என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    “நம்பிக்கை” ஒரு மாபெரும் ஆற்றல், பலம் வாய்ந்த சிறந்த ஆயுதம். நம்பிக்கை இருந்தால் மலையையும் பெயர்க்கலாம், மாமரத்தையும் வீழ்த்தலாம், நினைப்பதை நிகழ்த்தலாம், வேண்டுவதைப் பெறலாம்.
    அன்றொரு நாள் மாலைப்பொழுதில் ஆண்டவர் இயேசு படகில் இருந்து மக்களுக்குப் போதித் தார். போதித்து முடிந்தவுடன் தம்மை சூழ்ந் திருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தை அனுப்பி விட்டு, தம் சீடர்களோடு படகில் அக்கரைக்குப் புறப்படு கிறார். அவருடன் வேறு படகுகளும் சென்றன.

    களைப்பின் மிகுதியால் இயேசு படகின் பிற்பகுதியில் தலையணை வைத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது பெரும்புயல் அடிக்கவே, கொடூரமான அலைகள் படகின் மேல் மோதி படகை கடுமையாக அசைத்தது, படகுக்குள் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.

    பயணித்த சீடர்கள் மிகவும் அஞ்சி நிலைகுலைந் துப் போனார்கள். அவர்கள், ‘போதகரே, சாகப்போகி றோமே, உமக்கு கவலையில்லையா?’ என்று சொல்லி இயேசுவை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் கடலையும் அதட்டுகின்றார். காற்று அடங்கிட பெரும் கொந்தளிப்பு நீங்கி நிசப்தமான சூழல் நிலவுகின்றது.

    இயேசு தன் சீடர்களை நோக்கி, ‘ஏன் அஞ்சுகிறீர்கள்?, உங்களு க்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்டார். அவர்கள் அவர் மீது பேரச்சம் கொண்டவர்களாய், ‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகிறதே’ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

    இந்நிகழ்ச்சி தூய மாற்கு நற்செய்தியில் 4:35-41 வரையுள்ள திருமறைப் பகுதிகளில் காணப் படுகிறது. சிற்சில மாற்ற ங்களுடன் மத்தேயு, லூக்கா, ஆகிய இரு நற்செய்தி நூல்களிலும் காணப்ப டுகிறது.

    இந்நிகழ்ச்சி இயேசு கிறிஸ்து திருச்சபைக்கு மட்டுமல்ல, அனைத்து படைப்புக்கும் அவர் ஆண்டவர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

    இயேசு படகில் ஏறச் சீடரும் பின் சென்று ஏறினார்கள். படகு இறையரசாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதி. அதற்குள் இயேசு முந்தி செல்லுகின்றார். சீடரது பணி அவருக்குப் பின்செல்வதே என்ற கருத்துத் தொனிக்கின்றது.

    இயேசுவோடு இருந்த சீடர்கள்

    ‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ என்ற கேள்வியை இயேசு தம் சீடர்களைப் பார்த்து கேட்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உண்டு.

    மற்ற மக்களை விட இயேசுவின் சீடர்கள் பல சிறப்புத் தன்மைகளை பெற்றவர்கள்.

    முதலாவது, சீடர்கள் இயேசுவின் திருப்பணியில் இணைந்து செய்யும்படியாக, அவரின் பரமேறுதலுக்குப் பின் அவரின் திருப்பணியைத் தொடரும்படியாக அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.

    இரண்டாவது, ஆண்டவர் இயேசுவின் கருத்தாழமிக்க போதனைகளை மிக அருகில் அமர்ந்து, அதிக கவனமாய்க் கேட்டவர்கள்.

    மூன்றாவது, ஒரு நல்ல தோழனைப் போன்று, சகோதரனைப் போன்று, உறவினரைப் போன்று இயேசுவோடு உண்டு, உறங்கி, பயணித்து, அன்பு பாராட்டி இணைந்து வாழ்ந்தவர்கள். இயேசுவோடு நெருங்கிப் பழகியவர்கள்.

    நான்காவது, இயேசு செய்த மாட்சிமிகு அற்புதங்களை நேரில் கண்டவர்கள். ‘கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீயஆவி பிடித்தவரைக் குணப்படுத்தியதையும்’ (1:21-28), ‘சீமோன் பேதுரு வின் மாமியாரின் காய்ச்சலை குணமாக்கியதையும்’ (1:29-31), ‘கொடிய தொழுநோயாளியின் நல மடையச் செய்ததையும்’ (1:40-45), ‘கை சூம்பியவரை குணப்படுத்தியதையும்’ (3:1-5) கண்டவர்கள்.

    நம்பிக்கை குன்றிய சீடர்கள்

    ஆண்டவர் இயேசுவின் இத்தனை ஆற்றல்மிகு அற்புதங்களைக் கண்டபடியால் இயல்பாகவே அவர் மீது அளப்பரிய நம்பிக்கை வைக்க வேண்டியவர்கள், அதற்கு மாறாக நம்பிக்கை குன்றியவர்களாய் அஞ்சினார்கள். தீய ஆவியையும், கொடிய வியாதிகளையும், பிறவி குறைபாடுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை கண்டு கொண்டார்கள்.

    ஆனால் இயற்கையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவர்களால் நம்பமுடியாமற் போயிற்று. இதன் பிரதிபலிப் பாகத் தான் அவர்களின் ஆச்சரியத் தையும், பேரச்சத் தையும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின் றனவே! இவர் யாரோ?” என்ற கேள்வியையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

    ஆனால் ஆண்டவர் இயேசுவின் கருத்துப்படி இந்த ஆச்சரியமும், வினாவும் தேவையற்றது. ஏனெனில் இயற்கையின் சக்திகள் கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் ஆளுமைக்கும் அடங்கியவையே. இதனால் தான் நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு மலையையும் இடம் பெயர்ந்து அகலும்படிக் கட்டளையிடக்கூடியவர் என்கிறார் ஆண்டவர் (மத்தேயு 21:21).

    கடவுளிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்

    “நம்பிக்கை” ஒரு மாபெரும் ஆற்றல், பலம் வாய்ந்த சிறந்த ஆயுதம். நம்பிக்கை இருந்தால் மலையையும் பெயர்க்கலாம், மாமரத்தையும் வீழ்த்தலாம், நினைப்பதை நிகழ்த்தலாம், வேண்டுவதைப் பெறலாம்.

    கடலின் கொந்தளிப்புகள் போல் வாழ்வில் எழும் போராட்டங்களை நினைத்து அச்சமடையாமலும், ஐயமுறாமலும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்ற துணிவுடன், “எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலிப்பியர் 4:13) என்ற தெளிவுடன் கடவுள் மீது முழுமையாய் நம்பிக்கைக் கொள்வோம்.

    நாம் நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்போம்.

    அருட்பணி.ம. பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை. 
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5ந் தேதி நடக்கிறது. தற்போது 436வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர்.

    மேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர்.

    கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பாதிரியார் விக்டர் லோபோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி வட்டார முதல்வர் மற்றும் பங்குதந்தை ஜோசப் ரொமால்டு தலைமை தாங்குகிறார். கோட்டார் மறை மாவட்டம் இளைஞர் பணிக்குழு செயலாளர் ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.

    வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் குமரி சமூக விடியல் இயக்கத்தினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், மாலையில் சிறப்பு திருப்புகழ்மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலோரியஸ் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்ல அருட்பணியாளர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.

    பகல் 3 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருகொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தென்தாமரைகுளம் பனிமய அன்னை பங்கு குடும்பம் வழங்கும் மக்கள் இசை கச்சேரி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்குமக்கள், பங்கு பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு ஆகியோர் செய்து வருகின்றனர். 
    நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’. (மத்.8:8).
    நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’. (மத்.8:8).

    நூறு போர்ச்சேவகர்களுக்கு மேற்பட்ட அதிகாரியாக இருந்தவர், கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வந்து ‘தனது வேலைக்காரன் திமிர்வாத நோயினால் கொடிய வேதனைப்படுகிறான்’ என்றான்.

    இயேசு, ‘நான் உன் வீட்டிற்கு வந்து அவனை குணமாக்குவேன்’ என்றார்.

    அதற்கு நூற்றுக்கு அதிபதி ‘ஆண்டவரே, நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்’ என்றார்.

    இயேசு இதை கேட்டு ஆச்சரியப்பட்டு தமக்குப்பின் வந்தவர்களை நோக்கி ‘இஸ்ரவேலில் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை மெய்யாகவே காணவில்லை’ என்றார்.

    பின்பு நூற்றுக்கு அதிபதியை பார்த்து ‘நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது’ என்றார்.

    நூற்றுக்கு அதிபதி இறை இயேசுவின் சொல்லிற்கு இருக்கும் அதிகாரத்தின் மேல் நம்பிக்கை வைத்தான். அவர் சொல்லுக்கு கொடிய வியாதியிலிருந்து சுகம் உண்டாகும் என்று விசுவாசித்தான். தனது வேலைக்காரன் சரீரத்தின் கொடிய வியாதியை தீர்ப்பார் என்று தேடிச்சென் றான். அவர் சொன்ன உடனே வியாதி அவனை விட்டு நீங்கியது. வேலைக்காரன் துக்கம் சந்தோஷமாக மாறிற்று.

    பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப் போய் போஜனஞ்செய்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை (1 சாமு.1:18).

    எல்க்கானா என்ற மனிதனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள். பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை.

    பெனின்னாள் அன்னாளை துக்கப்படுத்தி மிகவும் விசனப்படுத்தினாள். அன்னாள் ஆலயத்தில் சென்று மனங் கசந்து மிகவும் அழுது இறைவனிடம் விண்ணப்பம் செய்தாள்.

    ‘சேனைகளின் ஆண்டவரே, தேவரீர் அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து உமது அடியாளை மறவாமல் நினைத்தருளி ஒரு ஆண் பிள்ளையைத் தரவேண்டும்’ என்று தன் இருதயத்தை ஊற்றி தேவனை தேடினாள்.

    சில நாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் துக்கம் சந்தோஷமாக மாறியது.

    என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு... (1 இரா.17:20).

    சாறிபாத் என்ற ஊரில் ஒரு விதவை இருந்தாள். எலியா என்ற தேவ மனிதன் தேவ சித்தத்தின்படி விதவை வீட்டிற்கு சென்றான். அந்த வீட்டின் மேல் அறையில் தங்கி இருந்தான்.

    சில நாட்கள் சென்ற பின்பு விதவையின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டே போனது.

    விதவை ஸ்திரீ எலியாவை பார்த்து ‘தேவனுடைய மனுஷனே, என் குமாரனை சாகப்பண்ண வா என்னிடத்தில் வந்தீர்’ என்றாள்.

    எலியா, ‘உன் குமாரனை என்னிடத்தில் தா’ என்று சொல்லி தான் தங்கியிருந்த மேல் வீட்டில் கட்டிலின் மேல் படுக்கவைத்து அந்த பிள்ளையின் மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து, ‘என் தேவனாகிய பிதாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனை சாகப்பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தீரே’ என்று வருத்தப்பட்டு, ‘என் தேவனாகிய ஆண்டவரே, இந்தப் பிள்ளையின் ஆவி, ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்’ என்று விண்ணப்பம் செய்தான்.

    இறைவன் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆவி, ஆத்மா அவனுள் திரும்பி வந்தது, அவன் பிழைத்தான்.

    பின்பு எலியா மேல் வீட்டிலிருந்து பிள்ளையை எடுத்து கீழ் வீட்டிற்குள் கொண்டுவந்து தாயினிடத்தில் கொடுத்து ‘உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’ என்றான்.

    அந்த விதவை ஸ்திரீ எலியாவை பார்த்து ‘நீர் தேவனுடைய மனிதன். உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் தேவனின் வார்த்தை உண்மை என்று அறிந்திருக்கிறேன்’ என்றாள்.

    எலியா கர்த்தரை தேடினான். விதவை ஸ்திரீயின் துக்கம் சந்தோஷமாக மாறியது.

    கர்த்தர் அவளைப் பார்த்து அவள்மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி... (லூக்கா 7:13).

    இயேசு எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார். அவருடைய சீடர்களும், திரளான ஜனங்களும் கூட சென்றார்கள். அவர் நாயீன் ஊரின் வாசலுக்குச் சமீபித்த போது மரித்துப்போன ஒரு வாலிப மகனை அடக்கம் பண்ணும்படி பாடையில் வைத்து தூக்கிக்கொண்டு சென்றார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ இளவயது பெண்ணாக இருந்தாள். அவள் அனாதையாகி விட்டதை இயேசு கண்டார்.

    தாய் அழுது புலம்பும் அவலக்குரல், திரள்கூட்ட ஜனங்கள் மனவேதனையுடன் அழுது புலம்புவது பார்த்து, அவள் மேல் மனதுருகி ‘அழாதே’, என்று சொல்லி பாடையைத் தொட்டார். அதை சுமந்தவர்கள் நின்றார்கள்.

    அவர், ‘வாலிபனே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொன்னார்.

    மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை தாயினிடத்தில் ஒப்படைத்தார். எல்லோரும் ஆச்சரியப்பட்டு தேவனை மகிமைப் படுத்தினார்கள்.

    அவளோ துக்கத்தோடு தன் மகனை அடக்கம் பண்ண தேடிச் சென்றாள். கர்த்தராகிய இயேசு அவள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார்.

    நாமும் அவரை தேடும்போது நமது துக்கமெல்லாம் சந்தோஷமாக மாறும், ஆமென்.

    சி. பூமணி, ‘ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம்’, சென்னை-50. 
    புதிய ஏற்பாட்டின் பின்னணியில், இறைமகன் இயேசுவின் போதனையின் வெளிச்சத்தில் இந்த புளிப்பற்ற அப்பப்பண்டிகை பாவத்தை விலக்கும் விழாவாகக் கொண்டாடுவதே சரியானது.
    எகிப்தில் அடிமைத்தனத்தில் கிடந்த இஸ்ரவேல் மக்களை மோசேயின் மூலமாக கடவுள் மீட்கிறார். அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அவசர அவசரமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது கடவுள் இந்தக் கட்டளையைக் கொடுக்கிறார்.

    “வீடுகளில் இருந்து புளிப்பானவற்றை அகற்றுங்கள். புளிப்பான எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். புளிப்பற்ற அப்பத்தை மட்டுமே ஏழு நாட்கள் உண்ணுங்கள்.”

    அப்படி இஸ்ரவேல் மக்கள் புளிப்பற்ற அப்பத்தையும், புளிக்காத திராட்சை ரசத்தையும் ஒரு வாரம் குடித்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். கடவுள் அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான முதல் நிலையாக இந்த விழா அமைகிறது.

    புளிப்பற்ற அப்பத்தைத் தயாராக்கும் முறை வித்தியாசமானது. அப்பத்தின் மீது கோடுகளையும், துளைகளையும் போட்டு அதை சுடுவார்கள். இதனால் அப்பம் விரைவாக தயாராகி விடும். வரலாற்றுப் பதிவுகள் இந்த அப்பம் சுட 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்கின்றன.

    சுட்டு முடித்தபின் அதன் உடலெங்கும் சாட்டையால் அடித்தது போன்ற காயங்களும், துளைகளும் காணப்படும்.

    புளிப்பு என்பது பாவத்துக்கு ஒப்பீடாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இறைமகன் இயேசு தனது போதனைகளில் “புளிப்பு மாவை விலக்க வேண்டும் எனவும், புளிப்பு மாவு குறித்து கவனமாய் இருக்க வேண்டும் எனவும்” பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.

    அதற்கு மாறாக, புளிப்பற்ற மாவு என்பது தூய்மையைக் குறிக்கிறது. இறை மகன் தருகின்ற புனித வாழ்வுக்கு அது ஒப்பீடு செய்யப்படுகிறது. புளிப்பை விலக்கி விட்டு புளிப்பற்ற அப்பத்தை எடுப்பது, பாவத்தை விலக்கி விட்டு புனிதத்தை அணிவது எனும் பொருளில் வருகிறது!

    புளிப்பற்ற அப்பத்தின் உடலில் உள்ள வரிகள், பாவமற்ற இயேசுவின் உடலில் சாட்டையால் கொண்ட தழும்புகளைக் குறிக்கின்றன. அப்பத்தின் துளைகள் இயேசுவின் உடலில் ஆணிகளாலும், ஈட்டியாலும் உருவான காயங்களைக் குறிக்கின்றன. திராட்சை ரசம் அவரது குருதியைக் குறிக்கிறது. “என் உடலை உண்டு, ரத்தத்தைக் குடியுங்கள்” என இயேசு சொன்னது அவரால் புனிதமாக வேண்டும் என்பதன் குறியீடே.

    “ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” 1 கொரி 5:8 எனும் விவிலிய வசனம் புளிப்பு என்பது பாவம் என்பதை தெளிவாக விளக்குகிறது.

    அதே போல புளிப்பு என்பது வெளி வேடம் என்பதையும் இயேசு குறிப்பிடுகிறார். “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்” என அவர் மிகத் தெளிவான போதனையை தருகிறார். பரிசேயர் சதுசேயர் ஆகியவர்களுடைய வெளிவேடமும், அவர்களுடைய போதனையும் புளிப்பு மாவைப் போன்றது. அதை விலக்க வேண்டும் என்பதே அவருடைய அறிவுறுத்தலாய் இருந்தது.

    அதேபோல ஏரோதியரின் புளித்த மாவு என உலகு சார்ந்த சிந்தனைகளை இயேசு குறிப்பிடுகிறார். உலகின் போக்கில் வாழ்வதையே வாழ்க்கை எனக் கொள்ளாமல் இறைவனின் வாக்கில் வாழ்வதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும் என்பது அவரது அறிவுரையாய் இருந்தது.

    இயேசு தன்னை அப்பம் என அழைத்தார். ஜீவ அப்பம் நானே என்றும் வாழ்வு தரும் உணவு நானே என்றும் அவர் தனது போதனைகளில் குறிப்பிட்டார்.

    இன்றைக்கு புளிப்பற்ற அப்பத் திருவிழா பழைய நாட்களைப் போல கொண்டாடப்படாமல் புதிய சிந்தனையின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்ற பாவங்களை முழுவதுமாய் அகற்றி விட்டு புனிதமான வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்பதே அந்த புதிய சிந்தனை.

    ஏழு என்பது விவிலியத்தில் முழுமையைக் குறிப்பிடும் சொல். ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும் என்பது வாழ்நாள் முழுதும் புனிதமாய் இருக்க வேண்டும் என்பதன் அடையாளம். கொஞ்சம் புளிப்பு மாவை நல்ல மாவோடு சேர்த்து வைத்தால் மொத்த மாவும் புளித்துப் போய்விடும். அதே போல கொஞ்சம் பாவம் தானே என நம்மோடு அதை சேர்த்துக் கொண்டால் அது நமது வாழ்க்கையை முழுவதுமாய் செல்லரித்துப் போகச் செய்து விடும்.

    புதிய ஏற்பாட்டின் பின்னணியில், இறைமகன் இயேசுவின் போதனையின் வெளிச்சத்தில் இந்த புளிப்பற்ற அப்பப்பண்டிகை பாவத்தை விலக்கும் விழாவாகக் கொண்டாடுவதே சரியானது.
    பிரியமானவர்களே! தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள். தேவனின் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாறுங்கள்.
    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். இம்மட்டும் வழிநடத்தின தேவன் இனிமேலும் ஒவ்வொரு நாளும் உங்களை ஆச்சரியமான பாதையிலே வழிநடத்துவாராக.

    நம்பிக்கையினால் வரும் ஆசீர்வாதங்களைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம்பினால் நம்முடைய வாழ்விலே நாம் பெறும் ஆசீர்வாதம் என்ன?

    இயேசுவை விசுவாசி

    ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’. அப்போஸ்தலர் 16:31

    இயேசு கிறிஸ்துவே உண்மையான இரட்சகர். அவர் ஒருவரால் மாத்திரமே இந்த பாவம் நிறைந்த உலகிலே இரட்சிப்பைத் தர முடியும் என்பதை நாம் நம்பும் போது நாம் இரட்சிக்கப்படுகிறோம். அதே வேளையில், நாம் நம்பும்போது நம் குடும்பம் முழுவதையுமே இரட்சிக்க நம் தேவன் வல்லவராயிருக்கிறார்.

    நோவா மாத்திரம்தான் தேவனை நம்பி, அவரோடு நடந்து, அவருக்குக் கீழ்படிந்து வாழ்ந்து வந்தார். ஆனால் தேவன் அவருடைய குடும்பம் முழுவதையும் ஜலப்பிரளயத்திலே அழிந்து போகாதபடி இரட்சித்தார். முழுக்குடும்பமும் பேழையிலே காக்கப்பட்டதற்குக் காரணம் நோவாவின் நம்பிக்கையே.

    பிரியமானவர்களே, இந்த உலகத்தில் பாவத்திலே வாழ்ந்து அழிந்துவிடாதபடிக்கு உங்கள் குடும்பம் முழுவதும் கிறிஸ்துவாகிய பேழைக்குள் காக்கப்பட வேண்டுமானால் நீங்கள் முதலாவது இயேசுவை நம்புங்கள். நிச்சயமாகவே உங்கள் முழுக்குடும்பமும் காக்கப்படும்.

    அபிஷேகம்

    ‘வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப் போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்’. யோவான் 7:38,39

    இரண்டாவதாக, மேலே வாசித்த வசனத்தின்படி நாம் இயேசுவை நம்பும்போது பெறுகிற ஆசீர்வாதம் அபிஷேகம்.

    இந்த பாவம் நிறைந்த உலகத்திலே பரிசுத்தமாக வாழும்போது மாத்திரமே தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாற முடியும்.

    ஆனால் நாம் எப்படி பரிசுத்தமாக வாழ முடியும்?

    பரிசுத்த ஆவியானவரின் துணையோடு மாத்திரமே நாம் பரிசுத்தமாக வாழ முடியும்.

    வேதம் சொல்லுகிறது, ‘அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்’. யோவான் 16:8

    இந்த பரிசுத்த ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ள நமக்கு நம்பிக்கை அவசியம் தேவை. நம்பிக்கையோடு நாம் ஆண்டவரைப் பார்த்து ‘என்னை அபிஷேகியும்’ என்று கேட்கும்போது, கர்த்தர் தமது ஆவியானவரால் நம்மை அளவில்லாமல் அபிஷேகிப்பார்.

    பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும்போது, நாம் இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ முடியும்.

    தெய்வீக ஆரோக்கியம்

    ‘விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்’. யாக்கோபு 5:15

    அடுத்து, நம்பிக்கையின் மூலம் நாம் பெறக் கூடிய மற்றொரு ஆசீர்வாதம் ஆரோக்கியம்.

    பிரியமான சகோதரனே! சகோதரியே! நீங்கள் ஒருவேளை வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் இயேசுவை நம்பிக்கையோடு பாருங்கள். நிச்சயம் அவர் தம்முடைய தெய்வீக ஆரோக்கியத்தினால் உங்களை நிரப்புவார். வேதத்திலே அநேக வசனங்கள் ஆரோக்கியத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

    ‘நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’. (யாத்திரகாமம் 15:26)

    ‘உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள், அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்’. (யாத்திரகாமம்.23:25)

    ‘அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’. (ஏசாயா 53:5)

    ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’. (மத்தேயு.8:17)

    ‘என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.’ (II.கொரிந்தியர் 12:9)

    மேற்கண்ட வசனங்களை நம்பும்போது நமக்கு தெய்வீக சுகம் கிடைக்கும்.

    எனவே பிரியமானவர்களே! தேவனிடத்தில் நம்பிக்கையாயிருங்கள். தேவனின் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு பாத்திரவான்களாய் மாறுங்கள்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54. 
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் புனித அல்போன்சா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலிக்கு தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமை தாங்குகிறார். பள்ளியாடி பங்குத்தந்தை பெனடிக்ட் அனலின் மறையுரையாற்றுகிறார்.

    21-ந்தேதி பல்வேறு பங்குகளில் இருந்து இளையோர் செப வழிபாடுடன் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு வந்து சேர்வார்கள். காலை 10.30 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் வழிபாடு பேரருட்தந்தை தோமஸ் சத்தியநேசன் தலைமையில் நடைபெறுகிறது. 22-ந்தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதே போல் தினமும் காலை திருப்பலி, மாலை புனித அல்போன்சா சிறப்பு நவநாள் வழிபாடு, ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

    27-ந்தேதி நடைபெறும் எட்டாம் நாள் திருவிழாவை அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிக்கிறார்கள். காலை 9 மணிக்கு பங்குபணியாளர் ஜோசப் தெக்கேத்தலக்கல் சிறப்பு நவநாள் மற்றும் திருப்பலியை நிறைவேற்றுகிறார். இதில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்து கொண்டு 2017-18-ம் கல்வி ஆண்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறார்.

    28-ந்தேதி புனித அல்போன்சாவின் நினைவு நாளையொட்டி மாலை 6.30 மணிக்கு சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்காராயர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    29-ந்தேதி தக்கலை மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மற்றும் பங்கு மக்கள் அல்போன்சா திருத்தலம் நோக்கி புனித பயணமாக வருகிறார்கள். காலை 9 மணிக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் வழிபாட்டை பேரருட்தந்தை தாமஸ் பவ்வத்துப்பரம்பில் வழிநடத்துகிறார்.9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அவர் ‘உலகம் போற்றும் தியாகச்சுடர் புனித அல்போன்சா’ என்ற தலைப்பில் மறையுரை ஆற்றுகிறார். அதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு தேர் பவனியும், 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்தும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் பங்குத்தந்தை தாமஸ் பவ்வத்துப்பரம்பில் மற்றும் துணை பங்குத்தந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    பிறரில் உள்ள குறைகளை அதிகம் பார்க்க காரணம் மற்றவர்களில் உள்ள குறைபாடு அல்ல. அது என்னில் உள்ள குறைபாடு!. ஆதலால் குறைகளை குறைப்போம்.
    தவக்காலத்தில் நம்மிடமிருந்து அகற்ற வேண்டிய மற்றுமொரு வேண்டாத குணம், குறைகாணுதல். இயேசுவை பின் தொடர்ந்த மக்களை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவதாக, அவருடைய சொல்லாலும், செயல்களாலும் கவரப்பட்டு அவருடைய போதனைக்காக அவரைத் தொடர்ந்த கூட்டம். மற்றொன்று அவருடைய போதனைகளிலும், புதுமைகளிலும் குறைகாண வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் பின்னால் சென்ற பரிசேயர் கூட்டம்.

    இவர்கள் தான் இயேசுவின் இறையாட்சி பணிக்கு தொடக்கம் முதலே ஒரு தடைக்கல்லாக இருந்தனர். அவரை எப்படி ஒழிக்கலாம் என்று வழிவகைகளைத் தேடி, அவருடைய போதனைகளில் குற்றம், குறைகளை, கண்டுபிடித்தனர். முடக்குவாதனை குணமாக்குதல் (மத்தேயு 9:1-8), ஓய்வு நாளில் கதிர்களை கொய்தல் (மத்தேயு 12:1-8), கைசூம்பியவர் குணமடைதல் (மத்தேயு 12:9-14), சீசருக்கு வரி செலுத்துதல் (மத்தேயு 22: 15-22) ஆகிய இடங்களில் இதை காணலாம்.

    தங்களை சார்ந்தவர்கள் பேய்களை ஓட்டுவது, கடவுள் வல்லமையால் என்றும், இயேசு பேய்களை பேய்களின் தலைவனைக் கொண்டு ஓட்டுகிறார் என்றும் சொல்லிய பரிசேயர்களின் இரட்டை நிலைப்பாட்டை இயேசு வெளிச்சமிட்டு காட்டுகிறார். இந்த மனநிலை நம்மிடம் இல்லையா? நல்ல காரியங்களை நான் செய்யும் போது என்னை நல்லவன் என அழைக்கிறேன். ஆனால் அதே நல்ல காரியங்களை பிறர் செய்யும் போது மற்றவர்களின் பாராட்டை பெறவே இவ்வாறு செய்கின்றனர் என சொல்வதில்லையா?

    பிறர் குறைகளை கண்டுபிடிக்கும் எனக்கு இறைவாக்கினர் பட்டம். அதையே பிறர் செய்யும் போது “சிடு மூஞ்சி, எப்பொழுதும் குறை கண்டுபிடிப்பவன்” என்ற பட்டம் கொடுப்பதில்லையா? நான் தினமும் ஆலயத்திற்கு வந்தால் நான் புனிதன், அதையே அடுத்தவன் செய்தால் அவன் “பெரும் நடிகன்”. உழைக்காமல் நான் உண்டால் அதற்கு பெயர் “சாமர்த்தியம்,” அதையே மற்றவர்கள் வாழ்ந்தால் “ஏமாற்றுக்காரன்”. பிறரில் உள்ள குறைகளை அதிகம் பார்க்க காரணம் மற்றவர்களில் உள்ள குறைபாடு அல்ல. அது என்னில் உள்ள குறைபாடு!. ஆதலால் குறைகளை குறைப்போம்.

    - ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், தூய இருதய இளங்குரு மடம், கும்பகோணம்.
    ‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.
    தனது மக்கள் தனக்கு பலிகளைச் செலுத்த வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் இறைவனின் விருப்பமாக இருந்தது. இது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

    பலிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை விவிலியத்திலுள்ள லேவியர் எனும் நூல் விளக்குகிறது.

    ‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.

    பாவத்தின் நிவாரணமாக அமைவது ரத்தம். பாவ நிவாரணத்தின் எபிரேயச் சொல் ‘ஹட்டாத்’ என்பது. இது அறியாமையால் செய்யப்படுகின்ற பாவங்க ளுக்காய் செய்யப்படும் பலி.

    பாவத்தை மன்னிப்பது ஒன்று, பாவம் செய்தவனின் மனதிலிருந்து குற்ற உணர்வை மாற்றுவது இன்னொன்று. இவையெல்லாம் அறியாமல் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையே. பெரும்பாலும் அடுத்த நபரைப் பாதிக்காதவை எனலாம்.

    பாவ நிவாரண பலியில் பல பிரிவுகள் உண்டு. குருவுக்கு பழுது அற்ற இளம் காளை, சபையார் அனைவருக்கும் இளங்காளை, பிரபு நிறைவேற்றும் குற்றத்துக்கு பழுதற்ற வெள்ளாட்டுக்கடா, சாதாரண மனிதர் செய்யும் பாவத்துக்கு வெள்ளாட்டுப் பெண்குட்டி... இப்படித் தான் பலிப்பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் நிலைக்கு ஏற்ப இந்த பலி பொருட்கள் மாறுபடுகின்றன.

    இன்னொன்று குற்ற நிவாரண பலி. இதற்குரிய எபிரேய வார்த்தை ‘அஸோம்’ என்பது. பிறரது உரிமையின் மீது நடத்துகின்ற அத்துமீறல் இது. இது குற்றம். இந்த குற்றங்கள் இரண்டு வகைப்படும்.

    அதில் ஒன்று, தெய்வீகக் குற்றம். “ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித் தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாவை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக....” என தொடங்கி லேவியர் நூல் இதை (அதிகாரம் 5) விளக்குகிறது.

    இரண்டாவது, மனிதருக்கு எதிராய் செய்கின்ற குற்றங்கள். “... ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ...” (லேவியர் 6:2) என இத்தகைய குற்றங்களை விவிலியம் பட்டியலிடுகிறது.

    ஆள்மாறாட்டம் செய்வது, வலுக்கட்டாயமாய் பறித்துக் கொள்வது, அயலானுக்கு இடுக்கண் செய்வது, காணாமல் போனதை கண்டெடுத்தும் மறைப்பது... இவையெல்லாம் குற்றமாய் சொல்லப்படுகின்றன.

    பாவத்தை நம் வாழ்வில் போக்கிக்கொள்ள ஒரு நிவாரண பலி உண்டு. அதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. எப்படி பாவத்துக்கு நிவாரணமாக காளையின் ரத்தம், ஆட்டுக்கடாவின் ரத்தம் என விலங்குகள் குறிப்பிடப்படுகின்றனவோ, அதேபோல பாவத்தைச் சுட்டவும் விலங்குகள் பயன்படுத்தப்படு கின்றன.

    பாவம் என்பதை விஷமுடைய பாம்பு என சங்கீதம் சொல்கிறது. “அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே” என்கிறது சங்கீதம் 140:3.

    தானியேல் 7:5 பாவத்தை ஒரு கரடியாகக் காட்டுகிறது. “கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது” என்கிறது அது.

    “கடின நெஞ்சுடைய காட்டுக் கழுதையைப் போன்றது பாவம்” என யோபு நூல் சொல்கிறது. யோவேல் 5:25-ல் “பாவம் அழிக்கிற வெட்டுக்கிளியாய்” குறிப்பிடப்படுகிறது. “சூழ்ச்சிமிக்க நரி போன்றது பாவம்” என லூக்கா 13:32 குறிப்பிடுகிறது.

    இவை மட்டுமல்லாமல் ‘பயங்கரமான ஓநாய்’, கர்ஜிக்கிற சிங்கம்’, ‘அசுத்தமான பன்றி’... என்றெல்லாம் பாவங்கள் விலங்குகளாக விவிலியத்தில் சுட்டப்படுகின்றன.

    பாவத்தையும் குற்றங்களையும் செய்பவர்கள் தீர்ப்பிடப்படுகிறார்கள். ‘அவர்கள் குற்றத்தைச் சம்மதிக்க வேண்டும்’, ‘சுமத்தும் அபராதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்’, ‘பிழை செய்த காரியத்தில் அந்த விலையோடு ஐந்தில் ஒரு பாகத்தை சேர்த்து அபராதமாகச் செலுத்த வேண்டும்’.

    நம்முடைய வாழ்வில், சிலுவையின் நிழலில் இருக்கும் போது பாவங்கள் என்றோ, குற்றங்கள் என்றோ நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லாமே இறைமகன் இயேசுவின் ரத்தத்தால் சுத்தமாகிறது.

    இறைமகன் பலியானதே அதிகபட்ச பலி. இந்த பலி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பல்வேறு நிலை மக்களுக்கு, பல்வேறு வகையான பலி இனிமேல் தேவையில்லை என்பதே.

    முதலாவது, பழுதற்ற காளை, எஜமான னுக்காய் பொறுமையாய் உழைக்கும் பண்புடையது. தன் எஜமானை அது அறியும். மரணம் வரை அவருக்குக் கீழ்ப்படியும்.

    இரண்டாவது, பழுதற்ற செம்மறியாட்டு க்கடா. அது குறையில்லாத ஒன்று. எதிர்ப்பு தெரிவிக்காத பண்புடையது.

    மூன்றாவது, வெள்ளாட்டுக்கடா. அது தூய்மையின் சின்னம்.

    நான்காவது மற்றும் ஐந்தாவது இரண்டும் காட்டுப்புறா, புறாக்குஞ்சு. இவை புலம்பல், குற்றமில்லாமை, கபடமற்ற தன்மை போன்றவற்றின் அடையாளம்.

    இந்த பலி பொருட்கள் அனைத்தின் தன்மையும் இறைமகன் இயேசுவின் தன்மையோடு இணைந்து விடுகிறது. எனவே தான் இறைமகனின் பலி ஒட்டு மொத்த பாவங்களுக்கான தீர்வாக இருக்கிறது.

    நமது பாவங்கள் எதுவாக இருந்தாலும் இறைமகனின் ரத்தம் அதை நீக்கும் எனும் நம்பிக்கையே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

    அருட்பணி - வெலிங்டன் ஜேசுதாஸ்.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல பேராலய திருவிழா வருகிற 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் திருத்தலங்களில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா திருத்தல பேராலய திருத்தலமும் ஒன்றாகும். தென்னிந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் மிக உயர்ந்த வானளாவிய கோபுரம் கொண்டதாக அமைந்துள்ளது பனிமாதா அன்னையின் ஆலயம். இத்திருத்தல பேராலய திருவிழா வருகிற 27-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை ரெமிஜியூஸ் ஜெபம் செய்து அர்ச்சித்த பின்னர் கோவில் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் கொடியேற்றுகிறார்.

    அதனைத் தொடர்ந்து மதுரை மறைமாநிலம் ஆனந்தம் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    ஆகஸ்டு 2-ந் தேதி 7ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. மாலை6.30 மணிக்கு அலங்காரதட்டு பங்குதந்தை ஜான் செல்வம் தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.

    3-ந் தேதி 8ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் மறைமாவட்ட வடவை முதன்மை குரு ஜான் பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு பி‌ஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது. கோட்டார் இளைஞர் இயக்குநர் ஜெனிபர் எடிசன் அடிகளார் மறையுரை நற்கருணை ஆசீர்வாதம் வழங்குகிறார்.

    ஆகஸ்ட் 4-ந் தேதி 9ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு தக்கலை மேதகு பேராயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அடைக்கலாபுரம் ஜோசப் இசிதோர் மறையுரையும், அதனைத் தொடர்ந்து வானவேடிக்கையும் இரவு 12 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.

    இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி 10ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தக்கலை மேதகு பேராயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி மற்றும் 8.30 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது.

    பின்னர் இரவு மாலை ஆராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.ஜெபஸ்டின்ஆனந்த், பங்குதந்தை ஜான்சன்ராஜ், உதவி பங்குதந்தை கலைச்செல்வன் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகைமை சங்கம்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இறைமக்கள் செய்துவருகின்றனர்.
    அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஜகிருஷ்ணாபுரம், புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜோசப் கென்னடி மறையுரையாற்றுகிறார். இரவு ‘புனித அருளானந்தர் நாடகம்’ நடைபெறுகிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 22-ந் தேதி காலையில் திருப்பலியை தொடர்ந்து, குடும்ப வளர்வாழ்வு பயிற்சி நடக்கிறது.

    வருகிற 25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு தேர் பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் ரீத்தாபுரம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமை தாங்குகிறார். திருமூலநகர் பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனியும், இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்கு பேரவை துணைத்தலைவர் எட்வர்ட் டொமினிக் ராஜன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் லீலா, பொருளாளர் லலிதா, பங்கு பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர். 
    தமிழகத்தில் உள்ள பிஷப்களின் ஆண்டு பேரவை கூட்டம் பூண்டி மாதாபேராலயத்தில் தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    தமிழகத்தில் உள்ள பிஷப்களின் ஆண்டு பேரவை கூட்டம் பூண்டி மாதாபேராலயத்தில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள 23 மறை மாவட்ட பிஷப்கள் கலந்து கொண்டனர். தமிழக பிஷப் களின் தலைவர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அனைத்து பிஷப்களும் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் ஆன்மிக, அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் செய்திருந்தனர். 
    ×