என் மலர்
தரவரிசை
நந்தன் சுப்பராயன் இயக்கத்தில் அஞ்சன், அஸ்மிதா நடிப்பில் வெளியாகி இருக்கும் மயூரன் படத்தின் விமர்சனம்.
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் அஞ்சன், தனது மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க செல்லும் அவருக்கு அமுதவாணன் பாலாஜி ராதாகிருஷ்ணன் மூன்றுபேரும் நண்பர்களாகிறார்கள்.
அந்த பகுதியில் வசிக்கக்கூடிய நாயகி அஸ்மிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் அஞ்சன். அஸ்மிதாவின் பார்வையிலும் காதல் தெரிவதால் அஞ்சன் தனது காதலை துணிவோடு சொல்கிறார். முதலில் மறுக்கும் அஸ்மிதா, பின்னர் வீட்டின் சம்மதத்துடன் அஞ்சனின் மாமாவுடன் பேசி திருமண நாளையும் முடிவு செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த பகுதியில் மிகவும் செல்வாக்கும், ஆள் பலமும் கொண்ட வேல ராமமூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வருகிறார். அவருக்கு வலதுகரமாக ஆனந்தசாமி செயல்பட்டு வருகிறார். அஞ்சன் தங்கி இருக்கும் கல்லூரியில் வெளிமாநில இளைஞன் ஒருவனை வைத்துக்கொண்டு போதைமருந்து தொழில் செய்து வருகிறார் ஆனந்தசாமி. ஒரு நாள் கல்லூரி விடுதியில் இருக்கும் அஞ்சனின் நண்பனை கொன்றுவிடுகிறார் ஆனந்த சாமி.
இதற்குப் பழிவாங்க ஆனந்த சாமியை அஞ்சன் கொன்றுவிடுகிறார். இதனால் சினம் கொண்ட வேலராமமூர்த்தி அஞ்சனை கொலை செய்ய தேடி அலைகிறார். இதிலிருந்து அஞ்சன் தப்பித்தாரா? அஸ்மிதாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அஞ்சன் புதிய முகம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், பாடல்களிலும் பரவாயில்லை என்று சொல்லலாம். நாயகி அஸ்மிதாவிற்கு படத்தில் மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் மனதில் நிற்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலம் வேலராமமூர்த்தி. தன்னுடைய அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை எல்லோர் மனதிலும் நிற்க வைக்கிறார். அவருடைய வலது கரமாக இருக்கும் ஆனந்த சாமி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக அமுதவணன், பாலாஜி, ராதாகிருஷ்ணன் கதைக்கு பொருத்தமாக பொருந்தி உள்ளனர்.

பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் சுப்புராயன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நடந்தாலும் இரண்டாவது பாதியில் கதையின் விறுவிறுப்பை கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலும் புதிய முகங்கள் என்றாலும் அவர்களை திறம்பட வேலை வாங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படத்திற்கு பரமேஷ்வரின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஜுபின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மயூரன்’ அஞ்சான்.
எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி, கிஷோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெய் படத்தின் விமர்சனம்.
நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார். தந்தையின் நண்பரான ஜார்ஜ் வீட்டில் தங்கி அவரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மெடிக்கல் ரெப். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஐஸ்வர்யா விபத்தில் அடிபட்ட சார்லியை காப்பாற்ற நிக்கி காரில் பயணிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாகிறது.
இன்னொரு பக்கம் உடல் உறுப்புகளுக்காக நபர்களை கடத்தி கொல்லும் மாபியா செயல்படுகிறது. சார்லியின் மகள் மர்மமான முறையில் காணாமல் போகிறார். நிக்கியின் நண்பரை கொல்லும் அந்த மருத்துவ மாபியா அந்த பழியை நிக்கி மீது போடுகிறது. இந்த மர்மங்களின் பின்னணியை நிக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. அன்றாடம் நாம் படிக்கும், கடந்துசெல்லும் மருத்துவ குற்ற சம்பவங்களை இணைத்து விறுவிறுப்பான படத்தை இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கொடுத்துள்ளார்.

நிக்கி சுந்தரம் தானே தயாரிப்பாளராக இருந்தாலும் கூட தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து சபாஷ் வாங்குகிறார். படத்தின் எந்த காட்சியிலும் அவர் நாயகனாக தெரியாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே தெரிகிறார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாநாயகர்கள் வரிசையில் இணைந்த நிக்கி சுந்தரத்துக்கு பாராட்டுகள். அமெரிக்காவில் இருந்து வந்து இந்தியாவின் நிலையை பார்த்து வருத்தப்படும்போதும், தன்மீது விழுந்த பழியை துடைக்கவும் நண்பனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும்போதும் கவர்கிறார். இதேபோல் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி கதாநாயகன் ஆகிவிடலாம்.

அதற்கான திறமை பளிச்சிடுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத மெடிகல் ரெப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ். உதவும் மனப்பான்மை, மேனேஜரிடம் சிக்கி பொய் பேசுவது, நிக்கிக்கு உதவுவது என்று சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். கிஷோர், சார்லி, ஈ.ராம்தாஸ் மூவருமே தங்களது குணச்சித்திர நடிப்பால் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். டைகர் தங்கதுரை, மதன் கோபால், ஜார்ஜ் கூட்டணி படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்துகிறது. அஜய் கோஷ், அரோல் சங்கர், அபிஷேக் கூட்டணி இயல்பான வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்கள். பிருத்வி குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்.
இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். அனில் ஜான்சன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. பிரீத்தி மோகனின் படத்தொகுப்பு கச்சிதம். மருத்துவ துறையில் முக்கியமாக உடல் உறுப்பு தானம் விஷயத்தில் நடக்கும் குற்றங்களை பின்னணிகளுடன் தெளிவாக விளக்கி உள்ளது மெய்.

படம் பேசும் கருத்தும் மிகவும் முக்கியமானதும் அவசியமனாதும் கூட. உண்மை சம்பவங்களை கோர்த்து விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக்கிய எஸ்.ஏ.பாஸ்கரனுக்கு பாராட்டுகள். அவருக்கு துணையாக இருந்து கதை, வசனம் எழுதிய செந்தா முருகேசனுக்கும் பாராட்டுகள். இரண்டாம் பாதி முழுக்கவே கிளைமாக்ஸ் போல விறுவிறுப்பாக செல்கிறது.
மொத்தத்தில் ’மெய்’ மருத்துவத் துறையின் மறுபக்கம்.
குழந்தைகள் மற்றும் கேம் பிரியர்களை கவர்ந்த தி ஆங்ரி பேர்ட்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்தின் விமர்சனம்.
ஆங்ரி பேர்ட்ஸ் ஒரு தீவிலும், பன்றிகள் ஒரு தீவிலும் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையிலான மோதல்கள் தினமும் நடந்து வருகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் பன்றிகளின் தீவை நோக்கி ஒரு பெரிய ஐஸ் குண்டு வந்துவிழுகிறது. இதனை கண்டு அச்சப்படும் பன்றிக் கூட்டம், இது எங்கிருந்து வந்தது என்பதை மிக சாதுர்யமாக செயல்பட்டு கண்டுபிடிக்கிறார்கள்.
அப்பொழுதுதான் மற்றொரு தீவு இருப்பது பன்றிகளுக்கு தெரியவருகிறது. அதில் வசிக்கும் கழுகுகள் தாக்குதல் நடத்துவதை அறிந்த பன்றிகள், ஆங்ரி பேர்ட்ஸ்களின் உதவியை நாடுகிறது. முதலில் மறுக்கும் ஆங்ரி பேர்ட்ஸ் தீவினர் பின்னர் உதவ சம்மதம் தெரிவிக்கின்றனர்.

கழுகுகள் தீவை அழிப்பதற்கு ஆங்ரி பேர்ட்ஸ்டுடன் சேர்ந்து பன்றிகள் ஒரு சூப்பர் டீமை உருவாக்குகின்றனர். இந்த டீம் கழுகு கூட்டத்தின் சதியை முறியடிக்க, கழுகு தீவிற்கு சென்று, அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள். இதில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.
ஆங்ரி பேர்ட்ஸ் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. குழந்தைகளை கவரும் நோக்கில் படம் எடுத்து அதில் இயக்குனர் வென்றிருக்கிறார் என்றே கூறலாம். வசனங்கள், விஷுவல், மியூசிக் என அனைத்தும் குழந்தைகளை வெகுவாகக் கவரக் கூடியதாக உள்ளது.

தமிழில் குழந்தைகளுக்கு பிடித்தார் போல் டப்பிங் செய்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 3D விஷுவல் எபெக்ட்ஸ் மிக அழகாக உள்ளது. மொத்தத்தில் குழந்தைகளைக் கவரும் படமாக ஆங்கிரி பேர்ட் அமைந்திருப்பது சிறப்பு.
நடிகர்கள் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் வெளியாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் விமர்சனம்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரராக இருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி பயிற்சி அளித்து, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். அப்படி பயிற்சியளித்த குழந்தைகளில் ஒருவர் சசிகுமார்.
மேலும் இதே கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பத்து பேரை தேர்வு செய்து சிறந்த வீராங்கனைகளாக்கும் முயற்சியில் கபடி பயிற்சி கொடுத்து வருகிறார் பாரதிராஜா. ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
இதனால் வீராங்கனைகளுக்கு சசிகுமாரை பயிற்சி அளிக்கும் படி பாரதிராஜா கேட்க, அவரும் சம்மதித்து திறமையாக பயிற்சி அளித்து பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெறக்கூடிய சிறந்த அணியாக உருவாக்குகிறார். இந்நிலையில், இந்த குழுவில் இருக்கும் பெண், இந்திய அணியில் விளையாட தேர்வாகிறார்.
ஆனால் மேல் பொறுப்பில் இருக்கக்கூடிய முரளி ஷர்மா 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் அந்த டீமில் விளையாட முடியும் என்று கூறுகிறார். இதனால் மன வேதனை அடையும் அந்த பெண், விபரீத முடிவு எடுக்கிறார்.

இறுதியில் அந்த பெண் எடுத்த முடிவு என்ன? பாரதிராஜா, சசிகுமார் இருவரும் இதை எப்படி கையாண்டார்கள்? இந்திய அளவில் கபடி வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்திருக்கும் பாரதிராஜா, கிராமத்தில் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்கள் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டுப் பெண்களை கபடி விளையாட வைத்து, அவர்களின் குடும்பம் உயர பாடுபடும் கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய விளையாட்டுத்துறையில் இருக்கக்கூடிய அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காண்பிக்கிறது.

சசிகுமாரின் தோற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. பாரதிராஜாவும் இவரும் படத்தில் அப்பா மகன் போல வந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு உரசல் வந்துகொண்டே இருக்கிறது. அந்த உரசலை மிக அழகாக கையாண்டிருக்கிறார் சசிகுமார். குறிப்பாக படத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக இவர் பேசும் வசனங்கள் மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. அதை இவர் பேசும்போது மிக சிறப்பாக உள்ளது. இப்படத்தில் இவருக்கு நாயகி எதுவும் இல்லை என்றாலும் அதைப் பற்றி சிந்திக்கவே வாய்ப்பில்லாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.
ஒரு கபடி பெண்கள் டீமுக்கு பயிற்சியாளராக வருகிறார் சூரி. சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கும் படியாக செய்திருக்கிறார் அதேபோல் திருமணம் செய்த அன்றே தன் மனைவியைப் கபடி போட்டிக்கு அனுப்பி வைக்கும் இளைஞரும் மனதில் நிற்கிறார்.
உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் பணத்திற்காக எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா நடித்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது, இவர் மீது கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்தை மிகவும் திறம்பட செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுடைய பதிவை அழகாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சுசீந்திரன் கபடி போட்டி மையப்படுத்தி கிராமத்து பெண்களை ஒருங்கிணைத்து ஒரு எளிமையான கதையை மிக அழகாக சொல்லி இருக்கிறார். படத்தில் அனைத்தும் எதார்த்தமான காட்சிகளாக பதிவு செய்திருப்பது சிறப்பு. வீராங்கனைகளை தேர்வு செய்து இருப்பதிலேயே பாதி வெற்றி கண்டிருக்கிறார். களத்தில் விளையாடும் வீரர்களின் மனநிலையை பாரதிராஜா, சசிகுமார் இவர்களுக்கு இடையிலான உரசலினால் வீரர்கள் மனநிலை பாதிக்கப்படும் என்பதை சுசீந்திரன் கொஞ்சம் சிந்தித்து காட்சி கொடுத்திருக்கலாம். இறுதிப் போட்டியில் இருக்கக்கூடிய வீரர்கள் பயிற்சியாளர்கள் மனநிலை மாறி இருக்கும் போது வெற்றி பெறுவது கடினம். இது விளையாட்டு வீரர்களுக்கு நன்கு புரியும்.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். குருதேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கென்னடி கிளப்’ குட் கேம்.
விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், பேபி ஷ்ருத்திகா, ரோகித் பதக், மோக்லி நடிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது மனைவி வசுந்தராவும், மகள் ஷ்ருத்திகாவும் தான் உலகம்.
ஒருநாள் கடன் கேட்பதற்காக இசுலாமியர் வீட்டுக்கு செல்லும் போது பக்ரீத்துக்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஒட்டகத்தின் குட்டியை இரக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டுவருகிறார் விக்ராந்த். அந்த ஒட்டகம் அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிடுகிறது.

இந்நிலையில், ஒட்டகத்திற்கு உடல் நலம் சரியில்லாமல் போக, விலங்கு நல மருத்துவர் எம்.எஸ்.பாஸ்கர் அறிவுரையால் திரும்ப ராஜஸ்தானில் ஒட்டகங்களுடன் ஒட்டகமாக விட்டுவிட செல்கிறார் விக்ராந்த்.
இந்த பயணத்தில் விக்ராந்த் சில இன்னல்களை சந்திக்கிறார். இதையெல்லாம் கடந்து ஒட்டகத்தை சேர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், எதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கடனுக்காக அலைவது, மகளுடன் பாசத்தை காட்டுவது, ஒட்டகம் மீதான அன்பு, அதை பிரிந்த பின்னர் பரிதவிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். இப்படம் விக்ராந்திற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளை சாதாரணமாக செய்து விட்டு செல்கிறார். ஒரு விவசாயி மனைவியாக சிறப்பாக பிரதிபலித்துள்ளார். பேபி ஷ்ருத்திகாவின் நடிப்பால் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது. விக்ராந்தின் நண்பராக தினேஷ், லாரி டிரைவராக வரும் ரோகித் பதக், லாரி உதவியாளராக வரும் மோக்லி, ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஒட்டகத்தை விற்று காசு பார்க்கலாம் என்ற ஆசையில் அதை ஏற்றிவிட்டு அதனால் தொல்லைகளுக்கு ஆளாகும் ரோகித் சிரிக்க வைக்கிறார்.

அன்பை மட்டுமே பிரதானமாக எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. குறிப்பாக கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். விலங்குகளை வைத்து படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இந்த படத்தில் ஒட்டகத்திடம் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். படம் பார்க்கும் போது, நம்மளுடைய செல்ல பிராணிகளுடன் நாம் இருப்பதை பல இடங்களில் நினைவு படுத்துகிறார். ஒட்டுமொத்தமாக விலங்குகள் மீதான பேரன்பை பக்ரீத் பேசியிருப்பது சிறப்பு. அதை வெறும் ஆவணமாக பதிவு செய்யாமல் நம்மையும் சாராவோடு சேர்ந்து பயணிக்க வைத்ததில் ஜெகதீசன் சுபு கவனிக்க வைக்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் இமானின் இசை தான். கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையால் கடத்துகிறார். ஆலங்குருவிகளா, லக்கி லாரி, கரடு முரடு ஆகிய பாடல்களும் முன்பே வெளியாகி ஹிட் அடித்து விட்டன. தமிழ்நாட்டின் வயல்புறம் முதல் ராஜஸ்தான் பாலைவனம் வரை ஜெகதீசன் சுபுவின் ஒளிப்பதிவு நம்மையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘பக்ரீத்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஓ பேபி படத்தின் விமர்சனம்.
இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகும் லட்சுமி, மகன் மட்டுமே உலகம் என வாழ்ந்து வருகிறார். கஷ்டப்பட்டு மகனை வளர்த்து, படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுக்கிறார். அவரது மகனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து கொள்கிறார் லட்சுமி. இதனால் மனமுடையும் லட்சுமியின் மருமகள், லட்சுமியை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவரிடம் சொல்கிறார்.
இதை அறியும் லட்சுமி, வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த சமயத்தில் ஒரு மாயசக்தியினால் இளம் பெண்ணாக (சமந்தா) மாற்றமடைகிறார். அதன்பின்னர், தான் இளம் வயதில் தவறவிட்ட விஷயங்களை எல்லாம் அனுபவித்து ஜாலியாக வாழ தொடங்குகிறார். இதையடுத்து காணாமல் போன லட்சுமியை குடும்பத்தினர் தேடி அலைகின்றனர்.

இறுதியில் லட்சுமி இளம்பெண் சமந்தாவாக மாறியதையடுத்து என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? லட்சுமி இளம்பெண் சமந்தாவாக மாறியதை குடும்பத்தினர் கண்டுபிடித்தார்களா? லட்சுமி கடைசி வரை இளம் பெண் சமந்தாவாக இருந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்துக்கு மிகப் பெரிய பலம் சமந்தா. 70 வயது மனநிலையுடன் கூடிய 24 வயது பெண்ணாக பேச்சு, நடை, உடை, பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். படத்தில் 70 வயது பேபி கேரக்டரில் நடித்துள்ள லட்சுமி, மகன் மீது பாசம் காட்டுவது, நண்பன் ராஜேந்திர பிரசாத்தை கலாய்ப்பது என நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதுமையான கதைக்களம், சுவாரசியமான திரைக்கதை என கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அந்தந்த மனநிலைக்கு ஏற்றவாறு அணுக வேண்டும் என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி.

சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர். ரிச்சர்டு பிரசாத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘ஓ பேபி’ முதுமையின் இளமை.
ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் விமர்சனம்.
சிறுவயதில் இருந்தே ஜெயம் ரவியும், யோகி பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஸ்கூலில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதே ஸ்கூலில் சம்யுக்தா ஹெக்டே சேருகிறார். இவரை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு பிடித்து விடுகிறது. இவரிடம் தன்னுடைய காதலை 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சொல்ல செல்கிறார்.
அப்போது ரவுடியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமாரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் ஜெயம் ரவி கோமா நிலைக்கு செல்கிறார். 16 வருடங்களுக்கு கோமாவில் இருந்து விடுபடுகிறார்.

கோமாவில் இருந்து எழுந்த ஜெயம் ரவிக்கு எல்லாம் புதுசாக இருக்கிறது. இதிலிருந்து ஜெயம் ரவியின் வாழ்க்கை மாறுகிறது. இதன்பின் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தார். எப்படி வாழ்க்கை சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இரண்டு காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் திறமையாக நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். சில குறும்பு காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருக்கு போட்டியாக யோகி பாபு வேற லெவலில் காமெடி செய்துள்ளார்.
நாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

16 வருடமாக கோமாவில் இருந்த 90-ஸ் கிட் திடீரென்று தற்போது நவீன உலகத்தில் கண்முழித்து பார்க்கும்போது அவர் காணும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார். மேலும், 90ஸ் கால கட்டத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது 2கே வாழும் வாழ்க்கை முறையையும் எப்படி அவருக்கு மாற்றத்தையும் வலியை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன். நவீனம் என்ற பெயரில் நாம் எவற்றையெல்லாம் துளைத்துள்ளோம் என்பது நமக்கு உணரவைக்கிறது.
படத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோமாளி’ காமெடி கலாட்டா.
தர்ஷன், அர்ஜூன், சினேகா, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாகன்னா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் குருஷேத்ரம் படத்தின் விமர்சனம்.
மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும் விதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுத்திருக்கிறார்கள்.
கவுரவர்களான துரியோதனன், துச்சாதனன், பாண்டவர்கள் தர்மன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் இவர்களுக்கு இடையே எப்படி குருஷேத்ரம் போர் உருவானது என்பதை படமாக எடுத்திருக்கிறார்கள்.

இதில் துரியோதனன் கதாபாத்திரத்தில் தர்ஷனும், துச்சாதனனாக ரவி சேதான் நடித்திருக்கிறார்கள். பாண்டவர்களில் தர்மன் - சஷி குமார், பீமன் - தனிஷ் அக்தர், அர்ஜூனன் - சோனு சூட், நடித்திருக்கிறார்கள். கர்ணனாக அர்ஜூன் நடிக்க, திரௌபதி ஆக ஸ்நேகாவும் சகுனியாக ரவிசங்கரும் நடித்திருக்கிறார்கள்.
வரலாற்று படங்களை இயக்குவதற்கு தனி தைரியம் வேண்டும். சிறப்பாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவர்களை திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நாகன்னா. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறார். வரலாற்று படங்களில் முக்கியமானது பிரம்மாண்டம். ஆனால், இந்த படத்தில் பிரம்மாண்டம் இருந்தாலும், கிராபிக்ஸ் காட்சிகள் வரும் அந்த பிரம்மாண்டம் பெரியதாக எடுபடவில்லை. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தமிழில் மிகவும் தெரிந்த முகமான அர்ஜூன் மற்றும் சினேகா ஆகியோர் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்துள்ளனர். இருவரும் அவர்களுக்கான வேலையை கச்சிதமாகவும் அழகாகவும் செய்திருக்கிறார்கள்.
ஹரிகிருஷ்ணாவின் இசையும், ஜெய் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகளை வரலாற்று படங்களுக்கு ஏற்றார்போல் அமைத்திருக்கிறார் கனல் கண்ணன்.
மொத்தத்தில் ‘குருஷேத்ரம்’ பிரம்மாண்டம் குறைவு.
அறிமுக இயக்குனர் முனுசாமி இயக்கத்தில் உதய் ராஜ், அவந்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரீல் படத்தின் விமர்சனம்.
நாயகன் உதய் ராஜ் தாய்-தந்தை இல்லாதவர், தன் நண்பர்களோடு வாழ்ந்து வருகிறார். அப்பகுதி காவல் ஆய்வாளர் உதவியுடன் இவர் நண்பருடன் சேர்ந்து சிறு சிறு திருடி வாழ்ந்து வருகிறார். நாயகனின் கனவில் ஒரு பெண் வந்து வந்து போகிறாள். இந்தப் பெண் யார் என்று நாயகன் தேடி வருகிறார்.
இம்மாதிரியான சூழ்நிலையில் நாயகி அவந்திகா கிராமத்தில் வசித்து வருகிறார். தந்தை இறந்ததால் இவரது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. கடன்காரர்கள் தொல்லை அதிகரித்ததால் நாயகி வெளியூரில் வேலைக்கு செல்கிறார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருகிறார். நாயகியை, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளி அடைய நினைக்கிறார். இதனால் மனமுடைந்த நாயகி தற்கொலைக்கு முயல்கிறார்.

குடும்ப சூழல் காரணமாக இந்த முயற்சியை கைவிட்டு, பணக்கார முதலாளிகளுக்கு தன்னை விருந்தாக்கி பணம் சம்பாதித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நாயகியை கண்ட நாயகன் தனது காதலை நாயகியிடம் சொல்கிறார். நாயகி தனது நிலையை நாயகனுக்கு எடுத்துரைக்கிறார். இதை கேட்ட நாயகன் நாயகியை ஏற்றுக்கொண்டாரா? இருவரும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் உதய் ராஜ் புதுமுகம் என்றாலும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். நாயகி ஒரு முக்கியமான கதாபாத்திரம், அதை உணர்ந்து ஒரு திறம்பட நடித்திருக்கிறார். நாயகனுக்கு நண்பனாக வரும் சரத், காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். சந்தோஷ் சந்திரனின் இசை ஓகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் சுனில் பிரேம் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இப்படத்திற்கு பிரபல எடிட்டர் சாய் சுரேஷ் மிகப்பெரிய பலம்.

குடும்ப சூழல் காரணமாக ஊரில் இருந்து நகரத்திற்கு வேலை தேடி வரும் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை, அவலங்களையும் சுட்டிக்காட்டிய இயக்குனர் முனுசாமி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தில் சில இடங்களில் காட்சிகள் தொய்வு இருந்தாலும், பார்க்கும்படி எடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘ரீல்’ சரியாக சுத்தவில்லை.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் விமர்சனம்.
நாயகி நயன்தாரா சிறு வயதில் ஆசிரமத்தில் வளர்கிறார். இவரால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், இவர் திறமையாக ஓவியம் வரையக்கூடியவர். ஆசிரமத்தின் உரிமையாளர் லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர, அவரை இதுவரை பார்த்திராத நயன்தாரா அப்படியே ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார்.
இதைப் பார்க்கும் ஆசிரமத்தின் உரிமையாளர் நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார்.
லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? பூமிகா மற்றும் அவரது கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நயன்தாரா தனக்கே உரிய பாணியில் அசத்தி நடித்திருக்கிறார். வாய் பேச முடியாமல், காது கேட்காமல் இவர் செய்யும் செய்கைகள் பல இடங்களில் ரசிக்கவும், சில இடங்களில் பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவரை மையமாக வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நயன்தாரா திறமையாக நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றிருக்கும் பூமிகாவின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. சொத்துக்காக நயன்தாராவை பழி வாங்குவது என வில்லத்தனத்தில் கவனம் பெற்றிருக்கிறார்.

மர்மம் கலந்த திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலட்டி. நயன்தாராவிடம் பாசம், அன்பு, கோபம், பயம் என திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் கவனத்தை தவறவிட்டிருக்கிறார். பல லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வீட்டிற்குள் மர்ம நபர், நயன்தாரா இருவரும் ஓடி பிடித்து விளையாடுவது போல் திரைக்கதை இருக்கிறது. இது ஒரு கட்டத்திற்கு மேல் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அச்சு ராஜாமணியின் பின்னணி இசையை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். கோரி கெர்யக் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘கொலையுதிர் காலம்’ இறந்த காலம்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் விமர்சனம்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கிறார்கள். அப்போது அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கிவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற பயத்தில் மூன்று பெண்களும் இருக்கிறார்கள். நினைத்தபடி அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தாவை பழிவாங்க நினைத்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.
அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அர்ஜுன் முதலில் புகார் கொடுத்ததாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கைது செய்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர் வீட்டில் குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக வாதாட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அஜித், தனது திறமையான வாதத்தால் எப்படி வழக்கை முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மேலே குறிப்பிட்ட கதையில் அஜித்தின் பெயர் சிறிதளவே வந்தாலும், படத்தின் முழு வலுவையும் அஜித்தே சுமந்து நிற்கிறார். இந்தியில் வெளியான பிங்க் படத்தில் அமித்தாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்திருக்கிறார். இதனால், மிகுந்த சவாலாக இருந்த கதாபாத்திரத்தை அஜித் மிகவும் நேர்த்தியாகவும், தனக்கே உரிய பாணியில் திறம்பட நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சி, பைக் ஓட்டும் காட்சிகளில் அவரது ரசிகர்களை திருப்திபடைத்திருக்கிறார். ,
நாயகியாக நடித்திருக்கும் வித்யாபாலன், குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், மனதில் நிற்கிறார். அஜித்துடனான இவரின் கெமிஸ்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வலுவான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமான காட்சிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இவரது தோழிகளாக வரும் பிக்பாஸ் அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர், கோர்ட் விசாரணை காட்சிகளில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
அர்ஜுன் சிதம்பரம் பார்ப்பதற்கு அழகாகவும், கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். கோர்ட்டில் அஜித்துடன் விவாதம் செய்யும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜூனியர் பாலையா, அரசியல்வாதியாக வரும் ஜெய பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, அதே சமயம் பிங்க் படத்தின் கதையை ஏந்தவிதத்திலும் பாதிக்காத அளவிற்கு படத்தை இயக்கி இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு உண்டான பாதுக்காப்பு குறித்தும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றியும் அஜித் பேசும் காட்சிகளில் உயிரோட்டமாக உருவாக்கி இருப்பது சிறப்பு. தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழ்நிலையில், இம்மாதிரியான படங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதும், அதில், முன்னணி நடிகர்கள் நடிப்பதும், சமுகத்திற்கு இதுவும் ஒருவழியில் உதவும் என்பதில் ஐயமில்லை.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். பிங்க் படத்தின் அதே காட்சிக்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மெனக்கெட்டிருக்கிறார்.
மொத்தத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ பெண்களின் பாதுகாப்பு.
ஜேசன் ஸ்டாதம், டுவேன் ஜான்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் விமர்சனம்
ஜேசன் ஸ்டாதமின் (ஷா) தங்கை வனேசா ஒரு சீக்ரெட் போலீஸ் ஏஜெண்ட். உலகை அழிக்கும் வல்லமை உள்ள வைரஸை எடுக்க செல்கிறார் வனேசா. இதேபோல் வில்லனும் வைரஸை எடுக்க முயல்கிறார். இந்த வேளையில் வைரஸை கண்டுபிடிக்கும் வனேசா, அதை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார். ஆனால் சூழலை மாற்றும் வல்லமை படைத்த வில்லன், சீக்ரெட் போலீஸ் ஏஜெண்டான வனேசா வைரஸை திருடிவிட்டதாக பழி சுமத்துகிறார்.
இதனால் வனேசாவிடம் உள்ள வைரஸை மீட்க போலீஸ் அதிகாரியான டுவேன் ஜான்சன் (ஹாப்ஸ்) நியமிக்கப்படுகிறார். அவரின் உதவியாளராக ஜேசன் ஸ்டாதம் (ஷா) செல்கிறார். எதிரெதிர் துருவங்களான இருவரும் எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் குணமுடையவர்கள். முதலில் இணைந்து பணியாற்ற மறுக்கும் இருவரும் பின்னர் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவிக்கின்றனர். அப்போது வைரஸை திருடியது தனது தங்கை என்பதையும், அவள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளதையும் அறிகிறார் ஜேசன் ஸ்டாதம் (ஷா).

தன்னிடம் உள்ள சக்தி மூலம் டுவேன் ஜான்சன் (ஹாப்ஸ்) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (ஷா) மீது பழி சுமத்துகிறார் வில்லன். இதையடுத்து வனேசாவிடம் உடம்பில் உள்ள வைரஸை எடுத்தார்களா? வில்லனின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள படத்தொடர். அப்படங்களில் கார் சேசிங், கடத்தல் , ஆக்சன் என சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கும், கிட்டத்தட்ட ஒரே கதை தான் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் ஹாப்ஸ் மற்றும் ஷா என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை அமைத்து சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் டேவிட் லெட்ச்.

ஹாப்ஸ் மற்றும் ஷாவாக வரும் டுவேன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பலம். இருவரின் ஆக்சன் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வதும், பஞ்ச் டயலாக் பேசுவதுமாக நம்மை ரசிக்க வைக்கிறார்கள். படத்தில் வரும் தங்கை மற்றும் வில்லன் கேரக்டர்கள் நடிப்பில் மிளிர்கின்றனர். ஜோனாதன் செலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் “பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா” ஆக்சன் விருந்து.






