என் மலர்tooltip icon

    தரவரிசை

    தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் விமர்சனம்.
    எமலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார் ராதாரவி. இவரது மனைவி ரேகா. ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் தன் அரியணையும், ஆட்சியையும் யாருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறார். சித்திரகுப்தராக இருக்கும் ரமேஷ் திலக், எமலோக பதவிக்கு ஆசைப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், ராதாரவி தன்னுடைய மகனான யோகி பாபுவை அரசனாக்கி விடுகிறார். இதனால் கோபமடையும் ரமேஷ் திலக், சிவனாக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் முறையிடுகிறார். யோகி பாபு தவறு செய்தால் அவரை மாற்றிவிட்டு உன்னை அரியணையில் அமர வைக்கிறேன் என்று கூறுகிறார் மொட்டை ராஜேந்திரன். 



    யோகிபாபுவை ஏதாவது தவறு செய்ய வைத்து சிக்க வைப்பதற்காக அவரை பூலோகம் அழைத்து செல்கிறார் ரமேஷ் திலக். எதிர்பார்த்தபடி ஒரு தவறில் யோகிபாபு சிக்க, எமலோக பதவிக்கு ஆபத்து ஏற்படுகிறது. 

    இறுதியில் யோகிபாபு எமலோக பதவியை தக்க வைத்தாரா? ரமேஷ் திலக்கின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கம் போல அவரின் காமெடி கவுண்டர்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். 



    படம் முழுக்க அவருடன் பயணிக்கிறார் ரமேஷ் திலக். இவர்கள் கூட்டணி செட்டாகிவிட்டது என்றே சொல்லலாம். மந்திரி சபை என்ற பெயரில் கணேஷ் செய்யும் லூட்டிகள் கலகலப்பு. ராதா ரவி, ரேகா ஆகியோருக்கு சில காட்சிகள் தான். ஆனால், வாரிசு அரசியலை விமர்சிக்கும் விதமாக இவர்கள் வரும் காட்சிகள் விசில் பறக்கிறது. சிவபெருமானாக வரும் மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல தன் ஸ்டைலில் கலக்கி இருக்கிறார்.

    யோகிபாபுவை வைத்து காமெடி படம் மட்டும் கொடுக்காமல், சமூக அக்கறையுள்ள கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். இதில் விவசாயம், ஜாதி அரசியல், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, பெரியார், காந்தி, நேதாஜி உள்ளிட்ட முன்னாள் அரசியல் தலைவர்களை பற்றி பேசியிருக்கிறார்கள். தற்போதைய சமூக பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் விதம் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு.



    மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘தர்மபிரபு’ எமலோக கிங்.
    பாபு தமிழ் கதையில், கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, மோனிகா, கருணாகரன், ரோகினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜீவி படத்தின் விமர்சனம்.
    ஊரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிகிறார் நாயகன் வெற்றி. இவருக்கு புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம். குடும்ப சூழல் காரணமாக வேலைக்குப்போக முடிவு செய்து ஊரில் இருந்து சென்னைக்கு வந்து டீ கடையில் வேலை செய்கிறார். இவருடன் பணிபுரியும் கருணாகரனுடன் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்க்கிறார். 

    எதிர் கடையில் வேலை பார்க்கும் மோனிகாவுடன் வெற்றிக்கு காதல் மலர்கிறது. நன்றாக காதலித்து வரும் நிலையில், பணத்தை காரணம் காட்டி வெற்றி விட்டு செல்கிறார் மோனிகா. இந்நிலையில், வெற்றி தங்கியிருக்கும் வீட்டு ஓனர் ரோகினி ஒரு விபத்தில் சிக்க, அவரது பீரோ சாவி அடங்கிய பர்ஸ் தொலைந்து போகிறது. இந்த பர்ஸ் வெற்றி கையில் கிடைக்கிறது. 

    ரோகினி தனது கண்பார்வை இல்லாத பெண்ணின் திருமணத்திற்காக நகை சேர்த்து அதை பீரோ வைத்திருப்பது வெற்றி தெரிய வருகிறது. அதை திருட முடிவு எடுக்கும் நேரத்தில், வெற்றியின் ஊரில் அக்கா வீட்டை விட்டு ஓடி போனதாகவும், அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகவும் போன் வருகிறது.

    ஒரு வழியாக நகையை திருடி விட்டு வரும் போது தந்தை இறந்ததாக போன் வருகிறது. இதனால் ஊருக்கு சென்று விடுகிறார் வெற்றி. ஆனால், போலீசுக்கு இவர் மேல் சந்தேகம் வராமல், வேறொருவர் மீது சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் ஊரில் இருந்து திரும்பி வரும் வெற்றி, ரோகினியை சந்தித்து பேசுகிறார்.



    ரோகினி வெற்றியிடம், நகை திருடுபோனதை பற்றி கூறுகிறார். மேலும், நான் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்துக் கொண்டேன். என் அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து போனார் என்று கூறுகிறார். இவர் சொல்லுவது தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது போல் வெற்றி உணர்கிறார். அதன் பின் அவரது வாழ்க்கை என்ன ஆனது? நகையை திருப்பி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    8 தோட்டாக்கள் படத்தில் அப்பாவியாக நடித்த வெற்றி இப்படத்தில் அப்படியே வேறு மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார். படத்தில் புத்திசாலித்தனமாக அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.

    அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார் கருணாகரன். ஒரு சில இடங்களில் அவரது காமெடி சிரிப்பை வரவைக்கிறது. நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் நாயகி மோனிகா. 



    வீட்டு உரிமையாளராக வரும் ரோகினி, படத்தின் திருப்புமுனையாக வரும் மைம் கோபி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

    தொடர்பியல் முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள், ஒரு மையப்புள்ளியில் நிற்பது தான் படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். புரியாத சயின்ஸ் பாடத்தை, மிகத் தெளிவாக, ஜனரஞ்சகமாக விளக்கி இருக்கிறது இப்படம். வலுவான கதையை எழுதி, அதற்கு மிக சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாபுதமிழ். அதனை குழப்பமில்லாமல், தெளிவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

    குழப்பமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை மிக தெளிவாக புரிய வைத்திருக்கிறார் எடிட்டர் பிரவீன். சுந்தரமூர்த்தியின் இசையில் 'விடைகளே கேள்விகளாய்' பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். பிரவின் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘ஜீவி’ அறிவு ஜீவி.
    விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, லிங்கா நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் விமர்சனம்.
    ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ அவரது நண்பர் ஜார்ஜ் அறிவுரை கூறுகிறார். ஆனாலும் அதை ஏற்க மறுத்து திருட்டு தொழிலையே செய்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு சரியாக காது கேட்காது.

    தனது மாமா அருள்தாஸின் வற்புறுத்தலின் பேரில் மலேசியாவில் வேலை பார்த்து அஞ்சலி விடுமுறைக்கு ஊருக்கு வருகிறார். மிகவும் சத்தமாக பேசக்கூடிய இவரை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி. 

    விஜய் சேதுபதியின் காதலை மறுக்கும் அஞ்சலி பின்னர், அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார். இந்த காதலை பிடிக்காத மாமா அருள்தாஸ், அஞ்சலியை கண்டிக்கிறார். இதனால் கோபமடையும் விஜய்சேதுபதி அருள்தாஸை வெளுத்து வாங்குகிறார். 



    இந்த கோபத்தின் வெளிப்பாடாக மீண்டும் மலேசியா செல்லும் அஞ்சலியை அங்கிருக்கும் லிங்கா கும்பலிடம் பணத்திற்கு விற்று விடுகிறார். இதையறியும் விஜய்சேதுபதி மலேசியாவிற்கு சென்று அஞ்சலியை மீட்க நினைக்கிறார்.

    இறுதியில் லிங்கா கும்பலிடம் சிக்கி இருக்கும் அஞ்சலியை விஜய்சேதுபதி மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கதாநாயகர்களுக்கே உரிய கமர்சியல் கதையில் விஜய் சேதுபதி, சூர்யா விஜய் சேதுபதி, அஞ்சலி என சரியான நடிகர்களை நுழைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் அருண்.



    விஜய் சேதுபதி குறும்பு, காதல், காமெடி, பஞ்ச் வசனம், அதிரடி சண்டைக்காட்சிகள் என பக்காவான கமர்சியல் படத்துக்கும் நன்றாக பொருந்துகிறார். அஞ்சலியிடம் காதல் பார்வை, எதிர்பாராத விதமாக தாலி கட்டுதல், சூர்யாவுடனான எமோ‌ஷனல், இவனை அடிச்சா தப்பில்லையா? சொல்லுங்க சார் என்று கேட்டு காத்திருந்து பதில் வந்ததும் அடிப்பது என படம் முழுக்க விஜய் சேதுபதி ராஜ்ஜியம் தான்.

    விஜய் சேதுபதி எட்டடி பாய்ந்தால் அவர் மகன் சூர்யாவோ எண்பது அடி பாய்கிறார். காமெடி, எமோ‌ஷனல், பயம், சண்டை என அவரும் கலக்கி இருக்கிறார். ஜார்ஜிடம் அவர் கதை சொல்ல தொடங்கும்போது ரசிகர்கள் கைதட்ட தொடங்குகின்றனர். 

    கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு வரிசையில் அஞ்சலிக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மாமனை அடிக்கும் விஜய் சேதுபதியிடம் பத்தாது இன்னும் அடி என சொல்லும் காட்சி, முத்தக் காட்சி, மலேசியாவில் கடத்தல் கும்பலிடம் சிக்கி சித்தரவதை செய்யும் காட்சி, கல்யாணம் பண்ணி ஒருநாள் கூட வாழலைன்னா என்று கெஞ்சும் காட்சி என தன் திறமையை காட்டி இருக்கிறார். விஜய் சேதுபதி அஞ்சலி ஜோடி பொருத்தமாக இருக்கிறது. 



    மிரட்டும் வில்லனாக லிங்கா. ஈவு இரக்கமே இல்லாமல் கொல்லும் காட்சிகளில் பதற வைக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி முன்பு மட்டும் அடங்கி போவது செயற்கையாக இருக்கிறது. இவரது கெட்-அப் மிரள வைக்கிறது.

    படத்தின் பெரிய பலம் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. தென்காசியாக இருந்தாலும் சரி, மலேசியாவாக இருந்தாலும் சரி விஜய்யின் கேமரா அழகாக படம் பிடித்துள்ளது. கோணங்களாலும் வண்ணங்களாலும் நம்மை அசர வைத்துள்ளார். யுவனின் இசையில் படம் கமர்சியலாக மாறி இருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் இன்னும் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

    முதல் பாதியில் காதல், காமெடி, ஆக்‌‌ஷன் என்று நகரும் கதை அஞ்சலி சிக்கியதும் வேகம் குறைந்து போகிறது. கமர்சியல் படத்திலும் தோல் வியாபாரம் என்ற இதுவரை யாரும் தொடாத ஒரு வி‌ஷயத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். சில தேவையில்லாத காட்சிகளால் படத்தின் நீளம் மட்டும் சற்று அதிகமாக தெரிகிறது. மற்றபடி குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகவும் நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் அமைந்து இருக்கிறது.

    மொத்தத்தில் ‘சிந்துபாத்’ சுவாரஸ்யம் குறைவு.
    கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி, பசங்க கிஷோர், லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஹவுஸ் ஓனர் படத்தின் விமர்சனம்.
    2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக வசிக்கும் வயதானவர்கள். கிஷோருக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இந்நோய் தீவிரமாகி மனைவியையே யார் என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஸ்ரீ ரஞ்சனி தான் அவரை பார்த்துக்கொள்கிறார்.

    கிஷோர் சிறுவயதாக இருக்கும்போது லவ்லினை திருமணம் செய்துகொண்டது நினைவுகளாக வந்து போகிறது. பாலக்காட்டு பிராமண வீடுகளில் நடப்பது போல திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது இளவயதுக்கே உரிய குறுகுறுப்பு, காதல் என படம் விரிகிறது. இன்னொரு பக்கம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி வீட்டை வெள்ளம் சூழ்கிறது. வீடு முழுக்க வெள்ளம் வர இருவரும் சிக்கி தவிக்கிறார்கள். முடிவு என்ன ஆகிறது என்பதே படம்.

    பெரிய கதாநாயகனோ, கதாநாயகியோ தேவைப்படாத ஒரு அழகான எமோ‌ஷனல் கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்டதோடு கண்கலங்க வைத்து அனுப்புகிறார் லட்சுமி. 



    கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி இருவரும் தங்களது பக்குவமான நடிப்பால் படத்தை தாங்குகிறார். அல்சைமர் நோயாளியாக எல்லாவற்றையும் மறந்துவிடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் கிஷோர். அவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் மனைவியாக ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்பும் அசத்தல். இருவரும் நமது அடுத்த வீட்டு பெரியவர்கள் போல இயல்பாக வாழ்ந்து இருக்கிறார்கள். இளம் ஜோடிகளாக வரும் பசங்க கிஷோர், லவ்லின் இருவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள். 

    ஜிப்ரானின் இசை படத்தின் கதையோடு ஒட்டி உறவாடுகிறது. பின்னணியில் நமக்குள் பதற்றத்தை கடத்தி இருக்கிறது. கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு பாலக்காட்டு பிராமண வீடுகளையும் சென்னையில் வெள்ளத்தால் சூழப்படும் வீடுகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். பிரேமின் படத்தொகுப்பும் கச்சிதம்.



    லட்சுமி எளிய கதையை அருமையான படமாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க நம்மை பதற வைக்கிறார். படம் முழுக்க அன்பு தான். இந்த காரணங்களுக்காகவே சின்ன நெருடலாக இருக்கும் பாலக்காட்டு பிராமண மொழியை மன்னிக்கலாம்.

    ஒரு உண்மைக்கதையை கையில் எடுத்து அதில் ஏராளமான அன்பையும் கணவன் மனைவி அன்யோன்யத்தையும் அழகாக சொல்லி இறுதிக்காட்சியில் கலங்க வைத்த விதத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்பதை அழுத்தமாக பதித்து இருக்கிறார். 

    மொத்தத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ சிறந்த வீடு.
    ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்‌ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் தர்‌ஷன் பல வேலைகள் பார்க்கும் துடிதுடிப்பான இளைஞர். கவனக்குறைவால் பெட்ரோல் பங்க் வேலை பறிபோகிறது. இவரது நண்பர் தீனாவுக்கு காட்டில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் கிடைக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் தர்‌ஷன் பணத்துக்காக தீனாவுடன் பெயிண்ட் அடிக்க காட்டுக்குள் செல்கிறார். 

    இன்னொரு பக்கம் நாயகி கீர்த்தி காட்டில் வனவிலங்குகளை படம் பிடிக்க ஆவலுடன் வருகிறார். இதற்கிடையே கேரளாவில் ஒரு காட்டில் இருந்து தும்பா என்ற புலி தப்பித்து தமிழ்நாடு காட்டுக்குள் வருகிறது. அதை சட்டவிரோதமாக பிடித்து விற்க வன அதிகாரி திட்டமிடுகிறார். 



    காட்டுக்குள் தர்ஷனுக்கு கீர்த்தியுடன் பழக்கம் ஏற்படுகிறது. கீர்த்தியின் வேண்டுகோளுக்காக அந்த புலியை தேடி தர்‌ஷனும் தீனாவும் செல்கிறார்கள். இறுதியில் கீர்த்தி அந்த புலியை படம் பிடித்தாரா? வன அதிகாரி அந்த புலியை சட்ட விரோதமாக விற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தர்‌ஷனுக்கு இது இரண்டாவது படம். முடிந்தவரை நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனை. முகத்தில் குழந்தைத்தனம் நிறைய தெரிகிறது. இவற்றை மாற்றிக்கொண்டால் கதாநாயகனாக ஒரு சுற்று வரலாம்.



    தீனா படம் முழுக்க வருகிறார். சில இடங்களில் மட்டும் அவரது காமெடிக்கு சிரிப்பு வருகிறது. கீர்த்திக்கு இது அறிமுக படம். படம் முழுக்க டவுசரிலேயே வருகிறார். அவருக்கு கவர்ச்சி செட் ஆகவில்லை. தர்‌ஷன், தீனாவை திட்டும் இடங்களிலும் புலிக்குட்டியை பொத்தி காப்பாற்றும் இடத்திலும் கவனிக்க வைக்கிறார். ஜெயம் ரவி ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போகிறார்.

    நரேன் இளனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். காட்டின் அழகையும் குளுமையையும் அழகாக படம் பிடித்துள்ளது. கதை, திரைக்கதையில் புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும் நரேனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என 3 இசையமைப்பாளர்கள். பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.



    வனவிலங்குகளை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம். சுவாரசியமான திரைக்கதை வசனம் அமைத்து இருந்தால் குழந்தைகள், குடும்பங்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு படமாக இருந்து இருக்கும். இருந்தாலும் விசுவலாக படம் நம்மை கவர்கிறது. புலி, குரங்கு, யானை என்று கிராபிக்ஸ் மூலம் விலங்குகளை உருவாக்கி இருக்கிறார்கள். புலி வரும் காட்சிகளில் நம்பகத்தன்மை இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தும்பா’ விஸ்வல் ட்ரீட். 
    கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
    குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார். 

    சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த பிறகும் திருட்டை தொடர்ந்து செய்து வருகிறார். அப்போது மேஜிக் செய்து பணம் சம்பாதிப்பவர்களை பார்த்த தனுஷ், தனது கூட்டாளிகளுடன் சென்று பணத்தை திருடுகிறார்.



    அப்பா யார் என்றே தெரியாமல் இருக்கும் தனுஷை, அம்மா தான் சிரமப்பட்டு வளர்க்கிறார். அம்மாவின் இறப்புக்கு பிறகு தன் தந்தை பாரீசில் இருப்பதை அறிந்து அங்கே செல்கிறார். பாரீஸ் சென்ற தனுஷ் வாழ்க்கையில் என்ன நடந்தது? தன் கதை மூலம் மூன்று இளைஞர்களை நல்வழிப் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு சிறப்பு. அவரது திறமைக்கு தீனி போடும் விதத்தில் நகைச்சுவை, எமோ‌ஷனல், காதல் எல்லாம் கலந்த கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாமல், மிகவும் இயல்பான தனுஷை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் மனிதர்களிடமும் சிக்கி தவிக்கும் காட்சிகளில் கலக்கி இருக்கிறார்.



    ஒரே காட்சியில் தனுஷுடன் காதலில் விழும் எரின் மொரியாட்டி அழகு பதுமையாக வருகிறார். நடிகையாகவே வரும் இன்னொரு நாயகி பெரினைசி பெஜோவும் படத்திற்கு சிறப்பான தேர்வு.

    தனுஷின் கூட்டாளியாக வரும் பர்காத் அப்டி, கஸ்டம்ஸ் ஆபிசராக வந்து காமெடி செய்யும் பென் மில்லர், தனுஷின் அம்மாவாக வரும் அம்ருதா ஆகியோரும் படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார்கள்.



    பல நாடுகளில் நடக்கும் கதை என்பதால் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு அந்தந்த நாட்டின் சிறப்பான இடங்களை அழகாக காட்டியுள்ளது. பாராசூட்டில் தனுஷ் பறக்கும் காட்சிகளும் ஈபிள் டவர் காட்சிகளும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. நிக்கோலஸ், அமித் திரிவேதி கூட்டணியின் இசை ரசிக்க வைத்திருக்கிறது.

    மிகவும் எளிமையான கதையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் கென் ஸ்காட். வாழ்க்கையின் தத்துவத்தை எளிய கதை மூலம் உணர்த்தியிருக்கிறார். ஆங்கில படங்களுக்கே உரித்தான சில லாஜிக் மீறல்கள் இப்படத்திலும் காண முடிகிறது. 

    மொத்தத்தில் ‘பக்கிரி’ வாழ்க்கை தத்துவம்.
    விஜூ, பல்லவி டோரா, அஜெய் குமார், என்சிபி.விஜயன் நடிப்பில் ஜெகதீசன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘மோசடி’ படத்தின் விமர்சனம்.
    விஜூ தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகிறார். மனிதர்களின் பேராசையை தூண்டி அவர்களை ஏமாற்றும் விஜூ குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் பணத்தை சேர்ப்பதை லட்சியமாக கொண்டு இருக்கிறார். 100 கோடி ரூபாய் சேரும் நேரத்தில் போலீசில் நண்பர்களுடன் சிக்கிக் கொள்கிறார் விஜூ.

    போலீஸ் விசாரணையில் விஜூவின் பிளாஷ்பேக் தொடங்குகிறது. பண மதிப்பிழக்கத்தின் போது ஆளூங்கட்சி அமைச்சருக்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புது 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபடுகிறார். அப்படி மாற்றப்படும் 100 கோடி பணத்தை விஜூ வசம் வைத்துக்கொள்ள சொல்கிறார் அமைச்சர். சிலகாலம் கழித்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார்.



    ஆனால் அந்த பணம் காணாமல் போகிறது. எனவே 30 நாட்களில் அந்த 100 கோடியை திருப்பி தரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார். இவை எல்லாம் தெரிய வந்ததும் போலீஸ் என்ன செய்தது? விஜூவின் பணம் எப்படி காணாமல் போனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஜூவுக்கு மோசடிகள் செய்யும் கதாநாயகன் வேடம் பொருத்தமாக இருக்கிறது. முதல் பாதியில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் செய்யும் மோசடிகள் சுவாரசியமாக இருக்கின்றன. மோசடி செய்வதற்காக பல கெட் - அப்புகள் போட்டு முடிந்த அளவுக்கு நடித்துள்ளார்.



    நாயகி பல்லவி டோரா விஜூவின் மனைவியாக வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் புது மனைவிக்கே உரிய வெட்கத்தையும் காதலையும் வெளிப்படுத்துகிறார். அமைச்சராக வரும் விஜயனும் அவரது தம்பியாக வருபவரும் வில்லத்தனமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள்.

    முதல் பாதி முழுக்க மோசடி காட்சிகளை மட்டுமே வைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதியை உணர்வுபூர்வமாக மாற்றி இருக்கிறார். பணமதிப்பிழக்கத்தின் போது எப்படி எல்லாம் பணத்தை மாற்றினார்கள் என்று காட்டியது ஆச்சர்யப்பட வைக்கிறது. 

    ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும் ஷாஜகானின் இசையும் படத்தை ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. 

    மொத்தத்தில் ‘மோசடி’ நிதானமான அடி.
    எம்.ஐ.பி-யின் வெற்றி பாகங்கள் வரிசையில், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா தாம்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் படத்தின் விமர்சனம்.
    சிறுமி டெஸ்ஸா தாம்சன் சிறு வயதில் இருக்கும் போது ஏலியன்களை பார்க்கிறார். பெற்றோர்கள் இவளது நினைவுகளை அழிக்காமல் விட்டுவிடுகிறார்கள். வளர்ந்தவுடன் எம்.ஐ.பி குழுவில் சேர நினைத்து அவர்களையும் கண்டு பிடிக்கிறாள். ஏற்கனவே அதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றதால் எம்.ஐ.பி ஏஜென்ட் ஆக வேலை கிடைக்கிறது.

    லண்டனில் வன்கஸ் என்னும் ஏலியனை சந்திப்பதற்காக கிறிஸ் ஹெம்ஸ்வார்துடன் செல்கிறார் டெஸ்ஸா. அங்கு வன்கஸை இரட்டை ஏலியன்கள் தாக்குகிறார்கள். இதில் வன்கஸ் உயிரிழக்கும் நிலையில், ரத்தினகல் ஒன்றை கொடுத்து, எம்.ஐ.பி-யில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இறக்கிறார்.



    இறுதியில் எம்.ஐ.பி.-யில் இருக்கும் பிரச்சனையை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா இருவரும் கண்டுபிடித்தார்களா? வன்கஸை கொலை செய்த இரட்டை ஏலியன்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அவெஞ்சர்ஸ்: எண்ட் கேமில் தொப்பையும், பீருமாக காட்சியளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தப் படத்தில் ஸ்டைலிஷ், ஹேண்ட்சம் லுக்கில் கவர்ந்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் டெஸ்ஸா அவருக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நின்று விளையாடுகிறார். தாடி போல் அமர்ந்திருக்கும் குட்டி ஏலியன், இரட்டை ஏலியன் என பட முழுக்க 3டி விருந்து படைத்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் சிலிர்க்க வைக்கிறது.



    இதற்கு முன், மென் இன் பிளாக் மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது பாகமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் கலந்து இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

    முந்தைய பாகங்கள் வரிசையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணியும் அருமை. எம்.ஐ.பி ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக அமைந்திருப்பது சிறப்பு.

    மொத்தத்தில் ‘மென் இன் பிளாக் இன்டர்நேஷனல்’ மைண்ட் ப்ளோயிங்.
    விக்ராந்த், மிஷ்கின், சுசீந்தரன், அதுல்யா ரவி நடிப்பில் ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் விமர்சனம்.
    விக்ராந்த், சுசீந்திரன் இருவரும் மேலும் இருவருடனும் சேர்ந்து ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. பொதுமக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கிறார்கள். அவர்களை பிடிக்கும் பொறுப்பை காவல் அதிகாரி மிஷ்கின் எடுத்துக்கொள்கிறார்.

    மிஷ்கினின் துப்பாக்கிக்கு ஒரு கொள்ளையன் பலியாக மீதி 3 பேரும் தப்பிக்கிறார்கள். தப்பித்து செல்லும்போது ஒரு குடியிருப்பு பகுதியில் நடக்கும் விபத்தால் அந்த குடியிருப்பு பகுதிக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

    அந்த ஒட்டுமொத்த குடியிருப்பையுமே அலர்ட்டாக்கி அந்த கொள்ளையர்களை பிடிக்க மிஷ்கின் உத்தரவிடுகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகளும் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். 



    இறுதியில் மிஷ்கின் தலைமையிலான காவல் குழு கொள்ளையர்களான விக்ராந்த், சுசீந்திரன் இருவரையும் பிடித்தார்களா? குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    பாடல்களோ, காதல் காட்சிகளோ, தனியாக நகைச்சுவை காட்சிகளோ இல்லாமல் பரபரப்பான திரைக்கதையை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ். முதல் காட்சியிலேயே படம் வேகம் எடுக்கிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த வேகம் குறைந்து விடுகிறது.



    விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும் சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். சுசீந்திரன் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ஆனால் அவர் காட்சிகளில் நம்பகத்தன்மையே இல்லை.

    மிஷ்கின் போலீஸ் அதிகாரி வேடத்துக்கு சரியான தேர்வு. தனது முத்திரை நடிப்பால் கவர்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பாக்குகிறார்கள். பேபி மானஸ்வி சிறப்பான நடிப்பு.



    சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளது. ராமாராவின் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    கடைசி 10 நிமிடங்களில் வரும் டுவிஸ்டை நம்பி ராம்பிரகாஷ் கதையை எழுதி இருக்கிறார். பரபரப்பான திரைக்கதை இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாத கதையால் படம் ஒரு கட்டத்தில் சலிப்படைய செய்து விடுகிறது. அந்த டுவிஸ்டையும் ஏற்கனவே யூகிக்க முடிவது பலவீனம். எனவே வித்தியாசமான முயற்சியாக மட்டுமே பார்க்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ சரியாக சுடவில்லை.
    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ், ஷிரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் விமர்சனம்.
    படத்தின் நாயகர்களாக இருக்கும் ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார். 

    ஒரு நாள் மாலில் பிராங்க் வீடியோ மூலம் மிகவும் செல்வந்தராக இருக்கும் ராதாரவி மற்றும் நாயகி ஷிரின் ஆகியோரை கலாய்க்கிறார்கள். இதில் ஷிரின் ரியோவை அடித்து விடுகிறார். ராதாரவி மன்னித்து இவர்களை அனுப்பி விடுகிறார்.

    சில நாட்களில் ராதாரவி, ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷை அழைத்து, எதற்காக இதுபோன்று செய்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு அவர்கள் எங்களுக்கு அதிகமாக பணம் வேண்டும். அதற்காகத்தான் இப்படி செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.



    உங்களுக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன். ஆனால், நான் சொல்லும் மூன்று சவால்களை செய்தால் தான் தருவேன் என்று கூறுகிறார் ராதாரவி. 

    இறுதியில் ரியோ ராதாரவி சொன்ன சவால்களை ஏற்றாரா? ராதாரவி சொன்ன சவால்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் அவருக்கு நல்ல ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் இளமை துள்ளலுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருடன் ஆர்.ஜே.விக்னேஷ் செய்யும் லூட்டிகள் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறது. ஹீரோவுக்கு இணையாக அவரும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    அரசியல் வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் சமகால அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார். தனக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் ராதாரவி. 

    கதாநாயகியாக வரும் ஷிரின் பத்திரிகை நிரூபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அண்ணனாக வரும் அரவிந்த், வீட்டு ஓனராக வரும் மயில்சாமி, பிஜிலி ரமேஷ் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

    அரசியல் சூழ்நிலையை கலாய்த்து காமெடியுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். பொது இடத்தில் நடக்கும் தவறுகளை தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன இயக்குனருக்கு பெரிய கைத்தட்டல். ஆனால், கதைக்களம் சற்று அழுத்தம் இல்லாதது போல் இருக்கிறது. 



    கனாவை தொடர்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். 

    ஷபீரின் இசையும், யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ கலகலப்பான ராஜா.
    அஸ்வின் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் ‘கேம் ஓவர்’ படத்தின் விமர்சனம்.
    ஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார்.

    நாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு குத்திவிட்டதாக கூறுகிறார். யார் அந்த பெண் என்று டாப்சி விசாரிக்க ஆரம்பிக்கிறார். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் டாப்சி.



    இந்நிலையில், அந்த மர்ம நபர்கள் டாப்சியை துரத்துகிறார்கள். இறந்த பெண்ணும் டாப்சி கனவில் வர ஆரம்பிக்கிறார்? மர்ம நபர்களிடம் இருந்து டாப்சி எப்படி தப்பித்தார்? கனவில் வரும் இறந்த பெண் என்ன செய்கிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகியாக நடித்திருக்கும் டாப்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். துடிதுடிப்பான பெண், மர்மங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண் என்று நடிப்பில் பரிமாணங்களையும் காட்டுகிறார்.



    டாப்சியின் உதவியாளராக வினோதினி, ஆர்பாட்டம் இல்லாமல் அசத்தலான நடிப்பு. உளவியல் நிபுணராக அனிஷ் குருவில்லா, அமுதாவாக சஞ்சனா நடராஜன், அவர் அம்மாவாக பார்வதி டாட்டூ நிபுணராக ரம்யா ஆகியோர் கதைக்கு சரியான தேர்வுகள். இவர்கள் அனைவரும் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

    வீடியோ கேம் பின்னணியில் அதைப்போலவே ஒரு கதையை உருவாக்கி பரபரப்பான திரைக்கதையால் விறுவிறுப்பான படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை ஒரு படபடப்பு தொடர்வது படத்தின் பலம். தனியாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பலாத்கார வீடியோக்களால் பாதிக்கப்படும் பெண்கள் என நடப்பு சம்பவங்களை வைத்து கதையை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். பேய், கிரைம் கலந்த உளவியல் திரில் படமாக இருந்தாலும் படம் முடியும்போது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 



    படத்தின் கதாநாயகனே ரான் ஈதன் யோகனின் இசைதான். டாப்சியின் உணர்வுகளை அப்படியே பின்னணி இசையாக்கி நமக்கு கடத்துகிறது. வசந்தின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் திகில் கூட்டுகின்றன.

    மொத்தத்தில் ‘கேம் ஓவர்’ சிறந்த கேம்.


    ஜேம்ஸ் ம்கவாய், ஷோபி டர்னர் நடிப்பில் சைமன் கின்பெர்க் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் படத்தின் விமர்சனம்.
    நாயகி ஷோபி டர்னருக்கு சிறு வயதில் அதித சக்தி இருக்கிறது. இந்த சக்தி அவரது பெற்றோர் இறக்க காரணமாக அமைகிறது. ஷோபி மியூட்டன்ஸ் இனத்தை சேர்ந்தவர் என்று மியூட்டன்ஸ்களுக்காக பள்ளி நடத்தும் சார்லஸ், அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வளர்க்கிறார்.

    இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சிக்கு செல்லும் மனிதர்கள் எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இவர்களை காப்பாற்ற நாசா, சார்லஸின் உதவியை நாடுகிறது. விண்வெளியில் உள்ள மனிதர்களை காப்பாற்ற எக்ஸ்-மென் குழுவில் உள்ள சிறந்தவர்களை அனுப்புகிறார்கள். 



    அப்போது ஷோபி டர்னரும் எக்ஸ் மென் குழுவில் செல்கிறார். அங்கு சூரிய புயல் ஷோபி தாக்குகிறது. இதிலிருந்து ஷோபிக்கு அளவுகடந்த சக்தி கிடைக்கிறது. இந்த சக்தியை கட்டுப்படுத்த முயலும் போது, மற்றவர்களை காயப்படுத்துகிறாள். மேலும் ஷோபிக்கு இருக்கும் சக்தியை அடைய வேற்று கிரகத்தினர் முயற்சி செய்கிறார்கள். 

    இறுதியில் எக்ஸ் மென் குழு, ஷோபியை வேற்று கிரகத்தினரிடம் இருந்து காப்பாற்றினார்களா? ஷோபி என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கதையின் மையப்புள்ளியான ஜீன் க்ரேவாக வரும் ஷோபி டர்னர் அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் கேம் ஆப் த்ரோன்ஸ் சீரியஸில் சன்சாவாக வந்து ரசிகர்களை ஈர்த்தவர். ஷோபியின் ரசிகர்களும் இப்படம் விருந்தாக அமைந்திருக்கிறது.

    படம் ஆரம்பம் முதல் இறுதிவரை திரைக்கதை மிக வேகமாக செல்கிறது, சண்டை காட்சிகளில் சுவாரசியங்கள் குறையவில்லை. தெளிவான திரைக்கதை என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் படக்கதை அமைந்திருக்கிறது.



    எக்ஸ்-மென் படத்தின் முந்தய பாகங்களை பார்க்காமல் இருக்கும் மக்களுக்கும் இந்த பாகம் தெளிவாக புரியும். இந்த பாகம் முந்தய பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்பதால், முதல் முறை எக்ஸ்-மென் படத்தை பார்ப்பவர்களுக்கு இந்த பாகம் பிடிக்கும். 

    மொத்தத்தில் ‘எக்ஸ்-மென் - டார்க் பீனிக்ஸ்’ எக்ஸலண்ட்.
    ×