search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    நற்செயலும் நற்பண்பும்

    நம்முடைய நற்செயல்கள் பலருடைய பாராட்டுகளை பெறுகின்ற அதே வேளையில் நற்குணங்கள் இல்லாத இதய நிலைகளை கடவுள் பார்த்து தம்முடைய கோபத்தையே நம்மேல் பொழிவார்.
    அவர் (இயேசு) அவர்களை நோக்கி, நீங்கள் மனுஷர் முன்பாக உங்களை நீதிமான்களாக காட்டுகிறீர்கள். தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. - லூக்கா 16:15

    ஆதரவற்றவர்களுக்கு வாழ்வு அளிப்பது தொடர்பான சமூக இயக்கத்திற்கு நிர்வாகியாக செயல்பட்ட ஒரு மனிதர் பல ஆதரவற்றோர் இல்லங்களை அமைத்து அவைகளை நிர்வகித்து வந்தார். பல வெளிநாட்டு ஸ்தாபனங்களை அணுகி ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு உதவி பெறுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். அவரது மனித நேய பணிகளுக்காக அரசாங்கத்திலும், சேவை இயக்கத்தாலும், பல பட்டங்களையும் பாராட்டுக்களையும் அவர் பெற்றார். ஆனால், அவருடைய பின்னணியில் இன்னொரு முக்கிய செய்தி உண்டு. வயது முதிர்ந்த தன்னுடைய பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமையை அவர் செய்யவில்லை. வறுமையில் வாடும் தன் சகோதரர்களின் சுக நலனை விசாரிக்ககூட அவரிடம் மனம் இல்லை.

    இதுபோன்ற காரியங்கள் இன்றைய சமுதாய மாய்மாலங்கள் எந்த ஒரு நற்செயலை செய்வதற்கும் அதற்கென்று சிறப்பான நற்பண்பு வேண்டும். நாம், எந்தெந்த விதங்களில் நற்செயல்கள் செய்கின்றோம் என்பதை விட அவைகளுக்கேற்ற மனோபாவங்கள் நமக்கு உண்டா என்பது மிகமுக்கியம். நற்பண்புகளை பின்னனியாக கொண்டிராத எந்தஒரு நற்செயலும் சுய நலம் சார்ந்ததாகவும், மறைவான ஆதாயங்களை நோக்கமாக கொண்டதாகவுமே இருக்கும். அவ்வித நற்செயல்கள் மனிதர்களின் பாராட்டினை பெற்றுத்தந்தாலும், கடவுள் அவைகளை அருவருப்பாகவே பார்க்கின்றார்.

    ஆம்! இன்று அன்பு சார்ந்த நற்பணிகளை செய்கின்ற பலரின் தனிப்பட்ட வாழ்க்கை வட்டத்தில் அன்பின் வாசனை சற்றும் இல்லை. ஜனங்களின் பிரச்சினைகளுக்காக இரங்கி சமூக நல ஸ்தாபனங்களை நடத்துகிற பலரிடம் இரக்க உணர்வு இதயத்தில் இல்லை. பரிசுத்தத்தை குறித்தும் ஆத்தும ஆதாயத்தை குறித்தும் பிரமாதமாக பேசுகிற பலரால் பெரிய ஊழிய ஸ்தாபனங்களை உருவாக்க முடிகிறது. ஜனங்களுக்கு நடுவில் பெரிய ஊழியர்களாக பிரபலமடைய முடிகிறது. ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளே பரிசுத்தத்தை அறியாதவைகளாகவும், பொருள் ஆதாயங்களை நோக்கமாக கொண்டவைகளாகவும் இருக்கின்றன.

    மனிதர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள். கடவுளோ, நம்முடைய உள்ளத்தில் உள்ளது என்ன என்பதை பார்ப்பார். மனிதர்கள் நம்முடைய செயல்களை பார்த்து மெச்சுவார்கள். கடவுளோ, அவைகளுக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய உண்மையான பண்பு நிலைகள் இல்லாததை கண்டு வருத்தமடைவார். நம்முடைய நற்செயல்கள் பலருடைய பாராட்டுகளை பெறுகின்ற அதே வேளையில் நற்குணங்கள் இல்லாத இதய நிலைகளை கடவுள் பார்த்து தம்முடைய கோபத்தையே நம்மேல் பொழிவார். நற்செயல்களுக்கு முன்பு நற்பண்புகளை நம்மிடம் காண கவனமாயிருப்போமாக.

    “தீயவைகள் உன்னிடம் தானாய் தோன்றும் ஆனால்

    நல்லவைகளை நீ தான் தோற்றுவிக்க வேண்டும்”

    -சாம்சன்பால்
    Next Story
    ×