search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    வாழ்வில் பொறுமை தேவை

    பொறுமையே மிக மிக வலிமை வாய்ந்தது. இதனை குழந்தை பருவத்தில் இருந்தே நம்மோடு இணைந்து வாழ்கின்றவர்களுக்கு கற்று கொடுப்போம்
    எது நடந்தாலும் எவை நடந்தாலும் அதனை அமைதியாக பொறுத்து கொள்ளும் தன்மையே பொறுமை ஆகும். இதனையே பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிறோம். உலகில் நிறைவோடும், மனமகிழ்வோடும் வாழ்வதற்கு பொறுமை மிக மிக அவசியமானது. வாழ்வில் எத்தகைய நெருக்கடிகள் நேர்ந்தாலும், சிலர் மிகுந்த பொறுமையோடு அதனை சகித்து வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றனர்.

    விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வியை சந்தித்தே மின்சார பல்பினை கண்டுபிடித்தார். அதனை விளக்கிகாட்டுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பல்பை அவரின் உதவியாளர் எடுத்து வந்த சமயத்தில் அதனை கீழே போட்டு உடைத்து விட்டார். எல்லாருக்கும் அதிர்ச்சி. தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வித சஞ்சலத்திற்கும் உள்ளாகாது மீண்டும் அடுத்த பல்பினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் தான் மீண்டும் உருவாக்கிய பல்வை அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வர சொன்னார்.

    எல்லாரும் அவரை திட்டினர். அப்போது எடிசன் பல்பு உடைந்தது என்னால் மீண்டும் சரி செய்து விட முடிந்தது. ஆனால் அவர் மனதை காயப்படுத்தி விட்டால் அதை என்னால் சரி செய்து விட முடியுமா? மீண்டும் அவரிடமே பணியை கொடுத்தால் அவர் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவார். அதனால் தான் அப்படி செய்தேன் என்றார்.

    எடிசன் தனது வாழ்வில் பெற்ற வெற்றிகளுக்கு காரணமான பொறுமையை அப்போது தான் எல்லோரும் புரிந்து கொண்டனர். வாழ்வின் சூழல்களை பொறுமையாக எதிர்கொள்ள தெரிந்தவன் தடுமாற்றங்களுக்குள் சிக்குண்டு தனது வாழ்வினை ஒரு போதும் இழப்பதில்லை. இறையருளின் காலமாகிய தவக்காலத்தின் தொடக்க நிலையில் இருக்கிற நாம் பொறுமையின் வலிமையை உணர்ந்து கொள்வதற்கு அழைக்கப்படுகிறோம். மிகுந்த எதார்த்தமான மனநிலையோடு வாழ்வின் ஒவ்வொரு பொழுதுகளையும் எதிர்கொள்வோம். நமது கடமைகளை சரியாக திட்டமிட்டு தினசரி செயல்திட்டங்களை தீட்டுவோம். செயல் திட்டங்களை வடிவம் பெறுவதற்கு எவ்விதமான சமரசமும் செய்யாது உழைப்போம்.

    பொறுமையே மிக மிக வலிமை வாய்ந்தது. இதனை குழந்தை பருவத்தில் இருந்தே நம்மோடு இணைந்து வாழ்கின்றவர்களுக்கு கற்று கொடுப்போம். அப்போது சமுதாயத்தின் சமநிலைபேணப்படுவதோடு கொள்கைகளும் மிக உயரிய வடிவம் பெறும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறை மாவட்டம்.
    Next Story
    ×