என் மலர்tooltip icon

    தரவரிசை

    சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆக்‌ஷன்’ படத்தின் விமர்சனம்.
    தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவிற்கு ராம்கி, விஷால் என்று இரண்டு மகன்கள். இதில் விஷால் ராணுவ அதிகாரியாக இருக்கிறார். இவருடன் பணி புரிந்து வரும் தமன்னா, விஷாலை ஒரு தலை பட்சமாக காதலித்து வருகிறார். ஆனால், விஷாலோ ராம்கியின் மனைவியான சாயாசிங்கின் தங்கை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறார்.

    ராம்கியை தன்னுடைய அரசியல் வாரிசாக நிறுத்துகிறார் பழ.கருப்பையா. தேர்தல் வரும் நிலையில், மத்தியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இதற்காக அந்த கட்சி தலைவர் சென்னைக்கு வந்து ஒரு மேடையில் பேசும்போது, குண்டு வெடித்து இறக்கிறார்.

    ஆக்‌ஷன் விமர்சனம்

    இவர் இறப்பதற்கு ராம்கி தான் காரணம் என்று பழி விழுகிறது. இந்த பழியை போக்க விஷால் களத்தில் இறங்குகிறார். இறுதியில் இதற்கு காரணமானவர்களை விஷால் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் விஷால், படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் ஆக்‌ஷனில் கலக்கி இருக்கிறார். படம் முழுவதும் ஓடுகிறார், தாவுகிறார், பறக்கின்றார். இவருடன் படம் முழுவதும் பயணிக்கிறார் நடிகை தமன்னா. இதில் இவருக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தமன்னா. மற்றொரு நடிகையாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரியதாக வாய்ப்பு இல்லை. 

    ஆக்‌ஷன் விமர்சனம்

    ஒரு சில இடங்களில் யோகிபாபுவின் காமெடி கைகொடுத்திருக்கிறது. பழ.கருப்பையா, ராம்கி, கபீர் சிங், சாயாசிங் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    சுந்தர்.சி-யின் வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். சுந்தர்.சி படங்களுக்கு சென்றால் காமெடி நிச்சயம் என்று எதிர்ப்பார்த்து செல்பவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம். லாஜிக் மீறல்கள், படத்தின் நீளம் ஆகியவற்றை கவனித்திருக்கலாம். சில காட்சிகள் கவர்ந்தாலும், பல காட்சிகள் சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி 30 நிமிட காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    ஆக்‌ஷன் விமர்சனம்

    ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் டுலேவின் ஒளிப்பதிவு. வெளிநாடுகளின் இடங்கள் பலவற்றை அழகாக காண்பித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ சற்று குறைவு.
    யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் வசித்து வருகிறார் யோகிபாபு. உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி, கிடைக்காத சூழ்நிலையில் இமான் அண்ணாச்சி நடத்தும் கேட்டரிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் வேலை தேடி சென்னைக்கு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வேண்டும் என்று இமான் அண்ணாச்சியிடம் கேட்கிறார் யோகிபாபு.

    இந்த சூழலில் நாயகிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கேட்டரிங் பணி இமான் அண்ணாச்சிக்கு கிடைக்கிறது. பெரிய ஆர்டர் கிடைத்துள்ளதால் யோகி பாபுவின் நண்பர்களையும் வேலைக்கு சேர்த்துக்கொண்டு நாயகி வீட்டுக்கு போய் சேருகிறார்கள். அங்கு டெக்கரேஷன் வேலைக்கு வரும் மயில்சாமியும், தாடி பாலாஜியும் வருகின்றனர்.

    பட்லர் பாலு

    நாயகியை ஒருதலையாக காதலித்த வில்லன், திருமணத்துக்கு முன் நாயகியை கடத்த திட்டமிட்டுகிறார். கடத்துவதற்காக ரோபோ சங்கர் உள்ளிட்ட இரண்டு அடியாட்களை அனுப்பி வைக்கிறார். இவர்களுக்கு முன் யோகி பாபுவின் நண்பர்களான நாயகன், நாயகியை கடத்திச் செல்கிறான். இதனால் நாயகியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து தேடுகிறார்கள். இறுதியில் நாயகியை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்தியது ஏன்? நாயகியை தேடி கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகன், நாயகிகள் இருந்தாலும் முதல் பாதியில், யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி பட்டாளங்கள் படத்தை நகைச்சுவையாக கொண்டு செல்கிறார்கள். இரண்டாம் பாதியில் நாயகன், நாயகிகளின் காதல் காட்சிகள் சோர்வை ஏற்படுத்தினாலும் இறுதியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். 

    பட்லர் பாலு

    காமெடி நட்சத்திரங்களை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நகைச்சுவையை மட்டுமே மையமாக அதில் காதல், சுவாரஸ்யம் ஆகியவைகளை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சுதிர்.எம்.எல்.

    கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஒளிப்பதிவில் பால் லிவிங்க்ஸ்டன் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘பட்லர் பாலு’ காமெடி கலாட்டா.
    சீமான், வசி, பூஜாஸ்ரீ நடிப்பில் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள தவம் படத்தின் விமர்சனம்.
    பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார். அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார். 

    இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் வசியின் தந்தையும் அந்த ஊரின் விவசாய போராளியுமான சீமான் மகன் கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. சீமான் கொல்லப்பட என்ன காரணம்? பூஜாஸ்ரீக்கும் வசிக்கும் என்ன தொடர்பு என்ன? பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடனான பூர்வீக தொடர்பு என்ன? என்பதை படத்தின் இரண்டாம் பாதி விளக்குகிறது. 

    தவம் விமர்சனம்

    அறிமுக நாயகன் வசி பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கிறார். நடிப்பில் அறிமுகம் என்பது தெரியவில்லை. கிராமத்து கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்துகிறார். பூஜாஸ்ரீக்கு கதையை தாங்கும் வேடம். சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகனே சீமான் தான். இடைவேளையில் இவருக்கு தரப்படும் பில்டப்புகளுக்கு தனது கம்பீரமான நடிப்பால் நியாயம் சேர்க்கிறார். விவசாயத்தின் அருமை பற்றி சீமான் பேசும் வசனங்கள் இன்றைய சமூகத்துக்கு அவசியமான பாடங்கள். சீமான் வரும் காட்சிகள் படத்தை வலுவாக்குகின்றன. 

    அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். வில்லனாக வரும் விஜயானந்தும் குறை வைக்கவில்லை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கவும் முணுமுணுக்கவும் வைக்கின்றன. வேல்முருகனின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரம்மியம். எஸ்.பி.அகமது படத்தின் நீளத்தை சிறிது குறைத்து இருக்கலாம். 

    தவம் விமர்சனம்

    எளிமையான கிராமத்து கதையில் சீமானை வைத்து வலிமையான வசனங்கள் மூலம் விவசாயத்தின் பெருமையையும் அவசியத்தையும் பேச வைத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி உருகவைக்கிறது. விவசாயத்தின் வலிமையை உணர்த்திய விதத்தில் தவம் கவனம் பெறுகிறது.

    மொத்தத்தில் ’தவம்’ விவசாயப்புரட்சி
    ஸ்ரீ பிரியங்கா, சீமான், கோரிப்பாளையம் ஹரிஷ் நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள மிக மிக அவசரம் படத்தின் விமர்சனம்.
    பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் நிறுத்தி விடுகிறார். 

    நேரம் ஆக ஆக ஸ்ரீபிரியங்காவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. ஆனால் முத்துராமனின் பழிவாங்கலால் அவரால் சிறு ஓய்வு கூட எடுக்க முடியாத சூழல். சக போலீஸ்காரர்களான ஈ.ராம்தாஸ், வீகே.சுந்தர், சரவண சக்தி ஆகியோராலும் எதுவும் செய்ய முடியாத சூழல். கடும் உடல் உபாதைக்கு ஆளாகும் ஸ்ரீ பிரியங்கா என்ன ஆகிறார் என்பதே கதை.

    மிக மிக அவசரம்

    வேறு எந்த நாயகியும் ஏற்றுக்கொள்ள தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா. முதல் பாதியில் சாதாரணமாக தொடங்குபவர் நேரம் செல்ல செல்ல தனது அவஸ்தைகளை ரசிகர்களிடம் தன் நடிப்பால் கடத்துகிறார். விருதுக்கு உரிய நடிப்பு. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஸ்ரீ பிரியங்காவின் துன்பத்தை எண்ணி நம் கண்கள் கலங்குகின்றன. தமிழ் பெண்ணான ஸ்ரீ பிரியங்கா ஒட்டுமொத்த பெண் போலீசுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.

    ஸ்ரீ பிரியங்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் இன்ஸ்பெக்டராக வழக்கு எண் முத்துராமன். பார்வையாலேயே வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார். அவரது சதி செயல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. சீரியசான படத்தை கலகலப்பாக நகர்த்துவது ஈ.ராம்தாஸ் தான். சக போலீஸ்காரராக தனது ஒருவரி பன்ச் வசனங்களால் கைதட்ட வைக்கிறார். இயல்பான நடிப்பு அனுபவத்தை காட்டுகிறது. 

    மிக மிக அவசரம்

    டிரைவராக வரும் வீகே.சுந்தர் தனது நடிப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். சரவண சக்தியும் சிரிக்க வைக்கிறார். சக போலீசுக்கே உதவ முடியாத நிலையை மூவருமே இயல்பாக பிரதிபலிக்கிறார்கள். ஸ்ரீ பிரியங்காவின் காதலராக ஹரிஷ் குமாரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். காதலிக்காக ஆம்புலன்சை எடுக்க முயற்சிக்கும்போது வேலை தடுக்கவே கடமைக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் நெகிழ வைக்கிறார். 

    சீமான் கம்பீரமான நடிப்பால் கவர்கிறார். அரவிந்தன் அகதிகளின் நிலையை விளக்கும்போது வலிக்கிறது. லிங்கா, வெற்றிகுமரன், குணசீலன், பேபி சனா ஜெகன் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளார்கள். 

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை அதன் பின்னணியுடன் சொல்லும் படங்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெறும். அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண் காவலர்கள் தங்கள் பணியில் படும் அவதிகளையும் சந்திக்கும் பிரச்சினைகளையும் தனது முதல் படத்திலேயே அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி. இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு பாராட்டுகள். 

    மிக மிக அவசரம்

    இஷானின் இசையும் பாலபரணியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. எளிதில் கடந்து செல்லும் பெண் போலீசாரின் வாழ்க்கைக்குள் நுழைந்துவந்த உணர்வை கதை வசனம் எழுதிய ஜெகனும் திரைக்கதை எழுதி இயக்கிய சுரேஷ் காமாட்சியும் ஏற்படுத்தி இருக்கின்றனர். 

    முக்கிய பாலங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் போலீஸ்காரர்களை பார்த்தால் நாம் இயல்பாக கடந்து செல்வோம். இனி அப்படி கடக்க முடியாது. இது ஒன்றே இந்த மிக மிக அவசரம் நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லும் உண்மை.

    மொத்தத்தில் மிக மிக அவசரம் - மிக மிக அவசியமான ஒரு படைப்பு.
    டிம் மில்லர் இயக்கத்தில் அர்னால்டு சுவர்ஸ்னெகர், மெக்கன்சி டேவிஸ் நடிப்பில் வெளியாகியுள்ள டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தின் விமர்சனம்.
    டெர்மினேட்டர் வகை படங்கள் ஹாலிவுட்டில் 1984ஆம் ஆண்டு முதல் வெளியாகின்றன. முதல் பாகத்தில் இருந்தே டெர்மினேட்டர் பாகங்களின் ஆஸ்தான நடிகராக இருந்து வந்த அர்னால்டு இந்த படத்துடன் விடை பெறுகிறார். அதனாலேயே டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. 

    படம் தொடங்கிய முதல் காட்சியே மனித உடலும் இயந்திர உடலும் இணைந்த சைபார்க் மெக்கன்சி டேவிஸ் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்து இறங்குகிறது. இன்னொரு இடத்தில் முழுக்க முழுக்க எந்திரமான காப்ரியல் லூனா தரை இறங்குகிறது. இந்த இயந்திரத்துக்கு நடாலியாவை கொல்வதுதான் இலக்கு. தன் அண்ணனுடன் அமைதியாக வாழ்ந்து வரும் நடாலியா இந்த இயந்திரத்தால் தன் அண்ணன், அப்பாவை இழக்கிறார். 

    டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

    நடாலியாவை காப்பாற்றுவதற்காக தான் மெக்கன்சி 2042ஆம் ஆண்டில் இருந்து தற்காலத்துக்கு வந்து இருக்கிறார். காப்ரியலுடன் போரிட்டு நடாலியாவை காப்பாற்றுகிறார். நடாலியாவுக்கு பிறக்க போகும் குழந்தை தான் இந்த உலகத்தை இயந்திரங்களின் ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற இருக்கிறது. எனவே தான் இந்த போர். நடாலியாவை காப்பாற்ற முன்னாள் இயந்திரங்களான அர்னால்டும் லிண்டாவும் உதவுகிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி அடைந்ததா? என்பதே கதை.

    கதையின் நாயகி மெக்கன்சி டேவிஸ் தான். தரை இறங்கியது முதல் இறுதிக்காட்சியில் நடாலியாவை காப்பாற்ற உயிரை விடுவது வரை படத்தை தாங்கும் கதாபாத்திரம். ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு உதவும் லிண்டாவும் அர்னால்டும் சரியான தேர்வுகள். அர்னால்டை படம் முழுக்க எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். இரண்டாம் பாதியில் வரும் அர்னால்டு சில காட்சிகளே வருகிறார். கிளைமாக்ஸ் காட்சி அவரது ரசிகர்களுக்கான விருந்து. 

    டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

    வில்லன் இயந்திரமாக வரும் காப்ரியல் பார்வையிலேயே வெறுப்பை வரவைக்கிறார். 2 உருவங்களாக பிரிந்து மனிதனாகவும் அருவமாகவும் அவர் சண்டையிடும் காட்சிகள் கிராபிக்ஸ் கலக்கல். முந்தைய டெர்மினேட்டர் வரிசை படங்களை பார்த்தவர்களுக்கு எளிதில் புரியும் கதை. ஆக்‌ஷன் காட்சிகளும் சேசிங் காட்சிகளும் கிராபிக்சில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் குறைவுதான். 

    கேஜிஎஃப் படத்தின் மூலம் வசனங்களில் கவர்ந்த அசோக் டெர்மினேட்டரையும் தமிழ் படுத்தி இருக்கிறார். பொதுவாக தமிழில் டப் செய்யப்படும் ஆங்கில கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் இருக்கும் மிகைத்தனம் இதில் இல்லை. பதிலாக சில புத்திசாலித்தன வசனங்கள் இருக்கின்றன. அசோக்கிற்கு பாராட்டுகள். 

    டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்

    129 நிமிட படத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஜேம்ஸ் கேமரூனின் திரைக்கதையில் ஆக்‌ஷன் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் டெர்மினேட்டர் வரிசை ரசிகர்களையும் அர்னால்டு ரசிகர்களையும் இந்த டெர்மினேட்டர் ஏமாற்றாமல் ரசிக்க வைக்கிறான். 

    மொத்தத்தில் ‘டெர்மினேட்டர்’ ஆக்‌ஷன் விருந்து.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கைதி படத்தின் விமர்சனம்.
    போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை உணர்ந்த நரேன். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை ஒரு இடத்தில் பதுக்கி வைக்கிறார். இதில் தொடர்புடைய கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். இதை அறிந்த ஐ.ஜி., போதை பொருட்களை மீட்க அந்த கும்பல் எதையும் செய்ய தயங்காது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நரேன் குழுவினருக்கு அறிவுரை கூறுகிறார். 

    கைதி

    நரேன் குழுவினர் தான் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர் என்பதை அறிந்த வில்லன்கள், அதனை மீட்டுவர அடியாட்களை அனுப்புகிறது. அந்த சமயத்தில் ஜெயிலில் இருந்த கார்த்தி ஆயுள் தண்டனை முடிந்து தன்னுடைய மகளை பார்க்க வேண்டும் என வெளியில் வருகிறார். ஆனால் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.

    இந்த சூழலில், ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார். இதில் நரேன் டீமும் கலந்து கொள்கிறது. அப்போது போதை மருந்து கலந்த மதுவை அருந்தியதால் நரேன் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் பிரச்சனையில் சிக்குகிறார்கள். இதிலிருந்து மீள அவர்களுக்கு கார்த்தியின் உதவி தேவைப்படுகிறது. தங்களுக்கு உதவி செய்தால் தான், குழந்தையை பார்க்க அனுமதிப்போம் என கார்த்தியை மிரட்டுகிறார் நரேன். இதையடுத்து நரேனுக்கு கார்த்தி உதவினாரா? போதைப்பொருள் கடத்தல் கும்பலை நரேன் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

    கைதி

    படம் முழுவதையும் தனி ஆளாக தாங்கி நிற்பது கார்த்தி தான். ஆயுள் தண்டனையை முடித்துக்கொண்டு தனது மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கும் தந்தையாக நடிப்பில் மிளிர்கிறார் கார்த்தி. நரேன் போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கார்த்தியின் மகளாக நடித்துள்ள பேபி மோனிகா கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்பா-மகள் சென்டிமென்ட் அருமையாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

    படத்தின் இரண்டாவது ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான். பாடல்கள், ஹீரோயின் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் ஆவலை தூண்டிவிடும் வகையில் திரைக்கதை அமைத்து சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத போதும் போரடிக்காத வகையில் படத்தை எடுத்துள்ளார். 

    கைதி

    பாடல்கள் எதுவும் இல்லாத போதும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல இருக்கிறது. அனைத்து சீன்களையும் சண்டை காட்சிகளையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

    மொத்தத்தில் ‘கைதி’ தீபாவளி சரவெடி.
    அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் விமர்சனம்.
    சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய். 

    விஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா. 

    பிகில்

    இந்த சூழலில் விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது. 

    ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.

    பிகில்

    ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார். 

    இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்.  இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார். 

    பிகில்

    விஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

    இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை

    விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.

    பிகில்

    பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். 

    நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம். 

    படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்.
    வைசாக் இயக்கத்தில் மம்முட்டி, ஜெய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ,மதுரராஜா, படத்தின் விமர்சனம்.
    கேரளாவில் தனித்தீவு போல உள்ள ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார் ஜெகபதி பாபு. அவரது ஆட்கள் அங்குள்ள பள்ளி அருகில் மதுபானக்கடை நடத்தி குழந்தைகளுக்கு தொல்லை தருகிறார்கள். இதை விசாரிக்க பள்ளி நிர்வாகம், மம்முட்டியின் தந்தையான நெடுமுடி வேணுவை அனுப்பி வைக்கிறது. ஆனால் அவரை அந்த கும்பல் மிரட்டி பொய்யான அறிக்கை கொடுக்க வற்புறுத்துகிறார்கள்.

     இந்த நேரத்தில் மம்முட்டியின் வளர்ப்பு தம்பியான ஜெய் அந்த ஊருக்கு வந்து அவர்களை தட்டிக்கேட்கிறார். அவர்மீது பொய்வழக்கு போட்டு ஜெயிலில் அடைக்கிறார்கள். இந்த சூழலில் மதுர ராஜாவான மம்முட்டி, தனது ஆட்களுடன் அந்தத் தீவுக்கு வந்து கோதாவில் இறங்குகிறார். இதையடுத்து மம்முட்டி ஜெய்யை மீட்டாரா? ஜெகபதி பாபுவின் பிடியிலிருந்த தீவை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

    மதுரராஜா விமர்சனம்

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற சூப்பர் ஹிட் படமான 'போக்கிரி ராஜா'வின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த 'மதுர ராஜா'. இரண்டு படங்களுக்கும் பத்து ஆண்டு இடைவேளை இருந்தாலும் மம்முட்டி தோற்றத்தில் எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தரும். தனி ஒரு ஆளாக சண்டைக்காட்சிகளில் அதிரவைக்கிறார் மம்முட்டி. வழக்கம் போல தப்பும் தவறுமாக அவர் பேசும் ஆங்கிலம் மொத்தப்படத்திற்கும் நகைச்சுவையுடன் நகர்த்துகிறது. 

    மதுரராஜா விமர்சனம்

    படத்தின் மற்றொரு கதாநாயகன் ஜெய். சண்டைக்காட்சி, சன்னி லியோனுடன் ஐட்டம் டான்ஸ் என அறிமுக படத்திலேயே அவருக்கான எந்த முக்கியத்துவமும் குறையாமல் சகலமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வலம் வரும் ஜெகபதி பாபு இந்த படத்திலும் வழக்கம் போல தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மஹிமா நம்பியார், பூர்ணா, அனுஸ்ரீ ரேஷ்மா ராஜன் என ஒன்றுக்கு நான்கு கதாநாயகிகள் அழகு பதுமையாக வந்து கவர்கிறார்கள். 

    ஆர்.கே.சுரேஷ் வில்லத்தனத்தில் வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் பரிதாபம் அள்ளிக் கொள்கிறார் நரேன். இசையமைப்பாளர் கோபிசுந்தர் தன் இசையால் மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார். ஒரே ஒரு தனித்தீவில் மொத்த படத்தையும் அழகியலோடு படமாக்கி முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார். 

    மதுரராஜா விமர்சனம்

    இடைவேளை வரை படம் போவதே தெரியாமல் கதையை நகர்த்தியிருக்கும் இயக்குனர் வைசாக் இடைவேளைக்கு பிறகு தேர்தல், போட்டி என படத்தின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்திருக்கிறார். முதல் பாகமான போக்கிரி ராஜா படத்துடன் ஒப்பிடும்போதும், மதுர ராஜா சற்று தொய்வையே ஏற்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் ’மதுர ராஜா’ வேகம் குறைவு.
    ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் ஆகியோர் நடிப்பில் பார்த்த சாரதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘காவியன்’ படத்தின் விமர்சனம்.
    தமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும் பயிற்சி அளிக்கிறார். நம்ம ஊர் போலீஸ் அவசர உதவி எண் 100 போல், அங்கு 911 என்ற நம்பர் செயல்பட்டு வருகிறது.

    இந்த கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார். இந்நிலையில், மர்ம நபரால் பாதிக்கப்படுவதாக ஒரு பெண் 911க்கு போன் செய்கிறார். இதை கேட்கும் ஸ்ரீதேவி, அவருக்கு உதவ நினைக்கிறார். ஆனால், முடியாமல் அந்த பெண் மர்ம நபரால் கடத்தப்பட்டு இறந்து போகிறார். இதனால் வருத்தப்பட்டு வேலையை விட்டு செல்கிறார் ஸ்ரீதேவி குமார்.

    காவியன் விமர்சனம்

    இதையறியும் ஷாம், ஸ்ரீதேவியை சமாதானம் செய்து மீண்டும் வேலையில் சேர வைக்கிறார். சில தினங்களில் மற்றொரு நாயகியாக இருக்கும் ஆத்மியா, அதே மர்ம நபரால் பாதிக்கப்படுகிறார். அதே போல் ஸ்ரீதேவிக்கு போன் வர, ஷாம் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

    இறுதியில் ஆத்மியாவை ஷாம் காப்பாற்றினாரா? பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காவியன் விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாம், புறம்போக்கு, தில்லாலங்கடி ஆகிய படங்களை தொடந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வழக்கமான ஷாமை மட்டுமே பார்க்க முடிகிறது. ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இலங்கை பெண்ணாக நடித்திருக்கும் ஆத்மியாவை காரிலேயே அதிக நேரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வில்லனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் பரிதாபம் பட வைக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாமுடன் பயணிக்கும் ஸ்ரீநாத்தின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதற்கான வாய்ப்பும் சரியாக அவருக்கு கொடுக்க பட வில்லை.

    காவியன் விமர்சனம்

    நல்ல கிரைம் கதையை, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்தசாரதி. ஆனால், நீண்ட நேரம் கதை செல்வதுபோல் அமைத்திருக்கிறார். அதுபோல் சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை செல்கிறது. இதில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

    மொத்தத்தில் ‘காவியன்’ சாதாரணமானவன்.
    அறிமுக இயக்குநர் பிரதீப் கிளிக்கர் இயக்கத்தில் மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பெளவ் பெளவ்’ படத்தின் விமர்சனம்.
    சிறுவன் மாஸ்டர் அஹான், இவர் தனது பெற்றோரை விபத்தில் இழந்து விடுகிறான். பின்னர் இவன் தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். இவனுக்கு எதிர்வீட்டில் இருக்கும் சிவா, தேஜஸ்வி என்கிற புதுமணத்தம்பதி வசித்து வருகிறார்கள். சிறுவன் அஹான் பெரும்பாலும் இவர்களது வீட்டில் தான் இருப்பான். சிறுவனுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. அவன் பள்ளிக்கு செல்லும் வழியில் தெரு நாய் ஒன்று இவரை தினமும் விரட்டுகிறது. 

    இதனால் கோபமடைந்த சிறுவன், அந்த நாயை பழிவாங்க குட்டி நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறான். சிறுவன் நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறான். ஒருகட்டத்தில் சிறுவர்கள் இருவர் ஆற்றில் அடித்து செல்வதை பார்த்த அந்த நாய், தன் உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றிவிடுகிறது. இருப்பினும் எதிர்பாராத விதமாக அந்த நாய் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இறுதியில் நாய் உயிர் பிழைத்ததா? சிறுவன் நாயை கண்டுபிடித்தானா? என்பதே மீதிக்கதை.

    பெளவ் பெளவ்

    சிறுவன் மாஸ்டர் அஹான், பெரும்பாலான காட்சிகளில் கேமராவை இவர் தனியாகவே சந்தித்திருக்கிறார். இருந்தபோதிலும் பார்ப்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தாதவாறு இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இவர் நாயுடன் பழகும் காட்சிகளை சொல்லலாம். 

    சிறுவன் அஹானை தொடர்ந்து அதிக காட்சிகளில் வருவது நாய்கள் தான். அதையும் இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். மேலும் புதுமணத் தம்பதிகளாக நடித்துள்ள சிவா, தேஜஸ்வி குறைவான காட்சிகளில் வந்தாலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சத்யன், ஷர்மிளா, ஆரோக்யராஜ், நாஞ்சில் வி ராம்பாபு, ஜேன், புலிக்குட்டி ஆகியோரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். 

    பெளவ் பெளவ்

    இயக்குனர் பிரதீப் கிளிக்கர், நடிகர், நடிகைகளை முன்னிலைப்படுத்தி படங்களை எடுத்து வரும் இயக்குனர்களின் மத்தியில் சிறுவனுக்கும் நாய்க்கும் இடையேயான பாசப் போராட்டத்தை வைத்து திரைக்கதை அமைத்துள்ள விதம் சிறப்பு. காமெடி போன்ற கமர்ஷியல் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. மார்க் டி மியூஸ் மற்றும் டென்னிஸ் வல்லபனின் இசை ஓகே ரகம் தான். அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் ‘பெளவ் பெளவ்’ புதுமையான படைப்பு.
    ஆங் லீ இயக்கத்தில் வில் ஸ்மித் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெமினி மேன்’ திரைப்படத்தின் விமர்சனம்.
    டிஐஏ ஏஜெண்டாக இருக்கும் வில் ஸ்மித், தீவிரவாதிகளை அளிக்கும் நபராக இருந்து வருகிறார். மிகவும் திறமையான இவர் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற விரும்புகிறார். இந்நிலையில், இறுதியாக தான் சுட்டுக் கொன்றவர் தீவிரவாதி இல்லை என்பதை நண்பர் மூலம் அறிந்துக் கொள்கிறார்.

    ஓய்வு முடிவை அறிவித்தவுடன் வில் ஸ்மித்தை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இதில் வில் ஸ்மித்துக்கு நிகராக ஒருவன் அவரை எதிர்த்து சண்டை போடுகிறான். அவர் யார் என்று பார்க்க, வில் ஸ்வித்தின் உருவம் போல் மிகவும் இளமை உள்ளவனாக இருக்கிறான். 

    ஜெமினி மேன் விமர்சனம்

    இறுதியில் வில் ஸ்மித்தை கொலை செய்ய வந்த அந்த நபர் யார்? எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    வயதான ஏஜெண்டாகவும் இளமையான ஜூனியராகவும் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில் ஸ்மித். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்யும் இவர், இந்த படத்திலும் கச்சிதமாக கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இவரது நடிப்பு ஒன்றே படத்திற்கு பெரிய பலம்.

    ஜெமினி மேன் விமர்சனம்

    லைப் ஆஃப் பை போன்ற படங்களை எடுத்த ஆங் லீ இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை, பின்னர் மெதுவாக செல்கிறது. சுவாரஸ்யமே இல்லாமல் காட்சிகள் நகர்ந்தாலும், வில் ஸ்மித் மோதிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. மிகவும் எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்படும்.

    டியான் பீபேவின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளை ரசிக்க வைக்கிறது. லார்ன் பால்ஃப்பின் பின்னணி இசை சிறப்பு.

    மொத்தத்தில் ‘ஜெமினி மேன்’ காமன் மேன்.
    ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, முனீஸ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் பெட்ரோமாக்ஸ் படத்தின் விமர்சனம்.
    சென்னையில் பிறந்து வளர்ந்து மலேசியாவில் செட்டில் ஆனவர் பிரேம். இவரது தாய், தந்தை சுற்றுலா சென்றபோது கேரள வெள்ளத்தில் சிக்கி இறந்துவிடுகிறார்கள். இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டை விற்க முயற்சிக்கிறார் பிரேம். ஆனால் அங்கே வசிக்கும் தமன்னா உள்ளிட்ட 4 பேய்கள் வீட்டை விற்க விடாமல் தடுக்கின்றன. வீடு வாங்க வருபவர்களை பயமுறுத்தி அனுப்பவே வீட்டை விற்கும் முயற்சி தடைபடுகிறது. 

    இந்த சூழலில் பார் ஒன்றில் வேலை பார்க்கும் முனீஸ்காந்த் வீட்டில் பேய் இல்லை என்று நிரூபித்து விற்று தருவதாக உறுதி தருகிறார். அவசர பண தேவை உள்ள காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் மூவரையும் இந்த பணிக்கு சேர்த்துக்கொள்கிறார். இவர்கள் நால்வரும் பேய் வீட்டில் சில நாட்கள் தங்குகின்றனர். இதன்பின் நால்வருக்கும் என்ன ஆனது? அந்த 4 பேய்களும் யார்? பிரேமின் பெற்றோர் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு படம் பதில் தருகிறது.

    பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

    சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பேயை வைத்து நிறைய காமெடி செய்துவிட்டார்கள். பேய் படம் என்றாலே வழக்கமான கதை என்று ஆகிவிட்டது. பெட்ரோமாக்ஸ் படத்தின் கதையும் வழக்கமான கதை தான். ஆனால் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் திரைக்கதை, வசனத்தால் படம் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு படமாக மாறி இருக்கிறது. இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கும் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்திரநாத்துக்கும் பாராட்டுகள். 

    தமன்னா படத்தின் நாயகி என்றாலும் துணை கதாபாத்திரம் தான். மற்ற கதாபாத்திரங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம். இருந்தாலும் பிற கதாபாத்திரங்கள் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை. ஆனால் காட்சிகளில் மிகவும் அழகாக தெரிகிறார் தமன்னா. 

    பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

    படத்தின் கதாநாயகனே முனீஸ்காந்த் தான். நெஞ்சு வலி காரணமாக பயம் வரும்போது அவர் சிரிக்கும் காட்சிகள் சிரிப்பூட்டுகின்றன. அவருடன் சேர்ந்து காளி வெங்கட், திருச்சி சரவணகுமார், சத்யன் மூவரும் வயிறு குலுங்க வைக்கிறார்கள். முதல் பாதியை விட இரண்டாம் பாதி வயிறை அதிகம் பதம் பார்க்கிறது. பேய்களை நால்வரும் வெறுப்பேற்றும் காட்சிகளில் சிறுவர்களாகவே மாறி விடுகிறோம். 

    யோகி பாபு, மைனா நந்தினி வரும் காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன. கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் தனது குணச்சித்திர கதாபாத்திரத்தால் தனித்து தெரிகிறார். பிரேம், மைம் கோபி, பேபி மோனிகா, பேய் கிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். 

    பெட்ரோமாக்ஸ் விமர்சனம்

    டேனி ரேமண்டின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஜிப்ரானின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. லியோ ஜன பலைன் படத்தொகுப்பும் கச்சிதம். தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றவாறு ரோகினும் சுரேந்திரநாத்தும் திரைக்கதையை மாற்றி இருக்கிறார்கள். 

    வசனங்களும் நன்றாக சிரிக்க வைக்கின்றன. வழக்கமாக பேய் படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்களும் பிளாஷ்பேக் காட்சியும் மட்டும் தான் சின்ன சின்ன குறைகள். நீண்ட நாள் கழித்து 2 மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஒரு நல்ல கருத்தையும் சொல்லி அனுப்புகிறது இந்த பெட்ரோமாக்ஸ்.

    மொத்தத்தில் “பெட்ரோமாக்ஸ்” சிரிப்பு விருந்து.  
    ×