என் மலர்
தரவரிசை
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி. சாக்ஷி சவுத்ரி, விமலா ராமன், சாய் தன்ஷிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இருட்டு’ படத்தின் விமர்சனம்.
பனி சூழ்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஊரில் மர்மமான முறையில் 6 பேர் இறக்கிறார்கள். இந்த கேசை விசாரிக்கும் போலீசுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இதனால், இந்த கேசை விசாரிக்க சுந்தர்.சி தேர்வு செய்யப்படுகிறார்.
தனது குடும்பத்துடன் அந்த ஊருக்கு வருகிறார் சுந்தர்.சி. அங்கு வந்த பிறகு அவர்கள் தங்கும் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவரது மனைவி அறிகிறார். சில நாட்களில் சுந்தர்.சி.க்கும் அமானுஷ்ய சக்தி இருப்பது தெரிய வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சுந்தர்.சி. அந்த வழக்கை எப்படி விசாரித்தார்? அந்த 6 பேர் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன? விசாரணை செய்த போலீஸ் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். சாக்ஷி சவுத்ரிக்கு அதிகம் வாய்ப்பில்லை. கவர்ச்சிப் பதுமையாக வந்து செல்கிறார். சாய் தன்ஷிகா பார்வையால் மிரட்டியிருக்கிறார். விமலா ராமன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விடிவி கணேஷ் காமெடியில் கலகலப்பு கூட்டுகிறார். யோகி பாபு ஒரு காட்சியில் மட்டும் வந்து கவனம் பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முகவரி, தொட்டிஜெயா, 6 கேண்டில்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை, இம்முறை ஹாரர் கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான பேய் படங்களை தாண்டி வித்தியாசமாக உருவாக்கி பார்ப்பவர்களை பயமுறுத்தி சிறப்பாக இயக்கியுள்ளார். மீன், கறையான், பாம்பு, நாய் என ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் வரை திரைக்கதைக்குள் புகுத்தியிருப்பது சிறப்பு.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் ஒரே பாடல் அவ்வளவு சீக்கிரம் முடிந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். இவருடன் இணைந்து கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் அதிக பங்களிப்பை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இருட்டு’ சிறப்பு.
குமரன் இயக்கத்தில் கதிர், ரோஷினி, ஏ.பி.ஸ்ரீதர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் நாயகன் கதிர். இவரை எப்படியாவது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று பயிற்சியாளர் முயற்சி செய்கிறார். இந்நிலையில், 10 வருடத்திற்குப் பிறகு சென்னையில் நடைபெற இருக்கும் செவன்ஸ் என்னும் விதிகள் இல்லாமல் விளையாடும் கால்பந்தாட்டத்தில் விளையாட வேண்டும் என்று கதிர் ஆசைபடுகிறார்.
விதிகள் இல்லாததால் கை, கால்கள் இழக்க நேரிடும் என்று பயிற்சியாளர் கூறியும் கதிர் விளையாட வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டியில் கதிர் அணி விளையாடி வரும் நிலையில், ஒரு பிரச்சனையில் லோக்கல் போலீஸ், சென்னையில் போட்டி நடத்த அனுமதி மறுக்கிறது.

இதனால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி சாத்தான் குளத்தில் நடத்த முடிவு செய்கிறார்கள். சென்னையில் இருந்து சாத்தான் குளம் செல்லும் கதிர் மற்றும் நண்பர்களுக்கு மர்மமான சம்பவங்கள் நடக்கிறது.
இறுதியில் கதிர் மற்றும் நண்பர்களுக்கு ஏற்பட்ட மர்மமான சம்பவங்கள் என்ன? கால் பந்தாட்ட போட்டியில் கதிர் அணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், மைதானத்தில் விளையாடும் போதும், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ரோஷினி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. ஒரே கிக்கில் அனைவருடைய கவனத்தையும் தன் வசமாக்கி இருக்கிறார்.

தன்னுடைய பார்வையால் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சென்டிமெண்ட்டால் கவர்ந்திருக்கிறார் லிஜிஸ். கெத்தாக வந்து செல்கிறார் கிஷோர்.
கால்பந்தாட்டத்தில் செவன்ஸ் என்னும் விளையாட்டை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன். ஆனால், திரைக்கதை விளையாட்டை விட்டு சற்று விலகி சென்று படத்தை உருவாக்கி இருக்கிறார். விளையாட்டு படங்களுக்கு உண்டான அதே பாணி இந்த படத்திலும் பயணிக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பிற்பாதியில் இவருடைய இசையுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளர் சூர்யாவும் பயமுறுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஜடா’ பார்க்கலாம்.
சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், டிகங்கனா, ரெபா மோனிகா ஜான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ”தனுசு ராசி நேயர்களே” படத்தின் விமர்சனம்.
தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்து விடுகிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். ஜாதக பொருத்தம் இல்லாமல், திருமணம் செய்து கொண்டதால் தான் உனது தந்தை இறக்கும் சூழல் ஏற்பட்டதாக ஹரிஷ் கல்யாணிடம் அவரது தாத்தா கூறுகிறார். இதனால் ஜாதகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. ஹரிஷ் கல்யாண் வளர்ந்த பிறகு, திருமணத்திற்கு பெண் தேடுகிறார்.
ஹரிஷ் கல்யாணுக்கு வேறு மொழி பேசும் கன்னி ராசி பெண் தான் பொறுத்தமாக இருக்கும் என அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறுகிறார். இதையடுத்து, கன்னி ராசி பெண்ணை தேடுகின்றனர். எதுவும் செட் ஆகாததால், யாரையாவது லவ் பண்ணியாவது கல்யாணம் பண்ணிக்கோ என இவரது தாயார் கூறுகிறார். இந்த சூழலில், ஹரிஷ் கல்யாணின் முன்னாள் காதலி ரெபா மோனிகா ஜான், தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

அவ்வாறு செல்லும் போது முன்னாள் காதலியின் தோழி டிகங்கனா மீது காதல் வயப்படுகிறார் ஹரிஷ் கல்யாண். இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஹரிஷ் கல்யாண், காதலியின் ராசி என்ன என்பதை தெரிந்துகொள்ள முனைப்பு காட்டுகிறார். ஆனால் முற்போக்கு சிந்தனை கொண்ட நாயகி அதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இவ்வாறு வெவ்வேறு கொள்கைகளுடன் இருக்கும் இருவரும் இறுதியில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஹரிஷ் கல்யாண் லவ்வர் பாயாக படம் முழுவதும் இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். அழகு பதுமையுடன் இருக்கும் நாயகி டிகங்கனா, காதல், கவர்ச்சி ஆட்டம் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். மற்றொரு ஹீரோயினான ரெபா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

யோகிபாபு அவ்வப்போது வந்து கதையை மட்டும் சொல்லி செல்கிறார். பெரிதாக ஈர்க்கவில்லை. மேலும் பிரியாணி பிரியராக முனீஸ்காந்த், ஜோதிடராக வரும் பாண்டியராஜன், மயில்சாமி ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் காமெடி ஒர்க்அவுட் ஆகாதது மைனஸ்.
புதுவிதமான கதைகளத்தை கையில் எடுத்துள்ள இயக்குனர் சஞ்சய் பாரதி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் இளமை துள்ளளோடு இருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் ‘தனுசு ராசி நேயர்களே’ காதல் கலாட்டா.
அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ”இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் விமர்சனம்.
மகாபலிபுரம் பீச்சில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கரை ஒதுங்குகிறது. இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைய, போலீசார் இதை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைக்கிறார்கள். அங்கிருந்து திருடப்பட்டு சென்னையில் நாயகன் தினேஷ் வேலை செய்யும் இரும்பு குடோனுக்கு வருகிறது.
குண்டு திருடு போனதை அறிந்த போலீசார், அதை ஒரு பக்கமும், போலீசுக்கு முன்பு அதை கண்டுப்பிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். அதை பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்லும் தினேஷ், தான் எடுத்து வந்தது குண்டு என்று தெரிய வருகிறது.
இறுதியில் தினேஷ் அந்த குண்டை என்ன செய்தார்? போலீசிடம் குண்டு கிடைத்ததா? சமூக நல மாணவர்களுக்கு கிடைத்ததா? குண்டு வெடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தினேஷ், இந்த படத்தையும் சரியாக தேர்வு செய்திருக்கிறார். இரும்பு கடையில் வேலை பார்க்கும் லாரி டிரைவராக மனதில் நிற்கிறார் தினேஷ். இரும்பு கடையில் வேலை பார்ப்பவர்களின் வலிகளை சொல்லும் போதும், தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தின் போதும், காதலிக்காக ஏங்கும் போதும், நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக குண்டு என்று தெரிந்தவுடன் அதை என்ன செய்வது என்று பதறும் போது கைத்தட்டல் பெறுகிறார்.
கிராமத்து பெண்ணாக கவர்ந்திருக்கிறார் ஆனந்தி. காதலனுக்காக வீட்டை பகைத்துக் கொண்டு, கட்டினால் அவரைத்தான் கட்டுவேன் என்று வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் மாஸ் காண்பித்திருக்கிறார். பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்திருக்கிறார் முனிஷ்காந்த். இவரின் வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு பலம். நிருபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் ரித்விகா.

இரும்பு கடை முதலாளியாக வரும் மாரிமுத்து, தரகர் ஜான் விஜய், தினேஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், திருடனாக ஜானி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். போலீசாக நடித்திருக்கும் லிங்கேஷ் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
ஒரு குண்டை வைத்து, காதல், சென்டிமெண்ட், ஜாதி, அரசியல், காமெடி ஆகியவற்றை தடவி பிரம்மாண்டமாக வெடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். குண்டுகள் பற்றி சொன்ன விதம் அருமை.

டென்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணியில் மிரட்டலான இசையை கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் பின்னணி இசையின் மூலம் பார்ப்பவர்களை பயப்பட வைக்கிறது. ஒளிப்பதிவில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் கிஷோர்.
மொத்தத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ சிறந்த படைப்பு.
சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா, ராதிகா, நிகிஷா பட்டேல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் விமர்சனம்.
ஊரில் அடிதடி சண்டை என்று தாதாவாக இருக்கிறார் ஆரவ். இவருடைய தாய் ராதிகா, ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால், ஆரவ்வோ, தாய் ராதிகாவை மதிக்காமல் இருக்கிறார்.
குறிப்பிட்ட கட்சியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவிற்கு ஆதரவாக ஆரவ் செயல்பட்டு வருகிறார். அதே கட்சியில் இருக்கும் ஹரிஷ் பெராடி ஆரவை கொலை செய்தால்தான் முன்னேற முடியும் என்று நினைக்கிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாள் ஒரு கல்லூரியில் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவ், காவ்யா மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் மிகவும் கோழையான மாணவர் ஒருவர் காவ்யாவை காதலிக்கிறார்.

இந்நிலையில், ஆரவ்வை போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள். என்கவுண்டரின் போது கோழையான மாணவர் சிக்கி இறக்கிறார். மேலும் அவரின் ஆவி, ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது.
மிகவும் வீரனாக தாதாவாக இருக்கும் ஆரவ் உடம்பினுள் கோழையான ஒருவரின் ஆவி சென்றவுடன் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஆரவ், இப்படத்தில் தாதா நடித்திருக்கிறார். உடற்கட்டு, ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற காட்சிகளில் முடிந்த அளவு நடித்துக்கொடுத்துள்ளார். உடம்பிற்குள் ஆவி சென்றவுடன் காமெடி காட்சிகளில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காவ்யா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அரசியல்வாதிகளாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாயாக வரும் ராதிகா, வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். புல்லட் ஓட்டுவது சுருட்டு பிடிப்பது என தன்னுடைய தனித்தன்மையை கொடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரியதாக எடுபடவில்லை. கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார் நிகிஷா பட்டேல்.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நல்ல கதை ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. ஆவி வந்த பிறகுதான் படம் பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

கே.வி.குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘மார்க்கெட் ராஜா’ சாதாரண ராஜா.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விமர்சனம்.
தனுஷ் சென்னையில் தங்கி படித்து வருகிறார். அவர் படிக்கும் கல்லூரியில் திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. அந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் மேகா ஆகாஷை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் தனுஷ். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கல்லூரியில் 2 மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடைபெறுகிறது.
இருவரும் ஜாலியாக காதலித்து வருகின்றனர். தனுஷிடம் தான் ஒரு அனாதை என கூறும் மேகா ஆகாஷ், இப்படத்தின் இயக்குனர் தான் தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்து வருவதாக கூறுகிறார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படத்தில் நடிப்பதாகவும் சொல்கிறார். உடனே தனுஷ் அவரை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்.

சில நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை தேடி அந்த படத்தின் இயக்குனர், தனுஷ் வீட்டுக்கு வருகிறார். அப்போது தனுஷிடம் 5 நாட்கள் கழித்து என்னை பார்க்க வா என சொல்லிவிட்டு இயக்குனருடன் சென்னை செல்கிறார் மேகா ஆகாஷ். அதேபோல் 5 நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை பார்க்க சென்னைக்கு செல்லும் தனுஷ், அவரை தேடி அலைகிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடையும் தனுஷ் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் தனுஷுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இம்மாதிரியான சூழலில் 4 ஆண்டுகளுக்கு பின் திடீரென தனுஷுக்கு போன் செய்யும் மேகா ஆகாஷ், தான் மும்பையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும், தன்னை வந்து காப்பாற்றுமாறும் கூறுகிறார். இதன் பின்னர் தனுஷ் மும்பை சென்று மேகா ஆகாஷை காப்பாற்றினாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

தனுஷ், வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பால் கவர்கிறார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார். மேகா ஆகாஷ் தனது அழகால் கவர்கிறார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.
சசிகுமார் சிறிது நேரமே வந்தாலும் படத்தின் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதுவரை கிராமத்து கதையில் நடித்து வந்த சசிகுமாரை, இந்த படத்தில் ஸ்டைலாக வருவது, ஆங்கிலத்தில் பேசுவது என வித்தியாசமாக காட்டியுள்ளார் கவுதம் மேனன்.
கவுதம் மேனன் இக்கதையை கையாண்ட விதம் சிறப்பு. காதல் கதையை சொல்வதில் கைதேர்ந்த கவுதம் மேனன், நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக் கொண்டே போகிறார். வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். காதல் காட்சிகள் மெதுவாக நகர்வது சற்று சோர்வை தருகிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. தர்புகா சிவாவின் பாடல்கள் ஏற்கனவே செம ஹிட் அடித்த நிலையில், விஷுவல் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. தர்புகா சிவா பாடலை போல் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கவுதம் மேனன் இஸ் பேக்.
அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, அதுல்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அடுத்த சாட்டை’ படத்தின் விமர்சனம்.
சமுத்திரகனி நடிப்பில் வெளியான சாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘அடுத்த சாட்டை’ என்ற படம் வெளியாகி இருக்கிறது. சாட்டை படத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருந்தார்கள். அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கல்லூரியில் முதல்வராக தம்பிராமையாவும், பேராசிரியராக சமுத்திரகனியும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வரும் அந்த கல்லூரியின் தவறுகளை சமுத்திரகனி சுட்டி காட்டி வருகிறார். மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார் சமுத்திரகனி. மாணவர்களுக்கிடையே இருக்கும் பிளவுகளையும் நீக்குகிறார்.

சமுத்திரகனியின் செயலால் கோபமடையும் தம்பிராமையா, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இறுதியில் சமுத்திரகனி, தம்பிராமையாவின் சூழ்ச்சியில் இருந்து எப்படி தப்பித்தார்? ஜாதிகளை விட்டு நல்ல கல்லூரி முதல்வராக தம்பிராமையா மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மாணவர்களால் கல்லூரிகள் சீர்கெடுகிறதா? அல்லது கல்லூரிகளால் மாணவர்கள் சீர்கெடுகிறார்களா? என்பதை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சிறந்த வழிக்காட்டி இருந்தால் மாணவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுகள்.

கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார் சமுத்திரகனி. வசனங்கள் பேசும் போது பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார். மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தம்பிராமையா மிரட்டலான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
படம் ஆரம்பத்தில் இருந்து சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நல்ல கருத்து என்றாலும், அதுவே ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்தி விடுகிறது. தற்போதுள்ள சூழ்நிலைக்கு இப்படம் தேவையானது என்றே சொல்லலாம்.

முத்தக்காட்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், கேலி செய்தல், ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.
ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அடுத்த சாட்டை’ சமூகத்திற்கு தேவையானது.
பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரி ராவ், நாசர், மோகன்ராம் நடிப்பில் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் வெளியாகியுள்ள அழியாத கோலங்கள் 2 படத்தின் விமர்சனம்.
பிரகாஷ்ராஜ் ஒரு பிரபல எழுத்தாளர். அவர் சாகித்ய அகாடமி விருது வாங்கிய கையோடு தன்னுடைய முன்னாள் காதலி அர்ச்சனாவை சந்திக்க செல்கிறார். 25 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டு இரவை கழிக்கிறார்கள்.
அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பிரகாஷ்ராஜ் இறந்து போகிறார். சமூகம், சட்டம், குடும்பம் அனைத்தும் அர்ச்சனாவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறது. அவரை சந்திக்க பிரகாஷ்ராஜின் மனைவியான ரேவதி வருகிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

குறைந்த செலவில் குறைவான கதாபாத்திரங்களையும் லொகேஷன்களையும் கொண்டு அழகான மரபுக்கவிதையை எம்.ஆர்.பாரதி கொடுத்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி மூவருமே போட்டி போட்டு நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் ஒவ்வொரு அசைவிலும் அவர்களது அனுபவமும் பக்குவமும் தெரிகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் நாசரும் தனது பங்குக்கு சிறப்பாக நடித்து பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்.
படத்தின் இன்னொரு கதாநாயகனே இசை தான். கதையை எந்த விதத்திலும் சிதைக்காமல் தேவைப்படும் இடங்களில் மெலிதாக இசைத்து கதையுடன் ஒன்ற வைக்கிறார் அரவிந்த் சித்தார்த். ’இரு விழியில் ஈரமா இதயம் ஒரு பாரமா’ பாடலில் சித்ராவின் குரலில் உருகி போகிறோம். பல காட்சிகளில் மவுனமே உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துகிறது. சிறப்பான பங்களிப்பு.

ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவும் அழகான கவிதை. காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்தை சுவாரசியமாக எடுத்து செல்கிறது. எளிமையான கதை தான். அதை மென்மையாக சொல்லிய விதத்தில் எம்.ஆர்.பாரதி கவனிக்க வைக்கிறார். இந்த தலைமுறையினருக்கு சில லாஜிக் கேள்விகள் எழலாம்.
ஆனால் முந்தைய தலைமுறை நடுத்தர வயதினரின் ஆண் பெண் நட்பு, கண்ணியமான முந்தைய தலைமுறை காதல் என தமிழ் சினிமாவில் அவ்வளவாக பேசப்படாத விஷயங்களை மிக கவனமாக கையாண்டுள்ளார். இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.
மொத்தத்தில் ‘அழியாத கோலங்கள் 2’ பொறுமையுடன் ரசிக்க வேண்டிய படைப்பு.
ஃப்ரோஸன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் ஃப்ரோஸன் 2 படத்தின் விமர்சனம்.
எல்சா, ஆனா இருவரும் அக்கா, தங்கைகள். இவர்கள் சிறுவயதில் இருக்கும் போது இவருடைய தந்தை, பக்கத்தில் இருக்கும் மர்ம காடு பற்றிய சிறிய கதையை கூறுகிறார். மேலும் அந்த காடு தற்போது பனி புகையால் சூழப்பட்டிருப்பதையும் சொல்கிறார்.
எல்சாவும், ஆனாவும் பெரியவர்களாக வளர்கிறார்கள். எல்சாவிற்கு அடிக்கடி மர்மக்குரல் ஒன்று கேட்கிறது. அது என்ன குரல் யாருடயது என்பதை அறிய முயற்சி செய்கிறார். அந்த குரல் பனி புகையால் சூழப்பட்டிருக்கும் மர்ம காட்டில் இருந்து வருவதை அறிந்து அங்கு செல்கிறார் எல்சா.

எல்சாவுடன் தங்கை ஆனா, பனிமனிதன் ஒலாஃப், கிரிஸ்டாஃப் உள்ளிட்டோர் மர்ம காட்டுக்குள் செல்கிறார்கள். ஆனால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எல்சாவிற்கு இருக்கும் அதித சக்தியால் அந்த காட்டுக்குள் அனைவரும் சென்று விடுகிறார்கள்.
அங்கு பல பிரச்சனையில் சிக்கும் எல்சா, இறுதியில் அதிலிருந்து தப்பிக்கிறார்? அந்த குரலின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஃப்ரோஸன் முதல் பாகத்திற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து ஃப்ரோஸன் 2 கதை தொடங்குகிறது. வழக்கமான டிஸ்னி படங்களில் இடம்பெறும் தத்ரூபமான அனிமேஷன், இப்படத்தில் தரமாகவே இருக்கிறது. திரைக்கதையுடன் வரும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. முதல் பாகத்தில் இருந்த உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இல்லை. இருப்பினும் சுவாரஸ்யமாக திரைக்கதை செல்கிறது.
தமிழில் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசனும், ஆனாவிற்கு டிடியும், பனி மனிதன் ஒலாஃப்க்கு சத்யனும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் பாடல்களால் கவர்ந்திருக்கிறார். ஆனாவின் பின்னணி குரல் டிடியை கண்முன் நிறுத்துகிறது. ஆனாவின் பின்னணி குரலுக்கு டிடி சரியான தேர்வு. பனிமனிதன் உருவத்தில் கலகலப்பூட்டியிருக்கிறார் சத்யன். பின்னணி இசையும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஃப்ரோஸன் 2’ குழந்தைகளின் கொண்டாட்டம்.
கிரிசையா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிதா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் விமர்சனம்.
மருத்துவ கல்லூரியில் படிக்கும் துருவ் விக்ரம், எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு குணாதிசியம் கொண்டவர். நாயகி பனிதா அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக சேர்கிறார். அவரைப் பார்த்தவுடன் துருவ் விக்ரம் காதல் வயப்படுகிறார். பனிதா எதுவும் ரியாக்ட் பண்ணாமல் இருக்கிறார். பிறகு இருவரும் வெறித்தனமாக காதலிக்கின்றனர்.
இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, சாதியை காரணம் காட்டி அவரது தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை அறிந்து கோபமடையும் துருவ், பனிதாவை அழைத்துவர அவரது வீட்டிற்கு செல்கிறார். தந்தை ஒருபுறம் காதலன் மறுபுறம் என இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்கும் பனிதாவிடம், முடிவெடுக்க 6 மணிநேரம் அவகாசம் கொடுத்துவிட்டு செல்கிறார் துருவ். இதையடுத்து பனிதா என்ன முடிவெடுத்தார்? தந்தையின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

தெலுங்கில் மெகாஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படத்தில் துருவ், அர்ஜுன் ரெட்டி என்ற கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது, ஆனால், அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு துளிகூட குறை வைக்காமால் தனது அபார நடிப்பின் மூலம் ஆதித்ய வர்மாவாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இது முதல் படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு துருவ்வின் நடிப்பு அபாரம். விக்ரமின் மகனாச்சே இது கூட பண்ணலேனா எப்படி. துருவ்வின் வாய்ஸ் மிகப்பெரிய பிளஸ்.

நாயகி பனிதா சந்து, அழகு பதுமையுடன் நேர்த்தியாக நடித்துள்ளார். காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு அசத்தல். துருவ்வின் நெருங்கிய நண்பராக வரும் அன்புதாசன் குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய டைமிங் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். துருவுக்கு அவருக்கு இடையிலான நட்பு படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது,
மேலும் பிரியா ஆனந்த், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்கும் ராஜா, துருவின் பாட்டியாக நடித்துள்ள லீலா சாம்சன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் கிரிசையா அர்ஜுன் ரெட்டி படத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே ஆதித்ய வர்மாவாக உருவாக்கியுள்ளார். அர்ஜுன் ரெட்டியை போல் இதிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகியிருப்பது மிகப்பெரிய பிளஸ்.

ஏற்கனவே தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் என இரண்டு மொழிகளிலும் வெற்றிகண்டவர் சந்தீப் வங்கா. அவரின் உதவி இயக்குனரான கிரிசையா அதே கதையை தமிழில் ஆதித்ய வர்மாவாக கொடுத்து குருநாதருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். ரதனின் இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.
மொத்தத்தில் ‘ஆதித்ய வர்மா’ ரசிக்க வைக்கிறான்.
மு.ராமசாமி, நாக் விஷால், யோக் ஜேபி நடிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்தின் விமர்சனம்.
மு.ராமசாமி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர். அவர் கோமா நிலையில் வெகுகாலமாக இருப்பதால் அவரை கருணைக்கொலை செய்ய குடும்பம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டின் சில உள்கிராமங்களில் வயது முதிர்ந்த முதியோர்களை தலைக்கூத்தல் என்ற பெயரில் கருணைக்கொலை செய்யும் வழக்கம் உண்டு. அந்த வழக்கப்படி மு.ராமசாமியையும் கொல்ல குடும்பம் துணிகிறது.
இதை அறியும் மு.ராமசாமி அந்த வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்புகிறார். எங்கே செல்வது என்று தெரியாமல் அலையும் அவருக்கு ஒரு கோவிலில் அனாதை சிறுவனாக இருக்கும் நாக் விஷாலின் நட்பு கிடைக்கிறது. 80 வயதை தாண்டிய பெரியவருக்கும் 8 வயதே ஆன சிறுவனுக்கும் இடையே வயது வித்தியாசம் மறந்து ஆத்மார்த்தமான நட்பு உருவாகிறது.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகிறார்கள். இன்னொரு பக்கம் பெரியவரை கொல்ல அவரது குடும்பம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் பெரியவரும் சிறுவனும் பிரிய நேரிடுகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்கும் பெரியவராக மு.ராமசாமி. நம் வீட்டு பெரியவர்களை கண்முன் நிறுத்துகிறார். கொல்ல துணியும் குடும்பத்தினரை பார்த்து அஞ்சுவது முதல், சிறுவன் விஷால் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்பது வரை கருப்பு துரையாக வாழ்ந்து இருக்கிறார். பால்ய கால சினேகிதி வள்ளியை அவர் சந்திக்கும் இடம் நெகிழ வைக்கிறது.

சிறுவன் நாக் விஷாலும் மு.ராமசாமியுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறான். தொடக்கத்தில் மு.ராமசாமியிடம் வில்லத்தனம் காட்டுபவன் போக போக அவருடன் ஒன்றுவது நம்மையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
தலைக்கூத்தல் என்ற துன்பியல் சம்பவத்தை மையக்கருவாக கொண்டாலும் படத்தின் இறுதிக்காட்சி வரை சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழ வைக்கிறார் இந்த கேடி. அன்பின் வலிமையையும் உறவுகளின் அவசியத்தையும் கருப்புதுரை மூலம் உணர்த்தியதற்காகவே மதுமிதாவுக்கு சிறப்பு பூங்கொத்து கொடுக்கலாம். வெறுமனே வசனங்கள் மூலம் கடக்க செய்யாமல் காட்சிகளின் வழியே உணர்வுகளை கூட்டி நெகிழ வைத்து அனுப்புகிறார்.
மனதை உறைய வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிரித்து ரசித்து மகிழ்ந்து நெகிழும் ஒரு அருமையான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மதுமிதா. அவருக்கு பாராட்டுகள்.

தலைக்கூத்தல் என்ற நடைமுறையை கையில் எடுத்தாலும் படத்தின் எந்த காட்சியிலும் போரடிக்காமல் சுவாரசியமான திரைக்கதை, வசனத்தால் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு வசனம், திரைக்கதையில் துணை நின்ற சபரிவாசன் சண்முகத்திற்கும் பாராட்டுகள்.
மெய்யேந்திரன் கெம்புராஜின் ஒளிப்பதிவு கதை நடக்கும் கிராமங்களுக்கே நம்மை கூட்டி செல்கிறது. கார்த்திகேயமூர்த்தியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையாலும் படத்துக்கு வலு சேர்க்கிறார்.
மொத்தத்தில் ‘கேடி என்கிற கருப்புதுரை’ கலக்கல்.
விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள சங்கத்தமிழன் படத்தின் விமர்சனம்.
முருகன் என்ற விஜய் சேதுபதி தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துகொண்டு சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ஒரு பப்பில் ராசி கன்னாவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. அங்கு இருவருக்கும் சிறிய மோதல் ஏற்படுகிறது. புகைப்பட கலைஞரான ராசி கன்னாவிடம் விஜய் சேதுபதி வசிக்கும் பகுதியை புகைப்படம் எடுக்க புராஜெக்ட் கொடுக்கின்றனர்.
அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ராசி கன்னாவின் தந்தை ரவி கிஷன் பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளி. அவர் ராசி கன்னா விஜய் சேதுபதியை காதலிப்பதை அறிந்து ஷாக் ஆகிறார். அவன் பெயர் முருகன் இல்லை சங்கத்தமிழன் என்று சொல்லி டுவிஸ்ட் கொடுக்கிறார். சங்கத்தமிழன் யார்? அவனின் பின்னணி என்ன? அவனை பார்த்து ராசி கன்னாவின் தந்தை அஞ்சுவது ஏன்? என்பதே மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி, இதில் இறங்கி அடித்து மாஸ் ஹீரோக்கள் வரிசையில் சேர்கிறார். கோபமும் ஆவேசமுமான சங்கத்தமிழனாக தன்னை முன்னிறுத்தும் விஜய் சேதுபதி, ஜாலியான, புத்திசாலித்தனமான முருகனாகவும் கலக்கி இருக்கிறார். டயலாக் பேசுவதில் தொடங்கி உடல்மொழி வரை வித்தியாசம் காட்டி இருக்கிறார். படம் முழுக்க அவருக்கு அறிமுக காட்சிகள் தான்.
ராசி கன்னா வழக்கமான கதாநாயகியாக வந்து காதலிக்கும் பணியை செய்கிறார். இன்னொரு கதாநாயகி நிவேதா பெத்துராஜ் காதலிப்பதோடு மட்டும் அல்லாமல் விஜய்சேதுபதிக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். சூரியின் காமெடி படத்தை கலகலப்பாக நகர்த்துகிறது. இரண்டாம் பாதியில் வரும் அந்த தொட்டி ஜெயா காமெடி வயிறை பதம் பார்க்கிறது.

நாசர், ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், லல்லு, ஸ்ரீமன், மைம் கோபி, ஜான் விஜய் ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரங்களாக கமர்சியல் படத்துக்கான வலுவை சேர்க்கிறார்கள். அசுதோஷ் ராணா, ரவி கிஷன் இருவரும் வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியை மாஸாக காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய இயக்குனர் விஜய் சந்தர், திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. விவேக்- மெர்வின் இசையில் கமர்சியல் தூக்கல். பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.

மாஸ் கமர்சியல் படமாக இருந்தாலும் சமகால பிரச்சினையை புத்திசாலித்தனமாக நுழைத்ததால் சங்கத்தமிழன் கைதட்டி ரசிக்க வைக்கிறான்.
மொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து.






