என் மலர்
தரவரிசை
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி ஹசன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள கடாரம் கொண்டான் படத்தின் விமர்சனம்.
மலேசியாவில் முழு படமும் எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் அடுக்கு மாடியில் இருந்து காயத்தோடு தப்பித்து வருகிறார் விக்ரம். இவரை இருவர் துரத்துகிறார்கள் தப்பித்து செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மயக்கத்தில் இருக்கும் விக்ரமை போலீசார் விசாரணைக்காக மருத்துவமனையில் பாதுகாத்து வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நாசரின் மகன் அபி ஹசன், அவரது மனைவி அக்ஷரா ஹாசனுடன் மலேசியாவில் தனியாக வசித்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியான அக்ஷரா ஹாசனை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் அபி ஹசனே இரவு வேலைக்கு போய் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் அபி ஹசனுக்கு டியூட்டி போடப்படுகிறது. இவருடய கண்காணிப்பில் தான் விக்ரம் உள்ளார். யாரோ சிலர் விக்ரமை கொல்லப் பார்க்கிறார்கள். உயிருக்குப் போராடும் விக்ரமை அபி ஹசன் காப்பாற்றுகிறார். போலீஸ் விசாரணையில் விக்ரம் ஒரு திருடன் என்பது தெரிய வருகிறது.

அப்பொழுது வீட்டில் தனியாக இருக்கும் நாயகி அக்ஷரா ஹாசனை கடத்தி வைத்திருப்பதாகவும், உடனடியாக விக்ரமை மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வந்து தன்னிடம் சேர்த்தால் தான் அக்ஷரா ஹாசனை விடுவிக்க முடியும் என்று அபி ஹசனுக்கு போனில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி விக்ரமை மருத்துவமனையிலிருந்து அழைத்துக்கொண்டு நாயகியை மீட்பதற்காக செல்கிறார் அபி ஹசன். இதனால் அபி ஹசனும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கப்படுகிறார். விக்ரம் யார்? அவரை கொல்ல முயற்சிப்பது யார்? அபி ஹசனும், அக்ஷராவும் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை

படம் முழுக்க விக்ரம் வசனங்கள் ஏதும் பேசாமல் சைலண்டாக பேசி, பார்வையிலேயே வைலண்டான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விக்ரம். வித்தியாசமான கெட்டப், லுக் என படம் முழுக்க ஸ்டைலிஷாக இருக்கிறார் விக்ரம். விக்ரம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும்.
கர்ப்பிணியாக நடித்திருக்கும் அக்ஷராவுக்கு கொஞ்சம் நேரம் மட்டும் தான் படத்தில் வேலை. இளம் வயதில் இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள அவர், ஒவ்வொரு பிரேமிலும் தடம் பதிக்கிறார். நாசரின் மகன் அபி ஹசனுக்கு இதுதான் முதல்படம். படம் முழுக்க வரும் இவர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் லேனா, வின்சென்ட் ராஜதுரை உள்பட அனைவரும் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

தூங்காவனம் படத்தை போன்று கடாரம் கொண்டான் படத்தையும் ஆக்ஷன் ஜானரில் எடுத்துள்ளார் ராஜேஷ் எம். செல்வா. சண்டை காட்சிகள், விஷுவல் என அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது. படம் முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். 2-ம் பாதி ஆக்ஷன் படங்களுக்கான விறுவிறுப்பில்லாமல் செல்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஸ்ரீனிவாஸ் குதாவின் கேமரா படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.
மொத்தத்தில் ’கடாரம் கொண்டான்’ விறுவிறுப்பு குறைவு.
டிஸ்னி தயாரிப்பில் ஜோன் பேவ்ரோவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தி லயன் கிங்’ படத்தின் விமர்சனம்.
1994 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளியான அனிமேஷன் திரைப்படம் `தி லயன் கிங்'. இந்தப் படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். 25 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் வெளியாகி உள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்னியின் ’தி லயன் கிங்’ திரைப்படம் அனிமேஷனில் வெளியாகி உலகமெங்கும் பிரபலமானது. தான் வாழும் பரந்த நிலப்பரப்பை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ராஜா சிங்கம் முபாசா. அவரை வீழ்த்தி தான் ராஜாவாக திட்டம் தீட்டி வருகிறார் அவரது தம்பி சிங்கம் ஸ்கார். இந்நிலையில் முபாசாவுக்கு அழகிய ஆண்குழந்தையாக குட்டிசிங்கம் சிம்பா பிறக்கிறான். அவனை அடுத்த ராஜாவாக அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் முபாசாவை கொன்று குட்டி சிம்பாவை துரத்திவிட்டு தான் ராஜாவாகி கொடூர ஆட்சி செய்கிறான் ஸ்கார். இதையடுத்து சிம்பா பெரியவனாக வளர்ந்து தனது தந்தையின் காட்டை ஸ்காரிடமிருந்து, எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை.
`அயர்ன் மேன்', `தி ஜங்கிள் புக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோன் பேவ்ரோவ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்றாலும், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லைவ் ஆக்ஷன் அனிமேஷன் முறையில் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

இப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு அதிகம். நவீன தொழில்நுட்பத்தை இயக்குனர் சிறப்பாக கையாண்டுள்ளார். ஆயிரக்கணக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்திருக்கிறார்கள் அத்தனை பேரின் உழைப்பும், திரையின் உச்ச அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறது.
இப்படத்திற்கு வசனம் தான் மிகப்பெரிய பலம். முக்கியமாக அதற்கு டப்பிங் பேசிய விதம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. 'தி லயன் கிங்' படத்தின் தமிழ் வெர்ஷனில் இடம்பெறும் கேரக்டர்களுக்கு சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரவிசங்கர், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் டப்பிங் கொடுத்திருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்தில் தனித்துவமான வில்லத்தனத்தால் மிரட்டிய அரவிந்த் சாமி, இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமான ஸ்காருக்கு குரல் கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமானதாகவும் பல பரிணாமங்களை கொண்டதாகவும் உள்ள ஸ்கார் கதாபாத்திரத்திற்கு தனது குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் என்றே கூறலாம். படத்தின் ஹீரோவான சிம்பாவிற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார். காதல், நட்பு, சென்டிமெண்ட் என வெவ்வேறு உணர்வுகளை கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு டப்பிங் செய்து அசத்தி இருக்கிறார் சித்தார்த்.
நண்பர்களாக வரும் டிமுன் மற்றும் பும்பாவிற்கு சிங்கம் புலியும், ரோபோ சங்கரும் குரல் கொடுத்துள்ளனர். காமெடிக்கு பெயர்போன இவர்கள் இருவரும், இந்த இரு நகைச்சுவை கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ள விதம் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றனர். தூதுவனாக வரும் சாசு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ள மனோபாலாவும் காமெடிக்கு பஞ்சம் வைக்கவில்லை, சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக சாசு பறவை பேசினால் இவர் குரலை தவிற வேறு எந்த குரலும் பொருந்தாது என்பது போன்ற எண்ணம் தோன்றுகிறது. ஹேன்ஸ் சிம்மெரின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘தி லயன் கிங்’ விஷுவல் கிங்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, எலிசா, சார்லி, ஆனந்த் ராஜ், நடிப்பில் வெளியாகி இருக்கும் கூர்கா படத்தின் விமர்சனம்.
சென்னையில் வாழக்கூடிய கூர்கா பரம்பரையில் பிறந்தவர் யோகி பாபு. போலீசாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் இவர் போலீஸ் தேர்வுக்காக செல்கிறார். உடற்தகுதி இல்லாததால் வெளியேற்றப்படுகிறார். இவரைப் போலவே அங்கு தேர்வுக்காக வந்த அண்டர்டேக்கர் என்னும் நாயும் எதிலும் தேர்ச்சி பெறாததால் வெளியேற்றப்படுகிறது. இதிலிருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். இந்த சூழலில் மனோபாலா நடத்தக்கூடிய செக்யூரிட்டி சர்வீசில் வேலைக்கு சேர்கிறார் யோகிபாபு.

அவரை அமெரிக்க தூதரான நாயகி எலிசா வீட்டில் செக்யூரிட்டியாக போடுகிறார் மனோபாலா. நாயகியை கண்டவுடன் காதல் வயப்படுகிறார் யோகிபாபு. இதனை அறிந்த மனோபாலா, யோகி பாபுவை வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்கிறார். இதையடுத்து, நாயகியும் யோகி பாபு பார்ப்பதற்காக அடிக்கடி வணிக வளாகத்திற்கு வந்து செல்வதுமாக இருக்கிறார். இந்த சூழலில் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு உடைய ராஜ் பரத் தலைமையிலான கும்பல் வணிக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். நாயகி மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை ராஜ் பரத் தலைமையிலான கும்பல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்கிறது.

தகவலறிந்து போலீஸ் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தாலும் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இத்தகைய சூழலில் செக்யூரிட்டிகளான யோகிபாபு, சார்லி மற்றும் நாய் ஆகிய மூன்று பேரும் ராஜ் பரத் கும்பலிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இவர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனரா? என்பது மீதிக்கதை.
படம் முழுக்க வரும் யோகிபாபு, காதல், காமெடி என கலக்கியிருக்கிறார். அமெரிக்க தூதராக வரும் நாயகி எலிசா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றியுள்ள சார்லி, நேர்த்தியான நடிப்பால் கவர்கிறார். 15 நிமிடமே படத்தில் வந்தாலும் காமெடியில் தெறிக்க விடுகிறார் ஆனந்த் ராஜ். யோகிபாபுவுடன் வரும் நாயும் சிறப்பாக நடித்துள்ளது.

இயக்குனர் சாம் ஆண்டன், கூர்காக்கள் சந்திக்கும் இன்னல்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. மற்றபடி காமெடியை நம்பி மட்டுமே படம் எடுத்துள்ளார். ஒருசில இடங்களில் காமெடி எடுபடவில்லை. குழந்தைகளை கவரும் வகையில் படம் எடுத்துள்ளார். ராஜ்பரத் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். ராஜ் ஆர்யனின் இசை சொல்லும்படி இல்லை. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ’கூர்கா’ காமெடி தர்பார்.
டான் சான்டி இயக்கத்தில் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா, காங் நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொரில்லா’ படத்தின் விமர்சனம்
நாயகன் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். இவர்களுடன் குரங்கும் இருக்கிறது. நாயகன் ஜீவா சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே மதன் குமார் குடியேறுகிறார்.

ஊரில் விவசாயம் செய்ய முடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயலும் மதன் குமாரை நண்பர் ஒருவர் காப்பாற்றி, சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். விவசாயம் அழிந்து கொண்டு வருகிறதே என்று மிகுந்த வருத்தத்தோடு இருக்கும் இவர், பணம் சம்பாதிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் 4 பேரும் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். இதற்கு உண்டான திட்டங்கள் தீட்டி வங்கியில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த குரங்கு அபாய பட்டனை அழுத்தி விடுகிறது. போலீஸ் அவர்களை சுற்றிவளைக்கிறது. இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா? பணத்தை கொள்ளையடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
நகைச்சுவை படம் என்றாலும், விவசாயிகளின் பிரச்சனைகளை வைத்து திரைக்கதை அமைத்து நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர் டான் சான்டி.

ராதாரவி, யோகிபாபு படத்தின் பிற்பாதியில் வந்தாலும், காமெடியால் அனைவரையும் கவர்கின்றனர். படம் ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது. குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. இருப்பினும் பாடல்கள் சுமார் ரகம் தான். ரூபனின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.
மொத்தத்தில் ’கொரில்லா’ நகைச்சுவை விருந்து.
செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த், பசுபதி, கிஷோர், சூரி, அப்புகுட்டி, ரவிவர்மா நடிப்பில் உருவாகி இருக்கும் வெண்ணிலா கபடி குழு 2 படத்தின் விமர்சனம்.
1989-ல் நடக்கக்கூடிய கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நாயகன் விக்ராந்த் சொந்தமாக ஆடியோ கடை வைத்திருக்கிறார். விக்ராந்த்தின் தந்தை பசுபதி அரசு பஸ் டிரைவராக இருக்கிறார். இவருக்கு கபடி மீது அலாதி பிரியம். இது விக்ராந்த்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது போன்ற சூழலில் பக்கத்து ஊரைச் சேர்ந்த நாயகியை பார்த்தவுடனே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார் விக்ராந்த்.

நாயகியின் தந்தை ரவி மரியா மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறார். மகள் காதலிப்பது தெரியவர, விக்ராந்த்தை கொள்வதற்கு ஆள் அனுப்புகிறார் ரவி மரியா. விக்ராந்த்தை கொல்ல வந்தவர்களை அடித்து துவம்சம் செய்து தந்தை பசுபதி மகனை மீட்டு செல்கிறார். இதையடுத்து தான் விக்ராந்த் தனது தந்தையின் மதிப்பை உணர்கிறார்.
தந்தை பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பதை தனது அம்மா மூலம் தெரிந்து கொள்ளும் விக்ராந்த். தன்னை கபடியில் சிறந்த வீரனாக ஆக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறார் விக்ராந்த். விக்ராந்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் பசுபதி.

ஆனால் விக்ராந்த் சென்னைக்கு போகாமல் பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு செல்கிறார். அங்கு பிரிந்து கிடக்கும் வெண்ணிலா கபடிக் குழுவினரை ஒன்றிணைத்து அவர்களிடம் இருந்து கபடி விளையாட கற்றுக்கொள்கிறார். இறுதியில் தந்தை வெற்றி பெற நினைத்த அணியை நாயகன் மோதி வெற்றி பெற்றாரா? நாயகியுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பது மீதி கதை
முதல்பாதியில் குடும்பம், காதல் என சுற்றி வரும் இளைஞனாகவும், பிற்பாதியில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தீவிரமாக பயிற்சி எடுத்து கபடி விளையாடுவது என சிறப்பாக நடித்துள்ளார் விக்ராந்த். நாயகிக்கு பெரும் பங்கு இல்லாத போதும், வரும் காட்சிகளில் அழகால் ரசிக்க வைக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சூரி ஒரளவு காமெடி செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் முதல் பாகத்தை போன்று காமெடி இப்படத்தில் இல்லை. நாயகனின் தந்தையாக வரும் பசுபதி எதார்த்தமாக நடித்து மனதில் நிற்கிறார். குறிப்பாக தந்தை மகனுக்கு இடையிலான சென்டிமென்ட் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ரவிமரியா அப்புகுட்டி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வெண்ணிலா கபடிக்குழு படம் கொஞ்சம் நீளமாக இருப்பது போல் தோன்றுகிறது. இயக்குனர் செல்வசேகரன் திரைக்கதையை சற்று மெருகேற்றி இருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 80களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் செல்வகணேஷ். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமியின் கேமரா படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில் ’வெண்ணிலா கபடி குழு 2’ கலகலப்பில்லாத கபடிக்குழு
மகாசிவன் இயக்கத்தில் ஹரி சங்கர், மோனிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’தோழர் வெங்கடேசன்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் ஹரி சங்கர். தாய் தந்தை இல்லாத இவர், சோடா தயாரித்து கடை கடையாக போடும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் நாயகி மோனிகா தனது அம்மாவுடன் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் இருக்கக்கூடிய கவுன்சிலர் முதற்கொண்டு நாயகியை தவறாக பார்ப்பதை அறியும் நாயகன், நாயகி வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார். இதற்கு நாயகி மறுப்பு தெரிவிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் நாயகியின் தாயார் இறந்து விடுகிறார். தாய் இல்லாததால் மற்றவர்கள் தன்னை தவறாக பார்க்கிறார்கள் என்பதை உணரும் நாயகி, விரக்தியில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அந்த வழியாக வரும் நாயகன் நாயகியை காப்பாற்றி, தன்னுடன் தங்க வைக்கிறார். நாயகனுக்கு உதவியாக சோடா கம்பெனியில் பணிபுரிகிறார் நாயகி. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து வரும் நிலையில், நாயகனுக்கு அரசுப் பேருந்து மோதி இரண்டு கைகளையும் இழக்கிறார். நாயகனுக்கு ஏற்பட்ட விபத்திற்கு நஷ்டஈடு கேட்டு கோர்ட்டுக்கு செல்கிறார்.
அங்கு பல வாய்தாக்களுக்கு பிறகு நாயகனுக்கு 20 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. ஆனால் அரசோ நாயகனுக்கு உரிய நஷ்டஈடு தராமல் இழுத்தடிக்கிறது. நாயகன் மீண்டும் கோர்ட்டுக்கு செல்கிறார், அங்கு அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நாயகனிடம் ஒப்படைக்கின்றனர். உரிய தொகையை அரசு வழங்கிய பிறகு பஸ்சை பத்திரமாக திருப்பித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையடுத்து, அந்த பேருந்தை நாயகன் எப்படி பாதுகாத்தார்? அரசு பேருந்தை பத்திரமாக ஒப்படைத்து இழப்பீடு வாங்கினாரா? நாயகனும் நாயகியும் திருமணம் செய்து கொண்டார்களா? என்பதே மீதி கதை.

நாயகன் இரண்டு கைகளும் இல்லாமல் மிகவும் திறம்பட நடித்திருக்கிறார். நாம் படத்தில் பார்க்கும் பொழுது கதாபாத்திரம் மட்டுமே தெரிகிறது, ஹரி சங்கர் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி மோனிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் இப்படத்தில் அவருக்கு நீண்ட வசனங்கள் இல்லை என்றாலும் பார்ப்பதற்கு அழகு பதுமையாக வரும் இவர் ரசிகர்களை கவர்கிறார்.
இயக்குனர் மகாசிவன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் பல சொல்லி இருப்பது மட்டுமல்லாமல், அரசு பேருந்துக்களால் வாழ்வாதாரத்தை இழந்து தன் கை கால் இல்லாத நிலையிலும் கோர்ட்டுக்கு சென்று இன்று வரையிலும் சரியான நிவாரணம் கிடைக்காமல் வாழ்க்கையை தொலைத்து அவதிப்படுபவர்களின் ஆவணங்களை மிக அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி கவுன்சிலர், போலீஸ் ஏட்டு மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் நண்பர்கள் என அனைவரும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். திரையில் பார்க்கும் பொழுது சில இடங்களில் சோர்வு ஏற்பட்டாலும் இந்த கதையானது இவ்வாறு வாழ்க்கையை தொலைத்து கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டும் என நம்பினால் இந்த படம் சிறப்பானதாகவே தோன்றும். இப்படத்தை தயாரிப்பாளர் தயாரிப்பதற்கு உதவியாக இருந்த சுசீந்திரனுக்கும் பாராட்டுக்கள். சகிஷ்னா இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை.
மொத்தத்தில் ’தோழர் வெங்கடேசன்’ பார்க்க வேண்டிய படம்
சந்துரு இயக்கத்தில் தீரஜ், துஷாரா, பிரதாயினி சுர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் விமர்சனம்.
ஹீரோ தீரஜிற்கும் ஹீரோயின் துஷாராவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பனின் வீட்டிற்கு செல்கிறார் தீரஜ். குடிப்பழக்கம் இல்லாத தீரஜிடம், போதை மருந்து குறித்து நண்பன் ஒருவன் விளக்குகிறான். அப்போது துஷாராவை வெறுப்பேற்றும் நோக்கில் நண்பனிடம் போதை மருந்தை வாங்கி போட்டோ எடுக்க முயல்கிறார் தீரஜ். எதிர்பாராத விதமாக போதை மருந்தை எடுத்து கொள்கிறான்.

இன்னொரு புறம், போதை மருந்து கடத்தல் தொடர்பாக பத்திரிக்கை நிருபர் பிரதாயினி சுர்வா செய்திகளை சேகரித்து வருகிறார். இதனை அறிந்த கடத்தல் கும்பலும் போலீசின் உதவியுடன் போதை மருந்து பற்றி எழுதும் பத்திரிக்கை நிருபரை மிரட்டி வழிக்கு கொண்டுவர பார்க்கிறார்கள். இந்த இரண்டு கதையும் கடைசியில் ஓரிடத்தில் இணைகிறது. போதை ஒருவரது வாழ்க்கையை எந்த அளவு பாதிக்கிறது? என்பதே மீதிக்கதை.

தீரஜ் அறிமுக நாயகன். அப்பாவி முகத்தோற்றம் கொண்ட கதாபாத்திரத்திற்கு அலட்டல் இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரும்பகுதியில் வந்துள்ள இவர், அறிமுக நாயகன் என்ற பதற்றமின்றி நடித்துள்ளார். துஷாரா, பிராதாயினி இருவரும் படத்தில் 10 முதல் 15 நிமிடங்களே வந்தாளும் அழகால் ஈர்க்கின்றனர்.
சந்துரு இயக்கத்தில் முதல் படம். தனித்துவமான திரைக்கதையை தேர்ந்தேடுத்து, அதை சரியாக செய்தும் முடித்திருக்கிறார். முதல் படத்திலேயே பல்வேறு திருப்பங்களுடன் திரைக்கதையை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.

படத்தின் பெரும்பகுதி ஒரு வீட்டிற்குள் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். சில ஸ்பெஷல் எபெக்ட்களை கேமராவிலேயே செய்து காட்டி கண்களுக்கு விருந்தளிக்கிறார். கே.பி.யின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ’போதை ஏறி புத்தி மாறி’ நல்ல முயற்சி.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா, விக்னேஷ் காந்த், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் விமர்சனம்
9 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் களவாணி. அந்த கதைக்களத்தில், இடம்பெற்ற கதாபாத்திரங்களை கொண்டு புதுமையான கதையுடன் களவாணி2 என்ற கலகலப்பான படத்தை கொடுத்து இருக்கிறார் சற்குணம். விமல் ஊருக்குள் களவாணித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞர். அவரது நண்பர் விக்னேஷ் காந்த். விமலை வெளிநாட்டுக்கு வேலைக்கு போக சொல்லி அப்பா இளவரசு கண்டிக்கிறார். ஆனால் அம்மா சரண்யாவோ விமலுக்கு ஆதரவு கொடுக்கிறார்.

விமல் போட்டியிடுவது குறித்து ஊரில் யாருமே கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் துரை சுதாகரால் அவமானப்படுத்தப்படும் விமல் சீரியசாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.

களவாணி முதல் பாகத்தில் பார்த்த அறிக்கியை கண்முன் கொண்டு வந்து இருக்கிறார். அவர் விக்னேஷ் காந்துடன் சேர்த்து கஞ்சா கருப்பை ஏமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. விமலுக்கு பக்கபலமாக விக்னேஷ் காந்த். மைண்ட் வாய்சில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஓவியாவுக்கு இதில் பாவடை தாவணியில் வரும் வேடம். விமலுக்கு தைரியம் சொல்லும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.மணி அமுதவன், வி2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது. இந்த களவாணியும் நம்மை ரசிக்க வைக்கிறான்.
மொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து.
இப்படியே சென்றுகொண்டு இருக்கும்போது ஊரில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதில் விமலின் மாமா துரை சுதாகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓவியாவின் அப்பாவும் முன்னாள் பிரசிடெண்டுமான வில்லன் ராஜ் போட்டியிடுகிறார். இவர்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்தில் விமலும் போட்டியிடுகிறார்.

விமல் போட்டியிடுவது குறித்து ஊரில் யாருமே கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் துரை சுதாகரால் அவமானப்படுத்தப்படும் விமல் சீரியசாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.
தஞ்சை கிராமங்களை அப்படியே கண்முன் நிறுத்துவது முதல், நகைச்சுவை, பாடல்கள் என எந்த விஷயத்திலும் களவாணி 2 களவாணிக்கு முன் சோடை போகவில்லை. கலகலப்பாக படத்தை நகர்த்தி கடைசி அரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள். விமலுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற வேடம்.

களவாணி முதல் பாகத்தில் பார்த்த அறிக்கியை கண்முன் கொண்டு வந்து இருக்கிறார். அவர் விக்னேஷ் காந்துடன் சேர்த்து கஞ்சா கருப்பை ஏமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. விமலுக்கு பக்கபலமாக விக்னேஷ் காந்த். மைண்ட் வாய்சில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஓவியாவுக்கு இதில் பாவடை தாவணியில் வரும் வேடம். விமலுக்கு தைரியம் சொல்லும் இடங்களில் கவனிக்க வைக்கிறார்.
இளவரசுவும் சரண்யாவும் தஞ்சாவூர் கிராமத்து தம்பதியை தங்கள் அனுபவ நடிப்பால் கொண்டு வந்து இருக்கிறார்கள். துரை சுதாகர் தனது கதாபாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்துகிறார். விமலை அவமானப்படுத்தும் இடத்தில் சிறப்பான நடிப்பு. வில்லன் ராஜுக்கும் இது முதல் படம் போல தெரியவில்லை. மசானியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.மணி அமுதவன், வி2, ரொனால்டு ரீகன் கூட்டணியில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜா முகமதுவின் படத்தொகுப்பில் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது. இந்த களவாணியும் நம்மை ரசிக்க வைக்கிறான்.
மொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து.
கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, ஹரிஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராட்சசி’ படத்தின் விமர்சனம்.
கிராமத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அந்த பள்ளிக்கூடத்தில் எதுவும் சரியில்லை. மிகவும் சீர் கெட்டு இருக்கிறது. இதை பார்க்கும் ஜோதிகா, தரமான கல்வியை தந்து உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
முதல் முயற்சியாக பள்ளியை சுகாதார சீர்கேட்டில் இருந்து மீட்டெடுக்கிறார். பின்னர் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை ஒழுங்கு படுத்துகிறார். இதையும் தாண்டி தனியார் பள்ளி உரிமையாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவிற்கு தொல்லை கொடுக்கிறார்.
இவைகளை சமாளித்து அந்த பள்ளிக் கூடத்தை ஜோதிகா எப்படி மேம்படுத்தினார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது சமூக அக்கறை கொண்ட படத்தின் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை மிகச்சிறப்பாக சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தனியார் பள்ளி உரிமையாளராக வரும் ஹரிஷ் பெராடி, தனது பள்ளி எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் வேலைகளில் நேர்மை இருப்பது சிறப்பு. ஜோதிகாவுடன் நெருக்கமாக பழகும் சிறுவனின் நடிப்பு அபாரம். சில காட்சிகளில் மட்டுமே வரும் பூர்ணிமா பாக்யராஜ்ஜின் நடிப்பு நிறைவு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சத்யன், பி.டி.மாஸ்டராக நகைச்சுவையில் கைக்கொடுத்திருக்கிறார். உதவி தலைமை ஆசிரியராக கவிதா பாரதியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

கல்வி, பள்ளிக்கூடம் என முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராஜ். அரசு பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும், ஒழுங்குபடுத்தும் முறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குறிப்பாக பத்தாம் வகுப்பில் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக 9ம் வகுப்பில் மாணவர்களை தேர்ச்சி பெறாமல் செய்வது, அந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் 10ம் வகுப்பில் சேர்த்து தேர்ச்சி பெற வைத்து அதில் வெற்றி காண்பது, இயக்குனருக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். பள்ளி கூடத்தை மட்டுமே மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், இந்த படத்தில் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
சான் ரோல்டன் இசையில் பாடல்கள் அதிகமாக ஈர்க்க வில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க வைத்திருக்கிறார். கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ராட்சசி’ வீரமானவள்.
ஜெகன், மனிஷாஜித், சாம்ஸ் நடிப்பில் முருகலிங்கம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ படத்தின் விமர்சனம்.
நாயகன் ஜெகன் தனது மாமா மகளான நாயகி மனிஷாஜித்தை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மனிஷாவின் அண்ணன் சாம்ஸ் முட்டுக்கட்டை போடுகிறார்.
தனது தங்கையை போலீஸ் துறையில் சாதித்தவனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் சாம்ஸ். போலீசை பார்த்தாலே பயந்து ஓடும் ஜெகன் காதலிக்காக, போலீஸ் ஆகலாம் என முடிவெடுக்கிறார். இந்த சூழலில் ஹெட் கான்ஸ்டேபிலாக இருக்கும் நண்பனின் உதவி மூலம் ஜெகன் போலீசாகிவிடுகிறார்.

இந்நிலையில், அதே ஊரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் பிறைசூடன். அவரின் மகளான டிசோசா, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நிருபர் விவேக்ராஜை காதலிக்கிறார். இது பிறைசூடனுக்கு தெரியவர, மகள் டிசோசாவை கண்டிக்கிறார். ஆனால் டிசோசா, காதலன் விவேக்ராஜை தான் கரம்பிடிப்பேன் என தந்தை பிறைசூடனிடம் துணிச்சலாக சொல்லி விடுகிறார்.
டிசோசா தனது காதலனுடன் ஜெகன் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரி கேட்கிறார். இதையேற்று ஜெகன் திருமணம் செய்து வைக்கிறார். இந்த விஷயம் பிறைசூடனுக்கு தெரியவர, ஜெகனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்த தொல்லையில் இருந்து மீண்டு போலீஸ் துறையில் சாதித்தாரா? காதலி மனிஷாவை ஜெகன் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

காமெடியனாக இருந்த ஜெகன் இந்த படம் மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஆக்ஷன், எமோஷனல் இல்லாமல் காமெடி நாயகனாக வருகிறார். சீரியசான கதாநாயகனாக விவேக் ராஜ். நடிப்பில் குறை வைக்கவில்லை. மனிஷா ஜித், டிசோசா இருவரும் கவர்ச்சி, காதல் காட்சிகளில் விருந்து படைக்கிறார்கள். வில்லனாக பிறைசூடன் கச்சிதமான நடிப்பு. சாம்ஸ், அம்பானி சங்கர், ரவிகுமார், நிகிதா ஆகியோரும் சரியான தேர்வுகள்.
எளிமையான கதையை அதில் காதலையும் நகைச்சுவையும் சேர்த்து திரைக்கதையாக்கி இருக்கிறார் காரைக்குடி நாராயணன். முருகலிங்கம் இயக்கத்தில் இளமை துள்ளுகிறது. சிவராஜின் ஒளிப்பதிவும் கவின் சிவாவின் இசையும் படத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கியுள்ளன.
மொத்தத்தில் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ காமெடி கல்யாணம்.
ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹோலாண்டு நடிப்பில் வெளியாகி இருக்கும் ”ஸ்பைடர் மேன் பார் பிரெம் ஹோம்” படத்தின் விமர்சனம்
பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் மேன்) நியூ யார்க்கில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் மரியா ஹில்லை காதலித்து வருகிறார். இந்த வேளையில் அவர் படிக்கும் கல்லூரியிலிருந்து, மாணவர்களை ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு பஞ்சபூத அரக்கர்கள் நீர் மூலம் ஐரோப்பாவின் வெனிஸ் நகரை தாக்குகின்றனர். அவர்களின் இந்த தாக்குதலை ஸ்பைடர் மேனால் தடுக்க முடியவில்லை, இருப்பினும் குவின்டின் பெக் பஞ்சபூத அரக்கர்களின் சதியை முறியடிக்கிறார்.

பஞ்ச பூத அரக்கர்களை எதிர்த்து குவின்டின் பெக் செய்யும் சண்டைகள் ஸ்பைடர் மேனை ஈர்க்கிறது. கடந்த முறை சதி முறியடிக்கப்பட்டதால், நெருப்பு மூலம் பஞ்சபூத அரக்கர்கள் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை ஸ்பைடர் மேன் முறியடிக்க முயலும் வேளையில், குவின்டின் பெக் சாதுரியமாக செயல்பட்டு பஞ்ச பூத அரக்கர்களின் சதியை முறியடிக்கிறார்.
அந்தத் தருணத்தில் அயர்ன் மேனின் சக்தி வாய்ந்த கண்ணாடி ஸ்பைடர் மேனுக்குக் கிடைக்கிறது. ஆனால் ஸ்பைடர் மேன் அந்த சக்தி வாய்ந்த கண்ணாடியை குவின்டினுக்கு தந்துவிடுகிறான்.
ஆனால், உண்மையில் குவின்டின் பெக், நல்லவன் இல்லை என்பதும், பஞ்சபூத அரக்கர்கள் தாக்குவதுபோல, பொய் காட்சிகளை உருவாக்கி பயமுறுத்தியதும் பிறகுதான் ஸ்பைடர் மேனுக்குத் தெரிகிறது.

அதற்குள், அயர்ன் மேனின் சக்தி வாய்ந்த கண்ணாடியை வைத்து செயற்கைக்கோள்களில் உள்ள ஆயுதங்களையும் டுரோன்களையும் கட்டுப்படுத்தி, தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறான் குவின்டின்.
இந்தத் தாக்குதல்களிலிருந்து ஐரோப்பாவை ஸ்பைடர் மேன் காப்பாற்றினாரா? காதலியை கரம்பிடித்தாரா? என்பது மீதிக் கதை.

படம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் காதல் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. துறுதுறு இளைஞராக ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹோலண்டு நடித்து அசத்தியுள்ளார். குவின்டின் பெக் ஸ்மார்டான வில்லனாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரமாக ஸ்பைடர் மேனும் குவின்டின் பெக்கும் சாகசம் நிகழ்த்துவது ரசிகர்களை ஈர்த்துள்ளது.
ஸ்பைடர் - மேன் பட வரிசைகளில் படத்தின் துவக்கத்திலிருந்தே சிறுசிறு சாகசங்களின் மூலம் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள். இந்தப் படத்தில் முதலில் வரும் சாகசத்திற்குப் பிறகு, படத்தின் பிற்பாதி வரை, சற்று மெதுவாகவே நகர்கிறது. இருந்தபோதும், மார்வெல் பாணி சூப்பர் ஹீரோ பட ரசிகர்கள் இந்தப் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.
மொத்தத்தில் ”ஸ்பைடர் மேன் பார் பிரெம் ஹோம்” மார்வெல் ரசிகர்களுக்கு மட்டும்.
பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா நடிப்பில் கேரி டாபர்மேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ படத்தின் விமர்சனம்.
அனபெல், அனபெல் கிரியேஷன்ஸ் ஆகிய பட பாகங்களை தொடர்ந்து அனபெல் கம்ஸ் ஹோம் என்ற பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது.
பேட்ரிக் வில்சனும், வேரா பார்மிகா இருவரும் பல பேய்களின் ஆன்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் அடைத்து வைக்கிறார்கள். இதில் அனபெல் பொம்மையில் இருக்கும் பேயை வீட்டிற்குள் கொண்டு வந்து அடைக்கிறார்கள். அப்போது தன் மகளுடன் கூடிய மூன்று சிறுமிகளை வீட்டில் தனியாக விட்டு வெளியே செல்கிறார்கள்.

அந்த மூன்று சிறுமிகளும், பேய்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் சென்று அனபெல் இருக்கும் கண்ணாடி அறையை திறந்து விட்டுவிடுகிறார்கள். வெளியே வரும் அனபெல் வீட்டில் இருக்கும் மற்ற பேய்களையும் எழுப்பி விட்டுவிடுகிறது.
இறுதியில் அனபெல்லை மீண்டும் கண்ணாடி அறைக்குள் அடைத்தார்களா? சிறுமிகள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பேய் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் தான் என்று மீண்டும் இப்படம் மூலம் நிருபித்திருக்கிறார்கள். பேய் வரும் ஒவ்வொரு நிமிடமும் இதயம் அப்படியே ஒரு நிமிடம் நிற்பது போல் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கேரி டாபர்மேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மெதுவாக தொடங்கும் திரைக்கதை போகப்போக வேகம் பிடிக்கிறது. பல காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பவர்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மைக்கேல் பர்கெசின் ஒளிப்பதிவும், ஜோசப் பிஷாராவின் இசையும் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ மிரட்டல்.






