என் மலர்
தரவரிசை
நவீன் மணிகண்டன் இயக்கத்தில் விகாஷ், மதுமிதா, டெல்லி கணேஷ், சித்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா படத்தின் விமர்சனம்.
நாயகன் விகாஷ் ஊரில் வேலைக்கு ஏதும் போகாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவரது அப்பா டெல்லி கணேஷ், மகன் பொறுப்புள்ளவனாக மாற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், விகாஷோ சங்கம் ஒன்று அமைத்து ஊரில் உள்ள பிரச்சனையில் தலையிட்டு வருகிறார்.
இந்நிலையில், நாயகி மதுமிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை? அதை எப்படி விகாஷ் சமாளித்தார்? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விகாஷ், காதல், காமெடி, ஆக்ஷன் என்று நடிப்பில் கவர முயற்சி செய்திருக்கிறார். நாயகி மதுமிதா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான ராமர் காமெடியில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக ராகுல் தாத்தா இரண்டு தோற்றங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்ரா நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் கவனிக்க வைத்திருக்கிறது.

வழக்கமான காதல் கதையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நவீன் மணிகண்டன். காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகள் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷின் பிளாஸ்பேக் காட்சி ரசிக்க வைக்கிறது.
எஸ்.ஆர்.ராமின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க வைக்கிறது. லோகேஷின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ சுமாரானவன்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், பிரியா மணி நடிப்பில் வெளியாகி இருக்கும் விஜயன் படத்தின் விமர்சனம்.
ஆதரவற்றவராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். சிறுவயதில் இருந்தே திருடனாக இருந்து வருகிறார். அப்பா, அம்மா இல்லாமல் கோடிஸ்வரனாக இருக்கும் தாத்தாவுடன் வளர்ந்து வருகிறார் பிரியா மணி. இவர் அணிந்திருக்கும் ஜெயின் ஒன்று ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைக்கிறது.
திருடன் என்பதால் அதை விற்க முயற்சி செய்கிறார். ஆனால், அது போலியான தங்கம் என்பதால் விற்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த ஜெயினை தூக்கி எறிகிறார். ஆனால், ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த ஜெயின் அவரிடம் வருகிறது. வளர்ந்து பெரியவனாக இருக்கும் ஜூனியர்.என்.டி.ஆர். மீண்டும் பிரியாமணியை சந்திக்கிறார். இவரை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

இந்நிலையில், ஒரு திருட்டின் போது எமதர்மரை ஜூனியர் என்.டி.ஆர். திட்டுகிறார். இதனால் கோபமடையும் எமதர்மராஜா ஆயுள் நாட்கள் அதிகமாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரை போலி கணக்கு எழுதி எமலோகத்திற்கு வரவழைத்து விடுகிறார். இந்த விஷயம் ஜூனியர் என்.டி.ஆருக்கு தெரிய வர எமதர்மராஜாவை எப்படி சமாளித்தார்? மீண்டும் பூலோகம் திரும்பினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
2007ம் ஆண்டு வெளியான எமடோங்கா என்ற தெலுங்கு படத்தினை டப்பிங் செய்து விஜயன் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் காமெடியில் கலக்கி இருக்கிறார். துறுதுறு இளைஞனாக மனதில் பதிகிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா மணி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். எமனாக வரும் மோகன்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காமெடி கலந்து பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. அந்த காலத்திற்கு ஏற்ப கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். கீரவாணி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘விஜயன்’ காமெடி கலாட்டா.
எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலாபால், ரவிச்சந்திரன், கல்யாணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொய்யாட்டம்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் சுதீப், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அமலாபால் உள்பட 3 டாக்டர்களை காப்பாற்றுகிறார். இதனால் அமலாபால், சுதீப் மீது காதல் வயப்படுகிறார். இந்த சூழலில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுஜித்தின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வீட்டிலிருந்து திடீர் அழைப்பு வருகிறது.
சுதீப் அண்ணனின் உடற்கூறாய்வு அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடையும் அமலாபால், இது தற்கொலை அல்ல கொலை என சுதீப்பிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து தனது அண்ணனை கொன்றது யார் என கண்டுபிடிக்க சுதீப் தீவிரம் காட்டுகிறார். இறுதியில் தனது அண்ணனை கொன்றது யார் என சுதீப் கண்டுபிடித்தாரா? அமலாபாலை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சுதீப், ராணுவ அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதேபோல் காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். டாக்டராக வரும் நாயகி அமலா பால், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சுதீப்-அமலாபால் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
சுதீப்பின் அண்ணனாக நடித்துள்ள ரவிச்சந்திரன் குறைந்த காட்சிகளே வந்தாலும், அவரின் கதாபாத்திரம் படத்திற்கு திருப்புமுனையாக அமைகிறது. வில்லன் கபீர் துகான் சிங் தனது வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மேலும், ரவி கிஷான், அவினாஷ், கல்யாணி, பிராச்சி ஆகியோரின் யதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

இயக்குனர் எஸ்.கிருஷ்ணா காமெடி, ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்துள்ளார். திரைக்கதையை தொய்வு இல்லாமல் கையாண்டுள்ள விதம் சிறப்பு. அர்ஜுன் ஜன்யாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கருணாகரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில் ‘பொய்யாட்டம்’ விறுவிறுப்பு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார் படத்தின் விமர்சனம்.
மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்துவிடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்களும் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார்.
இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் ஏராளமான இளம் பெண்களையும் காப்பாற்றி, மும்பை நகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி. இந்த போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் ரஜினி, ஒரு தொழிலதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்துவிடுகிறார். அந்த தொழிலதிபர், தனக்கு இருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி தனது மகனை வெளியே கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இதற்கெல்லாம் அசராத ரஜினி தன் சாதுர்யத்தால் அந்த தொழிலதிபரின் மகனை கொல்கிறார். இறந்தது தொழிலதிபரின் மகன் மட்டுமல்ல, உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து ரஜினி சுனில் ஷெட்டியின் மகனை எதற்காக கொன்றார்? தனது மகனை கொன்ற ரஜினியை வில்லன் சுனில் ஷெட்டி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ரஜினி, ரஜினி தான், என சொல்லும் அளவுக்கு மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். ஆக்ஷன், அப்பா-மகள் சென்டிமெண்ட், நயன்தாராவுடன் காதல், யோகிபாபுவுடன் காமெடி என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். அதிரடி போலீஸ் அதிகாரியாக வந்து தனது மிடுக்கான நடிப்பால் அசர வைக்கிறார். காதல், காமெடி, ஸ்டைல், சுறுசுறுப்பு, ஆக்ஷன், சென்டிமெண்ட் என 70 வயதிலும் 6 பந்துகளில் 6 சிக்சர் அடிக்க முடியும் என நிரூபித்து காட்டி நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்கிறார் ரஜினி.

நாயகி நயன்தாரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். ரஜினியின் மகளாக வரும் நிவேதா தாமஸ் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கும் யோகி பாபு, சும்மா தெறிக்கவிட்டுள்ளார், முதல் பாதியில் பல இடங்களில் வந்து செல்கிறார். வரும் போதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார்.
வில்லன் சுனில்ஷெட்டி, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் அறிமுகம் ஆனாலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். முதல் பாதியில் காமெடி, ஆக்ஷன், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் ஆகியவை ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை, ஒவ்வொரு பிஜிஎம்மையும் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக ரஜினியின் என்ட்ரி செம மாஸ். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. ரஜினியை பயங்கர ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறார்.
மொத்தத்தில் “தர்பார்” பொங்கல் விருந்து.
ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார் நடிப்பில் சச்சின் இயக்கத்தில் வெளியாகியுள்ள அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் விமர்சனம்.
அமராவதி நகரில் ராமாயண நாடகம் போடுபவர்கள் ஒரு பெரிய புதையலை கொள்ளையடிக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்ததை அறிந்த பிரபல தாதா அவர்களை கொன்று விடுகிறார். அவரது இறப்புக்கு பிறகு மகன்கள் இருவரும் அரியணைக்கு அடித்துக் கொள்கிறார்கள். புதையல் ரகசியமும் நீடிக்கிறது.
அமராவதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வரும் ரக்ஷித் ஷெட்டி புதையலை பற்றி அறிய முயற்சிக்கிறார். அண்ணன், தம்பி இணைந்தார்களா? ரக்ஷித் ஷெட்டி ஏன் புதையலை தேடி வந்தார்? ராமாயண குழுவின் நாடகம் மூலம் புதையலின் ரகசியம் எப்படி வெளிப்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரக்ஷித் ஷெட்டி தான் படத்தின் ஒரே தூண். அதை உணர்ந்து சிறப்பாக நடித்து நம் மனங்களை கவர்கிறார். முக்கால்வாசி காமெடி, கால்வாசி ஆக்ஷன் என கலந்துகட்டி அடிக்கிறார். அவர் பல்பு வாங்கும் இடங்கள் வயிறை பதம் பார்க்கிறது என்றால் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் தெறிக்கிறது. 3 மணி நேர படத்தில் எந்த இடமும் போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார். வழக்கமான கதாநாயகி போல அறிமுகமாகும் ஷான்வி இரண்டாம் பாதியில் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாகிறார்.

பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபால கிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோரும் நடிப்பில் கம்பீரம் காட்டுகிறார்கள். படத்துக்கு சுவாரசியம் கூட்டும் இன்னொரு அம்சம் அஜனீஷ் லோக்நாத், சரண்ராஜின் பின்னணி இசை. பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. உல்லாஹ் ஹைதூரின் கலை இயக்கம் பிரம்மிக்க வைக்கிறது. கரம் சாவ்லாவின் ஒளிப்பதிவு அமராவதி என்னும் கற்பனை நகரை கண்முன் கொண்டு வருகிறது.

ரக்ஷித் ஷெட்டியும் அவரது குழுவும் திரைக்கதை எழுதி இருக்கிறது. ரசிகனின் நாடித்துடிப்பை அறிந்து அமைத்து இருக்கிறார்கள். வசனங்களை தமிழ்படுத்தி இருக்கும் விஜயகுமாரும் பாராட்டப்பட வேண்டியவர். கன்னட வசனங்களின் சுவாரசியத்தை குறையாமல் கொடுத்து இருக்கிறார். லாஜிக்கை மறந்து குழந்தைகள், குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படைப்பாக அவனே ஸ்ரீமன் நாராயணா அமைந்துள்ளது.
மொத்தத்தில் ”அவனே ஸ்ரீமன் நாராயணா” காமெடி தர்பார்.
டாக்டர் மாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்திருக்கும் பச்சை விளக்கு திரைப்படத்தின் விமர்சனம்.
சாலை விதிகளை பற்றி பி.எச்.டி படித்திருக்கும் மாறன், சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவிற்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கிறார். இதிலிருந்து மாறன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் தீஷா.
ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், தீஷாவின் சகோதரி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலிடம் சிக்குகிறார். இதையறிந்த மாறன், தீஷாவின் சகோதரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து தீஷாவின் சகோதரியை காப்பாற்றினாரா? இல்லையா? அந்த கும்பலை மாறன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் மாறனே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். முதல் பாதியில், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கிறார். பலருக்கும் தெரியாத விஷயத்தை சொன்னதற்கு பெரிய கைத்தட்டல். இரண்டாம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமைகளையும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருக்கிறார். தவறாக செல்போனை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் மாறனின் இயக்கம், வசனம், காட்சியமைப்பு என்றால், பலவீனம் இவரது நடிப்பு. இயக்கத்தில் காண்பித்த கவனத்தை நடிப்பில் கொஞ்சம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் தீஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி சிந்திக்க வைத்திருக்கிறார். தாரா, மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவில் கவனிக்க வைத்திருக்கிறார் பாலாஜி.
மொத்தத்தில் ‘பச்சை விளக்கு’ பார்க்கலாம்.
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் காக்கா முட்டை ரமேஷ், சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிழை’ படத்தின் விமர்சனம்.
சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைத்து வறுமை நிலையை போக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு. மகன்களோ ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்கின்றனர். வகுப்பில் முதலாவது வரும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகின்றனர்.
குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர்க்காரர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் மனம் உடையும் சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் தங்கள் மகன்களை அடித்து விடுகின்றனர். இதனால் கோபித்துக்கொண்டு மூன்று சிறுவர்களும் சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். அங்கு எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். அதில் இருந்து மீண்டார்களா? மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காக்கா முட்டை ரமேஷ், நஷத், கோகுல், தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். மாணவர்களாக வரும் 3 சிறுவர்களின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. மூன்று தந்தைகளையும் அவர்களின் மகன்களையும் பற்றிய கதை. சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தை கதாபாத்திரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதை நகரத்துக்கு நகர்ந்த பிறகு வேகம் எடுக்கிறது. படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கு பாடமாகவும் கதை நகர்ந்து இருக்கிறது. கல்வியின் மகத்துவத்தை சமூக அக்கறையோடு அழுத்தமான திரைக்கதையில் உயிரோட்டமாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.
பைசல் இசையில் பாடல்கள் மனதில் நிற்கிறது. பாக்கியின் ஒளிப்பதிவு காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.
மொத்தத்தில் ‘பிழை’ நல்ல புரிதலை உண்டாக்கும்.
வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தொட்டு விடும் தூரம்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் விவேக்ராஜ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தாயார் சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக நாயகனின் கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த குழுவில் நாயகி மோனிகாவும் இடம்பெற்றிருக்கிறார்.
நாயகியை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஜாலியாக காதலித்து வரும் சூழலில், நாயகி கேம்ப் முடிந்து சென்னை செல்ல நேர்கிறது. பின்னர் காதலியை தேடி சென்னை செல்லும் நாயகன் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இறுதியில் அவர், பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா? காதலியை சந்தித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி மாணவியாக நடித்து கவர்கிறார். நாயகனுக்கும், நாயகிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
நாயகனின் தாயராக நடித்துள்ள சீதா, அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். காமெடி எடுபடாதது படத்திற்கு பின்னடைவு.

இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை வரும் காதலனின் ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இறுதியில் சாலை விதிகள், உடல் உறுப்பு தானம் போன்ற சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிய விதம் அருமை.

நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், ராம் குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் “தொட்டு விடும் தூரம்” காதல் பயணம்.
தமிழ் செல்வன் இயக்கத்தில் உதய், லீமா பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் உதய் படத்தின் விமர்சனம்.
ஓவியராக இருக்கும் நாயகன் உதய் ஒரு பெண் ஓவியத்தை வரைகிறார். அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணை நேரில் கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய காதலை நாயகி லீமாவிடம் சொல்லுகிறார். ஒரு கட்டத்தில் உதய்யின் காதலை ஏற்றுக் கொள்ளும் லீமா பாபு, இருவரும் காதலித்து வருகிறார்கள்.
நன்றாக சென்று கொண்டிருக்கும் இவர்கள் காதலில் ஜாதி தடையாக வருகிறது. இதனால், இவர்களுடைய காதலில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் பிரச்சனைகளை கடந்து நாயகி லீமா பாபுவை நாயகன் உதய் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் உதய், காதல், ரொமன்ஸ், சண்டைக்காட்சி என தன்னால் முடிந்தளவு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி லீமா பாபு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவர்களை சுற்றியே படம் நகர்வதால் மற்ற நடிகர்களுக்கு அதிக வேலை இல்லை.
கிடா விருந்து என்ற படத்தை இயக்கிய தமிழ் செல்வன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். காதல், ஜாதியை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். பல காட்சிகள் மற்ற படங்களின் காட்சியை ஞாபகப்படுத்துகிறது. சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.
தீபக் ஹரிதாஸின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘உதய்’ சுவாரஸ்யம் குறைவு.
சேது, ஸ்ருதி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு நடிப்பில் கிருஷ்ணா சாய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 50/50 படத்தின் விமர்சனம்.
ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு மூன்று பேரும் அண்ணன், தம்பிகள். இவர்கள் கும்பகோணம் பகுதியில் தாதாவாக இருக்கிறார்கள். இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் போலீஸ்காரரை அடித்து நொறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் போலீஸ்காரர் அவர்களை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் நல்லவர்கள் என்று பெயர் எடுத்து திருட்டு தொழில் செய்து வரும் சேது மற்றும் அவரது நண்பர்கள் ஒருநாள் போலீசிடம் சிக்குகிறார்கள். இவர்களை வைத்து ஜான் விஜய் சகோதரர்கள் வீட்டில் இருக்கும் பணத்தை திருட சொல்கிறார் போலீஸ்காரர்.
பணத்தை கொள்ளையடிக்கும் சேது மற்றும் நண்பர்கள் ஒரு பேய் பங்களாவில் தஞ்சமடைகிறார்கள். இவர்களை தேடி ஜான் விஜய் சகோதரர்களும் அங்கு வருகிறார்கள்.

இறுதியில் பேய் பங்களாவில் இருக்கும் சேது மற்றும் நண்பர்கள், ஜான் விஜய் மற்றும் சகோதரர்கள் எப்படி வெளியே வந்தார்கள்? அங்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சேது தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடன் வரும் நண்பர்களும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். நாயகியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, பால சரவணன் ஆகியோர் காமெடியில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

வழக்கமான பேய் படங்களுக்கு உரிய பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா சாய். திறமை வாய்ந்த நடிகர்களை வைத்து சரியாக வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். படத்தில் காமெடி செய்து அனைவரும் சிரிக்கிறார்கள். ஆனால், பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வரவில்லை.
தரண் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிரதாப்பின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘50/50’... 25.
சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகியோர் நடிப்பில் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் விமர்சனம்.
சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகியோர் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். இவர்கள் ஐந்து பேரும் ஒரு திருமண விழாவில் சந்தித்து நட்பாகிறார்கள். விழாவில் இருந்து ட்ரிப் செல்லும் இவர்களுக்கு பஞ்சராக்ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது.
இந்த புத்தகத்தை படிக்கும் இவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை? அதை ஐந்து பேரும் எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீர், காற்று, பூமி, தீ, வானம் ஆகிய இயற்கையின் கூறுகளை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வைரமுத்து. சந்தோஷ் பிரதாப் (வானம்) ஆராய்ச்சியாளராகவும், கோகுல் (தீ) இசைக்கலைஞராகவும், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளராக மனதில் பதிகிறார். சனா அல்டாப் (நீர்) மனிதாபிமான பெண்ணாக கவனம் பெற்றிருக்கிறார்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். அதனால் நல்லதே நினைப்போம். என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். நல்லவர்களிடம் ஒரு கெட்டதும், கெட்டவர்களிடமும் ஒரு நல்லதும் இருக்கும் என்ற எதார்த்தத்தை சொல்லியிருப்பது சிறப்பு.

படத்திற்கு பெரிய பலம் சுந்தர மூர்த்தியின் இசை. இவரின் பின்னணி இசையோடு யுவாவின் ஒளிப்பதிவோடு படத்தை பார்க்கும் போது திரில்லிங்கான உணர்வு கொடுக்கிறது.
மொத்தத்தில் ‘பஞ்சராக்ஷரம்’ பார்க்கலாம்.
எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி, ஜிஎம்.குமார், சுஜாதா, கோவிந்தமூர்த்தி, சாம்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் நான் அவளை சந்தித்தபோது படத்தின் விமர்சனம்.
நாயகன் சந்தோஷ் பிரதாப் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார். வீட்டில் அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு சென்னை வரும் சாந்தினி, உறவினர் வீட்டின் முகவரியை தொலைத்துவிட்டு தவித்துக்கொண்டு இருக்கிறார். சாந்தினியின் நிலையை பார்த்து பரிதாபப்படும் சந்தோஷ் அவரை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டுபோய் விடுகிறார்.
ஆனால் ஊர் பஞ்சாயத்தில் சந்தோஷை தவறாக நினைத்து சாந்தினியை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். சாந்தினியுடன் ஒரு இரவு இருந்துவிட்டு சென்னைக்கு திரும்பி விடுகிறார். ஆனால் சாந்தினியின் நினைவு வாட்டுவதால் அவரை திரும்ப ஏற்றுக்கொள்கிறார். சந்தோஷின் வீட்டில் சாந்தினியை ஏற்றுக்கொண்டார்களா? சந்தோஷ் சினிமாவில் ஜெயித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர். சந்தோஷும் சாந்தினியும் அந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்கள். சினிமாவில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டத்தை சந்தோஷ் திரையில் இயல்பாக பிரதிபலித்துள்ளார். முதலில் சாந்தினியை ஒதுக்கும் அவர் பின்னர் அவரது அன்பை புரிந்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

எதிர்பாராமல் கிடைத்த வாழ்க்கையாக இருந்தாலும் அது நம்மைவிட்டு போய்விடுமோ என்ற போராட்டத்தை சாந்தினி தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். சந்தோஷின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்தமூர்த்தி, சாந்தினியின் பெற்றோரான ஜிஎம்.குமார், சுஜாதா உள்ளிட்ட மற்ற அனைவருமே தங்கள் சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள்.

இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் எளிய கதையை எடுத்து அதற்கு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக கொடுத்து இருக்கிறார். படத்தின் இறுதியில் நிஜ நபர்களை கதாபாத்திரங்களுடன் பொருத்தி காண்பிப்பது சுவாரசியம்.
ஹித்தேஷ் முருகவேலின் இசையும் ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன.
மொத்தத்தில் ’நான் அவளை சந்தித்தபோது’ உணர்வுப்பூர்வமானது.






