற்றிலும் மாறுபட்ட மனிதப்பிறவியாக மாறிவிடுகின்றார்.

    இது தான் இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம். நம்மை சபிக்கிறவர்களை, நம்மைப் பகைக்கிறவர்களை, நம்மை நிந்திக்கிறவர்களை, நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களை நாம் மன்னிப்பது மட்டுமல்ல மனதார நேசிக்கவேண்டும் என்று கூறுகின்றார். அவர் தம் வாழ்நாட்களில் என்னவெல்லாம் போதித்தாரோ அவை அனைத்தையும் கடைபிடித்துக்காட்டினார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

    அதுமட்டுமல்ல, ‘உன் சத்ரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனம் கொடு, அவன் தாகமாயிருந்தால் அவனுக்கு பானங்கொடு’ என்று கூறுகிறார்.

    எனவே, எதிரி என்று எண்ணுபவர்களை நேசித்து, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுப்போமேயானால் அங்கு நீடித்த அன்பு மட்டுமே பெருக்கெடுத்தோடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவே இயேசுகாட்டிய அறநெறியாகும்.

    முனைவர்.பி.எஸ். ஜோசப், திருச்சி-23
    நேர்மறையான எண்ணங்களை கொண்டு ஆக்கப்பூர்வமான ஏராளமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்திடுவோம். எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் நமது வளர்ச்சிக்கு இடையூறாகவே அமைந்திடும்.
    நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை எப்போதும் நல்லதையே தனி மனிதனுக்கு கொண்டு வந்த சேர்க்கும். இதனால் தனிமனிதன் சமுதாயத்திற்கு தேவையான பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் களம் இறங்குகிறான். எதிர்மறையான எண்ணங்களும் மிக எளிதாக அவரை விட்டு அகன்று போய்விடுகிறது.

    புதிதாக காலணி வடிவமைத்த ஒரு நிறுவனம் தனது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலுள்ள கிராமம் ஒன்றிற்கு தனது ஒரு பணியாளரை அனுப்பி வைத்தது. சில நாட்கள் அங்கு தங்கியிருந்த அந்த பணியாளர் அந்த மக்களின் பாதங்களை பார்க்கிறார். யாருமே காலணி இதுவரை அணியவில்லை. எனவே விற்பனை செய்வது கடினம் என தீர்மானித்தவராய் அங்கிருந்து புறப்பட்டு விடுகிறார். நிறுவனம் வேறொரு பணியாளரை அங்கு அனுப்பி வைக்கிறது. அங்கு வந்த புதிய பணியாளர் மக்கள் அனைவரையும் ஒரு ஆலமரத்தின் அடியில் ஒன்று கூட்டுகிறார். காலணியின் பயன்பாடுகளையும், அதனது நன்மைகளையும் எடுத்துரைக்கிறார். விற்பனை மிக வேகமாக நடக்கிறது. எல்லாவற்றையும் குறிப்பிட்ட காலத்திற்குள் விற்று முடித்து விடுகிறார்.

    நேர்மறையான சிந்தனை செய்து களத்தில் இறங்கும் போது ஏராளமான நல்ல மாற்றங்களை அறுவடை செய்கிறோம். உங்கள் எண்ணங்கள் உயர்ந்தவையாக இருக்கும் போது ஏராளமான பலன்களை நாம் பெற்றுக்கொள்கிறோம்.இயற்கையின் படைப்பில் எல்ல உயிர் இனங்களுக்கும் எல்லாம் நிறைவாகவே இருக்கிறது. ஆனால் சுயநல உணர்வுகளால் இன்று மனிதனின் எண்ணங்கள் மாசடைந்து விட்டன. எல்லாமே எனக்கு தான் வேண்டும் என்ற உணர்வோடு வாழ முற்படுகிறான். இதனை முற்றிலுமாக களைய வேண்டியது நமது மேலான கடமையாகும்.

    நேர்மறையான எண்ணங்களை கொண்டு ஆக்கப்பூர்வமான ஏராளமான செயல்களை செய்ய முடியும் என்பதை உணர்ந்திடுவோம். எதிர்மறை எண்ணங்கள் எப்போதும் நமது வளர்ச்சிக்கு இடையூறாகவே அமைந்திடும். ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றுவது நமது கரத்தினிலே மறைந்திருக்கிறது. இதனை உணர்ந்து செயல்பட பழகுவோம். அப்போது நமது வாழ்வு சிறப்புக்குரியதாய் வடிவம் பெறும். அதிகமாக நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி வாழ்க்கையை ஆனந்தப்படுத்துவோம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    ×