என் மலர்tooltip icon

    தரவரிசை

    பாவெல் நவகீதன் இயக்கத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா, காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் வி1 படத்தின் விமர்சனம்.
    அருண் காஸ்ட்ரோ நிக்டோபோபியா என்னும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டவர். அதாவது இருளில் அவரால் இருக்க முடியாது. மனைவியை இழந்த சோகத்தில் போலீஸ் பணியில் இருந்து விலகி தடயவியல் துறையில் வகுப்பு எடுத்து வருகிறார். ஒரு பெண் கழுத்தில் குத்தப்பட்டு கொலையான வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல்துறை தவிக்கிறது. 

    புத்திசாலித்தனமான விசாரணை அதிகாரியான அருணை திரும்ப அழைக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் உள்ளவர்களின் உடல்மொழி, அசைவு என உளவியல் ரீதியாக நுன்னியமாக கவனிக்கும் அருணின் சந்தேக பார்வை பலர்மீது படர இறுதியில் உண்மையான குற்றவாளியை யார் என்பதை அருண் எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.

    வி1

    விசாரணை அதிகாரி கதாபாத்திரத்துக்கு ராம் அருண் காஸ்ட்ரோ கச்சிதமாக பொருந்துகிறார். உளவியல் ரீதியாக விசாரணை செய்யும்போது அவரது நடிப்பில் பக்குவம் தெரிகிறது. முதல் படத்திலேயே இயல்பாக நடித்து படத்தை சுவாரசியமாக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. அருணின் புலனாய்வுக்கு மட்டுமல்லாது படத்தின் நகர்வுக்கும் விஷ்ணுபிரியா பக்கபலமாக இருக்கிறார். ஆக்‌ஷன், துரத்தல் காட்சிகளிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

    வி1

    மற்ற பாத்திரங்களான காயத்ரி, லிஜீஷ், மைம் கோபி, லிங்கா என அனைவருமே தங்களது நேர்த்தியான நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். படம் தொடங்கியது முதல் முடிவது வரை ஒரு துப்பறியும் நாவலை படித்த அனுபவம் ஏற்படுகிறது. ஒரு சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம். அது படத்தின் வேகத்துக்கு தடையாக அமைகின்றன. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் காலையில் துரத்த தொடங்கியது இரவு வரை நீடிப்பது மட்டும் லாஜிக் குறையாக தெரிகிறது. 

    வி1

    டிஎஸ்.கிருஷ்ணகுமாரின் ஒளிப்பதிவில் குற்றங்களின் இருளும் விசாரணையின் வெளிச்சமும் நம்மை ஆட்கொள்கிறது. ரோனி ரெபெலின் பின்னணி இசை படத்துக்கு வேகம் கொடுக்கிறது. சிஎஸ்.பிரேம் குமாரின் படத்தொகுப்பு விசாரணையை கண்முன் கொண்டு வருகிறது.

    மொத்தத்தில் ‘வி1’ விறுவிறுப்பு.
    ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி, சுனைனா, கிராவ்மகா ஸ்ரீராம், லீலா சாம்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் சில்லுக்கருப்பட்டி படத்தின் விமர்சனம்.
    4 வெவ்வேறு கதைகள். ஆனால் நான்கிலும் ஒரே மையப்பொருள் தான். ஆனால் வயதுக்கு தகுந்தாற்போல் அது மாறுபடுகிறது. அழகிய கவிதை போன்ற ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் ஹலிதா ஷமீம். அவருக்கு பாராட்டுகள். 

    ராகுல் குப்பத்தை சேர்ந்த பையன். மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குவது அவனுக்கும் அவனது நண்பர்களுக்குமான பொழுதுபோக்கு. நீல நிற பை ஒன்றில் கிடைக்கும் பொருள்கள் அவனுக்குள் இருக்கும் மெல்லிய பால்ய உணர்வுகளை தட்டி எழுப்புகின்றன. தினமும் வரும் அந்த பையை பின் தொடர்கிறான். எதற்காக அதை பின் தொடர்கிறான்? அவனுடைய தேடல் முழுமை பெற்றதா? என்பது ப்ளுபேக் குறும்படம். பையை பின் தொடர்வது, அவன்மீது அன்பு செலுத்தும் தோழி, காமெடிக்கு ஒரு நண்பன் என்று முதல் குறும்படமே நம்மை படத்துக்குள் ஈர்த்து விடுகிறது. குப்பை மேட்டை இதுவரை இப்படி காட்டியது இல்லை என்பதுபோல கேமரா கோணங்கள் இருக்கின்றன. 

    சில்லுக்கருப்பட்டி

    காக்கா கடி கதை: மணிகண்டன் - நிவேத்திதாவுடையது. மணியின் திருமணத்துக்கு நாள் குறித்து இருக்கும் நேரத்தில் அவருக்கு ஒரு நோய் உண்டாகிறது. சின்ன பிரச்சினையாக தொடங்கும் அது கேன்சராக உருவெடுக்க திருமணம் நின்றுபோகிறது. சோகமே உருவாய் மாறும் அவனுக்கு பேஷன் டிசைனர் நிவேத்திதாவின் நட்பு ஆறுதலாக மாறுகிறது. அதுவே அம்மாவின் அரவணைப்பாக மாறுவது அழகான கவிதை. நிவேத்திதா - மணிகண்டனுக்கு இடையே மெல்லியதாக தொடங்கும் நேசம் வாடகை காரிலேயே காதலாக மாறும் காட்சிகள் நெகிழ வைக்கிறது.

    சில்லுக்கருப்பட்டி

    டர்ட்டிள் வாக்கில் முதிய வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும் லீலா சாம்சனும் நட்பாகிறார்கள். ஒரு தோழமையான சந்தர்ப்பத்தில் ஸ்ரீராம் தனது காதலை சொல்ல அதை லீலா சாம்சன் ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையா? என்பதே டர்ட்டிள் வாக் குறும்படம். தனித்து விடப்படும் முதியவர்களுக்கான தேவையை கச்சிதமாக சொல்லி இருக்கிறது இந்த குறும்படம்.   

         சில்லுக்கருப்பட்டி

    ஹே அம்மு கதையில் சமுத்திரகனியும் சுனைனாவும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் நடுத்தரவர்க்க தம்பதி. இயந்திரத்தனமாக இருக்கும் கணவனிடம் இருந்து தனது முன்னாள் காதலனை கண்டுகொள்ள சுனைனா போராடுகிறார். அதற்கு உதவியது யார்? கனி எப்படி மாறினார்? என்பதே அம்முவின் கதை. 

    பால்ய காதலில் தேவைப்டும் தோழமை, இளவயது காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயது காதலில் தேவையான அரவணைப்பு, முதுமை காதலில் அவசியமான ஆறுதல் என நான்கு வயதினருக்கான தேவைகளையும் மிகவும் சுவாரசியமாக அலசி இருக்கிறது படம்.

    சில்லுக்கருப்பட்டி  

    அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி நால்வரின் ஒளிப்பதிவும் படத்தை விட்டு அகலாமல் பார்க்க வைக்கிறது. பிரதீப் குமாரின் இசை எந்த காட்சியிலும் உறுத்தாமல் படத்துடன் ஒன்றவைக்கிறது. ஹலீதாவின் படத்தொகுப்பு கச்சிதம். 

    சிறுகதைகள், கவிதைகள் மீது பிரியம் உள்ளவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் ஆர்வத்தை ஏற்படுத்தும். நான்கு படங்களுமே நம்மை சிரிக்க, ரசிக்க, நெகிழ, கண்ணீர் மல்க, உணர வைக்கின்றன. பிரபலங்களை நம்பாமல் ஹலீதா தன்னுடைய எழுத்தை மட்டுமே நம்பி சில்லுக்கருப்பட்டியை வழங்கி இருக்கிறார். அந்த எழுத்தை அப்படியே படமாக்கி நமக்கு ஒவ்வொரு குறும்படத்திலும் ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா வளம்பெற சில்லுக்கருப்பட்டிகள் இன்னும் நிறைய உருவாக வேண்டும்.

    மொத்தத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ அருமை.
    பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், கிச்சா சுதிப், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தபங் 3’ படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியாக இருக்கும் சல்மான்கான், நேர்மையாகவும், ரவுடிகளிடம் இருந்து பறிக்கும் பணத்தை, போலீஸ்காரர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில், பெண்களை கட்டாயப்படுத்தி தவறான தொழிலை செய்யச் சொல்லும் கும்பலை அடித்து நொறுக்குகிறார் சல்மான்கான்.

    இந்த கும்பலுக்கு தலைவனாக கிச்சா சுதீப் இருப்பது சல்மான்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே இருக்கும் பழைய பகை காரணமாக இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. சல்மானுக்கும், கிச்சா சுதீப்புக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன? இவர்களின் மோதல் எப்படி முடிவு பெற்றது என்பதே படத்தின் மீதிக்கதை.

    தபங் 3

    சுல்புல் பாண்டேவாக நடித்திருக்கும் சல்மான்கான், நடை, உடல் மொழி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ப்ளாஷ்பேக்கில் சென்டிமென்ட்டாக நடித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். காமெடியிலும், சண்டைக்காட்சிகளிலும், செம்ம ஸ்கோர் செய்திருக்கிறார். 

    சல்மான்கானுக்கு ஏற்ற வில்லனாக நடித்திருக்கிறார் கிச்சா சுதிப். தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். நாயகியாக வரும் சோனாக்‌ஷி சின்ஹா அழகு பதுமையாக வந்து செல்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சாய் மஞ்சிரேக்கர் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    தபங் 3

    தனக்கே உரிய ஸ்டைலில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபுதேவா. ஆட்டம், பாட்டம், சண்டை, சென்டிமென்ட், பன்ச் வசனம் அனைத்தையும் திறம்பட கொடுத்திருக்கிறார். தமிழ் டப்பிங் வசனம் படத்திற்கு பலம். பல இடங்களில் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.

    சாஜித் அலி இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். இவரின் பின்னணி இசையும், மகேஷ் லிமாயேயின் ஒளிப்பதிவோடு சேர்ந்து படத்தை பார்க்கும் போது கூடுதல் ரசனை.

    மொத்தத்தில் ‘தபாங் 3’ சபாஷ் போடலாம்.
    பாஸ்கர் சீனுவாசன், தானா நாயுடு, கவுசல்யா, பேபி கைலா நடிப்பில் வெளியாகி இருக்கும் கைலா படத்தின் விமர்சனம்.
    கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள். தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. 

    குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே தேதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? தானா நாயுடு யார்? என்பதுதான் படத்தின் கதை.

    கைலா விமர்சனம்

    கதாநாயகிக்கும் வில்லனுக்கும் தான் படத்தில் முக்கியத்துவம். அதை உணர்ந்து நாயகி தானா நாயுடுவும் வில்லனாக நடித்துள்ள இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளனர். 

    கவுசல்யா தனது உணர்வுபூர்வ நடிப்பால் இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பரணி செல்வத்தின் ஒளிப்பதிவிலும் ஸ்ரவனின் இசையிலும் படத்துக்கான திகில் கூடுகிறது. 

    கைலா விமர்சனம்

    நல்ல கதைக்களத்தை கையில் எடுத்த பாஸ்கர் சீனுவாசன் இன்னும் வலுவான திரைக்கதையை அமைத்து இருக்கலாம். அதிக லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். வழக்கமான பேய் படங்கள் வரிசையில் இப்படமும் அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கைலா’ திகில் குறைவு. 
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சீதா, நிகிலா விமல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தம்பி’ படத்தின் விமர்சனம்.
    மேட்டுப்பாளையத்தில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சத்யராஜ். இவர், தாய் சௌகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா என வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன் 15 வருடத்திற்கு முன்பு காணாமல் போகிறார். இதே சமயம் கோவாவில் பல பேரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் கார்த்தி, நான்தான் காணாமல் போன மகன் என்று சத்யராஜ் வீட்டுக்கு வருகிறார்.

    இங்கு வந்த பிறகு கார்த்தி குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தாலும், அவரை கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அது யார்? எதற்கு கொல்ல நினைக்கிறார்கள்? சத்யராஜின் காணாமல் போன மகன் கார்த்தி தானா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தம்பி விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, திருடனாகவும், மகனாகவும் திறம்பட நடித்திருக்கிறார். திருடனாக மற்றவர்களை ஏமாற்ற செய்யும் சேட்டைகளும், பெற்றோர் மற்றும் அக்காவின் பாசத்திற்கு ஏங்கும் பரிதாபமான நடிப்பும் நெகிழ வைத்திருக்கிறது. 

    டீச்சராக வரும் ஜோதிகா, கண்டிப்பு, துணிச்சல், பாசம் என தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கிளாமாக்ஸ் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நிகிலா விமல், காதல் காட்சிகளிலும், அப்பா தவறு செய்தவுடன் வருத்தப்படும் காட்சிகளிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

    தம்பி விமர்சனம்

    எம்.எல்.ஏ.வாக வரும் சத்யராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஒரு தந்தை குடும்பத்தின் மீது வைத்திருக்கும் பொறுப்புள்ள அப்பாவாக நடிப்பில் பளிச்சிடுகிறார். அமைதியான அம்மாவாக நடித்திருக்கிறார் சீதா. பார்வையிலேயே பேசுகிறார் சௌகார் ஜானகி. இவரது நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாரே என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். வழக்கம்போல் அசுரமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார் அம்மு அபிராமி. காமெடியில் கலக்கி இருக்கிறார் அஸ்வந்த். இளவரசு, பாலா, ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    தமிழில் பாபநாசம் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப், தற்போதும் குடும்பங்கள் ரசிக்கும் படி தம்பி படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் அனைவரிடமும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அதுபோல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை போக போக வேகம் எடுக்கிறது. முதல்பாதியின் நீளத்தை குறைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

    தம்பி விமர்சனம்

    கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அலட்டல் இல்லாமல் இருக்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மேட்டுபாளையம் மற்றும் கோவாவின் அழகை கண்முன் நிறுத்துகிறார்.

    மொத்தத்தில் ‘தம்பி’ குடும்பத்தில் ஒருவன்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹீரோ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சிவகார்த்திகேயன், சிறுவயதில் சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு, எதிர்காலத்தில் தானும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். தன்னை சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்து விபரீத முடிவு ஒன்றை எடுக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவரிடம், சூப்பர் ஹீரோ என்பது கற்பனை தான், நம்ம பிரச்சனையை நாம தான் பாத்துக்கணும் என அவரது தந்தை அட்வைஸ் பண்ணி புரிய வைக்கிறார்.

    சிவகார்த்திகேயன், பெரியவன் ஆனதும் பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நடத்துகிறார். அதில் போலி சான்றிதழ்கள் அடித்து கொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரின் பகுதியில் வசித்து வரும் இவானா எனும் இளம்பெண், அர்ஜுன் மறைமுகமாக நடத்தி வரும் பள்ளியில் படிக்கிறார்.

    ஹீரோ

    திறமை இருந்தும் பெயில் ஆன மாணவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதே அர்ஜுனின் நோக்கம். அந்த வகையில் இவானா, ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் ஆசையை அர்ஜுனுக்கு தெரியாமல் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி விடுகிறார். 

    இவானாவின் கண்டுபிடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தால் அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வில்லன் அபி தியோல், சில சூழ்ச்சி வேலைகள் செய்கிறார். இதனால் மனமுடையும் இவானா தற்கொலை செய்து கொள்கிறார். இதுபோன்ற செயல்களை தடுக்க ஒரு ஹீரோ வேண்டும் என அர்ஜுன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். இதன் பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் என்ன செய்கிறார்? அர்ஜுன் மறைந்து வாழ்வது ஏன்? என்பதே மீதிக்கதை.

    ஹீரோ

    நாயகன் சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டே போகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் சூப்பர் ஹீரோவாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் காதல், காமெடி, இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் என அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார். நாயகிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

    படத்தின் மற்றொரு நாயகன் அர்ஜுன் தான், தனது அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். அபி தியோல் தனது வில்லத்தனதால் மிரள வைக்கிறார். மேலும் இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளனர்.

    பலர் இயக்குனர்கள் எடுக்க தயங்கும் சூப்பர் ஹீரோ கதையை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சிறப்பாக கையாண்டுள்ளார். நம் நாட்டின் கல்விமுறை வேலையாட்களை தான் உருவாக்குகிறதே தவிர அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவது இல்லை. குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர், அவர்களது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிய விதம் சிறப்பு. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். 

    ஹீரோ

    சிவகார்த்திகேயன், அர்ஜுன் மற்றும் வில்லன் அபிதியோல் ஆகியோர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் கைதட்டல் அள்ளுகின்றன. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. 

    மொத்தத்தில் ’ஹீரோ’ சூப்பர் ஹீரோவாக மிளிர்கிறார்.
    எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் நவீன் குமார், ஸ்ருதி ரெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் மெரினா புரட்சி படத்தின் விமர்சனம்.
    ஒரு இளைஞனும் இளைஞியும் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், அதன் வரலாற்றையும் 15 நாட்களுக்குள் ஆவணபடமாக எடுத்து வந்தால் வேலைக்கு சேர்த்து கொள்வதாக அந்த தொலைகாட்சி நிர்வாகி கூறுகிறார். இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், வரலாற்றையும் ஆவணப்படமாக எடுத்து வரும் அவர்கள், அதை தொலைக்காட்சி நிர்வாகியிடம் ஒவ்வொன்றாக விளக்குகிறார்கள். இதுதான் மெரினா புரட்சி திரைப்படம்.

    மெரினா புரட்சி

    தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிகட்டுக்காக நடைபெற்ற போராட்டம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரியமான வீர விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்து தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களும் போராட்டம் நடத்தினர். 

    ஜல்லிக்கட்டுக்காக போராடியதும், கோஷம் போட்டதும் தான் நிறைய மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் பாதிப்புகள் என்னென்ன, அதன் நன்மைகள் என்னென்ன, பின்னால் நடந்த அரசியல் விஷயங்கள் என்ன என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது இந்த மெரினா புரட்சி. 

    மெரினா புரட்சி

    உலகமே வியந்து பார்த்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை கமர்சியல் அம்சங்கள் ஏதும் சேர்க்காமால் இயக்குனர் படமாக்கிய விதம் சிறப்பு. இப்படத்திற்காக நிறைய ஆய்வு செய்து, இந்த போராட்டம் பற்றி வெளிவராத பல தகவல்களை படத்தில் சொல்லி இருந்தாலும், சில விஷயங்களை சொல்ல தயங்கியுள்ளதும் திரையில் தெரிகிறது.

    படத்தில் நடித்துள்ளவர்கள் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர். உண்மை தன்மை கருதி பெரும்பாலான காட்சிகள், ஜல்லிகட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கோர்வையாக இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். 

    மெரினா புரட்சி

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி தெரியாதவர்களுக்கு மிகச் சரியான விளக்கம் கொடுக்கும் படமாக இது அமைந்துள்ளது. 

    வேல்ராஜின் ஒளிப்பதிவும், அல் ரூபியனின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.

    மொத்தத்தில் ’மெரினா புரட்சி’ எழுச்சி.
    ஜேக் காஸ்டன் இயக்கத்தில் டிவைன் ஜான்சன் - காரன் கில்லன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் விமர்சனம்.
    ஸ்பென்சர், பிரிட்ஜ், மார்தா, பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜி விளையாட்டிற்குப் பிறகு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் இருக்கும் ஸ்பென்சர், மீண்டும் ஜுமான்ஜி உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு, உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு செல்கிறார். 

    ஸ்பென்சரை தேடி அவரது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்கு செல்கின்றனர். எதிர்பாராத விதமாக ஸ்பென்சரின் தாத்தாவும் இந்த விளையாட்டில் இணைந்து விடுகிறார். இதையடுத்து ஜுமான்ஜி விளையாட்டை விளையாடும் அவர்கள், கடினமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இறுதியில் இவர்கள் அனைவரும் சவால்களை எப்படி சமாளித்தார்கள்? டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்

    2017இல் வெளிவந்த ஜுமான்ஜி வெல்கம் டூ தி ஜங்கிள் படம் நல்ல வரவேற்பைப் வெற்றது. தற்போது இந்த படத்தின் அடுத்த பாகமாக வெளிவந்திருக்கிறது ’ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’. 

    டிவைன் ஜான்சன் இந்த படத்தில் வயதானவரின் உடல் மொழியுடன் கூடிய பலசாளியாக நடித்து அசத்தியுள்ளார். இதேபோல் காமெடியிலும் கலக்கி இருக்கிறார். அவர் காட்டும் சீரியஸ் லுக் கூட சிரிப்பை வர வைக்கிறது. கெவின் ஹார்ட் காமெடியில் சிரிக்க வைக்கிறார். காரன் கில்லன், ஜேக் பிளாக், நிக் ஜோனஸ், பாபி கேனவல் என அனைவருமே அவர்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். 

    கடந்த பாகத்தை ஒப்பிடுகையில் இதில் சாகச காட்சிகள் சற்று குறைவுதான். ஒவ்வொருவரும் உடல் விட்டு உடல் மாறுவதைத் தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது. தமிழ் டப்பிங் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

    ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்

    இயக்குனர் ஜேக் கஸ்டன், சாகச காட்சிகளைப்போல், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. கியூலா படோஸின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறது. ஹென்ரி ஜாக்மேனின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

    மொத்தத்தில் ’ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’ வேற லெவல்.
    மம்முட்டி, உன்னி முகுந்தன், மாஸ்டர் அச்சுதன், அனு சித்தாரா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாமாங்கம்’ படத்தின் விமர்சனம்.
    வல்லவநாட்டை சேர்ந்த சாவேரி இனத்தின் உரிமையையும், ஆட்சியையும் சாமுத்ரி இனத்தை சேர்ந்தவர்கள் பறிக்கிறார்கள். தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமையையும் ஆட்சியையும் மீட்டெடுக்க சாவேரி இனத்து ஆண் பிள்ளைகளை தற்கொலைப் படையாக வளர்க்கிறார்கள்.

    பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாமாங்கம் திருவிழாவில் இந்த பகையை தீர்க்க செல்கிறார் மம்முட்டி. சாமுத்ரி தலைமையை அழிக்கப் போராடி தோல்வியடைகிறார். இதனால் சொந்த ஊர் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் மம்முட்டி, நாடு திரும்பாமல் தலைமறைவாகிறார்.

    மாமாங்கம் விமர்சனம்

    அடுத்த முறை நடக்கும் மாமாங்கத்தில் உன்னி முகுந்தன் மற்றும் மாஸ்டர் அச்சுதன் செல்கிறார். அதில் இவர்கள் வெற்றி கண்டார்களா? இல்லையா? மம்முட்டி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டிக்கு காட்சிகள் குறைவாகவே உள்ளது. அதுபோல் ஆக்‌ஷன் காட்சிகளும் குறைவு. அறிமுக காட்சியில் பெண்ணைப் போன்று உடலசைவு செய்ய முயற்சி செய்திருக்கிறார். அது அவருக்கு பெரியதாக எடுபடவில்லை. 

    மாமாங்கம் விமர்சனம்

    உன்னி முகுந்தன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாஸ்டர் அச்சுதன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இனியா நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாராவின் நடிப்பு சிறப்பு.

    மாமாங்கம் என்பது மன்னர்களின் ஆட்சி காலத்தில் கேரளாவின் மலபார் மற்றும் கோழிக்கோடு பகுதியில் பல ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு திருவிழா. இந்த விழாவை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்மகுமார். வரலாற்று படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாததுபோல் இருக்கிறது.

    மாமாங்கம் விமர்சனம்

    மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. ஜெயசந்திரனின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணியை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மாமாங்கம்’ மிரட்டல் குறைவு.
    ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் காளிதாஸ் படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியாக இருக்கும் பரத், தனது மனைவி குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இந்த கேசை பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அடுத்த சில நாட்களில் இதேபோன்று சில பெண்கள் இறந்துபோகின்றனர். இதையடுத்து விசாரணையில் தீவிரம் காட்டும் பரத், இது கொலையா? தற்கொலையா? என ஆராய தொடங்குகிறார்.

    அசிஸ்டண்ட் கமிஷனராக இருக்கும் சுரேஷ் மேனனின் அறிவுறுத்தலின் பேரில் பரத் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என்பதை அறிய இரவு பகல் பாராது சின்சியராக வேலை பார்க்கும் பரத், குடும்பத்தை சரிவர கவனிக்காமல் விடுகிறார். இதனால் அவருக்கு அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பரத், பெண்கள் இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? பரத்தின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் இப்படத்தின் மீதிக்கதை.

    காளிதாஸ் படக்குழு

    நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பரத், காளிதாஸ் படத்தில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அழகு, பதுமையுடன் இருக்கும் நாயகி அன் ஷீத்தல் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

    அசிஸ்டண்ட் கமிஷனராக வரும் சுரேஷ் மேனன் தனது யதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். ஆதவ் கண்ணதாசன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். விறுவிறுப்பான கதைகளத்தில் போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சிரிக்க வைக்கிறது. 

    காளிதாஸ் படக்குழு

    அறிமுக இயக்குனரான ஸ்ரீ செந்தில், முதல் படத்திலேயே அசர வைக்கிறார். எந்த விதத்திலும் படம் பார்ப்பவர்களை யூகிக்க விடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர், கிளைமாக்ஸில் எதிர்பாரத டுவிஸ்ட் வைத்து அசத்தியிருக்கிறார். 

    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். சுரேஷ் பாலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் ‘காளிதாஸ்’ விறுவிறுப்பு. 
    சுசீந்திரன் இயக்கத்தில் விஸ்வா, நரேன், மிருனாளினி நடிப்பில் வெளியாகி இருக்கும் சாம்பியன் படத்தின் விமர்சனம்.
    கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் மனோஜ். கவுன்சிலருக்கு அடியாளாக வேலை செய்து வருவதால், தனது மகனையாவது சிறந்த கால் பந்தாட்ட வீரராக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு போட்டியின் போது, மனோஜுக்கு அடிப்பட்டு இறந்து விடுகிறார். இதனால், மனோஜின் மனைவி, நாயகன் விஸ்வாவிடம் இனிமேல் நீ கால்பந்தாட்டம் விளையாட கூடாது என்று கூறி வேற ஏரியாவிற்கு அழைத்து சென்று விடுகிறார்.

    ஆனால், தந்தையின் கனவை நிறைவேற்ற தாய்க்கு தெரியாமல் கால்பந்தாட்டம் விளையாடி வருகிறார் விஸ்வா. நன்றாக விளையாடி சிறந்த வீரராக இருந்து வருகிறார். மனோஜின் நண்பரான நரேனிடம் பயிற்சி பெற்று வரும் நிலையில், தந்தை மனோஜ் விபத்தில் சாகவில்லை என்றும், அது திட்டமிட்ட கொலை என்றும் விஸ்வாவிற்கு தெரிய வருகிறது.

    சாம்பியன் படக்குழு

    இதனால் கோபமடையும் விஸ்வா, கால்பந்தாட்டத்தை மறந்து தன் தந்தையை கொலை செய்தவனை பழி வாங்க நினைக்கிறார். இறுதியில் விஸ்வா, தந்தையை கொன்றவனை பழி வாங்கினாரா? தந்தையின் கனவை நிறைவேற்றினானா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஸ்வா, புதுமுகம் என்று சொல்ல முடியாதளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். புட்பால் விளையாடும் போதும் சரி, பழி வாங்க நினைக்கும் போதும் சரி நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருகிறார். இவருடைய குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் மிருனாளினி கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    சாம்பியன் படக்குழு

    புட்பால் கோச்சராக மனதில் பதிந்திருக்கிறார் நரேன். தான் பயிற்சி செய்த மாணவன் கெட்ட வழியில் செல்லகூடாது என்று துடிக்கும் இவரது நடிப்புக்கு பெரிய கைத்தட்டல். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருகிறார் மனோஜ். ஒரு தந்தைக்குண்டான கனவை நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார். 

    கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக வேகம் எடுத்திருக்கிறது. 

    சாம்பியன் படக்குழு

    விஸ்வாவிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அரோல் கரோலி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். சுஜித் சாராங்கின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘சாம்பியன்’ கைதட்டல் வாங்குகிறான்.
    எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், வைபவி, அதுல்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் கேப்மாரி படத்தின் விமர்சனம்.
    ஐ.டி. ஊழியரான ஜெய் ஊருக்கு செல்லும் போது, ரெயிலில் நாயகி வைபவியை சந்திக்கிறார். இந்த பயணத்தின் போது மது அருந்தும் ஜெய், வைபவியிடம் வேண்டுமா என்று கேட்க, அவரும் வேண்டும் என்று சொல்ல, இருவரும் மது அருந்தி போதையில் தவறு செய்து விடுகிறார்கள். அதன்பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்.

    சில மாதங்களுக்குப் பிறகு சென்னையில் சந்திக்கும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் அதுல்யாவின் வண்டி பஞ்சராக அவரை வீட்டில் கொண்டு விடுகிறார் ஜெய். அப்போது இருவரும் போதையில் தவறு செய்து விடுகிறார்கள்.

    கேப்மாரி படக்குழு

    அதுல்யா கர்ப்பமாக ஜெய் வீட்டுக்கே வந்து விடுகிறார். இதனால், ஜெய் - வைபவி - அதுல்யா இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் ஜெய் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய், இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். இரண்டு பெண்களிடம் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் காட்சியில் பளிச்சிடுகிறார். நாயகிகளாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, வைபவி இருவரும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போதுள்ள இளைஞர்களுக்கான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். நான் இன்னும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

    கேப்மாரி படக்குழு

    சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகியது. பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஜீவனின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது படம் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘கேப்மாரி’ ரசிக்க வைக்கிறான்.
    ×