search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    ஜீவ ஒளிதந்த இயேசு

    இயேசுவின் பாவமற்ற பரிசுத்த வழியில் நடந்து அவரது சத்தியத்தை கை கொண்டு ஜீவ ஒளியில் நிலைத்திருப்பவர்களாக வாழ்வதே அவர் சிலுவையில் சிந்திய ரத்தத்திற்கு நன்றி செலுத்துதலாக இருக்க முடியும்.
    பாவம் மனிதனின் வாழ்வை இருள் சூழச்செய்து அவனை அழித்து விடும். பாவ இருளை அகற்ற இறைமகன் இயேசு மனிதராக பிறப்பெடுத்து இப்பூமியில் வாழ்ந்து பாவம் இல்லாத வாழ்வை மனிதன் வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொடுத்து, நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, இன்றும் உயிரோடு இருந்து மனிதனை தனது அன்பு ஒளியில் வாழ வைக்கிறார். “நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக்கொடுக்கிறான்”.(யோவான் 10:11) என்ற யோவானின் வார்த்தைகளுக்கு உதாரணமாக தன் ஜீவனையே மனிதன் மேல் வைத்த அன்புக்காக சிலுவையில் துறந்து பாவ இருளில் சிக்கித்தவித்த மனித குலத்தை தனது ரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து அவன் ஜீவ ஒளியில் வாழவும், பாவம் செய்யாமல் பரிசுத்தமடையவும் உதவி செய்தார். அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். (யோவான் 3:16) என வேதம் சொல்கிறது. மனிதனின் பாவத்தை நிவர்த்தி செய்து அவனை நித்திய ஜீவன் உள்ளவனாய் வாழ வைக்க இயேசு பூமிக்கு வந்தார். மனிதன் மேல் அன்புக்காக தன் ஜீவனை தந்தார்.

    மரணத்தை வென்று மறுரூபம் அடைந்தார். இயேசு என்ற பெயருக்கு தனது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பார் (மத்தேயு 1: 21) என்று அர்த்தமாகும். அவர் பிறந்ததும் மனிதனுக்காக, மரணத்தை ஒப்புக்கொண்டு ஜீவனை தந்ததும் மனிதனுக்காகவே என்பதை நாம் உணர்ந்து அவர் தந்த ஜீவ ஒளியை பிறர் வாழ்வில் ஒளியேற்ற பயன்படுத்துகிறார்களாக வாழ வேண்டும். நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்று சொன்ன நம் அருள்நாதர் இயேசுவின் பாவமற்ற பரிசுத்த வழியில் நடந்து அவரது சத்தியத்தை கை கொண்டு ஜீவ ஒளியில் நிலைத்திருப்பவர்களாக வாழ்வதே அவர் சிலுவையில் சிந்திய ரத்தத்திற்கு நன்றி செலுத்துதலாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நித்திய வாழ்வை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தருள்வாராக. ஆமென்.

    சகோதரி ரூத் என்ற கலையரசி

    இயேசுவின் வார்த்தை திருச்சபை

    கொங்கு நகர், திருப்பூர்.
    Next Story
    ×