என் மலர்
தரவரிசை
பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் ஒருத்தர் மட்டுமே நடித்து வெளியாகி இருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தின் விமர்சனம்.
புதிய பாதை படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராகி இன்று வரை தனக்கென ஒரு புதிய பாதையை கொண்டு அதில் ராஜாவாக நடை போட்டுக்கொண்டு இருக்கும் இவரின் கிரீடத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 சத்தமாய் இன்று முதல் ஜொலிக்க போகிறது.
காவல் நிலையத்தில் தனது மகன் வெளியே இருக்க உள்ளே கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார் பார்த்திபன். இவரிடம் டி.சி மற்றும் ஏசி விசாரணை செய்கிறார்கள். அதில் டி.சி மிகவும் நேர்மையானவர். மனிதாபிமானம் மிக்கவர். ஏசி சற்று முன்கோபக்காரர். இவர்கள் பார்த்திபனை மிகவும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர்.

இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது படத்தின் மீதிக்கதை.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். அவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து பார்த்திபனே நடித்து இருக்கிறார். கேமரா பார்த்திபனை மட்டும் காட்டுகிறது. ஆனால் இவர் மூலமாகவே அனைத்து கதாபாத்திரங்களும் நம் கண்முன் வந்து நிற்கிறது.
எதற்காக பார்க்க வேண்டும் என்று சிந்தித்து திரையரங்குக்கு போகாமல், இந்தப்படத்தில் என்னதான் செய்திருக்கிறார் பார்த்திபன் என்று பொறுமையாக படத்தினை பார்த்தால் படம் உங்களை கவரும்.

பல கேள்விகளை நம் முன் எழுப்பி அதற்கு காட்சிகள் மூலம் தெளிவான விளக்கங்களை கொடுத்திருக்கிறார். கேமரா பார்த்திபனின் எண்ணத்தை மிக தெளிவாய் திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். பார்த்திபன் தயாரிப்பாளராக வெற்றி பெறுவது சினிமா ரசிகர்களிடம் உள்ளது.
பார்த்திபனுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ரசூல் பூக்குட்டி. துல்லியமான ஒலிகளின் மூலம் பார்த்திபனை சுற்றி இருக்கும் சூழ்நிலையை அழகாக உணர்த்துகிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவும் அபார உழைப்பு. சுதர்சனின் படத்தொகுப்பில் கச்சிதம் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன், சத்யாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம். இளையராஜாவின் பாடல்களை காட்சிகளின் பின்னணியில் சரியாக பயன்படுத்தியதில் பார்த்திபனின் புத்திசாலித்தனம் தெரிகிறது. காட்சிகளில் இடம்பெறும் சின்ன சின்ன பொருட்களுக்கு கூட கதையோடு தொடர்பு இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.
ஆங்கிலத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகி இருக்கும் அட்ராக்ஷன் படத்தின் விமர்சனம்.
கல்லூரியில் படித்து வருகிறார் நாயகி இரினா ஸ்டார்ஷன்பாம். இவரது கல்லூரியில் ஒரு நாளில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆகாயத்தை பார்த்தால் விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை பார்க்க முடியும் கூறுகிறார்கள். இதைக் கேட்ட நாயகி தன்னுடைய தோழி, ஆண் நண்பருடன் அங்கு செல்கிறார்.
ஆனால், அங்கு வேற்றுகிரக வாகனம் ஒன்று வருகிறது. இந்த வாகனம் கீழே இறங்கும் போது பல கட்டிடங்களை சேதப்படுத்துகிறது. இதில் பல பேர் இறக்கவும் செய்கிறார்கள். இரினாவின் தோழியும் இதில் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் இரினாவிற்கும், அவரது ஆண் நண்பருக்கும் காயங்கள் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரினா, அந்த வாகனம் ஏன் வந்தது. அதில் இருந்தவர்கள் யார் என்று ராணுவத்தில் இருக்கும் தன்னுடைய தந்தையிடம் கேட்கிறார். அந்த வாகனத்தில் வந்தவர்கள் ஏலியன்கள் என்று அவர் கூற, அந்த ஏலியன்களை கொல்ல வேண்டும் என்று இரினா துடிக்கிறார்.
ஆனால், தந்தையோ அந்த ஏலியன்களை தொந்தரவு செய்யாமல் விட்டால், அவர்களே சென்றுவிடுவார்கள் என்று எண்ணுகிறார். இறுதியில் அந்த ஏலியன்கள் என்ன ஆனது? நாயகி இரினா ஏலியன்களை என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

2017ம் ஆண்டும் ஆங்கிலத்தில் வெளியான இப்படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் திறம்பட நடித்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஏலியன்கள் பூமிக்கு வரும் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘அட்ராக்ஷன்’ சிறந்த ஆக்ஷன்.
சிட்டிசன் மணி இயக்கத்தில் ஜெயன், மதுனிகா, சிசர் மனோகர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பெருநாளி படத்தின் விமர்சனம்.
பெருநாளி கிராமத்தை சேர்ந்த சிவா, பால் வியாபாரம் செய்கிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார். சிவாவை அவரது அத்தை மகள் மதுனிகா காதலிக்கிறார். ஆனால் மதுனிகாவின் தந்தை அந்தோணி பழைய பகையால் காதலை எதிர்க்கிறார்.
தொழில் போட்டியால் அதே ஊரை சேர்ந்த கார்த்திக்கும், சிவாவும் அடிக்கடி மோதுகிறார்கள். சிவாவின் அக்காள் மகள் அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார். அதேபோல் சிவாவின் தம்பி அரசியல்வாதி மகளை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறார்.

வில்லன் கார்த்திக்கும், அவரது தந்தையும் சிவாவை பழிவாங்க திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சிவா தனது அக்காள் மகளின் திருமணத்தை முடித்தாரா? முறைப் பெண்ணை கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை.
அறிமுக நாயகனான ஜெயன், சிவா என்கிற கதாபாத்திரத்தில் காதல், குடும்ப உறவு, அதிரடி என கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். கதாநாயகி மதுனிகா பக்கத்து வீட்டு பெண் போல நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நடன காட்சிகள் எடுபடவில்லை. கார்த்திக் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். கிரேன் மனோகர், குணச்சித்திர கதாபாத்திரத்தில் கச்சிதம். அந்தோணி கதாநாயகி தந்தையாக சில காட்சிகளில் வந்தாலும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.

சிசர் மனோகர் சிரிக்க வைக்கிறார். தஷி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஆர்.குமாரின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காமெடி, காதல், குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ளார். இயக்குனர் சிட்டிசன் மணி.
மொத்தத்தில் ‘பெருநாளி’ விறுவிறுப்பு குறைவு.
அங்காடித்தெரு மகேஷ், ஷாலு, மனோபாலா, ஆடுகளம் நரேன் நடிப்பில் ராம் சேவா இயக்கத்தில் வெளியாகி உள்ள ’என் காதலி சீன் போடுறா’ படத்தின் விமர்சனம்.
அப்பா, அம்மா இல்லாத மகேஷுக்கு அண்ணன், அண்ணி தான் ஒரே ஆறுதல். தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் ஷாலுவை காதலிக்கிறார் மகேஷ். ஆனால் வீட்டின் செல்லப்பிள்ளையான ஷாலு மிகவும் கோபக்காரர். மகேஷை கண்டு கொள்ளாமல் ‘சீன்’ போடுகிறார். மகேஷ் போராடி ஷாலுவை கரெக்ட் செய்கிறார்.
அந்த நேரம் பார்த்து மகேஷ் அண்ணன் மீது முன்விரோதம் கொண்டிருக்கும் சக போலீஸ் அதிகாரி கோகுல் அறிமுகமாகிறார். மகேஷின் அண்ணனை பழி தீர்க்க வேண்டும் என துடிக்கிறார். இந்த நிலையில் மகேஷ் - ஷாலு நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நடக்கிறது. அந்த சமயத்தில் மகேஷின் அண்ணி மர்மமாக கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? கோகுலுக்கும், மகேஷ் அண்ணனுக்கும் இடையே உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ் - ஷாலு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

ஒரு சின்ன கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை கமர்சியலாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்சேவா. முதல் பாதி படம் ஜாலியாக நகர்கிறது. இரண்டாம் பாதி படம் விறுவிறுப்பாக மாறிவிடுகிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம், ‘அங்காடி தெரு’ மகேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
ஹீரோயின் ஷாலு அழகு பதுமை போல் வந்து போகிறார். வழக்கம் போல் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார் மனோபாலா. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு ஏற்றதுபோல பிட்டாக இருக்கிறார் கோகுல். ஆடுகளம் நரேன் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

அம்ரீஷின் இசை தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதால், அளவான லைட்களை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமரா மேன். எடிட்டிங்கில் இன்னும் நிறைய வேலை செய்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘என் காதலி சீன் போடுறா’ காமெடியுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.
எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அகன்ஷா, சுனில் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பயில்வான்’ படத்தின் விமர்சனம்.
ஆஞ்சநேயர் பக்தரான சுனில் ஷெட்டி குஸ்தி வாத்தியார். ஒருநாள் சாலையில் உணவிற்காக சண்டைபோடும் சிறுவனாக சுதீப்பை பார்க்கிறார். சுதீப் சண்டையிடும் விதம் இவருக்கு மிகவும் பிடித்துப்போக அவனிடம் விசாரிக்கிறார். அப்போது அவன் ஒரு அனாதை என்பது தெரியவருகிறது.
பின்பு சுதீப்பை கூட்டிவந்து அவனுக்கு பயிற்சி கொடுத்து தன் மகனாகவே வளர்த்து மிகப்பெரிய பயில்வான் ஆக ஆக்குகிறார். சுனில் ஆசை சுதீப்பை ஒரு நேஷனல் சாம்பியன் ஆக்கவேண்டும் என்பது. சுதீப் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவருக்கு கட்டுப்பட்டு இருக்கிறார். அப்போது கோவிலுக்கு செல்லும் இவர் அங்கு நாயகியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார், பின்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்கிறது.

தந்தையின் பேச்சை மீறி நாயகியை கரம்பிடிக்கிறார் சுதீப். இதனால் தந்தை சுனிலுக்கும் சுதிப்பிற்கும் உறவில் விரிசல் விழுகிறது. சுதீப் குஸ்தி போடுவது இல்லை என்று சத்தியம் செய்கிறார். பின்பு நாயகியை அழைத்துக்கொண்டு மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை தொடங்குகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
மனைவி குழந்தை என குடும்பத்தினரோடு சந்தோஷமாக வாழும் சுதீப்பை மீண்டும் பிரச்சனை தேடி வருகிறது. இவரிடம் குஸ்தியில் தோல்வியடைந்த மகாராஜா ஒருவர் சுதீப்பை சீண்டி சண்டைக்கு அழைக்கிறார். ஆனால் தந்தைக்கு செய்த சத்தியத்தை காப்பற்ற சண்டை போடாமல் இருக்கிறார்.

இதேசமயம் பாக்ஸிங் கோச்சாரான சரத். இவரது மாணவனான கபீர் துகான் சரத்தை மிகவும் அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கபீரை ஜெயிக்கும் அளவிற்கு ஒரு பாக்சரை உருவாக்க வேண்டும் என்று அதற்கு சரியான வீரர் ஒருவர் தேவை என்று தேடி அலைகிறார் சரத். இறுதியில் சுதீப் சண்டையிட்டு ராஜாவை வென்றாரா? சரத் தேடிக்கொண்டிருக்கும் பாக்ஸர் கபீரை தோற்கடித்தாரா? தந்தையின் உடனான பிரச்சனையில் விருந்து மீண்டு தந்தையுடன் சுதீப் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை
சுதீப், சுனிலுக்கு நல்ல மகனாகவும் நல்ல மாணவனாகவும் இடைவேளை வரை பொருந்தியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு அன்பான கணவனாகவும், பாசமிகு தகப்பனாகவும் சென்டிமெண்ட் கலந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பயில்வானுக்கு உண்டான கட்டுமஸ்தான் உடலுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பது சிறப்பு. முதல் பாதியில் இளமை துள்ளளோடு ரசிக்க வைக்கும் நாயகி அகன்ஷா இடைவேளைக்கு பிறகு மகள் மீதான பாசம் என குடும்பப்பாங்கான பெண்ணாக வந்து கவர்ந்திருக்கிறார்.

சுனில் ஷெட்டி, படம் முதல் காட்சியில் இருந்து தோற்றத்தில் கவர்கிறார். ஒரு குஸ்தி வாத்தியாருக்கு உண்டான பொறுமை, உடல் மொழி என படம் இறுதிவரை வந்து மனதில் நிற்கிறார். சுதீப்பின் நண்பராக வரும் காமெடியன், பாக்ஸிங் கோச்சராக வரும் சரத், மகாராஜாவாக சுஷாந் சிங், பாக்ஸராக வரும் கபீர் துகான் சிங் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குனர் எஸ்.கிருஷ்ணா, பயில்வான் என்கிற தலைப்பிற்கு ஏற்றவாறு சண்டை காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சுதீப்-சுனில் ஷெட்டி இடையேயான தந்தை மகன் சென்டிமெண்ட், மகள் மீதான பாசம் என அனைத்துவகை ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. குறிப்பாக தனது மகளை சிறிது நேரம் தொலைத்ததற்கே பதறும் சுதீப், நாயகியின் தந்தையை நினைத்து வருந்தும் காட்சி அல்டிமேட். காட்சிகள் நீளமாக இருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவு. பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் பலவீனம் தான். கருணாகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
மொத்தத்தில் ‘பயில்வான்’ பலமில்லை.
இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஒங்கள போடணும் சார்' படத்தின் விமர்சனம்.
நாயகன் ஜித்தன் ரமேஷ், நாயகி சனுஜா சோமநாத்தை காதலித்து வருகிறார். கொஞ்சம் கடனில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், அதை அடைத்து விட்டு காதலியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்து வருகிறார்.
இந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் மனோபாலா, வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஊரில் தனியாக இருக்கும் ஒரு பங்களாவில் பேய் இருப்பதாகவும் மக்கள் யாரும் செல்வதற்கு பயப்படுவதாகவும் அறிகிறார். இந்த வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவிக்கிறார் மனோபாலா.

இந்த போட்டியில் ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட நான்கு ஆண்களும், நான்கு பெண்களும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பின்பு ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் அந்த வீட்டில் 2 பேரும், வெளியில் ஒருவரும் இறக்கிறார்கள்.
இறுதியில் அந்த வீட்டிற்கு சென்றவர்கள் என்ன ஆனார்கள்? உண்மையில் பேய் இருக்கிறதா? இல்லையா? ஜித்தன் ரமேஷின் நடவடிக்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ். முதல் பாதியில் இளமை துள்ளலுடனும் இரண்டாம் பாதியில் மாறுபட்ட நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். கஜேஷ் நாகேஷ், கல்லூரி வினோத் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதாநாயகி உள்பட 5 பெண்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் அதிக அளவில் நடிப்பை எதிர்ப்பார்க்க முடியவில்லை.
பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவரது பாடல்கள், வசனம், நடிப்பு ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அடல்ட் காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித். ஆனால், அடல்ட் காமெடி பெரியதாக எடுபட வில்லை என்றே சொல்லலாம். ஒரு கதையில் தொடங்கும் திரைப்படம் பின்னர் அதற்குள் நிறைய கிளை கதைகளை புகுத்தி முடித்திருக்கிறார்கள். திரைக்கதையில் தெளிவு இல்லாமல் அமைந்திருக்கிறது.
ரெஜி மோன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒங்கள போடணும் சார்’ இளைஞர்களுக்கு மட்டும்.
2017ம் ஆண்டு வெளியான ‘இட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகி இருக்கும் ‘இட் - சாப்டர் டூ’ திரைப்படம் விமர்சனம்.
2017ம் ஆண்டு வெளியான இட் படத்தின் தொடர்ச்சியாக இட் - சாப்டர் டூ பாகம் வெளியாகி இருக்கிறது. முந்தைய பாகத்தில் அமெரிக்காவின் டெர்ரி நகரில் வசித்து வரும் பில், தனது தம்பி ஜார்ஜிக்கு ஒரு மழை நாளில் காகிதக் கப்பலைச் செய்து தருகிறான். ஜார்ஜி அதை வைத்து மழையில் விளையாடும்போது, ஒரு வடிகாலுக்குள் விழுந்துவிடுகிறது. அதற்குள் எட்டிப்பார்க்கும் ஜார்ஜியை, ஜோக்கர் வடிவிலிருக்கும் ஒருவன் கடித்து அந்த வடிகாலுக்குள் இழுத்து சென்று விடுகிறான்.
தம்பியின் இழப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கும் பில்லுடன் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் சில சிறுவர்கள் ஒன்று சேர்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து தம்பியை தேடும் நிலையில், பல இடங்களில் சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். ஒரு கட்டத்தில் ஜோக்கர் வடிவில் இருக்கும் ஒருவன் இறந்து விட்டான் என்று நம்புகிறார்கள்.

27 ஆண்டுகள் கழித்து இப்படம் தொடங்குகிறது. ஜோக்கர் வடிவில் இருக்கும் மர்ம மனிதன் மீண்டும் ஊரில் உள்ள சிறுவர்களை அழித்து வருகிறான் செய்திகள் வருகிறது. இதையறிந்த பில்லின் நண்பர், வெவ்வேறு ஊரில் இருக்கும் நண்பர்கள் மற்றும் பில் ஆகியோரை அழைக்கிறான்.
மீண்டும் ஒன்று சேரும் நண்பர்கள் ஜோக்கர் வடிவில் இருக்கும் மர்ம மனிதனை அழித்தார்களா? அவன் இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

திகில் படம் என்ற வகையிலிருந்து பேண்டஸி வகை படமாக மாறிவிடுகிறது இட் சாப்டர் டூ. முதல் பாகத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள் தற்போது 27 ஆண்டுகள் கழித்து பெரியவர்களாக மாறி ஜோக்கர் உருவத்தில் இருப்பவரை தேடும் விதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
பயத்தை மூலதனமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர். எதிர்ப்பார்க்காத பல இடங்களில் பயமுறுத்தி இருக்கிறார். பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களை அச்சுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ப்பிஷ். செக்கோ வரீஸின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘இட் - சாப்டர் டூ’ சூப்பர் ஹிட்.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் விமர்சனம்.
ஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர் இல்லாமல் வளரும் அக்கா, தம்பி. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். பைக் மீது தீவிர பைத்தியமாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், வளர்ந்த பிறகு பைக் ரேஸ் ஓட்டும் பழக்கம் ஏற்படுகிறது.
அப்படி ஒரு பைக் ரேசின் போது போக்குவரத்து அதிகாரியான சித்தார்த்திடம் மாட்டிக் கொள்கிறார். மேலும் சித்தார்த் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் சித்தார்த் மீது கடுப்பாகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில், அக்கா லிஜோமோலுக்கு மாப்பிள்ளையாக சித்தார்த் வர, ஜி.வி.பிரகாஷுக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், லிஜோமோலுக்கு சித்தார்த்தை பிடித்து போக, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜி.வி.பிரகாஷ், அக்காவிடம் நடந்ததை சொல்ல, அவரும் மனதை கல்லாக்கிக் கொண்டு, சித்தார்த்தை வெறுக்கிறார்.
இந்நிலையில், சித்தார்த்தும் ஜி.வி.பிரகாஷுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்கள்? சித்தார்த்தும், லிஜோமோலும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.

சித்தார்த் போக்குவரத்து அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருத்தி இருக்கிறார். நேர்மையில் திமிறுவது, ஜிவி.பிரகாஷுடன் மல்லுக்கட்டுவது, குடும்பத்திற்காக ஏங்குவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். பைக் ரேசராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். அக்கா லிஜோமோலுக்காக அழும் இடத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடித்திருக்கும் லிஜோ மோலுக்கு முக்கிய பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அன்பு, பிரிவு, வலி என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்றொரு நாயகியாக வரும் காஷ்மிரா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

பிச்சைக்காரன் படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சசி. கமர்ஷியல் படமே என்றாலும் இன்றைய இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையையும், அவசர உலகின் பயணத்தையும் அதில் உறவுகளின் பங்கையும் இணைத்துக் கதையாக சொல்லியிருக்கிறார். இதில் மாமன் மச்சான் உறவை ரசிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு. முதல் பாதி காமெடியுடனும், இரண்டாம் பாதி சென்டிமென்ட்டாகவும் கொடுத்திருக்கிறார். படம் விறுவிறுப்பாக செல்லும்போது, பாடல்கள் தடையாக இருப்பது போல் தோன்றுகிறது.
சித்துகுமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ செல்லலாம்.
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் விமர்சனம்.
அம்மா மனைவியின் சண்டையில் வாழ்க்கையை வெறுத்த கோபி, மாமியார் மனைவியின் தொல்லை தாங்காமல் இருக்கும் சுதாகர், பிடிக்காத பெண்ணை திருமணம் செய்ய மறுக்கும் அன்பு, ஆகிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கிறார்கள்
அப்போது மனைவி கொடுமையால் சிக்கி இருக்கும் டி.எம்.கார்த்திக் இவர்களோடு சேர்கிறார். நான்கு பேரும் ஒன்றாக இணைந்து எங்கேயாவது சென்று நிம்மதியாக இருக்கலாம் என்று கிளம்புகிறார்கள். அப்போது வழிப்போக்கனாக பிஜிலி ரமேஷ் இவர்களுடன் ஒட்டிக் கொள்கிறார்.

இவர்கள் அனைவரும் ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் இரவு தங்குகிறார்கள். அங்கு நாயகி யாஷிகா ஆனந்த் மாணவிகளுடன் சுற்றுலா வருகிறார். இந்த ரெசார்ட்டில் இரவு விருந்தில் இறந்து கிடந்த கோழிகளை கொண்டுவந்து ஓட்டல் உணவுகளில் கலந்து பரிமாறுகிறார்கள். இதை உண்பதனால் அனைவரும் ஜாம்பி ஆக மாறுகிறார்கள்.
இந்த உணவை சாப்பிடாமல் இருந்த கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், அன்பு, யாஷிகா ஆகியோர் மட்டும் ஜாம்பியாக மாறாமல் இருக்கிறார்கள். இதே இடத்தில் ரவுடியாக இருக்கும் யோகிபாபுவும், இவரை என்கவுண்டர் செய்வதற்காக காத்திருக்கும் ஜான் விஜய்யும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், ஜாம்பியாக மாறியவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் ஜாம்பியை மையமாக வைத்து ஏற்கனவே மிருதன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது ஜாம்பி வெளியாகி இருக்கிறது.
ஜாம்பி திரைப்படத்தை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் காமெடி காட்சிகள் எடுபடவில்லை. காமெடி என்ற பெயரில் பார்ப்பவர்களை கடுப்பாக்கி இருக்கிறார்கள்.
கோபி, சுதாகர், அன்பு, டி.எம்.கார்த்திக், பிஜிலி ரமேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியில் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறார். மருத்துவ மாணவியாக வரும் யாஷிகா ஆனந்த் கவர்ச்சியாலும், காமெடியாலும் கவர்ந்திருக்கிறார்.

காமெடியான நடிகர்களை வைத்து காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் புவன் நல்லான். நிறைய லாஜிக் மீறல்கள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. திறமையான நடிகர்களை சரியாக கையாள தெரியாமல் விட்டிருக்கிறார்.
பிரேம்ஜியின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘ஜாம்பி’ காமெடி குறைவு.
ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மகாமுனி படத்தின் விமர்சனம்.
மகாமுனி படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆர்யா. மகா, கால் டாக்சி டிரைவராக பணி புரிகிறார். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் ஒரு மகன். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர் பணத்திற்காக அரசியல்வாதியான இளவரசுவை எதிர்க்கும் ஆட்களை கொலை செய்வதற்கு திட்டங்களைப் போட்டு கொடுக்கிறார். இளவரசு, அருள்தாஸ், மதன் குமார், இவர்களுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எம்.சுந்தர் ஆகியோர் கூட்டணியாகி மகாவை என்கவுண்டரில் கொல்ல சதி செய்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு கதாபாத்திரமான முனி, தனது அம்மா ரோகிணி உடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரி முடித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்வதொடு டியூஷன்னும் எடுக்கிறார். ஜெர்னலிசம் படிக்கும் மகிமா, ஆர்யாவை காதலித்து வருகிறார். இது மகிமாவின் தந்தை ஜெயப்பிரகாஷுக்கு தெரிய வருகிறது. சாதிவெறி பிடித்த ஜெயப்பிரகாஷ் முனியை கொல்ல திட்டமிடுகிறார். மகா, முனி இருவரை கொலை சதி துரத்துகிறது. இருவரும் தப்பித்தார்களா? இருவருக்கும் என்ன தொடர்பு? மகாவின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஆர்யா. மகா கதாபாத்திரத்தில் பாசமிகு தந்தையாகவும், பொறுப்பான கணவராகவும் பளிச்சிடுகிறார். இந்துஜா புடவை வாங்கியதை சொன்னவுடன் அதற்கு இவர் கொடுக்கும் பதில் அனைத்து நடுத்தர குடும்ப கணவனின் ஆதங்கம். முனி கதாபாத்திரத்தில் மகிமாவின் கடவுள் பற்றிய கேள்விக்கு ஆர்யா கொடுக்கும் பதில்கள் இவரின் குரலுக்கு அந்த வசனங்கள் உயிர் பெற்றிருக்கிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். நான் கடவுளுக்கு பிறகு ஜாலியான வேடங்களிலேயே நடித்துவந்த ஆர்யா இதில் தனது நடிப்பின் பல பரிணாமங்களை காட்டி அசர வைக்கிறார்.
இந்துஜா, ஒரு சராசரி குடும்ப பெண்ணாக அழகாய் பொருந்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவில் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். கணவனிடம் உரிமையோடு சண்டை போடும் போது கண்ணில் நீரை நிறுத்தி அதில் காதலை ஆடவிட்டு, நடுத்தர குடும்பத்து இல்லத்தரசியை நம் கண் முன் நிறுத்துகிறார். குறிப்பாக இறுதி காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.
மகிமா இதுவரை பார்த்திராத ஒரு துணிச்சலான பெண் வேடத்தில் நடித்துள்ளார். ஆர்யாவை பார்க்கும்போது முகத்தில் இருக்கும் புன்னகையை உதடுகள் வெளியே விடாமல் தடுப்பதும் அதற்குத் துணையாய் விழிகள் பேசுவதும் கதாபாத்திரத்திற்கு அழகு. இறுதியில் பாட்டிலை பிடுங்கி குடித்துவிட்டு உடைப்பது துணிச்சலான நடிப்பின் உச்சகட்டம். எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக செய்ய முடியும் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்து இருக்கிறார் மகிமா.

இன்ஸ்பெக்டராக வரும் ஜி.எம்.சுந்தரும் அரசியல்வாதியாக வரும் இளவரசும் நடிப்பில் அசத்துகிறார்கள். இளவரசுவின் மருமகனாக வரும் யோகி கவனிக்க தகுந்த நடிப்பு. சூப்பர் குட் சுப்பிரமணி, அருள்தாஸ், பாலாசிங், மதன் குமார், ரோகிணி என மற்ற அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
மவுனகுரு படம் மூலம் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாந்தகுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்ற கனமான கதையுடன் களம் இறங்கியுள்ளார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் கவர்கிறார். இந்த படம் மூலம் ஒரு நாவலைப் படிப்பது போன்ற ஒரு அனுபவத்தை திரையில் காண்பித்திருக்கிறார். மகா-முனி என இருவரின் வாழ்க்கையை மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களையும் அந்தக் கதைக்கு உரிய பாத்திரமாகவே பார்க்க முடிகிறது என்பது இவருக்கு கிடைத்த முதல் வெற்றி. இம் மாதிரியான கதைகளை திரையில் காண்பதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதே இப்படம் சொல்ல வருகிறது.

படத்தில், விவசாயம், கல்வி, ஜாதி, நடுத்தர வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், கணவன்-மனைவி இடையேயான உணர்வுகள், ஆசிரியருக்கு உண்டான பண்புகள், கடவுள் பற்றிய உரையாடல் என அனைத்தையும் நீண்ட விவாதம் ஆக்காமல் ஆங்காங்கே அழகாய் அளவாய் சொல்லியிருப்பது இயக்குனரின் சிறப்பு.
அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு மகா, முனி இருவரது வாழ்வியலையும் அழகாக பிரிக்கிறது. தமனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.
மொத்தத்தில் ’மகாமுனி’ கனமான கதையால் கவனிக்க வைக்கிறான்.
பிரபாஸ், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் விமர்சனம்.
ராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக டீனு ஆனந்த் இருக்கிறார். இவருடைய மகன் சன்கி பாண்டே அடுத்தாக தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நிலையில், அந்த குழுவில் இருக்கும் ஜாக்கி ஷெராப் தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
தனக்கு பிறகு தன்னுடைய மகன் தான் தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கும் ஜாக்கி ஷெராப், 20 ஆண்டு காலமாக பிரிந்து இருக்கும் தன் மகனை தேடி மும்பைக்கு வருகிறார். அங்கு ஜாக்கி ஷெராப் கொலை செய்யப்படுகிறார்.
அதே சமயம் நூதனமான முறையில் ஒரு திருட்டு நடக்கிறது. இந்த திருட்டை கண்டு பிடிக்க சிறப்பு போலீசாக பிரபாஸ் களமிறங்குகிறார். அப்போது, நீல் நிதின் முகேஷ் தான் இந்த திருட்டை செய்தது என்று கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த திருட்டை செய்தது பிரபாஸ் என்று போலீசுக்கு தெரிய வருகிறது.

இந்த திருட்டு, ராய் கூட்டமைப்பு வரை செல்கிறது. ராய் நிறுவனத்துக்கு சொந்தமான பல லட்சம் கோடி அளவில் உள்ள பணத்தை கைப்பற்ற முன்னாள் தலைவர் டீனு ஆனந்தின் மகனான சன்கி பாண்டேவும், ஜாக்கி ஷெராப்பின் மகனான அருண் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் அந்த பணத்தை யார் கைப்பற்றினார்கள்? பிரபாஸ் யார்? பிரபாஸ் திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாலிவுட்டில் வெளியான ‘தூம் 1’ மற்றும் ‘தூம் 2’ பட பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் இறுதியில் தமிழில் வெளியான ‘ராஜாதிராஜா’ படம் போல் கதை மாறுகிறது. தூம் படங்களில் பிரம்மாண்டமான முறையில் திருட்டு நடக்கும். அதுபோல், இந்த படத்திலும் பிரம்மாண்டமாக திருடுகிறார் பிரபாஸ்.

வழக்கமான பிரபாஸை இப்படத்தில் பார்க்க முடியவில்லை. வழக்கமான பிரபாஸ் திரையில் தோன்றியிருந்தாலே அதிகமாக ரசித்திருக்கலாம். இறுதியில் மட்டுமே பிரபாஸின் நடிப்பை பார்க்க முடிகிறது. வாய்ப்பு கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் நடிகை ஸ்ரத்தா கபூர். படத்திற்கு பெரிய பலம் அருண் விஜய்யின் நடிப்பு. லுக், பாடி லான்ங்வேஜ் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராப் ஆகியோர் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.
ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுஜித் ரெட்டி. ஆனால், ஹாலிவுட், பாலிவுட் படங்களில் மொழி புரியவில்லை என்றாலும் கதை புரியும். இந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டாலும் கதை புரியவில்லை. காட்சிகள் பார்ப்பதற்கும் சுவாரஸ்யம் இல்லை. திரையில் தோன்றும் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை கவரவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளும் பெரியதாக எடுபடவில்லை.

தனிஷ்க் பக்ஷி, குரு ரன்துவா, பாட்ஷா, சங்கர் ஏசான் லாய் ஆகியோர் இசையில் அமைந்த பின்னணி இசை சிறப்பு. மதியின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘சாஹோ’ சாதாரணம்.
சாச்சி இயக்கத்தில் வைபவ், பல்லக் லல்வானி, ராதாரவி, இளவரசு நடிப்பில் வெளியாகி இருக்கும் சிக்சர் படத்தின் விமர்சனம்.
சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் சிக்சர். நாயகன் வைபவ் சிவில் இஞ்ஜினியர். இவருக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் எங்கு இருந்தாலும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார். இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். வைபவ் ஒரு நாள் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, அவரது வண்டி பழுதாகி நின்றுவிடுகிறது.
இதனால் இவர் நண்பர் சதீசுக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறிவிட்டு பெசன்ட் நகர் பீச்சில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியையை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நடுவில் அமர்ந்திருக்கும் நாயகன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பாட்டு கேட்டவாறு அமர்ந்திருக்கிறார்.

அரசியல்வாதியான என்.ஆர்.மனோகரின் ஆட்கள் போலீஸ் உதவியுடன் ஆர்பாட்டகாரர்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இதற்கு பயந்து பிறர் கலைந்து சென்றாலும், வைபவ் மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலை பார்த்த ஆர்பாட்டகாரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவை பாராட்டுகின்றனர்.
இந்த சூழலில் அங்கு செய்தி சேகரிக்க வரும் நாயகி பல்லக் லல்வானி, வைபவ் மீது காதல் வயப்படுகிறார். தனக்குள்ள குறையை மறைத்து வைபவும் அவரை காதலித்து வருகிறார். இன்னொரு புறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்.ஆர்.மனோகர் வைபவை கொல்லத் துடிக்கிறார். மாலைக்கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா? அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் வைபவ் மாலைக்கண் நோய் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டு இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான வெகுளித்தனமான முகம் இவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது. குறிப்பாக தனக்கு பார்வை தெரியாததை அறிந்த ராதாரவியிடம் மாட்டிக்கொள்ளும்போது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார்.
தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் நாயகி பல்லக் லல்வானி, அழகு பதுமையாக வலம் வருகிறார். ராமர், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்தாலும் சிரிக்க வைக்க தவறவில்லை. மேலும் இளவரசு, ராதாரவி அனுபவ நடிப்பால நம்மை ரசிக்க வைக்கிறார்கள். என்.ஆர்.மனோகர் மற்றும் ஏ.ஜே. வில்லத்தனத்தால் மிரட்டுகின்றனர்.

அறிமுக இயக்குனர் சாச்சி, மாலைக்கண் நோய் என்பதை கதையின் கருவாக கொண்டு படத்தை நகைச்சுவையாக நகர்த்திய விதம் சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் ஓகே ரகம் தான். பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மொத்தத்தில் ’சிக்சர்’ நகைச்சுவை விருந்து.






