என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இது எத்தனை தவறு, இப்படி பேசுவதுதான் மிக கொடிய பாவம், என்று இயேசு சொல்லியிருப்பதை இக்கட்டுரையில் பார்க்கின்றோம்.
    இயேசு வாழ்ந்த காலத்தில் ரோம பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யூதேயா தேசத்தின் 5-ம் ஆளுனராக இருந்த பிலாத்து என்பவன் சில கலிலேய மக்களை கொன்று குவித்தான். அதை கண்டவர்கள் இயேசுவுக்கு, நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். ஆனால் இயேசுவோ அவர்களை நோக்கி இப்படி இந்த கலிலேயர் மரித்ததினால் இவர்கள் மற்றவர்களை விட மகா பாவிகள் என்று நினைத்தீர்களோ? சீலோவாமிலே கோபுரம் விழுந்து 18 பேர் மரித்தார்களே, அவர்கள் எல்லோரும் பிறரை விட மிகப்பெரிய குற்றம் செய்தவர்களென்று நினைத்தீர்களோ? அப்படி அல்லவென்று சொன்னவர், இவ்வாறு அவதூறு பேசாமல் மனந்திரும்புங்கள் என்றார் இயேசு.

    இன்று கூட உலகில் அவ்வப்போது ஏதேனும் இயற்கை பேரழிவுகள், விபத்துகள், கொள்ளை நோய்கள் போன்ற துயர சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. திடீரென திகிலூட்டும் பெரு வெள்ளம், பூமி அதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, வைரஸ் நோய் போன்றவைகள் மனித உயிருக்கு பேரிழப்பு ஏற்படுத்துகிறது.

    இத்தகைய பேரழிவின்போதும், அச்சத்தின் விளிம்பில் வாழ்ந்தாலும், நம்மில் சிலர் தவறான கருத்துகளையும், அவதூறுகளையும் பரப்பி வருகிறோம். அதாவது இப்படிப்பட்ட பேரிடர்களில் மரித்தவர்கள், அதில் துன்பப்படுபவர்கள் எல்லோரும் மிகுந்த பாவம் செய்தவர்கள். அதனால் கடவுள் அவர்களை தண்டிக்கிறார் என தீர்ப்பு சொல்கிறோம்.

    இது எத்தனை தவறு, இப்படி பேசுவதுதான் மிக கொடிய பாவம், என்று இயேசு சொல்லியிருப்பதை இக்கட்டுரையில் பார்க்கின்றோம். பேரிடர்களும், கொள்ளை நோய்களும் பரவும்போது, அவதூறு பேசாமல், இத்தருணத்தில் நம்முடைய வாழ்வை கிறிஸ்துவுக்குள் சீர் செய்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்து, சகோதர சிநேகத்துடன் வாழ முற்படுவோம்.

    சகோதரி. ரூத்பிமோராஜ், கே.ஜி. கார்டன், திருப்பூர்.
    இயேசு உண்மையுள்ளவர் என்றும், நாம் படிக்கும் புனித வேதாகமம் உண்மையானது, கலப்படமில்லாதது என்றும் ஆழமாக நம்புகிறோம்.
    உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் பொய் கூறுவது அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும். பொய்யான வாழ்வினால் உடைந்த குடும்பங்கள் ஏராளம். உறவுகளில் விரிசல் ஏற் படுவதற்கு பொய் ஒரு முக்கியமான காரணமாகி இருக்கிறது.

    ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தன் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும். வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர். (நீதிமொழிகள் 18: 20,21)

    தினமும் ஒரு மனிதன் இருபத்தைந்து முறை பொய் சொல்கிறான் என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு. வாலிப பருவத்தில் தான் அதிகமாக பொய் சொல்கிறார்கள் என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது. பத்து நிமிடம் சிந்தித்து பார்த்தால் நம்மை அறியாமல் எத்தனை பொய் சொல்கிறோம் என்று புரியவரும்.

    பொய் பேசுவதற்கான சில காரணங்கள்:

    1. தன்னை காத்துக்கொள்வதாக நினைத்து சிலர் பொய் சொல்வதுண்டு. அப்படி சொல்பவர் களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றே சொல்லலாம். வேதத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்கள் ஆதி திருச்சபையில் ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள். அவர்கள் சென்று தங்கள் செல்வத்தை எல்லாம் விற்று விட்டு பேதுருவிடம் ஒப்படைத்தபோது கொஞ்சம் தங்களுக்கு என்று வைத்து விட்டு எல்லாவற்றையும் கடவுளுக்கு கொடுத்தோம் என்று பொய் சொன்னார்கள்.

    கடவுளின் முன்னிலையில் பொய் சொன்ன காரணத்துக்காக கணவனும் மனைவியும் அங்கேயே சுருண்டு விழுந்து மாண்டனர். கொஞ்சத்தை நமக்கென்று வைத்து கொள்ளலாம் என்று நினைத்தது தவறல்ல, ஆனால் அவர்கள் சொன்ன சிறிய பொய் தான் கடவுளின் முன்னிலையில் பெரிய தவறாக கருதப்பட்டது. ஒரு சிறு பொய்கூட தங்களை அழித்துவிடும் என்பதை அனனியா, சப்பிரா வாழ்க்கை நமக்கு கற்று கொடுக்கிறது.

    2. தன்னை தான் உயர்த்தி காட்டுவதற்காக மக்கள் பொய் சொல்கிறார்கள். இந்த சூழல் இவ்வுலகில் எல்லா இடத்திலும் காணப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. போலித்தனமாய் பெருமை கொள்பர்வர்களை கடவுள் விரும்புவதில்லை. தாங்கள் ஆன்மிக வாதிகள், பணக்காரர்கள் என காட்டிக் கொள் பவர்களை அவர் எப்போதும் வெறுக்கிறார்.

    செருக்கு கொண்ட மனிதர்களை அவர் எதிர்க்கிறார். பணிவு கொண்ட மனிதர்களை அரவணைக்கிறார். எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார் என்ற சிந்தனை நம்மில் வேண்டும். பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார். (நீதிமொழிகள் 12:22)

    3. சிலருக்கு பொய் என்பது உயிருடன் கலந்துவிட்டது. தன்னை அறியாமலேயே அவர்கள் பொய் சொல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை ஆபத்தானது. உண்மையாய் அவர் பாதம் பணிந்து, உண்மையான ஒரு வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தில் இப்படியாக படிக்கிறோம், இயேசுவுக்கு எதிரான சாத்தானே உங்களுக்கு தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையை சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும் போதும் அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவன் பொய்யன், பொய்மையின் பிறப்பிடம். (யோவான் 8:44)

    4. மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பதற்கும் மற்றவர்களை தாழ்த்துவதற்கும் பொய் சொல்லப்படுவதுண்டு. தன்னுடைய நன்மைக்காக நம்மை நேசிக்கும், நம்மீது நம்பிக்கை வைக்கும் மக்களிடம் கூட அவரை மதிக்காமல் உண்மைக்கு புறம்பாக பேசுபவர்கள் அநேகம். கடவுள் உண்மையாக இருப்பவர்களை நேசிக்கிறார். ஆண்டவர் வெறுக்கும் ஏழு காரியத்தில் இரண்டு பொய் சார்ந்தது, அவை பொய்யுரைக்கும் நாவு என்றும் பொய்யுரைக்கும் போலிச்சான்று என்றும் படிக்கிறோம். (நீதிமொழிகள் 6:17-19).

    பொய்யின் சிந்தனைகள் இருக்கின்ற உள்ளத்தில் உண்மை இருக்காது. அற்ப வெற்றிக்காக சொல்லும் பொய்கள் நிலைப்பதில்லை. மனிதர்கள் அழியலாம் ஆனால் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அழிவதில்லை. ஆதலால் தான் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் உண்மையுள்ளதாக இருத்தல் வேண்டும்.

    ஒரு போதும் பாதி உண்மை முழு உண்மையாகாது. உண்மை என்பது முழுமையானது. பொய் தன்னலமானது, அதில் துளி கூட அன்பில்லை. பொய்யான வாழ்வல்ல வாழ்வு, உண்மையான வாழ்வே மெய்யான வாழ்வு.

    இயேசு உண்மையுள்ளவர் என்றும், நாம் படிக்கும் புனித வேதாகமம் உண்மையானது, கலப்படமில்லாதது என்றும் ஆழமாக நம்புகிறோம். அப்படியிருக்கும் நாம் அவர் வழியை பின்பற்றும் போது உண்மையுள்ளவர்களாக மாற வேண்டும் என்பது அவசியம். நாம் இவ்வுலகில் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இல்லையென்றால் வேதத்தை பின்பற்றுவதில் அர்த்தம் இல்லை.

    ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்; வஞ்சக நாவினின்று என்னை காத்தருளும். (சங்கீதம் 120:2). ஆமென்

    துலீப் தாமஸ், சென்னை.
    இந்த தவக்காலத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம்.
    இந்த தவக்காலத்தில் இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளையும், கல்வாரி சிலுவையிலே தம்முடைய ரத்தத்தை சிந்தினதையும் நாம் தியானித்து வருகிறோம். சிலுவையில் தொங்கிய இயேசுவின் கைகளும், கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்டது. தலையிலே முள் கிரீடத்தை வைத்து அழுத்தினார்கள். அவரது சரீரத்தில் எல்லா இடங்களிலும் ரத்தம் வழிந்தோடியது. ஆனால் சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்னரே கெத்செமனே தோட்டத்தில் சிலுவை மரணத்திற்கு நிகரான மரண வேதனையை சந்தித்தார் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். இவ்வளவு ஆத்தும வேதனை மற்றும் மரண அவஸ்தைகளை அவர் அனுபவித்ததன் காரணம் என்னவென்றால் அந்த மரணத்தின் மூலம் இந்த உலகத்தில் கொண்டுவர நினைத்த ஆசீர்வாதமே.

    ஆதாம் மூலம் மனுக்குலத்திற்கு வந்த சாபம், நியாயப்பிரமாணத்தினால் மனுக்குலத்திற்கு வந்த எல்லா சாபங்களிலும் இருந்து நம்மை விடுவிக்கும்படியாக இந்த வேதனையை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.

    வேதாகமத்தில் 2 கொரிந்தியர் 5-ம் அதிகாரம் 21-ம் வசனத்தில், ‘நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்’ என்று சொல்லப்பட்டுள்ளது. 1 பேதுரு 2-ம் அதிகாரம், 24-ம் வசனத்தில், ‘நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே, நமக்காக சிலுவையை மாத்திரம் இயேசு சுமக்கவில்லை. ஆத்தும வியாகுலத்தை மாத்திரம் சுமக்கவில்லை. இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் சிலுவையில் சுமந்தார். நாம் நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று வேதம் கூறும் சத்தியத்தை தியானித்து பாவம் நிறைந்த உலகத்திலே நீதியுள்ள வாழ்கை வாழ தேவன் நமக்கு கிருபை தருவாராக.

    சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
    தேவ பிள்ளைகளே நாமும் நம் பாவம் நீங்கவும், சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழவும் இயேசுவை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தங்குவதற்கு அழைப்போமா?
    எரிகோ பட்டணத்தில் சகேயு என்னும் பேர் கொண்ட மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் மக்களிடம் வரி வசூலிக்கும் வேலை செய்தவன். இவனுக்கு எல்லாம் நிறைவாய் இருந்தது. ஆனால் அவன் சொந்த நாட்டு மக்களே அவனை வெறுத்தனர். மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததே அதற்கு காரணம்.இந்த சூழ்நிலையில் தான் இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்தார். இயேசு வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அவரை காண்பதற்காக மக்கள் கூட்டம் கடல்போல் திரண்டது. இதை கேள்விப்பட்ட சகேயுவும், இயேசு குருடர், செவிடர், முடவர், குஷ்டரோகி யாவரையும் தகமாக்கியிருக்கிறார். மரித்தோரையும் உயிரோடு எழுப்பியிருக்கிறார். இப்படிப்பட்ட பரிசுத்த தேவ குமாரனை எப்படியாவது காண வேண்டுமென்று மிகுந்த ஆசையோடும், ஆவலோடும் காணப்பட்டார். ஆனால் சகேயு குள்ளனாயிருந்தபடியால், அங்கிருந்த மக்கள் கூட்டத்தில் இயேசுவை காணமுடியவில்லை. இருப்பினும் அவரை எப்படியாவது கண்டுகொள்ள வேண்டும் என்று நினைத்து, அருகிலிருந்த காட்டத்தி மரத்தில் ஏறி அவரை கண்டுகொண்டான்.

    இயேசு அந்த மரத்தின் கீழ் வந்தபோது, சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். சகேயு உடனே கீழே இறங்கி மிகுந்த சந்தோஷமாய் இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான். அப்போது சகேயு இயேசுவிடம், என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன், ஒருவரிடத்தில் அதிகமாய் எதையாகிலும் பெற்றிருந்தால் அதை 4 மடங்காய் திருப்பி தருகிறேன் என்றான். அதற்கு இயேசு அவனிடம் இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றார். இயேசு சகேயுவின் வீட்டிற்கு வந்ததும், பாவம் போனது, இரட்சிப்பு வந்தது, தெய்வீக சமாதானம் வீட்டை நிறைத்தது என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.

    வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரம், 20-ம் வசனத்தில், -இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன், ஒருவன் என் (இயேசு) சத்தத்தை கேட்டு கதவை திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்என்று சொல்லப்பட்டுள்ளது.

    எனவே தேவ பிள்ளைகளே நாமும் நம் பாவம் நீங்கவும், சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழவும் இயேசுவை நம் இல்லத்திலும், உள்ளத்திலும் தங்குவதற்கு அழைப்போமா?

    சகோதரி. ரூத்பிமோராஜ்,

    கே.ஜி. கார்டன், திருப்பூர்.
    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது.
    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது. இதில் பங்குதந்தை அமல்ராஜ் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கொடிமரத்தை அர்ச்சித்தார். முன்னதாக ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில் பங்கு பேரவை துணை தலைவர் டி.வி.சி.விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின் எட்வின், பொருளாளர் பாத்திமா மைக்கிள்ராஜன் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    விசுவாசம், நல்லொழுக்கம், இறை அறிவு, சுய கட்டுப்பாடு, புனிதத்துவம், சகோதர நல்லுறவு, அன்பு, விடாமுயற்சி போன்றவை இந்த நூலில் இழையோடுகின்ற முக்கியமான செய்திகளாகும்.
    பேதுரு இரண்டாம் நூலை எழுதியவர் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான பேதுரு என்பது மரபுச் செய்தி. இவர் இதை கி.பி. 66, 67-களில் எழுதினார் என்பது பொதுவான நம்பிக்கை.

    ‘திருத்தூதனான பவுல் எழுதியது’ என்றும், ‘இயேசுவின் உருமாறுதலைக் கண்டவன்’ என்றும் வருகின்ற சொற்றொடர்கள் இந்த நூலின் ஆசிரியர் பேதுரு என நம்பச் செய்கின்றன.

    இது பேதுரு எழுதிய நூலாய் இருந்தால் அவரது மரணத்துக்கும் சற்று முன்பு இது எழுதப்பட்டிருக்க வேண்டும். பேதுரு ரத்தசாட்சியாய் மரித்தவர். அவர் சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு உயிர்விட்டிருக்கலாம் என்பதை திருச்சபை வரலாறு தெரிவிக்கிறது.

    இந்த நூலை பேதுரு எழுதியிருக்க வாய்ப்பில்லை, அவருடைய சிந்தனைகளை உள்வாங்கி இன்னொருவர் பிற்காலத்தில் எழுதியிருக்க வேண்டும் எனும் சிந்தனையும் ஆதிகாலம் முதலே உண்டு. காலத்தால் இது கி.பி. 150-ல் கூட எழுதப்பட்டிருக்கலாம் எனும் வாதங்கள் உண்டு. அதற்கு முக்கியக் காரணமாக இந்த நூல் கொண்டு வருகின்ற செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

    உதாரணமாக, எருசலேமின் அழிவுடன் இரண்டாம் வருகை நடக்கும் எனும் நம்பிக்கை ஆதித் திருச்சபை நாட்களில் வலுவாக இருந்தது. எருசலேம் கி.பி. 70-ல் தான் தரைமட்டமானது. அதைத் தொடர்ந்து இரண்டாம் வருகை இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது. அது நடைபெறாமல் போனதால் இரண்டாம் வருகை குறித்த சந்தேகங்கள் அதிகரித்தன. ஆனால் அதற்கு முன் பேதுரு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்த நூல் இரண்டாம் வருகை குறித்த சந்தேகத்தைப் பேசுவதைக் காணலாம்.

    அதே போல இதில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவ சிந்தனைகளும் காலத்தால் பிந்திய வளர்ச்சியடைந்த சிந்தனைகள். இந்த நூல் தொடக்க காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டும், ஏற்றுக்கொள்ளப்படாமலும் தான் இருந்தது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் இந்த நூல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறது விவிலிய வரலாறு.

    திருச்சபைக்கு இரண்டு விதமான சிக்கல்கள் எழலாம். ஒன்று உள்ளேயிருந்து, இன்னொன்று வெளியேயிருந்து. உள்ளே இருந்து எழுகின்ற பிரச்சினைகள் தான் திருச்சபையை அழிக்கும். வெளியேயிருந்து எழுகின்ற பிரச்சினைகள் உண்மையில் திருச்சபையை வளர்க்கும். அதைத் தான் வரலாறு சொல்கிறது.

    கடினமான சூழல் நிலவிய, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவம் ஆல்போல தழைத்தது. கிறிஸ்தவர்களை அழிக்க நினைக்கும் சீனா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவம் அசுர வளர்ச்சியடைகிறது.

    ஆனால் திருச்சபைக்கு உள்ளே பிரச்சினைகள் எழும்போது, அவை உள்ளிருந்து வேர்களை அரித்து ஆலமரத்தை அடியோடு சாய்த்து விடுகிறது.

    பேதுருவின் இரண்டாம் நூலில் திருச் சபைக்கு உள்ளே எழுகின்ற பிரச்சினைகள் அலசப்படுகின்றன. ஆன்மிகத்தில் பாலகர் களாக இராமல், வளர்ச்சியடைய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. புனிதமற்ற சிந்தனைகளும், போதனைகளும் விலக்கப்பட வேண்டுமென விவாதிக்கப்படுகிறது.

    கிறிஸ்தவ விசுவாசத்தில் படிப்படியாய் வளரவேண்டும் எனும் சிந்தனை இதில் இழையோடுகிறது. கடவுளிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற செய்திகளையே நம்ப வேண்டும். போலிப் போதகர்களை நம்பக்கூடாது எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.

    தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள் என்கிறார் பேதுரு. தனது உயிர் விரைவில் பிரியும் நிலை வரும் என்றும். தனது உயிர் பிரியும் வரை விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பேன் எனவும் நெகிழ்ச்சியாய் பேதுரு பதிவு செய்கிறார்.

    பாவம் செய்த வானதூதர்களை இறைவன் தண்டித்தார். பாவம் செய்த பழைய ஏற்பாட்டு மனிதர் களையும் இறைவன் தண்டித்தார். அதே போல பாவம் செய்தால் நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். எனவே இறைப்பற்றில்லாத நிலையை மாற்றி இறைவனில் நிலைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

    யாரும் அழிவுறாமல் எல்லோரும் மீட்படைய வேண்டும் என்பதற்காக இறைவன் பொறுமையோடு காத்திருக்கிறார் எனும் சிந்தனையை பேதுரு தருகிறார். எனவே வருகையில் காலத்தைக் குறித்து சந்தேக மடைய வேண்டாம். அது திருடனைப் போல வரும் என்கிறார் பேதுரு. “புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என நம்பிக்கையின் வாக்கையும் அவர் அளிக்கிறார்.

    விசுவாசம், நல்லொழுக்கம், இறை அறிவு, சுய கட்டுப்பாடு, புனிதத்துவம், சகோதர நல்லுறவு, அன்பு, விடாமுயற்சி போன்றவை இந்த நூலில் இழையோடுகின்ற முக்கியமான செய்திகளாகும். பேதுருவின் வாழ்வும், எழுத்தும் நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. தோல்வியாளனாய் இருந்தாலும் நமக்கு இறைவன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு களைத் தருகிறார். நாம் ஆன்மிகத்தில் வளர்ச்சியடைய விரும்புகிறார். துன்பங்களை நாம் சகித்துக் கொள்ள வலிமை தருகிறார். நம் வாழ்வில் நாம் புனிதமான வாழ்க்கை வாழ விரும்புகிறார் என அவற்றை வகைப்படுத்தலாம்.

    “கிறிஸ்தவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் ரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள். இயேசுவே மீட்பர். பிதாவாகவும், சுதனாகவும் இருப்பவர் இவரே. இவரே ஆண்டவர். அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். பாவத்தை விலக்கி விடவேண்டும்” போன்ற கிறிஸ்தவ அடிப்படைச் சிந்தனைகள் இந்த நூலில் அழுத்தமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    சேவியர்
    கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும்.
    நமக்காக தன் வாழ்வையே ஒப்புக்கொடுத்து கல்வாரி சிலுவையில் தன் உயிரை விட்ட இயேசுவின் பாடுகளை குறித்து இந்த லெந்து நாட்களில் தியானித்து வருகிறோம். தன் வாழ்வை எப்படி நமக்காக அர்ப்பணித்தார் என்று பார்த்தால் இந்த உலகத்தில் மனிதனாய் அவதரித்து பல்வேறு க‌‌ஷ்டங்கள் அனுபவித்து கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று தன்னையே சிலுவையில் ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து மேன்மையான ஆசீர்வாதங்களை நமக்கு பெற்றுத்தந்துள்ளார்.

    இப்படி நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்த இந்த சிலுவையின் ஆசீர்வாதங்களை நாம் எப்படி பெற்றுக்கொள்வது? என்பதை வேதாகமத்தில் மத்தேயு 10:38-ல் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்ற கடவன் என்று கூறப்பட்டுள்ளது. எப்படி இந்த சிலுவையை பின்பற்றுவது? என்று சற்று தியானிப்போம்.

    அநேகர் நன்றாக ஜெபிக்கின்றனர். நன்றாக வேதம் வாசிக்கின்றனர். கோவிலுக்கு சென்று ஆராதனை செய்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதங்கள் இல்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு ஜெபித்தாலும், உபவாசம் இருந்தாலும் சரியான அனுதினமும் தேவனுக்கென்று அர்ப்பணிப்பு இல்லாமல் பழைய மனிதனாகவே ஜென்ம சுபாவத்திலே உள்ளனர். இதனால் கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்காமலேயே உள்ளது.

    கடவுளின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய பழைய குணங்கள், சுபாவங்கள், இயல்பு ஆகியவற்றை மாற்றி மனதை தூய்மைப்படுத்தி அவருக்காக நம்முடைய இருதயத்தில் முதலில் இடம் கொடுக்க வேண்டும். அவர் நமக்காக சிலுவையில் அறையப்பட்ட பாடுகளை அனுபவித்ததை நினைவுகூர்ந்து நாமும் சிலுவையை பின்பற்றி தேவசாயலாக மாற வேண்டும்.

    இப்படி நம் வாழ்க்கையில் பின்பற்றி நடந்தால் தேவ ஆசீர்வாதங்கள் பெற்று மேன்மையான வாழ்க்கையை நமக்கு தர தேவன் வல்லமையுள்ளவராக இருக்கார்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
    தவக்காலத்தை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர்.

    இந்த ஆலயமானது கீழை நாடுகளின் ‘‘லூர்து நகர்’’ என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    இந்த ஊர்வலமானது பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை சென்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    ஊர்வலத்தில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பேர் கலந்து கொண்டனர். சிலுவை பாதையை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
    எங்களை நேசிக்க, எங்களோடு பேச, எங்களை புரிந்துகொள்ள, எங்கள் மேல் அன்பு காட்ட ஒருவருமில்லையே என்று புலம்பித் தவிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் ஓர் நற்செய்தி. ‘இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார், உங்களை கைவிடமாட்டார்’.
    இன்றைக்கு பூமியில் வசிக்கும் மாந்தரில் பலர் கைவிடப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக, அனாதைகளாக மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழுகின்றனர்.

    அவர்களுடைய இதயத்தில் எனக்கு யாரும் இல்லையே என்கிற வேதனை நிரம்பி காணப்படுகிறது. தாங்கள் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே தங்களை நேசிக்கவில்லையே என்று புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம் உண்டு. தங்களின் சொந்த தாய், தந்தையரால் துரத்தியடிக்கப்பட்ட பிள்ளைகளும் உண்டு, ஏன் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்த கொடூரமான தாய்களும் உண்டு.

    சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், சொந்த பந்தங்களுக்கிடையே புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று கூறிக்கொண்டே போகலாம். ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் கைவிடப்பட்டவரை போல ஒரு வாழ்க்கை வாழ்கிறீர்களா?, கவலைப்படாதிருங்கள்.

    இன்றைக்கு உண்மையான அன்பிற்கு ஏங்கி தவிக்கும் எத்தனையோ உள்ளங்கள் காணப்படுகின்றன. கணவனின் நேசத்துக்காக ஏங்கும் மனைவிகள், மனைவியின் அன்பிற்காக ஏங்கி தவிக்கும் கணவன்மார்கள், பிள்ளைகளின் பாச வார்த்தைகளுக்காய் காத்திருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் தங்களிடம் அன்பாக நடக்க மாட்டார்களா என்று ஏங்கும் பிள்ளைகள் என்று பலதரப்பட்டோர் உண்டு.

    இன்று முகநூலையும், வாட்ஸ்அப்பையும் நேசிக்கும் அளவுக்கு கூட உறவுகளை நாம் நேசிக்க தவறிவிட்டோம். கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் செலவழிக்கும் நேரத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தங்கள் குடும்பங்களை, உறவுகளை நேசிப்பாரேயாகில் அநேக குடும்பங்களில் வழியும் கண்ணீர் குறைந்திருக்கும்.

    இன்றைய காலகட்டங்களில் மனிதன் உறவுகளோடு இயங்குவதை காட்டிலும் இயந்திரங்களோடு இயங்குவதே அதிகம். செல்லப்பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பதைக் காட்டிலும் செல்போன்களோடு நேரம் செல வழிப்பதே அதிகம். முதியோர்களோடு தங்கள் பெற்றோரோடு நேரம் செலவிடாத எத்தனையோ பேர்கள் முகநூல்களில் முடங்கி கிடக்கின்றனர். வாழ்க்கையை வாழ வேண்டியவர்களோடு வாழாமல் வாட்சப்பில் வாழ்பவர்கள் அதிகம். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம்.

    இப்படி ஏதோ ஒரு விதத்தில் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு கண்ணீர் வடிக்கும் மனிதர் களுக்கு ஆறுதலாக, தேறுதலாக, கைவிடாதவராக இருக்கும் தெய்வம் தான் இயேசு கிறிஸ்து. அவர் தம் அருளுரையில் இப்படியாக திருவுளம் பற்றினார். “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. (மத்தேயு 11:28).

    ஆம், ஒவ்வொருவருக்கும் ஆறுதலையும், சமாதானத்தையும், நம்பிக்கையையும் அளிக்கவே இறைமகன் இயேசு பூமியில் வெளிப்பட்டார். அவரை நோக்கி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர் நன்மை செய்து ஆசீர்வதிப்பது நிச்சயம். அவர் தம்மை பின்பற்றி வந்த சீடர்களுக்கு இப்படியாக திருவுளம் பற்றினார்:

    ‘நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்’ என்று மட்டுமல்ல, ‘நான் உங்களை கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை, உலகத்தின் முடிவு பரியந்தம் இதோ சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்று திருவுளம்பற்றினார்.

    ‘ஆம், அவர் தம் ஜனங்களை நேசிக்கிறவர். தம் ஜனங்களின் மேல் அதிக கரிசனையுள்ளவர். ஆகவே தான் ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக் கிறேன்’ (ஏசாயா 49:15,16) என்று திருவுளம் பற்றினார்.

    ஆம், உங்களை நேசிக்கிற ஒரு தெய்வம் உண்டு, அவர் தான் அருள் நாதர் இயேசு. அவர் உங்கள் ஒவ்வொருவருக்காய் கல்வாரி சிலுவையில் தியாகமாய் பலியானார். உலக மக்களின் பாவங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தார். அவரை நம்பும், தேடும் ஒவ்வொரு மனிதருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டளையிட்டு வாழத் தேவையான அவ்வளவு அனுகிரகங்களையும் கொடுத்து, முடிவிலே நித்திய ஜீவனையும் பரலோக வாழ்க்கையும் கட்டளையிடுகிறார்.

    இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இயந்திரங்களோடு ஜீவிக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு ஜீவித்தால் நலமாயிருக்கும். முக நூல்களில் மூழ்கிகிடக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனின் நூல்களில் மூழ்கினால் நலமாயிருக்கும். செல்போன்களில் வீழ்ந்துகிடக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு செயல்பட்டு வாழ்ந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நாம் உறவுகளை நேசிப்போம்.

    எங்களை நேசிக்க, எங்களோடு பேச, எங்களை புரிந்துகொள்ள, எங்கள் மேல் அன்பு காட்ட ஒருவருமில்லையே என்று புலம்பித் தவிக்கும் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் ஓர் நற்செய்தி. ‘இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார், உங்களை கைவிடமாட்டார்’.

    இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் உறவுகளோடு நேரம் செல விடுங்கள். அன்பு வார்த்தைக்காய் ஏங்கி தவிக்கும் ஒவ்வொருவருடனும் நேரம் செலவிடுங்கள். அப்பொழுது உங்கள் குடும்பம் ஒரு சொர்க்க வீடாக திகழும். மனமகிழ்ச்சி உங்கள் உள்ளங்களில் பெருகும் போது மனஅழுத்தம் விலகி சரீரத்தில் ஆரோக்கியம் பெருகும்.

    இறைவனின் திருவருளால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். உங்களால் மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆம் கைவிடாத தெய்வம் உங்களை கைவிடாமல் பரலோகத்தின் மகிமையால் உங்களை ஆசீர்வதிப்பார்.

    சகோ சி.சதீஷ், டைனமிக் பவர் மினிஸ்ட்ரி, வால்பாறை.
    இறைவனை தவிர்த்து எதையும் முழுமையடைய செய்ய இயலாது. எனவே இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச. 5:17) என்ற ஏசுவின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து ஜெபிப்போம்.
    ஏன் சுவாசிக்க வேண்டும்? நாம் நல்ல காற்றை உள்ளிழுத்து கெட்ட காற்றை வெளியேற்றுகிறோம். அது போல ஜெபத்தின் மூலம் கடவுளின் வல்லமையை பெற்றுக்கொண்டு நம்மிடம் இருக்கும் இயலாமைகளை, குறைபாடுகளை நீக்கி விடுகிறோம்.

    பேட்டரி ‘ரீ-சார்ஜ்’ செய்வது போல நாமும் கடவுளிடம் நமது ஆன்மிக வாழ்வை புதுப்பித்து கொள்ள வேண்டும். ஏசு இறை ஆட்சியை அறிவிப்பதற்கு முன் ஜெபித்தார் (லூக்5:16). முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்பும், நடைபெற்ற பின்னும் ஜெபிக்க தனிமையாக சென்றார் (மாற்6:45-46 யோவா 11:41-12).

    திரு தூதர்களை தேர்ந்தேடுக்கும் முன்பும் ஜெபித்தார் (லூக் 6:12). ஏனெனில் ஜெபிக்கும் போது தான் கடவுளின் வல்லமையை பெறுகிறோம். நீ ஜெபிப்பதை நிறுத்திவிட்டால் தண்ணீரில் இருந்து கரையில் வீசி எறியப்பட்ட மீனுக்கு ஒப்பாவாய் (புனித யோவான் கிறிஸ்தோதம்). நமது ஆண்டவர் கூறுகிறார்.

    என்னை விலக்கி விட்டு பிரிந்து எதுவும் உங்களால் செய்ய இயலாது (யோ: 15:5) ஆம் நாம் விரும்பும் எதையும் செய்யக்கூடும். ஆனால் இறைவனை தவிர்த்து எதையும் முழுமையடைய செய்ய இயலாது. எனவே இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1தெச. 5:17) என்ற ஏசுவின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து ஜெபிப்போம்.

    அருட்தந்தை, அல்போன்ஸ், குடுந்தை.
    வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ நம்மை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
    கடந்த காலத்தை குறித்து நமக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம். நிகழ்காலத்தை குறித்து அறிந்திருக்கலாம். ஆனால் ஏன் நடந்தது?, என்ன நடந்து கொண்டிருக்கிறது? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்முடைய தேவன் நமது முக்காலத்தையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.

    நாம் நோய்வாய்பட்டால் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை அணுகி வியாதியில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்கிறோம். இப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ நம்மை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

    அப்படி செய்யும் போது தேவன் நமக்கு நிறைவான வெற்றியுள்ள வாழ்வை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே தூய்மையான வாழ்வு வாழ, நம்முடைய சிந்தனைகள் நல்ல சிந்தனையாக மாற தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். கெட்ட சிந்தனை இருதயத்தில் பாவம் செய்ய தூண்டுகிறது. இருதயம் கேடுள்ளது மாயிருக்கிறது என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நம்முடைய இருதயத்தை தேவனுடைய ஆலயமாக பரிசுத்தமாக வைத்திருந்தால் இருதயத்தில் நல்ல சிந்தனை உருவாகும்.

    வேதாகமத்தில் சங்கீதம் 139-ம் அதிகாரம் 23, 24 வசனங்களில் தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளவேண்டும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் தேவ சமூகத்தில் நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இயலும். நம் ஒவ்வொருவரையும் கருவிலே அறிந்திருக்கிற தேவனிடத்தில், தேவனே நீர் என்னில் தங்கும் ஆலயமாக என் சரீரத்தையும், உள்ளத்தையும் மாற்றும் என்று ஜெபிப்போம். அப்போது தேவன் நம்முடைய இருதயத்தில் நல்ல சிந்தனைகளை சிந்திக்க உதவி செய்வாராக ஆமென்.

    -பெலிக்ஸ், திருப்பூர்
    இயேசுவுடன் வாழ்ந்த பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் தான் பேதுரு. இன்றைய வட மேற்கு துருக்கி பகுதியில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கும், பிற இனக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானதாக இந்த நூலை அவர் எழுதினார்.
    இயேசுவுடன் வாழ்ந்த பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் தான் பேதுரு. கி.பி. 64-ம் ஆண்டு, சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டார். அன்றைக்கு சின்ன ஆசியா என அழைக்கப்பட்ட, இன்றைய வட மேற்கு துருக்கி பகுதியில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கும், பிற இனக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானதாக இந்த நூலை அவர் எழுதினார்.

    இந்த நூலின் தொடக்கத்திலேயே ‘இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன் பேதுரு எழுதுவது’ என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனாலும், அவர் குறிப்பிடும் “போந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா” போன்ற எல்லா இடங்களிலும் பேதுருவின் காலத்தில் திருச்சபை தோன்றியிருக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கருதுகின்றனர். எனவே இந்த நூலை பேதுரு நேரடியாக எழுதாமல் அவர் பெயரில் ஒருவர் எழுதியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

    துன்பங்களினால் அலைக்கழிக்கப்படும் போது எப்படி விசுவாசத்தைக் காத்துக் கொள்வது, இழந்து போன நம்பிக்கையை எப்படி மீண்டெடுப்பது எனும் சிந்தனைகளின் அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளது.

    பேதுரு வாழ்ந்த காலத்தில் பெரிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராய் வன்முறை கட்டவிழ்த்து விடப்படவில்லை. எனில் ஏன் இந்த நூல் எழுதப்பட்டது? அதற்கு ஒரு வரலாற்று, மதவாதப் பின்னணி உண்டு.

    கி.பி. 64-ல் ரோம் நகரில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து நடந்தது. மூன்று நாட்கள் கொழுந்துவிட்டெரிந்து நகரையே துவம்சம் செய்த நெருப்பு அது. அந்த நெருப்பு நகரிலுள்ள கோவில்கள், பழைய கட்டிடங்கள் போன்றவற்றையெல்லாம் எரித்து சாம்பலாக்கின. இந்தச் சதிவேலைக்குப் பின்னால் இருந்தவர் நீரோ மன்னன்.

    ஆனால் அவன் சூழ்ச்சியாக கிறிஸ்தவர்களை நோக்கிக் கைகாட்டினான். இதனால் அவனுக்கு இரட்டை லாபம். அவனுடைய சிந்தனைப்படி நகரை புதிதாய்க் கட்டி எழுப்பலாம். இரண்டாவது அவனுடைய எதிரிகளான கிறிஸ்தவர்களை அழித்தொழிக்கலாம்.

    மக்களின் கடும் கோபம் கிறிஸ்தவர்கள் மீது திரும்பியது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர். சிங்கம், புலி போன்ற விலங்கு களுக்கு இடையே வீசப்பட்டு கொல்லப்பட்டனர். மேனியெங்கும் எண்ணெய் பூசப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர்.

    இந்த கடிதத்தின் காலம் அந்தக் காலகட்டமாக இருக்கலாம். அந்த கொடுமைகளின் உள்ளே பயணிக்கும் கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த நூல் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

    மார்க் நற்செய்தியாளருக்கு பெரும்பாலான தகவலைக் கொடுத்தவர் பேதுரு தான். திருத்தூதர் பணிகளிலும் முதல் பாதியை ஆக்கிரமித்திருப்பவர் அவர் தான்.

    கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது நமது கஷ்டங்களெல்லாம் தீர்ந்து விடும் என்பது தவறான போதனை. உண்மையில் அப்போது தான் நமது கஷ்டங்களெல்லாம் ஆரம்பிக்கும். நிராகரிப்புகள் எழும். துரத்தல்கள் எழும். நாம் வேண்டப்படாதவர்கள் ஆவோம். ஆனால் எல்லா வற்றுக்கும் மேலே, இயேசு இருக்கிறார் எனும் தணியாத ஆனந்தமே நம் பலம். இதையே இயேசுவும் போதித்தார்.

    பேதுரு முதலாம் நூலிலும் இதே சிந்தனையை பேதுரு பிரதி பலிக்கிறார். அவரது நூல் துயரங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பேசவில்லை. எப்படி பொறுமையாய் அந்தத் துயரங்களின் வழியே பயணிப்பது என்பதைப் பேசுகிறது. அந்தத் துயரமானது நமது தவறுகளுக்கான தண்டனையாய் இல்லாமல், இயேசுவுக்காய் ஏற்பதாய் இருக்க வேண்டியது முக்கியம். அந்த துயரங்களுக்குப் பழிவாங்கும் சிந்தனை நம்மிடம் எழாமல் இருக்க வேண்டும்.

    மீட்பு என்பது தனிநபராகவும் வரும், குடும்பமாகவும் வரும் எனும் சிந்தனையையும் பேதுரு பதிவு செய்கிறார். தனி மனித மீட்பு என்பது இறைவனோடு இணைந்திருப்பதும், அவரது வார்த்தைகளின் படி வாழ்வதும் எனும் அடிப் படையில் அமைகிறது.

    எதிர்நோக்கு, விசுவாசம், அன்பு எனும் மூன்று சிந்தனைகளை பேதுரு எழுதுகிறார். எதிர்நோக்கு என்பது மறுவாழ்வில் நாம் கிறிஸ்துவோடு இணைவோம் எனும் எதிர்பார்ப்பு. விசுவாசம் என்பது எப்படி சோதிக்கப்பட்டாலும் நாம் இறைவனை விட்டு விலகாதிருக்கும் உறுதியான பற்று. அன்பு என்பது நமது இயல்பாக மாற வேண்டிய இறைகுணம்.

    தனிநபர் மீட்பு தவிர, குட்டித் திருச்சபைகளாக மாற வேண்டிய குடும்பங்களைப் பற்றியும் பேதுரு எழுதுகிறார். அதே போல ஒவ்வொரு மனிதனும் குருவாகிறார் எனும் சிந்தனையையும், அவர்கள் தூய தேசமாக இருக்கிறார்கள் எனவும் பேதுரு குறிப்பிடுகிறார்.

    நம்மை ஆளும் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட வேண்டியதன் தேவையையும், கணவன் மனைவியருக்கு இடையேயான புரிதல் அன்பு விசுவாசம் போன்றவையும், இளைஞர்கள் பெரியவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டியதன் தேவையையும் பேதுரு எழுதுகிறார்.

    “காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்” (1 பேதுரு 3:19) எனும் வியப்பூட்டும் செய்தியையும், “கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்” எனும் ஆன்மிகத்தின் மையத்தையும் பேதுரு பதிவு செய்கிறார்.

    பல ஆன்மிக சிந்தனைகள் அடங்கிய ஒரு முக்கியமான நூல் இது.

    சேவியர்
    ×