என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஒவ்வொரு தனிமனிதனும் மேலும், மேலும் கஷ்டப்பட்டு தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் துணிந்து பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
    உடலாலும், மனதாலும், அறிவாலும் தன்னால் முடிந்த அளவு சாதிப்பதே ஒரு மனிதனின் முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். மற்றவர்கள் செல்லும் அதே பாதையில் பயணிக்க ஆசைப்படுவதை விட சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் துணிந்து புதிய பாதையினை கண்டுபிடியுங்கள். தொடந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். வெற்றி உங்களை தேடிவரும். ஒவ்வொரு தனிமனிதனும் மேலும், மேலும் கஷ்டப்பட்டு தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் துணிந்து பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இளையோர்கள் தங்களது படைப்பு திறனை பயன்படுத்தி தனது தனித்தன்மையை நிறைவேற்ற போராடும் ஒரு இயக்கமாக மாறி செயல்பட வேண்டும்.

    கற்பனையும், விடாமுயற்சியும் கொண்டவர்கள் உலகத்தின் எல்லா பொருட்களாலும், செயல்களாலும் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். இத்தகைய மனப்பக்குவம் உறுதிபெற மிகுந்த துணிச்சலுடன் கடினமாக உழைத்து பெற்றியை எட்டுவேன் என நாம் உறுதியெடுக்க வேண்டும். நல்ல புத்தகங்க, ஆசிரியர்கள், நண்பர்கள், வழிகாட்டிகள், இணையதளத்தின் மூலம் புதிய செய்திகளை கற்று கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நமது அறிவையும் தொடர்ந்து நம்மால் விசாலப்படுத்தி செயல்பட முடியும். பூமி தன்மைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அது தனது அச்சில் தன்னைத்தான் சுற்றி கொள்ள ஒருநாள் அதாவது 24 மணி நேரம் அல்லது 1440 நிமிடங்கள் தேவைப்படுகிறது. நாமும் இத்தகைய வேத்துடன் செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும். மகாத்மா காந்தியின் தாயார் அவரிடம் மகனே உன் வாழ்நாள் முழுவதும் நீ மற்றவர்களுக்காக செலவிட வேண்டும். மற்றவர்கள் நன்மை செய்து அவர்கள் மேலும் முன்னேற வழிசெய்ய வேண்டும். இதனாலேயே நீ பிறந்த நற்பயனை அடைய முடியும். உனக்கு இறைவனின் ஆசி என்றென்றும் உண்டு என்றார். நாமும் இதை போன்று நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் எல்லா நல்லதைவும் பெற்றிட உழைக்க வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களோடு உடனிருந்து அவர்களுக்கு தேவையான எல்லா நல்லதையும் உருவாக்கிக் கொடுத்திட வேண்டும். நாம் கண்டுபிடிக்கின்ற புதிய பாதை இறையாட்சி பாதையாக அமையட்டும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறை மாவட்டம். 
    நம்முடைய நற்செயல்கள் பலருடைய பாராட்டுகளை பெறுகின்ற அதே வேளையில் நற்குணங்கள் இல்லாத இதய நிலைகளை கடவுள் பார்த்து தம்முடைய கோபத்தையே நம்மேல் பொழிவார்.
    அவர் (இயேசு) அவர்களை நோக்கி, நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாக காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. - லூக்கா 16:15

    ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளிப்பது தொடர்பான சமூக இயக்கத்திற்கு நிர்வாகியாக செயல்பட்ட ஒரு மனிதர் பல ஆதரவற்றோர் இல்லங்களை அமைத்து அவைகளை நிர்வகித்து வந்தார். பல வெளிநாட்டு ஸ்தாபனங்களை அணுகி ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு உதவி பெறுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். அவரது மனித நேய பணிகளுக்காக அரசாங்கத்திலும், சேவை இயக்கத்தாலும், பல பட்டங்களையும் பாராட்டுக்களையும் அவர் பெற்றார். ஆனால், அவருடைய பின்னணியில் இன்னொரு முக்கிய செய்தி உண்டு. வயது முதிர்ந்த தன்னுடைய பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையை அவர் செய்யவில்லை. வறுமையில் வாடும் தன் சகோதரர்களின் சுக நலனை விசாரிக்ககூட அவரிடம் மனம் இல்லை.

    இதுபோன்ற காரியங்கள் இன்றைய சமுதாய மாய்மாலங்கள் எந்த ஒரு நற்செயலை செய்வதற்கும் அதற்கென்று சிறப்பான நற்பண்பு வேண்டும். நாம், எந்தெந்த விதங்களில் நற்செயல்கள் செய்கின்றோம் என்பதை விட அவைகளுக்கேற்ற மனோபாவங்கள் நமக்கு உண்டா என்பது மிகமுக்கியம். நற்பண்புகளை பின்னனியாக கொண்டிராத எந்தஒரு நற்செயலும் சுய நலம் சார்ந்ததாகவும், மறைவான ஆதாயங்களை நோக்கமாக கொண்டதாகவுமே இருக்கும். அவ்வித நற்செயல்கள் மனிதர்களின் பாராட்டினை பெற்றுத்தந்தாலும், கடவுள் அவைகளை அருவருப்பாகவே பார்க்கின்றார்.

    ஆம்! இன்று அன்பு சார்ந்த நற்பணிகளை செய்கின்ற பலரின் தனிப்பட்ட வாழ்க்கை வட்டத்தில் அன்பின் வாசனை சற்றும் இல்லை. ஜனங்களின் பிரச்சினைகளுக்காக இரங்கி சமூக நல ஸ்தாபனங்களை நடத்துகிற பலரிடம் இரக்க உணர்வு இதயத்தில் இல்லை. பரிசுத்தத்தை குறித்தும் ஆத்தும ஆதாயத்தை குறித்தும் பிரமாதமாக பேசுகிற பலரால் பெரிய ஊழிய ஸ்தாபனங்களை உருவாக்க முடிகிறது. ஜனங்களுக்கு நடுவில் பெரிய ஊழியர்களாக பிரபலமடைய முடிகிறது. ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளே பரிசுத்தத்தை அறியாதவைகளாகவும், பொருள் ஆதாயங்களை நோக்கமாக கொண்டவைகளாகவும் இருக்கின்றன.

    மனிதர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள். கடவுளோ, நம்முடைய உள்ளத்தில் உள்ளது என்ன என்பதை பார்ப்பார். மனிதர்கள் நம்முடைய செயல்களை பார்த்து மெச்சுவார்கள். கடவுளோ, அவைகளுக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய உண்மையான பண்பு நிலைகள் இல்லாததை கண்டு வருத்தமடைவார். நம்முடைய நற்செயல்கள் பலருடைய பாராட்டுகளை பெறுகின்ற அதே வேளையில் நற்குணங்கள் இல்லாத இதய நிலைகளை கடவுள் பார்த்து தம்முடைய கோபத்தையே நம்மேல் பொழிவார். நற்செயல்களுக்கு முன்பு நற்பண்புகளை நம்மிடம் காண கவனமாயிருப்போமாக.

    “தீயவைகள் உன்னிடம் தானாய் தோன்றும் ஆனால்

    நல்லவைகளை நீ தான் தோற்றுவிக்க வேண்டும்”

    -சாம்சன்பால்
    சிலுவையில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்னும் பின்னும் பலர் மரித்திருக்கிறார்கள் என்றாலும் அதில் மரித்த கிறிஸ்துவின் மரணத்தால் தான் சிலுவைக்கு ஒரு மகிமையை அல்லது மேன்மையை கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
    சிலுவை மரணத்தண்டனை என்பது ரோமர்கள் ஏற்படுத்துவது ஆகும். சிலுவையில் இயேசு கிறிஸ்து மரிப்பதற்கு முன்னும் பின்னும் பலர் மரித்திருக்கிறார்கள் என்றாலும் அதில் மரித்த கிறிஸ்துவின் மரணத்தால் தான் சிலுவைக்கு ஒரு மகிமையை அல்லது மேன்மையை கொண்டு வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அதுவரை சாபமாக இருந்த சிலுவை அதன் பிறகு புனிதமாக மாறியது. இதனால் பல வீடுகளிலும், ஆலயங்களையும், கல்லறைகளிலும் கூட அடையாளங்களாக இடம்பெற்றுள்ளது. கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது அவர் பிறப்பதற்கு முன்னும் அதில் அவர் மரிப்பதற்கு முன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன்னுரைக்கப்பட்டு வந்த தேவனுடைய தெளிவான தீர்க்கத்தரிசனமாகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் அவரது பிறப்பு பெயர் உள்பட அவரது பாடு, மரணம், உயர்த்தெழுதல், என அனைத்தும் அவரை குறித்து முன்னுரைக்கப்பட்ட படியே நடந்தது என்பதை நாம் அறியவேண்டும்.

    இனி அவருடைய வருகையிலும் அப்படியே நடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தில் மரிக்கிற ஒவ்வொருவருடைய மரணங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதற்கு அவசியம் என்ன? ஐயோ இன்னும் இருந்திருக்கலாமோ? அதற்கு இதுதான் முடிவா? என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு. என்ன சொன்னாலும் ஏற்க முடியாத நிலையும் அதில் நமக்கு உண்டு. ஆனால் இயேசுவின் சிலுமை மரணம் அப்படியல்ல. அது தேவப்பார்வையில், தேவசித்தத்தின்படி அவசியம் என்பதாகவே இருந்தது. அவருடைய மரணத்தை குறித்து பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்டுள்ள பல அவசியமான காரணங்களுள் இரண்டை இங்கு குறிப்பிடுகிறேன் கவனியுங்கள். நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே, நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாய் இருக்கிறார் (1 யோவான்:2:2).

    இந்த வசனத்தின் வேதம் நமக்கு 2 விஷயங்களை காட்டுகிறது. ஒன்று பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதார பலி அதாவது நாம் செய்யும் பாவங்களுக்காக அவரை பலியாக ஒப்புக்கொடுக்க தேவன் நினைத்தது. இரண்டாவதாக சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலி அதாவது அனைத்து உலகின் பாவங்களுக்காகவும், மக்களின் பாவங்களுக்காகவும் அவரை கல்வாரி சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்க சித்தமானது.

    எபிரேயர் 9:22-ல் ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஆகவேதான் இயேசுவின் சிலுவை மரணம் அவசியமாயிருந்தது. அதில் சிந்தப்பட்ட ரத்தத்தினாலேயே மாத்திரம் இரட்சிப்பு அல்லது மீட்பு மனிதனுக்கு உண்டாகிறது. இந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் இந்த தவக்காலத்தில் பரிசுத்த இயேசு நமக்காக சிலுவையில் அனுபவித்த பாடுகளை நினைத்து நாம் அவருடைய வேத வாக்கியங்களின் படி கீழ்படிந்து வாழ்வோமாக.

    பாஸ்டர் என்.எட்வர்ட் சிரஞ்சீவி,

    எழுப்புதல் பேரொலி தேவ சபை,

    அறிவொளி நகர், பல்லடம்.
    எவ்விதமான குழப்பமான சூழல்களையும் எதிர்கொள்கின்ற போது அச்சப்படாது மன உறுதிபாட்டோடு நல்ல முடிவுகளை எடுப்போம்.
    உலகில் தலைசிறந்த நிறுவனத்தை திறம்பட வழிநடத்திட விருப்பம் உள்ள மனிதராக மாறுவதற்கு ஆசை இருக்கிறதா? அதற்கு தேவையானது மன உறுதியே ஆகும். மன உறுதியினை பற்றி திருவள்ளுவர் தனது திருக்குறளில் வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு அதாவது நீர் எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அல்லி மலர் நீரின் மேற்பரப்பில் வந்து பூக்கும். அதைப்போன்று நமது லட்சியத்தை அடைந்திட வேண்டும் என்றால் நாமும் மன உறுதிப்பாட்டுடன் நமது எல்லாத்தடைகளையும் கடந்து செயலாற்றிட வேண்டும். இன்யை உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவருமே ஏராளமான தடைகளை நிச்சயமாய் அனுபவித்து இருப்போம். சில சமயங்களில் வெற்றியுடன் நிறைவு செய்திட இயலுமா? என்ற சந்தேகம் கூட நமது மனதில் தோன்றலாம்.

    சிக்கல்கள் பிரச்சனைகள் நம்மை நசுக்கி விடாமல் நம்முடைய திறமையினால் அதனை எதிர்கொள்ள வேண்டும். பொது வாழ்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எல்லா சூழல்களிலும் அளவுக்கு அதிகமான விடாமுயற்சி இருக்க வேண்டும். ஆத்மார்த்தமான நம் மனதில் உள்ளிருந்து தோன்றும் ஆசை தூய்மையானதாக இருக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய மின்காந்த சக்தியை உடையதாக விளங்குகிறது.

    மனிதா சூரிய உதயம் எப்படி தவிர்க்க முடியாதோ அது போன்று உன்னுடைய வெற்றியையும் தவிர்க்க முடியாது. உன்னுடைய ஆசைகளும், லட்சியமும் நிறைவேறும் நாள் நிச்சயம் வரும். அப்போது தோல்வி மனப்பான்மை நம்மில் இருந்து அகன்று போகும்.

    இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய சிறப்பு பண்புகளில் உள்ள உறுதியும் ஒன்றாகும். இறைமகள் இயேசு தீமையை வெல்ல முடியும். என்று அவர் கொண்டிருந்த உள்ள உறுதிப்பாடு ஏராளமான நன்மை தனங்களில் பிறப்பாய் அமைந்தது. ஆதலால்தான் அவர் சென்ற இடமெங்கும் நன்மை விளைந்தது என பார்க்கிறோம். இத்தகைய மனப்பக்குவத்தை பெற இந்த நாளில் முயற்சி எடுப்போம். சிறுசிறு முடிவுகளை முன்னெடுக்கின்ற போதே எத்தகைய மனப்பக்குவத்தோடு செயலாற்ற வேண்டும் என சிந்திப்போம். எவ்விதமான குழப்பமான சூழல்களையும் எதிர்கொள்கின்ற போது அச்சப்படாது மன உறுதிபாட்டோடு நல்ல முடிவுகளை எடுப்போம். நமது முடிவுகள் சமுதாயத்தின் மேன்மைக்கும், வளமைக்கும் என்றும் பயன் கொடுக்கட்டும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறை மாவட்டம் 
    தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தணிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தணிக்கவும் முடியும்.
    பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல... (யோவான் 15:9)

    பொதுவாக மனிதர்கள் பணம், பொருள், நல்ல வாய்ப்பு வசதி, சுகபோகங்கள் இவைகளை தான் விரும்பி தேடுவதை போல காணப்படுகிறார்கள். ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் அன்பை தேடுகின்ற ஒரு உணர்வு தான் அதிகமாக புதைந்து கிடக்கிறது. அன்பை குறித்த ஒரு ஏக்கம் மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கின்றது. தான் உண்மையாகவும், போதுமான அளவிலும் நேசிக்கப்படவில்லை என்ற உணர்வு அநேகரை மிகுதியாக பாதிக்கின்றது. சிலர் தங்கள் கணவர்மார்களாலோ, மனைவி மார்களாலோ, பெற்றோர்களாலோ, நண்பர்களாலோ மிகுதியாக நேசிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதாக உணர்வதில்லை. இது மற்றவர்களின் அன்பை குறித்து அறியாத நிலை என்று கூற முடியாது. இது ஒருவர் அன்பு விஷயத்தில் எளிதாக திருப்தியடையாத நிலையின் பிரதிபலிப்பாகும். ஏனென்றால், அன்பை குறித்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளத்தில் காணப்படுவதால், மற்றவர்களின் மிகுதியான அன்பாலும் அங்கு திருப்தி ஏற்பட முடியவில்லை.

    தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் பாயும் வரை, எவ்வளவு பெரிய மனித தன்மையான அன்பினாலும் இருதயம் நிறைவடைய முடியாது. தேவனுடைய அன்பு மட்டுமே நம்முடைய இருதயங்களை திருப்தி செய்கின்ற அளவிற்கு வலிமையுடையதாகவும், உண்மை நிறைந்ததாகவும் நிறைவுடையதாகவும், இருக்கிறது. ஏனென்றால் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார். இந்த தேவ அன்புதான் பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசிக்கின்றவர்களின் இருதயத்தில் ஊற்றப்படுகின்றது.

    நம்முடைய ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் தேவ அன்பு மட்டுமே ஈடுகொடுக்க முடியும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு அன்பைத்தேட வேண்டிய இடம் தேவ சமூகம்தானேயன்றி, மனிதர்களிடமிருந்து அல்ல. ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து தம்முடைய சீடர்களை முடிவு பரியந்தம் நேசித்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம் (யோவா - 13:1) ஏனென்றால் அவருடைய கவனம் அவர்களுடைய அன்பை பெறுவதில் இராமல், அவர்களை உண்மையாக நேசிப்பதிலேயே இருந்தது. அவர் பிதாவாகிய தேவனுடைய அன்பை எப்போதும் இதயத்தில் ருசித்துகொண்டிருந்தபடியால், அவர் அன்பை தேடுகிறவராக இராமல், அன்பை தேடுகிறவர்களுக்கு அதனை வழங்குகிறவராக இருந்தார். தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தணிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தணிக்கவும் முடியும்.

    “ இறைவனை நோக்கிய உன் அன்பில் முழுமையில்லையேல்

    மனிதனை நோக்கிய உன் அன்பு அறைகுறையாகவே இருக்கும்”

    - சாம்சன்பால்
    மன நிம்மதியை நீங்கள் பெற வேண்டுமானால் இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் நமக்காக பட்ட பாடுகளை நாம் சிந்திக்க வேண்டும்.
    இன்று சிலுவையின் மூலம் நிம்மதி நம் வாழ்வில் எப்படி வரும் என்று தியானிக்க போகிறோம். ஏனென்றால் உலகில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் தேடுவது நிம்மதியை தான். ஆடம்பரமாக வாழாவிட்டாலும் வீட்டில் நிம்மதியோடு வாழ்ந்தாலே போதும் என்கிற மனநிலையில் தான் பலர் உள்ளனர். ஆகவே தான் இயேசுவும் மத் 11:28-ல் “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறினார். நீங்கள் தேடும் நிம்மதி இயேசுவிடம் மட்டுமே உண்டு.

    மன நிம்மதியை நீங்கள் பெற வேண்டுமானால் இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் நமக்காக பட்ட பாடுகளை நாம் சிந்திக்க வேண்டும். சங்கீதம் 55:22-ன்படி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேல் உங்கள் பாரங்களை வைத்து விடுங்கள். ஒருவேளை அது உங்கள் தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம். குடும்ப பாரமாக இருக்கலாம். தொழில்(அல்லது) வேலை சம்பந்தப்பட்ட பாரமாக இருக்கலாம். குழந்தைகளின் கல்வி(அல்லது) எதிர்காலத்தின் பாரமாக இருக்கலாம். கடன் பாரமாக கூட இருக்கலாம்.

    வியாதியோ(அல்லது) அசுத்த ஆவிகளின் போராட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த பாரங்களை இயேசுவின் மேல் இன்று வைப்பீர்களா? இயேசுவே உம்மிடத்தில் என் பாரங்களை இறக்கி வைக்கிறேன்!. இனி நீர் பார்த்து கொள்ளும்! எனக்கு உதவி செய்யும். என்னை உன் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் என்று பிரார்த்தனை செய்தாலே போதும். உங்கள் பாவங்களை அவர் தம் மேல் ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்வை புதிதாக மாற்றுவார். உங்கள் கண்ணீர் துடைக்கப்படும். உங்களை கைவிட மாட்டார். உங்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கட்டும். ஆமென்.

    பிரியா பரமானந்தம்,

    சிட்டி ஏ.ஜி.சபை, திருப்பூர்.
    இன்று நம்முடைய தியானத்திற்கு கடவுள் ஏன் மனிதன் ஆனார்? என்ற தலைப்பை கருத்தாய் ஆராய்ந்து பார்ப்போம். இன்று ஆத்மீக தேடலில் இருக்கும் அனைவரும் கடவுளை தேடி பிரயாணப்படுகிறார்கள்.
    இன்று நம்முடைய தியானத்திற்கு கடவுள் ஏன் மனிதன் ஆனார்? என்ற தலைப்பை கருத்தாய் ஆராய்ந்து பார்ப்போம். இன்று ஆத்மீக தேடலில் இருக்கும் அனைவரும் கடவுளை தேடி பிரயாணப்படுகிறார்கள். பலர் பல வழிமுறைகளை கையாளுகிறார்கள். ஆனால், இறை மகன் இயேசு கிறிஸ்து மனிதனாக இப்பூமியில் பிறந்து மனிதனுடைய பாவங்களை ஏற்று அதற்கான தண்டனையை அனுபவித்து மனுகுலத்தை மீட்கிறார். இப்பொழுது தான் அந்த கேள்வி நமக்குள் பிறக்கிறது. கடவுள் ஏன் மனிதனாய் பிறந்தார்? இதை வேதம், தெளிவாக விளக்குகிறது.

    எபிரேயர் 2:14,15 வசனங்களை நாம் பார்க்கும் போது, பிள்ளைகள் மாமிசத்தையும், ரத்தத்தையும் உடையவர்களாக இருக்க அவரும்(இயேசு) அவர்களை போல மாமிசத்தையும் ரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார். இவ்வேத வாக்குகளின் அடிப்படையில் இறைவன் இயேசு மனிதர்களை தம் பிள்ளையாக பார்க்கிறது மட்டுமல்லாமல் அவர்களை போலவே இந்த பூமியில் பிறந்து, தான் தேவனாய் இருந்தும் மனுச ரூபமும், மனுச சாயலுமாகிறார்.

    பிலிப்பியர் 2:7,8 ஆகிய வசனங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாவதாக மரணத்திற்கு அதிபதியாய் அதிகாரியாய் இருக்கின்ற பிசாசானவளை அழிக்கும்படி மனிதனாய் பிறக்கிறார். மனிதனை பாவம் செய்ய வைத்து தன் பக்கம் இழுத்து செல்லும் சாத்தானை ஜெயிக்கவே இந்த பூமியில் இயேசு மனிதனாக பிறந்து நம் பாவங்களுக்காக சிலுவைப்பாடுகளை அனுபவித்து தன் உயிரையே கொடுத்து உள்ளார். எனவே இந்த தவக்காலத்தில் அவரது சிலுவைப்பாடுகளை நினைவு கூர்வோம்.

    பாஸ்டர் ஆனந்த்,

    இயேசு ரட்சிக்கிறார் சபை, திருப்பூர்.
    விசுவாசிகளுக்கு இடையில் ஐக்கியம் மிகவும் அவசியம். அப்போது தான் ஒருவரால் ஒருவர் தூண்டப்பட்டு, ஒருவரால் ஒருவர் புத்தி சொல்லப்பட்டு எல்லோரும், கிறிஸ்துவுக்காக வல்லமையாக எரிந்து பிரகாசிக்க முடியும்.
    “சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல கடவோம்” - எபிரெயர்-10:25

    அடுப்பில் விறகு கட்டைகள் பல ஒன்றாக பிரகாசமாக எரிகிறது. அந்த கட்டையின் நெருப்பினால் தூண்டப்பட்டு எந்த கட்டை எரிகின்றது என்று சொல்ல முடியாது. எல்லாம் ஒன்றாக இருந்து எரிந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதில் ஒரு கட்டையை தனியே எடுத்து வெளியே போடுங்கள். என்ன நடக்கும்? கொஞ்ச நேரத்தில் அந்த கட்டையில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணைந்து அனல் இழந்து போகும். கிறிஸ்தவ ஐக்கியம் என்பதும் இதுபோன்றதே. ஒன்றாக இணைந்திருந்தால் எல்லோருடைய வாழ்விலும் கிறிஸ்துவை பற்றிய அனுபவங்கள் பிரகாசிக்கும்.

    ஆனால் ஐக்கியம் இல்லாமல் ஒருவர் தனியே போகும்போது அவருடைய ஆவிக்குரிய அனுபவம் ஒரு நாள் அனலிழந்து போகிறது. விசுவாசிகளுக்கு இடையில் ஐக்கியம் மிகவும் அவசியம். அப்போது தான் ஒருவரால் ஒருவர் தூண்டப்பட்டு, ஒருவரால் ஒருவர் புத்தி சொல்லப்பட்டு எல்லோரும், கிறிஸ்துவுக்காக வல்லமையாக எரிந்து பிரகாசிக்க முடியும். சபை கூடுதலின் முக்கிய நோக்கமே ஒருவரால் இன்னொருவர் பயன்படுவதை செயல்படுத்துவதற்கே ஒருவரையொருவர் தாங்கி, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, எல்லோரும் கூட்டாக வளர்வதற்காகவே சபை கூடுதல்.

    ஐக்கியங்களில் பல வித இன்னல்கள் இந்நாட்களில் இருப்பது உண்மைதான். ஆனாலும், நாம் தனியே போய்விடுவதும் நம் வீட்டிலேயே தனியே ஆராதிப்பதும், தகுந்த பரிகாரங்கள் அல்ல. ஏனென்றால் அது கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறோம் என்ற சத்தியத்திற்கு முரணானது. நாம் புத்தி சொல்ல வேண்டும். நமக்கு புத்தி சொல்லப்பட வேண்டும். நாம் தூண்ட வேண்டும். தூண்டப்படவும் வேண்டும். அதற்கு அவசியம் ஐக்கியம். “பிறரிடம் நீ காண நேர்ந்த கசப்பான காரியங்களை, உன்னிடம் பிறர் காணாதிருக்க கவனமாயிரு”.

    - சாம்சன் பால்
    பொறுமையே மிக மிக வலிமை வாய்ந்தது. இதனை குழந்தை பருவத்தில் இருந்தே நம்மோடு இணைந்து வாழ்கின்றவர்களுக்கு கற்று கொடுப்போம்
    எது நடந்தாலும் எவை நடந்தாலும் அதனை அமைதியாக பொறுத்து கொள்ளும் தன்மையே பொறுமை ஆகும். இதனையே பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிறோம். உலகில் நிறைவோடும், மனமகிழ்வோடும் வாழ்வதற்கு பொறுமை மிக மிக அவசியமானது. வாழ்வில் எத்தகைய நெருக்கடிகள் நேர்ந்தாலும், சிலர் மிகுந்த பொறுமையோடு அதனை சகித்து வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றனர்.

    விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வியை சந்தித்தே மின்சார பல்பினை கண்டுபிடித்தார். அதனை விளக்கிகாட்டுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பல்பை அவரின் உதவியாளர் எடுத்து வந்த சமயத்தில் அதனை கீழே போட்டு உடைத்து விட்டார். எல்லாருக்கும் அதிர்ச்சி. தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வித சஞ்சலத்திற்கும் உள்ளாகாது மீண்டும் அடுத்த பல்பினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் தான் மீண்டும் உருவாக்கிய பல்வை அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வர சொன்னார்.

    எல்லாரும் அவரை திட்டினர். அப்போது எடிசன் பல்பு உடைந்தது என்னால் மீண்டும் சரி செய்து விட முடிந்தது. ஆனால் அவர் மனதை காயப்படுத்தி விட்டால் அதை என்னால் சரி செய்து விட முடியுமா? மீண்டும் அவரிடமே பணியை கொடுத்தால் அவர் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவார். அதனால் தான் அப்படி செய்தேன் என்றார்.

    எடிசன் தனது வாழ்வில் பெற்ற வெற்றிகளுக்கு காரணமான பொறுமையை அப்போது தான் எல்லோரும் புரிந்து கொண்டனர். வாழ்வின் சூழல்களை பொறுமையாக எதிர்கொள்ள தெரிந்தவன் தடுமாற்றங்களுக்குள் சிக்குண்டு தனது வாழ்வினை ஒரு போதும் இழப்பதில்லை. இறையருளின் காலமாகிய தவக்காலத்தின் தொடக்க நிலையில் இருக்கிற நாம் பொறுமையின் வலிமையை உணர்ந்து கொள்வதற்கு அழைக்கப்படுகிறோம். மிகுந்த எதார்த்தமான மனநிலையோடு வாழ்வின் ஒவ்வொரு பொழுதுகளையும் எதிர்கொள்வோம். நமது கடமைகளை சரியாக திட்டமிட்டு தினசரி செயல்திட்டங்களை தீட்டுவோம். செயல் திட்டங்களை வடிவம் பெறுவதற்கு எவ்விதமான சமரசமும் செய்யாது உழைப்போம்.

    பொறுமையே மிக மிக வலிமை வாய்ந்தது. இதனை குழந்தை பருவத்தில் இருந்தே நம்மோடு இணைந்து வாழ்கின்றவர்களுக்கு கற்று கொடுப்போம். அப்போது சமுதாயத்தின் சமநிலைபேணப்படுவதோடு கொள்கைகளும் மிக உயரிய வடிவம் பெறும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறை மாவட்டம்.
    கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
    “நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?1 கொரி - 3:16”.

    நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனை சரியாக உணர்ந்து, அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் நிறைய பேர், இந்த விதமான சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்க செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே நிறைய பேர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாக போகின்றனர்.

    முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீர பிரகாரமான வாழ்க்கையும் அமைய வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்து தான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.

    எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்கு தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.

    “ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள், அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.

    - சாம்சன் பால்.
    இயேசுவின் பாவமற்ற பரிசுத்த வழியில் நடந்து அவரது சத்தியத்தை கை கொண்டு ஜீவ ஒளியில் நிலைத்திருப்பவர்களாக வாழ்வதே அவர் சிலுவையில் சிந்திய ரத்தத்திற்கு நன்றி செலுத்துதலாக இருக்க முடியும்.
    பாவம் மனிதனின் வாழ்வை இருள் சூழச்செய்து அவனை அழித்து விடும். பாவ இருளை அகற்ற இறைமகன் இயேசு மனிதராக பிறப்பெடுத்து இப்பூமியில் வாழ்ந்து பாவம் இல்லாத வாழ்வை மனிதன் வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொடுத்து, நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, இன்றும் உயிரோடு இருந்து மனிதனை தனது அன்பு ஒளியில் வாழ வைக்கிறார். “நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக்கொடுக்கிறான்”.(யோவான் 10:11) என்ற யோவானின் வார்த்தைகளுக்கு உதாரணமாக தன் ஜீவனையே மனிதன் மேல் வைத்த அன்புக்காக சிலுவையில் துறந்து பாவ இருளில் சிக்கித்தவித்த மனித குலத்தை தனது ரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து அவன் ஜீவ ஒளியில் வாழவும், பாவம் செய்யாமல் பரிசுத்தமடையவும் உதவி செய்தார். அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். (யோவான் 3:16) என வேதம் சொல்கிறது. மனிதனின் பாவத்தை நிவர்த்தி செய்து அவனை நித்திய ஜீவன் உள்ளவனாய் வாழ வைக்க இயேசு பூமிக்கு வந்தார். மனிதன் மேல் அன்புக்காக தன் ஜீவனை தந்தார்.

    மரணத்தை வென்று மறுரூபம் அடைந்தார். இயேசு என்ற பெயருக்கு தனது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பார் (மத்தேயு 1: 21) என்று அர்த்தமாகும். அவர் பிறந்ததும் மனிதனுக்காக, மரணத்தை ஒப்புக்கொண்டு ஜீவனை தந்ததும் மனிதனுக்காகவே என்பதை நாம் உணர்ந்து அவர் தந்த ஜீவ ஒளியை பிறர் வாழ்வில் ஒளியேற்ற பயன்படுத்துகிறார்களாக வாழ வேண்டும். நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்று சொன்ன நம் அருள்நாதர் இயேசுவின் பாவமற்ற பரிசுத்த வழியில் நடந்து அவரது சத்தியத்தை கை கொண்டு ஜீவ ஒளியில் நிலைத்திருப்பவர்களாக வாழ்வதே அவர் சிலுவையில் சிந்திய ரத்தத்திற்கு நன்றி செலுத்துதலாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நித்திய வாழ்வை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

    சகோதரி ரூத் என்ற கலையரசி

    இயேசுவின் வார்த்தை திருச்சபை

    கொங்கு நகர், திருப்பூர்.
    இன்றைக்கு நாம் பிழைத்திருக்கிறோம், பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம் என்றால் அது இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாக தம்மைக் கொடுத்ததால் நாம் பெற்ற விடுதலையே என்றுபார்க்கிறோம்.
    கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தியானித்து வரும் இந்த லெந்து நாட்களில் அவருடைய சிலுவை மரணத்தின்மூலம் மனுக்குலம் பெற்ற மிகப்பெரிய மீட்பைப்பற்றி இன்று தியானிப்போம். இயேசு இந்த உலகத்தில் இருந்த நாட்களில் தாம் உலகத்திற்கு வந்த நோக்கத்தை “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்“ -என்று மத்:20:28-ம் வசனத்தில் இப்படியாக கூறுகிறார்.

    ஏதேன் தோட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தேவ பிரசன்னத்தோடு வாழ்ந்த ஆதாம் மற்றும் ஏவாளின் மீறுதல் மூலம் மனிதகுலம் பாவத்தில் வீழ்ந்ததோடு மட்டுமின்றி சமாதானத்தையும்,தேவ சாயலையும், தேவனோடு இருந்த உறவையும் இழந்தது. அவர்கள் பாவம் செய்த பின் பகலின் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்திலே தேவனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சமாதானத்தை இழந்து தவித்தனர்.

    அன்றைக்கு பாவத்தின் மூலம் தங்களை இழந்து போன ஜனங்கள் திரும்ப தேவனோடு உறவாடும்படி விரும்பியபோது ஆண்டவர் அவர்களுக்கு பலி முறைகளை ஏற்படுத்தினார். தங்கள் பாவங்களுக்காக ஆடுகளையும் மாடுகளையும் பலி செலுத்தி ஜனங்கள் தேவனோடுள்ள உறவை புதுப்பித்துக்கொள்ள நினைத்தனர். அது அவர்களுக்கு தற்காலிகமான சமாதானத்தை ஒருவேளை கொடுத்தாலும் நிரந்தர மீட்பைக் கொடுக்கவில்லை. மிருக ஜீவன்கள் எவ்வளவு பலியிடப்பட்டாலும் அது மனித உயிருக்கு ஈடானது அல்ல. தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பியதால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

    எனவே தமது ஜனத்தை மீட்கும் பொருளாக தன்னைத் தானே இயேசுவானவர் ஒப்புக்கொடுக்க வந்தார். ஜீவ காலமெல்லாம் மரணபயத்திற்கு அடிமையானவர்களை தமது மரணத்தின் மூலம் மீட்க வந்தவர் இயேசு. எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே(1 தீமோ:2:6) என்று அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறுவதையும் நாம் பார்க்கலாம்.

    இன்றைக்கு நாம் பிழைத்திருக்கிறோம், பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம் என்றால் அது இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாக தம்மைக் கொடுத்ததால் நாம் பெற்ற விடுதலையே என்றுபார்க்கிறோம். அந்த இயேசுவை விசுவாசத்தோடு நாமும் நோக்கிப்பார்ப்போம். விலையேறப்பெற்ற அந்த மீட்பைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

    - போதகர் அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, திருப்பூர்.
    ×