search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    மீட்கும் பொருளாய் வந்த இயேசு

    இன்றைக்கு நாம் பிழைத்திருக்கிறோம், பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம் என்றால் அது இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாக தம்மைக் கொடுத்ததால் நாம் பெற்ற விடுதலையே என்றுபார்க்கிறோம்.
    கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தியானித்து வரும் இந்த லெந்து நாட்களில் அவருடைய சிலுவை மரணத்தின்மூலம் மனுக்குலம் பெற்ற மிகப்பெரிய மீட்பைப்பற்றி இன்று தியானிப்போம். இயேசு இந்த உலகத்தில் இருந்த நாட்களில் தாம் உலகத்திற்கு வந்த நோக்கத்தை “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்“ -என்று மத்:20:28-ம் வசனத்தில் இப்படியாக கூறுகிறார்.

    ஏதேன் தோட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தேவ பிரசன்னத்தோடு வாழ்ந்த ஆதாம் மற்றும் ஏவாளின் மீறுதல் மூலம் மனிதகுலம் பாவத்தில் வீழ்ந்ததோடு மட்டுமின்றி சமாதானத்தையும்,தேவ சாயலையும், தேவனோடு இருந்த உறவையும் இழந்தது. அவர்கள் பாவம் செய்த பின் பகலின் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்திலே தேவனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சமாதானத்தை இழந்து தவித்தனர்.

    அன்றைக்கு பாவத்தின் மூலம் தங்களை இழந்து போன ஜனங்கள் திரும்ப தேவனோடு உறவாடும்படி விரும்பியபோது ஆண்டவர் அவர்களுக்கு பலி முறைகளை ஏற்படுத்தினார். தங்கள் பாவங்களுக்காக ஆடுகளையும் மாடுகளையும் பலி செலுத்தி ஜனங்கள் தேவனோடுள்ள உறவை புதுப்பித்துக்கொள்ள நினைத்தனர். அது அவர்களுக்கு தற்காலிகமான சமாதானத்தை ஒருவேளை கொடுத்தாலும் நிரந்தர மீட்பைக் கொடுக்கவில்லை. மிருக ஜீவன்கள் எவ்வளவு பலியிடப்பட்டாலும் அது மனித உயிருக்கு ஈடானது அல்ல. தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பியதால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

    எனவே தமது ஜனத்தை மீட்கும் பொருளாக தன்னைத் தானே இயேசுவானவர் ஒப்புக்கொடுக்க வந்தார். ஜீவ காலமெல்லாம் மரணபயத்திற்கு அடிமையானவர்களை தமது மரணத்தின் மூலம் மீட்க வந்தவர் இயேசு. எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு அவரே(1 தீமோ:2:6) என்று அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறுவதையும் நாம் பார்க்கலாம்.

    இன்றைக்கு நாம் பிழைத்திருக்கிறோம், பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம் என்றால் அது இயேசு கிறிஸ்து மீட்கும் பொருளாக தம்மைக் கொடுத்ததால் நாம் பெற்ற விடுதலையே என்றுபார்க்கிறோம். அந்த இயேசுவை விசுவாசத்தோடு நாமும் நோக்கிப்பார்ப்போம். விலையேறப்பெற்ற அந்த மீட்பைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

    - போதகர் அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை, திருப்பூர்.
    Next Story
    ×