search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    அன்பை குறித்த ஏக்கம்

    தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தணிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தணிக்கவும் முடியும்.
    பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல... (யோவான் 15:9)

    பொதுவாக மனிதர்கள் பணம், பொருள், நல்ல வாய்ப்பு வசதி, சுகபோகங்கள் இவைகளை தான் விரும்பி தேடுவதை போல காணப்படுகிறார்கள். ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் அன்பை தேடுகின்ற ஒரு உணர்வு தான் அதிகமாக புதைந்து கிடக்கிறது. அன்பை குறித்த ஒரு ஏக்கம் மனிதனின் அடிமனதில் மறைந்து கிடக்கின்றது. தான் உண்மையாகவும், போதுமான அளவிலும் நேசிக்கப்படவில்லை என்ற உணர்வு அநேகரை மிகுதியாக பாதிக்கின்றது. சிலர் தங்கள் கணவர்மார்களாலோ, மனைவி மார்களாலோ, பெற்றோர்களாலோ, நண்பர்களாலோ மிகுதியாக நேசிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதாக உணர்வதில்லை. இது மற்றவர்களின் அன்பை குறித்து அறியாத நிலை என்று கூற முடியாது. இது ஒருவர் அன்பு விஷயத்தில் எளிதாக திருப்தியடையாத நிலையின் பிரதிபலிப்பாகும். ஏனென்றால், அன்பை குறித்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளத்தில் காணப்படுவதால், மற்றவர்களின் மிகுதியான அன்பாலும் அங்கு திருப்தி ஏற்பட முடியவில்லை.

    தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் பாயும் வரை, எவ்வளவு பெரிய மனித தன்மையான அன்பினாலும் இருதயம் நிறைவடைய முடியாது. தேவனுடைய அன்பு மட்டுமே நம்முடைய இருதயங்களை திருப்தி செய்கின்ற அளவிற்கு வலிமையுடையதாகவும், உண்மை நிறைந்ததாகவும் நிறைவுடையதாகவும், இருக்கிறது. ஏனென்றால் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. தேவன் அன்பாகவே இருக்கிறார். இந்த தேவ அன்புதான் பரிசுத்த ஆவியின் மூலமாக விசுவாசிக்கின்றவர்களின் இருதயத்தில் ஊற்றப்படுகின்றது.

    நம்முடைய ஏக்கத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் தேவ அன்பு மட்டுமே ஈடுகொடுக்க முடியும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு அன்பைத்தேட வேண்டிய இடம் தேவ சமூகம்தானேயன்றி, மனிதர்களிடமிருந்து அல்ல. ஆண்டவராகிய ஏசு கிறிஸ்து தம்முடைய சீடர்களை முடிவு பரியந்தம் நேசித்தார் என்று வேதத்தில் பார்க்கின்றோம் (யோவா - 13:1) ஏனென்றால் அவருடைய கவனம் அவர்களுடைய அன்பை பெறுவதில் இராமல், அவர்களை உண்மையாக நேசிப்பதிலேயே இருந்தது. அவர் பிதாவாகிய தேவனுடைய அன்பை எப்போதும் இதயத்தில் ருசித்துகொண்டிருந்தபடியால், அவர் அன்பை தேடுகிறவராக இராமல், அன்பை தேடுகிறவர்களுக்கு அதனை வழங்குகிறவராக இருந்தார். தேவ அன்பை நாம் முதலாவது ருசிக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது நம்முடைய அன்பு தாகம் தணிவதோடு, பிறருடைய அன்பு தாகத்தை தணிக்கவும் முடியும்.

    “ இறைவனை நோக்கிய உன் அன்பில் முழுமையில்லையேல்

    மனிதனை நோக்கிய உன் அன்பு அறைகுறையாகவே இருக்கும்”

    - சாம்சன்பால்
    Next Story
    ×