என் மலர்tooltip icon

    தரவரிசை

    என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஐ.ஆர்-8’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் அனீபாவின் தந்தை ஆர்.வி.தம்பி கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு பின்னர் தனது மகனும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அதன் எதிரொலியாக அவர் தனது மகன் அனீபாவை விவசாய கல்லூரியில் படிக்க வைக்கிறார். இந்த வேளையில் நாயகனின் முறைப்பெண்ணான நாயகி பிந்து, திருமணம் செய்யும் முனைப்பில் நாயகனை சுற்றி சுற்றி வருகிறார். இதில் விருப்பம் இல்லாத நாயகன் விலகி செல்கிறார். 

    ஐ.ஆர்-8

    இந்த சூழலில் வில்லன் ஜெயக்குமாரிடன் விவசாய நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார் நாயகனின் தந்தை ஆர்.வி.தம்பி. நாயகன் அனீபாவும் படித்து முடித்து விவசாயம் செய்கிறார். இயற்கை விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என நாயகனின் தந்தை ஆர்.வி.தம்பி உறுதியாக இருக்கிறார். ஆனால் நாயகன் அனீபா செயற்கை முறையில் விவசாயம் செய்யும் முனைப்போடு இருக்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க, நாயகனின் விவசாய நிலத்தை அரசியல்வாதி ஒருவர் அடைய முயல்கிறார். இதற்கு வில்லன் ஜெயக்குமாரை பகடை காயாக பயன்படுத்துகிறார். விவசாயம் செய்ய முடியாததால் மனமுடைத்து போகும் நாயகனின் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இதையடுத்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணரும் நாயகன், வில்லனிடம் இருந்து விவசாய நிலத்தை மீட்டாரா? இயற்கை விவசாயம் செய்து தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா? நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

    ஐ.ஆர்-8

    இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர் எஸ்.பி.இஸ்மாயில். படத்தில் பெரும்பாலான புதுமுகங்கள் நடித்திருந்தாலும், அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் நாயகன் அனீபா, காதல், சண்டை, பாசம் என நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனின் முறைப்பெண்ணாக வரும் நாயகி பிந்து, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

    ஐ.ஆர்-8

    நாயகனின் தந்தையாக நடித்துள்ள ஆர்.வி.தம்பி, விவசாயி காமராசுவாகவே வாழ்ந்துள்ளார். அரசு கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். மற்றபடி அப்புகுட்டி, கராத்தே ராஜா, பாபு, கவிதா, ராஜேஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். கோனேஸ்வரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கே.வி.மணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. 

    மொத்தத்தில் ’ஐ.ஆர்-8’ விவசாயிகளின் வலி.
    கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஜாக்பாட்’ படத்தின் விமர்சனம்.
    ஜோதிகாவும் ரேவதியும் சாதுரியமாக மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு ஆணுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்யும் திறன் படைத்தவர்கள். போலீசிடம் சிக்காமல் சாதுரியமாக ஏமாற்றி வரும் இவர்கள், திரை அரங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் போது போலீஸ் ஒருவரை தாக்குகிறார்கள். 

    இதனால் சிக்கலில் மாட்டி இருவரும் சிறைக்கு செல்கிறார்கள். அங்கு சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சு மூலம் இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் தொடர்பான துப்பு கிடைக்கிறது. அது செல்வந்தர் ஆனந்த்ராஜ் வீட்டில் இருப்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன? ஆனந்த்ராஜூக்கு தெரியாமல் ஜாக்பாட்டை எடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

    ஜாக்பாட்

    படம் முழுக்க வரும் ஜோதிகாவும், ரேவதியும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு நடித்துள்ளனர். நடிப்பு மற்றும் டான்சிற்கு பெயர்போன ஜோதிகா, இப்படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து, அதிலும் ஸ்கோர் செய்துள்ளார். ஒபனிங் சாங், சண்டை காட்சிகள், பஞ்ச் டயலாக் என ஆக்‌ஷன் ஹீரோயினாக மிளிர்கிறார் ஜோதிகா. ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை, இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ரேவதிக்கு முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை.

    ஜாக்பாட்

    செல்வந்தர், பெண் போலீஸ் என இரு வேடங்களில் நடித்துள்ள ஆனந்த்ராஜ், தனது நேர்த்தியான நடிப்பால் இரு கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். அவர் நடித்துள்ள மானஸ்தன், மானஸ்தி என்ற இரு கதாபாத்திரங்களிலும் காமெடிக்கு பஞ்சம் வைக்கவில்லை. யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், கோலமாவு கோகிலா பட புகழ் டோனி, மனோபாலா, தங்கதுரை என படத்தில் ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக தனது அழகை தொலைத்துவிட்டு தேடும் யோகிபாபு காமெடியில் முத்திரை பதித்துள்ளார். 

    ஜாக்பாட்

    குலேபகாவலி படத்தை போன்று இப்படத்தையும் காமெடி படமாகவே எடுத்துள்ளார் கல்யாண். ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஜோதிகாவை நடிக்க வைத்தது சிறப்பு. காமெடி படமாக இருந்தாலும் இதில் சமூகத்திற்கு தேவையான மெசேஜும் கொடுத்துள்ளார். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. 

    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்டின் பிரம்மாண்டமான தயாரிப்பும் இப்படத்திற்கு கிடைத்த ஜாக்பாட் தான்.

    மொத்தத்தில் ‘ஜாக்பாட்’ காமெடி சரவெடி.
    ‌பி.மாரிமுத்து இயக்கத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா, சுந்தர்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தொரட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    1980களில் நடக்கும் கதை. ‌ஷமன் மித்ருவின் தந்தை அழகு ஊர் ஊராக சென்று ஆட்டு கிடை போடும் தொழில் செய்பவர். சொந்த ஊரோ வீடோ இல்லாமல் ஆட்டு கூட்டத்துடன் ஊர் ஊராக சென்று கிடை போடுவது அழகு குடும்பத்தின் வழக்கம். அழகுவின் தூரத்து சொந்தமான குமணனின் உதவியுடன் ஒரு ஊரில் கிடை போடுகிறார். குமணன் மகள் சத்யகலாவுக்கும் ‌ஷமன் மித்ருவுக்கும் காதல் ஆகிறது. 

    அந்த ஊரில் திருடுவதையே வழக்கமாக வைத்திருக்கும் சுந்தர்ராஜ், சீலன், முத்துராமன் ஆகியோருடன் ‌ஷமனுக்கு நட்பு ஏற்படுகிறது. குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விடுகிறார். தவறான வழியில் சென்ற ‌ஷமனை திருத்துவதற்காகவே பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை சத்யகலா திருமணம் செய்துகொள்கிறார். ‌ஷமனால் அந்த 3 பேரின் நட்பை விட முடியவில்லை. கூடா நட்பின் காரணமாக ‌ஷமனுக்கு என்ன ஆகிறது? அதற்கு அவர் கொடுக்கும் கூலி என்ன? ‌ஷமன் சத்யகலா திருமண வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே கதை.

    தொரட்டி

    ஆடு மேய்ப்பவர்களின் பின்புலத்தை மையமாக கொண்டு அவர்களது வாழ்வியலை அழகாக சொல்லும் படமாக தொரட்டி வந்துள்ளது. தொரட்டி என்பது அவர்கள் பயன்படுத்தும் குச்சி போன்ற ஒரு பொருள். பீரியட் படம், புதுமுகங்கள் இப்படி இடர்பாடுகள் எத்தனையோ இருந்தாலும் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் அழகான ஒரு காவியத்தை பி.மாரிமுத்து கொடுத்துள்ளார். 

    படம் பார்க்கும் உணர்வே எழவில்லை. பதிலாக அவர்களோடு வாழ்ந்த உணர்வு தான் ஏற்படுகிறது. படக்குழுவினருக்கு பாராட்டுகள். கதையின் நாயகனாக ‌ஷமன் மித்ரு. சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். சத்யகலாவுடனான காதல், தந்தை மீதான பாசம், நண்பர்களுடனான கேளிக்கை என வாழ்ந்து இருக்கிறார். சத்யகலாவும் சிறப்பாக நடித்துள்ளார். பெண் பார்க்க குடிபோதையில் வந்த ‌ஷமனை அவர் குளிப்பாட்டும் இடம் கைதட்டல்களை பெறுகிறது. 

    தொரட்டி

    அழகு, ஜானகி, ஸ்டெல்லா, குமணன், விஜய் பாலாஜி என மற்ற அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிகிறார்கள். நண்பர்களாக வரும் 3 பேரும் சரியான தேர்வுகள். வில்லத்தனமான நடிப்பால் கவர்கிறார்கள். குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் அவரது அபார உழைப்பு தெரிகிறது. ஜெயசீலனின் கலை இயக்கம் 1980களை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளது. வேத் சங்கரின் இசையில் பாடல்களும் ஜித்தனின் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. 

    தொரட்டி

    சினேகனின் பாடல் வரிகளும் நம்மை கிராம வாழ்க்கைக்கே கொண்டு செல்கிறது. ராஜா முகமது படத்தொகுப்பும் சிறப்பு. சில காட்சிகளின் நீளம் மட்டும் சின்ன குறை. முதல் பாதியில் கலைப்படம் போல் நகரும் படம் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக மாறுகிறது. கிராமத்து பின்னணியில் நம் பாரம்பரிய வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறது தொரட்டி. குடி பழக்கமும் தீய நட்பும் ஒருவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் என்பதற்கு சாட்சியாகி இருக்கிறது. இதுபோன்ற படங்கள் சமூகத்துக்கு மிகவும் அவசியம். 

    மொத்தத்தில் ‘தொரட்டி’ கொண்டாட வேண்டிய படைப்பு.
    சத்ய சிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் கழுகு 2 படத்தின் விமர்சனம்.
    கொடைக்கானலில் எஸ்டேட் முதலாளியிடம் உதவியாளராக வேலை பார்க்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அந்த பகுதியில் செந்நாய்கள் கூட்டமாக வந்து எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களை கடித்துக் கொல்வதால், மக்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை.  இம்மாதிரியான சூழ்நிலையில் செந்நாய்கள் தாக்குதலை கட்டுப்படுத்த வேட்டை ஆட்களை பணியமர்த்த முடிவு செய்கின்றனர். இதற்காக வேட்டை ஆட்களை தேடி தேனிக்கு செல்கிறார் எம் எஸ் பாஸ்கர். 

    செல்லும் வழியில் கிருஷ்ணா, காளி வெங்கட் இருவரும் துப்பாக்கியுடன் ஓடுவதைப் பார்த்த எம்எஸ் பாஸ்கர் இவர்கள் இருவரும் பெரிய வேட்டைக்காரர்கள் என்று நினைத்துக் கொள்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் திருடர்கள் என்பதும், போலீஸ் துப்பாக்கியை திருடிவிட்டு ஓடுவதும் அவருக்கு தெரியாது.

    கழுகு 2

    அவர்களிடம் சென்று தங்குமிடம், சாப்பாடு, நல்ல சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு அழைக்கிறார் எம்எஸ் பாஸ்கர். அவர்களும் போலீசிடம் இருந்து தப்பிக்க இதுவே நல்ல வழி என்று திருடிய துப்பாக்கியோடு வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் இருவரும் வேட்டைகாரர்கள் என நம்பி, அப்பகுதி மக்களும் வேலைக்கு வருகிறார்கள். எம்எஸ் பாஸ்கரின் மகள் பிந்து மாதவியும் அங்கு வேலைக்கு வருகிறார்.

    ஒரு கட்டத்தில் பிந்து மாதவி செந்நாய்களிடம் தனியாக மாட்டிக் கொள்கிறார். துப்பாக்கியால் சுடவே தெரியாத கிருஷ்ணா ஒருவழியாக செந்நாயை கொன்று பிந்து மாதவியை காப்பாற்றுகிறார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கு எம் எஸ் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, ஏதாவது பெரிய திருட்டு செய்துவிட்டு நாயகியுடன் சந்தோஷமாக வாழலாம் என்று திட்டம் தீட்டுகிறார் கிருஷ்ணா. இறுதியில் நாயகன் திருடி செட்டில் ஆனாரா? நாயகியுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கழுகு 2

    படத்தின் நாயகனாக நடித்த கிருஷ்ணா, கழுகு முதல் பாகத்தில் பார்த்த அதே தோற்றத்தோடு தோன்றி நடிப்பில் மிளிர்கிறார். காதல், நட்பு, ஆக்‌ஷன் என அனைத்திலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா. நாயகி பிந்துமாதவி, காட்சிகளுக்கு அழகாக வந்து, தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவே தென்படுகிறார். 

    கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கழுகு படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் கதை அமைக்கப்படவில்லை. முழுமையாக வேறு கதைகளத்தில் படத்தை நகர்த்தியுள்ளார். திரைக்கதையில் ஒருசில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. படம் முழுவதும் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளது. காட்டின் எழில்மிகு அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.

    கழுகு 2

    படம்முழுக்க கிருஷ்ணாவுடன் பயணிக்கும் காளி வெங்கட் தனது டைமிங் காமெடி மூலம் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவே வருகிறார். அதுவும் ரசிக்கும்படியாகவே இருந்தது. எம்.எஸ். பாஸ்கர் எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். யுவன்சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும் படத்தோடு ஒன்றி போகிறது. கொடைக்கானலின் அழகை தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ராஜா பட்டாச்சாரி. 

    மொத்தத்தில் ‘கழுகு 2’ கரடுமுரடான மலை பயணம்.
    பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தின் விமர்சனம்.
    தூத்துக்குடியில் வசித்து வருகிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. இவரது தாத்தா சாருஹாசன் காம்ரேட்டாக இருக்கிறார். காம்ரேட் என்றால் எதற்கும் அஞ்சாமல், போராடுபவர்கள் என்று அர்த்தம். இந்த கொள்கையை பின்பற்றி கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி வருகிறார்.

    இந்நிலையில், ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிறார் நாயகி ராஷ்மிகா. இவருடன் பழகும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்து சென்னைக்கு செல்லும் நிலையில், ராஷ்மிகாவிடம் தன்னுடைய காதலை சொல்லுகிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால், ராஷ்மிகா விஜய்யின் காதலை ஏற்க மறுத்துவிடுகிறார்.

    விஜய் தேவரகொண்டா

    நாளடைவில் விஜய்யின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ராஷ்மிகா. வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எம்.எல்.ஏ. தம்பியுடன் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் விஜய்க்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த விஷயத்தில் ராஷ்மிகாவும் விஜய்யுடன் காதலை முறித்துக் கொள்கிறார்.

    அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ராஷ்மிகாவிற்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

    இறுதியில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலில் இணைந்தார்களா? ராஷ்மிகாவின் பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா

    விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது காம்ரேட் ஆக நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். 

    விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. இருவருக்குமான காதல், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராஷ்மிகா.

    விஜய் தேவரகொண்டா,

    முதல் பாதி காமெடி, காதல், கொஞ்சம் ஆக்‌ஷன் என்று திரைக்கதை நகர, இரண்டாம் பாதி செண்டிமெண்ட், மெசேஜ் என்று நகர்ந்திருக்கிறார் இயக்குனர் பாரத் கம்மா. ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். படம் பார்க்கும் போது நீண்ட நேரம் செல்வது போல் இருக்கிறது. இதை இயக்குனர் கவனித்திருக்கலாம். மற்றபடி, பெரியதாக குறை ஏதும் தெரியவில்லை.

    ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார். காட்சிகளை தனது கேமரா மூலம் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சராங்க்.

    மொத்தத்தில் ‘டியர் கம்ரேட்’ மிரட்டல்.
    ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா, எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஏ 1’ படத்தின் விமர்சனம்.
    நாயகி தாரா அலிசா ‘தளபதி’ படத்தில் வரும் ரஜினியை போல வீரமிக்க ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். அப்போது ஐயங்கார் தோற்றத்தில் வரும் சந்தானம், ரிட்டேரான ரவுடிகளை அடித்து நொறுக்குகிறார். இதைப்பார்க்கும் தாரா, அங்கேயே சந்தானத்திற்கு முத்தம் கொடுத்து தனது காதலை சொல்லுகிறார்.

    மறுநாள் சந்தானம் ஒரு லோக்கல் ஏரியா பையன் என்று தெரிந்ததும், தன்னுடைய காதலை முறித்துக் கொள்கிறார் தாரா. இந்நிலையில், சமூக சேவகரும், ஊரில் மிகவும் மரியாதையும் கொண்ட தாராவின் தந்தை, நெஞ்சுவலியால் மயங்கி விழுகிறார். அவரை சந்தானம் மருத்துவமனையில் சேர்க்கிறார். இதையறியும், தாராவிற்கு மீண்டும் சந்தானம் மீது காதல் ஏற்படுகிறது. 

    சந்தானம், தாரா

    தாராவை திருமணம் செய்வதற்காக, சந்தானம் தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர், தாய் மீரா கிருஷ்ணன், லொள்ளு சபா மனோகர் ஆகியோரை அழைத்துக் கொண்டு தாரா வீட்டுக்கு செல்கிறார்.

    அங்கு தாராவின் அப்பா, சந்தானம் மற்றும் குடும்பத்தினரை அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால், தாரா மீண்டும் சந்தானம் மீதான காதலை முறித்துக் கொள்கிறார். கடுப்பாகும் சந்தானம், தனது நண்பர்களிடம் தாரா அப்பாவை பற்றி கோபமாக பேச, அவர்கள் சந்தானத்திற்கு நல்லது செய்யும் நோக்கத்தில் தாரா அப்பாவை கடத்தி கொலை செய்து விடுகிறார்கள். 

    இதன்பின் என்ன ஆனது? சந்தானம் நாயகியை எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சந்தானம், தாரா

    நாயகன் சந்தானம், வழக்கம் போல் தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். உடனிருக்கும் நண்பர்களுக்கும் அதிகப்படியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து காமெடியில் ஸ்கோர் செய்ய வைத்திருக்கிறார்.

    நாயகி தாரா அலிசா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். தன் பங்குக்கு வந்து செல்லாமல், கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார்கள். சந்தானத்தின் நண்பர்களாக வரும் மூன்று பேரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

    சந்தானம், தாரா

    எளிமையான கதையை காமெடி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களை அழகாக கையாண்டிருக்கிறார். காமெடியை மட்டுமே முன்னிருத்தி அதில் வெற்றி கண்டிருக்கிறார் ஜான்சன்.

    சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கோபி ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஏ 1’ காமெடி கலாட்டா.
    சந்தோஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் தீபிகா, விஜயராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆறடி’ படத்தின் விமர்சனம்.
    நாயகி தீபிகாவின் தந்தை கிராமத்தில் வெட்டியான் வேலை செய்கிறார். இவருக்கு இரண்டு பெண் ஒரு மகன். அம்மா இல்லாததால் நாயகி தீபிகா தன் தம்பியையும் தங்கையையும் தாயைப்போல பார்த்துக் கொள்கிறார். திருமணம் வயதாகியும் தனது தங்கை தம்பிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்பது உறுதியாக உள்ளார்.

    ஆறடி

    ஒருகட்டத்தில் நாயகியின் தம்பி பெரியவனாகி தனது தந்தைக்கு உதவியாக வெட்டியான் வேலை செய்து தன் அக்காவை நல்லபடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் மின்சாரம் தாக்கி தீபிகாவின் தம்பி இறந்துவிடுகிறான். மகனை காப்பாற்ற சென்ற தீபிகாவின் தந்தைக்கும் மின்சாரம் தாக்கி ஒரு கை செயலிழந்து போகிறது. அவர் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்.

    இதனால் வேறு வழியின்றி தனது தங்கையின் உதவியுடன் வெட்டியாள் வேலையை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் நாயகி தீபிகா. இதனிடயே அப்பகுதியில் வசிக்கும் நாயகன் விஜயராஜ் நாயகியின் மீது காதல் கொள்கிறார். நாயகியையே சுற்றி வரும் நாயகன் சின்சியராக காதலித்து வருகிறார். இறுதியில் நாயகிக்கு அவர் மீது காதல் வந்ததா? தனது குடும்ப சூழ்நிலையை மீறி நாயகனுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    ஆறடி

    சேலத்தில் வெட்டியாள் வேலை பார்க்கும் பெண்ணின் வாழ்க்கை தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் தீபிகா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுடுகாட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஹீரோவாக நடித்துள்ள விஜயராஜ் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் நேர்த்தியாக நடித்துள்ளார். 

    ஆறடி

    இதுவரை யாரும் தேர்ந்தெடுக்காத ஒரு கதையை தேர்ந்தெடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. நாயகியின் தங்கை, தந்தை, தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் மூலக்கரு நன்றாக இருந்தாலும், அதை கொண்டு சென்ற விதத்தில் சற்று சறுகியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். மிக மெதுவாக நகரும் கதையால், கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. வசனங்கள் படத்திற்கு வலுவூட்டி இருக்கிறது. கேமரா ஒர்க் மியூசிக் பரவாயில்லை. 

    மொத்தத்தில் ‘ஆறடி’ பெண்ணின் போராட்டம்.
    சமுத்திரகனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத் நடிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கொளஞ்சி படத்தின் விமர்சனம்.
    சமுத்திரகனி, சங்கவி தம்பதியின் மகன் கிருபாகரன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்கள் அதிகமாக இருக்கிறது. சமுத்திரகனி அவனை கண்டிக்கிறார். இதனால் அப்பா மீது கோபமும் வெறுப்பும் உண்டாகிறது. 

    அந்த வெறுப்பு ஒரு பக்கம் அதிகமாகிக்கொண்டே போக இன்னொரு பக்கம் ஒரு எதிர்பாராத சம்பவத்தின் மூலம் சமுத்திரகனி, சங்கவிக்கு இடையே மோதல் ஏற்பட்டு பிரிகின்றனர். அம்மாவுடன் கிருபாகரன் வந்துவிடுகிறார். சமுத்திரகனியின் பாசத்தை கிருபாகரன் புரிந்துகொண்டாரா? தாய், தந்தை இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

    கொளஞ்சி

    மிக எளிமையான கதையை அழகான கிராமத்து பின்னணியில் காதல், காமெடி கலந்து உணர்வுபூர்வமாக தனராம் சரவணன் இயக்கி இருக்கிறார். அவருக்கு தயாரிப்பிலும் வசனத்திலும் மூடர் கூடம் எம்.நவீன் துணை நின்று இருக்கிறார். சமுத்திரகனி மூலம் சமூகத்துக்கு தேவையான அதிரடி வசனங்களை பேச வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகள்.

    சமுத்திரகனிக்காகவே தயார் செய்த கதாபாத்திரம் போல பாத்திரத்துடன் ஒன்றி போகிறார். மகனை கண்டிக்கும்போதும் ஊரில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகளை சாட்டையடி வசனங்கள் மூலம் எதிர்க்கும்போதும் பொறுப்புள்ள மனிதராக மனதில் பதிகிறார். சமுத்திரகனியின் மகனாக வரும் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அவர் செய்யும் சேட்டைத்தனங்களும் ரசிக்க வைக்கின்றன.

    கொளஞ்சி

    சங்கவி தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். இனி அவருக்கு அம்மா, அக்கா வேடங்கள் நிறைய வரும். படத்தின் இளம் ஜோடியான ராஜாஜி, சைனா நர்வார் இருவரும் இளமை, குறும்புக்கு பொறுப்பு எடுத்துள்ளனர். இவர்களின் காதலை வைத்து நசாத் அடிக்கும் ஒருவரி காமெடிகளால் தியேட்டர் கலகலக்கிறது.

    ’பிச்சைக்காரன்’ மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, ரஜின், நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா என மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவில் கிராமத்து வீடுகளும் ஆறும் அந்த ஒற்றைப்பாறையும் கதையோடு ஒன்ற வைக்கிறது. பாடல்களில் கமர்சியல் தூக்கலாக இருந்தாலும் பின்னணி இசையில் நம்மை நடராஜன் சங்கரன் கவர்கிறார். அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறது.

    கொளஞ்சி

    தந்தை-மகன் உறவில் பருவ வயதில் ஏற்படும் சிக்கல்கள் தான் கதைக்களம். எளிய கதையில் ஆங்காங்கே சுவாரசியமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் கைதட்டவும் வைக்கிறார்கள். ஆனால் பலமான வில்லனோ திருப்பமோ இல்லாத திரைக்கதை என்பதால் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம். அதேபோல் காதல் காட்சிகள் திணிக்கப்பட்டு இருப்பதை போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

    சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நல்ல கருத்தை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் பொழுதுபோக்காக சொன்ன விதத்தில் கொளஞ்சி பாராட்டுகளை பெறுகிறான். படம் பார்ப்பவர்கள் தங்கள் அப்பாவுடனும் மகனுடனும் படத்தின் கதாபாத்திரங்களை பிணைத்துக் கொள்வார்கள்.

    மொத்தத்தில் ’கொளஞ்சி’ பாசப் பிணைப்பு.
    விஜய் சேதுபதி தயாரிப்பில் பிஜு இயக்கத்தில் புதுமுகங்கள் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் விமர்சனம்.
    நாயகனோட அப்பா ஒரு அறிவியல் பேராசிரியர். இவர் மார்ஸுக்கு செல்வதற்கு புது வழியை கண்டு பிடிக்கிறார். அதற்காக ஒரு மலை மேல் ஏறி நின்று முயற்சி செய்கிறார். 20 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்யும் அவருக்கு எந்த பலனும் கிடைக்காமல் இருக்கிறது. 

    போதைக்கு அடிமையாக இருக்கும் இவரது மகனிடம், நண்பர் ஒருவர் அப்பாவை பற்றி கிண்டல் செய்ய அவரை நாயகன் கொலை செய்து விடுகிறார். போலீஸ் இவரை கைது செய்து, போதை மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கிறார்கள். அங்கு நண்பர் ஒருவருடன் இணைந்து தப்பித்து வீட்டுக்கு செல்கிறார் நாயகன். 

    சென்னை பழனி மார்ஸ்

    பின்னர், பழனி மலையில் குறிப்பிட்ட நாளில் நின்றால் மார்ஸுக்கு செல்லலாம் என்ற புது வழியை கண்டுபிடிக்கிறார் நாயகன். அதன்படி, பழனிக்கு நண்பருடன் செல்ல, போலீஸ் இவர்களை பின் தொடர ஆரம்பிக்கிறது.

    இறுதியில் நாயகன் மார்ஸ் சென்றாரா? போலீசிடம் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சென்னை பழனி மார்ஸ்

    நாயகனாக பிரவீண் ராஜா நடித்திருக்கிறார். போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தெளிவாக நடித்திருக்கிறார். சென்டிமென்ட், காதல் ஏதும் இல்லாமல் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நண்பராக வருபவர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் அப்பாவாக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

    ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகிய புதுமுகங்களின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. 

    சென்னை பழனி மார்ஸ்

    இப்படத்திற்கு வசனம் எழுதியதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. வசனங்கள் கைக்கொடுத்தாலும் திரைக்கதை பெரியதாக எடுபடவில்லை. 45 நிமிடத்தில் சொல்ல வேண்டிய கதையை நீண்ட நேரம் எடுத்து போரடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிஜு. தேவையில்லாத காட்சிகள் பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கிறது. 

    நிரஞ்சன் பாபுவின் இசையும், பிஜுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘சென்னை பழனி மார்ஸ்’  தூரம் அதிகம்.
    பார்த்திபன், சரத் லோஹிதஸ்வா, அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா படத்தின் விமர்சனம்.
    கே.ஆர்.மார்க்கெட்டை தன் வசமாக்கிக் கொண்டு தாதாவாக இருக்கிறார் பார்த்திபன். இந்த மார்க்கெட்டுக்கு தாதாவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் சரத் லோஹிதஸ்வா. ஜெயில் இருக்கும் இவர் மகன் வெளியே வந்தவுடன் பார்த்திபனுடன் சண்டை போட்டு மார்க்கெட்டை கைப்பற்ற நினைக்கிறார்.

    பார்த்திபனை அழிக்க சரத்தின் மகன் ஜெயிலில் பலருடன் நட்பை ஏற்படுத்தி ஆள் சேர்க்கிறார். பார்த்திபனுக்கு வலது, இடது கைபோல் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.

    கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா

    இந்நிலையில், சரத் லோஹிதஸ்வா பார்த்திபனை சண்டைக்கு அழைக்கிறார். இதை பார்த்திபன் எப்படி எதிர்கொண்டார்? கே.ஆர்.மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கன்னட மொழியில் வெளியான தாதா இஸ் பேக் என்ற படம், தமிழில் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் தாதாவாக நடித்திருக்கும் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் கிண்டல், நக்கல், நையாண்டியுடன் கலக்கியிருக்கிறார்.

    கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா 1

    தாதா சீட்டை அடைய நினைக்கும் சரத் லோஹிதஸ்வாவின் வில்லத்தனம் சிறப்பு. அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் புதுமுக என்பதால், தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

    தாதா கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் பல திரைக்கதையின் சாயலுடன் இருக்கிறது. நாகேஷ்.வி.ஆச்சார்யாவின் கேமராவும், அனுப்செலின் - முஜிப் ரகுமான் இருவரும் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா’ சுமாரான தாதா.
    அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன், ஸ்ரீரஞ்சனி நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஆடை படத்தின் விமர்சனம்.
    அமலாபால், சரித்திரன், விவேக் பிரசன்னா, ரம்யா ஆகியோர் ஒரு டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மறைவிடத்தில் கேமரா வைத்து பொதுமக்களிடம் நடித்து ஏமாற்றும் பிராங்க் நிகழ்ச்சி செய்கிறார்கள். தொப்பி தொப்பி எனப்படும் அந்த பிராங்க் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. அமலா பாலின் அம்மா ஸ்ரீ ரஞ்சனி அவரை ஒரு சராசரி பெண் போல இருக்க சொல்கிறார். ஆனால் அமலா பாலோ நவ நாகரீக பெண்ணாக மது, புகை, ஆண் நண்பர்கள், திமிரான நடவடிக்கைகள் என தன் மனம் போல இருக்கிறார். பந்தயம் கட்டி அதில் ஜெயிப்பது அமலா பாலின் குணம்.

    அமலாபால், ரம்யா

    ரம்யாவிடம் தான் நிர்வாணமாக செய்தி வாசித்து காட்டுகிறேன் என்று பந்தயம் கட்டுகிறார். பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டியில் நண்பர் ஒருவர் போதைப்பொருள்களை கலந்துவிட சுயநினைவு இல்லாமல் செல்கிறது. விழித்து பார்த்தால் ஆள் இல்லாத கட்டடத்தில் நிர்வாணமாக கிடக்கிறார். அமலா பாலை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? விளையாட்டுக்கு என நடத்தப்படும் பிராங்க் நிகழ்ச்சிகளால் என்ன மாதிரியான ஆபத்துகள் விளைகின்றன என்பதே படம்.

    தமிழ் சினிமாவில் யாரும் செய்ய துணியாத அளவுக்கு சுமார் ஒரு மணி நேரம் நிர்வாணமாக நடித்து இருக்கிறார் அமலா பால். கதைக்கு உண்மையிலேயே தேவைப்பட்டு இருக்கிறது. தன் மானத்தை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பதற்றத்தை தேர்ந்த நடிப்பால் படம் பார்க்கும் நமக்கும் தொற்றிக்கொள்ள வைக்கிறார் அமலா பால். அவருக்கு பாராட்டுகள். அதேபோல் அந்த நிர்வாண காட்சிகளை துளிகூட விரசமோ ஆபாசமோ இல்லாமல் படம் பிடித்து இருக்கிறார்கள் இயக்குனர் ரத்னகுமாரும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும். அவர்களுக்கும் பாராட்டுகள்.

    அமலாபால்,  விவேக் பிரசன்னா

    அமலா பாலுக்கு நாயகிகள் ஏற்றுக்கொள்ள யோசிக்கும் கதாபாத்திரம். நல்லது, கெட்டது இரண்டும் கலந்த கதாபாத்திரம். சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் அமலா பாலின் நடிப்பு நம்மையும் சேர்த்து திகிலாக்குகிறது. அமலாபாலுக்கு நண்பர்களாக ரம்யா, சரித்திரன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீ ரஞ்சனி நம் வீட்டு அம்மாக்களை பிரதிபலிக்கிறார். படத்தில் சவுக்கடி வசனங்கள் பல இடம் பெற்றுள்ளது. 

    வசனத்தில் ஆங்காங்கே இரட்டை அர்த்தங்களும் சமூக அக்கறையும் உள்ளது. ஆனால் இரண்டுமே வலிந்து திணிக்கப்பட்டு இருப்பது படத்தின் பலவீனம். பிரதீபின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கதையுடன் ஒன்ற வைக்கிறது. ‌ஷபீக் முகமது அலி படத்தொகுப்பில் காட்சிகள் நீளமாக தெரிகின்றன. 20 நிமிடங்கள் வரை குறைத்து இருக்கலாம். 

    அமலாபால்

    இறுதிக்காட்சியில் சொல்லப்படும் கருத்து அவசியமான ஒன்றாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் இன்னும் நம்பகத்தன்மையை கூட்டி இருக்கலாம். பிராங்க் நிகழ்ச்சிகளை குறை சொல்வதற்கு பதிலாக பெண்களின் நடத்தையை படம் குறை சொல்கிறதோ என்ற தோற்றம் எழுகிறது. சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லி இருக்கலாம். அமலா பாலின் அர்ப்பணிப்பே ஆடையை தாங்குகிறது.

    மொத்தத்தில் ‘ஆடை’ ஆபாசமில்லா அர்ப்பணிப்பு.
    சுபு இயக்கத்தில் ஷின்வா, அன்கிதா நவ்யா, சுமன், நடிப்பில் வெளியாகி இருக்கும் ’உணர்வு’ படத்தின் விமர்சனம்.
    சுபு ஒரு சமூக சேவகராக இருக்கிறான் இவர் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இவருக்கு விளம்பரம் தேடுகிறார் நாயகி நவ்யா. சுப்பு உடனே இருக்கிறார் நாயகன் ஷின்வா. இவர் கொடுக்கும் அறிவுரைகளின்படி செயல்படுகிறார் சுபு. இவருடைய பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறான் அருள் ஷங்கர். இவர் பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறார். 

    உணர்வு

    இவரது அப்பா தான் கட்சியை ஆரம்பித்ததால், அந்த கட்சியின் முதல்வராக இருக்கும் சுமனை மிரட்டி காரியங்களை சாதித்துக் கொள்கிறான் அருள். இம்மாதிரியான சூழலில் சமூக சேவகரான சுபு பிச்சைக்காரர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு வேலை தந்து அவர்கள் நிலையை மாற்றுகிறார். 

    உணர்வு

    சுபு மீது மிகுந்த பாசம் கொள்கிறார் ஒரு பிச்சைக்காரர். சுபு என்ன சொன்னாலும் செய்யலாம் என்ற உணர்வு பிச்சைக்காரருக்கு உருவாகிறது. அப்படியாப்பட்ட ஒரு உணர்வை அவர்களிடம் உருவாக்கி, அதனால் இவர் ஒரு காரியத்தை சாதிக்க முயல்கிறார். அது என்ன காரியம்? அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை. 

    மனிதர்களின் உணர்வுகளை கருவியாக்கி நடத்தப்படும் அரசியல் என்கிற புதிய யுக்தியை கையாண்டு இருக்கிறார் இயக்குநர் சுபு. அதற்கு பாராட்டுகள். ஆனால் திரைக்கதையாக சரியாக கையாள முடியாமல் திணறியிருக்கிறார். நாயகனும், நாயகியும் புதுமுகங்கள் என்பதால் அனுபவமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

    உணர்வு

    முதல்வராக வரும் அனுபவ நடிகர் சுமன் முதல்வருக்கு தேவையான குணாதிசையங்களுடன் அசத்தி இருக்கிறார். சமூக சேவகராக இயக்குனர் சுபு நடித்துள்ளார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் திரைக்கதை நீளமாக இருப்பது போன்றூ எண்ணத்தோன்றுகிறது. புதுமையான கதையம்சம் இருந்தாலும் அதில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பின்னடைவு. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ’உணர்வு’ உணர முடியவில்லை.
    ×