என் மலர்tooltip icon

    தரவரிசை

    நட்டு தேவ் இயக்கத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பப்பி’ படத்தின் விமர்சனம்.
    கல்லூரி மாணவனாக இருக்கும் நாயகன் வருண், வகுப்பறையில் வீடியோ பார்த்த குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். வருண் வீட்டிற்கு மேலே குடிவருகிறார் நாயகி சம்யுக்தா. இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நண்பர் யோகிபாபுவின் அறிவுரைப்படி சம்யுக்தாவிடம் காதலை சொல்லுகிறார் வருண்.

    நாயகியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் வருணுக்கு, அந்த சூழ்நிலையும் அமைகிறது. இருவரும் ஒன்றாகி சில நாட்களில் சம்யுக்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்கிறார். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று நினைக்கும் இவர்கள் எப்படி இந்த சூழ்நிலையை சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பப்பி விமர்சனம்

    பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த வருண், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட், நடனம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க இவரை சுற்றியே கதை நகர்வதால் அதை உணர்ந்து திறம்பட நடித்திருக்கிறார். நாய் மீதான செண்டிமெண்ட் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார்.

    நாயகி சம்யுக்தாவிற்கு பொருப்பான கதாப்பாத்திரம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். வருணின் நண்பராக வரும் யோகிபாபு படம் முழுவதும் பயணிக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், கண்டிப்பான அப்பாவாக வரும் மாரி முத்து ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    பப்பி விமர்சனம்

    இளைஞர்கள் இளம் பெண்களுடன் பழக ஆசைப்பட்டு, காதல், அதைத் தொடர்ந்து கர்ப்பமாக்குதல், பின்னர் அதை கலைக்க மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஒரு உயிரை கொல்வது மிகவும் தவறு. இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் ஒரு ஆணும் பெண்ணும் கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நட்டு தேவ். இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி விழிப்புணர்வு படமாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார்.

    தரண் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு கலர்ப்புல்லாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பப்பி’ இளைஞர்களுக்கு அறிவுரை.
    சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் சாய் சேகர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அருவம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறையில் அதிகாரியாக இருக்கிறார். உணவில் கலப்படம் செய்பவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கிறார் சித்தார்த். அதே ஊரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் நாயகி கேத்ரின் தெரசா. இவருக்கு நுகர்வு சக்தி கிடையாது. இதனால், ஒரு விபத்தில் தாய் இழக்கிறார். சமூக சேவையும் செய்து வரும் கேத்ரின் தெரசாவை சித்தார்த் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

    இந்நிலையில், வேலையில் மும்முரமாக இருக்கும் சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் கபீர் சிங், மதுசூதனன், கந்தகுமார், சில்வா அகியோர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களால் நாயகன் சித்தார்த் கொல்லப்படுகிறார். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்குகிறார்.

    அருவம் விமர்சனம்

    ஒரு எறும்பு கூட கொல்ல கூடாது என்று குறிக்கோளுடன் இருக்கும் கேத்ரின் தெரசா, வில்லன்களை எப்படி பழி வாங்கினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நேர்மையான கண்டிப்புடன் செயல்படும் அதிகாரியாக நடிப்பில் பளிச்சிடுகிறார். இறந்த பிறகு ஆவியாக வந்து ஸ்கோர் செய்ய முடியவில்லை. 

    நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா முதல் பாதியில் சமூக சேவகியாக மனதில் பதிகிறார். ஆனால், பிற்பாதியில் வில்லன்களை கதாபாத்திரம் அவருக்கு செட் ஆகவில்லை. காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் சதீஷ். குறைந்தளவே பேசி ரசிக்க வைத்திருக்கிறார்.

    அருவம் விமர்சனம்

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கபீர் சிங். மதுசூதனன், கந்தகுமார், சில்வா, ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    ரொம்ப பழைய கதையை தூசி தட்டி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சாய் சேகர். படத்தை முழுவதும் பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும். உணவில் கலப்படம் செய்வது மிகப்பெரிய தவறு என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். சிகரெட் பிடிப்பது கேடு என்று சொல்வதை போல, உணவில் கலப்படம் செய்வதை தடுக்காவிட்டால், நாளடையில் பிஸ்கெட் சாப்பிட்டால் கேடு, அரிசி சாப்பிட்டால் கேடு என்ற நிலைமைக்கு சென்று விடுவோம் என்பதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். இந்த கருத்துக்கு சித்தார்த் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். 

    தமன் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவில் ஏகாம்பரம் கவனிக்க வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘அருவம்’ சுவாரஸ்யம் குறைவு.
    ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் சந்திரமௌலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘100 சதவிகிதம் காதல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் முதலிடம் பெறுபவராக இருக்கிறார். இதனால் நம்பர் 1 என்பது இவருக்கு ஒரு போதையாகவே மாறிவிடுகிறது. கல்லூரியிலும் இவர்தான் முதலிடமாக இருக்கிறார். இவருக்கு போட்டியாக யாரும் இல்லை என்று நினைக்கும் நேரத்தில், கிராமத்தில் இருக்கும் தன் மாமன் மகள் ஷாலினி பாண்டே ஜி.வி.பிரகாஷ் வீட்டிற்கு வருகிறார். 

    இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பில் தடுமாறும் ஷாலினி பாண்டேவுக்கு உதவியாக ஜி.வி.பிரகாஷ் இருக்கிறார். ஒரு தேர்வில் ஜி.வி.பிரகாஷை முந்திக்கொண்டு ஷாலினி முதல் இடத்தை பிடிக்கிறார். இதனால் ஷாலினி மீது வெறுப்பாகும் ஜி.வி.பிரகாஷ், போட்டிப்போட்டுக்கொண்டு மீண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பல வேலைகளை செய்கிறார். 

    அடுத்த தேர்வில் இன்னொரு மாணவன் முதல் இடம் பிடிக்க இரண்டு பேரும் போட்டிப்போட்டுக்கொண்டு அவனை வீழ்த்த முடிவு செய்கிறார்கள். ஷாலினி பாண்டே அந்த மாணவனை வீழ்த்த காதலிப்பதாக நடிக்கிறார். இதனால் ஜி.வி.பிரகாஷுக்கும் ஷாலினி பாண்டேவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

    100 சதவிகிதம் காதல்

    இறுதியில் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் முதலிடம் பிடித்தாரா? ஷாலினி பாண்டே யாருடன் ஜோடி சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    ஜி.வி.பிரகாஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்து முடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினியின் காதல் காட்சிகள் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது. அதுபோல் முதல் பாதியில் வரும் ஈகோ மோதலும் ரசிக்கும் வகையில் உள்ளது. ஷாலினி பாண்டே அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார். மாமா என கொஞ்சி பேசும்போது நமக்கு இப்படியொரு மாமா பெண் இல்லையே என ஏங்க வைக்கிறார்.

    ரேகா, தலைவாசல் விஜய், ஆர்வி.உதயகுமார், ஷிவானி பட்டேல், ஜெயசித்ரா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மனோபாலா, அப்புக்குட்டி, சாம்ஸ் ஆகியோர் இருந்தும் காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.

    100 சதவிகிதம் காதல்

    இந்த படம் தெலுங்கில் 100% லவ் என்ற பெயரில் 2011ல் வெளியானது. அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருந்தால் ரசித்திருக்கலாம். தேவையில்லாத காட்சிகள், தேவையில்லாத கதாபாத்திரங்கள் வைத்திருக்கிறார் இயக்குனர் சந்திரமௌலி.

    ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை ஓகே ரகம். கணேஷின் ஒளிப்பதிவில், காட்சிகளில் இளமை தெரிகிறது.

    மொத்தத்தில் ‘100 சதவிகிதம் காதல்’ 50 சதவிகிதம்.
    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரன்’ படத்தின் விமர்சனம்.
    விவசாயியாக இருக்கும் தனுஷ், தனது மனைவி மஞ்சு வாரியர், 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேன், தொழிற்சாலை கட்ட தனுஷுக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. இதனால் எதாவது பிரச்சனை செய்து தனுஷ் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார். 

    இந்த பிரச்சனையில் தனுஷின் மூத்த மகன், நரேனை அசிங்கப்படுத்தி விடுகிறான். இதனால், கோபமடைந்த நரேன் மூத்த மகனை கொன்று விடுகிறார். தந்தை தனுஷால் ஒன்று செய்ய முடியாது என்று நினைக்கும் இரண்டாவது மகன் கென் கருணாஸ் நரேனை கொலை செய்கிறான்.

    அசுரன் விமர்சனம்

    இந்த பிரச்சனை பெருசாக, மூத்த மகனை போல் இரண்டாவது மகனை பலி கொடுக்கக் கூடாது என்று நினைத்து, அசுர ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். இறுதியில் தன் குடும்பத்தை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர் தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சிவசாமி கதாபாத்திரத்திற்கு நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார். பல காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம். தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். 

    அசுரன் விமர்சனம்

    மூத்த மகனாக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாவது மகனாக வரும் கென் கருணாஸ் நடிப்பில் மிரள வைத்திருக்கிறார். இவரை பார்க்கும் போது சிறு வயது தனுஷை பார்ப்பது போல் இருக்கிறது. 16 வயது சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார். இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

    ஊர் தலைவராக வரும் ஆடுகளம் நரேன், இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி சக்திவேல், தனுஷின் மச்சானாக வரும் பசுபதி, வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    அசுரன் விமர்சனம்

    பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி படத்தை இயக்கி இருக்கிறார் வெற்றிமாறன். முழுக்க முழுக்க, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி மக்களுக்கு இடையேயான பிரச்சனையை சொல்லியிருக்கிறார். தாழ்ந்த சாதி குடும்பத்தை சேர்ந்த விவசாயி, பல போராட்டங்களில் தன் குடும்பத்தை எப்படி வழி நடத்தி செல்கிறார் என்பதை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்திருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. 

    ஜிவி.பிரகாஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு இவரது பின்னணி இசை பெரிதும் உதவி இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம். 

    மொத்தத்தில் ‘அசுரன்’ அட்டகாசம்.
    சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் விமர்சனம்.
    ஆந்திராவின் கர்னூல் பகுதியில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்தி இருந்த காலநிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் அவருக்கு இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்ட சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி. 

    இதனால் அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன. ஆங்கிலேயர்கள் சைரா மீதுள்ள மதிப்பை குலைப்பதற்காக முயல்கிறார்கள். ஆனால் சைராவுடன் மக்கள் துணை நிற்கின்றனர். ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெல்லும் நோக்கில் தன்னுடன் இருக்கும்  மானியக்காரர்கள் என்னும் சிற்றரசர்களை இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். முதலில் மறுக்கும் சிற்றரசர்கள் பின்னர் சைராவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேய படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர். 

    நரசிம்மா ரெட்டி விமர்சனம்

    இதற்கிடையே நடக்கும் துரோகத்தால் நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது. அதன் பிறகு நரசிம்மா ரெட்டி என்ன ஆகிறார், அவரின் வீர உணர்வும் சுதந்திர போராட்டமும் என்ன ஆனது, நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்கு படம் விடை தருகிறது. 'பாகுபலி'க்கு பிறகு தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டு உண்மையில் வாழ்ந்த ஒரு வீரனின் வாழ்க்கையை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி படமாக்கி இருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. 

    நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி வாழ்ந்து இருக்கிறார். தண்ணீருக்குள் தவம் இருக்கும் அவரது அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார். வீரம், காதல், இரக்கம், விட்டு கொடுத்தல், மக்களை ஒருங்கிணைப்பது என்று கதாபாத்திரத்துக்கு வலு கூட்டி இருக்கிறார். இனி சைரா என்றாலே சிரஞ்சீவி முகம் தான் நினைவுக்கு வரும். அதிலும் கடைசி 20 நிமிட காட்சிகள் சிரஞ்சீவி ரசிகர்களுக்கே உரியது. அரவிந்த்சாமியின் குரல் மட்டும் சற்று பொருந்தாதது போல் தெரிகிறது.

    நரசிம்மா ரெட்டி விமர்சனம்

    நயன் தாரா, தமன்னா என 2 கதாநாயகிகள். இருவருக்குமே சிரஞ்சீவிக்கு உதவியாக இருக்கும் வேடங்கள். சரியாக செய்து இருக்கிறார்கள். அவர்களது நடிப்புக்கு தீனி போட ஆளுக்கு ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் குருவாக அமிதாப் பாந்தமான நடிப்பால் கவர்கிறார். சிரஞ்சீவியின் எதிரியாக அறிமுகமாகி உற்ற நண்பனாக மாறும் சுதீப்பும், சிரஞ்சீவியின் உயிர்த்தோழனாக விஜய் சேதுபதியும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளார்கள். 

    ஜெகபதி பாபு, நாசர், ரவி கிஷன், ரோகிணி ஆகியோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழில் வசனங்கள் எழுதிய விஜய் பாலாஜிக்கு பாராட்டுகள். கமல்ஹாசனின் குரலும் அனுஷ்காவின் சிறப்பு தோற்றமும் சிறப்பு. 1700களின் காலகட்டத்தை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். போர்க்கள காட்சிகள் பாகுபலியை நினைவுபடுத்தும் அளவுக்கு பிரம்மாண்டம். அமித் திரிவேதியின் இசையில் டைட்டில் பாடல் உத்வேகம் அளிக்கிறது. ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம். ஸ்ரீகர் பிரசாத் காதல் காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

    நரசிம்மா ரெட்டி விமர்சனம்

    கலை இயக்கம், உடைகள், மேக்கப், ஒலி வடிவமைப்பு, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தி பளிச்சிடுகிறது. திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வுகள் மட்டுமே படத்தின் பலவீனம். சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை என்றாலே இப்படி தொடங்கி இப்படி முடியும் என்ற நேர்க்கோட்டிலேயே திரைக்கதை பயணிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. வலுவான திரைக்கதை அமைத்து இருந்தால் இன்னொரு பாகுபலியாக அமைந்து இருக்கும். 

    மொத்தத்தில் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ வரலாறு மறந்த ஒரு வீரனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
    சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெரிப், வாணி கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வார்’ படத்தின் விமர்சனம்.
    இந்திய ராணுவத்தில் உள்ள ரகசிய உளவு டீமின் தலைவராக இருக்கிறார் ஹிரித்திக் ரோஷன், இவர் டீமில் புதிதாக வந்து இணைகிறார் டைகர் ஷெரிப். இவரது தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க ரகசிய உளவுத்துறையில் இணைந்து தனது குடும்பத்தின் மீதுள்ள அவப்பெயரை நீக்கவும், நாட்டின் பாதுகாப்பை காக்கவும் துடிப்போடு இருக்கிறார் டைகர் ஷெரிப். 

    வார் விமர்சனம்

    இவரை பல சோதனைக்கு பிறகு டீமில் இணைத்து அவருக்கு சிறப்பான பயிற்சி தருகிறார் ஹிரித்திக் ரோஷன். ஒரு கட்டத்தில் ஒரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான பணியில் இருந்த போது நாயகியை சந்திக்கிறார் ஹிரித்திக் ரோஷன். நாயகி வாணி கபூர் திருமணமாகி கணவனை பிரிந்து தனது 6 வயது மகளுக்காக வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது பணிக்காக நாயகியை பயன்படுத்துகிறார். அப்போது நாயகி பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். 

    இதனால் மனவேதனை அடையும் ஹிரித்திக் ரோஷன் இந்த சம்பவத்தில் நாட்டை காக்ககூடிய அதிகாரிகளே நாட்டை காட்டி கொடுக்கிறார்கள் என்பதை உணர்கிறார். இம்மாதிரியான தேச துரோகிகளை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார் ஹிரித்திக். இதனை அறிந்த பிற அதிகாரிகள் ஹிரித்திக் ரோஷனை தேச துரோகி என முடிவு செய்து அவரை கொல்வதற்கு டைகர் ஷெரிப்பை அனுப்புகிறார்கள். இறுதியில் உண்மை நிலவரம் டைகர் ஷெரிப்புக்கு தெரிய வந்ததா? எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

    வார் விமர்சனம்

    ஹிரித்திக் ரோஷன், ஆக்‌ஷன், டான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். இவருக்கான தமிழ் டப்பிங்கும் அழகாக பொருந்தி இருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. ஹிரித்திக் ரோஷனுக்கு இணையாக டைகர் ஷெரிப்பும் தனது பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் இருவேறு கதாபாத்திரங்களாக வந்து இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார். இறுதி காட்சியில் ஹரித்திக் ரோஷன் உடனான ஆக்‌ஷன் காட்சியில் இவரின் பங்கு பிரம்மிக்க வைக்கிறது.

    நாயகி வாணி கபூர் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மேலும் அசுதோஷ் ராணா, அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

    வார் விமர்சனம்

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த், ராணுவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துள்ளார். 

    பெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷால் தத்லானியின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. 

    மொத்தத்தில் “வார்”  ஆக்‌ஷன் விருந்து.
    மோத்தி பா இயக்கத்தில் விக்கி ஆதித்யா, ஹரிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கோலா’ படத்தின் விமர்சனம்.
    நகரில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்றும், அதை ஒழிக்க காவல் துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிடுகிறார். இந்த நிலையில், போதை மருந்து தயாரிக்கும் ரெட்டியும், அதை வினியோகிக்கும் கஜாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது, போதை மருந்துகளை தன்னை தவிர வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்று ரெட்டியிடம் ஒப்பந்தம் போடுகிறார், கஜா.

    அதற்கு சம்மதிக்கும் ரெட்டி, போதை மருந்தை வினியோகிக்கும் ஒட்டுமொத்த உரிமையை கஜாவுக்கு கொடுக்கிறார். கஜா, போதை மருந்துகளை மருத்துவ கல்லூரி மாணவர்-மாணவிகள் மத்தியில் பரவ விடுகிறார். அந்த போதை மருந்துகளுக்கு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞரும், கமிஷனரின் மகளும் அடிமை ஆகிறார்கள். அதில், நடுத்தர குடும்பத்து இளைஞர் பாதிக்கப்பட்டு உயிரை விடுகிறார். கமிஷனரின் மகள் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.

    கோலா

    போதை மருந்து கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதை நேரில் பார்த்த கஜா, போதை மருந்துகளை வினியோகிக்கும் தொழிலையே விட்டு விடுகிறார். அவருக்கு பதில் கஜாவின் வலது கையாக இருந்த பதி, அந்த தொழிலை ஏற்கிறார். இதனால் ஏற்படும் மோதல்களும், அதன் விளைவுகளும்தான், ‘கோலா.’

    படத்தின் தயாரிப்பாளர் மோத்தி பா 'கஜா' கதாபாத்திரத்தில் நடித்து, படத்தை இயக்கியும் இருக்கிறார். ‘கஜா’ கதாபாத்திரத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பே மிரட்டலாக இருக்கிறது. போதை மருந்தின் பாதிப்புகளை சொல்லியிருக்கும் விதத்தில், படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது. 

    கோலா விமர்சனம்

    கதாநாயகன் விக்கி ஆதித்யாவுக்கு அதிக வேலை இல்லை. மருத்துவ கல்லூரி மாணவியாகவும், கமிஷனரின் மகளாகவும் வரும் ஹரிணி, கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். கமிஷனராக ஜீவா ரவி, கஜாவின் வலதுகையாக பாபு, மனைவியாக சந்தானலட்சுமி ஆகியோரும் கதாபாத்திரங்களாக கவனம் ஈர்க்கிறார்கள். 

    ரெட்டி கதாபாத்திரத்தில் தருண் மாஸ்டர் வருகிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். அமுதவாணன், ஜீவா பாலா ஆகிய இருவரும் சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். தமீன் ஜே.அலெக்சின் ஒளிப்பதிவும், கண்மணி ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு வேகம் கூட்டுகின்றன.

    மொத்தத்தில் ’கோலா’ நல்ல முயற்சி.
    பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் சுதர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் விமர்சனம்.
    பார்த்திபன், கயல் சந்திரமௌலி, டேனியல் போப், சாம்ஸ், சாட்னா டைட்டஸ் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து திட்டம் போட்டு ஐதராபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்புள்ள ஓவியத்தை திருடுகிறார்கள். இவர்கள் கூட்டத்தை பிடிக்க ஐதராபாத் போலீஸ் தீவிர முயற்சி செய்கிறது.

    இந்த ஐந்து பேரும் அடுத்ததாக சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை திருட திட்டம் போடுகிறார்கள். இதை திருடி விற்றால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால், இவர்களுக்கு பல தடைகள் வருகிறது.

    இதை சமாளித்து இறுதியில் ஐந்து பேரும் உலகக் கோப்பையை திருடினார்களா? இல்லையா? ஐதராபாத் போலீஸ் இவர்களை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    திட்டம் போட்டு திருடுற கூட்டம்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு கயல் சந்திரமௌலி இப்படத்தின் மூலம் திரையில் தோன்றியிருக்கிறார். நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு இந்த படமும் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் காமெடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.

    வித்தியாசமான கெட்டப்பில் தனக்கே உரிய நக்கல், நையாண்டியுடன் நடித்து அனைவருடைய கவனத்தையும் பெற்றியிருக்கிறார் பார்த்திபன். பல காட்சிகளை சாதாரணமாக நடித்து விட்டு செல்கிறார். பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்த சாட்னா டைட்டஸ் இந்த படத்தில் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆண்களுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்திருக்கிறார். சாம்ஸ், டேனி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    திட்டம் போட்டு திருடுற கூட்டம்

    கொள்ளையடிப்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதர். கிரிக்கெட் உலக கோப்பையை திருட முயற்சிப்பது புதிய முயற்சி. திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாகவும் காமெடியுடனும் கொண்டு செல்கிறார் இயக்குனர். ஆனால், காமெடி காட்சிகளை சுவாரஸ்யமாக கொடுத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    அஷ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ காமெடி கூட்டம். 
    சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் விமர்சனம்.
    வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். 

    இந்நிலையில், தன்னுடைய தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தை காட்ட நினைக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடுகிறார். 

    ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத நிலையில், நட்டி ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு முன்பகையை மனதில் வைத்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார் நட்டி. 

    இறுதியில் இதை எப்படி சிவகார்த்திகேயன் சமாளித்தார்? அண்ணன், தங்கை பாசம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நம்ம வீட்டுப்பிள்ளை

    ஆக்‌ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் பொறுப்பான குடும்பத்து பையனாக தன்னைக் காட்டிக் கொள்ள ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். கிராமத்து இளைஞனாக வேட்டி சட்டை அணிந்து படம் முழுவதுமே பயணிக்கிறார். கிளைமேக்ஸ் எமோஷ்னல் காட்சியில் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

    தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், ஹீரோவிற்கு தங்கையாக நடிக்க தனி தைரியம் வேண்டும். அதை நடிப்பில் அசத்தியுள்ளார். கதாநாயகியாக நடித்திருக்கும் அனு இம்மானுவேல், சிவகார்த்திகேயனை காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். மற்றபடி பெரியதாக வேலை இல்லை.

    இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். வேலாராமமூர்த்தி, சமுத்திரகனி, ஆர்.கே.சுரேஷ், அர்ச்சனா, சூரி, சுப்பு, நட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    நம்ம வீட்டுப்பிள்ளை

    இயக்குனர் பாண்டிராஜ் இதற்கு முன்பு இயக்கியிருந்த ’கடைக்குட்டி சிங்கம்’ படமும் கிராமத்துப் பின்னணியில் வெளியானதால், இந்த படமும் அதே சாயலில் இருக்கிறது. அந்த வெற்றி இதில் கிடைப்பது என்பது கேள்விக்குறிதான். படம் பார்ப்பதற்கு சீரியல் போன்று இருக்கிறது. அண்ணன் - தங்கை பாசம், தாத்தா - பேரன் பாசம், அம்மா - மகன் பாசம், சித்தப்பா பாசம் என பாசப்பிணைப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறார்.

    நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். தனக்கே உரிய பாணியில் இசையமைத்து அதில் கிராமிய இசை கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.

    மொத்தத்தில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ சீரியல் ரசிகர்களுக்கு மட்டும்.
    அட்ரியன் கிரன்பெர்க் இயக்கத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலொன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ராம்போ: லாஸ்ட் பிளட்’ படத்தின் விமர்சனம்.
    1982ல் ஆரம்பித்த ‘ராம்போ‘ சீரிஸ்களின் ஐந்தாம் பாகமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. 2008ல் பர்மா பிரச்னைகளைக் கடந்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஜான் ராம்போ அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். உடன் தோழி மரியா பெல்ட்ரென் மற்றும் அவரின் பேத்தி கேப்ரியல் சகிதமாக தனது தந்தையின் குதிரைப் பண்ணையை பார்த்துக்கொண்டு வாழ்கை சுமூகமாக போகிறது.

    இதற்கிடையில் கேப்ரியலின் தந்தை யாரென கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் மெக்ஸிகோவில் இருப்பதாகவும் அவரது தோழி கூற யாருக்கும் தெரியாமல் கேப்ரியல் மெக்ஸிகோவிற்கு செல்கிறார். அங்கு அவரது அப்பா நீங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூற மனமுடையும் கேப்ரியல் உள்ளூர் பார் ஒன்றில் குடிக்கிறார். அப்போது பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலால் கடத்தப்படுகிறார் கேப்ரியல்.

    ராம்போ

    இறுதியில் காணாமல் போன பெண்ணை ஜான் ராம்போ காப்பாற்றினாரா? பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலை அளித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ‘ராம்போ‘ சீரிஸ்களின் ரசிகர்களுக்கு ஏற்ப படம் முழுக்க வில் அம்புகள், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என வைத்திருக்கிறார்கள். சில்வெஸ்டர் ஸ்டாலோன் வயசானாலும் இன்னும் ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். 

    ராம்போ

    அதற்கேற்ப வில்லனை கதவில் செருகி இதயத்தையே கிழித்து எடுத்துக் காண்பிப்பது, தலையை ரோட்டில் உருட்டி விட்டுச் செல்வது என அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். வீடு தேடி சென்று வில்லன்களை பந்தாடுவது, மொத்த கும்பலையும் வரவழைத்து பொறி அமைப்பது படத்திற்கு பிளஸ். 

    பிராண்டன் கால்வினின் ஒளிப்பதிவும், பிரயன் டெயிலரின் பின்னணி இசையும் அருமை. 

    மொத்தத்தில் ‘ராம்போ லாஸ்ட் பிளட்‘ ராக். 
    கே.வி.ஆனந்த இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காப்பான்’ படத்தின் விமர்சனம்.
    நாட்டின் பிரதமராக மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி இருக்கிறார். பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு சதி திட்டம் நடக்கின்றது. சூர்யாவும் சில நாசவேலைகளை செய்கிறார். இவை அனைத்தும் எதிரிகளின் சதி திட்டத்தில் இருந்து மோகன்லாலை காப்பாற்றுவதற்காக அவர் செய்கிறார். இதனால் மோகன்லால் சூர்யாவை பாராட்டி மிலிட்டரி இண்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறார்.  

    ஒரு கட்டத்தில் மோகன்லாலை பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன் பின்னர் அரசியல் சூழல் காரணமாக மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். ஆர்யாவிற்கும் சூர்யா தான் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கிறார். ஆர்யாவையும் கொல்ல சதி வேலை நடக்கிறது. இறுதியில் மோகன்லாலை கொன்றது யார்? ஆர்யாவை கொல்ல துடிப்பது யார்? என்பதை பாதுகாப்பு அதிகாரியான சூர்யா எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.

    காப்பான் விமர்சனம்

    பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, விவசாயி என கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. பாதுகாப்பு அதிகாரிக்கான தோற்றம், கம்பீர நடை, துறுதுறு பார்வை என நடிப்பில் மிளிர்கிறார். படத்தின் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து வாவ் சொல்ல வைக்கிறார் சூர்யா, குறிப்பாக ரெயில் ஸ்டண்ட் காட்சி வேற லெவல்.

    எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன் லால், இதில் பிரதமராக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது. 

    காப்பான் விமர்சனம்

    பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணாக வரும் சாயிஷா, அழகு பதுமையுடன் தோன்றி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

    ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் சிக்கல்களை திரைக்கதையில் சிறப்பாக கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. 

    காப்பான் விமர்சனம்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனியின் படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகிறது. 

    மொத்தத்தில் ‘காப்பான்’ கமர்ஷியல் விவசாயி
    துருவா, இந்துஜா, ஆதித்யா, ஷாரா, ஸ்ரீனி நடிப்பில் ஏகே இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் விமர்சனம்.
    சின்ன சின்ன திருட்டுகளை செய்து வரும் துருவா, பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னுடைய மாமா ஷாராவுடன் இணைந்து நாயகி இந்துஜாவை கடத்துகிறார். ஆனால், தவறான பெண்ணை கடத்தியது பின்னர்தான் தெரிகிறது. அதேசமயம் இந்துஜாவுக்கு கொலை மிரட்டல் இருப்பதும் தெரியவருகிறது.

    அதாவது, போலீஸ் அதிகாரியாக இருக்கும் இந்துஜாவின் தந்தையை போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஆதித்யா கொலை செய்து விடுகிறான். பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் அடங்கிய பை, இந்துஜாவிடம் இருப்பதாக அறிந்து அவருக்கு மிரட்டல் விடுக்கிறான். 

    இந்துஜாவை துருவா கடத்தும்போது விட்டு வந்த காரில் போதை மருந்துகள் உள்ள பை இருக்கிறது. இந்த கார், காசிமேடு தாதாவாக இருக்கும் ஸ்ரீனியிடம் சிக்குகிறது. இந்த காரை எடுத்துவந்தால் பணம் தருவதாக துருவாவிடம் கூறுகிறார் இந்துஜா. 

    சூப்பர் டூப்பர் விமர்சனம்

    இறுதியில் காசிமேடு தாதா ஸ்ரீனியிடம் இருந்து அந்த காரை எடுத்தாரா துருவா? ஆதித்யாவிற்கு போதை மருந்து கிடைத்ததா? தந்தையை கொலை செய்த ஆதித்யாவை இந்துஜா பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துருவா துறுதுறு இளைஞனாக வலம் வருகிறார். ஆக்‌ஷன், காதல் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நடனத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி இந்துஜா, அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக ஜில் ஜில் ராணி பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறார். 

    துருவாவின் மாமாவாகவும் போலீசாகவும் வரும் ஷாரா, ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். போதை மருந்து கடத்தல் தலைவனாக வரும் ஆதித்யா, வில்லனத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பல இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காசிமேடு தாதாவாக வரும் ஸ்ரீனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாஸ் என்ட்ரியுடன் களமிறங்கும் இவர், நடனம், காமெடி என நடிப்பில் அசத்தி இருக்கிறார். 

    சூப்பர் டூப்பர் விமர்சனம்

    ஆக்‌ஷன், திரில்லர், காமெடி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.கே. அதை காமிக்ஸ் புத்தகம் ஸ்டைலில் வடிவில் கொடுத்திருப்பது சிறப்பு. ட்விஸ்ட்களில் வரும் பிளாஸ் பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதையில் தெளிவு இல்லாதது போல் தோன்றுகிறது. 

    படத்திற்கு பெரிய பலம் தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ட்ரோன் ஷாட்கள், டோலி ஜூம்கள் காட்சிகள் சிறப்பு. திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘சூப்பர் டூப்பர்’ வேகம்.
    ×