search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    ஒளிகாட்டும் வழிகாட்டி

    திருவிவிலியம் ஒரு வழிகாட்டி. அதைப் படிப்பதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைப் பயன்படுத்துகிறோம்.
    திருவிவிலியம் ஒரு வழிகாட்டி. அதைப் படிப்பதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைப் பயன்படுத்துகிறோம்.

    திருவிவிலியம் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும். இயேசுவுக்கு முன்பாக ஆட்சி செய்த மக்கள் மற்றும் ராஜாக்களைப் பற்றி பழைய ஏற்பாடு விளக்குகிறது. நமக்காகத் தன்னைத் தியாகம் செய்த மீட்பரின் வாழ்க்கையைப் பற்றி புதிய ஏற்பாடு நமக்கு விளக்குகிறது.

    பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டிலிருந்து பல வழிகளில் வேறுபடுகிறது. ஆனால் விண்ணகம் எனும் இலக்கை நோக்கியே பயணிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிக்கவும், தன்னை நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்கவும் விவிலியம் கற்றுத்தருகிறது.

    பழைய ஏற்பாடு படைப்பைப் பேசுகிறது, புதிய ஏற்பாடு மீட்பைப் பேசுகிறது. உயிரினங்கள் மற்றும் முதல் பெற்றோர்களைப் படைத்தது பழைய ஏற்பாட்டின் துவக்கம். அதன் பின் அடிமை நிலையில் இருக்கும் இஸ்ரவேலரை எகிப்தியர்களிடமிருந்து மீட்க கடவுள் மோசேயை நியமிக்கிறார்.

    புதிய ஏற்பாட்டில் கடவுள் மனுக்குலத்தில் நிலவும் கொடூரமான பாவங்களிலிருந்து மீட்பதற்காக தனது சொந்த மகனை அனுப்புகிறார். புதிய ஏற்பாடு நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவருடைய காலத்திற்குப் பிறகு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பற்றியது. நமது எதிர்கால மீட்புக்கான ஒளியைக் காட்டுவது.

    திருவிவிலியம் கடவுளின் பரலோக வீட்டிற்கு செல்வதற்கான வழி. கிறிஸ்தவத்தின் அடிப்படையாய் இருப்பது இது தான். சொல்லப்போனால் ஜெபமும், திருவிவிலியமும், நம் விண்ணகத் தந்தையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய இரண்டு வழிகள்.

    நம்முடைய பிதா நமக்குச் சொல்ல விரும்பிய அனைத்தையும் திருவிவிலியம் சொல்கிறது. கடவுள் நமக்கு என்ன திட்டங்களை வைத்திருக் கிறார் என்பதையும் இது காட்டுகிறது. நாம் திருவிவிலியத்தைப் படிக்கும்போதெல்லாம் கடவுள் நமக்கு ஏதாவது சொல்கிறார் என்று உணர்கிறோம்.

    நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் திருவிவிலியத்தைப் படித்தால், அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள நம் கடவுள் நமக்கு உதவுகிறார் என்பதை புரிந்துகொள்கிறோம். நாம் துன்பப்படுகையில் நமக்கு நம்பிக்கை இல்லை. நம் முடைய உறுதி உடைந்து கிடக்கிறது. அந்த உறுதியையும், நம்பிக்கையையும் திருவிவிலிய வாசிப்பு நமக்குள் கொண்டு வருகிறது.

    நாம் கடவுளோடு இருக்கிறோம், அவருடைய சிறகுகளால் நாம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கையை இறை வார்த்தைகள் தருகின்றன. நம்மைச் சுற்றி யாரும் இல்லாதபோது நம்மில் பெரும்பாலானோர் தனிமையாக உணர்கிறோம். நம்முடைய சிறந்த நண்பரிடமிருந்து நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டுமென விரும்புகிறோம். யாராவது நம்முடன் கூடவே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம், இதையெல்லாம் விவிலிய வாசிப்பு தருகிறது.

    நம்முடைய பரலோக இலக்கு வரை விவிலியம் நமக்கு சிறந்த தோழனாக இருக்கும். மேசியாவை எதிர்பார்க்கும் மக்களுக்காக, மேசியாவை எதிர்பார்த்த மக்களால் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு மேசியாவான இயேசு கிறிஸ்துவுடன் இருந்தவர்களால் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டில் மக்களிடம் இறைவன் நேரடியாக பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இறைவன் மானிட மகன் வழியாக பேசுகிறார்.

    நம்மில் பெரும்பாலானோர் திருவிவிலியத்தைப் படிக்கிறோம். வெறுமனே ஒரு செய்தித் தாளைப் போல அதை வாசித்துக் கடந்து விடக் கூடாது. அதில் உள்ள இறைவார்த்தைகளை நாம் உணர வேண்டும். நாம் அந்த இறைவார்த்தைகளை நமக்குள் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இறை வார்த்தைகள் நம்மை அமைதியான முறையில் வழிநடத்தி வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதிகாலையில் இறை வார்த்தைகளைப் படிக்கும் போது அந்த நாள் நமக்கு இனிமையான நாளாக அமைகிறது. இரவு நேரத்தில் திருவிவிலியத்தை படித்து விட்டு உறங்கும் போது, நமது மன பாரத்தை இறக்கி வைத்து விட்டு சுகமான நித்திரைக்கு அது உதவுகிறது.

    விவிலியம் நமக்கு வெறுமனே அமைதி தரும் பொருள் மட்டுமல்ல. அது வெறும் எழுத்துகளால் நிரப்பப்பட்ட ஒரு புத்தகம் அல்ல. அது கடவுளின் அன்பினால் நிரப்பப்பட்ட நூல். கடவுளின் கருணையினால் கொடுக்கப்பட்ட நூல்.

    திருவிவிலியம் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய நூல் அல்ல. பயன்படுத்த வேண்டிய நூல். விவிலியம் எந்த அளவுக்கு நமது விரல்கள் பட்டுப் பட்டு அழுக்காகிறதோ, அந்த அளவுக்கு நமது இதயம் இறைவனின் விரல்கள் தொட்டுத் தொட்டு தூய்மையாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்வோம். அதன் வழி நடந்து இறைவனின் இல்லத்தை அடைவோம்.

    சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.
    Next Story
    ×